Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 24.1

அத்தியாயம் 24(1)

பல மாதங்கள் கழித்து மிருதுளா கற்பமானதால் அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். ஆனால் ஒருவரை தவிர. அது மீனாட்சி. மற்றவர்கள் முன் மகிழ்ச்சியைக் காண்பிக்க அவர் சிரித்தாலும், கூர்ந்து கவனித்தால் அவர் முகத்தில் லேசான பயரேகைகள் படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அது ஏன் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

அன்று மிருதுளா ட்ரீட்மெண்டுக்கு மருத்துவமனை வந்திருந்த மிருதுளாவின் பெற்றோர், அதன் பிறகு ஒரு வாரம் அங்கேயே தங்கி அவளுக்கு உதவியாக இருந்தவர்கள், ஆரா அங்கே தனியாக இருப்பதால், அதன் பின் சென்னைக்குக் கிளம்பி சென்றிருந்தனர். இப்பொழுது மிருதுளா உண்டாகி இருப்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் சந்துருவின் வீட்டிற்கு வந்தனர். குழந்தை இல்லாததால், எங்கே தன் மகள் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று பயந்திருந்தவர்களுக்கு, இந்தச் செய்தி வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது.

எப்பொழுதும் சந்தேகபட்டுகொண்டு, மிருதுளாவை நொடிக்கு நொடி காயபடுத்திக் கொண்டிருந்த சந்துருகூட, தனக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்று சந்தோஷபட்டவனின் பார்வையில் கொஞ்சம் காதலும் கனிவும் கலந்திருந்தது. அதன் பின் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து கொண்டான். தான் அவளை எதுவும் சொல்லபோய், வயிற்றில் இருக்கும் பிள்ளையைப் பாதித்துவிடக் கூடாது என்று கவலைபட்டான். கருவுற்றதில் இருந்து மிருதுளாவின் கால்களைத் தரையிலேயே படவிலை மீனாட்சி. அவருக்கு அவர் கவலை. மோகனும் சித்ராவும் அவ்வபோது வந்து பார்த்துவிட்டு சென்றனர்.



Advertisement

மிருதுளாவுக்கு வேண்டியதை வாங்கித் தந்து, வேலை செய்யவிடாமல், அவளிடம் கடிச்சொல் சொல்லாமல், ஏன் சின்னக் கண்டிப்பு கூட இல்லாமல் அளவுக்கு அதிகாமாகவே நல்லபடியாக பார்த்துக்கொண்டார் மீனாட்சி. இத்தகைய கவனிப்புகள் எல்லாம் எதற்கு என்று மிருதுளாவிற்கு நன்றாகத் தெரியும். எல்லாம் அவர்களின் வாரிசு நன்றாக இந்த உலகத்திற்கு வரவேண்டும் என்பதால் தான். இல்லையென்றால் அவராவது இந்த அளவுக்குத் தாங்குவதாவது. இந்தக் காரணத்திற்காகவாவது தன்னை ஒரு மனுஷியாக மதித்தார்களே என்று அவளுக்கு மனநிம்மதி தான்.

இப்படியே நாட்கள் நிம்மதியாகச் சென்று கொண்டிருந்தது. டாக்டர் சொல்லியது போலத் தவறாமல் மருத்துவமனை சென்று வந்தாள் மிருதுளா. வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி சரியாக நினைத்தது போல இருக்கிறதா என்று பரிசோதித்தனர். மகப்பேறு மருத்துவரின் சீனியர் அசிஸ்டெண்ட் என்பதால் சரண்யாவே, மிருதுளா ஒவ்வொரு முறை வரும்போதும், டெஸ்ட் எடுத்து அந்த ரிசல்டை பெரிய டாக்டரிடம் காண்பிப்பாள். பெரிய டாக்டர் மிருதுளாவை பார்க்காமல் இருப்பது கூட, அவளுக்கு ஒரு வகையில் வசதியும் கூட. அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம். மிருதுளவின் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சி அவளுக்கு மிகவும் முக்கியம். அதுதான் அவளுக்குப் பின்னால் தேவைப்படப் போகிற துருப்புச்சீட்டு.

