Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 01 )

 

செந்தாமரை பஞ்சாபிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து முத்து ஏற்பாடு செய்திருந்த வண்டி மூலம் சேலம் வந்து சேர்ந்திருந்தாள். கணவனிடம் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே மற்றவர்களிடமும் சொல்லவில்லை.

 



Advertisement

அவளை திடீரென எதிர்பார்க்காத ராஜேஸ்வரி அம்மாள், “என்னம்மா வரேன்னு சொல்லவே இல்லை? தனியா எதுக்கு அலையுற?” என செல்லமான கண்டிப்போடு வரவேற்பு தந்தார்.

 

“என்ன பாட்டி இதுக்கெதுக்கு கூட ஒருத்தர்? நானே வந்துக்குவேன் பாட்டி. இதுக்கெல்லாம் கவலை படாதீங்க” எனச் சொல்லியவள்,

Advertisement

 

Advertisement

“உங்களுக்குத் தான் பெரிய கிப்ட் கொண்டு வந்திருக்கேன்” என்றும் புன்னகை முகமாகச் சேர்த்துச் சொல்ல,

 

ராஜேஸ்வரி அம்மாளும் புன்னகை முகமாகவே, “அப்படியா முதல்ல குளிச்சுட்டு வந்து பலகாரம் சாப்பிடு, அதுக்கப்பறம் எனக்குப் பரிசு தரலாம். பாரு களைச்சு போயிருக்க… போ போயி குளிச்சுட்டு வா…” என அனுப்பி வைத்தார்.

Advertisement

 

கொள்ளை கொள்ளையாய் அன்பைத் தேக்கி வைத்துக் கொண்டு, அதைக்காட்ட ஆளே இல்லாமல் இருப்பது எத்தனை கொடுமை. இந்த பாட்டிக்கு ஒரு மகள் இருந்து, இளம் வயதில் இறந்து விட்டாராம். வெற்றி ஒருமுறை சொல்லி கேள்விப் பட்டிருக்கிறாள். அந்த நேரத்தில் மகனும் ஆதரவற்ற பெண்ணை காதல் திருமணம் என்று தேர்ந்தெடுத்து விடவும் தான் ரொம்ப கோபம் வந்துவிட்டதாம். அதெல்லாம் சொன்னவன் கூடவே, “இப்பொழுது, உன்னிடம் எதையோ தேடுகிறார் போல! அதுதான் அம்மாவிடம் இதுவரை காட்டாத இணக்கத்தைக் கூட உன்னிடம் காட்டுகிறார் போல” என்று சொல்லியது ஞாபகம் வந்தது.

 

ஆம், அதை அவளும் உணர்ந்தே தான் இருந்தாள். அதேநேரம், ‘இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விட்டுவிட்டுப் போய் விடுவார்கள்’ என்றும், பாட்டிக்கு உள்ளூர அச்சம் இருப்பதையும் அவள் அறிந்ததே! அதைப் போக்கத் தானே இப்பொழுது இத்தனை வேலைகளையும் செய்து முடித்திருக்கிறாள். பேச வேண்டிய விதத்தில் பேசி மாமியாரையும், கொழுந்தனாரையும் ஒப்புக் கொள்ள வைத்ததில் அவளுக்கு அத்தனை நிறைவு.

 

தயாராகி கீழே வந்தவளுக்குச் சிற்றுண்டி கொடுத்து கதைகளைக் கேட்டார்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

இவளும் அங்கு நடந்ததை எல்லாம் சுவாரஸ்யமாக விளக்கி… கூடவே, “உங்களுக்கு என்ன பரிசுன்னு கேட்கவே இல்லையே பாட்டி?” என்று வந்து நின்றாள்.

 

“ஆமாம், அதைக் கேட்க மறந்துட்டேன் பாரு. சரி சொல்லு மா… என்ன வாங்கிட்டு வந்திருக்க?”

 

“வாங்கிட்டு எல்லாம் நிறைய வந்திருக்கேன் பாட்டி… ஆனா நான் சொன்ன பரிசு அதில்லை. அது இனிமே தான் வரும்…” என்று பூடகமாகச் சொல்ல,

 

“அப்படியா அப்படி என்ன பரிசு… ஏரோபிளேன் பிடிச்சு வர அளவுக்கு” என இதழ்களில் புன்னகை சாயல் தெரியக் கேட்டார்.

