Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கொல்லிப்பாவை – அத்தியாயம் 15 (1)

அத்தியாயம் 15

பிரத்தியங்கரா நினைத்தது போலவே கார்த்திக் அவளின் வீட்டில் சென்று தாம் தூம் என்று தான் குதித்தான். அவனை மிகுந்த பொறுமையோடு கையமர்த்தி அவனது வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மணியரசு.



Advertisement

சௌந்தர்யா விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க தயாராகி கொண்டிருக்க, “அமைதியா இரு சௌந்தர்யா. நம்ம பொண்ணு இப்படி பேசுறவளே கிடையாது. அவளே கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறான்னா அப்போ ஏதோ காரணம் இருக்கும். எதா இருந்தாலும் பிரத்தியங்கரா இங்க வந்ததும் நேர்லையே பேசிக்கலாம்.” என்றார் மணியரசு.

“அதெல்லாம் முடியாதுங்க எனக்கு இப்பவே அவகிட்ட பேசனும். காதலிக்கறேன்னு வந்து நின்னப்பவே கழுதையோட காலை உடைச்சி போட்டுருக்கனும். அவ இஷ்டம் தான் முக்கியம்னு சொன்னீங்க. இப்ப பாருங்க கல்யாணத்தை நிப்பாட்டனும்னு வந்து நிக்கிறா.” என்றார் சௌந்தர்யா.

Advertisement

Advertisement

“நீ ஏன் சௌந்தர்யா நம்ம பொண்ணு பக்கம் இருந்து யோசிச்சு பாக்க மாட்டேங்குற. உனக்கு என்ன இப்பவே அவகிட்ட பேசனும் தானே? வா இப்பவே கொல்லிமலைக்கு போவோம். பிரத்தியங்கராவை எப்படியும் கூட்டிட்டு வர போயி‌ தானே‌ ஆகணும். கிளம்பு நீ… அங்க போயி சேருற வரை நீ ஒரு வார்த்தை அவகிட்ட பேச கூடாது!” என்றிருந்தார் மணியரசு.

சொன்னபடியே மணியரசுவும் சௌந்தர்யாவும் பிரத்தியங்கராவிடம் சொல்லாமலே கிளம்பி வந்திருந்தனர். அவர்கள் வந்த நேரம் பிரத்தியங்கரா கோவிலுக்கு விளக்கு போட சென்றிருந்தாள்.

Advertisement

மணியரசு பிரத்தியங்கராவிற்கு அழைப்பு விடுத்தார்.

தந்தை அழைப்பதை கண்டு யோசித்தவாறே, அழைப்பை எடுத்தாள் பிரத்தியங்கரா.

“அப்பா…” என்று அவள் சொல்ல,

“மா பிரத்தியங்கரா… எங்க டா இருக்க?” என்று கேட்டார் மணியரசு.

“கோவில்ல விளக்கு போட்டுட்டு வந்துட்டு இருக்கேன் ப்பா.” என்றாள் பிரத்தியங்கரா.

“ஓ சரி‌ மா…” என்றார் மணியரசு.

“என்னப்பா விசயம்?” என்று கேட்டாள் பிரத்தியங்கரா.

“உன்னை கூட்டிட்டு போகலாம்னு வந்துருக்கோம் மா.” என்றார் அவர்.

ஒரு நொடி மௌனித்தாள் பிரத்தியங்கரா. எதற்கந்த மௌனம் என்று அவளுக்கே பிடிபடவில்லை.

“வெயிட் பண்ணுங்கப்பா. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.” என்றாள் பிரத்தியங்கரா.

“என்னமா அப்பா கூப்பிட்டாரா?” என்று சக்திவேல் கேட்க, “ஆமாண்ணா…” என்று பதில் சொல்லி கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.

