Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே7

 

 

 



Advertisement

வெற்றி உள்ளே சென்று சுவிட்சை போட்டான்.

பல்பு இரண்டு முறை மினுங்கி அணைந்தது..

 

Advertisement

இங்கு அறைக்குள் வந்தவளோ! “என்ன மாமா லைட் எரியல” என்று சற்று இருளாக இருந்த அறையை கண்டு கேட்க,

Advertisement

 

“தெரியல வேலு, நானும் அதை தான் பாக்குறேன்னு” சொல்லி , அந்த குண்டு பல்பை  கழட்டி பார்த்தான்..

 

Advertisement

அந்த குண்டு பல்பு தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.. “சுத்தம்” என்றதும்..

 

“என்னாச்சு மாமா ”

 

“பியூஸ் போயிடிச்சு வேலு, சரி இருக்குற வெளிச்சத்திலே வெதை நெல்லு எடுத்துடலாம்னு” சொன்னவன், தானிய குதிர்  அருகே வந்து நின்றான்..‌

 

வாசலருகே நின்ற வேல்விழி தயக்கத்துடன் கேட்டாள்.

“மாமா… சிம்னி வெளக்கு கொண்டு வரவா?”

அவன் திரும்பி அவளை பார்த்தான்.

 

அந்த இருளிலும் அவள் முகத்தில் இருந்த பயம் தெளிவாக தெரிந்தது.

சிரிப்பை அடக்கிக்கொண்டு,

 

“ஏன் வேலு… பயமா?”

என்று கேட்டான்.

 

‘ஆமாம்’ என்று உடனே தலையாட்டினாள்.

 

அதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

“சரி… போய் கொண்டு வா.”

என்றதும் குடுகுடுவென வெளியே ஓடினாள்

 

அவள் ஓடும் சத்தமே அவனுக்கு ஒரு வித சந்தோஷத்தை கொடுத்தது.

தன் உயரத்தில் முழுளவுக்கு இருந்த , தானிய குதிர்ல மூடியிருந்த மூடியை கழட்டி கீழே வைத்தான்..

 

 

சிறிது நேரத்தில் சிம்னி விளக்குடன் மீண்டும் உள்ளே வந்தாள்.

 

திரும்பி பார்த்தவனுக்கு  இதயத்தின் துடிப்பு எகிறி போனது.. ‘அந்த சிம்னி  விளக்கு வெளிச்சத்தில் சிறு தேவதையின் தரிசனம் தான்..

அந்த மஞ்சள் வெளிச்சம் அவள் முகத்தில் விழ, ஒரு கணம் வெற்றியின் பார்வை அப்படியே நின்றுபோனது.

அழுததால் சிவந்த கண்கள்…

முகத்தில் இன்னும் மாறாத குழந்தைத்தனம்…

கையில் விளக்கை கவனமாக பிடித்திருந்த விதம்…

அந்த நொடியில், அவள் அவனுக்கு ஊரிலுள்ள எல்லா அழகையும் விட இவள் அதிக அழகாக  தோன்றினாள்…

 

அவன் அவளையே  வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

 

“மாமா” என்று அருகே வந்த வேலு கத்தவும்..

 

மாயவலை  அறுந்தது போல். திரும்பி பார்த்தான். ‘அவன் மனசாட்சியே! அவனை ‘தூ’ என்று துப்பி சென்றது’..

 

‘மீண்டும் மாமா’ என்ற  குரலில்…

 

‘இவ ஒருத்தி மாமா, நோமான்னு’  மனதிலே தன்னவளை செல்லமாய் திட்டிக்கொண்டவன்.. ” என்ன வேலு” என்றான் தன்னை திடபடுத்தியவனாக..

 

“வெளக்க எங்க வைக்க?”

 

“இங்க கொடு.”

என்று வாங்கியவன்,

 

அந்த அறைக்குள் பாதி தடுத்து கட்டியிருந்து  சுவரின் மீது  வைத்தான்.

பிறகு தானியக் குதிரின் அருகே சென்று நின்றான்.

 

“வேலு… இங்க வா.” என்று நாற்காலியில்   ஏறி நின்று கூப்பிட ,

 

அவள் அருகே வந்ததும், இடையில் கை கொடுத்து எளிதாக தூக்கி குதிருக்குள் இறக்கிவிட்டான்.

