Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

சமீராவின் மின்னல் மழையாகி வா – 3

அத்தியாயம் 3

 

ஜென்சியை பார்த்ததும் அனிச்சையாய் எழுந்து நின்றவன் முகம் ஏகத்திற்கு பதட்டத்தை தத்தெடுக்க அந்த பார்வை அவனுள் குளிரை பரப்பியது.

“ஜென்..”



Advertisement

என்று நிஷாந்த் ஏதோ சொல்லவர,

“என்னைவிட வயசும் அதிகம்..!! இந்த கம்பெனில எக்ஸ்பிரியன்ஸூம் அதிகம்..!! அப்படி இருந்தும் உன்னை லீடா போடாமல் ஏன் எனக்கு அந்த அபர்ச்சூனிட்டு கொடுத்தாங்கன்னு நீ கேட்டுட்டே இருந்த இல்லையா..!! திஸ் இஸ் த அன்சர்.. உன்னோட இந்த சின்ன புத்தியால தான்.. நீ இங்க இருக்க.. நான் அங்க இருக்கேன்…

நான் மட்டும் இல்ல.. இவன்.. இவ.. எல்லாரும் உன்னை தாண்டி போயிட்டே இருப்பாங்க.. ஆனால் நீ இங்க இப்படியே பேசிட்டு மட்டும் தான் உட்கார்ந்திருப்ப..”

Advertisement

என்று தீர்க்கமாய் பேசியவளை எதிர்த்து பேச அவனுக்கு துணிவில்லை.

Advertisement

ஜென்சி மற்றவர்களை பார்க்க இங்கே நடப்பதனை யாருமே பார்க்கவில்லை என்பதுபோல்  எல்லாம் தத்தம் இடத்தில் பொறுப்பாய் வேலை செய்வதுபோல் பாவ்லா செய்தனர். இல்லை எனில் யார் அவளிடம் வாங்கி கட்டிக் கொள்வது..!!

“லிசன் எவ்ரீவொன்.. நீங்க டீக்கடைல உட்கார்ந்து இல்ல.. சாவகாசமா நாட்டு நடப்பை அலசி ஆராய..!! இன்னைக்கு ரிப்போட் எனக்கு டைமுக்கு வந்து சேரணும்.. ஸோ வெட்டியா பொழுதை ஓட்டாம வேலையை பாருங்க..”

என்று கூறியவள் தன் வேக எட்டுகளோடு  கேப்பினினுள் சென்று மறைந்தாள்.

Advertisement

அவள் தலை மறைந்ததும் அக்‌ஷய் நிஷாந்திடம்,

“தேவையா உனக்கு.. எங்களுட்ட வீரவேசமா பேசிட்டு அவங்க முன்னாடி பம்முற..”

என்று நக்கலடிக்க,

“பேசட்டும்.. எனக்கும் காலம் வரும்..”

என்றான் அப்பொழுதும் விடாமல்..

அறையினுள் வந்தவளுக்கோ அவன் பேசிய வார்த்தைகளே ரீங்காரமிட்டது.

பொதுவாக இதுபோன்ற கமெண்ட்கள் அவளுக்கு புதிதல்ல. ஆனால் அதனை அவள் முன் நின்று சொல்ல யாருக்கும் துணிவில்லை. ஏனெனில் அவள் சண்டையெல்லாம் போட தேவையில்லை. பார்வையே மற்றவர் வாயை மூட செய்திடும்..!! அவ்வாறு ஒரு பார்வையோடு கடந்துவிடுவாளே தவிர அதனை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

ஆனால் இன்று ஏனோ அது மனதில் இருந்து நீங்காமல் இம்சித்தது.

“ஜோவிற்கு அதனால் தான் தன்மீது ஈர்ப்பு வரவில்லை..” என்றெல்லாம் யோசித்து மண்டை வெடித்தது.

‘நான் ரோபோவா.. என் வாழ்க்கையின் வண்ண பக்கங்களை பத்தி இவனுக்கு என்ன தெரியும்..’

என்று எண்ணும்போதே பழைய நியாபங்கள் கிளறி எழுந்தது.