சக்திவேல் பிரத்தியங்கராவை பார்த்து ஒரு நொடி பேசிவிட்டு, சாலையில் கவனத்தை திருப்ப, யாரோ அவர்களது வாகனத்தின் குறுக்கே வந்துவிட்டார்கள்.

முருகன் தான் மிகவும் கவனமாக பிரத்தியங்கராவை கவனித்து வந்தான். அவ்வளவு தான் இன்றோடு அவள் கிளம்பி விடுவாள் என்று தெரிந்ததும், அன்றே அவளை கடத்திவிட முடிவு செய்துவிட்டான். மார்த்தாண்டமும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

சக்திவேலை பின்தொடர்ந்து வந்த முருகன் ஆட்கள் யாருமற்ற சாலையில், அவர்களது காரின் குறுக்கே தனது காரினை கொண்டு வந்துவிட்டான். அதில் நிலை தடுமாறிய சக்திவேல், தனக்கு முன்னே இருந்த காரில் மோதி விடாமல் இருக்க, தனது காரை வேறு பக்கம் திருப்பினார். அவரது கெட்ட நேரமோ என்னவோ, வண்டி கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் வேகமாக ஸ்டியரிங் வீலில் மோதியதில் தலையில் அடிபட்டு மயங்கினார் சக்திவேல்.

சக்திவேல் மயங்கியது முருகனுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. பிரத்தியங்கரா அமர்ந்திருந்த பின்னிருக்கையை வந்து பார்த்தான் முருகன்.

சின்ன சின்ன அடிகளுடன், தலையை பிடித்தபடி நிலைகுலைந்து காணப்பட்டாள்.

காரின் கதவினை திறந்தவன், பிரத்தியங்கராவின் கைகளையும் கால்களையும் கட்டியவன், அவள் உதவி கேட்டு கத்தவும், அவளது வாயையும் துணி கொண்டு இறுக கட்டி வைத்தான்.

கொல்லிமலையில் காலடி எடுத்து வைக்கும் முன்பு ஒரு முறை தீர்க்கமாக பார்த்தார் மார்த்தாண்டம். எத்தனையோ தலைமுறைகளாக நிறைவேறாத மார்த்தாண்டம் குடும்பத்தின் ஆசை கனவு இலட்சியம் எல்லாம் இன்று நிறைவேற போகிறது. அதை நினைத்து மார்த்தாண்டத்தின் நெஞ்சம் விம்மியது!

கொல்லிமலையில் காலடி எடுத்து வைக்க போகும் சமயம், “அங்கேயே நில் மார்த்தாண்டா…!” என்றாள் வனபத்ரகாளி.

“தாயே இரண்டாம் முறையா உங்களை பார்க்க நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்!” என்று வணங்கினார் மார்த்தாண்டம்.

“உன் புண்ணியங்கள் மொத்தத்தையும் தொலைத்து பாவங்களை தேடுகிறாய் மார்த்தாண்டா…! இது தவறு! இறுதியாய் சொல்கிறேன் திரும்பிவிடு!” என்று எச்சரித்தாள் வனபத்ரகாளி.

“பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தின் நிறைவேற ஆசை தாயே… நிறைவேற ஒரு தருணம் கிடைக்கிறப்போ எங்க குலதெய்வம் நீயே குறுக்க நிக்கலாமா?” என்று பணிவுடன் கேட்டார் மார்த்தாண்டம்.

“மார்த்தாண்டா பல தலைமுறைகளாக உங்கள் குடும்பத்தின் பேராசையும் அதற்கு நீங்கள் கொடுக்கும் விலையும் கண்டவள் என்கிற முறையில் சொல்கிறேன். நீ செய்ய இருப்பது மாபாவம்! என்னால் கொல்லி அழைக்காமல் இந்த மலையினுள் நுழைய முடியாது! அவள் எல்லையில் உனக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது!” என்று நிதர்சனத்தை சொன்னாள் வனபத்திரகாளி.

