Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 6 2

ஒரு பெரிய கேட் முன்பு வண்டியை நிறுத்திய ரங்கன் இரண்டு முறை ஹாரன் அடித்தான். அடுத்த நொடி அந்த கேட் திறந்து கொண்டது.

உள்ளே சென்று காரை நிறுத்தியதும் பயத்துடன் ஆதவன் அருகில் சென்று ஒட்டிக் கொண்டாள் சிந்து. அவளையும் அவளுடைய பயத்தையும் பார்த்தவனுக்கு அந்த பதட்டத்திலும் சிரிப்பு வந்தது.



Advertisement

“இறங்கு போகலாம்”, என்றான் ஆதவன்…

Advertisement

“என்னது இங்கயா? இதுவா உங்க வீடு? இங்க எல்லாம் நான் வர மாட்டேன்”, என்று அவள் சொன்னதும் அவன் முகத்தில் கடுமை வந்தது.

Advertisement

“ஏன்?”, என்று கோபமாக கேட்டான்.

Advertisement

“வாசலே எவ்வளவு பெருசா இருக்கு. எங்க வீடு எல்லாம் இவ்வளவு பெருசா இருக்காது. எனக்கு பயமா இருக்கு. உங்களுக்கு சின்ன வீடு எல்லாம் இல்லையா? அங்க போவோமா?”, என்று கேட்க உண்மையிலே அவள் பேச்சைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான் ஆதவன்.

“ஏண்டி உன் கழுத்துல உன் ஊர் சனம், உன் ஜாதி சனம் முன்னாடி தாலியை கட்டி பொண்டாட்டியா என் ஊருக்கு, என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா சின்ன வீடு வேணும்னு சொல்ற? எனக்கு பெரிய வீடு மட்டும் தான். அது நீ தான். இது எங்க பூர்வீக வீடு டி. இங்க தான் அம்மா அப்பா இருக்காங்க”, என்று சொல்ல சின்ன வீடு பெரிய வீடு பற்றி அஞ்சலி சொல்லியிருக்கிறாள் என்பதால் அவனுடைய கேலியில் அவள் முகம் சிவந்து விட்டது. ஆனாலும் பயந்து போய் தான் இருந்தாள்.

அவள் அமைதியாக இருக்கவும் “அண்ணே, நான் அம்மாவை எழுப்புறேன். நீ தங்கச்சியைக் கூட்டிட்டு பின்னாடி மெதுவா வா”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் ரங்கன்.

“ரங்கன் ஓடிப் போய் விசயத்தைச் சொல்லிருவான். எல்லாரும் வெளிய வரதுக்குள்ள நாம உள்ள போயிரணும் வா”, என்றான் ஆதவன்.

“எனக்கு பயமா …”, என்று சிந்து சொல்ல வர “பயத்தை தவிர உனக்கு என்ன தான் தெரியும்? ஒழுங்கா வரப் போறியா? இல்லை உன்னைத் தூக்கிட்டு போகவா?”, என்று கேட்டான்.

“நான் அம்பந்தஞ்சு கிலோ தெரியுமா?”, என்று அவள் சவாலாக கேட்க “அதுக்கு என்ன?”, என்று அசால்ட்டாக கேட்டு வைத்தான் ஆதவன்.

“என்னைத் தூக்குறது கஷ்டம்?”

“கடவுளே, நீ சொன்னா கேக்க மாட்ட”, என்று சொல்லிக் கொண்டே அவள் புறம் குனிந்தவன் அவளுடைய இடையில் கை வைத்து தூக்கப் போக வெற்றிடையில் பதிந்த அவனது கரத்தின் குளுமையில் விதிர்த்து போன சிந்து “இல்லை இல்லை நானே வரேன். என்னை விடுங்க”, என்றாள்.

அவளது அருகாமை அவனுக்குமே என்னவோ போல் இருக்க படக்கென்று அவளிடம் இருந்து விலகியவன் “அந்த பயம் இருக்கட்டும். வா”, என்று சொல்லி விட்டு ஒரு புறம் இறங்கி அவள் புறம் வந்து கார் கதவை திறந்து வைத்தான்.

அவனுடைய அந்த சாதாரண செய்கை அவளுக்கு அவளுடைய தகப்பனைத் தான் நினைவு படுத்தியது. அவளது அப்பாவும் அப்படி தான் அவளுக்காக காரைத் திறந்து விடுவார்.

உள்ளே ஓடிச் சென்ற ரங்கன் “அம்மா அம்மா”, என்று அழைத்தான்.

மகனுக்காக தூங்காமல் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மங்கை “அமைதியா பேசு டா. அம்மா தூங்குது”, என்றாள்.

அப்போது தான் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கநாயகி அவன் கண்ணில் விழுந்தாள். ரங்கநாயகி வேறு யாரும் இல்லை. மங்கையின் அன்னை தான். அம்மாவும் மகளும் பேசிய படியே டி‌வி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாட்டி மட்டும் தூங்கி விட்டாள்.

