Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 24 ( PART 02 )

 

வெற்றியோ, மீண்டும் “போ…” என அந்த இடமே அதிரும் படி கத்த நொடிக்கு நொடி ஏறும் அவன் கோபத்தைக் கண்டு வெடவெடத்தவள்.

 



Advertisement

அவனின் கைகளில் என்னவாயிற்று என்று ஆராய வேண்டும் என்று மனம் உந்தினாலும், அவனது வார்த்தைகள் அதிக வலியைத் தந்தது. அதோடு தான் இங்கு இருக்க இருக்க அவன் கோபம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வேறு வழியே இல்லாமல் அந்த அறையிலிருந்து அவசரமாக வெளியேறினாள்.

 

 

Advertisement

‘என்னை எப்படி அவன் அப்படி சொல்லலாம்?’ அவளுக்கு மனது ஆறவே இல்லை. திருமணம் உறுதியானதிலிருந்தே எத்தனை முறை திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பான், அப்பொழுதே எனக்கு மனம் தாங்காதே! இப்படி மனைவி என்ற உரிமையை ஊரைக்கூட்டித் தந்த பிறகு, என்னை வேண்டாம் என்று விட்டானே! மனம் ஒருநிலையில் இல்லாமல் தத்தளித்தது.

Advertisement

 

‘என்னைப் பார்க்க வேண்டாமாமே! சரி பார்க்க வேண்டாம். அப்படிப் போய் அவனைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மட்டும் என்ன?’ வீம்பாக மனம் பயணித்தாலும் முரணாக கண்களில் கண்ணீர் பெருகியது. எத்தனை முறை அழுந்த துடைப்பது? நிற்க மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்யும் கண்ணீரை அவளும் என்ன செய்வாள்?

 

Advertisement

வெளியே வந்து கேட்டை நோக்கிச் செல்ல, இவள் பின்னேயே வீரமணி ஓடிவந்தான். “வண்டியில ஏறுங்க மா. வீட்டுல விட்டுடறேன்”

 

பதில் கூடச் சொல்லும் நிலையில் இல்லாமல், பேசாமல் சென்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அழுது கொண்டே சென்று வேறு ஊருக்கே காட்சிப் பொருள் ஆக வேண்டுமா?

 

[the_ad id=”6605″]

 

 

 

பாண்டியும் இவளது கண்ணீரைக் கவனித்திருந்ததால், பேசாமல் வண்டியை வீட்டிற்குக் கிளப்பி விட்டான். வீரமணி உடன் செல்லவில்லை. வெற்றி வந்தால் விவரம் சொல்ல வேண்டுமே! பின்னாடியே வருவான் என எதிர்பார்த்தான். ஏன் செந்தாமரைக்கும் கூட அந்த நப்பாசை இருந்தது.

 

ஆனால், வெற்றி வரவில்லை. எதிலோ தோற்றுப்போன உணர்வில் சீற்றமாய் இருந்தான். அவனால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. ‘அவள் எப்படி என்னை நம்ப மறுக்கலாம்? அதிலும் என் விளக்கங்களை முன் வைத்த பிறகும்…’ அவன் மனக்காடு பற்றி எரிந்தது. அந்த தணல் அவன் முகத்திலும் தெறித்தது.

 

 

வீடு வந்து சேர்ந்த செந்தாமரை ராஜேஸ்வரியிடம், “பாட்டி நான் பஞ்சாப் போறேன். பிளீஸ் ஏன் எதுக்குன்னு கேட்காதீங்க. உங்க பேரன் வந்தாலும் என்னைப்பத்தி எதுவும் பேசாதீங்க. அவர் கேட்க மாட்டாரு… ஒருவேளை கேட்டா… நான் எங்க போனேன்னு தெரியாது சொல்லிடுங்க” அழுது சோர்ந்த விழிகளோடு, தவிப்பாகச் சொன்னவளிடம் எதையுமே அவரால் மறுக்க முடியவில்லை.

 

“தங்கம்மா…” என்னவோ சரியில்லை எனப்புரியக் கலக்கமாக எதையோ சொல்ல வர,

 

“பிளீஸ் பாட்டி… எதையும்… எதையும் கேட்டுடாதீங்க” இதழ்களைக் கடித்து கண்ணீரை அடக்க முயன்று தோற்றாள். மனதின் கணம் தாங்காமல் அவரது மடியில் வீழ்ந்து அழ, பெரியவர் மிகவும் பதறிப் போனார்.

 

“என்ன சொன்னான் அவன்?” பாட்டி கோபமாக இரைய,

 

“பிளீஸ் பாட்டி… என் பேச்சே இந்த வீட்டுல எழ கூடாது…” என்றவள், அடுத்து முத்துவை அழைத்து பாட்டியிடம் செய்த பிடிவாதத்தையே செய்தாள்.

 

“அண்ணி இன்னைக்கு தான அங்க போனீங்க. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க. அந்த தடியன் எல்லாம் ஒரு ஆளா?” என்று அவனும் கத்த,

 

“இப்ப நான் அங்க வரவா? இல்லை வேற எங்கேயாவது போகவா?” அவளது அழுகையோடான மிரட்டல் நன்கு வேலை செய்தது.