திடீரென்று உயரம் மாறிய உணர்வில் அவள் சிரித்தாள்.

 

“ஹை மாமா… ஜாலியா இருக்கு இங்க இருந்து பாக்க!”

அவள் கண்களில் மீண்டும் குழந்தைத்தனம் திரும்பியதை பார்த்தவனுக்கு மனசு லேசானது.

 

“சரி வாலு… ஜாலி பார்த்தது போதும். மரக்கால்ல வெதை நெல்ல அள்ளிக்கொடு.”

 

“சரி மாமா!”

என்று உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.அவள் மரக்காலில் அள்ளி கொடுக்க, வெற்றி கீழே இருந்த கோணி பையில் அதை கொட்டிக்கொண்டிருந்தான்.

ஒரு முறை…

இரண்டு முறை…

அப்படியே தொடர்ந்தது.

சிம்னி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், நெல்லின் மணமும் மண்ணின் வாசனையும் கலந்திருந்தது.

“மாமா… இதுல விழுந்தா மூச்சே அடைச்சிடும்ல?”

என்று உள்ளே இருந்தபடியே கேட்டாள் வேல்விழி.

 

“அதான் சொல்றேன்… உள்ள போகாம ஒழுங்கா நில்.”

 

“நானா போனேன்? நீ தானே தூக்கி  உள்ள இறக்கின!”

என்று உடனே பதில் கொடுத்தாள்.

 

 

அவள் பேச்சில் சிரித்தவன்,

“அடடா… இப்போ எல்லாம் எதிர்த்து பேசவும் கத்துக்கிட்டியே!”

என்றான்.

 

“நா எப்ப எதிர்த்து பேசினேன். நீங்க கேட்டதுக்கு  தான்  பதில் சொன்னேன்.”

என்று  மீண்டும் நெல்லை அள்ள ஆரம்பித்தாள்.

அவள் குனிந்து எடுக்கும்போதெல்லாம், தலையில் கட்டியிருந்த ஜடையில் இருந்து சில முடிகள் கன்னத்தில் விழுந்தன.

 

அதை அவள் அடிக்கடி ஊதி தள்ளிக்கொண்டே இருந்தாள்.

வெற்றியின் பார்வை அவள்மேலே தங்கிவிடாமல் இருக்க அவனே அவனை அடக்கிக்கொண்டான்.

 

 

“வேலு… சீக்கிரம் கொடு. நேரமாகுது.”

என்று அவசரப்படுத்தினான்.

 

 

“கொடுக்கறேன்ல மாமா… ஏன் விரட்டுற?”

என்று சிணுங்கினாள்.

சில நேரத்தில் , ஒன்பது மரக்க நெல் கோபுரம் போல் குவித்து வைத்ததும்..

 

“போதும் வேலு, எறங்கு  கீழே” என்றான்.

 

“இதோ மாமா” உள்ளேயிருந்து குரல் கொடுத்தவள் தலை இப்போது மெல்ல மேலே எட்டி பார்த்தது..

 

“என்ன ரொம்ப உள்ள , போயிருக்க” எனக் சிரிப்புடன் கேட்க,

 

,” தூக்கி விடு மாமா. ஏதோ பள்ளத்துல விழுந்த மாறியிருக்கு”..

 

“சரி  ரொம்ப சிணுங்காத” என்று அவளை கை தூக்கி கீழே இறக்க, அந்த சிறு நாற்காலி  இருவரின் பாரத்தை தாங்காமல்  ஆட்டம் காண, இருவருமே  பிடிமானமின்றி எடுத்து வைத்த நெற்குவியல் மீதே  விழுந்தனர்..

 

வெற்றி கீழே கிடக்க , அவன் மீது விழுந்து கிடந்தாள்  வேலு, இருவரும் விழுந்த வேகத்தில்,  எடுத்து வைத்த வெதை நெல்லு  மொத்தமும் சிதறி போனது..

 

“மாமா” என்று சிணுங்களுடன்.. எழுந்து நின்றவள் தன் ஆடையில்  ஒட்டியிருந்த நெல்மணிகளை தட்டி விட்டாள்..

 

 

எதுவும் நடக்காதது போல் எழுந்து நின்றவன் “என்ன வேலு  அவசரம்‌… நா , பொறுமையா இறக்கி விட மாட்டேனா! பாரு மொத்தமும். எப்டி சிதறி இருக்குன்னு” சொன்னான்..

