Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 15 ( PART 01 )

 

சண்டை, சச்சரவுகள் இயல்பு தானே! தானாகச் சரியாகட்டும். சற்று விட்டு பிடிப்போம் என்று செந்தாமரை நினைத்தாள். அதனால் வெற்றிச்செல்வனை அவள் மறுபடியும் அழைக்கவில்லை.

 



Advertisement

 

இது ஒருபுறம் இருக்க அந்த ஆசிரியர் செய்த பிரச்சனை தொடர்பாக வெற்றிச்செல்வனிடம் கூறிவிட்டதால் சற்று நிம்மதி வந்தது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்பது போல! எதுவும் வன்முறையில் ஈடுபட்டுவிடுவானோ என்பது மட்டும் சற்று உறுத்தல்.

 

Advertisement

 

Advertisement

பள்ளியில் வினோதினியையும் அழைத்து, “இனி எந்த பிரச்சனையும் இருக்காது. எக்ஸாம் நல்லா பண்ணனும். வேற எதை நினைச்சும் பயமோ, கவலையோ பட வேண்டிய அவசியமே இல்லைஎன்று நம்பிக்கையும், ஆறுதலும் கூறி தேற்றினாள்.

 

 

Advertisement

கூடவே, “இனிமேல் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக யாரிடமாவது சொல்ல வேண்டும்என்று தனது பழைய அறிவுரையை மீண்டுமொருமுறை நினைவு படுத்தி அனுப்பி வைத்தாள். வினோதினியின் முகம் தெளிந்ததில் மனம் சற்று ஆசுவாசமாக இருந்தது.

 

 

அடுத்த இரண்டு தினங்களும் எந்த சேதாரமுமின்றி பள்ளிக்கு வந்து கொண்டிருந்த ஆசிரியரை நோட்டம் விடுவதையே தலையாய கடமையாக வைத்திருந்தாள். வெற்றிச்செல்வனிடம் துணிந்து சொல்லிவிட்டாள் தான். ஆனாலும் உள்ளூர பயம், உறுத்தல் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அடித்து துவம்சம் செய்து விடுவானோ என்பது போல

 

 

இவனைப் போன்ற மிருகங்களை எவ்வளவு அடித்தாலும், என்ன தண்டனை தந்தாலும் தகும் தான். இருந்தாலும், வெற்றியின் ஆத்திர புத்தியை நினைத்துஎதுவும் ஏடாகூடமாக நடந்து விடுமோ என்னும் தவிப்பு அவளை வதைக்கத்தான் செய்தது.

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதுவரையும் வெற்றி அவனாக இவளை அழைக்கவில்லை. ‘அப்படியென்ன கோபம் வந்திடும்?’ என்று கடுப்பாக வந்தது.

 

 

சரி நாமே அழைப்போம்என்று ஒருவழியாக முடிவெடுத்து அழைப்பு விடுத்தாள். அழைப்பு ஏற்கப்படவே இல்லை. ஞாயிறன்று பொதுவாக வெற்றி காலையில் சென்று வயலில், பண்ணையில் மேற்பார்வை பார்ப்பதோடு சரி. மில்லும், பஞ்சாயத்து அலுவலகமும் இருக்காது என்பதால் ஓய்வு நாள் தான். அதனால் பெரும்பாலும் வீட்டில் தான் இருப்பான். இருந்தும் அழைப்பை ஏற்கவில்லை என்பதால் அவளுக்கு கோபம் வந்தது. அப்படியென்ன அலட்சியம் என்று மனதில் கரித்துக் கொட்டினாள்.

 

 

நேரம் செல்ல செல்ல முதலில் கோபத்தில் நிராகரிக்கிறானோ என்று நினைத்தவள், பிறகு வில்லங்கமாக நினைத்தாள்.

 

 

வெற்றி எதுவும் அந்த ஆசிரியரை…?’ அந்த நினைவே செந்தாமரைக்குப் பக்கென்றது. ‘இவன் வேலையை ஆரம்பிச்சுட்டானா?’ என எண்ணியவளுக்கு இருப்பே கொள்ளவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அவனுடைய அடிதடிக்கென்று தான் பிரத்தியேகமாக ஒரு இடத்தை வைத்திருக்கிறானே! தென்னந்தோப்பு குடிசை. பெரும்பாலும் அது பலருக்கும் தெரியாத இடம் தான். ஆனால், செந்தாமரை ஒருமுறை அவனை அந்த புறமாகப் பார்க்க, அவள் கவனித்து வைத்திருந்தாள். ஆகவே, அவளது ஊகம் சரியாக இருந்தால்அவன் இப்பொழுது எங்கிருப்பான் என்று செந்தாமரை தேடவோ, யோசிக்கவோ வேண்டிய அவசியமில்லை.

