Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 11 ( PART 02 )

 

ரேகாவிடம் வம்பு வளர்க்கும் பையனின் கைங்கரியம். காரில் ஏற்றியதும் கத்த விடாமல் இருவரின் வாயையும் ஒருவன் துணியால் கட்டி விட்டு, அவர்களின் கைப்பை, கைப்பேசி அனைத்தையும் பறித்து முன் சீட்டில் வீசியிருந்தான்.

 



Advertisement

பெண்கள் இருவருக்கும் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. சுதாரிக்க நேரமின்றி அனைத்தும் நடந்திருந்தது. அவர்களுக்கு நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து பயத்தில் வெடவெடத்தது. அந்த நேரத்தில் அவர்களால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.

 

வாகனத்தை ஒருவன் ஒட்டிக்கொண்டிருக்க, செந்தாமரை, ரேகா அவளை அடுத்து இன்னொருவன் அமர்ந்திருந்தான். மொத்தம் இருவர் தான், சிறு இடைவெளி கிடைத்தாலும் தப்பி விட வேண்டும் என்று செந்தாமரை மனதிற்குள் உருபோட்டுக் கொண்டாள்.

Advertisement

 

Advertisement

“டேய் அவனுங்க மூணு பேரும் நம்மளை எங்க வர சொன்னாங்க?” பின்னால் அமர்ந்திருந்தவன் கேட்க,

 

“இருடா ஆள் இல்லாத இடமா வண்டியை நிறுத்தி போன் பண்ணிடலாம்” என்று கூறினான் முன்னால் அமர்ந்திருந்தவன். சிறிது தூரம் சென்றபிறகு, வாகனத்தை நிறுத்தி கைப்பேசி அழைப்பு விடுக்க ஒருவன் இறங்க, இறங்கும் அவசரத்தில் அவன் பக்க லாக் மட்டுமில்லாமல் காரின் மொத்த லாக்’யையும் எப்பொழுதும் போல விடுவித்து விட்டான்.

Advertisement

 

செந்தாமரைக்கு இந்த விஷயம் வசதியாகப் போய்விட, ரேகாவை இடித்து சைகை காட்டிவிட்டு இன்னொருவன் கவனிக்காத நேரம் இறங்கி ஓடத் தொடங்கினாள். ரேகா அவளைத்தொடர்ந்து இறங்கும் முன்பு, மற்றொருவன் பிடித்து ஒரு அறை விட்டிருந்தான்.

 

 

“டேய் ரெண்டு பொண்ணுங்களை பிடிக்கத் துப்பில்லை” என்று கைப்பேசி அழைப்பு விடுக்க இறங்கியவன் வந்து கத்த,

 

 

“உன்னை யாரு லாக் போடாம இருக்க சொன்னா? கூட ரெண்டு பேரைக் கூப்பிட்டு வரலாம்ன்னா நீ கேட்டியா?” என அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது.

 

 

“பேசாம அவளைப் போய் பிடிடா” என்ற அதட்டலில் செந்தாமரையின் பின்னே பின்னால் அமர்ந்திருந்தவன் ஓடினான். ஆள் நடமாட்டமில்லாத சாலை அவர்களுக்கு வசதி என்றாலும் மாறி மாறி வந்த ஒரு திருப்பத்தில் செந்தாமரையைத் தவற விட்டிருந்தான்.

 

பின்னோடு காருடன் வந்தவனிடம், “உனக்கு இவ தான டா வேணும். அவ எதுக்கு? வா ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்” எனக் கூறிய நண்பனை முறைத்தபடி, நேரத்தைக் கடத்தாமல் இருவரும் காருக்குள் ஏறப்போக,

 

 

எங்கிருந்து தான் அந்த கார் வந்ததோ! அதிலிருந்து பரமேஸ்வரன், செந்தாமரை, இன்னும் இருவர் கூட இறங்கினர். அதற்குள் வேகமாக வந்த இன்னொரு இருசக்கர வாகனத்திலிருந்து மேலும் இருவர் இறங்கினர். அந்த காட்டுமிராண்டிகள் சுதாரிப்பதற்குள், அவர்கள் இருவரையும் நையப்புடைத்து, ரேகாவை மீட்டனர்.