மார்த்தாண்டம் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளானார்! வனபத்திரகாளியின் அருள் தனக்கு முழுமையாக இருக்கும் என்று நம்பினார் அவர். இப்படி தனது வேலையை ஆரம்பிக்கும் முன்பே வனபத்திரகாளியின் அருள் கிட்டாமல் போகும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பேராசை அவரை சிந்திக்க விடவில்லை!

“தாயே உன் அருள் மட்டும் எனக்கு இருந்தால் போதுமானது! மீதத்தை நான் பார்த்து கொள்கிறேன்.” என்ற மார்த்தாண்டம் கொல்லி மலைக்குள் நுழைந்தார்.

தான் இத்தனை எச்சரித்த பின்பும், மார்த்தாண்டம் தன் பேச்சினை கேளாது கொல்லிமலைக்குள் சென்றது வனபத்ரிகாளிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மார்த்தாண்டம் தன் முன்னோர்களை காட்டிலும் மிகவும் நல்லவர். ஆனால் கொல்லிமலையின் மீதான அவரது குடும்பத்திற்கும் ஏன் அவருக்குமே இருந்த மோகம் மட்டுமே அவரை தீய செயல்களை செய்ய இட்டு செல்கிறது.

முருகன் நள்ளிரவு நேரத்தில் எப்படியோ யாருக்கும் தெரியாமல் பிரத்தியங்கராவை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு கொண்டு வந்தான்.

வாய் இறுக கட்டப்பட்டதில் பிரத்தியங்கராவால் சிறு ஓசை கூட எழுப்ப முடியவில்லை. கைகளையும் கால்களையும் முடிந்த மட்டும் அசைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள். அதில் இரண்டு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டு சிவந்து போனது அவளுக்கு. அந்த நேரம் நிச்சயமாய் அவளுக்கு அன்னையின் மடி தேவை பட்டது.

முருகனது காரில் ஏறும் பொழுதே ஏதேதோ எண்ணங்கள் அவளுக்கு. அப்பா அம்மாவை காண வேண்டும் என்பது தான் அவளது பிரதான எண்ணமாக இருந்தது. அடுத்து என்ன நடக்க போகிறது, செய்தாளிலும் ஊடகங்களிலும் சொல்வது போல் ஏதேனும்… நினைக்கவே அவளுக்கு பயங்கரமாக இருந்தது.

கத்தி முயற்சி செய்ததில் தொண்டை எல்லாம் வலி எடுத்து புண்ணே ஆகியிருக்கும்; ஆனாலும் பிரத்தியங்கரா தன் முயற்சிகளை கை விடவில்லை.

சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என சொல்லிய பெண் அதீத நேரமாகியும் வரவில்லை என்பதில், மணியரசுவிற்கும் சௌந்தர்யாவிற்கும் கிலி பிடித்துக் கொண்டது. இருவருக்கும் ஒரே சக்திவேலின் மீதே சந்தேகம் வந்தது.

முதலில் ரெசாட்டில் சொல்லி சக்திவேல் வந்த பாதையில் தேட சொல்ல, கார் தடுப்பு சுவற்றில் மோதி இருந்ததை கண்டு பிடித்தனர். ஆனால் அங்கே சக்திவேலும் இல்லை பிரத்தியங்கராவும்.

அவ்வழியே வந்த இருவர், கார் விபத்துக்குள்ளாகி இருப்பதை கண்டு, ஆம்புலன்சிற்கு அழைத்து சக்திவேலை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

இதற்கு மேல் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்த மணியரசு, சென்னையில் தனக்கு பழக்கமான போலிஸ் உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து, விசயத்தை சொல்லி, துரிதமாக தனது பெண்ணை கண்டுபிடித்து தருமாறு சொன்னார்.

வழக்கு பதிந்து விசாரணை என்று ஆரம்பிக்கவே, பிரத்தியங்கரா யாருடனாவது ஓடி போயிருப்பாள் என்ற கோணத்தால் தான் போலிசார் ஆரம்பித்தனர்.