மும்பை வந்தபின் அவர்கள் முதன்முதலில் பங்கேற்கும் பார்ட்டி அது..!! ஒரு வெற்றியை கொண்டாட மேத்தியூ சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தோட்டம்போல் இருந்த அப்பகுதியை அன்றைய நிகழ்ச்சிகாக ஆடம்பரமாய் அலங்கரித்து அந்த இரவு வேளையில் அத்தனை அழகாய் இருந்தது.

பஃவே முறையில் வைக்கப்பட்டிருந்த உணவில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு தன் உடன் பணிபுரியும் நண்பரின் குடும்பத்தோடு ஒரு டேபிளில் அகஸ்தீன் தன் மனைவி,மகள்களோடு அமர்ந்தார்.

பெரியவர்கள் தங்களுக்குள் பேசியபடி உணவினை உண்ண குழந்தையான லிசா அன்னையின் மடியில் அமர்ந்து எஸ்தர் ஊட்டிவிடுவதை உண்டபடி வேடிக்கை பார்க்க அருகில் தனி சேரில் அமர்ந்திருந்தாள் ஜென்ஸி.

வெள்ளை நிற கவுனில் குண்டு குண்டு கன்னங்களும் மைதீட்டிய கண்களும் விண்ணில் இருந்த நிலாவினை போல் காட்சியளித்தாலும் அவள் முகம் மட்டும் சோர்ந்திருந்தது.காரணம் உணவு..!!

இங்க பறிமாறப்பட்ட எந்த சாப்பாடும் அவளுக்கு பிடிக்கவில்லை. ருசியான உணவினை ரசித்து உண்பது ஜென்ஸிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கொஞ்சமாய் உண்டாலும் அதில் ருசி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு வாய்கூட உண்ண மாட்டாள்.

அவளது கெட்ட நேரம்.. இங்க வைக்கப்பட்டிருந்த எந்த உணவின் சுவையும் அவளுக்கு பிடிக்கவில்லை. பொதுஇடத்தில் வம்பு செய்யாமல் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று எஸ்தர் அதட்டி வைத்திருக்க அவர் மிரட்டலுக்கு பயந்து முக்கி தக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அருகில் யாரோ வந்து நிற்கும் அரவம் கேட்டு திரும்ப கருப்பு நிற கோர்ட் ஷூட்டில் அவள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் பதினைந்து வயது பாலகனாய் நின்றிருந்தான்..!!

அவனை பார்த்த மாத்திரத்தில் அவள் கண்கள் பளிச்சிட்டது. இங்கே அவளுக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒரே ஜீவன் அவனல்லவா..!!

“ஹாய் ஜோ..”

என்று ஆர்வமாய் அவள் கைசைக்க பதிலுக்கு புன்னகைத்தவன் பின் அகஸ்தீனிடம் திரும்பி,

“அங்கிள்.. என்னோட அழைச்சுட்டு போகவா.. இங்க தான் பக்கத்தில்…”

என்று அனுமதி வேண்ட சிரித்தவர்,

“ஷுயர் ஜோசஃப்.. ஜென்சிக்கும் இங்க யாரையும் தெரியாததால..உம்முனே இருக்கா.. உன்னை பார்த்து தான் சிரிப்பே வருது.. நீ அழைச்சுட்டு போ..”

என்றார் மகளை அறிந்தவராய்.. அவர் சொன்னதும் உடனே ஸ்பூனை தட்டையில் வைத்துவிட்டு ஆர்வமாய் நாற்காலியில் இருந்து குதித்தவள் எஸ்தரிடமும் சொல்லிக் கொண்டு ஜோ அருகில் ஓடினாள்.

அவள் கை நீட்டி அவன் “வா..” என அழைத்து செல்ல தரையில் சீய்த்த கவுன் காலினை இடறிவிடாமல் ஒருக்கையில் லேசாய் பிடித்துக் கொண்டும் மறுக்கையால் அவன் விரல்களை பிடித்துக் கொண்டும் நடந்து சென்ற காட்சி இன்னமும் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது.

