Skip to content
Post Views: 5,569
காதல் அன்று
தூக்கத்தில் புரண்டுப் படுத்த ராகவ், தன் கன்னத்தில் ஈரம் உணர்ந்து, விழித்துக் கொண்டவன் கண்ணைத் திறக்காமலே, “ஏய் மயிலு, என்னடி காலங்கார்த்தாலேயே மாமாவை கரைக்ட் பண்ண ஆரம்பிச்சிட்ட?” என்று புன்னகைத்துக் கொண்டே கேட்க,
“அய்யோ மாமா, நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்!
அதான் உன்னைக் கொஞ்சிட்டு இருக்கேன்! ஆனா நீ நைட்டே லேட்டா வந்து அசந்து தூங்கிட்டு இருக்க, உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு தான்!”
Advertisement
“அப்படி என்னடி ஹேப்பி உனக்கு?”
“ம்ம். இத படிச்சுப் பாரு”, தன் நைட்டியில் சொருகியிருந்த அந்த லேப் ரிப்போர்ட்டை எடுத்து நீட்டினாள்!
படுத்தபடியே அதை வாங்கி படித்துப் பார்த்தவன், உடனே எழுந்து உட்கார்ந்து அவளை இறுக்க கட்டிக் கொண்டான்!
Advertisement
“ஹேய்..” அவனுக்கு சந்தோஷ மிகுதியில் வார்த்தைகள் தடுமாறின!
Advertisement
ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றாலும் அதை உறுதி செய்த அந்த ரிப்போர்ட் அவனைக் கண் கலங்க வைத்து விட்டது!
வித்யா பிரக்னன்ட்!
நான்கு நாள் முன்பும் இப்படி தான் அவனிடம் கொஞ்சி விட்டு வித்யா சொல்லியிருந்தாள்.
Advertisement
“மாமா, ஐம்பத்திரண்டு!” என்றாள் மொட்டையாக
“என்ன ஐம்பத்திரண்டு?”
“ஐம்பத்திரண்டு நாள் தள்ளிப் போயிருக்கு!”
“நிஜமாவா? அப்ப வா டாக்டர்கிட்ட போலாம்!”
“உங்களுக்கு இன்னிக்கு ஆபிஸ் டூர் ப்ரோக்ராம் இருக்கே, அதுவும் இல்லாம , அம்மா நல்ல நாள் பார்த்து போகணும்னு சொல்லுவாங்க!
நானே காலண்டர்ல பார்த்துட்டேன்! இன்னும் ரெண்டு நாள் கழிச்சுப் போலாம் மாமா, நீ அதுக்குள்ள உன் ஆபீஸ் வேலையை முடிச்சுட்டு வந்திரு!”
போக மனதே இல்லாமல் தான் போனான் ராகவ்!.
போன இடத்தில் மேலும் ஒரு நாள் கூட வேறு ஆகி விட்டது!
நேற்று இரவு பத்து மணிக்கு மேல் தான் ஆய்ந்து ஓய்ந்து வந்திருந்தான்! வந்தவனை டிஸ்டர்ப் செய்யவில்லை அவள்!
காலை அவன் எழும்வரை காத்திருந்து தான் சொன்னாள்!
இப்போது ராகவ் பயங்கர எமொசனலாகி விட்டான்!
“இந்த குழந்தை.. எனக்கு வாரிசு வரக் கூடாது என்று தானே அந்த ஈஸ்வரி அத்தனை பண்ணியது!”
அவன் நேராக, அவன் அம்மா படத்திற்கு முன் நின்று நந்தினியை வேண்டினான்!
“அம்மா, நீ பாட்டியாகிட்ட! தெய்வமா இருக்கிற நீ தான் என் பொண்டாட்டி வயத்துல பிள்ளையா வந்து பிறக்கணும்! நீ என்னைப் பார்த்துகிட்ட மாதிரி நான் உன்னை நல்லா பார்த்துக்கணும்!” மனதார வேண்டினான்!
இருவரும் அந்த படத்தின் முன் விழுந்து வணங்கினர்!
“உன் அம்மாவோடயா போன? எந்த ஹாஸ்பிட்டலுக்கு போன? நான் முன்னாடியே சொன்னேன் இல்ல, நம்ம வகையறா ஆளுங்க யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தான் டெஸ்ட் பண்ணனும்னு!”