 

“இருங்க உங்களை ட்ராப் செஞ்ச வண்டியே இருக்கும். அதையே அனுப்பி விடறேன்” என்று அவன் ஒப்புக் கொண்டான்.

 

“நான் அங்க தான் வரேன்னு யாருக்கும் தெரியக் கூடாது” என்று அடுத்த கட்டளையைப் போட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அண்ணி காலையில வரைக்குமாவது பொறுமையா இருங்களேன்…” அவனது எந்த பேச்சும் அவளிடம் எடுபடவில்லை.

 

கொஞ்சம் உடைகளோடு கிளம்பியவளை, அந்த நேரத்தில் எப்படி தனியாக அனுப்ப என ராஜேஸ்வரி வெகுவாக கலங்கிப் போனார். அவர் பயத்திற்காக வீட்டில் வேலை செய்யும் நம்பிக்கையான ஒரு ஆளையும், அவர் மனைவியையும் உடன் அனுப்பி வைத்தார்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் வண்டி வந்துவிட, அதிலேயே சென்னை நோக்கிப் புறப்பட்டவள், முத்து புக் செய்திருந்த விமானத்தில் கிளம்பி பஞ்சாப் வந்து சேர்ந்திருந்தாள்.

 

அதீத அலைச்சல். போனவுடனேயே திரும்பி வந்திருந்தாள். அதிலும் விமான நிலையத்தில் வேறு வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாய் போனது.

 

இங்கு வெற்றிச்செல்வன் நிலைபெறவே சில நேரம் ஆனது. நிலைபெற வேண்டிய கட்டாயம் என்று கூடச் சொல்லலாம். அவனைக் கலைத்தது ஒரு அலைப்பேசி அழைப்பு. அவன் நியமித்திருந்த டிடெக்டிவ் நிறுவனத்திலிருந்து தான் அழைத்திருந்தார்கள்.

 

சந்தன பாண்டியார் அடுத்த தேர்தலில் MLA கேண்டிடேட்டாக நிற்கலாம் என்னும் பேச்சு அடிபடுவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

 

இதென்ன புது வம்பு என்றாகிவிட்டது அவனுக்கு. ஏற்கனவே அரசியல் பின்புலம் இருப்பவர் என்று தெரியும். இப்பொழுது இது வேறா என்று எரிச்சலாக வந்தது. தேர்தலில் நின்று வென்று விட்டால், அவனை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. சட்டப்படி தண்டனை வாங்கித்தருவதும் பெரும் சிக்கல் ஆகிவிடும்.

 

அதோடு தேர்தல் அறிவிப்பு வந்தபிறகும் இப்படிச் சிக்க வைப்பது சற்று சிரமமே! எதிர்க்கட்சியின் சதி என்று எளிதில் முடித்து விடுவார்கள். ஆகவே உடனடியாக முடிக்க வேண்டிய கட்டாயம். தேர்தல் பற்றி எந்தவித அறிவிப்பும் வரும் முன்னர், அனைத்தையும் முடித்தாக வேண்டும்.

 

தன்னிடம் இருக்கும் விவரங்களை வைத்து, அந்த ஆதரவற்ற பெண்கள் மையத்திற்கு அந்த மாலை மங்கி இரவு கவிழ்ந்த நேரத்திலும், தாமதிக்க மனமின்றி பயணப்பட்டிருந்தான்.

 

டிடெக்டிவ் அதிகாரிகள், சந்தன பாண்டியரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்பதை அனுப்பியிருந்தார்கள். யாரைக் காப்பாற்றப் போய் தன் தந்தைக்கு இந்த நிலையோ, அவர்களின் விவரங்கள் அவனுக்குக் கிடைத்திருந்தது. அந்த பெண்கள் இருக்கும் மையத்திற்குத் தான் அந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

 

“ஐயா இந்த நேரத்துல…” வீரமணிக்கு ஆயிரம் தயக்கம் இருந்தாலும் கேட்டுவிடுவானே! இன்றும் கேட்டு வைத்தான். வழக்கமாக முறைத்துக் கொண்டேயாவது எதையும் பதிலாக சொல்லும் வெற்றிச்செல்வன், இன்று சுத்த மௌனம்.

 

வெற்றி சொன்ன இடத்திற்கு வாகனத்தை விட, அவர்கள் அங்கு வழக்கமாக வருவது தான். பரமேஸ்வரன் ஐயா இருந்த போதிலிருந்தே, நெல் மூட்டைகள் அனுப்பி விடுவார்கள். சிலமுறை பணம் தரவும் வந்திருக்கிறார்கள். ஆனால், இப்படி நேரம் கெட்ட நேரத்தில் வந்ததில்லை.