“நல்ல வேளை நீ வந்த ஜோ… அதை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நாக்கு செத்து போச்சு… இதெல்லாம் எதுக்கு செஞ்சு வைச்சு உசுற வாங்குறாங்க..”

“வேற என்ன உனக்கு.. இட்லி, பொங்கல் வைப்பாங்களா..”

“வொய் நாட்..?? இதுக்கு எங்க அம்மா செய்ற இட்லி பொங்கலே எவ்வளவோ பெட்டர்…”

என்று அவள் அலட்சியமாய் கூற மீசை அரும்ப தொடங்கிய அவன் உதடுகள் புன்னைகையை சிந்தியது.

“ஆமா.. இது உங்க வீடா ஜோ..”

“யெஸ்… இது கார்டன் தான்.. வீடு பின்னாடி இருக்கு.. உனக்கு பிடிச்சு இருக்கா..”

“ம்ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு..!!” என்றவள்

 

“எங்க போறோம்… விளையாடவா..??? வீடியோ கேம்ஸ்..??”

என்று அவள் கண்கள் மின்ன கேட்க, 

“வீடியோ கேம்ஸ் எல்லாம் எனக்கு பிடிக்காது..” என்றான்.

“பொய் சொல்ற தானே..?? அதெப்படி பிடிக்காமல் இருக்கும்..”

“நிஜமா எனக்கு பிடிக்காது.. நல்லா ஓடி ஆடி விளையாடணும்.. அப்ப தான் விளையாண்ட ஃபீல் கிடைக்கும்..”

“அய்யோ.. என்னால ஓட முடியாது.. அதுக்கு நான் அங்கேயே உட்கார்ந்து வேடிக்க பார்ப்பேன்..”

என்று அவள் திரும்பி செல்ல எத்தனிக்கவும் சிரிப்போடு,

“இரு.. இரு.. எங்கேயும் ஓட எல்லாம் சொல்ல மாட்டேன்..”

என்றவன் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சற்று தள்ளி அழைத்து வந்திருந்ததான்.

 யாரும் இல்லாமல் அவ்விடம் அமைதியாய் இருந்தாலும் அங்கேயும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருந்ததால் இரம்மியமாய் இருந்தது.

அங்கிருந்த மரபென்சில் அவளோடு அமர்ந்தவன் அவளுக்காக கொண்டு வந்திருந்த ஐஸ்க்ரீமை நீட்ட அதனை கண்டதும் அவள் முகம் பிரகாசமானது.

“எனக்கா..?” என்று கேட்க,

“ஆமா.. சாக்லேட் ஃப்ளேவர் பிடிக்கும் தானே..”

என்று அவன் கேட்டு முடிப்பதற்குள்ளே அதனை வாங்கி ஒரு ஸ்பூன் நிறைய எடுத்து வாயில் வைத்திருந்தவள்,

“ரொம்ப….” என்றாள் குஷியாய்..

அதன்பின் அவனை கண்டுக்கொள்ளாது அவளுக்கும் ஐஸ்க்ரீமிற்குமான தனி உலகிற்கு சென்று செத்துவிட்ட நாக்கிற்கு உயிர் கொடுக்க,

“வெய்ட் பண்ணு.. இதோ வந்திடுறேன்..”

என்று அவன் சொன்னதற்கு தலையை மட்டும் அசைத்தாள்.

அவன் மீண்டும் வந்ததை கவனியாது அவள் ஐஸ்க்ரீமில் மூழ்கி இருக்க,

“ஹாய்..” என்று கீச்சிட்ட கொஞ்சும் குரல் கேட்டு நிமிர்ந்தவள் அவன் தோளில் ஒய்யாரமாய் வீற்றிருந்த வெள்ளை நிர காக்டூஸ் வகை கிளியை கண்டு அவள் கண்கள் ஆச்சரியத்தில் நிறைந்தது.

அவனின் முன் கையளவு உயரமாய் இருந்தது அந்த கிளி. இத்தனை பெரிய கிளியை முதல்முறை பார்க்கிறாள்.

“வாவ்.!!!!!!!  ரொம்ப அழகா இருக்கு ஜோ..”