இதற்கிடையில் மீனாட்சி அவரின் தம்பி வீட்டுக்கு சென்று பேச, அவர்களுக்குள் இருந்த பிரச்னை ஓர் அளவுக்கு விலகி, உறவு சுமுகமாக மாறியது. சந்துருவிற்குத் திருமணமானதை கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்து அவனையும் மிருதுளாவையும் வாழ்த்திவிட்டு சென்றனர். பெரியவர்களுக்கிடையே எந்த வித மனகசப்பும் இல்லாமல் இருந்தாலும், சரண்யா மனதில் வன்மம் இருப்பதை யாரும் உணரவில்லை. அவளின் திட்டம் தெரியாமல் அவள் சொன்னவற்றுக்கு எல்லாம் உடன்பட்டார் மீனாட்சி. அவள் சொல்வதைச் செய்வதைத் தவிர அப்போதைக்கு அவருக்கு வேறு வழியும் இருந்திருக்கவில்லை.

Advertisement

அதன் பின் வந்த நாட்களில், நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் அத்தை வீட்டிற்கு வந்து சென்றாள் சரண்யா. வரும்போதெல்லாம் மிருதுளாவிற்குப் பிடித்தது என்று எதவையவது வாங்கி வருவாள். அவள் வரும் நேரம் சந்துரு வீட்டில் இருந்தால், அவனுடன் தான் இவளது நேரம் கழியும். மிருதுளாவையும், சந்துருவையும் சேர்த்துக்கொண்டு, பேசி சிரித்து, பழைய கதைகள் பேசி என்று அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றிவிடுவாள். மிருதுளாவிற்கும் அவளைப் போகப் போகப் பிடிக்க ஆரம்பித்தது.

Advertisement

இதோ மிருதுளா கருவுற்று ஐந்து மாதம் ஆக, அதற்கும் சின்ன அளவில் பங்க்க்ஷன் செய்தனர் சந்துருவின் வீட்டில். அதில் கூடச் சந்துரு மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அதில் மிருதுளாவுக்கும் அவளைத் பெற்றோருக்கும் மகிழ்ச்சியே. ஆராவும் ஒரு முறை இங்கு வந்து தனது சகோதரியை பார்த்துவிட்டு சென்றாள். சந்துருவும் அவ்வபோது அலுவகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து சென்றான்.

இதற்கிடையில் ஏழாம் மாதம் முடிந்ததும் வளைக்காப்பு வைத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் முடிவு செய்ய, அதற்கான சுபநாள் குறித்தனர். முதலில் மிருதுளாவை சென்னைக்கு அனுப்ப முடியாது என்று மீனாட்சி சொல்ல, சந்துருவோ, மருத்துவத் தேவைக்கும், அவசரம் என்றால் தான் போய் அவளைப் பார்பதற்கும், சென்னை தான் வசதி என்று முடிவாகச் சொல்லிடவே, ஒருமனதாகச் சரி என்று ஒத்துக் கொண்டாலும், ‘ஒரு வேலை கண்டு பிடித்துவிடுவார்களோ!’ என்று அவர் மனதில் சிறு பயம் இருந்தது. அது எதற்கு என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. அலுவகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு சந்துரு ஊருக்கு வந்துவிட, ஆராவும் கல்லூரிக்கு விடுப்பு போட்டுவிட்டு வந்தாள். மீனாட்சி அழைத்ததின் பேரில் சரண்யாவின் குடும்பமும் விழாவுக்கு வந்திருந்தனர்.

Advertisement

லைட் நீல கலர் பட்டு புடவையில், ஆங்காங்கே கற்கள் பதித்து, முந்தானையில் குட்டி கண்ணன் பானையில் இருந்து வெண்ணை எடுத்து சாப்பிடும் காட்சி, தங்க நிறத்தில் நெய்யபட்டிருக்க அழகாக ஜொலித்தாள் மிருதுளா. முழுமதியாக மேடிட்ட வயிறுடன் அறையில் இருந்து அழைத்துவரபட்ட மிருதுளாவை, அங்கிருந்த வெல்வெட் சிம்மாசனத்தில் அமர வைத்தனர். அவள் பக்கத்தில் ஆரா முகத்தில் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு பெண்களாக வந்து மிருதுளாவிற்குச் சந்தனம் பூசி கையில் வளையல் போட்டுவிட்டு செல்ல, எல்லோரும் சந்துருவை கிண்டல் அடித்தனர். அவனின் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த புன்னகையில், அவன் திருந்திவிட்டான் என்று நினைக்கையில், ஆராவிற்குக் கூட மகிழ்ச்சி தான்.