 

“கண்டிப்பா ஏரோபிளேன் பிடிச்சு தான் வர போகுது அந்த பரிசு…” என நிறுத்தியவள், “உங்க மருமகளும், பேரனும் தான் பாட்டி… அங்க படிப்பை முடிச்சதும் இங்க வர சொல்லியிருக்கேன்” என்று சொல்ல,

 

நம்பிக்கை இல்லாமல் அவளை ஏறிட்டார் ராஜேஸ்வரி. “வரேன்னு ஒத்துக்கிட்டாங்களா?” என்றார் ஆசை ஒருபுறம், கலக்கம் மறுபுறமுமாக.

 

அவரது கையை ஆதரவாகப் பற்றியவள், “வரேன்னு சொல்லிட்டாங்க பாட்டி” என்று அழுத்தம் கொடுக்க, அவர் மனம் அடைந்த உவகையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

 

அவரும் மகன் திருமணம் செய்து கொள்ள, அவனாகவே பெண்ணை தேர்ந்தெடுத்த போது, கணவரோடு சேர்ந்து மிகவும் கோபப்பட்டவர் தான். போதாக்குறைக்கு, மகன் இங்கிருக்கும் சொத்து, தொழில் அனைத்தையும் பொறுப்பெடுக்காமல் பட்டாளத்தில் போய் சேர்ந்தது வேறு அவரது மனதிற்கு ஒப்பவே இல்லை. மகனை அருகில் வைத்துக் கொள்ள கூட முடியாமல் தவிப்பவர்களிடம், உறவினர்கள் வேறு அது, இதுவென குறை பேசி… இருக்கும் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டே இருந்தனர்.

 

“இதற்கெல்லாம் உன் மருமகள் தான் காரணம். உன் மகனை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டா… சொந்த பந்தத்தோட வளர்ந்த பொண்ணுன்னா, பெத்தவங்க அருமை தெரிஞ்சிருக்கும். ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு தான…” எனக் கண்டதையும் பேசி பேசியே மருமகள் மீதிருக்கும் கோபத்தை இறங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். அதனால் தான் பிள்ளைகள் பிறந்த பின்னும் மருமகளை அவரால் ஏற்க முடியவில்லை.

 

அருமை பெருமையாய் வளர்த்த மகளும் இல்லை… மகனும் கூட இருக்க மாட்டேன் என்கிறான் என்னும் ஆதங்கம்… இதற்கெல்லாம் மருமகள் தான் காரணம் என ஆணித்தரமாக விதைக்கப்பட்ட எண்ணம்… இதெல்லாமே மஞ்சுளா இங்கு வரும் சமயங்களிலெல்லாம் வெறுப்பை உமிழக் காரணமாய் இருந்தது.

 

ஆனாலும், ராஜேஸ்வரி தன் மகனின் பிடிவாதம் குறித்து யோசிக்க மறந்திருந்தார். பெற்று வளர்த்த தங்களிடமே… பிடிவாதம் பிடித்து ஒரு பெண்ணை மணந்து கொண்டவன், அந்த பெண்ணின் விருப்பத்திற்கா வேலையைத் தேர்ந்தெடுத்திருப்பான் என யோசிக்காது போய் விட்டார். மஞ்சுளா மீது எந்த தவறும் இருந்திருக்காது எனக் காலம் தாழ்த்தி, உறவினர்கள் எல்லாம் தங்கள் குடும்பம், தங்கள் வாழ்வு என ஒதுங்கி நிற்கும்போது, உணர்ந்து கொண்ட சமயம்… காலம் வெகுவாக கடந்திருந்தது.

 

அதிலும் மஞ்சுளா பரமேஸ்வரனை மனமுவந்து இங்கே அனுப்பி வைத்திருந்தது, அவருக்கு குற்றவுணர்வாய் போய்விட்டது. ஏற்கனவே வெற்றி மிலிட்டரி வேலையில் இருக்கிறான் என்று தெரியும். இங்குப் பிரச்சனை என்றதும்… பரமேஸ்வரன் கிளம்பி வந்துவிட… படிக்கும் மகனை வைத்துக் கொண்டு, தனியாகப் பஞ்சாபிலேயே மஞ்சுளா காலம் கடத்தியது அவர் மனதில் மாற்றத்தைத் தொடங்கி விட்டிருந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

அதிலும் பரமேஸ்வரனின் இறப்பு, அப்பொழுது மருமகள் அருகில் இல்லை என்பதிலேயே அவருக்கு அத்தனை குற்றவுணர்வு. தான் வாழ்ந்த சூழலில் அவரால் மன்னிப்பு என்று மருமகளிடம் நேரடியாகக் கேட்க முடிந்ததில்லை. ஆனால், இயன்றவரை இணக்கமாக நடக்கத் தொடங்கினார். ஆனாலும் முன்பே அதிகம் பட்டுவிட்டதாலேயோ என்னவோ மஞ்சுளா ஒதுக்கம் காட்டியது போலத் தோன்றியது. அதிலும் வெற்றி இங்கு வரக் கூடாது என்று சண்டை போட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது மிகவும் மனம் சோர்ந்து போனார்.

