Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 02 )

 

அந்தம்மா வெகுவான தயக்கத்தின் பிறகு, ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இவன் என் மகன். இவனை நாலு மாசமா காணோம் பா… எங்க தேடியும் கிடைக்கலை. யாருகிட்ட கேட்கன்னு வரைமுறை இல்லாம எல்லாருகிட்டயும் கேட்டுட்டேன். இங்கிருக்க ஊர் தலைவருங்க கிட்ட சொன்னா, ஏதாவது தெரியுமேன்னு தான் சுத்து வட்டாரத்துல இருக்க எல்லாருகிட்டேயும் கேட்டுட்டு இருக்கேன்” என விசும்பலோடு கூறினார்.

 



Advertisement

தான் யார், எங்கிருந்து வந்திருக்கிறேன் இப்படி எதைப்பற்றியும் தொடங்காமல் நேரடியாக தன் மகனைப் பற்றி, அந்த அன்னை கேட்டதிலேயே அவர் எவ்வளவு தவித்திருப்பார் என வெற்றிச்செல்வனால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் புகைப்படத்தில் இருக்கும் முகத்தைக் கூட அவன் சரியாகப் பார்க்கவில்லை. அந்த அன்னையின் தவிப்பு… அதிலேயே தேங்கி விட்டான்.

 

இவனும், இவன் அன்னையைத் தவிக்க விட்டு வந்தவன் தானே! அந்த குற்றவுணர்வு எழுந்ததோ என்னவோ? இவனாவது மஞ்சுளாவிற்குத் தெரிந்து, எங்குச் செல்கிறோம் என சொல்லிவிட்டு, அவர் விருப்பமின்மையைப் பொருட்படுத்தாமல் வந்திருந்தான். ஆனால், இந்த அன்னையின் மகனோ எங்கு இருக்கிறான் என்று கூட தெரியவில்லையே! பாவம் இவர்களுக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும்? மனம் அவருக்காக பரிதாபப் பட்டது.

Advertisement

 

Advertisement

இதே நிலைமை தான் சிம்லாவில் இருக்கும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும்! அங்கு அடைபட்டிருப்பவர்கள் எங்கென்று அவர்களது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது! ஏன் உயிரோடு தான் இருக்கிறார்களா என்று கூட தெரியாது! இந்த அம்மா கூட சிம்லாவில் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் மதனின் அம்மா தான்!

 

எதிரில் இருப்பவருக்காகப் பரிதாபப்பட்டவன், அவருக்கு உதவும் பொருட்டு விவரங்களை சேகரித்தான். தான் தொடர்பு கொள்ளும் டிடெக்ட்டிவ் அதிகாரிகள் மூலம், இவர்களது மகனைக் கண்டுபிடிக்கச் சொல்லித் தெரிவிக்கலாம் என்பது அவனது எண்ணம்.

Advertisement

 

கிராமப்புறத்திலேயே வளர்ந்த பெண்மணி என்பதால் இந்த விவரங்கள் கூட புரியாமல், இப்படி முன்பின் தெரியாதவர்களிடம் எல்லாம் கேட்டு அலைகிறார்களே என்று பரிதாபம் எழுந்தது வெற்றிக்கு.

 

[the_ad id=”6605″]

 

 

 

எப்படி இது போன்ற நேரத்தில் அணுக வேண்டும் என்பதை, அந்த அம்மாவிடமும் கூறினான். ‘இது போன்ற விவரங்களுக்குத் துப்பறிவு செய்ய ஆட்கள் இருக்கிறார்கள், அவர்கள் மூலம் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். நீங்கள் கவலையே பட வேண்டாம். உங்கள் கைப்பேசி எண்ணைத் தந்து விட்டு போங்கள். நீங்கள் தந்த விவரங்களை அவர்களிடம் தந்து விடுகிறேன். மேற்கொண்டு எதுவும் விவரங்கள் தேவைப்பட்டால் அவர்கள் உங்களை அழைப்பார்கள்’ என்று விவரங்களைச் சொல்லி, நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தான்.

 

அந்த அம்மாவின் சோர்ந்த தோற்றத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. அவர் கிளம்பியதும், தலையை உலுக்கியபடி அவர் தந்த புகைப்படத்தை எடுக்கப் போனவன், அமைதியாக உள்ளே நுழைந்த தன் மனையாளைப் பார்த்து இன்பமாக அதிர்ந்தான்.