“ஆமா மாமா, நானும் அம்மாவும் பக்கத்து வீட்டு திவ்யா அம்மாவும் தான் போனோம்.
இங்க சிட்டி அவுட்டர்ல புதுசா ஒரு ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சு இருக்காங்க இல்ல அங்க தான்!” ஹாஸ்பிட்டல் பேரையும் டாக்டர் பேரையும் சொன்னாள் வித்யா!
அந்த ஹாஸ்பிட்டல் பற்றி அவனும் விசாரித்து தான் இருந்தான்.
அது ஒரு மிகவும் புகழ்ப் பெற்ற மகப்பேறு மருத்தவரிடம் வெகு காலம் ஜூனியராக இருந்த ஒரு பெண் மருத்துவர் சொந்தமாக ஆரம்பித்து இருந்த ஹாஸ்பிட்டல்!
ஜூனியர் டாக்டர் என்றே சொல்லப்பட்டாலும் அந்த புகழ்ப் பெற்ற மகப்பேறு மருத்தவரின் லேபிளில் ஏகப்பட்ட டெலிவரிகள் பார்த்த அனுபவம் மிக்கவர்!
பெரிய டாக்டர் மிகவும் சிக்கலான கேஸ்களை மட்டுமே பார்ப்பார்!
எல்லோரும் அவர் பெயரைப் பார்த்து விட்டு அந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்தாலும், கிட்டத்தட்ட எல்லா பிரசவங்களுமே இந்த ஜூனியர் டாக்டர் பார்த்தது தான்!
இப்போது அவர் தனியே வந்து பெரும் முதலீட்டில் ஆரம்பித்து இருக்கும் மருத்துவமனை!
நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹாஸ்பிட்டல்! அதன் சீப் டாக்டர்!
சரியான சாய்ஸ் தான்! ராகவனுக்கும் திருப்தி!
“மயிலும்மா, இந்த விஷயம் கொஞ்சம் கூட வெளியே தெரியக்கூடாது! தெரிந்தால் நிறைய பேட் வைப்ஸ் வந்திடும்!
முக்கியமா நம்ம சொந்தக்காரங்க யாருக்கும் தெரியக்கூடாது! எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்! நேராக போய் அந்த ஈஸ்வரியிடம் சொல்லி விடுவார்கள்! எந்தக் காரணம் கொண்டும் அவங்களுக்கு மட்டும் இது தெரியவேக் கூடாது!”
“ஆமா மாமா, அம்மாவும், திவ்யா அம்மாவும் கூட இதையே தான் சொன்னார்கள்! உன் புருஷன் பாட்டுக்கு ஆபிஸ்ல ட்ரீட் கேட்டாங்கன்னு எதாச்சும் அலப்பறை பண்ணிட போறார்ன்னு!”
அவர்கள் சொன்னதும் சரிதான்!
ராகவ் செய்யக் கூடிய ஆள் தானே!
இந்த பக்கத்து பிளாட் திவ்யா, இவர்கள் இந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளில் பெரிய மனுஷியாகி விட, ராகவ் உடனே ஓடிப் போய் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கி வந்து விட்டான்!
அவர்களே கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்!
என்ன, குடி வந்து ஒரு மாதம் தான் ஆகிறது! அதற்குள் இப்படி செய்கிறார்களே என்று!
வீட்டுக்கு வந்த பின் வித்யா ராகவை திட்டினாள்!
“ஒரு கால் கிலோ ஸ்வீட், கொஞ்சம் பூ வாங்கிட்டு போனா போதும் மாமா, ஏன் இப்படி?”
“ஏய்,. அந்த பொண்ணு நம்ம வீட்டுல விளையாடிட்டு இருக்கும்! அங்கிள் அங்கிள்னு வந்து ஆசையா பேசும்! அதுக்கு ஒரு நல்லதுனா, நாம செய்யக் கூடாதா?”
“செய்யலாம்ங்க ஆனா அதுக்கும் அளவு இருக்கு! அவங்க சொந்தக்காரங்களே, ஒரு கிண்ணத்தில் சர்க்கரை எடுத்துட்டு வந்து தான் பார்த்துட்டுப் போனாங்க.
