Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 16 ( PART 02 )

 

அதிலும் மஞ்சுளா வந்திருந்தபோது, செந்தாமரையிடம், ‘நீ என் கணவரின் தேர்வு!’ என்று சொல்லிச் சொல்லி பெருமைப்பட, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் மனம் சுணங்கியது.

 



Advertisement

கூடுதல் தகவலாக, ‘அவனுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும் தான் மா, ஆனா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு… நான் சண்டை போட்டும் நிக்காம இங்க வந்து அவரு வேலை மொத்தத்தையும் பார்த்துக்கிறான். அப்பாவோட ஆசைக்காக, தன்னோட கெரியரை விட்டு… பெத்த அம்மாவை விட்டு, தம்பியை விட்டு… இங்க வந்து இருக்கான். அப்ப ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுவும் அவங்க அப்பாவுக்கு நடந்த விபத்துக்கு பழைய ஊர்த்தலைவரை எல்லாரும் காரணமா நினைக்க, அப்ப போயி இவனும் அதே வேலைக்கு வரவும் ரொம்ப பயமும் கூட. எவ்வளவு தடுத்தும் கேட்கலை. இப்பவும் பயம் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும், இத்தனை ஆபத்தையும் அவருக்காக தாங்கிக்கிறான்னு நினைக்கும் போது பெருமையா கூட இருக்கு’ என்று வருத்தமாகவும், பெருமையாகவும் பேசினார்.

 

‘தந்தைக்காக எதையும் செய்யத் துணியும் தனயன்’ செந்தாமரைக்குப் பெருமையாக இருந்தாலும், ‘அப்போ அப்பாவுக்கு பிடிக்கும்ன்னு தான் இத்தனையுமா? அதுனால தான் நான் கர்ப்பம்ன்னு யாரோ பொய் சொன்னபோதும், என்னை கட்டிக்கிறேன்னு சொன்னாரா?’ என மனம் சங்கடப்பட்டது.

Advertisement

 

Advertisement

அவன் காதல் பேச்சுக்கள், பார்வைகள் எதையும் பொய்யென எண்ண முடியவில்லை. ஆனால், அந்த காதலை உருவாக்கியது… அவள் இல்லை, அவனின் தந்தையின் ஆசை என்று மனதில் ஆழப் பதிந்து இம்சித்தது. மனம் வலித்தது. ஒருவேளை வெற்றி இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தால் இப்படி தோன்றியிருக்காதோ என்னவோ? அவனது ஒதுக்கம் இவளுக்குக் கண்டதையும் யோசிக்க சொல்லியது.

 

ஆனால், இது எதிலும் கவனம் செலுத்தாத வெற்றிச்செல்வன் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல தன் காரியத்தில் கண்ணாக இருந்தான். தன் கண்காணிப்பு வளையத்தில் மாரியப்பன் மட்டுமல்லாது, அவனின் தலையென வெற்றி கண்டறிந்த, ‘சேலம் சந்தன பாண்டியாரும்’ இருந்தார்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

 

மாரியப்பனை விட சந்தன பாண்டி பல மடங்கு புத்திசாலி மற்றும் செல்வாக்கானவன். சேலம் அளவில் பெரிய ஆள். அவனை நெருங்குகிறோம் எனச் சிறு குறிப்பு தெரிந்தால் கூட பல வேலைகளை நமக்கு எதிராகச் செய்து முடித்து விடுவான். அதனால் வெற்றி அவன் விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தான்.

 

மாரியப்பனைத் தொட்டது நாம் தான் எனத் தெரிந்தால் சந்தன பாண்டி அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டான் என்பது வெற்றிக்குத் தெரியும். ‘அதை நாம் தான் செய்தோம் என்று அவன் கண்டுபிடிக்கவே கூடாது. அதற்குள் அவனுக்கும் மாரியப்பனுக்கும் என்ன தொடர்பு, எப்படி தொடர்பு’ என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டான்.

 

வெற்றியின் இத்தனை தூரம் காய் நகர்த்துவதும் சந்தேகத்தின் பேரில் தான். சந்தேகங்கள் மட்டும் உறுதியாகுமானால் அவன் அவர்கள் இருவரையும் சும்மா விடப்போவதில்லை. சந்தேகத்தை உறுதிப் படுத்திக் கொள்ளத் தான் வெகு மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறான். விடை தான் இன்னும் கிடைத்தபாடில்லை.

