Skip to content
Post Views: 504
மதியூரன் மதுராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ தயக்கத்துடன், எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு காபி ஷாப்பில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இடையில் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று சிப்பந்தி கேட்டுச் செல்ல, இருவருக்கும் காபி மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியைத் தத்தெடுத்திருந்தனர்.
முதல் முறையாக வேலைக்குச் சென்று சம்பாதித்து, அதில் வந்த பணத்தைச் சந்தோஷமாகத் தன் தாயின் முன் நீட்டியிருந்தான் மதியூரன். ஆனால் அவரோ, அந்தப் பணத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; அவனது உழைப்பையும் மதிக்கவில்லை. வழக்கம் போல அண்ணனின் புராணத்தைப் பாடிவிட்டு, அவனை அலட்சியம் செய்தார்.
மதிவதனியிடம் அவன் பணம் கொண்டு வந்து நீட்டியதைப் புகாராகச் சொல்ல, அவளோ அண்ணனுக்கு வேலை கிடைத்ததையோ, அவன் வாங்கிய முதல் சம்பளத்தையோ நினைத்து மகிழ்ச்சி கொள்ளவில்லை.
Advertisement
பணம் என்றதும் வாய் பிளந்தவள், அன்னையிடம், “அந்தப் பணத்தை ஏன் மா கொடுத்த? என்கிட்ட கொடுத்திருக்கலாமே! எனக்குத் தேவையானதை வாங்கியிருப்பேன்ல? பியூட்டி பார்லர் போகணும், டிரஸ் எதுவும் நல்லா இல்லை, டிரஸ் எடுக்கணும், செருப்பு வாங்கணும்…” என்று அவளது தேவப் பட்டியலை நீட்டிக்கொண்டே போனாளே தவிர, அண்ணனுக்காக அவள் மகிழவில்லை.
இத்தனைக்கும் தாய் தரும் பணத்தில் தினமும் ஒரு பார்சல் டெலிவரி என்று வீட்டிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன வாங்குவாள் என்று தெரியாது; அவளது தாயும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
தாய் அலட்சியம் செய்த பணத்தைத் தங்கை அண்ணனிடம் கேட்டு வாங்க வந்தாள். அப்போதும் கூட, “என்ன வேலை? எப்படி இருந்தது? கஷ்டமாக இருந்ததா? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று அன்பாகக் கேட்கவில்லை. அப்படி அக்கறை கொள்ளும் அளவிற்கு அவளுக்குள் பாசமும் இல்லை. தேவை என்றால் மட்டுமே ‘அண்ணா’ என்று பேசும் ரகம் அவள்.
Advertisement
“அண்ணா! அம்மா வேணாம்னு சொன்னா என்ன? என்கிட்டப் பணம் கொடு! எனக்குத் தேவைப்படுது, கொடு,” என்று அவன் முன்னே வந்து நின்றாள்.
Advertisement
“எ… என்ன தே… தேவை உ… உனக்கு?”
“ப்ச்… அதெல்லாம் உனக்கு எதுக்கு? பணத்தைக் கொடு!”
“மு… முடியாது! உ… உனக்கு எ… என்ன வே… வேணும்னு சொ… சொல்லு. நா… நான் வாங்கித் தர்றேன்,” என்று கையைக் கட்டிக்கொண்டு சன்னமான குரலில் நின்றான்.
Advertisement
“ஓ…! ஏன் என்கிட்டப் பணத்தைக் கொடுக்க மாட்டியா? எனக்கு என்ன தேவைன்னு உன்கிட்டச் சொன்னால்தான் நீ வாங்கித் தருவியா? என்ன… சம்பாதிக்கிறேன்ற திமிரா? இதுக்கும் அதிகமா அம்மா எனக்குப் பணம் கொடுப்பாங்க! உன் பிச்சைக் காசு எனக்கு ஒண்ணும் தேவையில்லை…” என்று திமிராகப் பேசிவிட்டுச் செல்ல, மதியூரன் நொந்து போனான்.
