Skip to content
Post Views: 1,567
அத்தியாயம் 11
‘இங்கே வா…’ என்பது போல சிவப்பு சேலையணிந்த அந்த பெண் அழைக்கவும், தனக்கு உதவிய பெண் ஆயிற்றே என முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு, அவளை நோக்கி சென்றாள் பிரத்தியங்கரா.
Advertisement
“பாப்பா… அன்னைக்கு ஏன் தனியா விட்டுட்டு போன? நீயும் என் கூடவே வந்திருக்கலாம்ல. நீ எங்க போனியோ என்ன பண்ணியோனு மனசு கிடந்து தவிச்சிது தெரியுமா?” என என்னமோ பல வருட பழக்கம் போல பேச ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா.
படபடவென பேசும் இரகம் அல்ல பிரத்தியங்கரா. அளந்து தான் பேசுவாள். நீண்டகாலம் பழகியவர்களுடன் மட்டுமே நன்றாக பேசுவாள். ஆனால், எப்படி என்றே தெரியவில்லை அந்த பருவ வயது பெண்ணை பார்த்ததும் பேச்சு தன் பாட்டில் வந்தது அவளுக்கு. இரண்டு மூன்று நாள்களாக அந்த பெண்ணை பற்றியே நினைத்து கொண்டிருப்பதால் நீண்டதொரு நெருக்கம் கொண்ட பெண்ணை போல தோன்றியதோ என்னமோ அவளுக்கு!
Advertisement
Advertisement
“அதை விடு. உன் வேண்டுதல்களை நீ முடித்துவிட்டாயா?” என சிவப்பு சேலையணிந்த பெண் கேட்டாள்.
“நான் வேண்டிக்க தான் இங்க வந்தேன்னு உனக்கு எப்படி தெரியும் பாப்பா?” என கேட்டாள் பிரத்தியங்கரா.
Advertisement
“கோவிலுக்கு வேண்டுதல் இல்லாது வரும் மனிதர்களை நீ கண்டதுண்டா?” என சிறு புன்னகையுடன் கேட்டாள் அந்த பெண்.
சின்ன சிரிப்பு தான். அழகிய மத்தாப்பூ போல. அதில் தெரிந்த பிரகாசத்தில் ஒரு நிமிடம் பிரத்தியங்கராவின் மதி மயங்கியே போய்விட்டது.
“என்ன அப்படி பாக்குற?” என அந்த பெண் கேட்க,
“நீ ரொம்ப அழகா இருக்க பாப்பா…!” என்றாள் பிரத்தியங்கரா தன்னையும் அறியாமல்.
சொன்ன பின்பு தான், தான் ஏன் அப்படி சொன்னோம் என தோன்றியது பிரத்தியங்கராவிற்கு.
நவீனத்துவத்தின் எவ்வித அடையாளமும் அற்ற பெண்ணாய் இருக்கிறாள். காதுகளில் ஏதோ பெரிய தோட்டினை போட்டிருக்கிறாள். அது போல ஒன்றை பிரத்தியங்கரா பார்த்ததே இல்லை. ஜாக்கெட் இல்லாது கணு காலுக்கு மேலே ஏற்றி கட்ட பட்ட புடவையை அவள் பழைய சினிமாக்களில் பார்த்தது உண்டு. ஆனால் நேரில் இன்று தான் பார்க்கிறாள். எல்லாவற்றையும் விட, அந்த பெண்ணின் கருமை நிறம் வசியம் செய்வது போல சுண்டி இழுக்கிறது! அது தான் எப்படி என புரியவில்லை பிரத்தியங்கராவிற்கு.
“என்ன அப்படி பார்க்கிறாய்?” என அந்த பெண் கேட்கவும், சடுதியில் தன்னை மீட்டுக் கொண்டு பிரத்தியங்கரா,
“ஒன்னுமில்லை பாப்பா. உன் பேரு என்ன? அன்னைக்கு பதட்டத்துல கேக்க மறந்துட்டேன்.” என்றாள் பிரத்தியங்கரா.