 

 

அங்கு செல்லும் வழியும் நன்கு பரிச்சயம் தான். அதனால் நொடியும் தாமதிக்காமல் புறப்பட்டு விட்டாள். பெற்றோர்களிடம் வெளியில் சற்று செல்ல வேண்டும் என்று சொல்லி உடனடியாக கிளம்பி விட்டாள்.

 

 

இந்த பொண்ணு என்ன? இன்னைக்காச்சும் ஆற அமர பேசலாம்ன்னாஇப்படி ஓடுதுஎன அம்பிகா வாய்விட்டே புலம்பினார். இன்னும் சீராட்டு, கோபதாபம், சண்டை சச்சரவுகள் எதுவும் ஓய்ந்த பாடில்லை. இன்றாவது மகளிடம் பேச வேண்டும் என்று பெற்றவர்கள் நினைக்க, திடீரென்று வெளியே செல்ல வேண்டும் என்று காலில் சுடுதண்ணீரைக் கொட்டியது போல ஓடியும் இருந்தாள்.

 

 

அவள் அவசரத்தையும், பதற்றத்தையும் பார்த்துப் பெற்றவர்களால் தடுக்கக் கூட முடியவில்லை.

 

 

குறுக்கு வழியில் எட்டு போட்டவள், தென்னந்தோப்பை அடைவதற்குள் நொந்துபோயிருந்தாள். அது சற்று உள்தள்ளி இருக்கும். மூச்சு வாங்க வந்து சேர்ந்தவளுக்கு குடிசையின் வெளியே இருந்த வாகனமே சாட்சி சொன்னது தன்னவனது இருப்பை.

 

 

அச்சோஎப்ப பாரு அவசரம்? மிரட்டுனா ஆகாதா? எதுக்கு இப்படி செய்யணும்? என்ன பண்ணி வெச்சிருக்காருன்னு தெரியலையே! கடவுளே நான் நினைக்கிற மாதிரி இருக்க கூடாதுஎன்று மனதில் மறுகிக் கொண்டே சென்றவள், வெளியில் பாவமாய் காவல் காத்த வீரமணியைப் பார்த்தாள். அருகில் பாண்டியும்.

 

 

அண்ணே! நம்புங்கண்ணே தினமும் இந்த பரிகாரத்தை செஞ்சா உங்களுக்குக் கல்யாணம் கைகூடி வந்துடும்என்று பாண்டி வீரமணியை நச்சரித்துக் கொண்டிருக்க,

 

 

டேய் ஓடிருநானே ஐயா இன்னும் வெளிய வரலையேன்னு கடுப்புல இருக்கேன்என்று வீரமணி சிடுசிடுத்துக் கொண்டிருந்தான்.

 

 

நிசம் தாண்ணே. உங்களுக்குன்னு ஒரு பொண்ணு கிடைக்காமயா போயிடும். முயற்சி பண்ணுங்கண்ணே. உங்களை இதுவரைக்கும் நூத்தி இருபத்தி மூணு பொண்ணுங்க வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்குன்னு நீங்க அழகில்லைன்னு ஆயிடுமா? இல்லை உங்களுக்கு அறிவில்லைன்னு ஆயிடுமா? முயற்சியை கை விடாதீங்கண்ணே

 

 

புள்ளி விவர கணக்காய் மனனம் செய்து வைத்திருந்தவனைப் பார்த்து, “டேய்…” என்று வீரமணி பல்லைக் கடித்தான்.

 

 

உங்க நல்லதுக்கு சொன்னா எதுக்குண்ணே கோபப்படறீங்க?”

 

 

ஓடிரு டா…”

 

 

வீரமணியின் கோபத்தைத் துளியும் பொருட்படுத்தாது, “அதுல பாருங்கண்ணே நூறு பொண்ணுங்களுக்குள்ளயாச்சும் உங்களுக்கு பொண்ணு அமைஞ்சிடும், கல்யாணம் நடந்துடும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா நீங்க சீக்கிரம் இருநூறு தொட்டு புது சாதனையைச் செய்ய போறீங்க…” என்று இளித்தான்.