 

 

செந்தாமரைக்கு எல்லாமே கனவு போல இருந்தது. அவள் இவர்களிடமிருந்து தப்பி ஓட, ஓடும்போதே தன் வாய்க்கட்டை அவிழ்த்துக் கொண்டாள். ஆள் நடமாட்டமில்லாத சாலை என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும் முடிந்தவரை வேகமாக ஓடினாள். இங்கிருந்தது இப்பொழுது அவள் தப்பிப்பது முக்கியமில்லை, அது எளிது தான். ஆனால், ரேகாவை மீட்டாக வேண்டுமே!

 

பின்னால் துரத்தி வருபவனைக் குழப்புவதற்காக இரண்டாகப் பிரியும் இடத்தில் மறைந்து கொண்டாள். அவன் குழம்பி, யோசித்து ஒருபுறம் போனதும், அவனுக்கு எதிர்புறம் மறைந்து மறைந்து அவன் கண்ணில் படாமல் போனாள். சிறிது தூரத்தில் யாரோ சிலர் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கவும், மெல்ல முன்னேறி தயக்கமாக யார் என்று கவனித்தாள். மீண்டும் தவறானவர்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதே! நல்லவேளையோ, தெய்வ சங்கல்பமோ அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தது பரமேஸ்வரன் ஐயா. அவருடன் மேலும் சில வாலிபர்களும் நின்றிருந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

வேகமாக அவர்களை அணுகி, நடந்ததை எல்லாம் அவள் கூறி உதவி கேட்கவும், உடனே கிளம்பி வந்து ரேகாவை மீட்டும் விட்டனர்.

 

பரமேஸ்வரன் ஐயா தான், “நீ தப்பிக்கணும்ன்னு மட்டும் யோசிக்காம அந்த நேரத்துலேயும் உன் பிரண்டை பத்தி யோசிச்சு அவளை காப்பாத்த நினைச்சியே மா, உன் நல்ல குணத்துக்கு நீ சந்தோஷமா இருப்ப” என்று மனமாறக் கூறினார்.

 

“நீங்க இல்லைன்னா என்ன நிலைன்னே சொல்ல முடியாது ஐயா” என்று இரு பெண்களும் நன்றியுடன் கூறினார்கள்.

 

அதன்பிறகு, அவரே பெண்கள் இருவரையும் பாதுகாப்பாய் அழைத்துச் சென்று அவர்கள் வீடிருக்கும் பகுதியில் விட்டுவிட்டு, அவர்கள் பத்திரமாய் வீடு போய் சேர்ந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு திரும்பினார். ‘எங்கள் பெயர் வெளியாக வேண்டாம். படிப்பு கெட்டுவிடும்’ என்ற கோரிக்கையோடு பெண்கள் விடைபெற்றனர்.

 

உண்மையிலேயே அவள் செய்கையில் பரமேஸ்வரன் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். தோழியை காப்பாற்ற அந்த நேரத்திலும் சிந்தித்த அந்த பெண்ணை அவருக்கு பிடித்திருந்தது. அதனால் தான் வெற்றிச்செல்வனிடமும், தன் வீட்டினரிடமும் செந்தாமரையைப் பிடித்திருப்பதாகவும், அவளைப்போன்ற பெண்ணை மணந்தால் வெற்றியின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் அடுத்த நாளே கூறியிருந்தார். கூடவே, செந்தாமரை பற்றிய விவரங்களையும் அவளது கல்லூரி முதல்வரிடம் சேகரித்து குடும்பத்தினருக்கு அனுப்பியும் வைத்தார்.

 

வழக்கமாக அன்னை தான், ‘இந்த பெண்ணை கட்டிக்கோ, அந்த பெண்ணை கட்டிக்கோ’ என்று வெற்றிச்செல்வனை நச்சரிப்பார். இப்பொழுது தந்தையும் தன் பங்கிற்கு தொடங்கவும் வெற்றிச்செல்வன் நிர்தாட்சண்யமாய் மறுத்திருந்தான்.

 

செந்தாமரையின் வாழ்வில் பல திருப்பங்கள் நிறைந்த நாளாக அன்றைய தினம் அமைந்திருக்க, ஒரு முறை அனுபவப்பட்டதாலோ என்னவோ, அதன்பிறகு தோழிகள் இருவரும் அத்தனை ஜாக்கிரதையாக இருந்தார்கள். தொட்டதற்கெல்லாம் பயம் வேறு வர, மனதைத் திடமாக வைத்துக்கொள்ள யோகாசனம் செய்து மெது மெதுவாய் அதிலிருந்து மீளத் தொடங்கினர்.

