Skip to content
Post Views: 1,734
அத்தியாயம் 14
“நான் தான் சொன்னேனே… என் பெயர் கொல்லி என்று.” என்று சொன்னாள் கொல்லிப்பாவை.
Advertisement
இப்பொழுது முகத்தில் அலட்சியம். கடைசியில் இவளும் தன்னை கண்டு பயந்து தானே போகிறாள். தன்னை துர் சக்தி தானே என்று எண்ணுகிறாள் என்று இருந்தது கொல்லிக்கு.
“கொல்லின்னா…?” அப்பொழுதும் புரியாமல் நடுங்கும் விரலை அவளை நீட்டி கேட்டாள் பிரத்தியங்கரா.
Advertisement
Advertisement
“கொல்லி என்றால் யாரென்று உனக்கு தெரியாதா? தெரியாமல் இந்த கொல்லி மலைக்கும் வந்தாயா?”
கொஞ்சமும் குரலும் முகமும் மாறவில்லை கொல்லிக்கு. ஆனால் வார்த்தைகள் நக்கலாய் வந்து விழுந்தது.
Advertisement
“அப்போ… அப்போ…” என்று எழுந்து நின்றபடியே கொல்லியை பார்த்து சொன்னாள் பிரத்தியங்கரா. அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
நடப்பது என்ன என்று மூளைக்கு புரிந்தது. ஆனால் அதை ஏற்று கொள்ளும் திராணி இன்னும் பிரத்திரங்கராவிற்கு வரவில்லை.
கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வழிந்தோடியது.
“நீ… நீங்க… சாமின்னு…” வாய் குழறியது அவளுக்கு.
அதை கண்ட கொல்லி வாய் விட்டு சத்தமாக சிரித்தாள். பிரத்தியங்கராவிற்கு தலை எல்லாம் வலித்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லி அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்.
“அமுதா போகாத…” என ஓடி வந்து கொல்லியின் கைகளை பிடித்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.
இத்தனை நாள்களாக பிரத்தியங்கராவோடு கண்ணாமூச்சி ஆடுவது சுவாரசியமாக இருந்தது கொல்லிக்கு. எப்பொழுது அவள் தன்னை அடையாளம் காண போகிறாள் என்பதை தெரிந்து கொள்ளுவதில் ஆர்வம். ஒவ்வொரு முறையும் கொல்லி எதையாவது செய்யும் பொழுதும் அதை கண்டுக்காமல் செல்லும் பிரத்தியங்கராவை முட்டாள் பெண் என கூறி சிரிப்பாள் கொல்லி.
இன்று கூட மழை மேகங்களை விரட்டியதை கண்டு கொள்ள மாட்டாள் என்றே கொல்லி இருந்தாள். ஆனால் பிரத்தியங்கரா இம்முறை தன் இரு கண்களாலே பார்த்துவிட்டாளே!
பார்த்த பின்பு எந்த மனிதராவது தன் முன்னே நின்று பேச திராணி உள்ளதா என்றே எண்ணியிருந்தாள் கொல்லி. ஆனால், இத்தனைக்கு பின்னும் அமுதா என்று அவள் அழைக்கிறாள் என்றால் பிரத்தியங்கரா வேறு!
பிரத்தியங்கரா முட்டாள் பெண் அல்ல! அவள் அன்பின் தேவதை! அவளின் பால் உள்ளிருக்கும் தூய அன்பினால் தான் கொல்லியை அவளால் காண முடிந்தது.
“பிரத்தியங்கரா என்றானாலும் நமக்குள்ளே உள்ள பந்தமானது நீடிக்காது. நீ வந்த வேலை முடிந்ததும் தாமதிக்காது இங்கிருந்து கிளம்பிவிடு.” என்ற கொல்லி வானத்தை பார்த்தாள்.
பிரத்தியங்கராவும் அனிச்சையாக வானத்தை நோக்கினாள்.
விலகி போன் கருமேகங்கள் மீண்டும் ஒன்று கூடின. இடி மின்னலோடு பலமாக மழை பெய்ய ஆரம்பித்தது.
பிரத்தியங்கரா திரும்பி பார்க்கும் பொழுது அங்கே கொல்லி இல்லை.
“அமுதா… அமுதா…” என்று கத்தினாள்.
பதில் எதுவுமே இல்லை.
அப்படியே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா.