 

“நா, என்ன மாமா பண்ணுவேன்.. நாற்காலி ஆடும்போது ! பதட்டத்துல விழுந்துட்டேன்” என்றாள்

 

“சரி நீ , போய் குளிச்சிட்டு துணியை  மாத்து , ஒரு மாறி நமநமன்னு இருக்கும் உடம்பு” என்றான்..

 

முகத்தை தூக்கிக்கொண்டவள் , ” இதுக்கு நா! யூனிபார்ம் போட்டிருந்தப்பவே! எடுத்து கொடுத்துட்டு துணி மாத்தியிருக்கலாமே மாமா, எதுக்கு என்ன இத்தனை தடவை. துணி மாத்த சொல்லுறீங்க” என்று தன் இடையில் ஒட்டியிருந்த நெல்மணிகளை, கைகளால் தட்டிக்கொண்டு கேட்டாள்…

 

அவள் தலையிலே, லேசாக கொட்டி ” நாள் முழுக்க ,மண்ணுல விளையாடிட்டு வருவ. அப்படியே!  குதிர்ல இறங்கினா! என்னாகும்”..

 

தலையை தேய்த்துக்கேண்டே “என்னாகும் மாமா”..

 

” மண்ணாகும், போ! வேலு நீ.‌ நா ,எல்லாத்தையும் ஏற கட்டிட்டு வரேன்னு” சொன்னதும்..

 

இவளும் ‘சரி மாமா’ என்று ஓடினாள்..

 

அவள் அறையிலிருந்து வெளியே ஓடிப்போனதும் தான், வெற்றி இழுத்து வைத்திருந்த மூச்சை மெதுவாக வெளியே விட்டான்.

பெண்ணவளின் ஸ்பரிசம் இன்னும் தன் மேனியில் ஒட்டியிருப்பது போல ஒரு வித்தியாசமான உணர்வு அவனை ஆட்கொண்டது.

தான் விழுந்தது நெற்குவியலிலா… இல்ல அவள் அருகாமையிலா… என்றே அவனுக்கே புரியவில்லை.

சில நொடிகள் அப்படியே நின்றவன், தன் தலையை லேசாக உலுக்கியபடி சிரித்துக்கொண்டான்.

 

“ச்சே… என்னடா வெற்றி இது…” என்று தனக்குத்தானே முணுமுணுத்தவன், சிதறிக் கிடந்த நெல்லை மீண்டும் கோணி பைக்குள் அள்ள ஆரம்பித்தான்.

ஆனா, கைகள் வேலையை செய்தாலும்… மனம் மட்டும் இன்னும் அந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தில நின்றுகொண்டிருந்த வேல்விழியிடமே சிக்கியிருந்தது.

 

வேல்விழி குளித்து மாற்றுடை அணிந்து வெளியில் வந்தபோது, வீட்டின் பின்புறம் முழுக்க இரவின் குளிர் மெதுவாக இறங்க ஆரம்பித்திருந்தது.

அடுப்படியில் இருந்து வந்த புகை வாசனையோடு, புதிதாக வடித்த சோறீன் மணமும் கலந்திருந்தது..

 

அடுப்பங்கறையிலிருந்த வெளியே! வந்த காளியம்மா, இருட்டிய நேரத்தில் தலைக்கு குளித்து வந்தவளை  பார்த்து..

 

“இன்னேரத்துல , என்னத்துக்குடி தலைக்குளிச்ச” ,

 

“வெதை நெல்லு எடுத்தது.. ஒரு மாறி இருந்தது பாட்டி, அதான் தலைக்கு குளிச்சேன்” என்றாள்…

 

“சரிதான் , அதுக்கு உடம்புக்கு தண்ணி ஊத்திட்டு வந்தா ஆகாதாடி.. இந்த இராத்திரியில தலைக்கு குளிச்சு காய்ச்சல் கண்டா, யாரு அவதி படுறது” என்று திட்டிக்கொண்டே அங்கேயிருந்து நகர்ந்தாள்..

 

‘யாரு அவதி படுறது’ என்ற வார்த்தை , திரும்ப திரும்ப காதில் விழவும்..

 

‘கண்கள் கலங்கியது…’

 

வெதை நெல்லை தூக்கிக்கொண்டு வெளியே வந்த  வெற்றி கண்டது ‘விழி நீரில் மிதந்த  சின்னவளை  தான்’..