நீங்க தான் இவ்வளவு செலவுப் பண்ணி இருக்கீங்க! சரி செலவு பண்ணுறீங்க சரி. அந்த காசுக்கு அழகா ரெண்டு சுடிதார் வாங்கி இருக்கலாம்! வச்சாவது போட்டுப்பாங்க, இப்படி ஸ்வீட்ல போய் இவ்வளவு காசைப் போட்டுடீங்களே!”
இத வைத்து அவர்களுக்குள் சின்ன சண்டையும் வந்து பின் சமாதானமும் ஆனார்கள்!
ராகவின் குணம் தெரிந்து அவர்கள் எச்சரிக்க, ராகவோ அவர்களுக்கு மேல் இருந்தான், இந்த விசயத்தில்!
பெரியாப்பாவுக்கு மட்டும் விஷயத்தை சொன்னான். அங்கே பெரியம்மாவும் அதே அட்வைசை செய்தார்!
குழந்தை விசயத்தில் ரொம்பவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் அனைவரும்!
ஒவ்வொரு மாத செக்கப்புக்கு போகும் போதும் ஹாஸ்பிட்டல் அருகில் இருந்த ராகவின் முஸ்லீம் நண்பன் வீட்டுக்கு அதிகாலையிலே அழைத்து போய் விடுவான் ராகவ்!
பின் அவர்கள் வீட்டில் காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு, செக்கப் போவார்கள். பின் கிட்டத்தட்ட மாலை வந்து இருட்டும் நேரம் தான் வீடு திரும்புவார்கள்!
மற்ற நாட்களில் எல்லாம் வித்யாவை வீட்டை விட்டு வெளியே கூட வர விட வில்லை ராகவ்!
வித்யா கிட்டத்தட்ட சூரிய வெளிச்சமே பார்க்கவில்லை! குறிப்பாக முதல் மூன்று மாதங்கள்!
தினமும் வித்யா கந்த சஷ்டி கவசம் படிப்பாள்! இருமுறை!
அதில் வரும் வெற்றி வேல் வயிற்றை விளங்கவே காக்க என்று வரும் இடங்களில், அவளாக ஒன்றை சேர்த்துக் கொள்வாள்! அந்த வயிற்றில் இருக்கும் என் சிசுவை அந்த சிவ மைந்தன் காக்க என்று!
ராகவ் வீட்டில் இருந்தால் அவனுமே கூட படிப்பான்!
லதா பெரும்பாலும் இவர்கள் வீட்டில் தான்!
கூட துணைக்கு திவ்யா அம்மாவும்!
திவ்யாவும் தவம் இருந்து பிறந்த குழந்தை தான்!
அவள் பெற்றோருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தப் பிறந்தவள்!
அதனால் திவ்யா அம்மாவும் வித்யாவை நன்கு பார்த்துக் கொண்டார்!
அவருக்கும் ஈஸ்வரி விஷயம் தெரியும்! அவருக்குமே ரத்தம் கொதித்தது அவள் செய்தவற்றை எல்லாம் கேட்ட பிறகு!
அதன் பின் அவரும் அவர்களுக்கு மிகவும் ஆதரவாகவே இருந்து வந்தார்!
வளைகாப்பு கூட சிம்பிளாகவே நடத்தினார்கள்!
அவர்கள் பயம் அவர்களுக்கு!
லதாவின் கவனிப்பு, திவ்யா அம்மா மற்றும் அந்த முஸ்லீம் குடும்பத்தின் ஆதரவு, வளர்ந்து வரும் அந்த டாக்டரின் பிரத்யேக கவனிப்பு, எல்லாவற்றிற்கும் மேலாய் ராகவின் அதிகப்படியான அன்பு, உள்ளுக்குள் ராகவ் வித்யாவின் வாரிசு நல்லபடியாவே ஆரோக்கிமாக வளர்ந்து வந்தது!
அவ்வபோது மாமியாருக்கும் மருமகனுக்கும் செல்ல சண்டைகளும் வரும்!
“அதென்ன, எப்ப பார்த்தாலும் பெண் குழந்தை வேணும் பெண் குழந்தை வேணுமின்னு சொல்லிட்டு இருக்கீங்க, எனக்கு எல்லாம் பேரன் தான் வேணும்!” என்பார் லதா!
அவரோடு வார்த்தைப் போர் புரிந்து மல்லுக்கு நிற்பான் ராகவ்!
“அதெல்லாம் முடியாது, எனக்கு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு தான் வேணும்!”