“இந்த கிழவி எப்ப வந்துச்சு?”, என்று அதிர்ந்த ரங்கன் மங்கையை தயக்கமாக பார்த்தான். “என்ன டா சொல்லு? அவனை எங்க?”, என்று மங்கை கேட்க “என் பேரன் வந்துட்டானா?”, என்று கேட்ட படி ரங்கநாயகியும் எழுந்து கொண்டார்.

“போச்சு, கிழவியும் எந்திருச்சிருச்சே?”, என்று எண்ணிய ரங்கன் “பாட்டி…. அம்மா.. அது வந்து”, என்று உளறினான். .

“என்ன டா உளறிட்டு இருக்க?”, என்று கேட்டார் ரங்கநாயகி.

“அதானே, ஆதவனை எங்க டா காணும்? ரெண்டு பேரும் ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டீங்களா? அதான் உன்னை அனுப்பி சமாளிக்க சொன்னானா? எங்க அந்த திருடன்?”, என்று கேட்டாள் மங்கை.

“அது வந்துங்கம்மா”

“இவன் முழியே சரி இல்லை மங்கை. என்னமோ பண்ணிருக்கான்”, என்றார் ரங்கநாயகி.

“ஐயோ, நான் நிஜமாவே ஒண்ணும் செய்யலை”, என்று அவன் அலற “அப்புறம் ஏன் டா இப்படி முழிக்கிற? ரெண்டு பேரும் கேக்குறாங்கல்ல? என்னன்னு சொல்லேன் டா”, என்ற படி அங்கே ரத்தினம் வர ரங்கனுக்கு அவரைக் கண்டதும் திக்கென்று இருந்தது.

“இவருமா?”, என்று அதிர்ந்து போனவன் “கல்யாணத்துக்கு போன இடத்துல…”, என்று தடுமாறினான்.

“கல்யாணத்துக்கு போன இடத்துல என்ன டா? ஆதவனுக்கு என்ன ஆச்சு டா?”, என்று பதறினார் ரத்தினம்.

“அண்ணனுக்கு ஒண்ணும் இல்லைங்க ஐயா. ஆனா அந்த கல்யாணம் நின்னு…”

“என்னது கல்யாணம் நின்னுருச்சா…”

“இல்லை, இல்லை. கல்யாணம் நடந்துருச்சு”

“அம்மா நீங்க இவனை குடையுறதுல தப்பே இல்லை. எப்படி குழப்பிட்டு இருக்கான் பாருங்க. என்னன்னு முழுசா சொல்லு டா, என்று சலித்துக் கொண்டாள் மங்கை.

“அம்மா, அந்த கல்யாணம் நின்னுருச்சு தான். ஆனா அந்த பொண்ணை நம்ம அண்ணனே கல்யாணம் பண்ணிக்கிருச்சு”, என்று உண்மையை ஒரு வழியாக சொல்லி விட்டான்.

“என்ன டா சொல்ற?”, என்று ரத்தினம் அதிர்ச்சியாக கேட்க “ஆமாங்க ஐயா. அண்ணனுக்கு கல்யாணம் ஆகிருச்சு. கார்ல தான் ரெண்டு பேரும் இருக்காங்க”, என்றான் ரங்கன்.

“எடு அந்த அருவாளை. இவன் கெட்ட கேட்டுக்கு கல்யாணம் கேக்குதோ? இதுவே ஒரு தண்டம்”, என்று அவர் கத்த “என்னங்க கொஞ்சம் அமைதியா இருங்க. ஆதவனை பத்தி நமக்கு தெரியாதா? அவனோட கையை மீறி நடந்துருக்கும். தாலின்னு கட்டின பிறகு ஒண்ணும் செய்ய முடியாது. கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம என்ன யோசிச்சாலும் அந்த பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமக. அதை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அவசரப் பட்டு வார்த்தையை சிதற விட்டுறாதீங்க. அப்புறம் எல்லாருக்குமே கஷ்டம். இத்தனை நாள் மாதிரி அவனை நீங்க பேசுனீங்கன்னா நம்ம ஊர் உலகமே அவனைத் தப்பா பேசும். நாம ஒத்துக்கிட்டா தான் இவ்வளவு பெரிய விஷயம் ஒண்ணும் இல்லாம போகும். என் மகனை இது வரை எவ்வளவோ பேசிருக்கீங்க? அப்ப எல்லாம் அப்பன் மகன் பிரச்சனைன்னு நான் இடைல வந்தது இல்லை. ஆனா இப்ப என் மகனை நம்பி இன்னொரு பொண்ணு வந்திருக்கா. இப்ப நீங்க அவனை ஏதாவது சொன்னா என்னால தாங்க முடியாது. என் மகன் தன்மானத்தை சீண்டி விட்டுறாதீங்க”, என்று மங்கை கெஞ்ச கொஞ்சம் வேகம் குறைந்தார் ரத்தினம்.