“சார் என் பொண்ணு விரும்பறவனை தான் சார் கல்யாணம் பண்ணி வைக்க தயாராக இருந்தோம். நிச்சயம் கூட முடிஞ்சிருச்சு. அவ ஜாதகத்துல தோஷம் இருக்குனு பரிகாரத்துக்கு தான் சார் கொல்லி மலைக்கு வந்தா.” என்று நொடித்து போய் சொன்னார் மணியரசு.

பெண் பிள்ளை காணம் என்றால் பெற்றவர்களின் மனம் பெரும் துயரத்திற்கு உள்ளாகும்.

மணியரசு மீண்டும் தனது செல்வாக்கை பயன்படுத்தி, காவலர்களிடம் தனியே அழைத்து பணம் கொடுத்து என பிரத்தியங்கராவை கண்டுபிடிக்க சொல்லவே பெரும் போராட்டமாக இருந்தது. அதற்குள்ளே மாலையாகிவிட்டது.

பணம் கைக்கு வந்த பின்பு வேலை சுறுசுறுப்பாகவே நடந்தது. அங்கு இங்கு என கேட்டு சக்திவேல் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர்.

சக்திவேல் தான் பிரத்தியங்கராவை கடத்திவிட்டதாக சொல்லி, அவரை விசாரிக்க, அழுதே விட்டார் மனிதர்.

“சத்தியமா எனக்கு தெரியாது சார்! அந்த பாப்பா அப்பா அம்மா வந்துட்டாங்கனு சொல்லிட்டு இருக்கப்போ, யாரோ ஒரு கார்காரன் திடீர்னு குறுக்க வந்துட்டான் சார். ஆக்சிடென்ட் ஆகிட கூடாதேன்னு காரை வளைக்க போயி, ஸ்லிப் ஆகி செவுத்துல முட்டிட்டேன். ஸ்டியரிங்ல அடிச்சதுல எனக்கு மயக்கம் வந்துடுச்சு சார். அப்பறம் என்ன நடந்துச்சுனே எனக்கு தெரியலை.” என்று விளக்கி சொன்னார் சக்திவேல்.

பிரத்தியங்கராவை கண்டு பிடிக்க இருந்த ஒரு வழியும் தடைபட்டது போல இருந்தது.

முருகனின் உதவியோடு மார்த்தாண்டம் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

பிரம்மாண்டமாக இருந்த நீர் வீழ்ச்சியினை கண்டவருக்கு, அக்கணத்தில் இருந்தே இறுமாப்பு என்பது உள்ளத்தில் வர ஆரம்பித்தது.

இதுவரையிலும் தங்கள் பரம்பரையில் எவராலும் கால் வைக்க முடியாத கொல்லி மலையினுள் நுழைந்து விட்டார் மார்த்தாண்டம்! விசயம் அது மட்டும் அல்ல; தக்க பலி பொருளையும் கண்டடைந்துவிட்டார்! இது எத்தகைய பெரிய விசயம்! பாதி கடலை தாண்டுவதற்கு ஒப்ப அரிய செயல் இது! நாளைய பலியோடு எல்லாம் முடிந்துவிடும்!

எத்தனை இளக்கார பார்வைகள்? எத்தனை கேலி பேச்சுகள்? எவ்வளவு பரிகாசங்கள்? ஆசையின் வேதனையில் புரண்ட நாட்கள் தான் எத்தனை? எல்லாம்… எல்லாம் நாளையோடு முடிய போகிறது!

கைகள் இரண்டையும் விரித்து மொத்த கொல்லி மலையும் தனக்கு கீழ் வர போகும் நிகழ்வை நினைத்து ஆனந்தம் அடைந்தார் மார்த்தாண்டம்.