அவனை அங்கே புரிந்துகொள்ள யாருமில்லை. இருந்த ஓர் உறவும் என்றோ சென்றுவிட்டது. அன்னை, தங்கை எனச் சுயநலப் பிசாசுகளுடன் வாழ வேண்டிய நிலையில்; அன்பு, பாசம், அரவணைப்பு, ஆறுதல் கொண்ட ஓர் உறவு தனக்குக் கிடைத்திடாதா என ஏங்கித் தவித்து, சலித்துப் போன வாழ்க்கையில், அவனையறியாமல் அவனுக்கு ஆதியும் அந்தமுமாக இருக்கப்போகும் உறவு என்றோ அவன் வாழ்க்கையில் நுழைந்துவிட்டதென்று அவன் அறியவில்லை. இரண்டு நாட்கள் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தவனை, மூன்றாம் நாள் அலைபேசி வழியே அழைத்து அதிலிருந்து விடுதலை தந்திருந்தாள் மதுரா!
அவர்கள் இருவரும் சேர்ந்து வாசித்த கதை, யூடியூப்பில் அதிகப் பார்வைகளைப் பெற்று 100K-வைத் தாண்டிச் சென்றது. கதையாசிரியர் மகிழ்ச்சியில் திளைத்து அதை மதுராவிடம் பகிர, அந்தத் தொற்று அவளுக்கும் பரவியது.
அடுத்த இரண்டு நாட்களில் இன்னொரு கதையாசிரியரும் மதுராவை அழைத்து, “உங்க காம்போலஎனக்கு ஒரு கதை வாசிக்கணும்,” என்று கேட்டிருந்தார். அதைப் பகிரவே மதுரா அவனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னதோடு, மறுநாள் காபி ஷாப்பிற்கு வரச் சொல்லியிருந்தாள்.
அவள் சொன்ன இடத்திற்கு அவளுக்கு முன்னரே அவன் காத்திருக்க, அவன் வந்த இரண்டொரு நிமிடத்தில் அவளும் உள்ளே நுழைந்து அவனது இருக்கையைத் தேடி, அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தாள்.
“அ… அ… அடுத்த கதை வா… வாசிக்கலாமான்னு கே… கேட்டீங்க? அ… அதைப்பத்திப் பே… பேசாம அ… அ… அமைதியா இருந்தா எ… என்ன அர்த்தம் ம… மதுரா?!”
“மதியூரன்! அடுத்த கதை வாசிக்கிறதுல பிரச்சினை இல்லை. ஆனா வாசிக்கிற இடம்தான் பிரச்சினை,” என்றாள்.
“ஏ… ஏன், என்னாச்சு?”
“போன முறை ஒரு வாரம் பிரண்டுக்குத் தெரிஞ்ச ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்துதான் கதை வாசிச்சு ரெக்கார்ட் பண்ணினோம். இந்தத் தடவையும் கேட்டேன், ஸ்டுடியோ இப்போ பிஸியா இருக்காம். ரெண்டு வீக் முடியாதாம். அவ மூலமா வேற ஸ்டுடியோ கேட்டா ரெண்டு நாளைக்கே அவ்வளவு வாடகை கேட்கிறாங்க… இந்த வீக்குள்ள நான் கதையை வாசிச்சு முடிக்கணும், அடுத்த வாரம் என்னால முடியாது, டப்பிங் இருக்கு! என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க!”
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதற்கெல்லாம் அவன் புதியவன். என்ன யோசனை சொல்வான்? அதிகம் பழக்கம் இல்லாத வேலை இது, இப்போதுதானே கால் பதிக்கிறான். அவனிடம் யோசனை கேட்டால் அவனால் என்ன சொல்லிட முடியும்? பதிலின்றி அமர்ந்திருந்தான்.
“என்கிட்ட ஒரு ஆப்ஷன் இருக்கு! உங்களுக்கு அது சரின்னு தோணுச்சுன்னா சொல்லுங்க, நாம பண்ணலாம்.”
“எ… எ… என்ன ஆ… ஆப்ஷன் அது?”
“அது… நான் எங்க வீட்டிலேயே ஸ்டுடியோ போல செட் பண்ணியிருக்கேன். அங்கதான் கதை எல்லாம் வாசிப்பேன். அங்க கதை வாசிக்கலாமா? கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி! என்ன சொல்றீங்க? எக்யூப்மென்ட் இருக்கு! உங்களுக்கு எங்க வீட்டுக்கு வரச் சங்கடமா இருந்தா வேற யோசிப்போம்,” என்றாள் தயக்கத்தோடு.