ஒரு வழியாகக் கேலி கிண்டல்களுடன் விழா இனிதே முடிய, அதற்கு ஒரு வாரம் கழித்துச் சென்னைக்குப் புறப்படுவதற்கு டிக்கெட் எடுத்திருந்தனர் மிருதுளாவின் பெற்றோரும், சந்துருவும். ஆரா தன்னுடைய கல்லூரியின் இறுதி ஆண்டில் இருப்பதால், ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தாள். அதனால் அவளுக்கு ஒரு வாரம் அங்கிருக்க முடியாததால், அடுத்த நாளே கிளம்பி சென்னைக்குச் சென்றுவிட்டாள்.

வளைக்காப்பு முடிந்த அடுத்த நாள், சரண்யா மீனாட்சியைப் பார்க்க வந்திருந்தாள். மாளிகை போன்ற பெரிய வீட்டில், இரண்டு பக்கமும் படிகள் இருக்க, கீழே எதிர் எதிர் திசைகளில் அறைகள் இருந்தது. அதில் ஒரு அறை தான் மீனாட்சியுடையது. சென்னைக்கு எடுத்த செல்ல வேண்டியவற்றைத் தன் தாயுடன் சேர்ந்து, மேலே இருந்த தங்கள் அறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

“அடடே வா டா மா!” என்று சரண்யாவை வரவேற்ற மீனாட்சி, அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார். “குழந்தை நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்கு அத்தை. இனி எந்த ப்ராப்ளமும் இல்லை. நீங்க இனிமே கவலைப்பட வேண்டியதில்லை. அத்தோட மிருதுளாவோட உடல்நிலையும் நார்மலா இருக்கு. சோ டெலிவரில எந்தப் பிரச்னையும் இருக்காது. நாம் பேசின எதையும் நீங்க அத்தான்கிட்ட சொல்லலையே…” என்றவள் மேற்கொண்டு எதையோ பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் வெளியே சென்றிருந்த சந்துரு, தாயைத் தேடி அவரின் அறைக்கு வந்தவனின் காதில், சரண்யா கடைசியாக பேசிய வார்த்தை விழ, வேகமாக கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான். போகாமல் வெளியே நின்று கேட்டிருந்தால், அவர்களின் சதி இவனுக்குத் தெரிய வந்திருக்கும்.

பட்டென்று சந்துரு கதவை திறந்துகொண்டு வந்ததும், அவன் தாங்கள் பேசியதை கேட்டுவிட்டனோ என்று இருவருக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், அதை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. குறிப்பாகச் சரண்யா. ஏனெனில் இந்தச் சந்தர்பத்தைத் தான் அவள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் நுழைந்தவன், “என்ன சரண்யா?!! என்ன விஷயம்??! எதை என்கிட்டே சொல்லலைன்னு கேட்டுகிட்டு இருந்த?!!” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லை ப்பா. அவ சும்மா எதையோ பேசிட்டு இருந்தா.” என்று சாமாளித்தார் மீனாட்சி.