நடந்தவை எல்லாம் எப்படி நம்புவது என்று பிரத்தியங்கராவிற்கு புரியவில்லை.
சிறு பெண் என்று நினைத்து இத்தனை நாள்களாக அவள் பழகிய பெண் உண்மையில் பெண்ணே கிடையாதா? பிரத்தியங்கரா வணங்க வந்த தெய்வமே அவள் தானே!
‘அத்தனை ஆசையாய் பேசினாளே… எதையாவது வாங்கிக் கொண்டு வருகையில் கண்கள் இரண்டும் பெரியதாய் விரியுமே… எதுவுமே உண்மையில்லையா? அய்யோ…!’ என்று அடித்துக் கொண்டது பிரத்தியங்கராவின் உள்ளம்.
யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் மீது இவளுக்கென்ன இத்தனை அன்பு என்று உதறி போக முடியவில்லை பிரத்தியங்கராவால்! நெஞ்சே வலித்தது.
அமுதாவை சென்னைக்கு அழைத்து சென்று அவளை படிக்க வைக்க வேண்டும். புதிய ஆடைகள் வாங்கி தர வேண்டும். கடற்கரைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மனதிற்குள்ளேயே நிறைய ஆசைகளை வைத்திருந்தாள் பிரத்தியங்கரா. இப்பொழுது இது எதுவுமே இல்லை என்றால் எப்படி தாங்குவாள்?
மழையில் கரைந்த கண்ணீரோடே ரெசார்ட்டிற்கு வந்தாள் பிரத்தியங்கரா.
ஈர உடையுடனே படுக்கையில் அமர்ந்தவள், தன்னை சுற்றி இதுவரை நடந்தது எல்லாவற்றையும் நினைத்து பார்க்க ஆரம்பித்தாள்.
இத்தனை நாள்களாக உறுத்தாத கொல்லியின் தோற்றம் அப்பொழுது தான் பிரத்தியங்கராவிற்கு வித்தியாசமாய் தெரிந்தது. ஏதோ மலைவாழ் பெண் என்று தான் நினைத்தாள். மலையில் வசிக்கும் வேறு எந்த பெண்ணும் அப்படி உடுத்தி பிரத்தியங்கரா கண்டதில்லை.
முட்டாளாக இருந்துள்ளோமே என்று உணரும் மனநிலைமை மிக கொடூரமானது! பிரத்தியங்கரா இப்பொழுது அந்த நிலையில் தான் இருந்தாள்.
யோசிக்க யோசிக்க கொல்லி ஏன் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டிருந்தாள்.
கொல்லி எந்த ஒரு தருணத்திலும் பிரத்தியங்கராவிடம் பொய் சொன்னதே கிடையாது!
பிரத்தியங்கரா அழுது கொண்டே ரிசார்டிற்கு திரும்புவதை கண்ட கொல்லிக்கும் இதயம் ஏதோ செய்தது. விளையாட்டாய் தான் கொல்லி பிரத்தியங்கராவிடம் பழகியது. ஆனாலும் இருவருக்கிடையில் உண்டான நட்பானது தூய்மையானது. ஒருவருக்காக ஒருவர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நன்மையை எண்ணினர்.
“கொல்லி உன் கடமைகளில் இருந்து வழுவாதே…!” என்று எங்கிருந்தோ ஒரு குரல் அசரீரியாய் வந்தது.
கொல்லிக்கென உறவுகளோ, பந்த பாசமோ கிடையாது. அவள் வேரற்றவள். வேராய் இருந்து இந்த மலையை காப்பது தான் அவளின் பணி! எந்த நிலையிலும் அதில் இருந்து அவளால் வழுவ முடியாது! எத்தனை உயிர்கள் அவளை நம்பி இந்த மலை முழுவதும் வாழுகின்றன! அவள் மட்டும் இல்லை என்றால், தீயவர்கள் எளிதாக இந்த மலையை வசப்படுத்தி மக்களின் வாழ்க்கையை மோசமாக்கிவிடுவார்கள்.
மழையில் நனைந்ததில் காய்ச்சல் கண்டுவிட்டாள் பிரத்தியங்கரா. இரண்டு மூன்று நாள்கள் ஆனது தேறி வர. சதா சர்வ காலம் சௌந்தர்யாவிடம் இருந்து அறிவுரை என்ற பெயரில் வசவுகள் வந்து கொண்டே இருந்தன. அவற்றை எதிர்த்து பேசும் மனநிலையில் இல்லாத பிரத்தியங்கரா, அனைத்தையும் பொறுமையாக உள்வாங்கிக் கொண்டாள்.