 

செந்தாமரை வந்து சிறிது நேரம் ஆகியிருந்தது. உள்ளே யாருடனேயோ கணவர் பேசிக்கொண்டிருக்கிறார் எனப் புரிய வெளியிலேயே காத்திருந்தாள். காத்திருந்த நேரத்தில் உள்ள நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும், சரியாக மூடாமல் இருந்த கதவின் வழியே தெளிவாகவே கேட்டது.

 

பாதியில் கேட்டதாலோ என்னவோ… அந்த அம்மாவின் மகன் காணோம் என்பது புரிய… அவனைத் தேடி, தன் கணவனிடம் வந்திருக்கிறார்கள் எனப் புரிய… இரண்டையும் அவளாக முடிச்சிட்டுக் கொண்டாள். அதிலும் அந்த அம்மாவிடம் டிடெக்ட்டிவ் மூலம் கண்டு பிடிக்கலாம் எனக் கணவன் ஆறுதல் வேறு சொல்ல… ‘மறைத்தும் வைத்து விட்டு நாடகமும் வேறா?’ என்று அவளுக்கு உள்ளுக்குள் கொதித்தது.

 

‘மறைத்து மட்டும் தான் வைத்தானா? இல்லை அவர்களை வேறு எதுவும் செய்து விட்டானா?’ என்ற பயம் வேறு உலுக்கியது. ‘டிடெக்டிவிடம் செல்லலாம் என்று சொல்கிறான் என்றால்… தடயம் இல்லாமல் மறைத்து விட்டானா? என் கணவன் அத்தனை கொடூர மனம் படைத்தவனா?’ அந்த எண்ணம் எழும்போதே அவளுக்கு உடல் அதிர்ந்தது.

 

அந்த அம்மா வெளியேறவும் தான் செந்தாமரை உள்ளே நுழைந்தது.

 

வெற்றிச்செல்வன் ஏற்கனவே தன் முன்னே இருக்கும் விவரங்களில் ஒருமாதிரி சஞ்சலமான, குழப்பமான மனநிலையில் இருந்தான். இப்பொழுது இந்த அம்மாவைப் பார்த்த பிறகு, இவனுக்கு இவன் அன்னை மஞ்சுளா நினைவு வந்திருக்க… அவர்களை விட்டுவிட்டு வந்ததை நினைத்து குற்றவுணர்வாய் இருந்தது.

 

இந்த சமயத்தில் மனைவியைப் பார்க்கவும்… என்னவோ ஆறுதலுக்குத் தோள் சாய ஒரு இடம் கிடைத்த மகிழ்வு அவனுக்கு. உள்ளே நுழைந்தவளைக் கண்டு இன்பமாக அதிர்ந்தவன், அவளருகே நெருங்கிச் சென்று, “வந்துட்டியா…?” எனப் பூரிப்போடு கேட்டு, அணைத்தும் கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அப்படியொரு நெருக்கமான அணைப்பு. என்னவோ அவன் சஞ்சலங்கள் எல்லாம் மனைவியின் அருகாமையில் தொலைந்து விடும் என நினைத்து விட்டான் போல!

 

“செந்தூ… இருந்துட்டு வான்னு சொன்னா… அங்கேயே டேரா போட்டுடுவியா? புருஷன் ஞாபகமே வராதா? இத்தனை நாளா என்னை பார்க்காம இருக்க முடியுதா உனக்கு?” என பேசிக்கொண்டே அணைப்பை மேலும் இறுக்க,

 

அவன் செல்லம் கொஞ்சுவான் தான். பெரும்பாலும் ‘மாஹி’ என்றே அவனது பிரத்தியேக அழைப்பு இருக்கும். இப்படிப் பெயர் சுருக்கம் சொல்லி எல்லாம் அவன் இதுவரை அழைத்ததே இல்லை. அதோடு… என்னவோ தான் கேட்க நினைத்ததை எல்லாம்… அவன் முந்திக்கொண்டு கேட்கவும்… அவளுக்கு, தான் கொண்ட கோபமே மறந்து விடும் போல இருந்தது. அவனது அணைப்பிலேயே கட்டுண்டு கிடந்தாள்.

