Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 14 2

எப்போதும் அதட்டல் பேச்சுக்கு பயப்படும் சிந்து இந்த முறை அவனை நேராக நிமிர்ந்து பார்த்து “அதை உங்க கிட்ட எதுக்கு சொல்லணும்? நீங்க யாரு எனக்கு?”, என்று கேட்டாள்.

“லூசா டி நீ? நான் யாருன்னு தெரியலையா? உனக்கு தாலி காட்டின புருஷன்’



Advertisement

“அது அந்த அளவுக்கு பெரிய உறவு இல்லை. நம்ம கல்யாணம் ஒரு கட்டாயம் கல்யாணம். அதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அண்ணா வாங்க போவோம்”, என்று சொன்னதும் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தான் ஆதவன்.

Advertisement

அவன் அடித்ததில் அவள் அதிர்வாக அவனைப் பார்த்தாள். அவளது அந்த தோற்றம் குழந்தை போல இருக்க “என்ன நடந்துச்சுனு சொல்லு சிந்து, அடிச்சதுக்கு சாரி டி”, என்று இறங்கி வந்தான் ஆதவன்.

Advertisement

“ஒண்ணும் இல்லை. நான் ஊருக்கு போகணும். அண்ணா என்னைக் கொண்டு போய் விடப் போறீங்களா இல்லையா?”

Advertisement

“சிந்து பிளீஸ் எனக்கு தலையும் புரியலை, காலும் புரியலை. யாரும் எதுவும் சொன்னாங்களா மா?”, என்று கேட்டான் ரங்கன்.

“யாரும் எதுவும் சொல்லலைண்ணா, எனக்கும் ஒண்ணும் இல்லை. என்னை என் வீட்ல கொண்டு போய் விடுங்க, பிளீஸ்”, என்று சொன்னவள் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“என்ன நடந்துச்சுன்னு தெரியாம நான் என்ன டா செய்ய? இவ இப்படி பண்ணுறாளே?”, என்று சளிப்பாக சொன்னான் ஆதவன்.

“பொறுத்துருப்போம் அண்ணா, அப்படியே நம்ம மேல தப்பு இருந்தாலும் தங்கச்சி நம்மளை மன்னிக்கும். ஆனா இப்ப கோபத்துல இருக்கு. இப்ப தேவையில்லாம எதையும் பேசி நிலைமையை பெருசாக்க வேண்டாம். விட்டுப் பிடிப்போம். நான் தங்கச்சியை வீட்ல விட்டுட்டு வரேன்”

“இவ இப்படி அழுதுட்டு போனா இவ அப்பன் அந்த குதி குதிப்பான் டா. அதை விட நம்ம வீட்டு பெருசு என்னை என்ன சொல்லுமோன்னு பயமா இருக்கு. எல்லாத்துக்கும் என் தலை தான் உருளும்”

“அதெல்லாம் பொறுமையா பாக்கலாம்ணே. ஐயா புரிஞ்சிப்பார்”

“உங்க ஐயா தானே? புரிஞ்சிக்கிட்டாலும்…. சரி டா, பாத்து போயிட்டு வா. போகும் போது ஏதாவது சொல்றாளான்னு வாயை திறக்க வைக்கப் பாரு”

“சரிண்ணே”, என்று சொன்னவன் அப்போது தான் வேஷ்டியுடன் இருப்பதைப் பார்த்தான்.

“தங்கச்சி ஒரு நிமிஷம் இரு மா. டிரஸ் மாத்திட்டு வந்துறேன்”, என்று சொல்லிச் சென்றான்.

ரங்கன் உள்ளே சென்றதும் காரில் ஏறி அவள் அருகே அமர்ந்தான் ஆதவன். அவள் அவன் முகம் பார்க்காமல் அமைதியாக இருக்கவும் “என் மேல தான் உனக்கு கோபமா டி? நான் என்ன செஞ்சேன்? என்னை விட்டுட்டுப் போக முடிவு பண்ணிட்டல்ல?”, என்று கேட்டான். அதற்கு எனத பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருந்தாள்.

அவள் கொஞ்சம் யோசித்திருந்தாலும் அவன் மனதை புரிந்து கொண்டிருப்பாள். ஆனால் அவளோ முழுக் கோபத்தில் இருந்தாள். அவனுக்கு தன்னைப் பிடிக்க வில்லை என்று அவள் மனது நம்பியது. அதனால் அதில் இருந்து அவளால் வெளியே வர முடியவில்லை.

“நான் என்ன டி தப்பு பண்னினேன்? எதுக்கு என்னை விட்டுட்டுப் போற? எங்க அப்பாவுக்கும் என்னைப் பிடிக்காது. இப்ப உனக்கும் என்னைப் பிடிக்க மாட்டிக்குது?”, என்று புலம்பினான்.