அவனும் யோசனையோடு, “எ… என்னை விடுங்க, உ… உங்க வீட்டுக்கு நா… நான் வர்றதால யா… யாருக்கும் எ… எந்தப் பிரச்சினையும் இ… இல்லையே! உ… உங்க வீட்ல எ… என்ன சொல்லுவாங்க?” எனக் கேட்டான்.
அவளோ அமைதியாகிப் போனாள். அவள் முகம் சட்டென வாட, ‘தவறாக ஏதும் பேசிவிட்டோமோ?’ என அவளிடம் கேட்ட கேள்வியை இன்னொரு முறை சுய அலசல் செய்தான். ஆனால் அவனுக்கு எதுவும் தவறாகப் படவில்லை. “ஏன் அவள் முகம் வாடியது?” என்ற கேள்வியை அவளிடமே கேட்டான்.
“நா… நான் தப்பா எ… எதுவும் கேட்டிடலையே! ஏ… ஏன் உ… உங்க முகம் வா… வாடிப் போச்சு?”
“சாரி! நீங்க தப்பா எதுவும் கேட்கலை. எங்க வீட்ல அம்மா மட்டும்தான். அதுவும் அவங்க படுத்த படுக்கையா இருக்காங்க,” எனத் தழுதழுத்த குரலில் சொல்ல, இவனும் “ஸ… ஸ… ஸாரி” என்றான்.
“இட்ஸ் ஓகே! நீங்க எங்க வீட்டுக்கு வர்றீங்களா?” எனக் கேட்டிருந்தாள். அவளை ஆழ்ந்து நோக்கினான் அவன். அவன் பார்வையில் தன்னை இப்போது சுய அலசல் செய்தாள் மதுரா.
“நான் எதுவும் தப்பா கேட்டிடலையே?”
“இ… இல்லை, உ… உங்களுக்கு எதுவும் நா… நான் வர்றதால ச… ச… சங்கட்டம் இ… இல்லையே! உ… உங்களுக்கு நா… நான் வர்றதால பிரச்சினை எ… எதுவும் வ… வராதுன்னா நா… நான் வ… வர்றேன்,” என்றான்.
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, உங்களுக்கு ஓகே-ன்னா போலாம்,” என்றாள். இருவரும் அவரவர் வண்டியில் வந்ததால், அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.
இருவரும் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினர். தலைக்கவசத்தைக்கழற்றி வீட்டை ஆராய்ந்தான். கொஞ்சம் பெரிய வீடுதான். மூன்று அறைகள் கொண்ட வீடு என்பதால் விசாலமாக இருந்தது. பழைய வீடு என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
எதிர்வீட்டிலிருந்து ரம்யா வாசலில் நின்று பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஹே! மது! இவர் தானா அவர்?” என ஆராய்ச்சியுடன் கேட்டாள்.
“ஆமா அண்ணி! நீங்க நல்லா இருக்குன்னு புகழ்ந்த குரலுக்குச் சொந்தக்காரர் இவர்தான் மதியூரன்,” என்று அறிமுகம் செய்து வைக்க, அவனுக்கே கூச்சமாக இருந்தது.
“ஹாய் சார்! நான் எப்பவும் மது வாய்ஸ் (Voice) கொடுக்கிற கதை எல்லாம் வேலை பார்த்துட்டே கேட்பேன்… நேத்துதான் உங்க வாய்ஸும் சேர்த்து கேட்டேன். மது வாசிக்கிறதை விட ரொம்ப நல்லா இருந்தது…! அப்படியே குரலாலே கட்டிப் போட்டீங்க! மதுவைப் போல நீங்க இன்னும் நிறைய கதைகள் வாசிக்கணும் சார்,” என்றாள்.
அவனுக்குக் கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அதே நேரம், அவனுக்குள் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியின் அளவை வெளிப்படையாகக் காட்ட முடியாமல் அடக்கிக் கொண்டான்.
சிறு புன்னகையுடன், “தா… தாங்க்ஸ் சி… சிஸ்டர்!” என்றான்.
தலையசைப்புடன், “அடுத்த கதை வாசிக்கப் போறீங்களா மது?” என ஆர்வமாகக் கேட்க, “ஆமாம்” என்று கூறி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
“அவங்க ரம்யா! ரொம்ப வருஷமா எதிர் வீட்ல இருக்காங்க. எனக்கு ஒரு பாதுகாப்பும் அரவணைப்பும் ஆறுதலுமா இருக்கிறது அவங்களும் அவங்க வீட்டுக்காரரும்தான். சொல்லப்போனால், அவங்கதான் என்னைத் தைரியமா இருக்கச் சொல்றது…” என்று சிரித்தாள்.
