Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 3 2

கண்டிப்பாக சிந்துவை பிடிக்க வில்லை என்றால் உடனடியாக மறுத்து விட்டுச் சென்றிருப்பான். அது சிந்துவாக இருக்கப் போய் தான் முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பினான். அவளும் வேண்டும் போல இருந்தது. அதே நேரம் வீட்டைப் பற்றி எண்ணியும் பயமாக இருந்தது.

“நீ ரொம்ப நல்லவன்னு ஒரு தகுதி போதும் டா. என் தங்கச்சிக்கு உன்னை விட பொருத்தமா யார் கிடைப்பா? அவளை ஏத்துக்கோ டா. உங்க வீட்ல நான் பேசுறேன். எங்க அம்மா அப்பா பேசுவாங்க”, என்று அசோக் சொல்ல “நான் பேச மாட்டேன்”, என்று குறுக்கே புகுந்து சொன்னார் ஏகாம்பரம். அவர் பேசியதை யாருமே சட்டை செய்ய வில்லை.



Advertisement

“ஆமா தம்பி, உங்க அம்மா அப்பா கிட்ட கால்ல விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். எனக்கு என் மக கல்யாணம் இப்பவே நடக்கணும். அவ ஒரு குழந்தை மாதிரி தம்பி. கல்யாணம் நின்னு போச்சுன்னா அவளால இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாது”, என்று கெஞ்சினாள் அமுதவள்ளி.

Advertisement

“சரி நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்”, என்றான் ஆதவன். அவனால் எப்படி அவனுடைய மனம் கவர்ந்தவளை விட்டுக் கொடுக்க முடியும்? அதனால் சரி என்று சொல்லி விட்டான்.

Advertisement

ஆனாலும் அவனுடைய தந்தையை எண்ணி அவனுக்குள் நடுக்கம் இருந்தது. சும்மாவே அவனை ஒரு காசுக்கு மதிக்க மாட்டார். இதில் ஒரு பொண்ணுடன் சென்று நின்றால் என்ன ஆகும் என்று எண்ணும் போதே பயத்தில் அவன் உடல் சிலிர்த்தது.

Advertisement

ஆனால் அவனுக்கு அவள் வேண்டும். சிந்து மீது ஏற்பட்ட ஈர்ப்பு இன்னொரு பெண் மீது அவனுக்கு வருமா என்று கூட தெரியாது. அதனால் அவள் தனக்கு வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான். தந்தை என்ன சொன்னாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டவன் அதை அவர்களிடம் சொல்லியும் விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அசோக் மற்றும் அமுதவள்ளி முகம் மலர்ந்தது என்றால் ஏகாம்பரம் முகம் இருண்டு போனது. கோபத்தை அடக்க முடியாமல் “யாரு டா நீ? உனக்கு என் பொண்ணு கேக்குதா? கண்டவனுக்கு எல்லாம் கட்டிக் கொடுக்க என்னால முடியாது. இவங்க ரெண்டு பேரும் தான் அறிவு இல்லாம பேசுறாங்கன்னா நீயும் சரின்னு சொல்ற? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போ. என் மகளைக் கட்டிக்கிட்டு மொத்த சொத்தையும் அமுக்க பாக்குறியா? சல்லிப் பைசா தர மாட்டேன்”, என்று ஏகாம்பரம் சொல்ல ஆதவனின் தன்மானம் சீண்டப் பட்டது. இது வரை அவர் பக்கம் உள்ள நியாயம் புரிந்ததால் அமைதியாக இருந்தான். ஆனால் அவர் பேச்சு தன்னை அவமானப் படுத்துவது போல இருக்கவும் அவரை முறைத்துப் பார்த்தான்.

அவனுக்கும் கோபம் வந்தது. அதனால் அசோக்கைப் பார்த்தவன் “அதான் உங்க அப்பா சொல்லிட்டாரே? இன்னும் பேச ஒண்ணும் இல்லை”, என்றான்.