“உன்னை எனக்கு அதிகம் பிடிச்சுருக்கு டா. ஆனா உனக்கு தான் என்னைப் பிடிக்கலை. அப்படி பிடிச்சிருந்தா வேணுக்குன்னு கையை உடைப்பியா?”, என்று மனதுக்குள் அவனிடம் கேள்வி கேட்ட சிந்து அமைதியாக இருந்தாள்.

“நீயாவது என்னைப் புரிஞ்சிக்குவன்னு ரொம்ப நம்பினேன் சிந்து. ஆனா நீ தான் எனக்கு பெரிய காயத்தை கொடுத்துட்டு போற? என்ன தப்பு செஞ்சேன்னு தெரியாமலே தண்டனை அனுபவிக்கிறது கஷ்டமா இருக்கு டி”, என்றவன் அவளுடைய கையைப் பற்றினான்.

ஏனோ அதை உதறாமல் அமைதியாக இருந்தாள். அவளுக்குமே அவனது அந்த ஸ்பரிசம் தேவையாக இருந்தது போல. அவள் கையை அசைக்கமல் இருக்கவும் அவன் அவள் முகத்தை தொட வந்தான்.

அதை உணர்ந்த சிந்து “என்னை விடுங்க, எனக்கு உங்களைப் பாக்கவே பிடிக்கலை. என்னைத் தொட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை”, என்றாள். அவள் அப்படிச் சொன்னதில் படக்கென்று கையை எடுத்துக் கொண்டான்.

அவளது கண்ணீர் புதிது, அவளது கோபம் புதிது. ஆனால் அதை இருவரும் உணரவில்லை என்பது தான் விதி. அவளுக்கு அவனை விட்டுச் செல்ல மனதில்லை. அவன் மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவனது முத்தம் வேண்டும் போலவும் இருந்தது.

தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைத்தவள் “தயவு செஞ்சு கீழே இறங்குங்க. நான் இனி இங்க வர மாட்டேன். எனக்கு வீட்டுக்கு போகனும். ரங்கண்ணன் வந்துரும்”, என்று சொல்லி அவனைப் பார்த்தாள். அவள் உதடு ஒன்று சொன்னாலும் அவள் கண்களில் இருந்த தேடல் அவனுக்கு புரிய அடுத்த நொடி அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.

‘என்ன செய்றீங்க? விடுங்க விடுங்க என்னை”, என்று அவள் கத்த “பிளீஸ் சிந்து ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் இப்படியே இரு. எனக்காக”, என்றான்.

அதற்கு மேல் அவனை விலக்க முடியாமல் அப்படியே அசையாமல் இருந்தாள். அவளை அறியாமலே அவள் கைகள் உயர்ந்து அவன் முதுகை வருட அதை புரிந்து கொண்ட ஆதவனுக்கு குழப்பமாக இருந்தது.

“அண்ணே”, என்ற படி ரங்கன் வீட்டை விட்டு வெளியே வர அவன் அரவம் உணர்ந்து அவளை விட்ட ஆதவன் அவசரமாக அவள் இதழ்களில் முத்தமிட்டு விட்டு அடுத்த நொடி காரில் இருந்து இறங்கி விட்டான். ரங்கனும் சரியாக அந்த நேரம் அங்கு வந்தான்.

சிந்துவோ அப்படியே அசையாமல் இருந்தாள். அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. அவன் தந்த முத்தத்தில் திளைத்திருந்தாள். “போகலாமா தங்கச்சி”, என்று ரங்கன் கேட்டது கூட அவள் காதில் விழ வில்லை.

ரங்கன் அருகில் வந்து நின்ற ஆதவன் “பாத்து போ டா. கவனம்”, என்றான்.

“நான் பாத்துக்குறேன், எல்லாம் சரியாகிரும். தைரியமா இருண்ணே நீ”, என்று சொல்லி விட்டு ரங்கன் காரைக் கிளப்பினான்.

கிளம்பிச் செல்லும் காரையே பார்த்த படி இருந்தான் ஆதவன். அவள் தன்னை விட்டுச் சென்றதும் வெகுவாக துவண்டு போனான். வீட்டுக்குள் சென்று சோபாவில் தளர்ந்து போய் அமர்ந்தான். அவள் தன்னை விட்டுச் சென்றது தன்னுடைய உயிரையே யாரோ உருவியது போலவே அவனுக்கு வலித்தது.

உயிர் போகும் வலியை வாழ்க்கையில் முதல் முறை அனுபவித்தான். இனி அவள் இல்லாமல் அவன் இல்லை என்று அவன் உணர்ந்த தருணம் இது தான். இத்தனை நாள் மனைவி என்ற அக்கறை அவள் மீது இருந்தது தான். அவள் அழகின் மீதான ஆசை இருந்தது தான். ஆனால் காதல் என்ற ஒன்ற உணர்வை இப்போது தான் முழுதாக உணர்ந்தான். பிரிவில் காதலை உணர்ந்து கொண்டான்.

