Skip to content
Post Views: 3,071
“இவர் என்ன இப்ப எல்லாம் லவ் லுக்கா விடுறார்?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “அந்த பொண்ணை உனக்கு உண்மையிலே பிடிச்சிருக்கா பா?”, என்று குழப்பத்துடன் கேட்டார்.
“அவளைத் தவிர வேற யாரையுமே எனக்கு பிடிச்சிருக்காதுப்பா. எப்பவுமே அவ மட்டும் தான் என் வாழ்க்கை. எல்லாம் சரியாப் போகும்”, என்று அவருக்கு சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.
Advertisement
அவனுடைய பேச்சில் நிம்மதியடைந்தார் ரத்தினம். கூடிய சீக்கிரம் மகனது வாழ்க்கை சரியாகி விட வேண்டும் என்று அவரும் வேண்டிக் கொண்டார்.
தந்தைக்கு ஆறுதல் சொன்னானா, இல்லை தனக்கு தானே ஆறுதல் சொன்னானா என்ற குழப்பத்துடனே அறைக்குச் சென்றான் ஆதவன். இத்தனை நாட்கள் கழித்து அந்த அறைக்குள் நுழைந்தவனுக்கு அவள் இல்லாத அந்த அறை மூச்சு முட்டுவது போல இருந்தது.
Advertisement
Advertisement
அவள் இல்லாத தனிமை அவனை அதிகம் பாதித்தது. மங்கை உணவு உண்ண அழைக்க உணவு வேண்டாம் என்று மறுத்தவன் படுக்கையில் படுத்துக் கொண்டான். ஆனால் உறக்கம் தான் அவனை அண்டவில்லை.
இத்தனை நாளும் அவளுடன் கூடிக் களிக்க வில்லை தான். தாம்பத்யம் என்ற ஒன்றை அவன் இது வரை உணர்ந்ததில்லை தான். ஆனாலும் அவளை வெகுவாக தேடினான். இது வெறும் உடலுக்கான தேடல் இல்லை. உணர்வுக்கான தேடல். அவளது அருகாமைக்காக ஏங்கியது அவன் மனம்.
Advertisement
சட்டென படுக்கையில் இருந்து எழுந்தவன் அன்று கோவிலுக்கு செல்வதற்கு முன் சிந்து போட்டிருந்த உடையை எடுத்தான். அதில் இருந்து வந்த வியர்வை வாசனை அவளை நினைவு படுத்தியது. ஏதோ அவளே தன்னுடன் இருப்பது போல இருந்தது.
படுக்கையில் விழுந்தவன் அவளது உடையை தன் மேல் போட்டுக் கொண்டான். அவளது வாசனை அவள் இங்கேயே இருப்பது போன்ற பிரம்மையை அவனுக்கு ஏற்படுத்த அப்படியே தூங்கி விட்டான். அவளோ அவன் நினைவில் உறங்காமல் இருந்தாள். இவ்வளவு தூரம் வந்தவனைக் காண தனக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அடுத்த ஒரு வாரம் கழித்து அவனை அழைத்து பேசினார் ரத்தினம். “சிந்து விசயத்துல என்ன டா பண்ணப் போற?”, என்று கேட்டார்.
“தெரியலைப்பா. கூப்பிடப் போகணும். ஒரு வேளை கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிருவாளோன்னு பயமா இருக்கு”, என்று உண்மையைச் சொன்னான்.
“இப்படியே விட்டா ஆச்சா? என்னைக்கு இருந்தாலும் அவ இங்க தான் டா இருக்கணும். என்ன பிரச்சனைன்னு கேட்டு சரி பண்ணு டா”
“என்ன பிரச்சனைன்னு சொன்னா தானேப்பா சரி பண்ண முடியும்? எதுக்குன்னே தெரியாம மன்னிப்பும் கேட்டுட்டேன். எவ்வளவோ கேட்டும் சொல்லலை. நீங்க போனப்ப உங்க கிட்டயும் சொல்லலை”
“போன் பண்ணி பேசினியா?”
“இல்லை”
“போன் பண்ணி பேசிப் பாரு. இல்லைன்னா நேர்ல போ. நாலு பேருக்கு விஷயம் தெரியுறதுக்குள்ள இதை சரி செய்யனும். இல்லைன்னா மரியாதை போயிரும். அது கூட பரவால்ல. ஆனா வாழ்க்கை. அதை போக விட்டுறக் கூடாது
“சரிப்பா”, என்று சொன்னாலும் அவளுக்கு அழைக்க எல்லாம் அவனுக்கு தைரியம் இல்லை. ஒரு வேளை அவள் அவனது போனை எடுக்க வில்லை என்றால் அதை அவனால் தாங்கவே முடியாது.
இருவரும் பேசுவதையும் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கன். அவனுக்கு உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆதவன் சிந்துவிடம் பேச வில்லை என்றாலும் ரங்கன் தினமும் சிந்துவிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறான். தினமும் சிந்துவிடம் அவன் பேசியும் எந்த பயனில்லாமல் போனது.
இதற்கு தீர்வு வராதா என்று கொக்கு போல காத்திருந்தான். சிந்துவுக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக பார்த்தாலும் வேறு ஏதாவது வழி கிடைக்காதா என்று ஆவலாக காத்திருந்தான்
அதே போல அடுத்த நாளே அவனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. அடுத்த நாள் பிரியா காலையிலே மாமா வீட்டுக்கு வந்திருந்தாள்.
அவளைக் கண்டதும் “வா டா, சாப்பிடுறியா?”, என்று கேட்டாள் மங்கை.
