Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 2 3

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஆதவன் ரங்கனை தன்னருகே அமர வைத்துக் கொண்டான். பின் அனைவரும் சேர்ந்து காலை உணவை அருந்தச் சென்றார்கள். நண்பர்கள் கூடியதால் உணவு நேரம் கலகலப்பாகவே சென்றது.

சாப்பிட்டு விட்டு கை கழுவச் சென்ற ஆதவன் கண்ணில் அப்போது தான் மண்டபத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கட்டவுட் பட்டது. அதில் சிறு குழந்தை என இருந்த சிந்துவைப் பார்த்தவன் அப்படியே அசைவற்று நின்று விட்டான்.



Advertisement

ஏனோ குமரியாக இருந்தாலும் அவள் முகத்தில் குழந்தை தனம் மிச்சம் இருக்க அவள் அருகில் இருந்த கோகுலோ கருப்புக் கரடி போல இருந்தான்.

Advertisement

“அடப்பாவி இவளுக்கு இவனா மாப்பிள்ளை? எவ்வளவு அழகா இருக்கா?”, என்று அவன் மனது அவளை ரசித்தது. சிறிய நெற்றி, அதில் சின்ன வட்ட வடிவ பொட்டு…. மீன் போன்ற விழிகள்… கூரான அதே நேரம் சின்னதாக இருந்த அவளது நாசி…. சிவந்த அதரங்கள்… இயல்பான உயரம் என அழகாக இருந்தாள் சிந்து.

Advertisement

“தேவதை மாதிரி இருக்கா”, என்று அவன் மனது அவளுக்கு சர்டிபிகேட் வழங்கியது. அவளைப் ஃபோட்டோவில் பார்க்கும் போதே ஏதோ ஒரு நதியினில் இறங்கியது போல அவன் மனம் அமைதியடைந்தது. ஒரு வித சிலிர்ப்பு அவன் தலை முதல் கால் வரை பரவியது. இந்த படபடப்பும் தடுமாற்றமும் அவனுக்கு புதியது. அவளிடம் இருந்து அவனால் பார்வையைத் திருப்பத் தான் முடியவில்லை. அவன் வெகு நேரம் வெளியவே பார்க்கவும் “என்ன ஆச்சுண்ணே?”, என்று கேட்டான் ரங்கன்.

Advertisement

“இந்த பொண்ணைப் பாரு டா சூப்பரா இருக்கா. ஆனா மாப்பிள்ளை தான்… “, என்று இழுத்தான்.

முதல் முறையாக அழகாக இருக்கிறாள் என்று ஆதவன் சொல்லியிருக்க அந்த பெண் யார் என்று வியப்பாக திரும்பி பார்த்தான் ரங்கன். ஆனால் அங்கே யாரும் இல்லை. கூடவே மாப்பிள்ளை என்று சொன்னதும் ஒரு வேளை திருமணம் ஆன பெண்ணையா அண்ணன் சொல்கிறார் என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.

“அங்க யார் அண்ணே இருக்கா? ஒருத்தருமே இல்லையே?”, என்று ரங்கன் குழப்பமாக கேட்க “அதோ போட்டோல இருக்காளே. அவ தான் டா. செம டா ரங்கா. எனக்கு அவளைப் பாத்ததுல இருந்து என்னவோ பண்ணுது”, என்று தன் மனதை அவனிடம் வெளிப்படுத்தி இருந்தான்.

அவன் கல்யாணப் பெண்ணையே சொன்னதும் அதிர்ந்து போனான் ரங்கன். அப்போதும் ஏதோ தெரியாமல் சொல்கிறான் என்று எண்ணி

“அண்ணே, அது தாண்ணே கல்யாணப் பொண்ணு”, என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றான்.

“தெரிஞ்சு தான் டா சொல்றேன். ஆனாலும் என்னால அவ மேல இருந்து கண்ணை எடுக்க முடியலை. அப்படி ஒரு அழகு. அவளுக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை டா. அவளைப் போய் எப்படி அவனுக்கு கொடுக்காங்க. ரொம்ப அழகு டா அவ. குட்டி பார்பி டால் மாதிரி இருக்கா”, என்று பிதற்றினான் ஆதவன்.

அவனைப் பார்த்து அதிர்ந்த ரங்கன் “வேண்டாம்ணே. யாராவது நீ பேசுறதைக் கேட்டா ரொம்ப தப்பா போயிரும். கல்யாணம் நிக்க கூட வாய்ப்பு இருக்கு”, என்று சொல்லி மேடை பக்கம் அழைத்து வந்தான். ஆதவனும் வேறு எதுவும் பேசாமல் அவன் அருகே அமர்ந்து விட்டான்.

அதன் பின் அவன் ரங்கனிடம் எதுவுமே பேச வில்லை. ஆனால் ஏதோ யோசனையாகவே இருந்தான். அவன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருந்தது. ரங்கனுக்கு தன்னுடைய அண்ணனின் மனநிலை தெளிவாக புரிந்தது. கூடவே “போயும் போயும் இந்த நேரத்துலயா அந்த பொண்ணை அண்ணனுக்கு பிடிக்கணும்? முன்னாடியே பிடிச்சிருந்தா நல்லா இருந்துருக்குமே?”, என்று சலித்துக் கொண்டான்.