 

 

அடேய்இந்த நம்பர் எல்லாம் என்ன கணக்கு டாஎன்று வீரமணி மீண்டும் பல்லைக் கடிக்க,

 

 

தரகர் அவ்வளவு ஜாதகம் அயித்த கிட்ட தந்திருக்காங்களேஎல்லாமே குறிச்சு வெச்சிருக்கேன் பாத்துக்கங்க ண்ணேஎப்ப கேட்டாலும் சரியா சொல்லிப்புடுவேன்

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அது எதுக்கு டா உனக்கு?” என்றான் எரிச்சலாக.

 

 

என்னண்ணே இப்படி பொசுக்குன்னு கேட்டுட்டீங்க. நாளைப்பின்ன உங்களுக்கு அதிசயித்துலேயும் அதிசயமா பொண்ணு கிடைச்சு, கல்யாணம் ஆக போகுதுன்னு வெச்சுக்கங்க… ‘இந்திய திருமணத்தில் முதன்முறையாக இருநூறு மணப்பெண்களால் நிராகரிக்கப்பட்ட அரியவகை உயிரினம்ன்னு ச்ச.. மாப்பிள்ளைன்னுபெரிசா போஸ்டர் அடிச்சு அமர்க்களப்படுத்திட மாட்டேன்என்றான் தனது மொத்த பற்களையும் காட்டியபடி.

 

 

டேய்….” என்று கொலை வெறியான வீரமணி அவனை அடிக்க கையோங்க,

 

 

லாவகமாக விலகி, “போங்கண்ணே உங்க சாதனையைப் பத்தி உங்களுக்கே தெரியலை…” என்று பாண்டி சலித்துக் கொண்டான்.

 

 

என்னவோ உன்னை கட்டிக்க பொண்ணுங்க வரிசையில நிக்கிற மாதிரியும்என்னை ஒருத்தருமே கட்டிக்கிட மாட்டேன்னு சொன்ன மாதிரியும்ஆத்திரத்தைக் கிளப்பாத பாத்துக்க…” என்று வீரமணி எச்சரிக்கை செய்து கொண்டிருந்த சமயம், செந்தாமரை அருகில் வந்திருந்தாள்.

 

 

இவர்களின் பாதி பேச்சு அவளது காதிலும் விழுந்திருக்க, தற்போதைய நிலைமை மறந்து சிரிப்பே வந்திருந்தது.

 

 

செந்தாமரையின் சிரிப்பில் கவனம் கலைந்த இருவரும் அவளை அந்த நேரத்தில், அந்த இடத்தில் எதிர்பார்க்காமல் திருதிருத்தனர்.

 

 

அம்மாநீங்கஇங்க…” வீரமணி குடிசையையும், அவளையும் மாறி மாறி பார்த்தபடி எச்சில் விழுங்க நின்றிருந்தான். ஐயாவிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான் அவர்களை கண்டம் போட்டு விடுவானே! இந்த அம்மாவிற்கு எப்படி இந்த இடம் தெரியும் என புரியாமல் குழம்பினான்.

 

 

அவள் பதில் சொல்லும் முன்பே, “வீட்ல கொண்டு வந்து விடட்டுமா மா?” என அவசரமாகக் கேட்க,

 

 

உங்க ஐயா இல்லை?” என்றாள் குடிசையினுள் அவளும் எட்டிப்பார்த்த வண்ணம். வாயிற் கதவு சாத்தியிருந்தது.

 

 

அதுவந்துங்கம்மா…”

 

 

வீரமணியின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல், “நான் வந்திருக்கேன்னு சொல்லுங்கண்ணாஎன்றாள் செந்தாமரை.

 

 

யாரும் உள்ள வரக்கூடாதுன்னு ஐயாவோட உத்தரவும்மா…” என்றான் வீரமணி அச்சத்துடன்.

 

 

உங்க ஐயா கூட உள்ள வேற யாரு இருக்காங்க?” குடிசையினுள் இருந்து எதுவும் சத்தம் வருகிறதா என்று எட்டிப்பார்த்த வண்ணமே கேட்டாள்.