கார்த்திக் மரியாதைக்காக கூட அவளுக்கு அழைக்கவில்லை. அந்த விதத்தில் பிரத்தியங்கராவிற்கு நிம்மதியே!
சும்மா இருந்த பொழுதெல்லாம் கொல்லியின் நியாபகங்கள் தான் பிரத்தியங்கராவிற்கு மண்டைக்குள் ஓடியது.
தான் அமுதா எனும் சிறு பெண்ணாக நினைத்துக் கொண்டிருந்தது, இந்த மலையே காவல் செய்யும் காவல் தெய்வத்தை தான் என்று இப்பொழுது அவள் மனமாற ஒப்புக் கொண்டாள். அத்தகைய தெய்வமே தன்னிடம் வந்து பேசி சிரித்ததை இப்பொழுதும் நம்ப முடியவில்லை பிரத்தியங்கராவால்.
“என்னமா கோவிலுக்கு பிராத்தனைனு வந்தீங்க. உங்களுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போகுதே…” என்று வருத்தப்பட்டார் சக்திவேல்.
“இதெல்லாம் சாதாரணம் தானேங்கண்ணா…” என்று சொல்லி வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள் பிரத்தியங்கரா.
“இன்னும் இன்னைக்கும் நாளைக்கும் தானே ம்மா விளக்கு போடுறது. முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பிடுவீங்கள்ள?” என்று உறுதி படுத்திக் கொள்ள கேட்டார் சக்திவேல்.
“ஆமாங்கண்ணா…” என்றாள் பிரத்தியங்கரா.
“நாளன்னைக்கு சூரிய கிரகணம் வேற வருது மா. எதுக்கும் கொஞ்சம் பாத்துட்டு பொறுமையா கிளம்புங்க.” என்று சக்தி வேல் சொல்ல, தலையசைத்து ஆமோதிப்பாக கேட்டுக் கொண்டாள் பிரத்தியங்கரா.
இன்னும் இரண்டு நாட்களில் கொல்லிமலையுடனான தன்னுடைய தொடர்பு முடிந்து கொள்ள போகிறது என்று எண்ணும் பொழுதே, நீண்டதொரு பெரு மூச்சு வெளிப்பட்டது பிரத்தியங்கராவிடம்.
கொல்லியை கடைசியாக பார்த்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. விளக்கு போடவென பிரத்தியங்கரா கோவிலுக்கும் செல்லவில்லை. அவளுக்கு பதிலாக சக்திவேல் தான் மூன்று நாட்களுக்கும் விளக்கு போட்டார். மீதமிருக்கும் இரண்டு நாட்களாவது ஒழுங்காக விளக்கு போடுமாறு சௌந்தர்யா திட்டி இருந்தார்.
அன்று கோவிலுக்கு விளக்கு போட சென்றவளின் கண்கள் எதிர்பார்ப்போடு யாரையோ தேடின. தேடிய ஆள் கண்ணில் படாமல் நெஞ்சே வலித்தது பிரத்தியங்கராவாற்கு.
ரிசார்ட்டிற்கு அமைதியாக வந்துவிட்டாள்.
கார்த்திக்கிடம் இருந்து அழைப்பு வந்தது பிரத்தியங்கராவிற்கு.
“சொல்லு கார்த்திக்.” என்றாள் பிரத்தியங்கரா குரலில் சுரத்தே இல்லாமல்.
“வர வர மேடம்க்கு என்கிட்ட பேச கூட பிடிக்கிறதே இல்லை.” என்று நக்கல் செய்தான் கார்த்திக்.
“தேவையில்லாததெல்லாம் பேசாத கார்த்திக்.” என்றவள் நெற்றி பொட்டில் கையை வைத்துக் கொண்டாள்.
கார்த்திக்கினால் குட்டி தலைவலி ஒன்று உருவானது பிரத்தியங்கராவிற்கு.
“எது தேவை இல்லாத விசயம்? நீ எனக்கு கால் பண்ணி பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? மெசேஜ் கூட ஒழுங்கா பண்ணுறது இல்லை. பண்ணுற தப்பை எல்லாம் பண்ணிட்டு என்னை குறை சொல்லுற?” என்று எகிறி கொண்டு வந்தான் கார்த்திக்.