 

திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பஞ்சாபிற்குச் சென்ற மஞ்சுளாவும், முத்துக்குமாரும் மீண்டும் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் வருகை தந்தனர். திருமண வேலைகள் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருந்தது.

 

ஏற்கனவே வெற்றிச்செல்வன் சரியாகப் பேசாததால் சஞ்சலத்திலிருந்த செந்தாமரையின் சஞ்சலத்தை அதிகரிக்கும் வண்ணம் இன்னொரு செய்தி கிடைத்தது. அது வெற்றியால் தாக்கப்பட்ட ஆசிரியரை ஒரு வாரமாகக் காணவில்லை என்னும் செய்தி. அனைவருக்கும் விஷயம் தெரிந்து விட்டதால் ஊரை விட்டு ஓடியிருப்பான் என்று ஊர்மக்களும், மற்ற ஆசிரியர்களும் பேசிக்கொண்டனர்.

 

செந்தாமரைக்குத் தான் பயமாகவும், சஞ்சலமாகவும் இருந்தது. எதுவும் விலகாமலேயே திருமண நாளும் வந்திருக்க, திருமணத்திற்குச் சேலம் கலெக்டர் முதல், நிறைய பெரிய மனிதர்கள் வந்திருக்க, அவள் நிச்சயமாக இந்தளவு ஆடம்பரத்தை எதிர்பார்க்கவில்லை.

 

விடையறியா பல வினாக்கள் அவளை வெகுவாக தளரச் செய்தது.

 

*** கெளதம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டான். மதனுக்கு அவனது போக்கு வித்தியாசமாக இருந்தது.

 

“என்ன கெளதம், என்ன யோசனை? புதுசா வந்தவனைப் பத்தியா?” என்று புதிதாக வந்த ஆசிரியரை மனதில் வைத்துக் கேட்டான்.

 

“ச்ச இல்லைடா. புதுசா வந்துட்டே தான் இருக்கானுங்க. அவனுங்களை பத்தி என்ன யோசிக்க?” என்று கெளதம் சலிப்புடன் கூறினான்.

 

“வேற என்ன டா?”

 

“இல்லை, நம்ம வேலை செய்யற இடத்துல, மூட்டை எல்லாம் அடுக்கி இருக்குமே அதுக்கு பக்கத்துல இருக்கிற ரூம் கவனிச்சு இருக்கியா?”

 

“ஆமா எப்பவும் மூடி இருக்குமே…” என்றான் நினைவு வந்தவனாக.

 

‘அது தான்’ என்னும் விதமாகத் தலையசைத்தவன், “அங்க கொஞ்சம் மெஷின்ஸ் இருக்கும். கொஞ்சம் பழையது…”

 

“ஓ… சரி” என்ன சொல்ல வருகிறான் இவ்வளவு கலவரமான முகத்தோடு என்று அவனிலேயே பார்வை பதித்து மதன் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“சில மாசம் முன்னாடி வரைக்கும், அங்கேயும் வேலை செய்ய வேண்டி இருக்கும். சமீபமா அதை மூடி வெச்சிருந்தாங்க. இப்ப மறுபடியும் அதைச் சுத்தம் செய்யறாங்க…” கவலையுடன் கூறி முடித்தான்.

 

அவன் கவலை அவனுக்குள்ளும் இனம்புரியாத பயத்தைக் கிளப்ப, “அதுனால என்ன?” என்றான் கவலையாக.

 

 

[the_ad id=”6605″]

 

 

“அங்க வேலை செய்யறதும் சாகறதும் ஒன்னு தான். நிறைய வேலை இருக்கும். அங்க வேலை செய்யும் போது இன்னும் வெறி பிடிச்ச மாதிரி நடந்துப்பாங்க” என்றான் எச்சில் விழுங்கியபடி.

 

“இவங்க எல்லாம் ஏன் இப்படி செய்யணும்?” தனக்கு விடை தெரிந்தும் ஆற்றாமையோடு மதன் கேட்டான்.

 

“யாருக்கும் புரியாத விஷயம் அதுதான் டா. இப்ப அந்த அறை திறந்துட்டா அங்க போறவங்களுக்கு எல்லாம் தினமும் நரகம் தான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு மதன்” என்றான் சிறுபிள்ளையென.

 

“உன்கிட்ட ஒன்னு சொல்லவா?” என்றான் மதன் அவனது வருத்தம் உணர்ந்து. என்ன என்று பார்த்த கௌதமிடம், “அவங்க இப்படி நடந்துக்க காரணம் எனக்குத் தெரியும்?”