விடிந்ததுமே தண்ணீரில் முழுகி உடலை தூய்மை செய்த மார்த்தாண்டம், பலியிடுவதற்கான பூஜைகளை செய்ய ஆரம்பித்தார்.

சூரிய கிரகணம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து 10.20 வரை நிகழும் என்பதால், அந்த நேரத்திற்கு ஆகாய கங்கைக்கு செல்ல பொதுமக்கள் யாரும் வரவில்லை. அது மார்த்தாண்டத்திற்கும் முருகனுக்கும் இன்னமும் வசதியாகி போனது.

சில மூலிகைகளை தண்ணீரில் கரைத்து கொடுத்தார் மார்த்தாண்டம். அதை பிரத்தியங்கரா திமிற திமிற, அவள் வாயிற்குள் ஊத்தி விட்டான் முருகன்.

சில நிமிடங்களில் பிரத்தியங்கராவிற்கு எதுவுமே ஒழுங்காக நினைவிலே இல்லை. கண் முன்பு காண்பது எல்லாமே கலங்கலாக தோன்றியது.

முருகன் பிரத்தியங்கராவின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். எழுந்து தப்பித்து ஓட வேண்டும் என்று பிரத்தியங்கராவின் மனம் சொல்ல, உடலோ அதற்கு நேர்மாறாக அசைந்து கூட கொடுக்கவில்லை.

அவளை எழுப்பி நிப்பாட்டினான் முருகன். மருந்தின் வீரியத்தில் சுருண்டு விழ போனாள் பிரத்தியங்கரா. அவளை அப்படியே கைத்தாங்கலாக அழைத்து சென்று தண்ணீரில் தலை முழுக செய்தான் முருகன். ஒரு நொடி அப்படியே ஆற்றலோடு அடித்து கொண்டு சென்றுவிடுமோ என்று தோன்றியது பிரத்தியங்கராவிற்கு.

கரையில் அவளை அமர வைத்தவன், புதுத்துணியினை கொண்டு வந்து அவளுக்கு சுத்தி விட்டான். பிரத்தியங்கராவிற்கு அவனை தள்ளிவிட்டு கத்த வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் அவளால் அசைய கூட முடியவில்லை.

மீண்டும் பிரத்தியங்கராவை எழுப்பிய முருகன், அவளை பலி பீடத்தில் கொண்டு வந்து அமர வைத்தான். கழுத்தில் ஒரு மாலையை போட்டு விட்டான். அப்பொழுது தான் நிகழ போகும் விபரீதமே பிரத்தியங்கராவிற்கு உரைத்தது!

கத்தி மறுப்பதற்கு கூட முடியவில்லை அவளால்!

கொல்லிக்கு தனது எல்லை ஓரத்தில் எதுவோ சக்தி ஒன்று புதிதாக வந்திருப்பதை உணர முடிந்தது. தன் காவல் பணியை முடித்துக் கொண்டு அவ்விடத்திற்கு சென்றாள் கொல்லி.

கொல்லி மலையின் அடிவாரத்தில் வனபத்திரகாளி நின்று கொண்டிருந்தாள்.

“வணங்குகிறேன்.” என கொல்லியே முதலில் வணக்கம் வைத்தாள்.

பதிலுக்கு வணக்கம் சொல்லிய வனபத்திரகாளியிடம் இருந்து சிநேக பாவனைகள் எதுவும் வரவில்லை.

“தாங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை நான் அறியலாமா?” புன்னகையை வழுவ விடாமல் கேட்டாள் கொல்லி.

பெரு மூச்சு ஒன்னு விட்ட வனபத்ரகாளியோ, “நான் சத்தியம் செய்து கொடுத்த குடும்பத்தை சேர்ந்த ஒருவன் மலைக்கு வந்து உள்ளான். அவனுடன் நானும் வந்தேன். உங்கள் எல்லையில் உங்களது அனுமதி இல்லாமல் என்னால் நுழைய இயாலது.” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!