“ஸ்டாப் இட் கார்த்திக். மூனு நாளா எனக்கு காய்ச்சல். எழுந்திருச்சு நிக்க கூட முடியலை என்னால. என்னாச்சு ஏதாச்சுன்னு ஒரு போன் பண்ணி கேட்டுருப்பியா? நான் கால் பண்ணினா தான் நீ பண்ணுவியா? ஏன் நீயா கால் பண்ணி பேசி மாட்டியா? அவ்வளவு ஈகோ இருக்கா உனக்கு? எப்ப பார்த்தாலும் நான் மட்டும் தான் தப்பு பண்ணுறேன். அது எப்படின்னு எனக்கு புரியவே இல்லை? உன் மேல சின்னதா ஒரு குறை சொல்லிட்டா போதும் அதை ஊதி பெருசாக்கி என்னை படாத பாடு படுத்தற. ஆனா நீ என்னை எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிட்டே இருக்க… உன்னை லவ் பண்ணின பாவத்துக்கு நானும் பொறுமையா எல்லாத்தையும் கேட்டுட்டே இருக்கேன்.” என்று மனதில் இருந்த அனைத்தையும் கார்த்திக்கிடம் கத்தினாள் பிரத்தியங்கரா.
“உள்ளுக்குள்ள இவ்வளவையும் வச்சிட்டு இத்தனை நாள் அமைதியா என்கிட்ட நல்லவ வேசம் போட்டுருக்க… இல்ல?” என்று பல்லை கடித்தபடியே கேட்டான் கார்த்திக்.
பிரத்தியங்கராவிற்கு அய்யோ என்று இருந்தது. இத்தனை பேசியும் தப்பு தன் மீதே இருக்கிறது என்று பேசுபவனை என்னவென்று சொல்லுவது. எப்படி அவனோடு வாழ்வது? காதலிக்கும் பொழுதே கடித்து குதறி நிம்மதியை இழக்க செய்கிறானே இவனோடு வாழ்க்கை நன்றாக இருக்குமா?
தலைமுடியை இறுக்கி பிடித்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.
மனதெல்லாம் எத்தனை விதமாய் கேள்விகள் தோன்றினாலும், ஒரே பதில் தான் எதிரொலித்தது.
“கார்த்திக் கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம். இதோட உனக்கும் எனக்குமான ரிலேஷன்சிப் மொத்தமா முடிஞ்சது. தயவு செஞ்சி இனிமேலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத. குட்பாய்.” என்று ஒரே மூச்சாக கத்திவிட்டு, அலைபேசியை அணைத்து வைத்தாள் பிரத்தியங்கரா.
பிரிந்து விடலாம் என்று சொல்லும் பொழுது கூட ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் சொல்லி முடித்த பின்பு பதட்டமாக இருந்தது. அடுத்து என்ன என்று தோன்றியது. வீட்டில் விசயத்தை சொல்லவே பயமாக இருந்தது. அதுவும் சௌந்தர்யா ஆடி தீர்த்து விடுவார் என்பதால் அழுகையே வந்தது பிரத்தியங்கராவிற்கு. கூடவே விடுதலை உணர்வும் வந்தது.
பிரத்தியங்கரா திடீரென மூன்று நாட்கள் கோவிலுக்கு வராமல் போனது குழப்பத்தை ஏற்படுத்தியது முருகனுக்கு. அதை மார்த்தாண்டத்திடம் சொல்ல, பெண்கள் உபாதையாக இருக்கும் என முடித்து கொண்டார். ஆனால் முருகனை கூடுதல் எச்சரிக்கையாக இருக்கும் படி சொன்னார் மார்த்தாண்டம்.
தனது ஒரு மண்டலகால விரதத்தை முடித்துக் கொண்டார் மார்த்தாண்டம்.
குடும்பத்து பெண்களிடம் இன்னமும் இரண்டு மூன்று நாட்களுக்கு சுத்தமாக இருக்க சொல்லிவிட்டு, பூபதியை ஒரு முறை வாஞ்சையுடன் தடவி கொடுத்துவிட்டு கொல்லி மலையை நோக்கி தன் பிரயாணத்தை துவக்கினார் மார்த்தாண்டம்.
மார்த்தாண்டத்துடன் அவரின் நிழலாக வனபத்திரகாளியும் சென்றாள்.