“அம்மா, சும்மா எதையாவது சொல்லாதீங்க. அவ என் பேரை சொன்னா. அது எனக்கு நல்லா தெரியும். உங்களைப் பார்க்க வந்தேன். அப்போதான் இவ சொன்னது என் காதுல…” என்று சொல்லி கொண்டிருந்தவனின் கண்களில் சரண்யாவின் கையில் இருந்த மெடிகல் ஃபைல் பட்டது. அதன் அட்டையில் மிருதுளா என்ற பெயர் இருக்கவே, “அது என்ன பைல் சரண்யா??! மிருதுளா பேர் போட்டிருக்கு. அவளுக்கு எதுவும் பிரச்சனையா? இல்லை குழந்தைக்கு……….ஒருவேளை அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தீங்களா??” என்று லேசாகக் குரலை உயர்த்தவும், “ஐயோ! அதெல்லாம் இல்லை அத்தான்.” என்று பதறுவது போலச் சரண்யா பாவனைச் செய்ய, “அப்போ என்ன விஷயம், சொல்லு சரண்யா. நீயே சொல்லு, இல்லனா நான் ஹாஸ்பிட்டல் போய்க் கேட்டுகிறேன்.” என்று சொல்லவும், ‘அய்யய்யோ! நம்ம திட்டம் எல்லாம் அம்பலம் ஆகிடுமே.’ என்று அதிர்ந்த சரண்யா, “ஐயோ!! வேண்டாம் அத்தான். நானே சொல்லிடறேன்.” என்று கூற, சரண்யா என்ன சொல்ல போகிறாளோ, என்று மீனாட்சி இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார். அதை உணர்ந்து இவளும் திரும்பி பார்க்க, ‘வேண்டாம் சொல்லிடாத.’ என்பது போல அவர் முகபாவனைச் செய்ய, இவளோ, ‘மன்னிச்சிடுங்க அத்தை.‘ என்ற ரீதியில் பார்த்தவள், கடகடவென்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

சரண்யா சொல்லச் சொல்ல, அதிர்வுடன் அனைத்தையும் கேட்ட சந்துரு, கொதிநிலைக்குச் சென்றிருந்தான். கோபத்துடன், “நீ சொல்றது எல்லாம் உண்மையா?!” என்று கேட்டவன், அவள் கையில் இருந்த பைலை வாங்கித் திறந்து பார்க்க, அவள் சொன்னது உண்மை என்று தெரிந்தது. அப்படியே நரம்புகள் புடைக்க, கோபம் கட்டுகடங்காமல் வந்தது. பைலை அவளிடம் திருப்பிக் கொடுத்தவன், அவளிடம் ஏதோ சொல்ல, “உடனே முடியாதே அத்தான். கஷ்டமாச்சே.” என்று அவள் பதில் சொல்ல, “எவ்வளோ பணம் வேணாலும் கட்டிடு சரண்யா. எனக்கு உடனே வேணும்.” என்று சந்துரு பதில் சொல்லிவிட, அவளும் “சரி அத்தான்.” என்று தலை ஆட்டினாள். அந்தக் கோபத்துடனே வெளியே சென்று விட்டான் சந்துரு.

அவன் போகும் வரை மூச்சை இழுத்துப் பிடித்திருந்த மீனாட்சி அதன் பின்பு தான் ரிலாக்ஸ் ஆனார். சரண்யா பக்கம் திரும்பியவர், “ஏன் சரண்யா இப்படிச் சொன்ன?!!” என்று அதிர்ச்சியுடன் கேட்க, “பின்ன, நான் சொல்லாம இருந்தா நிச்சயம் அத்தான் ஹாஸ்பிட்டல் போய் விசாரிச்சு இருந்துருப்பாரு. அப்புறம் நாம ரெண்டு பேர் தான் மாட்டுவோம். ஆமா உங்களுக்கு என்ன, எதுக்கு இப்படிக் கேட்குறீங்க? மருமக மேல அவ்வளோ பாசமோ!” என்று நக்கல் குரலில் பேச, அவசரமாக மறுத்தார் மீனாட்சி. “அந்த அர்த்தத்தில சொல்ல டி மா. அவ மேல, எனக்கு என்ன பாசம். நீ சொன்னியே, அதால நம்ம திட்டம் அவனுக்குத் தெரிய வாய்ப்பு இருக்குமோன்னு ஒரு பயம் அவ்வளவு தான்.” என்று இவர் பம்ம, “அப்புறம் என்ன, அமைதியா நடக்கப் போறதை கவனிங்க.” என்று சொன்னாள் சரண்யா. ஆனால் அவள் கண்களில் தெரிந்த துவேஷத்தை இவர் கவனிக்கவில்லை.