என்று அவள் ஆச்சரியப்பட புன்னகையோடு அதனை தன் விரலில் நிற்க வைத்தவன் அவள் கையை நீட்ட செய்து அதனில் இடமாற்றிவிட ஆர்வமும் பயமும் போட்டியிட மெல்ல கிளியினை நீவியவள் அதன் மென்மையில் கண்களை சுருக்கி தனக்கு கூசியதுபோல் கழுத்தை குறுக்கி குதூகலித்தாள்.

“பேசுமா ஜோ..?”

“பேசி தான் பாரேன்..”

“ஜென்சி சொல்லு… ஜென்சி.. ஜென்.சி..”

கொஞ்சும் குரலில் அவள் சொல்லி காட்ட, 

“ஜென்சி.. ஜென்சி..” என்று அது கீச்சிட்டவும் அவளுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள மேலும் அவன் சொல்வது போல் செய்த அதன் செய்கையை கண்டு சிரிப்பு பொங்கியது.

அதன்பின் இருவரும் சேர்ந்து அதனை பேச வைப்பதும் தடவிக் கொடுப்பதும் பறக்க வைப்பதும் என்று சில நிமிடங்களில் அவ்விடமே இருவரின் சிரிப்பால் நிறைந்துவிட அதனை எண்ணி பார்த்தவளுக்கு இப்பவும் முகத்தில் அதே புன்னகை ஒட்டிக்கொண்டது.

“நீ அதே ஜோவாவே இருந்திருக்கலாம்… அதே மாதிரி வாழ்க்கை முழுக்க சிரிக்க வைப்பியா ஜோ..”

என்று நினைத்தவள் அடுத்த நொடியே தன் எண்ணபோக்கை உணர்ந்து திடுக்கிட்டாள்.

“ஜோ திருமணமானவன்… அவனை பத்தி இப்படி யோசிக்கிற அளவு நீ தரம்தாழ்ந்து போகல ஜென்சி.. உன்னோட சந்தோஷம் உன்னை சார்ந்தது தான்… அதை அடுத்தவரிடம் எதிர்பார்க்காத..”

என்று தனக்கு தானே உருப்போட்டு கொண்டாலும் அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்த எண்ணம் அதிகரிக்க மாலை பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டு கணினியில் கவனம் செலுத்தினாள்.

வேலை என்று வந்ததும் மற்ற எல்லாம் பின்னுக்கு சென்றுவிட அதில் முழ்கிபோனாள். அதே சமயம் அன்று முழுவதும் நிஷாந்தை வாட்டி வதக்கவும் மறக்கவில்லை. எந்த அளவிற்கு என்றால்,

“முடியலடா.. அரைமணி நேரத்துக்கு ஒருவாட்டி கூப்பிட்டு வேல சொல்றா.. அதுல சின்ன எரர் வந்தாகூட காது தேய்ஞ்சு போறா மாதிரி திட்டிட்டு முதல்ல இருந்து செய்ய வைக்கிறா.. இனி இவ திசைக்கே பெரிய கும்பிடு..”

என்று புலம்பி தள்ளி விட்டான் நிஷாந்த்.

நேரம் ரெக்கை கட்டி பறக்க ஏழு மணியளவில் அலுவலகத்தில் இருந்து தன் காரில் கிளம்பினாள்.

மும்பையின் வாகன நெரிசலில் அவள் கார் மெல்ல நீந்திக் கொண்டிருக்க இங்கேயே ஜோசஃபிடம் பேசிவிடலாம் என்று எண்ணியவளாய் அவனுக்கு அழைத்துவிட்டு ப்ளுடூத்தில் போட்டாள்.

சில ரிங்களுக்கு பின்பு,

“ஹலோ..” என்று அவன் குரல் கேட்டு தடுமாறியவள் விரல்கள் ஸ்டியரீங்கில் அழுத்தமாய் பதிந்தது.

“ஹே ஹாய்… எப்படி இருக்க ..”

முயன்று அவள் சாதாரணமாய் கேட்க,

“ஐ திங் யூ டயல்ட் ராங் நம்பர்.. நான் ஜோசஃப்..”

என்று மறுமொழி அளித்த அவன் குரலில் கோபம் தெரிந்தது.