யாரோ ஒருவர் கூட இங்கே அன்பு, அரவணைப்பு, ஆறுதல் அளிக்கிறார்கள். ஆனால் அன்னை, தங்கை என ரத்த பந்தம் இருந்தும் யாரோ போல நினைக்கிறார்கள். பெற்ற மகன் என்ற எண்ணமே இல்லாமல், வீட்டில் வளர்க்கும் மாட்டை அடிமாட்டுக்கு விலைக்கு விற்க நினைக்கும் தாய்; தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத தங்கை என நினைக்கும்போதே அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வழக்கம் போலத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“என்னாச்சு? என்ன யோசனை மதியூரன்?”
“ஓ… ஒண்ணுமில்லை ம… மதுரா!”
“வாங்க,” என்று அம்மாவின் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
அங்கே தளர்வான ஒரு நைட்டிக்குள் அந்தச் சிறு உருவம் அடைக்கப்பட்டிருந்தது. கை, கால்கள் குச்சியாக, தலையில் முடியில்லாமல், ஒட்டிப்போயிருந்த கன்னங்கள்… பார்ப்பவர்களுக்கே இதயம் கனத்துப்போகும் தோற்றம்.
மகளுடன் வரும் ஆணை நிமிர்ந்து பார்த்தார் அவர். “அம்மா, சொல்லியிருக்கேனே மதியூரன், இவர்தான்,” என்று அறிமுகம் செய்து வைத்தாள் மதுரா.
“வணக்கம் தம்பி,” என்றார் அவர். அவனும் வணக்கம் வைத்தான்.
“உங்க குரலும் தமிழ் உச்சரிப்பும் ரொம்ப அழகா இருக்கு தம்பி. நேத்து நீங்க வாசித்த கதையைக் கேட்டதுமே தூங்கிட்டேன்,” எனப் புன்னகையுடன் சொன்னவரை லேசாகக் கலங்கிய கண்களுடன் பார்த்தான்.
“அம்மா தமிழ் ஆசிரியர்! தமிழ் உச்சரிப்பு சரியா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க… நேத்து நீங்க வாசிச்சதைக் கேட்டுப் புகழ்ந்து தள்ளிட்டாங்க,” என்றாள் மதுரா. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவனால் ‘நன்றி’ கூடச் சொல்ல முடியவில்லை. நெஞ்சடைத்துப் போனது.
“சரி, தம்பிக்கு ஏதாவது குடிக்கக் கொடு மது!” என்றார் அம்மா.
“ம்ம்…” என்று அவனை அழைத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள் மதுரா.
“அ… அம்மாவுக்கு எ… என்ன? ஏ… ஏன் இப்படி இ… இருக்காங்க?”
“அவங்களுக்குப் போன் கேன்சர் லங்ஸ் வரைக்கும் பாதிக்கப்பட்டிருக்கு. கீமோ கொடுத்துட்டு இருக்கோம். அதான் அவங்க இப்படி இருக்காங்க. எனக்குன்னு இருக்கிற ஒரே உறவு இவங்கதான்! எத்தனை நாள் என் கூட இருப்பாங்கன்னு தெரியாது…” என விரக்தியாகச் சொல்ல,
“அ… அப்படிச் சொ… சொல்லாதீங்க! உ… உங்களுக்கு ந… நல்லது கெ… கெட்டது பா… பார்க்கவாது இ… இதுல இருந்து அ… அவங்க போ… போராடி வ… வருவாங்க! நீ… நீங்க மனம் த… தளராம அ… அவங்களுக்கு ஆ… ஆறுதல் சொ… சொன்னால்தான் அவங்க அ… அந்த வியாதியிலிருந்து மீ… மீண்டு வருவாங்க! நீ… நீங்களே இப்படிப் பே… பேசினா எப்படி? அ… அவங்களுக்கு நீங்க தைரியம் கொடுக்கணும்னா, நீ… நீங்க முதல்ல தைரியமா இருக்கணும். இ… இனி இப்படிப் பேசாதீங்க,” என்று கண்டிப்புடன் சொல்ல, கண்கள் கலங்கிய நிலையில் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மதுரா!
.
error: Content is protected !!