 

சரி எதுவானாலும் அவர்கள் விருப்பம். இதுவரை அவர்களுக்கென்று எதையும் செய்ததில்லை. இப்பொழுது போய் எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னோடு வந்து இருங்கள் என அழைப்பது என ஒதுங்கியே இருந்து கொண்டார்.

 

இப்பொழுது, செந்தாமரை இப்படிச் சொல்லவும், உண்மையில் அவருக்கு நம்பவே முடியவில்லை. அவரது முகத்திலிருந்த அலைப்புறுதல் புரிய, “உண்மை தான் பாட்டி. நான் உங்களை ஏமாத்த சொல்லுவேனா?” எனச் சிறியவள் கேட்க,

 

“அச்சோ… அப்படி நினைக்கலை தங்கம்மா…” என நிறுத்தியவர், “அப்படிக் கூப்பிட்டுக்கட்டும் தான?” எனக் கேட்க,

 

“சூப்பரா இருக்கு… அப்படியே கூப்பிடுங்க பாட்டி…” என முகத்தில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒப்புதல் கொடுத்தாள். அவளுக்குப் புரிந்தது, ‘தங்கம்மா’ என்னும் வார்த்தை, அவரது மகளை அழைக்கும் முறையென்று. எத்தனை வருடங்களுக்கு முன்பு இறந்த போன மகளின் நினைவு இன்னமும் வாட்டுகிறதென்றால்… எத்தனை வலி? ஆயிரம் தான் இருந்தாலும் பெற்றவள் அல்லவா! செந்தாமரைக்கு இந்த வயதான அன்னையின் துக்கம் தொண்டையை அடைத்தது.

 

தன் பெற்றோர்களும் இப்படித்தான் தன் அக்கா அன்பழகியை நினைத்து காலத்திற்கும் ஏங்கிக் கொண்டிருப்பார்களோ? எனத் தவிப்பாக இருந்தது அவளுக்கு. அம்மா, அப்பா என்ன… நம்மால் அக்காவை நினைக்காமல் இருக்க முடிகிறதா… அவள் வயிற்றில் உதித்து… உதிர்ந்த மொட்டுக்களை நினைக்காமல் இருக்க முடிகிறதா… என்று கலங்கினாள்.

 

உணர்ச்சி குவியலாக மாறி நின்ற பேத்தியின் தோற்ற வித்தியாசத்தைக் கவனிக்காமல் தன் பேச்சைத் தொடர்ந்தார் ராஜேஸ்வரி அம்மா.

 

“இல்லை உண்மையிலேயே அவங்க இங்க வர ஓத்த்துக்கிட்டாங்களா? அது… வெற்றியும், முத்துவும் அங்க தான் வளர்ந்தாங்க… அவங்க இங்க எப்படி?” நேரடியாகக் கேட்க முடியவில்லை. சுற்றி வளைத்துக் கேட்டார்.

 

தன் யோசனைகளை ஒதுக்கி வைத்து, “வந்துடுவாங்க பாட்டி. இங்க வந்து பிசினஸ் பண்ணறானாம்” என்ன செய்யவிருக்கிறான் என்பது குறித்தும் சொல்ல,

 

“தாராளமா செய்யட்டும் தங்கம்மா…” என்றவரிடம்,

 

“பாட்டி நான் மில்லு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்…” எனச் செந்தாமரை கேட்டாள்.

 

“உன் புருஷன் வர நேரம் தான்…” எனப் பாட்டி சிரிக்க, “பரவாயில்லை பாட்டி, ஒரு எட்டு போயிட்டு வந்துடறேனே…” என்று அனுமதி வாங்கி கிளம்பி விட்டாள்.

