Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்11

       நந்தா தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து ஏதோ ஒரு ஆர்ட்டிக்களை வெகுசுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்க.. அவனைத் தொல்லை செய்வது போல அருகில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருக்க.. லேப்டாப்பில் இருந்து தலையை உயர்த்திப் பார்க்க.. அங்கே மகிழின் வீட்டு மாடியில் பத்து பதினைந்து வாண்டுகள் அவளைச் சுற்றியபடி.. உல்லாசமாக ஏதோ பேசிக்கொண்டு (கத்திக் கொண்டு) இருக்க.. சந்தக்கடை எஃபக்ட்.

       ‘ஓஓ.. மேடம் டியூசன் எடுக்கறாங்க போல’ என சுவாரஸ்யமாக அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் ஹோம்வொர்க்கைச் சொல்லி முடித்து.. தன் கையில் வைத்திருந்த ஒரு ஜெராக்ஸ் மெட்டீரியலில் பார்வையைப் பதித்தாள்.

        அது பொறுக்காத வாண்டு ஒன்று “அக்கா எனக்கு இந்த கொட்டாய் மட்டும் சரியா வரைய வரலை.. வரைஞ்சு குடு” என்க.. மகிழ் குழம்பி “மேத்ஸ் புக்ல ஏதுடி கொட்டாய்.. எங்க காட்டு” என வாங்கிப் பார்த்தவள்.. அதில் இருந்ததைப் பார்த்ததும் சிரித்துவிட்டு “அடியே இது கொட்டாய் இல்லை.. பென்டகன் ஷேப்.. என்னதான் ஸ்கூல்ல சொல்லித் தராங்களோ” என அந்தச் சுட்டிப் பெண்ணின் தலையில் கொட்டிவிட்டு அவள் கைபிடித்து வரைய ஆரம்பித்தாள்.

         அவள் தங்கள் பள்ளியைப் பற்றித்தான் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறாள் என அறிந்தும்.. அவள் சிறுபிள்ளைகளுக்கு சமமாய் அவர்கள் போக்கில் சென்று படிக்க வைத்துக் கொண்டிருப்பதை அவள் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.



Advertisement

     அந்தக் குட்டிக்கு சொல்லி முடித்துவிட்டுத் திரும்பியவள்.. அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தாவைப் பார்த்துவிட்டாள்.. அவளைப் பொறுத்தவரையில் அவன் ‘எனிமி’ ‘அனகோண்டாவின் பேரன்’ மற்றபடி அவன் மீது ஈர்ப்போ அல்லது வேறு எதுவுமோ ஒன்றுமில்லை.. ஆனால் அப்படி ஒன்று அவன் மீது அவளுக்கு வரும்போது அது அவள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என அவள் அறிந்திருக்கவில்லை.

       அவன் இவளை சுவாரஸ்யமாகப் பார்ப்பதை இளக்காரமாகப் பார்ப்பதாக எண்ணியவள் ‘கண்ணை நோண்டி காக்காய்க்கு போடனும்’ என அவன் காது படவே முணுமுணுத்தாள்.. அவனும் மெல்லமாக சிரித்தபடி தலையை லேப்டாப்பிற்கு திருப்பி.. அதை ஷட் டவுன் செய்ய.. ‘அப்பாடி.. கடையை மூடிட்டான்’ என இவள் மகிழ.. அவன் தன் ஃபோனைக் கையில் எடுத்து ஏதோ நோண்ட ஆரம்பித்தான்.

      அவள் என்னவோ பண்ணித் தொலையட்டும் என்றபடி தன் படிப்பில் கவனத்தைச் செலுத்தியவாறே குழந்தைகளின் ஹோம்வொர்க் முடித்து.. தினப்படி வழக்கமாக ஒரு திருக்குறளைக் கொடுத்து அதற்கு பொருள் விளக்கி.. அதையும் மனனம் செய்ய வைத்து அனுப்பி வைத்துவிட்டு கீழே சென்றாள். அது வரையிலும் நந்தா அங்கிருந்து நகராமல் இருந்தான்.

Advertisement

     அவள் போன பிறகு ஒரு நெடுமூச்சுடன் தலையைக் குலுக்கிக் கொண்டவன்.. எழுந்து நடக்க ஆரம்பித்தான்.. இரண்டு நாட்கள் முன்பு அவன் நினைத்தது என்ன.. இப்போது செய்தது என்ன என அவன் மனம் குத்தியது.

