Skip to content
Post Views: 3,456
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அசோக் கூட வீட்டில் தான் இருந்தான். காலை ஒன்பது மணிக்கு வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் ஒரு வேளை அஞ்சலி வந்திருக்கிறாளோ என்று எண்ணினாள் அமுதவள்ளி. அவசரமாக அடுப்பை அணைத்து விட்டு வெளியே வந்த அமுதவள்ளி கதவைத் திறந்தாள்.
கதவைத் திறந்ததும் அங்கே நின்றிருந்தவனைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். ஆதவன் இன்று இங்கே வந்து நிற்பான் என்று அவள் கனவிலும் எண்ண வில்லை. மகள் சொன்னது போல அவமானப்பட்டவன் இனி சிந்துவைத் தேடி வர மாட்டான் என்று எண்ணி தான் கவலை கொண்டாள்.
Advertisement
“எப்படி இருக்கீங்க அத்தை?”, என்று அவன் கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்தாள். “வாங்க மாப்பிள்ளை, வாங்க வாங்க. நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. உள்ள வாங்க”, என்று வரவேற்றாள்.
Advertisement
தயக்கத்துடன் வீட்டுக்குள் வந்தான் ஆதவன். “அசோக், சிந்து ரெண்டு பேரும் கீழ வாங்க. யார் வந்திருக்காங்கன்னு பாருங்க”, என்று சொன்ன அமுதவள்ளி தப்பித் தவறி கூட கணவனை அழைக்க வில்லை. கூடவே அவர் வந்து என்ன சொல்வாரோ என்று அவளுக்கு பயமாகவும் இருந்தது.
Advertisement
“மாமா இல்லையா அத்தை?”, என்று கேட்டான் ஆதவன்.
Advertisement
“உள்ள தான் இருக்கார் மாப்பிள்ளை. அவர் வெளிய வந்து ஏதாவது சொன்னாலும் ஏதாவது ஒரு ஜந்து பேசுறதா நினைச்சிக்கோங்க”, என்று அமுதவள்ளி சொல்ல அவனுக்கு சிரிப்பாக வந்தது.
“யார் மா வந்திருக்கா?”, என்று கேட்ட படி அசோக் வர “எதுக்கு மா கூப்பிட்ட?”, என்று கேட்ட படி சிந்து வந்தாள்.
அங்கே நின்ற ஆதவனைக் கண்டதும் இருவருக்கும் திகைப்பு தான். சிந்து அதே இடத்தில் அசையாமல் நிற்க “டேய் மாப்பிள்ளை வா டா வா டா”, என்று ஓடி வந்து அவனை அனைத்துக் கொண்டான் அசோக். அவனை கண்ட ஆனந்த அதிர்வில் இருந்து மீள முடியாமல் பாதிப் படிகளில் அப்படியே நின்றாள் சிந்து. அவளை ஆதவனும் பார்த்தான். அவள் கண்களில் இருந்த தேடலில் அப்படியே அவளை தூக்கிச் செல்ல வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
வெளியே இருந்த பரபரப்பைக் கண்டு ஏகாம்பரமும் வெளியே வந்தார். அவரைக் கண்டதும் அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது. அனைவரும் அவர் ஏதாவது தவறாக பேசி விடுவாரோ என்று எண்ணி அவரை தான் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் இங்கே வருவான் என்று சிந்து சுத்தமாக எதிர் பார்க்கவே இல்லை. அப்படி இருக்க இதில் அப்பா ஏதாவது அவனைச் சொல்லி விடுவாரோ என்று சிந்துவுக்கும் பயமாக இருந்தது. மகளைத் தான் ஏகாம்பரமும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாரும் அமைதியாக இருக்க “வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தார் ஏகாம்பரம்.
அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தார்கள். அதிர்ச்சியை அடக்க முடியாமல் “டேய் அசோக் இவர் எப்படி டா இப்படி நல்ல தம்பி நாணயமா ஆனார்?”, என்று கேட்டாள் அமுதவள்ளி. “சும்மா இரு மா, நானே அந்த அதிர்ச்சில தான் இருக்கேன்”, என்றான் அசோக். அவர்கள் பேசியதைக் கேட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் ஆதவன்.
“உக்காருங்க மாப்பிள்ளை”, என்று ஏகாம்பரம் சொல்ல அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் கண்கள் சிந்துவை ஆசையாக வருடியது. அவளுடைய கண்களில் இருந்த தவிப்பு அவளுடைய மனதை அவனுக்கு தெளிவாகப் புரிய வைத்தது.
ஆனாலும் அவன் மனது சிணுங்கியது. “நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்னு ஏன் டி என் சட்டையை பிடிச்சு சண்டை போடலை?”, என்று அவளிடம் மானசீகமாக கேட்டான். அவள் மீது கோபம் வந்தாலும் அவளை அவனுடைய கண்கள் மனதுக்குள் படம் பிடித்து நிறைத்துக் கொண்டது.
“எல்லாரும் நல்லவங்க தான். நல்ல விஷயம் தான் நடக்கவும் செஞ்சிருக்கு. நான் தான் எல்லாத்தையும் சொதப்பி வச்சிட்டேன்”, என்று பேச்சை ஆரம்பித்தார் ஏகாம்பரம்.
அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் அமைதியாக இருக்கவும் “என்னை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை”, என்றார் ஏகாம்பரம்.