 

அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களின் படிப்பு முடிந்திருக்க, உள்ளூரிலேயே ஆசிரியை வேலைக்கு இருவரும் சென்று வந்தனர்.

 

நாட்கள் விரைய, ஒரு நாள் செந்தாமரையின் அக்கா அன்பழகி குறித்து அவர்களது புகுந்த வீட்டிலிருந்து புகார் ஒன்று வந்தது.

 

“உங்க மக முழுகாம இருக்கா, ஆனா எங்க குடும்ப டாக்டர் குழந்தைக்கு வளர்ச்சி சரியில்லைன்னு கலைக்க சொல்லறாங்க, இவ என்னடான்னா வேறவொரு டாக்டரை பாக்கலாம்ன்னு கேட்டு அடம் பிடிக்கிறா… வந்து உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லிட்டு போங்க” அவ அவளின் மாமியார் செந்தாமரையின் பெற்றோரிடம் கூற,

 

“என்னங்க, இந்த முறையும் இப்படி ஆயிடுச்சே” என்று அம்பிகா ஒரே அழுகை.

 

“அம்மா என்னன்னு முதல்ல பார்ப்போம் வாங்க” எனச் செந்தாமரை தேற்றினாள்.

 

[the_ad id=”6605″]

 

“கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சுடி, குழந்தை தங்கலைன்னா கூட பரவாயில்லை. இப்படி உண்டான குழந்தை எல்லாம் வளர்ச்சி சரியில்லைன்னு கலைக்கிற மாதிரியே இருக்கே”

 

“அம்பிகா, முதல்ல போயி உன் பொண்ணைப் பார்ப்போம் வா. இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுது. அவங்க பேச்சைக் கேட்டு நடந்துக்காம, வேற டாக்டர் கிட்ட காட்டணும்ன்னு சொல்லுது. அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? எத்தனை புத்தி சொன்னாலும் பெரியவங்க பேச்சுக்குக் குறுக்க பேசற குணம் மாறவே மாட்டீங்குது” எனச் செந்தாமரையின் தந்தை ஆறுமுகம் கோபமாகப் பேச,

 

செந்தாமரைக்கு அவரது பேச்சு பிடிக்கவே இல்லை. ஏன் பெண்கள் அவர்களுக்குத் தோன்றும் எண்ணத்தை கூடவா சொல்லக்கூடாது? அது கூடவா எதிர்த்துப் பேசுவது என்றாகிவிடும், என மனதோடு வருந்தினாள்.

 

அக்கா அங்கு என்ன தவியாய் தவிக்கிறாளோ, ஏன் இப்படி வேறு மருத்துவரிடம் காட்டச் சொல்லிக் கேட்கிறாளோ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் அவளைக் குறை மட்டும் சொல்கிறார்களே என வருந்தினாள்.

 

பிறகு மூவரும் கிளம்பி அன்பழகியின் புகுந்த வீட்டிற்குச் செல்ல, அங்குப் போனதும் மேலும் அவர்கள் புகார் வாசித்தார்கள்.

 

கூடவே, “சரியான நோஞ்சானை கட்டி வெச்சுட்டீங்க. ஒரு குழந்தையை பெத்து தர வக்கில்லை. எங்களை ஏமாத்தி இப்படி ஒரு பிள்ளையை எங்க தலையில கட்டிவெச்சு எங்க பையன் வாழ்க்கையைவே கெடுத்துட்டீங்க” என்று கண்டபடி பேச,

 

இவர்களுக்கு பதில் பேச எல்லாம் முடியவில்லை. பெண்ணை கட்டிக்கொடுத்த இடம் என்பதால் அடங்கியே போக வேண்டியதாய் இருந்தது. ஆறுமுகத்திற்கு மகள் மேல் கோபம் வந்தது, இவர்களின் பேச்சில்.

 

இவர்கள் பேச்சு ஓய்வதில்லை என்பது புரிய, சமயலறைக்கு அக்காவுடன் சென்ற செந்தாமரை, அவளின் மனநிலையைக் கேட்டறிந்தாள்.

 

“இல்லை தாமிரை, எனக்கு இவங்க சொல்லறதுல நம்பிக்கையே வர மாட்டீங்குது. இந்தமுறை இதுக்கும் நல்ல சத்தான ஆதாரமா தான் சேர்த்துட்டு இருக்கேன். இந்த குழந்தையும் வளர்ச்சி சரியில்லாம போக வாய்ப்பே இல்லை. இதுவரை ரெண்டு குழந்தையை இப்படிச்சொல்லியே கலைச்சு விட்டுட்டாங்க. எனக்கு சந்தேகமா இருக்கு. வேற டாக்டரை பார்ப்போம்” எனத் தேம்பித் தேம்பி அழுதாள்.