Advertisement

       அவன் அத்தையின் வாழ்க்கை பதின்பருவத்திலேயே முடிய.. ஒருசில வருடங்கள் கழித்து மீண்டும் திருமணப் பேச்சுத் துவங்க.. ரேவதி ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.. இவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.. ஆனால் அவளோ தன் தவறு எதுவுமே இல்லாத பட்சத்தில் தன் மீது விழுந்து பழியை எண்ணி பயந்தார்.. நாளை மற்றொருவனிடம் அது குறித்து விளக்கி.. தனக்கு ஒரு வாழ்வை வேண்ட அவள் விரும்பவில்லை.

     அத்தை இப்படியிருக்க தான் மகிழ் மீது விருப்பம் கொள்வது எவ்விதத்தில் சரியாக இருக்கும்.. எனவே இவை அத்தனையும் மறந்துவிட வேண்டும் என எண்ணினான்.. அதென்னவோ அவள் விஷயத்தில் மட்டும் அவன் யோசனையும், தீர்மானங்களும், செய்கைகளும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் முரண்பட்டுக் கொள்கின்றன.

      அவளை மறக்கவும் முடியாமல்.. வீட்டை ஒதுக்கவும் முடியாமல் மனம் தத்தளிக்க தன் கால்கள் ஓயும் வரை நடந்தவனுக்கு.. இந்த நேசம் கை கூடுவதற்கான எவ்வித சாத்தியக் கூறுகளும் தெரியவில்லை.

Advertisement

         இவை அனைத்திற்கும் காரணம் ரகு தானே.. அவன் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் தன் அத்தை வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும்.. தானும் இங்கே இப்படி தயக்கத்தில் இருந்திருக்க வேண்டாம் என.. ரகு மேல் கொலைவெறி தான் வந்தது.

         நாயகனின் மன வருத்தங்கள் எதுவும் எட்டாமல் ‘எப்பத்தான் இந்த வெள்ளிக்கிழமை வருமோ’ என்ற புலம்பலுடன் கல்லூரிக்குக் கிளம்பினாள் மகிழினி.. காரணம் ஆண்டு இறுதியென இன்டர்னல், மாடல், ரெக்கார்ட், அசைன்மெண்ட், ப்ராக்டிக்கல் என அனைத்தும் ஒன்று கூட கும்மி அடிக்க.. எப்படா செமஸ்டர் வரும் என ஏங்கவே ஆரம்பித்திருந்தாள்.. அவள் நினைவு முழுதும் அதுவாகத் தான் இருந்தது.. மற்றபடி நந்தா என்ற ஒருவன் அவள் கண்ணில் பட்டாலும் கருத்தில் எல்லாம் நிறையவில்லை.

      தன் சைக்கிளை ஸ்பாட்டின் மெக்கானிக் ஷெட்டில் விட்டவள்.. அவனைத் தேட.. அவனோ ஸ்பேனரும் கையுமாய் ஒரு இருசக்கர வாகனத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க “அண்ணே.. இந்த மெக்கானிக் வேலையை எப்படிண்ணே கத்துகிட்டிங்க” என அவனிடம் கேட்க

       அவளை நிமிர்ந்து முறைத்தவன் “காலையிலயே காமெடி சேனல் பாத்தா நீ எல்லாம் எங்க உருப்பட போற” என இவள் புறம் திரும்பாமலேயே சொல்ல..

       அவனைப் பார்த்து இளித்தவள் “கண்டுபிடுச்சுட்டிங்களா.. வெரிகுட்.. அப்படியே கவனமா என் செல்லத்தையும் பாத்துக்கோங்க” என்றவளிடம் வந்தவன் “உனக்கே ஓவரா இல்லை.. இந்த ஓட்டை சைக்கிள்க்கு என்னை காவல் வச்சுட்டுப் போற.. சுத்திப் பாரு.. இவ்வளவு வண்டி இருக்கும் போது உன்னோட இந்த தகரத்தை தூக்க திருடன் வருவானா” என கடுப்படித்தான்.