“ரியலீ சாரி ஜோ.. ப்ளீஸ் அதை விட்டுடேன்..”

“என்ன இப்ப துக்கம் விசாரிக்க கால் பண்ணியா..”

“ஜோ…”

என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்..

அதன்பின் இருவரிடமும் மௌனமே நிலவ தவறு தன்மீது தான் என்பதால் மீண்டும் ஜென்சியே பேசினாள்.

“அனீ எப்படி இருக்காங்க.. அப்பா அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா..”

என்று நலம்விசாரிக்கவும் அவனும் கோபம் விட்டு சாதாரணமாய் பதில் கூறினான்.

 “ம்ம்ம் அனீ நல்லா இருக்கா.. அப்பா தான் இன்னும் அந்த இன்சிடெண்ட்ல இருந்து வெளிய வரலை.. கோபமாவே எந்நேரமும் இருக்கார்.. நான் எதாவது செய்யிறவரை அவர் மனசு சமாதானம் ஆகாது..”

என்று கூற அவர் மீது அக்கறை கொண்ட ஜென்சியுக்கும் வருத்தமாய் இருந்தது.

“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத.. உன் தம்பிக்கு என்ன தான் பிரச்சனை.. ஏன் இதெல்லாம் செய்யுறான்..”

அவனை பற்றி இதுவரை அவள் எதுவும் கேட்டதில்லை. ஜோவும் அவனை குறித்து பேசுவதை விரும்ப மாட்டான் என்பதால் தயக்கதோடு தான் கேட்டிருந்தாள்.

“அதான் ஊரே பேசுதே.. உனக்கு தெரியா ஜென்சி..”

“எல்லாரும் ஆயிரம் பேசுவாங்க.. உண்மை உன்னுட்ட மட்டும் தான் இருக்கும்.. சொல்லு ஜோ.. என்ன பிரச்சனை..?”

“அவனுக்கு என்ன பிரச்சனைனு தான் எங்களுக்கும் புரியல.. சின்ன வயசுல அப்பா கூட ஏட்டிக்கி போட்டி தான் நிற்பான்.. ஆனாலும் அதை அவன் குறும்புதனமா தான் எல்லாம் பார்த்தோம்.. அதுவும் அவனுக்கு எல்லாமே படிப்பு தான்.. அப்பாவும் அவன் ஆர்வத்தை பார்த்து அவன் இஷ்டப்பட்டதை எல்லாம் படிக்க வைச்சார்.. படிப்பு முடிந்ததும் ஆஃபிஸ் வந்திடுவான்னு நினைச்சோம்.. ஆனால் அவன் திடீர்னு,

“நான் தனியா தொழில் தொடங்க போறேன்.. சொத்துல என் பங்கை பிரிச்சு கொடுங்கன்னு வந்து நின்னான். எங்க சித்தப்பா கூட இதுவரை சொத்தை பிரிக்கணும் அப்படி எல்லாம் பேசினதே இல்ல.. இவன் இப்படி கேட்டதே எங்களுக்கு பெரிய ஷாக்..  இருந்தாலும் அப்பா,

உனக்கு வேண்டிய அளவு பணம் தரேன்.. நீ பிஸ்னெஸ் பண்ணு… ஆனால் சொத்து எல்லாம் பிரிக்க முடியாதுனு உறுதியா சொல்லிட்டார். ஆனால் அவன் என்ன பண்ணினான் தெரியுமா..?? கோர்ட்டில் கேஸ் போட்டுடான்..”

என்று அவள் கூறவும், “அடப்பாவி..” என்று அதிர்ந்தாள் ஜென்சி.

“ஆமா.. லீகல் நோடீஸ் வந்ததும் அப்பா ரொம்ப நொந்து போயிட்டார். தன் பையன் இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல… கோர்ட்டு கேஸூனு அசிங்கபட விருப்பம் இல்லாம அவன் பங்கை பிரிச்சு கொடுத்து இனி இந்த குடும்பத்திற்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைனு வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க.. ஆனால் அவன் அதை பெருசா எடுத்துக்கிட்டா மாதிரியே இல்ல.. ஏற்கெனவே இதெல்லாம் திட்டமிட்டு தான் இருந்தான் போல.. நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு ஃபாரீன் எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தை அவன் வாங்கி அப்புறம் எங்களை எதிர்த்தே பிஸ்னெஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. அப்ப இருந்தே அவனால குடைச்சல் தான்..”