 

 

அது வந்துங்கம்மா…”

 

 

சும்மா எல்லாத்துக்கும் வந்து, போயின்னு சொல்லாம பதிலை சொல்லுங்கண்ணாஎன்று அதட்டினாள்.

 

 

அதை சொன்னா ஐயா கண்டம் பண்ணிடுவாரும்மாநீங்க கிளம்புங்களேன்என்றான் கெஞ்சுதலாக.

 

 

உங்களோட…” என அவர்களைக் கடந்து உள்ளே முன்னேறிச் செல்ல முயன்றவளைத் தடுத்தது ஒரு ஆணின் அலறல்.

 

 

அது அந்த ஆசிரியர் குரலா என்று அவளால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அந்த குரலில், அதன் அலறலில் உடலெங்கும் நடுங்கிப் போயிற்று மங்கைக்கு!

 

 

நின்ற இடத்தில் சமைந்து நின்றவளின் செவியில் மேலும் சில அலறல் சத்தம். தன்போல அவள் கால்கள் பயத்தில் இரண்டடி பின்னால் வந்தது.

 

 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”

 

 

அவளது இதழ்கள் தன்போல பாரதியாரின் வரிகளை துணைக்கழைக்க, மிரண்டு அரண்டு நின்றிருந்தாள். மேலும் மேலும் சத்தம் அதிகமானதே தவிரக் குறைந்தபாடில்லை.

 

 

அம்மா வந்துடுங்க மாஉங்களைக் கொண்டு போயி விட்டுட்டு வந்துடறோம். நீங்க இங்க இருக்க வேணாம். ஐயா பார்த்தா கோபிப்பாருஎன வீரமணி கெஞ்சுதலாகக் கேட்க,

 

 

அவனை முறைத்துப் பார்த்தவள், தன்னை கொஞ்சம் நிலைப்படுத்தி, ஆழ மூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டபடி, மனதைத் திடப்படுத்தியவாறு உள்ளே நுழைய முயன்றாள்.

 

 

அம்மா வேணாம்மாஐயாவுக்கு தெரிஞ்சா பயங்கற பிரச்சனை ஆயிடும்வீரமணியின் எந்தவொரு முயற்சியும் செந்தாமரையிடம் செல்லுபடியாகவில்லை. கையை பிசைந்தபடி அவள் உள்ளே செல்வதைத் தடுக்க முடியாமல் தவிப்புடன் நின்றிருந்தனர்.

 

 

குடிசையின் கதவைத் தாழ் போடாததால், சற்று தள்ளினாலே கதவு திறந்து கொண்டது. மனதினுள்ளே நடுக்கம் குறையாத போதிலும், முயன்று தன்னை திடப்படுத்திய படி முன்னோக்கி நடந்தாள்.

 

 

தென்னை ஓலையில் மேற்கூரையமைத்து சற்றே விசாலமாக ஒற்றை அறையுடன் இருக்கும் குடிசை வீடு அது. இவள் உள்ளே நுழையவும், யாரெனத் திரும்பிப் பார்த்த வெற்றிச்செல்வனின் முகம் இன்னும் ரௌத்திரத்தைக் கூட்டியது.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஆனால், அதைக் கண்டு கொள்ளாதவளோ தரையில் சுருண்டு விழுந்திருந்த ஆசிரியரின் மீது பார்வையைப் பதித்த வண்ணம், அது அவர்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ளவதில் தீவிரம் காட்டியது. சுயநினைவின்றி விழுந்து கிடந்தார் அந்த ஆசிரியர்.

 

 

செந்தாமரை அதிர்ந்து போய் வெற்றிச்செல்வனை பார்ப்பதற்குள், அவன் இவளை இழுத்து பிடித்து, “உன்னை யாரு இங்க வரச் சொன்னது?” என்று அடிக்குரலில் சீறினான்.

 

 

என்னஎன்ன பண்ணி வெச்சிருக்கீங்க?” என்று பேச முடியாமல் சதி செய்த தொண்டையை சிரமப்பட்டுப் பயன்படுத்தி, அந்த ஆசிரியரைச் சுட்டிக் காட்டி கலக்கத்துடன் கேட்டாள். அவளது கரங்களோடு சேர்த்து தேகமும் நடுங்கி கொண்டிருந்தது. பேச்சு குழறலாக சத்தம் குறைவாக வந்தது.

 

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!