 

“அக்கா இவங்களுக்கு தெரியாம நாம போவோம் கா. இவங்க கிட்ட கேட்டா விட மாட்டாங்க. இதுக்கு எதுக்கு அழற” என்று செந்தாமரை சமாதானம் கூறினாள்.

 

“இல்லை தாமிரை, ஏதாவது சொல்லி இந்த குழந்தையையும் தங்க விட மாட்டாங்க. எனக்குப் பயமா இருக்கு” என அன்பழகி மீண்டும் மீண்டும் அழ,

 

“மாமா கிட்ட சொல்ல வேண்டியது தானக்கா”

 

“அவங்க அம்மாவை விட அவரு தான் பிடிவாதமா இருக்காரு. எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரிய மாட்டீங்குது. அவரு போக்கே சரியா புரிபடலை” என்று அவளுடைய கணவன் சுந்தரேசனைப் பற்றிப் புலம்பினாள்.

 

“விடுக்கா, அழாதே. நீ ஏன் இவங்ககிட்ட கேட்ட, முன்னாடியே எனக்கு போன் போட்டு சொல்லியிருந்தா… இந்நேரம் யாருக்கும் தெரியாம நாம போயி பார்த்துட்டு வந்திருக்கலாம் தானே. இனி இதுங்க பஞ்சாயத்து பண்ண தொடங்கிடுச்சுங்க” என அன்பழகியை தேற்றும் வழி தெரியாமல் தவிப்பாக கூறினாள்.

 

“எனக்கு பயமா இருக்கு தாமிரை”

 

“ஒருவேளை இவங்க சொல்லறது உண்மையா கூட இருக்கலாம் தானேக்கா. குழந்தைக்கு வளர்ச்சி சரியில்லைன்னா நாம என்ன பண்ண முடியும்” அக்கா அழுவது தாங்காமல் அவளுக்கும் கண்ணில் நீர் வழிந்தது.

 

 

[the_ad id=”6605″]

 

“நீயும் என்னை நம்பலையா தாமிரை. முதல் குழந்தையை அப்படிச் சொல்லி இவங்க கலைக்க சொன்னப்பவே, நான் சாப்பிடற விஷயத்துல அவ்வளவு கவனமா இருந்தேன். என் உடம்பு தேறியிருக்கா இல்லையான்னு கூடவா எனக்கு தெரியாது. ஆனா அடுத்த குழந்தையையும் இதே காரணம் சொல்லி கலைச்சுட்டாங்க. சரி இவங்க சொல்லறது உண்மையாவே இருக்கட்டும். வேற டாக்டர் கிட்ட காட்டேறேன்னு சொன்னா, கூட்டிட்டு போக வேண்டியது தானே? இவங்க ஏதோ மறைக்க போயி தானே கூடவே கூடாதுன்னு சண்டை காட்டறாங்க.

 

வேற டாக்டர் கிட்ட போயி பார்க்கலாம்ன்னு நேத்து வீட்டுல சொன்னேன். நேத்திருந்து வீட்டுல ஒரே சண்டை, உன் மாமா நேத்து என்னை அடிக்க வேற செய்யறாருடி” என மீண்டும் அழ,

 

“என்னக்கா நீ முழுகாம இருக்க, இப்பவும் உன்னை அடிச்சாங்களா? எப்படிக்கா மாமாவால முடியுது” எனச் செந்தாமரைக்குக் கலக்கமாகப் போனது.

 

“தாமரை, எனக்கு என்ன தோணுதுன்னா… என் வயித்துல உண்டான குழந்தை பெண் குழந்தையா இருக்கணும். எங்க மாமியார் சொந்தத்துல, பொண்ணு பெத்த பொம்பளைங்களையே மதிக்க மாட்டீங்குது. அதுவும் யாருக்காவது ரெண்டு பொட்டப்பிள்ளைன்னா அவ்வளவு தான். அவங்க காது படவே தப்பா பேசறதை பார்த்து இருக்கேன். என்ன பாவம் செஞ்சாங்களோ கொல்லி வைக்கக் கூட ஆள் இல்லைன்னு பேசுவாங்க.