“ம்ஹும் பேரன் தான் வேணும்”
“ம்ஹும் மகாலக்ஷ்மி தான்! எங்கம்மாவே வந்து பிறப்பாங்க பாருங்க!
ஏய் மயிலு பார்த்துக்கடி, உன் அம்மா ஹாஸ்பிட்டல் வச்சு பிள்ளைய கிள்ளைய மாத்திட போறாங்க! அலெர்ட்டா இரு!” ராகவ் அவரை மேலும் வம்பிழுப்பான்!
பிரசவ நாள் நெருங்கியது!
அவுட்டரில் உள்ள ஹாஸ்பிட்டல் போக வேண்டும் என்பதால், அவளுக்கு வலி வரும் முன்பே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து விட்டான் ராகவ்! ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை!
பின் கிட்டதட்ட டாக்டர் குறித்துக் கொடுத்த நாளில் சரியாகவே அவளுக்கு வலி எடுத்தது.
வித்யாவை பிரசவ அறைக்கு அழைத்துப் போனார்கள்!
உள்ளே போன அவள் அங்கிருந்த சிஸ்டரிடம் ஏதோ சொன்னாள். அதைக் கேட்டுக் கொண்ட அவர், வெளியே வந்து ராகவை உள்ளே போக சொன்னார்!
அவர் கொஞ்சம் நக்கலாக சிரித்த மாதிரியே தெரிந்தது ராகவிற்கு!
“என்ன சொல்லியிருப்பாள் மயிலு!”
உள்ளே போனான்.
“என்ன மாமா இப்பிடி பயந்து போய் இருக்க? பயப்படாத மாமா, அப்படியெல்லாம் உன்னை ஜாலியா இருக்க விட்டுட்டு நான் போய்டுவேனா?
இருந்து மாமாவை வச்சு செய்ய மாட்டேன்? நீ ஏன் மாமா மூஞ்சிய இப்படி பேயறைஞ்ச மாதிரி வச்சுட்டு இருக்க, இது எல்லா பெண்ணிற்கும் வர வலி தான்!
ஏதோ நான் மட்டும் இப்படி கஷ்டப்படுற மாதிரி நினைச்சுட்டு இருக்காத! என்ன இன்னும் கொஞ்சம் நேரம், நம்ம பாப்பாவோட உன்னை பார்க்கப் போறேன்! நீ தைரியமா இரு மாமா!”
“ம்ம். சரி” என்று தலையாட்டினான் ராகவ்!
பின், ஞாபகம் வந்தவனாக, கேட்டான், “ஆமா நீ அந்த சிஸ்டர்கிட்ட என்ன சொல்லியிருந்த, அவங்க என்ன கொஞ்சம் பார்த்து நக்கலா சிரிச்சுட்டுப் போன மாதிரி இருந்துச்சு!”
“அதுவா, வெளியே வாட்டசாட்டமா, ஆனா ஒரு டம்மி பீசு கொஞ்சம் பயந்துட்டு நின்னுட்டு இருக்கும், அத கொஞ்சம் உள்ளே அனுப்புங்கன்னு கேட்டேன்!”
“டேய்..டம்மி பீசாடி நான்!, நீ வெளியே வா உன்னை கவனிச்சுக்கிறேன்”, என்று அவளை செல்லமாக நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சி விட்டு மனமில்லாமல் வெளியே வந்தான் ராகவ்!
அவன் போன பின் உள்ளே வந்தார்கள் லதாவும் அரசும்!
“அப்பா, நீங்க மாமாவை கொஞ்ச நேரம் வெளியே எங்கியாவது டீக்கடை மாதிரி கூட்டிட்டுப் போங்கப்பா, அவர் இருக்கும் போது என்னால வலில கத்தக் கூட முடியல!
ஆனா வலிக்குதுப்பா, கத்தினா மாமா பயந்துக்குவாருன்னு பல்லைக் கடிச்சுட்டு இருக்கேன்! நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது?”
“சரிம்மா” என்று அவர் ராகவைக் கூட்டிக்கொண்டு வெளியேறிய பின் தான் அவள் வலியில் கத்தவே ஆரம்பித்தாள்!
நல்லபடியாக குழந்தை பிறந்தது!
“நான் தான் ஜெயிச்சேன், நான் தான் ஜெயிச்சேன்” என்றபடி மாப்பிள்ளையிடம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் காட்டினார் லதா!