 

“என்னடா சொல்லற?”

 

“அன்னைக்கு எனக்கு ஏன் உடம்பு சரியில்லாம போச்சு தெரியுமா?” எனக் கேட்டு நடந்ததை எல்லாம் சொன்னான்.

 

“இவனுங்களுக்கு கோபம் சரி, அந்த டாக்டர் கூட, நம்ம மேல நல்ல அபிப்ராயம் வெக்கலை டா. இங்க இருக்கிறவங்க யாரும் ஏதோ ஒரு கோபத்தை நம்ம மேல காட்டலை. மாறா நம்ம மேல இருக்க கோபத்தை குறைச்சு காமிக்கறோம்ன்னு பீல் பண்ணறாங்க. இதுவும் அங்க இருந்தப்ப எனக்கு புரிஞ்சது. அப்போ தான் நான் எதுவும் தப்பு செஞ்சிருக்கேனான்னு யோசிச்சேன். கொஞ்ச நேரத்துல புரிஞ்சுடுச்சு. நான் ஒரு பொண்ணு சாக காரணமா இருந்தேன். அவளை ஏமாத்திட்டேன்” என்றான் வேதனையாக.

 

கெளதமுக்கு தன் தவறும், மற்றவர்களின் தவறும் ஞாபகத்தில் வந்தது. மதன் தனது பேச்சை மேலும் தொடர்ந்தான். “அப்போ கூட, இதெல்லாம் ஒரு தப்பான்னு தான் யோசிச்சேன் டா. இவனுங்க யாரு கேக்கன்னு கோபம் வந்தது? ஆனா, நினைச்சு பாரு இவனுங்க வெளிப்படையா நமக்குத் தண்டனை தராங்க , ஆனா நம்ம பண்ணற வேலைக்கு எத்தனை பேரு மனசளவுல, நம்மை இப்படி எல்லாம், ஏன் இன்னும் அதிகமா கூட கொடுமை செய்யணும்ன்னு நினைப்பாங்க.

 

ஏதோ ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்தா சோசியல் மீடியா’ல எத்தனை ஆதங்கமா கருத்து வருது. எத்தனை தண்டனையைச் சொல்லி, அவனுங்களை இப்படி கொல்லணும், அப்படி கொல்லணும்ன்னு பேசிக்கிறாங்க. நாம ஒட்டு மொத்த சமுதாயத்தோட வெறுப்பையும் சம்பாரிக்கிற தப்பு தான் செய்யறோம். அதுகூட புரிஞ்சுக்காம அப்படி செய்யறதுல பெருமை வேற! ஒரு பொண்ணை என்ன வேணா செஞ்சுக்கலாம்ன்னு நமக்கெல்லாம் அலட்சியம். இப்ப பொண்ணுங்க இல்லாம நம்ம நிலைமையை பாரு?

 

ஒவ்வொரு நாளும் எத்தனை முறை இங்க உள்ளவங்களெல்லாம் அம்மாவை, மனைவியை, தங்கையை நினைப்பாங்க. வெளிய சொல்லாட்டியும் அதிகமா நினைப்பாங்க, அதிகமா தேடுவாங்க. ஏன்னா, இங்க நம்மோட தேவைகளை கவனிக்க யாரும் இல்லை. நம்ம பசியை புரிஞ்சுக்கவோ, நமக்கு நேரத்துக்கு தேவையானதை செஞ்சு தரவோ ஒருத்தரும் இல்லை. நம்ம கோபத்தை வாங்கிக்கிட்டு, நம்ம ஆத்திரத்துக்கு வடிகாலா… எத்தனை நாளா பெண்களை உறிஞ்சிருப்போம்.

 

இப்போ அவங்க இல்லாத ஒரு வாழ்க்கை? ஒவ்வொரு நாளும் எத்தனை ஏங்கி போறோம்? இந்த நிலையில இருந்தும் நம்ம பாடம் கத்துக்கலை? ரொம்ப சாதாரணமா பொண்ணுங்களை அழிச்சோமே, அந்த பொண்ணுங்க இல்லாம எப்படி இருக்கோம் பாரு? இதே நிலை தானே அந்த பொண்ணுங்களோட வீட்டுலயும் இருந்திருக்கும். பொண்ணை சிதைக்கிறது ஒரு குடும்பத்தையே சிதைக்கிறதுன்னு இன்னும் புரிஞ்சுக்கலை டா. ஏன் அது நாட்டையே சிதைக்கிறதுன்னும் இன்னும் நமக்கு புரியலையோன்னு தோணுது. தினம் தினம் இப்படி ஆயிரம் யோசனை எனக்குள்ள வந்து என்னை நிம்மதியா தூங்க கூட விடறதில்லை. ஒரு பொண்ணு தானே, ஒரு வீடு தானேன்னு ஒவ்வொருத்தரும் அலட்சியம் காட்டி பொண்ணுங்களை அழிச்சிட்டே வந்தா…