 

அணைப்பு வேறு இறுகிக் கொண்டே போகவும் தான் தன் நினைவே வந்தது.

 

“இது நல்ல கதையா இருக்கே!” என அவள் முனகலாகக் கூறவும்,

 

“என்ன சொன்ன?” அவளது முகத்தை மட்டும் தன்னில் இருந்து பிரித்துக் கேட்டான்.

 

“என் ஞாபகம் துளி கூட இல்லாம இங்க இருக்கீங்க, இதுல நான் உங்களை மறந்துட்டேனா?” என முறைப்புடனே கேட்க,

 

“ஹே… நீ தான அங்க இருக்கிறேன்னு அடம் பிடிச்ச… இப்ப என்னை குறை சொல்லற?”

 

“அங்க நான் இருந்தா… போன் கூட பேச மாட்டீங்களா?”

 

“உதை விழும்… தினமும் தானே போன் பேசுனேன்…” என்று அவன் கூறியதற்கு முறைப்பு மட்டுமே பதில்.

 

“என்ன என்ன? எதுக்கு இப்படி முறைக்கிற…?”

 

“ம்ப்ச்… விடுங்க… நீங்க பேசுன அழகென்னன்னு உங்களுக்கே தெரியும். நான் வேற சொல்லி காட்டாட்டி என்ன?” என்று சலிப்போடு கூற,

 

அவளது தாடையைப் பற்றி நிமிர்த்தியவன், “உன்கிட்ட முன்னமே சொல்லி இருக்கேனே…” எனக் கூற,

 

“ஆமா, சொன்னீங்க… நானும் மண்டையை நல்லா உருட்டினேன் தான். அதுக்காக இப்படியா? நிச்சயம் முடிஞ்சு கண்டுக்கவே இல்லை சரி… ஆனா புது பொண்டாட்டியைப் பத்தி கொஞ்சம் கூட, நினைப்பு வராம இருந்தா என்ன சொல்ல? கொஞ்சம் கூட என்னோட பாதிப்பு உங்ககிட்ட இல்லையா? எப்ப வருவேன்னு ஒரு நாள் கேட்டிருப்பீங்களா? இல்லை இருந்தது போதும், டிக்கெட் புக் பண்ணறேன் கிளம்பி வான்னு சொல்ல தோணுச்சா? இப்பவே என்னால உங்களை இழுத்து பிடிக்க முடியலையோன்னு கவலையா இருக்கு… இன்னும் படிப்பு, வேலைன்னு உங்க கவனம் அதுல மட்டும் இருந்துட்டா… உங்க கூட, உங்க வீட்டுல… ஏதோ ஒரு மூலையில நானும் இருக்க வேண்டித் தான் வரும்… அப்படித்தான எனக்கான எதிர்காலம்…” அவள் பேசப்பேச அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

 

முகம் விழுந்துவிட, “இப்ப செய்யறது கொஞ்சம் ஆபத்தான வேலை. அதுனால தான்… இதே மாதிரி எல்லா சமயமும் இருக்காது” ‘என்னை நம்பேன்’ என்னும் பாவனையில் வெற்றிச்செல்வன் சொல்ல, அவள் மனம் அந்த ‘ஆபத்தான வேலை’ என்பதிலேயே சிக்குண்டது.

 

அவனிடம் அதுகுறித்து எந்த முன்னுரையையும், விளக்கவுரையையும் கேட்காமல், தனது விசாரணையைத் தொடங்கி விட்டாள்.

 

“இப்ப வந்துட்டு போனது யாரு?”

 

செந்தாமரை சம்பந்தமே இல்லாத பேச்சிற்குத் தாவி விடவும், வெற்றிக்குக் குழப்பமாக இருந்தது. “அந்த அம்மாவா… அவங்க, அவங்களோட பையனை காணோம்ன்னு கேட்க வந்தாங்க…” என அதே குழப்பத்தை முகத்தில் காட்டியபடி பதிலை சொல்லியிருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஏன் இங்க வந்தாங்க?” என்றவளின் குரலில் ஸ்ருதி ஏறி இருக்க, புருவங்களைச் சுருக்கியபடியே, “அது…” எனப் பதில் சொல்லத் தொடங்கியவனை,

 