நேரடியாக கொல்லி மலைக்கு செல்லாமல், அருகில் இருந்த ஊரில் ஒரு லாட்ஜில் தங்கினார் மார்த்தாண்டம். பூஜைக்கு தேவையான சுத்தமான பொருட்களை அழைந்து திரிந்து வாங்கி கொண்டிருந்தார்.
இன்னேரம் கார்த்திக் அவர்கள் வீட்டில் சொல்லியிருப்பான், கார்த்திக்கின் பெற்றோர் தன் பெற்றோர்களுக்கு சொல்லியிருப்பார்கள், ஒரு பிரளயமே நடக்க போகிறது என்று பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் பிரத்தியங்கரா. ஆனால், அவள் பயந்ததற்கு நேர்மாறாக எந்தவித அலைபேசி தொந்திரவுகளும் இல்லாது, அமைதியாக அவளின் நாள் கழிந்தது.
“கோவிலுக்கு கிளம்பளாங்களா மா?” என்று வந்து நின்றார் சக்தி வேல்.
இன்று தான் கடைசி என்ற நினைவே அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.
காதல் வேண்டாம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் பொழுது கூட வேதனை இல்லை. ஒருவித விடுதலை உணர்வு தான் இருந்தது பிரத்தியங்கராவிற்கு. ஆனால் இந்த கொல்லி மலையையும், அமுதாவாய் நினைத்து பழகிய கொல்லியையும் பிரிவதை நினைத்து அத்தனை வேதனையாக இருந்தது. உண்மையான பாசத்தினை அன்று தான் கண்டு கொண்டாள் பிரத்தியங்கரா.
கோவிலுக்கு சென்ற பிரத்தியங்கரா, வழக்கம் போல விளக்கு போட்ட பின்பும், நெடுநேரம் அம்மன் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கிளம்பலாமா மா?” என கேட்டார் சக்திவேல்.
“கொஞ்ச நேரம் இருங்கண்ணா… பொறுமையா போலாம்.” என்றாள் பிரத்தியங்கரா.
“சரிம்மா…” என்றவர் கொஞ்சம் தள்ளி யாருடனோ பேச சென்றார்.
கொல்லியிடம் பேசுவும் கேட்கவும் நிறைய இருந்தது பிரத்தியங்கராவிற்கு. அம்மன் சிலையை காண காண அழுகை வந்தது அவளுக்கு. கண்ணை துடைத்துக் கொண்டாள்.
“பிரத்தியங்கரா…” என்று ஒரு குரல் தூரத்தில் இருந்து கூப்பிடுவது கேட்டது.
‘நிச்சயம் இது அமுதா தான்!’ என்று நினைத்தவள், குரல் வந்த திசையை நோக்கா ஓடினாள்.
முன்பு போலவே கோவிலின் பின் புறம் இருந்து தான் குரல் வந்தது.
“அமுதா… அமுதா…” என்றவாறே ஓடினாள் பிரத்தியங்கரா.
“நான் இங்க தான் இருக்கேன் பிரத்தியங்கரா!” என்றாள் கொல்லி.
கொல்லியை கண்டதும் பிரத்தியங்கராவின் கண்கள் உடைப்பெடுத்தது.
“நீங்க தான் சாமின்னு தெரியாம…” என்று ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா.
“நான் தான் முன்பே உன்னிடம் சொன்னேனே…!” என்று புன்னகைத்தாள் கொல்லி.
“ஆனாலும்…” என்ற பிரத்தியங்கராவிற்கு வார்த்தைகள் திக்கியது.
“ஆனாலும்…” என்று கேலியாக சிரித்த கொல்லி, “எனக்கு உன்னுடன் விளையாடுவது பிடித்திருந்தது பிரத்தியங்கரா. உன்னுடன் பேசுவதும், பழகுவதும் இனிமையாய் இருந்தது. எதை நினைத்தும் கவலை கொள்ளாதே… நடந்தவை எல்லாம் நன்மைக்கே! இன்றோடு நீ வந்த வேலை முடிந்தது. பயப்படாமல் உன் இருப்பிடத்திற்கு செல். எதிர்காலத்தில் வரும் துன்பங்களில் இருந்து உன்னை நான் காப்பேன்! இது என் சத்தியம்!” என்று சொல்லிய கொல்லி, அத்தோடு காற்றோடு காற்றாக கரைந்து போனாள்.
கொல்லியின் பதிலில் பிரத்தியங்கராவின் மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள் பிரத்தியங்கரா.
error: Content is protected !!