       களுக்கென சிரித்தவளைக் கண்டு இன்னும் முறைத்தவள்.. அவள் சைக்கிளை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி “பேக்வீல் டயர் மோசமா இருக்கு.. அதுக்கு இருநூறு ரூபா செலவு செய்யாம சுத்திட்டு இருக்க.. இந்த லட்சணத்துல இதுக்கு நான் காவலா” என்க.. “பைசா சும்மாவா வருது.. எனக்கே போகவர அளவாத்தான் கொடுக்கறாங்க” என புகார் வாசிக்க

     “அடேங்கப்பா.. நீ ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.. நீயே இப்படிச் சொன்னா.. ஏழைபாழைங்க நாங்க எல்லாம் என்ன செய்யறது” என என்றும் உள்ள வழக்கம் போல இருவரும் மொக்கை போட்டுக் கொண்டிருக்க.. நந்தா அங்கே பிரசன்னமானான்.

      அவனைக் கண்டு மலர்ந்து சிரித்த ஸ்பாட் “வா மச்சி.. இப்பத்தான் உன்னைப்பத்தி பேசினேன்.. நூறு ஆயுசு” என்க.. மகிழ் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் நழுவ.. நந்தா என்னவெனக் கேட்டதற்கு இத்தனை நேரம் நடந்த சம்பாஷனைகளைப் பற்றிக் கூற.. அதைக் காதில் வாங்கியபடியே மகிழை வெறிக்க.. அது அங்கே ஒரு வேலையாய் வந்த ரகுவின் கண்களில் விழுந்தது.

      தான் வாலிப வயதில் யோசிக்காமல் செய்த செயலின் விளைவால் ஒருத்தி வாழ்வு பறிபோயிருக்க.. அவனும் தன் திருமணத்தை வெறுத்திருந்தான்.. அதற்கும் ஊரார் எதாவது சொல்லிக் கொண்டிருக்க.. அவன் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டவனாய் இருந்தான்.

       இந்நிலையில் நந்தாவின் பார்வை மகிழ் மேல் படர்வதை அவன் சுத்தமாக விரும்பவில்லை.. அவன் தங்கள் மீது உள்ள பழிவெறியில் மகிழை ஏதேனும் செய்துவிடுவானோ எனப் பயந்தான்.. இதை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்து அவன் செய்த செயல்.. ஒரு தவறுக்குத் தொடக்கப்புள்ளி ஆகியது தான் விந்தை.

      ஸ்பாட்டின் ஷெட்டில் இருந்து வெளியே வந்த மகிழ்.. ரகுவைக் கண்டு சிரித்தவாறே பேச.. அதைக் கண்ட நந்தாவின் விழிகளில் சினம் குடியேறியது.. அதைக் குறித்துக் கொண்ட ரகுவிற்கு அவன் எண்ணம் வலுப்பெற்றது.

      அதன்படி மகிழ் பஸ் ஏறும் வரையில் அவளுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தான்.. பின்னர் நேராக ஸ்பாட்டின் ஷெட்டுக்குச் சென்றவன் நந்தாவிடம் “கண்ணாகிட்ட இருந்து ஒதுங்கி இரு.. அதான் எல்லாத்துக்கும் நல்லது” என்றான் நேரடியாக

      அவன் சொன்னதைக் கேட்டு நந்தாவிற்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை.. சற்று முன்னே மகிழை கவனமாய் பஸ் ஏற்றி விட்டதை அவனும் கவனித்தான் தானே.. இதழ்கள் வளைய “சாத்தான் வேதம் ஓதுதோ.. நீ எங்க வீட்டுப் பொண்ணு வாழ்க்கையில விளையாண்டப்பத் தெரியலை.. ஆனா நான் சும்மா பாத்ததுக்கே பேச வரேன்னா.. உனக்குத் தைரியம் தான்” என அதிராமல்.. குரலே உயர்த்தாமல் பேசினாலும் அவன் மீது இருக்கும் வஞ்சம் அப்படியே வார்த்தைகளில் பிரதிபலிக்க.. ரகு அயர்ந்து போனான்.

       ரேவதி கணவன் இறந்த சில நாட்களில் அவனுக்கு உறுதுணையாக இருந்த அவன் அக்கா மீனாட்சியும் அவள் கணவனும் ஒரு விபத்தில் பலியாகி விட.. மங்கை முத்துக் குமரனை இங்கேயே அழைத்து வந்திருந்தார்.. ஆனால் அவன் பாட்டியின் போதனைப்படி ரகுவை கண்டு கொள்வதே இல்லை.. ரகுவும் முயன்று பார்த்துவிட்டு விட்டுவிட்டான்.