 

ஏன் நம்ம அம்மா, அப்பாவை கூட அப்படி ஜாடை பேசுவாங்க. உங்க அம்மா ராசி உனக்கும் இருந்துடப் போகுதுன்னு என்னை திட்டியிருக்காங்க. இவங்க காட்டற டாக்டர் வேற, இவங்க உறவு காரங்க. ஒவ்வொரு முறை குழந்தை உண்டானாலும், குடும்பமே டாக்டர் கிட்ட போறோம். ஸ்கேன் பார்த்ததும், என்னை வெளிய விட்டுட்டு இவங்க மூணு பேரு தான் டாக்டர் கிட்ட பேசறாங்க. எனக்கு அதான் சந்தேகமா இருக்கு” என அன்பழகி மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி மீண்டும் அழுதாள்.

 

கேட்டிருந்த செந்தாமரைக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்தாள்.

 

சுந்தரேசன், அன்பழகி கல்யாணம் பேசிய பொழுது, “ஆப்பிளைப் பிள்ளை இல்லாத வீடா?” என்று சற்றே இளப்பமாய் பேசியதும் நினைவில் வந்து போனது. பல இடங்களில் தேடி சுந்தரேசன் ஜாதகத்துக்குப் பொருத்தமான பெண் கிடைக்காததால் தான், இப்படி வந்து கட்ட வேண்டியதாய் இருக்கிறது என்று கூடச் சொல்லிய நினைவு இருக்கிறது.

 

அந்த நினைவுகளோடு, “என்னக்கா சொல்லற?” என்றாள் தவிப்பாக.

 

“ஆமாம் தாமிரை, அதை சரி பார்க்கத் தான் வேற டாக்டர் கிட்ட போகணும் சொல்லறேன். இவங்க தப்பு வெளில வந்துடும்ன்னு விடவே மாட்டேங்கறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒவ்வொரு அபார்ஷன் நடந்த பிறகும் நான் மீண்டு வர எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு தெரியுமா? அதுவுமில்லாம இது என் குழந்தை, அதை கொல்லணும்ன்னு ஒவ்வொரு முறை சொல்லும்போதும்… என்னால முடியலைடி. பேசாம ஏதாவது சொல்லி நம்ம வீட்டுக்கு கூட்டிவிட்டுப் போயிடுங்களேன்” என அழுதாள்.

 

அதற்குள் வெளியிலிருந்தவர்கள் இருவரையும் அழைக்க, இருவரும் அங்கே சென்றார்கள்.

 

அன்பழகியின் அழுது சோர்ந்த முகத்தைப் பார்த்து அவளுடைய மாமியார், “பாருங்க… சரியான விடியா மூஞ்சி. இதை கட்டிட்டு என் மகன் பாடு படறான். எப்போ பார்த்தாலும் அழுகை தான்” என்று அதற்கும் குறை வாசிக்க,

 

ஆறுமுகத்தின் கண்டனப் பார்வையில், அம்பிகா மகளை அதட்டினார். அம்பிகாவிடம், “அக்காவை வேணா கொஞ்ச நாளு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம் மா. சோர்ந்து போயிருக்கா” என்று செந்தாமரை கேட்க,

 

அம்மா முறைத்த முறைப்பில் அந்த பேச்சு அப்படியே நின்றது. அதன்பிறகு பெண்கள் இருவரின் பேச்சும் அங்கு எடுபடவே இல்லை. ஏன் கருக்கலைப்பை கூட தள்ளி வைக்கவில்லை. கையோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

 

அழுது கொண்டே சென்ற அன்பழகியின் முகம் செந்தாமரையின் மனதில் இன்றும் இருக்கிறது. அந்த அழுகை ஒலி தான் அன்பழகியின் குரலை அனைவரும் கடைசியாகக் கேட்டது.

 

அதன்பிறகு அவள் பேசவில்லை. ஏற்கனவே நடந்த கருக்கலைப்பில் அன்பழகியின் உடல் பலவீனமாகி இருக்க, மேற்கொண்டு செய்வது சிரமம் என மருத்துவர் பரிந்துரைத்தும் கேட்காமல், கருக்கலைப்பு செய்தே ஆக வேண்டும், பெண் குழந்தை வேண்டாம் என்று சுந்தரேசனும், அவனது பெற்றோரும் பிடிவாதமாகக் கூறியிருந்ததால்… அதைச் செய்து அது தோல்வியில் முடிய, சுயநினைவின்றி இரண்டு தினங்கள் இருந்தவள், உயிரிழந்திருந்தாள்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!