“ஆமா மாப்பிள்ளை, நம்ம பிள்ளையை நாம விட்டுக் கொடுக்க கூடாது. நாளைக்கு இந்த விஷயம் எப்படி பரவுதுங்குறதுல தான் நம்ம குடும்ப மானமே இருக்கு. நாம அவனை ஏத்துக்கலைன்னா இந்த ஊரு என்ன சொல்லும்? ரத்தினம் மகன் சென்னைல எவளையோ இழுத்துட்டு வந்துட்டான்னு பேசும். என் பேரனுக்கு அந்த பேர் வரக் கூடாது. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க”, என்றார் ரங்கநாயகி.

“ஆமாங்க ஐயா. அந்த பொண்ணு வீட்ல ரொம்ப கெஞ்சிக் கேட்டுக்கிட்டதுனால தான் அண்ணே இதை செஞ்சுச்சு. ஆனா இப்ப வரைக்கும் நீங்க எல்லாம் என்ன சொல்லுவீங்கன்னு பயந்துட்டு தான் இருக்கு”, என்று சொன்னான் ரங்கன்.

“எனக்காக அவனை எதுவும் சொல்லாதீங்க. அவங்களை ஏத்துக்கலாம், சரின்னு சொல்லுங்க”, என்று மங்கை சொல்ல “சரி என்னமோ பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார் ரத்தினம்.

“ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா மங்கை”, என்றார் ரங்கநாயகி.

“இந்நேரம் அதெல்லாம் வேண்டாம் மா”

“அதுவும் சரி தான். அப்படின்னா அவங்களை பழைய வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். நாளைக்கு முறைப்படி அந்த பொண்ணு இங்க வரட்டும்”, என்று ரங்கநாயகி சொல்ல “சரிம்மா, என்னங்க வாங்க போய் பாப்போம்”, என்றாள் மங்கை.

“நீ பழைய வீட்டுக்கு அவங்களை கூட்டிட்டு போ மங்கை. நான் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன். எனக்கு இப்ப கொஞ்சம் நிதானம் தேவை”, என்று ரத்தினம் சொல்ல “அம்மா நீ போ மா. நான் இதோ வரேன்”, என்று சொன்ன மங்கை கணவர் அருகில் அமர்ந்து அவரிடம் ஆறுதலாக பேச ஆரம்பித்தாள். ரங்கனும் ரங்கநாயகியும் மட்டும் வெளியே வந்தார்கள்.

ஒரு வழியாக காரில் இருந்து இறங்கிய சிந்து பயந்து போய் அங்கிருந்து ஓடுவது போல நிற்க “எதுக்கு எடுத்தாலும் பயந்து சாகாத டி. உன்னைப் பாத்தா எதுக்குமே பயப்படாத நான் கூட பயந்துருவேன் போல? வா உள்ள போகலாம்”, என்று அழைத்தான் ஆதவன்.

அவனுடன் நடக்க அவள் கால்கள் ஒத்துழைக்க மறுத்தது. பயத்தில் நாக்கு வரண்டது. நடுங்கிப் போய் நின்றவளின் கரத்தைப் பற்றியவன் “உன்னை வச்சு நான் எப்படி தான் சமாளிக்கப் போறேனோ? மயங்கி கியங்கி வச்சிறாத. நான் இருக்கேன் வா”, என்று சொல்லி கை பிடித்த படியே அவளை அழைத்துச் சென்றான்.

அவன் கரத்தில் தன்னுடைய கரம் அடங்கி இருக்க அது குறுகுறுப்பைத் தந்தாலும் பயம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது. அவன் கை பிடித்த படியே வாசலுக்கு சென்றாள். இருவரும் முதல் படியில் ஏறப் போக “அங்கேயே நில்லு டா”, என்ற சத்தம் கேட்டு அப்படியே நின்றான் ஆதவன். அவளோ வேகமாக ஓடிச் சென்று அவனுக்கு பின் மறைந்து கொண்டாள். அவன் பின்னே உடலை மறைத்த படி நின்று பயத்துடன் எட்டிப் பார்த்தாள்.

அங்கே முறைத்த படி கண்ணை உருட்டிக் கொண்டு நின்ற ரங்கநாயகியை கண்டு அவளுக்கு இதயம் வேகமாக துடித்தது. அவன் முதுகில் சாய்ந்து அவள் நின்றதால் அவள் இதயத் துடிப்பை அவனால் உணர முடிந்தது.

“கடவுளே, இந்த கிழவி எப்ப வந்துச்சு?”, என்ற எண்ணம் ஆதவனுக்கு வந்தாலும் பாட்டியைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. ஏனென்றால் ரங்கநாயகி மேல் ரத்தினத்துக்கு அதிக மரியாதை உண்டு. ரங்கநாயகி என்ன சொன்னாலும் ரத்தினம் கேட்டுக் கொள்வார்.

ரங்கநாயகியும் ஆதவனும் ஏட்டிக்கு போட்டி பேசிக் கொண்டாலும் இருவருக்கும் இடையே பாசம் அதிகம் உண்டு. அதனால் பாட்டி தன்னைக் காப்பாற்றும் என்று நம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!