ஒரு நொடி யோசித்த அந்த பெண்ணோ, “நாட்டிற்கு ஒரு பேரை சொல்லி என்னை கூப்பிடுவார்கள். அதில் உனக்கு எந்த பெயர் வேண்டும்?” என கேட்டாள்.
பிரத்தியங்கராவிற்கு எதிரே இருக்கும் பெண்ணின் பேச்சு சுத்தமாக புரியவில்லை.
“உன்னை எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்களோ அந்த பேரை சொல்லு பாப்பா…”
“என்னை எல்லோரும் கொல்லி என அழைப்பார்கள். அணங்கு என்பது என் பெயர் தான். மக்கள்…” என கொல்லிப்பாவை பேச,
“உன் பேரும் கொல்லியா? பாரேன் இங்க நான் கூம்பிட வந்த சாமி பேரும் கொல்லி தான். வாட் அ கோன் இன்சிடன்ஸ்.” என குறிக்கிட்ட பிரத்தியங்கரா அதிசயத்தாள்.
“பரங்கியனை போல பேசுகிறாய்.” என கொல்லி முணுமுணுத்தாள்.
“என்ன சொன்ன கொல்லி…” என காதில் சரியாக விழாமல் கேட்டாள் பிரத்தியங்கரா.
எல்லோரும், ‘அம்மா’, ‘தாயே’, ‘எட்டுக்கை அம்மன்’, ‘பாவை’, ‘அணங்கு’ என எத்தனையோ பேர் வைத்து அவளை அழைத்துள்ளனர். அதுவும் கொல்லி என அவளை அழைப்பதும் சித்தர்களும் முனிவர்களும் மட்டுமே. இப்பொழுது பிரத்தியங்கராவும் அப்படியே அழைக்க, கோபம் வந்தது கொல்லிக்கு.
“என்னை அப்படி அழைக்காதே…” என சீறினாள் கொல்லி.
பிரத்தியங்கராவிற்கு கண்களில் நீரே வந்துவிட்டது. நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
“பாப்பா…” என கண்களில் நீரோடு அழைத்தாள் பிரத்தியங்கரா.
பாவம் அவளுக்கு என்ன தெரியும்? கொல்லி என்பது மலையின் பெயரா அல்லது அவளின் பெயரா என்றே தெரியாத அளவிற்கு பிண்ணி பிணைந்துவிட்டது. ஆட்களை மயக்கி கொல்லுவதால் அவளை கொல்லி என அழைப்பதாக ஒரு சாரர் சொன்னால், வானுயர்ந்த மரங்களை கொண்ட காட்டில் மனிதர்கள் சிக்கிக்கொண்டு இறந்து போன கதையும் உண்டு என்பதால், இம்மலையை கொல்லி மலை என்கிறனர். அதை காவல் காக்கும் தெய்வத்தை அதன் பெயரை கொண்டே சிலர் அழைக்கின்றனர். எதுவாகினும் அவளை கொல்லி என்பது பொருத்தமற்ற பெயர் தான் அவள் அளவில்!
“உனக்கு அந்த பேர் பிடிக்கலைன்னா சொல்லு பாப்பா. உன்னை நான் வேற பேர் சொல்லி கூப்பிடறேன்.” என்றாள் பிரத்தியங்கரா.
கொல்லி எதுவுமே பேசவில்லை.
‘இவள் எல்லைகளை மீறி வருகிறாள்’ என்று தோன்றியது கொல்லிக்கு.
“நான் வேணா உன்னை அமுதான்னு கூப்பிடவா?” என்று கேட்டாள் பிரத்தியங்கரா.
அமுதா எனும் பெயரை எங்கோ ஊர் பக்கம் கேள்விப்பட்ட நியாபகம். சட்டென கொல்லியை அப்படி அழைக்க வேண்டும் என பிரத்தாயங்கராவிற்கு தோன்றியது. அவளின் மூளை யோசிக்க நினைத்தால் எதிலோ சிக்குண்டு மொத்தமாக வேலை செய்யும் திறனை இழந்தது போல இருக்கும். ஆகையால் அதை கிடப்பில் போட்டுவிட்டாள் பிரத்திரங்கரா.