சாம பூஜை முடிந்ததும் ரங்கனைத் தேடினார்கள் மங்கையும் ரத்தினமும். அவனும் இல்லை, காரும் இல்லை என்றதும் ரங்கனை அழைத்தார் ரத்தினம். அவசரத்தில் ரங்கனோ போனை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருந்தான்.

“என்ன ஆச்சுங்க, ரங்கன் போனை எடுக்கலையா?”

“ஆமா, வீட்டுக்கு போன பய தூங்கிட்டானா? ஆதவனுக்கு அடிக்கவா?”

“வேண்டாங்க, தூங்குனா தூங்கட்டும். நாம நடந்தே வீட்டுக்கு போவோம்”, என்று மங்கை சொன்னதும் அவரும் நடந்தார்.

போகும் போது “என்னங்க முடிவு பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டாள் மங்கை.

“என்ன முடிவு மங்கை?”

“ஆதவன் எதிர்காலத்தைப் பத்தி தான் சொல்றேன். இத்தனை நாள் உங்க கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசி சும்மாவே இருந்துட்டான். இப்ப அவனை நம்பியும் ஒரு பொண்ணு வந்தாச்சு. இனியும் இப்படியே இருந்தா ஆச்சா? உங்களுக்கு தெரியாதது இல்லை. பாத்து முடிவு பண்ணுங்க”

“சரி யோசிக்கிறேன் மங்கை”

“அப்புறம் பிரியா படிப்பை முடிச்சிட்டா. அவளுக்கும் ஒரு வரன் பாக்கணும்ங்க”

“அவளுக்கு மட்டும் இல்லை. வைதேகிக்கும் பாக்கணும். நாளைக்கு விஸ்வம் மாப்பிள்ளை கிட்டயும் பரமு மச்சான் கிட்டயும் பேசுறேன்”, என்றார்.

இப்படிப் பேசிய படியே இருவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். “என்னங்க வீட்லயும் காரைக் காணும். ரங்கன் எங்க போனான்?”, என்று குழப்பமாக கேட்டாள் மங்கை.

“தெரியலையே, சரி வா. உள்ள போய் பாப்போம்”, என்று சொல்லி உள்ளே சென்றனர்.

ரத்தினமும் மங்கையும் உள்ளே வந்த போது நட்ட நடு ஹாலில் தரையில் சுவரில் சாய்ந்து தளர்ந்து போய் அமர்ந்திருந்த மகனைக் கண்டு திக்கென்று இருந்தது இருவருக்கும்.

“ஆதவா?”, என்று ரத்தினம் பதற “என்ன ஆச்சு ஆதவா? ஏன் ஒரு மாதிரி இருக்க? சிந்து எங்க? காரையும் கானும். ரங்கன் எங்க டா?”, என்று கேட்டாள் மங்கை.

“என்னன்னு தெரியலை மா. வீட்டுக்கு வந்ததும் சிந்து ஒரே அழுகை. அவ வீட்டுக்கு போகணும்னு சொல்லி கிளம்பிட்டா. ரங்கன் தான் அவளை விடப் போயிருக்கான். எனக்கு ஒண்ணும் புரியலை. கோவிலுக்கு போகும் போது நல்லா தான் இருந்தா. ஆனா வரும் போது அழுதுட்டே வந்துருக்கா”, என்று கலக்கமாக சொன்னான். எப்போதுமே புன்னகை முகத்துடனே வளைய வரும் அவனை இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்க மங்கைக்கு சகிக்க வில்லை.

“ஆதவா, நீ ஏதாவது சொன்னியா டா?”

“நிஜமாவே இல்லை மா”

“நீயும் அவ கூட போயிருக்க வேண்டியது தானே?”

“அவ என் மேல கோபப் பட்டு தான் மா போறா. அப்புறம் எப்படி நான் போறது? எனக்கு ஒண்ணுமே புரியலை மா”, என்று அவன் கலக்கமாகச் சொல்ல அவன் வேதனை புரியாமல் “என்னது புரியலை? நீ எதுவும் சொல்லாமலா அந்த பிள்ளை இந்நேரம் அவ வீட்டுக்கு கிளம்பிப் போயிருக்கும். ஒரு வேளையும் உருப்படியா செய்றது இல்லை. நீ எதுக்கு டா எனக்குன்னு வந்து பிறந்த? பிரண்டு கல்யாணத்துக்கு போனவன் அவளைக் கட்டிக்கிட்டு வந்த? இப்ப அவளையும் துரத்தி விட்டுட்டியா?”, என்று கோபத்துடன் கேட்டார் ரத்தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!