ஆண் குழந்தை!
நல்ல எடையில்! அப்போதே ராகவைப் போல நல்ல உயரமாக, தலை நிறைய முடியுடன், திராட்சைக் கண்களுடன்!
ராகவ் குழந்தையைக் கையில் வாங்கினான்!
“மை சன்! மை சன்!” என்றான் உணர்ச்சி வசப்பட்டு குரல் உடைய! அவன் கண்களில் கொஞ்சம் ஈரம்!
குழந்தையுடன் வித்யாவைக் காண உள்ளுக்குள் சென்றான்!
வித்யா அவனைப் பார்த்து சிரித்தாள்! ரொம்பவும் டயர்டாக இருந்தாள்!
குழந்தையுடன் அவளருகே சென்றவன், அவளையும் நெற்றியில் முத்தமிட்டு “தாங்க்ஸ்” என்றான்!
“தாங்க்ஸா எனக்கா, போ மாமா நீ என்ன லூஸா?” என்று சிரித்தவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான், ஒரு கையில் குழந்தையை கவனமாக பிடித்துக் கொண்டும்!
கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் லதா! மகளின் டெலிவரிக்காக என்று அவர் விஆர்எஸ் ஏ வாங்கி விட்டிருந்தார்!
அவர்கள் வீட்டில் பிறக்கும் முதல் பேரக் குழந்தை!
அனைவருக்கும் அத்தனை சந்தோசம்!
வாகீசன் ஒரு கடையையே வாங்கி வந்திருந்தான்! பொம்மைகளும் ட்ரெஸ்களும்!
வாணி, அப்போது தான் வேலைக்கு சேர்ந்து இருந்தவள், அவளும் வாக்கர், ராக்கர் என்று ஏகப்பட்ட பொருட்களை அள்ளி வந்திருந்தாள்!
“இது இப்படி போடணும், அது அப்படி போட்டு விடணும்” என்று ஏகப்பட்ட குழந்தைகளுக்கான பொருட்கள்!
நகவெட்டி முதல், ஆலிவ் ஆயில் வரை!
அரசு குழந்தைக்கு செயின், ப்ரேஸ்லெட் மோதிரம், அருணாக் கொடி, கொலுசு என்று வாங்கி போட்டார்.
“என் பேரன், என் பேரன்” என்று கொஞ்சி தீர்த்தார்!
பேரப்பிள்ளைகள் என்பது அரசுவின் வயதில் இருக்கும் ஆண்களுக்கு ஒரு கர்வமும் கூட!
அதுவும் பெண்ணை நல்ல முறையில் கட்டிக் கொடுத்து, அவன் கணவனுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தி, இப்படி பேரக் குழந்தையைப் பெற்று அதை தான் இப்படி தூக்கிக் கொஞ்சுவது என்பது மிகப் பெரிய கொடுப்பினை, பெருமை, ஆனந்தம், கர்வம்!
அதிலும் வித்யா அவரின் செல்ல மகள்! வாகீசனும் வாணியும் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள், என்று அவருக்கு ரொம்ப நம்பிக்கை! வித்யாவைப் பற்றி மட்டும் அவருக்கு எப்போதும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும்!
அவள் நன்றாக படிக்க வில்லை என்பதால் அல்ல!
அவளின் அந்த வெள்ளந்தியான நல்ல மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமே என்ற கவலை!
அது இப்போது அவளை ராகவிற்கு கட்டிக் கொடுத்த சில நாட்களில் மறைந்து போய் விட, இப்போது அவர் சந்தோசத்தின் உச்சியில்!
கூடவே ஒரு வருத்தமும்!
“ம்ம். இதெல்லாம் அந்த ஆளுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கலியே? என்ன காசு, என்ன சொத்து இருந்து என்ன பிரயோஜனம்?” என்று ராஜேந்திரனை எண்ணி வருத்தப்படுவார்!
ஆம், ராகவ் இன்னுமும் அவருக்கு தனக்கு குழந்தை பிறந்து இருக்கும் விசயத்தையே சொல்ல வில்லை!
ஆனால் யார் மூலமே கேள்விப் பட்டிருந்த அவரும் ஈகோவை விட்டு பார்க்க வரவில்லை! ஆனால் உள்ளுக்குள் கொஞ்சம் ஆசையும் இருந்ததோ!