அமுதா… அமுதா… அமுது! கொல்லிக்கு மனசெல்லாம் ஏதோ செய்தது. அவள் எவ்வளவோ நல்லது செய்தாலும் அவளுக்கென விதிக்கப்பட்ட பெயரோ ஆலகால நஞ்சை ஒப்ப இருந்தது. ஆனால் இந்த மானுட பெண் தனக்கு வைத்திருக்கும் பெயரோ அமுது!
அமுதென்பது என்ன? பசிப்பிணியை வேரறுக்கும் தேவாமிர்தம் அல்லவா?! அவள் தன்னை தேவாமிர்தம் என்றா அழைக்கிறாள்?
கொல்லி ஒரு நொடி தான் யார் என்பதையே மறந்து உணர்ச்சி வயப்பட்டாள். அவளது உணர்ச்சிகளுக்கு ஏற்ப, சாதாரணமாக வீசிக் கொண்டிருந்த காற்றோ, பலமாக சூறை காற்றாய் வீசியது. மேக கூட்டங்கள் வேகமாக ஓடின. பறவைகளும் விலங்குகளும் கூச்சலிட்டன. கொல்லி மலையே ஒரு நொடி அல்லோகல்லபட்டது!
வேகமாக அடித்த காற்றில், நிற்க முடியாது தடுமாறினாள் பிரத்தியங்கரா.
“கொல்லி…” என்றொரு சத்தம் கொல்லிப்பாவையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
போகரின் குரல் அது!
பலமான காற்று மெது மெதுவாக குறைந்தது.
அடித்த காற்றில் ஒரு துசி வந்து பிரத்தியங்கராவின் கண்ணில் வந்து விழ, அதை நீக்கிக் கொண்டே, “அமுதா நீ பத்திரமா இருக்கியா?” என கேட்டாள்.
பதில் இல்லை.
பார்வை இப்பொழுது சரியாகிய பின்பு, சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள் பிரத்தியங்கரா. அமுதாவை (கொல்லி) எங்கும் காணவில்லை.
“அமுதா… அமுதா…” என கூப்பிட்டு பார்த்தாள் பிரத்தியங்கரா.
“பாப்பா இங்க என்ன பண்ணுறீங்க?” என்றபடியே பிரத்தியங்கராவின் பின்னால் வந்து நின்றார் சக்திவேல்.
சூறை காற்று அடிக்கவும் பிரத்தியங்கரா பயந்து போய் இருப்பாள் என ஓடி வந்தார் அவர்.
“இல்ல அண்ணா இங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்துச்சு. இப்ப காணோம்.” என்றாள் பிரத்தியங்கரா.
“எந்த பொண்ணு மா?” என கேட்டார் சக்தி வேல்.
“ஒரு பொண்ணு ண்ணா… பதினாறு பதினேழு வயது இருக்கும். புடவைலாம் கட்டிட்டு இருந்தா… சின்ன பொண்ணு தான்.” என்றாள் பிரத்தியங்கரா.
“எதாச்சும் மலையில இருக்க பொண்ணா இருக்கும் மா. அடிச்ச காத்துக்கு எங்கிட்டாச்சும் ஒதுங்க போயிருக்கும். நீங்க வாங்க போகலாம்.” என்றார் சக்தி வேல்.
பிரத்தியங்கராவின் கண்கள் அவளின் அமுதாவை தேடின.
தங்கும் இடத்திற்கு வந்த பின்பும் அமுதாவின் நியாபகம் தான் பிரத்தியங்கராவிற்கு. பின்னலை கலைத்துக் கொண்டே யோசிக்கும் பொழுது தான், ஒரு நன்றி கூட சொல்லாது வந்த விசயம் நினைவிற்கு வந்தது அவளுக்கு. தலையிலே தட்டிக் கொண்டாள்.
“அந்த பொண்ணுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துருக்க. உன்னை பத்தி என்னை நினைக்கும் அந்த பொண்ணு?” என கண்ணாடியில் தன்னை தானே பார்த்து கேட்டுக் கொண்டாள் பிரத்தியங்கரா.