“இப்ப வேண்டாம் அத்தை, ஆமா அத்தான் எங்க?”
“பின்னாடி தோட்டத்துல இருப்பான் போல? மகராசி அவன் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு இருக்கா. நீ போய் பாரு. அவனுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்”, என்று சொல்ல சந்தோஷமாக அங்கிருந்து சென்றாள்.
தோட்டத்துக்கு அருகே போகும் போது தூரத்தில் ஆதவன் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. பின் பக்கம் வராண்டா போல ஒரு இடம் இருந்தது. ஏதாவது காய்கறிகள், கீரைகள் என்று பறித்தால் அங்கே தான் போட்டு வைப்பார்கள். அந்த அறையில் கிடந்த சேரில் தன்னுடைய சட்டையை கழட்டி வைத்திருந்தான் ஆதவன். அதைக் கண்டவளுக்கு அவன் மீதான ஆசை துளிர் விட வேகமாக அந்த சட்டை இருக்கும் இடத்தை நெருங்கினாள்,.
அங்கே நடப்பது ஆதவனுக்கு தெரியக் கூடாது என்று முடிவு செய்தவள் அவசர அவசரமாக சென்றாள். சுற்றும் முற்றும் பார்த்த படி அவனுடைய சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
ஏதோ அவன் கை அணைப்பில் இருப்பது போல அவள் முகம் மயக்கத்தில் சிவந்தது. அடுத்தவளின் கணவனை பற்றி இப்படி எண்ணுகிறோமே என்றெல்லாம் அவள் மனதில் பதியவே இல்லை.
யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அவள் மெய் மறந்து நின்றாள். சிறிது நேரம் கழித்து அந்த சட்டையைக் கழட்டியவள் அந்த சட்டைக்கு முத்தம் கொடுத்து விட்டு அதே இடத்தில் வைத்து விட்டு ஆதவனைக் காணச் சென்றாள்.
அவள் வந்தது முதல் செய்தது வரை அனைத்தையும் தன்னுடைய போனில் படம் பிடித்து விட்டான் ரங்கன்.
எப்போதுமே ஆதவன் எங்கே இருப்பானோ அங்கே தான் ரங்கனும் சுற்றிக் கொண்டிருப்பான். அது அன்பா விசுவாசமா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது.
இன்றுமே ஆதவன் மனைவியின் எண்ணத்தை விரட்டி அடிக்க தோட்டத்தில் இறங்கினான். அப்போது ரங்கனும் அவனுடன் வர “கொஞ்ச நேரம் தனியா விடு ரங்கா”, என்று ஆதவன் சொன்னதும் விலகி மறு பக்கம் வந்து விட்டான். ஆனாலும் ஆதவனை தன்னுடைய கண் பார்வையில் வைத்த படி தான் களை பிடுங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது தான் பிரியா வருவது தெரிந்தது. “வந்துட்டாளா, திண்ணை எப்ப காலியாகும்னு காத்துட்டு இருந்தவ தானே? வராம இருப்பாளா? அண்ணன் கிட்ட போய் பேசப் போறா, கோபத்துல இருக்குற அண்ணன் கிட்ட நல்லா வசவு வாங்க போறா”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக களை பிடுங்கிய படி இருந்தான்.
அவன் இருந்ததைக் கவனிக்காத பிரியா ஆதவன் புறம் செல்லாமல் அந்த வராண்டாவுக்குள் சென்றதும் “இவ என்ன அங்க போறா?”, என்று எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது தான் அவள் செய்கை அவன் கண்ணில் பட்டது. “அண்ணனுக்கு தெரியாம அண்ணன் சட்டையை எடுக்குறா? ஏதாவது லவ் லட்டர் எழுதி வைக்க போறாளோ? கண்டிப்பா ஏதோ வில்லங்கமா தான் செய்யப் போறா”, என்று எண்ணி தன்னுடைய போனை எடுத்து வீடியோ எடுத்தான். ஆனால் அதன் பின் அவள் செய்கையில் அவனுக்கு அருவருப்பு தான் வந்தது.
“சீ என்ன பெண் இவள்?”, என்று எண்ணினாலும் அவள் செய்கை இப்போது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. சிந்துவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் பிரியா மற்றும் வேணியின் முக மூடியை கிழிக்க முடியாமல் தடுமாறியவனுக்கு இன்றைய அவள் செய்கை உவகையைக் கொடுத்தது.
இதைக் காட்டினால் ஆதவன் கட்டாயம் இவளைப் பற்றி புரிந்து கொள்வான். பழைய விஷயங்கள் தெரியாமல் போனாலும் இனி கவனமாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டான்.
இருந்த இடத்திலே சட்டையை வைத்து விட்டு வராண்டாவில் இருந்து இறங்கி வந்த பிரியா நேராக ஆதவன் இருக்குமிடம் நோக்கி நடந்தாள். அப்போது அவள் கண்ணில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் பட்டான்.
“இவன் என்ன இங்க இருக்கான்? நம்ம செஞ்சதை பாத்துருப்பானோ?”, என்று ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் “பாத்துருக்க மாட்டான். பாத்துருந்தா எங்க அண்ணன் சட்டையை எதுக்கு போட்டீங்கன்னு இந்நேரம் சண்டைக்கு வந்திருப்பான்”, என்று எண்ணிக் கொண்டவள் அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஆதவனை நெருங்கினாள்.
“போடி போ, இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு இருக்கு. என் தங்கச்சியையா வீட்டை விட்டு விரட்டுற?”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் ரங்கன்.
error: Content is protected !!