“ஐயோ விடுங்க மாமா. நீங்க எப்பவும் சண்டை போட்டா தான் நல்லா இருக்கு. இப்படி பேசினா நானும் எப்படி என் மாமனாரை வம்பிழுக்க முடியும்?”, என்று ஆதவன் கேட்க அவர் நே என்று விழித்தார்.
“ஏன் டா உனக்கு இந்த வேலை? அவரே இப்ப தான் சரியா மாறிருக்கார். இவன் இப்படிச் சொல்றானே?”, என்று எண்ணி நண்பனை முறைத்தான் அசோக்.
“என்ன குட்டிமா அங்கயே நின்னுட்ட? இங்க வா”, என்று ஏகாம்பரம் அழைத்ததும் அவன் எதற்காக வந்தான்? தன்னை அழைக்க வந்தானா என்று தெரியாமல் அலை பாய்ந்த மனதுடன் இறங்கி வந்தாள் சிந்து. அவன் மனதை புரிந்து கொண்டாலும் அனைவரின் முன்னாலும் என்னை அழைத்துச் செல்வாயா என்று எப்படி கேட்க என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது.
சிந்து ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தன்னைப் பார்த்த படி இருக்கவும் அவளை வெறுப்பேற்றுவதற்காக “சரி நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான் ஆதவன்.
“என்னை விட்டுவிட்டு போய் விடுவாயா?”, என்று அவள் கண்கள் கலங்கியது. அதைக் கண்டு அவன் உள்ளம் குதூகலமானது.
“என்ன சிந்து பாத்துட்டு இருக்க? மாப்பிள்ளை கூட கிளம்பு. அவர் உன்னை கூப்பிட தானே வந்துருக்கார்?”, என்று அமுதவள்ளி சொல்ல “நிஜமாவா?”, என்று அவனிடம் கண்களால் கேள்வி எழுப்பினாள்.
“ஆம்”, என்னும் விதமாய் அவன் தலையசைக்க அவளுக்கோ சந்தோஷமாக இருந்தது. அவசரமாக கிளம்புவதற்கு அறைக்கு போகப் பார்த்தாள்.
“சிந்து நில்லு”, என்றார் ஏகாம்பரம். “ஏதாவது குழப்பம் செய்வாரோ?”, என்று எண்ணி அனைவரும் பார்க்க “இன்னும் என்னப் பா வேணும் உங்களுக்கு?”, என்று வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள் சிந்து. அதில் அனைவரும் சிரித்தார்கள்.
“எப்படி மாப்பிள்ளை என் தங்கச்சியை இப்படி மயக்கி வச்சிருக்க?”, என்று கேட்டான் அசோக்.
“உன் தங்கச்சி என் கிட்ட மயங்கிருக்கான்னு எனக்கே கொஞ்சம் லேட்டா தான் தெரியும். அதையும் இப்ப தான் என் கண்ணால பாக்குறேன்”, என்று எண்ணிக் கொண்டு ஒரு அசட்டு சிரிப்பை வெளியிட்டான் ஆதவன்.
“மாப்பிள்ளை இப்ப தான் வந்துருக்கார். உடனே அவரை அலைய வைக்கணுமா?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.
“அதானே? சரியா சொன்னீங்க”, என்று கணவனைப் பாராட்டிய அமுதவள்ளி மகள் புறம் திரும்பி “இன்னைக்கு முழுக்க இருந்துட்டு நைட் போனா போதும். சிந்து மாப்பிள்ளையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ. அவர் குளிக்கட்டும். அசோக் இன்னைக்கு லீவ் போடு. என்னங்க நீங்க வாங்க. கடைக்கு போகணும்”, என்று அனைவரையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்தாள்.
“அதெல்லாம் இல்லை. மாப்பிள்ளை ரெண்டு மூணு நாள் இங்க தான் இருப்பார். நான் நேத்தே இங்க தங்கணும்னு போன்ல சொல்லிட்டேன். அதனால பொறுமையா இரு வள்ளி”, என்று மனைவியிடம் சொன்னவர் ஆதவன் புறம் திரும்பி “போங்க மாப்பிள்ளை, குளிச்சிட்டு வாங்க. டிபன் சாப்பிடலாம்”, என்றார். அமுதவள்ளி அவசரமாக சமையல் அறைக்குச் செல்ல ஏகாம்பரமும் அவள் பின்னால் சென்றார்.
சிந்துவும் “வாங்க”, என்று அவனை அழைக்க “போடா மாப்பிளை, இன்னைக்கு தான் அவ முகத்துல இவ்வளவு சந்தோசத்தை பாக்குறேன்’, என்றான் அசோக். ஆதவனும் சிறு சிரிப்புடன் சிந்து அருகில் சென்றான்.
“வாங்க, பிளீஸ்”, என்று அவள் மீண்டும் அழைக்க அவளுடன் அறைக்கு நடந்தான். ஏதேதோ பேச வேண்டும் என்ற எண்ணங்கள் இருவர் மனதிலும் இருந்தாலும் பேச்சு தான் இருவருக்கும் வரவில்லை.
அறைக்குள் சென்றதும் அவன் அமைதியாக நிற்க “இங்க உக்காருங்க. நான் ஒரு நிமிசத்துல வந்துறேன்”, என்று சொன்னவள் கீழே ஓடிச் சென்று “அம்மா, சோப் எங்க இருக்கு? பிரஸ் எங்க இருக்கு, புது டவல் வேணும். புது வேஷ்டி எடுத்து தா“, என்றாள்.
error: Content is protected !!