நண்பனின் கோபம் புரிந்து “அப்பா, நீங்க இப்ப வாயை மூடலை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. சிந்துவுக்கு நானும் அண்ணன் தான். என் தங்கச்சிக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். முன்னாடி நீங்க பாத்துருக்க மாப்பிள்ளை வேண்டாம்னு நான் சொன்னப்ப நீங்க கேட்டீங்களா? இல்லை தானே? அதனால இப்ப நீங்க கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருங்க”, என்று தந்தையிடம் கத்தி விட்டான். அவர் கோபத்துடன் முறைக்க ஆதவன் முகத்தில் அவரைப் பார்த்து ஒரு ஏளனம் வந்தது.

தன்னை அவமானப் படுத்தியவருக்கு பதிலடி கொடுத்த சந்தோஷம் அவனுக்கு. “டேய் ஆதவா, அவர் பேச்சை எல்லாம் பெருசா எடுக்காத டா”, என்றான் அசோக்.

“சரி, நான் சம்மதிக்கிறேன்”, என்று ஆதவன் சொன்னதும் “ரொம்ப சந்தோஷம். நீ தான் டா என் மாப்பிள்ளை. வா போகலாம்”, என்று சொல்லி அவனை அறைக்குள் இழுத்து சென்று கண்ணாடி முன்பு அமர வைத்து அவனுக்கு பவுடர் பூச ஆரம்பித்த்தான்.

அவன் செய்கையைக் கண்டு அப்போது கூட ஆதவனுக்கு சிரிப்பு வந்தது. இந்த ரணகளத்தில் மேக்கப் எல்லாம் தேவையா என்று தோன்றியது அவனுக்கு. அதனால் “இது இப்ப ரொம்ப அவசியமா டா?”, என்று கேட்டான்.

“கண்டிப்பா அவசியம் தான். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு”, என்று சொன்ன அசோக் “அம்மா, நீங்க போய் சிந்துவைப் பாருங்க. நான் மாப்பிள்ளையை அழைச்சிட்டு வரேன். போகும் போது இந்த ஆளையும் இழுத்துட்டு போங்க”, என்று சொன்னதும் ஏகாம்பரம் கை பற்றி வெளியே இழுத்து வந்தாள் அமுதவள்ளி.

“ஏய் என்னை விடு டி, நீ செய்றது எல்லாம் எனக்கு பிடிக்கலை வள்ளி”, என்றார் ஏகாம்பரம்.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா நாம நாளைக்கு கோர்ட்க்கு போய் விவாகரத்துக்கு அப்ளை பண்ணுவோம். எனக்கும் இந்த கூறுகெட்ட மனுஷன் கூட வாழ்ந்து போர் அடிச்சிட்டு”, என்று அவள் சர்வ சாதாரணமாக சொல்ல ஏகாம்பரம் அதிர்ந்து விட்டார். இந்த வயதில் விவாகரத்தா என்று அவர் திகைக்க “மாப்பிள்ளை வரலையா?”, என்று கேட்டார் ஐயர்.

“இதோ இப்ப வந்துருவார் சாமி. கிளம்பிட்டு இருக்கார். நான் பொண்ணை வரச் சொல்லவா?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

“வரச் சொல்லுங்க மா. பாப்பா சடங்கை முதல்ல முடிச்சிருவோம். நாழி ஆகுதுள்ள?”, என்று சொல்ல அவசரமாக மணமகள் அறைக்குச் சென்றாள். மகளை எப்படி சம்மதிக்க வைக்க போகிறோம் என்று அவளுக்கு நாக்கு தள்ளியது.

அங்கே மகள் மணக் கோலத்தில் தயாராக இருந்தாலும் சிந்து கண்களில் பயம் இருப்பதைக் கண்டு அந்த தாய் உள்ளம் துடித்தது. “பாப்பா”, என்று சொல்லி அவள் அருகில் சென்றாள்.