சந்துரு சொன்னது போல, சில நாட்களில் அவன் கேட்டதைச் செய்து முடித்த சரண்யா, அவன் எதிர்பார்த்த பைலை அவனிடம் எடுத்து வந்து கொடுக்க, வாங்கிப் பார்த்தவன் கோபத்துடன் மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்றான். நாளைக்குக் கிளம்ப வேண்டி இருந்ததால், எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

அறைக்குள் நுழைந்தவன் “மிருதுளா!!!” என்று கர்ஜிக்க, அவன் குரல் கேட்டு திரும்பி பார்த்தவளின் முகத்தில் ஃபைலை வீசி எறிந்தவன், “இதெல்லாம் என்னது?” என்று கேட்க, புரியாமல் விழித்தவள் கீழே விழுந்திருந்த ஃபைலை குனிந்து எடுத்தவள், அவனைப் பார்த்துக்கொண்டே ஃபைலை திறந்து, அதில் இருந்தவற்றைப் படிக்க, படிக்க, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் கடைசி வரியை படித்தவளுக்கு, கண்கள் இருட்டாகி, தலை சுற்றுவது போல இருக்க, தன்னைச் சமன் செய்துகொண்டு தான் பார்த்தது சரியா? இதில் போட்டிருப்பது தன்னுடைய பெயர் தானா? என்று மீண்டும் மீண்டும் உற்றுபார்க்க, ‘ஆம்’ என்றது அவளுக்குக் கிடைத்த விடை.

அதிர்வுடன் நிமிர்ந்து சந்துருவை பார்த்தவள், “சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. என்னை நம்புங்க….” என்றவள் அவனை நோக்கி செல்ல, “ச்சீசீ!!” என்ற முகசுளிப்புடன் பின்னே நகர்ந்தான் அவன். கணவனின் முகச்சுளிப்பில் அதிர்ந்து அப்படியே நின்றவள், “நான் சொல்றது உண்மைங்க…இது ….இது….” என்று அழுகையுடன் பேச, “போதும் நிறுத்துடி. ச்சீ! நீயெல்லாம் ஒரு பொண்ணா. உன்னை மாதிரி பொண்ணுங்களால, எல்லாப் பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு. எப்படி டீ உனக்கு இப்படிச் செய்ய மனசு வந்தது.” என்றவனின் குரலில் அவ்வளவு அருவருப்பு. மேற்கொண்டு, அவளைப் பார்த்து, சொல்லகூடாதா வார்த்தைகளை எல்லாம் சொன்னான். “ஆரம்பத்தில இருந்து நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு. உன்னோட அசிங்கமான புத்திய காமிச்சிட்டல!!” என்றவன், வார்த்தை என்னும் விஷத்தை அவளை நோக்கி வீச, கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவோ, தன் உணர்வுகள் மரத்து போய், சிலையென ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

அவனின் சொற்கள் தந்த வலியை விட, அவனின் பார்வையில் தெரிந்த அருவருப்பு, தன்னை யாரோ, சாக்கடையில் முக்கி எடுத்தது போல, அவளைக் கூனி குறுக வைத்தது. சந்துருவின் குற்றச்சாட்டை நினைக்கையில், அவனுடனான தாம்பத்திய வாழ்க்கை எல்லாம் இவள் கண்முன் வந்து போக, உடல் கூசி போனது மிருதுளாவிற்கு. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கணவனாக என்னுடன் வாழ்ந்திருக்கிறான். எப்படி இவனால் என்னைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல முடிந்தது. அப்பொழுது, தான் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையைப் பொய் என்றல்லவா நினைக்கிறான். நான் அப்படிப்பட்டவளா? இல்லை அப்படிதான் நடந்து இருக்கிறேனா? என்ற கேள்விகள் எல்லாம் அவள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்க, கண்கள் நிலைகுத்தி இருக்க, கண்ணீரோ விடாமல் வழிந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் அங்கே வந்த சித்ராவின் காதுகளில் சந்துரு பேசியது எல்லாம் விழ, அதிர்ந்தவரின் வயிற்றுக்குள், தன் பெண்ணின் வாழ்கையை நினைத்து பயபந்து உருண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!