கையுயர்த்தித் தடுத்தவள், “தொலைச்ச இடத்துல தானே தேட முடியும்…” என இகழ்ச்சியாகக் கூற, வெற்றி அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

 

“ஆனா, என்ன அழகா சொல்லி அனுப்பி வெச்சுட்டீங்க. விவரம் வாங்கிட்டீங்க… டிடெக்ட்டிவ் கிட்ட தர போறீங்க… அவங்க கண்டுபிடிப்பாங்கன்னு… உண்மையை சொல்லுங்க டிடெக்ட்டிவ் கிட்ட தர போறீங்களா? இல்லை டிடெக்ட்டிவ் தேடினாலும்… கிடைக்காத மாதிரி தடயத்தை மறைச்சுட்டீங்களா?” செந்தாமரையின் குரலின் தொனி மாறியதில், அவள் கேள்வி கேட்கும் விதத்தில் வெற்றிச்செல்வன் எரிச்சலுற்றான்.

 

“என்ன உளறிட்டு இருக்க?” அழுத்தமாக அவன் கேட்க, அதைக் கண்டு கொள்ளாதவள்,

 

“நான் உளறுறேனா? இல்லை உங்க மறுபக்கத்தை தெரிஞ்சுட்டேன்னு கோபம் வருதா?”

 

“உனக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சிடுச்சா… ஏதோ ஒரு அம்மா, ஏதோ ஒரு பையனை காணோம்ன்னு சொல்லிட்டு போறாங்க… அதுக்கு ஏன் என் தலையை உருட்டுற…” என குரலை உயர்த்தினான்.

 

“அந்த ஏதோ ஒரு அம்மா, ஏதோ ஒரு பையனை காணோம்ன்னு… உங்ககிட்ட ஏன் வந்து சொல்லணும்”

 

“அதை போய் அவங்ககிட்ட கேளு… தினமும், எத்தனை பேருகிட்ட சொல்லிட்டு இருக்காங்கன்னு அவங்களே சொல்லுவாங்க…” சலிப்பும், எரிச்சலுமாக அவன் கூற, அவள் முகம் யோசனையில் இருந்தது.

 

“என்னை ஏமாத்த பாக்கறீங்க…” என நிதானமிழந்து கத்தினாள்.

 

“ஆமா, எனக்கு வேற வேலை இல்லை…” அவள் கத்தியதில் எரிச்சலாக மொழிந்தான்.

 

“சும்மா… அந்த அம்மாவை ஏமாத்துன மாதிரி என்னையும் ஏமாத்த முடியாது. சரி அந்த அம்மா பையனை காணோம் அது உங்களுக்கு தெரியலைன்னே வெச்சுக்குவோம். இங்க ஒருத்தன் கையை உடைச்சீங்களே, அந்த டீச்சர் அவன் எங்க? நான் இங்க வந்ததும், என்னைப்பத்தி விசாரிச்சு… எங்க அக்கா வீட்டுக்காரர் சுந்தரேசனை அந்தியூருக்கே தேடிப் போய் அடி வெளுத்தீங்களே அவன் எங்க?”

 

“என்ன உளறுற? அவனுங்களை அடிக்கத் தானே செஞ்சேன்… இல்லை உயிரோட குழி தோண்டி புதைச்சுட்டேனா? சும்மா அவங்க எங்க அவங்க எங்கன்னு…”

 

“ஆஹா நல்லா இருக்கு உங்க நடிப்பு? ஊருக்கு முன்ன அடிக்கிறதும்… யாருக்கும் தெரியாம அவங்களை எதுவும் செய்யறதும்… எல்லாரையும் என்ன செஞ்சீங்களோ யாருக்கு தெரியும்?” தான் சொல்வதே சரி என்று பேசுபவளிடம் என்ன பதில் சொல்ல முடியும்.

 

எதிரில் இருப்பவனைப் பேச அனுமதிக்க வேண்டும். அல்லது பேசுவதைக் கவனிக்க வேண்டும். இரண்டுமே செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டுகிறாள். அதையாவது தெளிவாகச் சொல்கிறாளா என்றால் அதுவும் இல்லை. அவனுக்கு எரிச்சல் அதிகமானது. கோபத்தில் எதுவும் ரசாபாசம் ஆகிவிடுமோ என்று பயம் கூட எழுந்தது. பேசும் மனைவியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனையும் அறியாமல்!

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!