“அம்மா”

“பாப்பா உனக்கு என்னை விட உங்க அப்பாவைத் தானே பிடிக்கும்?”

“இதென்ன இந்த நேரத்துல இப்படி ஒரு கேள்வி?”, என்று அஞ்சலி மற்றும் சிந்து இருவரும் திகைக்க “எனக்கு உன்னையும் பிடிக்கும் மா”, என்றாள் சிந்து.

“அப்படின்னா அம்மா சொல்றதைக் கேப்ப தானே?”

“ம்ம்”

“அந்த சண்டாளன் கடைசி நேரத்துல எங்கயோ ஓடிப் போய்ட்டான் டி”

“அம்மா என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள் அஞ்சலி.

“ஆமா அஞ்சலி, அந்த கோகுல் ஓடிப் போய்ட்டான். அவனுக்கு வேற பொண்ணு கூட காதல் இருந்துருக்கும் போல?”, என்று ஒரு பொய்யை எடுத்து விட்ட அமுதவள்ளி மகள் புறம் திரும்பி “இப்ப அம்மாவும் அண்ணனும் சேந்து உனக்கு வேற மாப்பிள்ளை பாத்துருக்கோம். மாப்பிள்ளை உன் அண்ணனுக்கு ஃபிரண்ட் தான்”, என்று சொன்னாள்.

அம்மா சொன்னதைக் கேட்டு அஞ்சலிக்கே நடுக்கம் வந்தது என்றால் சிந்துவின் நிலைமையை சொல்லவும் வேண்டுமா? திருமணத்தையே ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவளிடம் மாப்பிள்ளையே வேறு என்று சொன்னால்? தோழியின் நிலை கண்டு அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அஞ்சலி.

சிந்து கண்கள் கலங்க துவங்க “இங்க பாரு பாப்பா. இது வரைக்கும் அம்மா உன்னை எதுவும் சொன்னது இல்லை. இதைச் செய் அதை செய்ன்னும் கட்டாயப் படுத்தினது இல்லை. உன் அப்பா பேச்சு கேட்டு தான் வளந்த. முதல் தடவையா இந்த அம்மா உன் கிட்ட கேக்குறேன். இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கணும். அப்படி இல்லைன்னா நான் கண்டிப்பா இன்னைக்கே என் வாழ்க்கையை முடிச்சிக்குவேன். இது உன் மேல சத்தியம். பெத்த மகளுக்கு நல்லது செய்ய முடியாத நான் இருந்து என்ன பண்ண போறேன்?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

மகளை பிளாக்மெயில் செய்வது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவளுக்கு வேற வழி இல்லையே. “அம்மா என்ன வார்த்தை சொல்ற? நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நான் இந்த கல்யாணம் பண்ணிக்கிறேன்”, என்று சொல்லி அன்னையை தேற்றி இருந்தாள் சிந்து. அவள் அப்படிச் சொன்னது அமுதவள்ளி மற்றும் அஞ்சலிக்கு திகைப்பு தான்.

“இத்தனை நாள் மகளுக்கு அவளுடைய அப்பா தான் முக்கியம். அம்மா முக்கியம் இல்லை”, என்று ஒரு ஆதங்கம் அமுதவள்ளி மனதில் இருந்தது. ஆனால் இன்று மகள் தன்னுடைய உயிருக்காக மிகப் பெரிய முடிவை சர்வ சாதாரணமாக எடுத்ததும் அவள் ஆதங்கம் அவளை விட்டுச் சென்றிருந்தது.

“ரொம்ப சந்தோஷம் டா. இப்ப தான் அம்மாவுக்கு நிம்மதியா இருக்கு. வா மா. ஐயர் கூப்பிட்டார். அஞ்சலி கூட்டிட்டு வா மா”, என்று சொல்லி அமுதவள்ளி முன்னே நடக்க தோழியின் கையை ஆறுதலாக பற்றி இருந்தாள் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!