 

இதோ இப்ப ஆம்பிளைங்க மட்டும் இருக்கோமே… இப்படி தான் நாளைக்கு பல வீட்டோட நிலைமை, நம்மளோட ஒரு நாள் சந்தோஷத்துக்காக, ஒரு நாள் அலட்சியத்துக்காக மாறிடுமோன்னு தோணுது டா. இதுக்கு மேலயும் எனக்குள்ளேயே வெச்சிருந்தா இதைப்பத்தியே யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சுடுமோன்னு கூட தோணுது டா”

 

தன்னையும் மீறி ஏதேதோ உளறல் மொழியில் பிதற்றிக் கொண்டே வந்தவனது சொற்கள் கௌதமின் மனதிலும் முள்ளைத் தைத்தது. “இல்லை மதன். இனி இப்படி நடந்துக்காம இருப்போம். நீ ரிலாக்ஸ் ஆகு” அவனது அமைதியற்ற நிலையைப் பார்த்து ஆதரவாகக் கூறினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“இல்லை டா நடந்ததை மாத்த முடியாது. அதுக்காக நமக்கு கிடைக்கிற, கிடைச்சுட்டு இருக்கிற தண்டனையையும் மாத்த முடியாது. நம்ம திருந்தி மட்டும் யாரும் உயிரோட திரும்பி வர போறதில்லை. நம்ம உணர்ந்து திருந்திட்டோம்ன்னு நம்பக் கூட இங்க யாரும் இல்லை” மேலும் மேலும் பிதற்றி அவன் பேசுவதைக் கேட்கவே, மனதிற்குள் வெகு நாளாக இதே சிந்தனையாய் இருக்கிறான் என்று புரிந்தது.

 

அவன் நிலையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதோடு அவன் கூறியதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு, தங்களின் செயல்களின் பாவங்களை எண்ணி மிகவும் வேதனை பட்டான்.

 

அவன் சொல்வதும் உண்மை தானே? குற்றவுணர்வு என்பதே நமக்கு இல்லையே! இல்லாவிட்டால் இன்று வரை அதற்காகச் சிறிதாகக் கூட வருந்தாமல் இருந்த்திருப்போமா? என்று கெளதம் மனதளவில் துவண்டு போனான்.

 

அடுத்த நாளிலிருந்து அந்த பழைய மெஷின்களில் வேலை செய்வதற்காக ஆட்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து அனுப்பினார்கள். இத்தனை நாட்களும் காரணம் புரியாமல் சிரமப்பட்ட கௌதமிற்கு இது தங்களின் பாவத்திற்கான சம்பளம் என்று புரிந்தது.

 

‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம்’ என்பார்களே, இதோ உடலின் ஒவ்வொரு அணுவும் வலிக்கச் செய்து ஒரு புதுவித தண்டனை. எங்கும் காயங்கள் இல்லை. எந்த பாகமும் செயலிழக்கவில்லை. ஆனாலும் வேலை தந்தே பிழிந்து எடுத்தார்கள். உண்ணும் உணவிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை. கொஞ்சம் வேலையில் பிசகினாலும் அடி வேறு எக்கச்சக்கமாய் வாங்க வேண்டியதாய் இருந்தது.

 

அந்த பழைய மெஷின்கள் இருக்கும் பகுதிக்கு வேலைக்குச் செல்பவர்கள் எல்லாம் உடலளவில் மிகவும் நொந்தார்கள்.

 

பாவத்திற்கான சம்பளம் பெற்றும்… பாவம் செய்தோம் என்று யாரும் புரிந்து கொண்டது போல கூட தெரியவில்லை. அதுதான் மதனிற்கும், கௌதமிற்கும் இன்னும் வருத்தமாக இருந்தது. புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால், புரிய வைக்க முயற்சி மேற்கொள்வோம் என்று முடிவு செய்தார்கள்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!