நண்பர்களை வெகு நாட்கள் கழித்துக் சந்தித்தால் இது வரை ஆதவன் முகத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் அவனை விட்டுச் சென்றிருந்தது. அந்த அளவுக்கு எதையோ இழந்தது போன்ற தோற்றத்தில் இருந்தான். “இந்த பெண் நம்ம அண்ணனை இந்த அளவுக்கு பாதித்து விட்டாளா?”, என்று எண்ணினான் ரங்கன்.

அதே நேரம் சிந்துவோ அவளது உயிர்த் தோழி அஞ்சலி இட்லியை ஊட்ட அதை உண்டு கொண்டிருந்தாள். அவளுக்கு அலங்காரமும் முடிந்திருந்தது.

“மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க”, என்று ஐயர் சொன்னதும் பார்வதி மகனை அழைக்கச் சென்றாள். ஆனால் மணமகன் அறையில் யாருமே இல்லை. அவனுடைய நண்பர்கள் கூட அவனுடன் கம்பி நீட்டி இருந்தார்கள். அங்கே ஒரு கடிதம் மட்டுமே இருக்க நடுங்கும் கரங்களால் அதை எடுத்துப் படித்தாள் பார்வதி.

“அம்மா, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. என்னால அந்த பயந்தாங்கொள்ளியை கட்டிக்க முடியாது. சின்ன வயசுல இருந்து அவ கூட வளந்ததுல அவ மேல காதல் எல்லாம் எனக்கு வரலை மா. இத்தனை வருஷம் ஒண்ணா இருந்த என் கிட்டயே பயந்து பயந்து பேசுவா. அவளை எப்படி நான் வெளி இடத்துக்கு கூட்டிட்டு போவேன்? எத்தனையோ தடவை உன் கிட்ட இதைச் சொல்ல வந்தும் என்னால சொல்ல முடியலை. என்னை மன்னிச்சிரு மா. உன்னால என்னை புரிஞ்சிக்க முடியுதா மா? எல்லாமே அவளுக்கு சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து என்னால வாங்க முடியாது. சில உணர்வுகள் இயல்பா வரணும். உனக்கு புரியுதா? என்னை என் போக்குல விட்டுரு. நமக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்த மாமாவுக்காக நான் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா கடைசி நிமிசத்துல என்னால முடியலை. நான் கொஞ்ச நாள் கழிச்சு வந்து உன்னைப் பாக்குறேன்”, என்று எழுதி இருந்தான்.

“படுபாவி, இப்படி பண்ணிட்டியே டா. நான் இப்ப என் தம்பிக்கு என்ன சொல்லுவேன்?”, என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். சரியாக அந்நேரம் உள்ளே வந்தார் ஏகாம்பரம்.

பார்வதி அழுது கொண்டிருக்கவும் “அக்கா என்ன ஆச்சு?”, என்று பதட்டத்துடன் கேட்டார்.

“நாம மோசம் போய்ட்டோம் டா தம்பி”

“என்னக்கா சொல்ற?”

“கோகுல் இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு போய்ட்டான் டா”, என்று சொல்ல அவள் கையில் இருந்த கடிதத்தை பிடுங்கிப் படித்தார் ஏகாம்பரம். அதைப் படித்து விட்டு துடித்துப் போனார்.

தன்னுடைய பெண்ணை வேண்டாம் என்று அவன் மறுக்க சொல்லியிருந்த காரணத்தை படித்தவருக்கு ஒரு ஆணாக  தெளிவாக புரிந்தது. கடவுளே என்று அதிர்ந்து போனார். கூடவே இப்போது மனைவியும் மகனும் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்தது. அதை விட சிந்துவின் நிலை. மகளை எண்ணும் போதே அவருக்கு மூச்சடைத்த உணர்வு தான்.

கோகுலை மணக்க அவளை சம்மதிக்க வைப்பதற்கே அவர் அவளுக்கு இத்தனை மாதம் கவுன்சிலிங்க் கொடுக்க வேண்டியது இருந்தது. அப்படி இருக்க இந்த திருமணம் நின்றால் என்னவாகும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. சிந்து நிச்சயம் சந்தோஷம் தான் படுவாள் என்றாலும் அமுதவள்ளியும் அசோக்கும் தன்னை ஒரு வழியாக்கி விடுவார்கள் என்று புரிந்தது.

உள்ளே சென்ற மதினியாரும் கணவரும் இன்னும் வராததைக் கண்டு அங்கு போன அமுதவள்ளிக்கு நொடியில் ஏதோ தவறு நடந்து விட்டது புரிந்தது. அமுதவள்ளி என்ன நடந்தது என்று கணவனின் சட்டையை பிடித்து விசாரிக்க அங்கு அசோக்கும் வந்து விட்டான்.