    அவனுக்கு இப்போது வாழ்க்கையில் இருக்கும் ஒரே பிடிப்பு தன் அண்ணன் மகள் மட்டுமே.. அனைவரும் குற்றவாளியாகப் பார்த்தவனை அவள் மட்டும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்.. அவன் மீது பாசத்தைப் பொழிந்தாள்.

        அவள் வாழ்வும் தன்னால் பாழானால் அவனை அவனால் மன்னிக்கவே முடியாது.. எனவே மீண்டும் “உனக்கு கோவம் என்மேல தான.. நான் யாருக்கும் பிரயோஜனப் படாம தான் இருக்கேன்.. என்னை வேணா அடிச்சுக்கோ.. ஆனா என் பொண்ணை விட்ரு” என துளியும் தொய்வில்லாது நிமிர்வாகவே கூறினான்.

     அதில் லேசாக புருவத்தை உயர்த்திய நந்தா ஒரு நக்கல் புன்னகையுடன் “எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லையேப்பா.. இப்ப கான்சன்ட்ரேஷன் ஃபுல்லா உன் பொண்ணு மேல தான்.. உன்னால முடிஞ்சா என்கிட்ட இருந்து அவளை சேவ் பண்ணிக்கோ” என்க.. ரகு ஆத்திரமாக அவன் சட்டையைப் பிடித்தான்.

       அதை விலக்காமல் “எங்கப்பாவோ தாத்தாவோ இதே மாதிரி பண்ணாம விட்டுட்டாங்க.. இல்லைனா உனக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்குமா.. நீ நல்ல மனுசனா இருந்திருந்தா அத்தைக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்ன உடனே அவ விஷயத்தில தலையிடாம விலகி வந்திருக்கனும்.. ஆனா நீ என்ன பண்ண.. இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒரு உயிரையே குடிச்சுட்ட” என முகத்தின் முன்பான குற்றச்சாட்டு வைக்க.. ரகுவின் கை தானாகத் தளர்ந்தது.

      விதைத்தவன் அறுத்துத் தானே ஆகவேண்டும்.. ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு விலகி திரும்பி நடக்க.. அவனை சொடக்கிட்டு அழைத்த நந்தா “இனி உம்பொண்ணு வாழ்க்கை என் கையில.. உன்னால என்ன கழட்ட முடியும்னு நான் பாக்கறேன்” என வெறுப்புடன் சொல்ல.. மனதில் மூண்ட பயத்துடன் நகர்ந்தான்.

    இத்தனை நேரம் அவர்கள் பேசியதில் குறுக்கிடாமல் இருந்த ஸ்பாட் “என்னடா இதெல்லாம்.. நீ எப்ப இப்படி மாறின” என கண்டிப்பாகவே கேட்க.. அவனை முறைத்தவன் “அப்படி மாத்திட்டாங்கடா.. எங்கத்தை வீட்ல எப்படி இருக்கு தெரியுமா.. ஆனா இவன் வெள்ளையுஞ் சொள்ளையுமா சுத்துறான்.. இவனைப் பாத்தாலே எனக்கு ஆத்திரத்தை கன்ட்ரோல் பண்ணிக்கவே முடியலை” என பல்லைக் கடித்தவனைக் கண்டு ஸ்பாட்டே கொஞ்சம் மிரண்டான்.

     “டேய்.. இதெல்லாம் வேண்டாம்டா.. மகிழ் என்னடா பண்ணா இதில.. சின்னப்புள்ளை.. எதுவும் எக்குத்தப்பா பண்ணிடாதே” என எச்சரிக்க.. அவனைப் பார்த்து கல்மிஷமாய் ஒரு புன்னகை சிந்திவிட்டு வெளியேறிவிட்டான் நந்தா.

         அன்று மாலையும் டியூஷனில் அவள் கொட்டமடித்துக் கொண்டிருக்க.. ‘லூசுப்பய.. இவளைப் போய் நான் கஷ்டப்படுத்திடுவேனாம்’ என இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொள்ள.. ஆனால் இன்னும் சிறிது நாளில் அவன் அதைத்தான் செய்யவிருக்கிறான் என அவனே அறியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!