ஆனால், ராகவின் பெரியப்பா வந்து குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு, “நீ என்னோட வெற்றியின் அடையாளம்டா” என்று சொல்லி அவரும் அப்போதே குழந்தையின் பேரில் ஒரு கணிசமான தொகையை டெபாசிட் செய்தார்!
ராகவின் முதலாளி சியாம், தன் அம்மாவுடன் வந்து குழந்தைக்கு அவனும் ஒரு செயின் போட்டு விட்டு, வாழ்த்தி விட்டு போனான்!
கூடவே வந்திருந்த அவன் அம்மா, “டேய் ராகவ், கூடவே இன்னொரு நல்ல சேதி! உன் அண்ணனுக்கும் இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்!”
“ஓ ரியலி! அண்ணே சூப்பர்ண்ணே! சீக்கிரம் கல்யாணம் பண்ணி, சீக்கிரம் ஒரு பெண்ணைப் பெத்துக் கொடு, அத என் பையனுக்கு கட்டி வச்சு, உன் கம்பெனியவே டவுரியா வாங்கிடறேன்!” என்றான் ராகவ் மகிழ்ச்சியும் குறும்புமாக!
நாட்கள் சென்றன.
குழந்தையின் முதல் பிறந்த நாள் வந்தது!
அதற்கு வந்திருந்தவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள், நலம் விரும்பிகள் மட்டுமே!
அதில் வந்திருந்த ஒரு உறவினர், இன்னுமொரு நல்ல தகவலை சொன்னார்!
வாகீசனுக்கும் வாணிக்கும் ஒரே வீட்டில், பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் சம்பந்தம் ஒன்று வந்து இருப்பதாக!
அண்ணனும் தங்கையும் இருவருமே அமெரிக்காவில் வேலைப் பார்க்கிறார்கள்!
அம்மா இல்லை. அப்பா மட்டுமே! அவரும் அவர்களுடன் தான் இருக்கிறார்! எடுத்து செய்ய ஆளில்லை அவர்கள் வீட்டில் அது ஒன்று மட்டுமே குறை!
வாகீசனுக்கும் வாணிக்கும் இந்த சம்பந்தம் பிடித்து விட இருவருக்கும் நான்கு நாட்கள் இடைவெளியில் திருமணம் நடந்தது!
கல்யாண வீட்டில் மாப்பிள்ளை பெண்ணை விட வந்திருப்போரை அதிகம் கவர்ந்தது ராகவ் வித்யா ஜோடி தான்!
அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இருந்தார்கள் இருவரும்!
வேலை கொடுத்த தன்னம்பிக்கை, அன்பான மனைவி, அழகான குழந்தை என்று அமைந்த குடும்பம் ராகவின் முகத்தில் அப்படியொரு களையைக் கொடுத்து இருந்தது!
வித்யாவோ அதற்கும் மேல்!
பிள்ளைப் பெற்ற பின் கொஞ்சம் பூசிய மாதிரியான உடலமைப்பு, கட்டியிருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை, நகைகள், பூரிப்பான முகம்!
கொழு கொழுவென்று அழகாக இருந்த குழந்தை மித்துவை சுற்றி சுற்றி படமடுத்தார் புகைப்படக்காரர்!
கூடவே ராகவின் டான்ஸ் வேறு!
சம்மந்தி வீட்டு உறவினரில் ஒருவர், திரைப்பட டான்ஸ் மாஸ்டர் வேறு!
அவருடன் சேர்ந்து ராகவின் டான்ஸ்!
போகும் போது அந்த டான்ஸ் மாஸ்டரும் அவர் மனைவியும் வித்யாவிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள்!
“யூ ஆர் வெரி லக்கிமா” என்று!
பெருமையில் சந்தோசத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள் வித்யா!
அப்படியே இருந்து இருக்கலாம்!
ஆர்வக் கோளாறில், கொஞ்சம் இமொசனலாக அவள் ராகவிற்கு தெரியாமல், அவன் இல்லாத போது அவள் செய்து விட்ட ஒரு காரியம், அது அவ்வளவு ஒரு பெரிய தப்பு எல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கூட, அதுவே, அவர்களின் சறுக்கலுக்கு பிள்ளையார் சுழிப் போட்டு ஆரம்பித்து விட்டது!
error: Content is protected !!