என்று முதல்முறை உண்மையை விளக்க,

“சொத்துக்காக சொந்த குடும்பத்தையே அசிங்க படுத்துறானே.. இவனெல்லாம் என்ன மாதிரி மனுஷன்..” என்று ஜென்சியின் மனம் அருவருத்து போனது.

“உங்களால அவனை எதுவும் செய்ய முடியலயா ஜோ..”

“ம்ச்.. அவன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் முளையிலே கிள்ளி எறிஞ்சிருப்போம்… ஆனால் இதுல கண்ணை குத்துறது எங்க கையே தான… அதான்.. என் ப்ரதர் ஜென்சி.. எப்படி பாசம் இல்லாமல் போகும்.. அவனை எதுவும் பண்ண மனசே வரமாட்டுது.. அதை தான் அவன் பயன்படுத்திகிறான்.. ம்ச்.. யார் எப்ப எப்படி மாறுவாங்கனே யூக்கிக்க முடியல.. உதாரணத்திற்கு நீயே இருக்கியே..”

அங்கே இங்கே சுத்தி மீண்டும் அவளிடமே வந்து நின்றான் ஜோசஃப்.

“இதை விடவே மாட்டியா..”

“எப்படி விட சொல்ற.. ஆறு மாசம்..!!!  ஃபோன், மெசேஜ், ஏன் நேரில் வந்தாக்கூட முகத்துல அடிச்சா மாதிரி அவாய்ட் பண்ணின நீ.. இத்தனைக்கும் ஒரு சின்ன சண்டைக்கூட நமக்குள்ள வரலை… சின்ன வயசுலேந்து நாம ஃப்ரெண்ட்ஸ்.. நீ திடீர்ன்னு இப்படி செய்யும்போது எனக்கு எவ்வளவு ஹர்டிங்கா இருந்தது தெரியுமா..??  என் மேரேஜுக்கு கூட யாரோ மூணாவது மணுஷி மாதிரி என் கண்லையே படாமல் வந்துட்டு போயிருக்க.. எத்தனை நாள் காரணம் புரியாமல் மண்டை காய்ந்திருக்கேன் தெரியுமா.. இப்ப நீ சாதாரணமா பேசினால் அப்படியே விட்டுடுவேனா… ஐ நீட் த ரீசன்.. நீ ஏன் அப்படி பண்ணினேன்னு சொல்லியே ஆகணும் ஜென்சி..”

என்று பொரிந்து தள்ளியவன்,

“எதாவது சமாளிக்க ட்ரை பண்ணாத.. நம்மை பத்தி தப்பா சித்தரிச்சு நியூஸ் வந்தப்போது கூட அதனை அலட்சியமா உதறி தள்ளிட்டு போல்டா இருந்திருக்க.. அதையும் மீறி பெருசா அப்போ எதோ இருந்திருக்கு..”

என்ற அவன் குரலில் தெரிந்த பிடிவாதம் காரணம் அறியாமல் விடமாட்டான் என்பதனை பறைச்சாற்ற,

“எப்படி சொல்வது..நட்பையும் மீறிய உணர்வுகளை உன்மீது வளர்த்துக் கொண்டேன்..அது சாத்தியம் இல்லை என்று உணர்ததால் விலகிவிட்டேன் என்றா..” என்று நினைத்துக் கொண்டவள்,

“ஃபோனில் சொல்ல முடியாது ஜோ.. நாம நேரில் மீட் பண்ணும்போது சொல்றேன்…”

என்று சமாளித்து ஓரிரு வார்த்தைகள் பேசி வைத்தவளுக்கு அப்பொழுது தெரியாது அவனை சந்தித்து உண்மையை சொல்லும்போது தான் அடையபோகும் அதிர்ச்சியை பற்றி..!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!