 

அதுவே வீரமணிக்கும், பாண்டிக்கும் சங்கடத்தைத் தர, வெற்றிக்கு எந்த சங்கடமும் இல்லை. அவனுக்கு வெகு பரிட்சியமான இடம் தானே! நேராக அலுவலக அறைக்குப் போக, இந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத அந்த இடத்தின் தலைவியான முன் நாற்பதுகளில் இருந்த அந்த அம்மா, இவனை ஆச்சரியமாக வரவேற்றார்.

 

“வாப்பா வெற்றி. என்ன திடீர்ன்னு இந்த பக்கம்?”

 

[the_ad id=”6605″]

 

 

 

“அம்மா, இங்க நான் மாச மாசம் வருவேன். நீங்க கூட இதைப்பத்தி எதுவும் சொன்னதில்லையே!” சம்பிரதாய வார்த்தைகள் எதுவுமின்றி நேரடியாக அவன் கேட்டுவிட, என்ன கேட்கிறான் இவன் என்று புரியாமல் யோசித்தார்.

 

அவரது குழப்பம் உணர்ந்து, அந்த இரண்டு பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, “இவங்க விஷயத்துல அப்பா தலையிட்டிருக்காரு. அதுனால சந்தன பாண்டியருக்கு அப்பா மேல பகை இருந்திருக்கு. இதை ஏன் நீங்க எங்கிட்ட சொல்லலை”

 

“இந்த விஷயம் உனக்குத் தெரியாதா?” ஆச்சரியமாக அந்த அம்மா கேட்டார்.

 

“எனக்கெப்படி தெரியும்?” சலிப்புடன் கேட்டான்.

 

“நிர்மலாம்மா சொல்லலையா? அப்பறம் கலெக்டர் ஐயா உனக்குப் பாதுகாப்புக்கு ஆள் ஏற்பாடு செஞ்சப்ப எப்படி ஒத்துக்கிட்ட?” இன்னும் அதே ஆச்சரியம் தான் அந்த அம்மாவிற்கு.

 

சேலம் கலெக்டர் புருஷோத்தமனும், அவரது மனைவி நிர்மலா தேவியும் பரமேஸ்வரனுக்கு நல்ல நண்பர்கள். நிர்மலா தேவி தலைமை ஏற்க வேண்டியதாக இருந்த கல்லூரி விழாவிற்குத் தான், அவர் செல்ல முடியாமல் பரமேஸ்வரன் சென்று செந்தாமரையைச் சந்தித்தது.

 

“என்னம்மா நீங்க? அப்பா விபத்துல இறக்கலை, அது சதின்னு எல்லாரும் சொல்லறாங்க. அம்மா, தம்பி என்னை இங்க அனுப்பவே முடியாதுன்னு பயந்தாங்க. அப்பத்தாவும் ரொம்ப பயந்தாங்க. அந்த சமயத்துல மாமா கேட்கும்போது நான் மறுக்க முடியுமா? அதான் பாதுகாப்புக்கு இருக்கட்டும். உங்க விருப்பம்ன்னு சொல்லிட்டேன். எனக்கு இந்த ஊரும் அந்த சமயத்துல பரிட்சயமில்லை. அதோட, பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லாம, என்னை இங்க இருக்க யாரும் ஒத்துக்கலையே!” என்று விளக்கம் தந்தான்.

 

“அவங்க சொல்லி இருப்பாங்க நினைச்சேன் ப்பா” அவருக்கும் மிகவும் சங்கடமாக இருந்தது.

 

“ம்ப்ச்…” என்றவன் மணியைப் பார்த்தான். வெகு நேரம் ஆகியிருந்தது. இந்த நேரத்தில், புருஷோத்தமன் வீட்டுக்குப் போவது சரிவராது என்று தோன்றியது. என்ன இருந்தாலும் அவர் இந்த மாவட்டத்தின் கலெக்டர். இந்த நேரத்தில் போய் பார்ப்பது முறையாக இருக்காது என்று புரிந்தது.

 

“சரிங்கம்மா. அத்தை, மாமாகிட்ட நான் வந்து கேட்டதை பத்தி எதுவும் சொல்லாதீங்க. நான் காலையில அங்க போய் பார்த்துக்கறேன்…” என்று அவரிடம் கூறியவன் கிளம்பி விட்டான்.

 

மனமெல்லாம் சஞ்சலம். இந்த சந்தன பாண்டியை எப்படி ஒழிப்பது என்பது போல! ஒருவழியாக வீடு போய் சேர, செந்தாமரை அறையில் இல்லை. அவள் எங்கு சென்றிருக்க கூடும் என்று எரிச்சலாக நினைக்க, தன்னையும், தன் வீட்டையும் கண்காணிக்கும்… புருஷோத்தமன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களை அழைத்து விசாரித்தான்.

 

அவர்கள் விவரம் சொல்லவும், ‘போகட்டும் எனக்கென்ன? கோபம் வர வேண்டியது எனக்கு? இவ என்னை விட்டு போவாளாம்’ என் வீம்பாக எண்ணியவன், அவளை அழைக்க பிரியப்படாமல், உணவை கூட தவிர்த்து… உறங்கியிருந்தான்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!