 

வந்தவுடனேயே கணவனிடம் சண்டை கட்ட கிளம்பி இருப்பாள். ஆனால், பாட்டி எதுவும் நினைத்துக் கொள்ளக் கூடாதே என்று அவரோடு சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினாள். எப்படி என் நினைவே இல்லாமல் இருக்க முடிகிறது என்ற கோபம்… அவர்கள் காணாமல் போனதற்கும் தன் கணவனுக்கும் எதுவும் தொடர்பு இருக்குமோ என்னும் கலக்கமும், அச்சமும்… இப்படிச் சண்டையிட அவளுக்கு நிறையக் காரணங்கள் அணிவகுத்து நின்றது. அந்த கோபத்தோடு தான் மில்லை நோக்கிச் சென்றாள். மாலை நேரம் என்பதால் வெய்யில் அதிகம் இல்லை. காற்றும் இதமாக வீச, அதை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

 

வெற்றிச்செல்வன் தனக்குக் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் குழப்பத்தோடு ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘நமக்கு ஏன் இதுதொடர்பாக ஒரு விவரங்களும் தெரிய வராமலேயே போய்விட்டது…’ என்னும் ஆராய்ச்சி அவனுக்கு. பேசித் தெளிவு செய்து கொள்ள வேண்டும். இதில் என்னவோ இருக்கிறது… தன் தந்தையின் மறைவுக்குப் பின்னே நிச்சயம் எதுவோ பெரியதாக இருக்கிறது… என உறுதியாக நம்பியது மனம். மிகவும் சஞ்சலமாக, குழப்பமாக இருந்தான்.

 

அந்த சமயத்தில் அவனது அறைக்கு வந்த வீரமணி, அவனைக் காண, ஒரு அம்மா வந்திருப்பதாகத் தகவல் சொன்னான்.

 

“யாரு வீரா? என்ன விஷயம்?” மனச் சஞ்சலத்தில் யாரையும் காண முடியும் என்று தோன்றவில்லை. தவிர்த்து விடலாம் என நினைத்தான்.

 

“பக்கத்து ஊர் பேரைத் தான் சொல்லறாங்க ஐயா. என்ன விஷயம்ன்னு என்கிட்ட சொல்லலை… உங்களைத் தான் பார்க்கணும்ன்னு கேட்கிறாங்க. கொஞ்சம் வயசானவங்களா இருக்காங்க” என்று வீரமணி விளக்கம் சொல்ல,

 

யாராக இருக்கும் என்ற யோசனை எழுந்த போதும், வயதானவர்களைத் திருப்பி அனுப்புவதா என்னும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, “சரி வர சொல்லுங்க” என்று சொல்லி விட்டிருந்தான்.

 

உள்ளே நுழைந்த அம்மாவை, “வாங்கம்மா. உட்காருங்க” என்று அமைதியாக வரவேற்றவனின் பார்வை, அவரது தோற்றத்தை ஆராய்ந்தது. வீரமணி வந்து சொன்னபோது, வேலை கேட்டோ, உதவி கேட்டோ யாரும் வந்திருக்கிறார்களோ என்று நினைத்தவன், இப்பொழுது அவரின் செல்வச் செழிப்பான தோற்றத்தில் மெலிதாக குழம்பினான். தோற்றம் அப்படியிருந்தாலும், முகத்தில் அந்த பொலிவோ, களையோ இல்லாமல் வாடி காட்சியளித்தார்.

 

“சொல்லுங்க ம்மா. என்னை பார்க்கணும்ன்னு சொன்னீங்களாமே என்ன விஷயம்?” என்று வெகு தன்மையாக வெற்றிச்செல்வன் பேச்சைத் தொடங்க,

 

அந்த பெண்மணி தயங்கினர். அவரது முகம் கவலையில் வெகுவாக வாடியிருந்தது.

 

“என்னன்னு சொல்லுங்கம்மா?” அவரது தயக்கத்தைப் பார்த்து மீண்டும் கேட்க,

 

சொல்ல முயன்றாரே தவிர, அவரால் சொல்ல முடியவில்லை. கேவல் ஒன்று எழ… “என்னம்மா அழாதீங்க. என்னை உங்க பிள்ளை மாதிரி நினைச்சு என்னன்னு சொல்லுங்க” முன்பின் தெரியாதவர் என்றாலும், செல்வச் செழிப்பானவர்களாகவே இருந்தாலும்… அவரது முகத்தில் இருந்த கவலை அவனை அவ்வாறு கேட்கத் தூண்டியது.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!