“என்னப்பா ஆச்சு?”, என்று அவன் கேட்க அந்த கடித்ததை அவனிடம் கொடுத்தார் ஏகாம்பரம். அமுதவள்ளியும் அசோக்கும் சேர்ந்து அந்த கடிதத்தை படித்தார்கள். “அத்தை என்ன இது? கடைசில உங்க புத்தியைக் காட்டிட்டீங்கல்ல? எங்க அந்த அயோக்கியன்? அவனை நான் சும்மாவே விட மாட்டேன்”, என்று கத்தினான் அசோக்.

“டேய் அசோக், ஓடிப் போனவனைப் பத்தி இனி என்ன டா பேச்சு? நம்ம சிந்துவோட வாழ்க்கையைப் பத்தி யோசி. நான் முன்னாடியே சொன்னேன், இந்த குடும்பம் சரி இல்லை. இந்த சம்பந்தம் வேண்டாம்னு”, என்று அழுதாள் அமுதவள்ளி. அதில் பார்வதி முகம் சுருங்க “வள்ளி அவன் இப்படி பண்ணினா என் அக்கா என்ன செய்யும்?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.

“உன் அக்கா பாசத்துல இடி விழ. என் பொண்ணுக்கு என்னய்யா வழி? ஏற்கனவே அவளை இப்படி வளத்து வச்சது நீ தான். கடைசில அவளை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா. குழந்தையை குழந்தையா வளக்காம பொம்மையா வளத்து வச்சு அவளுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு ஓடிட்டான் யா உன் நொக்கா மகன். இப்ப என் மகளுக்கு என்ன நியாயம் செய்ய போற?”, என்று கோபத்துடன் கேட்டாள் வள்ளி.

அவளுக்கு கோபத்தில் மரியாதை எல்லாம் பறந்திருந்தது. ஏற்கனவே அமுதவள்ளிக்கு பார்வதியைக் கண்டால் பிடிக்கவே செய்யாது. கணவனை ஏமாற்றி பார்வதி பணம் பிடுங்குவதை அறிந்து வெறுப்பில் இருந்தாள். ஆனால் மகளுக்காக தான் அவள் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க அரை மனதாக சம்மதித்திருந்தாள்.

அமுதவள்ளி அப்படிக் கேட்கவும் ஏகாம்பரம் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணற “கொஞ்ச நாள் கழிச்சு என் சின்ன மகனை நம்ம சிந்துவுக்கு கட்டி வைக்கலாம்”, என்று மெதுவாக கூறினாள் பார்வதி.

“எம்மா தாயே, தயவு செஞ்சு வாயை மூடுங்க. அதுவும் நீங்க இங்க இருந்து கிளம்பினா ரொம்ப நல்லதா போகும். உன் பொண்ணை என் பொண்ணு மாதிரி பாத்துக்குறேன்டா தம்பின்னு சொல்லி சொல்லி என் புருஷனை ஏமாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குனீங்க? அவன் சொல்லாம கொள்ளாம ஓடிட்டான். இப்ப அடுத்த ஆளை ரெடி பண்ணுறீங்களா? இவர் கிட்ட நான் அப்பவே சொன்னேன்? என்னையே நல்ல வாழ விடாதவங்க எப்படி என் மகளை நல்லா வச்சிப்பாங்கன்னு. கேட்டாரா இவர்?”, என்று அமுதவள்ளி கேட்க அடுத்த நொடி அங்கிருந்து சென்றிருந்தாள் பார்வதி.

“கடவுளே என் பொண்ணு வாழ்க்கை போச்சே. அவளை வாழவே லாய்க்கு இல்லைன்னு ஒருத்தன் சொல்லிட்டுப் போய்ட்டானே?”, என்று அமுதவள்ளி கதற அசோக் அவளைத் தாங்கிக் கொண்டான்.

“டேய் அசோக், நீ ஏதாவது பண்ணு டா. உன் தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்து டா”

“இப்ப என்ன மா பண்ண முடியும்? கொஞ்ச நாள் ஆகட்டும். வேற நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்”

“ஐயோ என் பரிதவிப்பு உனக்கும் புரியலையா டா? சிந்துவுக்கு இப்ப கல்யாணம் பண்ணலைன்னா அவ இனி கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டா. நீங்க என்ன நினைச்சாலும் பரவால்ல. என் பொண்ணு கல்யாணம் இன்னைக்கே நடக்கணும். நம்ம சொந்தத்துல ஏதாவது மாப்பிள்ளை இருக்காங்களான்னு பாரு”

“வள்ளி, அப்படி தள்ளி விடுறதுக்கு நம்ம பொண்ணு ஒண்ணும் எந்த விசயத்துலயும் குறைஞ்சி போய்டலை. கொஞ்ச நாள் பொறு. நம்ம கேசவனுக்கு கட்டி வைக்கலாம். அவசரமா எதுவும் செய்யாத”, என்றார் ஏகாம்பரம்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!