“பாவம் அது வெறும் கால்லையே தான் நடந்துச்சு.” என்று பேசியவள், நன்றிக்கடனாக ஒரு செருப்பினை வாங்கி தர வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் சக்திவேலிடம் சொல்லி நாமக்கலில் உள்ள நல்லதொரு செருப்பு கடைக்கு சென்றாள் பிரத்தியங்கரா. அவளுக்கும் தான் வாங்க வேண்டும். அவளது பழைய செருப்பு பிய்ந்து போய்விட்டது. சக்திவேல் அவருக்கு தெரிந்த அளவில் வாங்கி கொடுத்த செருப்பு ஒன்றும் அவ்வளவாக அவளுக்கு பொருந்தவில்லை.
நாமக்கலில் கொஞ்சம் அங்கே இங்கே என சுற்றியவள், சக்திவேல் குடும்பத்திற்கு கொஞ்சம் பொருட்களை வாங்கிவிட்டு, செருப்பு கடைக்கு சென்றாள். தனக்கென ஒரு ஜோடி செருப்பும் ஷூவும் வாங்கிக் கொண்டாள் பிரத்தியங்கரா.
“அண்ணா டீன்ஏஜ் பொண்ணுங்க போடுற மாதிரி ஷூ இருந்தா காட்டுங்க.” என்று கேட்டாள் பிரத்தியங்கரா.
கடைக்காரரும் எடுத்து காட்டினார்.
“யாருக்கு மா?” என சக்திவேல் கேட்க,
“நேத்து கோவில்ல பாத்தீங்களே அந்த பொண்ணுக்கு தான் ண்ணா…” என்றாள் பிரத்தியங்கரா.
“கோவில்லையா? அப்படி யாரையும் நான் பாக்கலையே…” என யோசனையாய் தாடையை நீவினார் சக்திவேல்.
“காத்து அடிச்சதுல சரியா பாத்துருக்க மாட்டீங்க… அடுத்த டைம் பார்த்தா உங்களை கூப்பிட்டு காட்டறேன்.” என்றாள் பிரத்தியங்கரா.
அமுதாவின் கால் அளவு தெரியாமல் எப்படி வாங்குவது என பெருத்த யோசனை ஓடியது பிரத்தியங்கராவிற்கு. அன்று இரவு அவளது காலடி தடத்தை பார்த்த நியாபகம் அவளது மூளைக்குள் ஓடியது. அதை அப்படியே நினைவு கூர்ந்தவள், கை அளவாக கொண்டு, குத்துமதிப்பாக ஒரு ஜோடி ஷீக்களை வாங்கிக் கொண்டு வந்தாள்.
(பிரத்தியங்கராவிற்கு கொல்லிப்பாவை அமுதா என மனதில் பதிந்ததால், பிரத்தியங்கரா கொல்லிப்பாவையை பற்றி நினைக்கும் இடங்களில் அமுதா எனவே கொல்லியை அழைப்போம்)
அன்று சாயங்காலம் தான் கோவிலுக்கு சென்றனர் பிரத்தியங்கராவும் சக்திவேலும்.
அமுதாவிற்கென வாங்கிய ஷீக்களை எடுத்துக் கொண்டு தான் கோவிலுக்கு வந்தாள் பிரத்தியங்கரா.
கோவிலுக்கு வெளியேவே வைத்துவிட்டு தான் உள்ளே சென்று சாமி கும்பிட்டாள்.
சாமி கும்பிட்டு முடித்ததும் அவளின் கண்கள் அமுதாவை தான் தேடின. அங்கே இங்கே என நகர்ந்து தேடிக் கொண்டே இருந்தாள்.
“பாப்பா ஒரு கால் வருது. சிக்னல் பக்கத்துல இல்லை. கொஞ்சம் தள்ளி பேசிட்டு வர்றேன். அதுவரைக்கும் இங்கையே இருங்க.” என சொல்லாவிட்டு அங்கிருந்து சென்றார் சக்திவேல்.
ஷீ இருக்கும் பெட்டியை கையில் எடுத்து வைத்துக் கொண்டவள், மீண்டும் அமுதாவை தேட ஆரம்பித்தாள்.
“யாரை தேடுற?” பின்னிருந்து வந்தது ஒரு குரல்.
error: Content is protected !!