 

“வேலு”

 

சத்தம் கேட்டு திரும்பியவள்  “என்ன மாமா”.

 

” தலையை தொவட்டாம , என்ன நின்னுட்டு இருக்க.. தலைபாரம் ஏறபோகுது.. முடிஞ்சா , தலைக்கு பொகை (புகை) போடு” என்றான். தோளில் பாரத்துடன்..

 

அவன் சொன்னதை கேட்டவள் “எனக்கு உடம்பு சரியில்லன்னா, நீ பாக்க மாட்டியா மாமா” ..

 

“ஏய் வாலு…  நா ! பாக்காம வேற எவன் பார்ப்பான்” என்ற வெற்றி , வெதை நெல்லை ஓரமாக இறக்கி வைத்து. அவளை நெருங்கினான்..

 

“என்னம்மா , ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு”..

 

 

“ஒன்னுமில்லை மாமா… சும்மா கேட்டேன்.” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

 

ஆனா, அவள் குரலில் இருந்த லேசான நடுக்கம்… கண்களில் தேங்கி நின்ற நீர்… இரண்டுமே அவளை காட்டிக்கொடுத்துவிட்டது.

 

 

வெற்றி மெதுவாக அவள் அருகே வந்து நின்றான்.

“வேலு…” என்று அழைத்தவன், அவள் முகத்தை லேசாக குனிந்து பார்க்க முயன்றான்.

 

“இங்க பாரு.”

 

“ம்ஹும்…” என்று இன்னும் முகத்தை திருப்பிக்கொண்டே நின்றாள்.

 

“அடடா… இப்போ என்னடா ஆச்சு உனக்கு?” என்று சிரிப்பை கலந்த குரலில் கேட்டான்.

 

அந்த குரலிலேயே அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

 

“பாட்டி சொன்னாங்கல… காய்ச்சல் வந்தா யாரு அவதி படுறதுன்னு…” என்று மெதுவாக சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

 

 

ஒரு நொடி வெற்றி அமைதியாக அவளை பார்த்தான். பிறகு அவன் முகத்தில் மெதுவான சிரிப்பு மலர்ந்தது.

“அதுக்குத்தான் இவ்வளவு யோசனையா?” என்று கேட்டவன், திடீரென்று அவள் தலையில் இருந்த ஈர முடியை பிடித்து ஆட்டினான்.

 

“அச்சோ மாமா!” என்று உடனே பின்னோக்கி நகர்ந்தாள்.

 

“நீ காய்ச்சல் வந்தா…” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தினான்.

 

“என்ன?” என்று அவள் ஆவலாக கேட்டாள்.

 

“இந்த வீட்டுல யாருக்கும் தூக்கம் இருக்காது.” என்றான் மெதுவாக.

அந்த வார்த்தை… அவள் மனசுக்குள் எங்கோ மெதுவாக இறங்கியது.

 

“உண்மையாவா?” என்று குழந்தை மாதிரி கேட்டாள்.

 

“ஹ்ம்… குறிப்பா ஒருத்தனுக்கு.” என்று அவளை பார்த்தபடியே சொன்னான்.

 

அவள் கண்கள் சின்னதாய் விரிந்தது.

“யாரு அந்த ஒருத்தன்?” என்று உடனே கேட்டுவிட்டாள்.

 

 

வெற்றி சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ஊர்ல பெரிய வைத்தியன் ஒருத்தன் இருக்கான்ல… அவன்தான்.” என்று சொல்லிவிட்டு நெல் மூட்டையை மீண்டும் தூக்கிக்கொண்டான்.

 

 

“மாமா!” என்று அவள் முறைக்க, அவன் சிரித்தபடியே நடந்தான்.

அவன் செல்லும் முதுகை பார்த்தபடி நின்ற வேல்விழிக்கு, மனசுக்குள் ஏதோ புதுசாக பூத்து கொண்டிருந்தது.

 

 

அந்த நேரம், வீட்டின் ஓரத்தில் கட்டியிருந்த மாடு சங்கிலியை அசைக்க, அதன் சத்தத்தில் திரும்பியவள், தன்னையே அறியாமல் சிரித்துக்கொண்டாள்.

அந்த சிரிப்பு… அவளுக்கே புதிதாய் இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!