Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 27

 

வெற்றியின் ஆலோசனைக்கிணங்க சிம்லாவில் அடிமையாக இருந்தவர்களிடம், அவர்கள் கடத்தப்பட்டதன் காரணங்களை அந்த கூட்டத்தினர் தெரிவித்தனர்.

 



Advertisement

ஏற்கனவே அனைவருக்கும் கௌதம், மதன் மூலம் தெரிய வந்த விஷயம் தான் என்றாலும் இப்பொழுது மீண்டும் இவர்கள் மூலம் உறுதியாகியிருந்தது. பலருமே தாங்கள் செய்த குற்றங்களை எண்ணி மனதளவில் மிகவும் வருந்தினர். அவர்களும் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள், பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கிறதென்று! இங்குக் கடத்தி வரப்பட்டத்திலிருந்து அதுதானே அவர்களுக்கு நிலைமை!

 

இப்படி ஒரு நிலையைத் தானே, நாமும் ஏதோ ஒரு குடும்பத்திற்குப் பரிசளித்திருக்கிறோம் என்னும் வேதனையே அவர்களின் மனதை வெகுவாக அரித்தது. இதில் சில திருத்தவே முடியாத விதிவிலக்கு ஜந்துக்கள் இருந்ததில் ஆச்சரியமில்லை! அனைவரும் திருந்துவார்கள் என்பது இல்லையே! உயிர் பிரியும் நேரத்திலும், திருந்தாமல் மறைந்த குற்றம் இழைத்தவர்கள் தான் எத்தனை பேர்?

Advertisement

 

Advertisement

குற்றவாளிகளிடமிருந்து இந்த சோர்ந்து போன, முன்பு இழைத்த குற்றத்திற்கு வருந்துகின்ற பாவனைகளை… நிச்சயம் அந்த கூட்டத்தினர் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் இத்தனை மாதங்களாக செய்ததற்கு ஏதோ ஒரு பயன் இருந்ததில் அவர்கள் உள்ளம் நிறைந்தது. குற்றத்தை நினைத்து வருந்துகிறார்களே அந்த மட்டும் அவர்களுக்கு நிம்மதி! வருந்துபவர்கள் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டார்கள் என்னும் ஆசுவாசமும் பிறந்தது. இதில் தானே அவர்களுக்கு வெற்றியும்!

 

மறக்காமல் அவர்கள் அனைவருக்கும், இங்கு நடந்த விஷயங்கள் வெளியே போகக்கூடாது என்னும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Advertisement

 

“நீங்கள் எத்தனை பெரிய பணக்காரர்களாகவோ, செல்வாக்கானவர்களாகவோ இருந்து கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் பதவியில் இத்தனை பேர் கூட்டாக இருக்கிறோம். எங்களுக்கு எதிராக ஒரு துரும்பு கசிந்தாலும், மேற்கொண்டு நடப்பது… நீங்கள் கனவிலும் எதிர்பார்க்காத விஷயங்களாக இருக்கும்” என்னும் மிரட்டல், பலமாக இருந்தது.

 

இங்கு இத்தனை தூரம் அனுபவப்பட்டவர்கள், அதுபோல எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள் என்று புரிந்தாலும், வெற்றியின் சொற்படி எச்சரிக்கை தந்துவிட்டார்கள்.

 

அப்படி இவர்களில் ஏதேனும் ஒரு குரூரமான ஜந்து பழிவாங்கக் கிளம்பினாலும், வெற்றி பக்கபலமாக இருப்பதாகக் கூறியிருந்தான். ‘நாம் இத்தனை பெரிய கூட்டம் … நம்மை மீறி எதுவும் நடக்காது!” என்று கூறியவனின் சொற்களிலேயே யானை பலம் வந்தது போல இருந்தது. வெற்றி தங்களை தனியாய் விட மாட்டான் என்னும் நம்பிக்கையே அவர்களுக்கு அத்தனை சந்தோசம்.

 

அதன்பிறகு, அடிமையாக இருந்த அனைவரையும், தனித்தனியாக… இங்குக் கடத்தி வந்தது போலவே, மயக்கத்தில் வைத்தபடியே திரும்பவும் கொண்டு சென்று விடுவித்தனர்.

 

கூட்டத்தினர் மூலமாக இதற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட சிலரையும், இவர்களாகவே ஜாமீனில் வெளியே எடுத்து, அவர்களிடமும் தர வேண்டிய எச்சரிக்கைகளைத் தந்து… வெளியில் விட்டனர்.

 

[the_ad id=”6605″]

 

 

‘சுதந்திர காற்று!’ என்பதன் பொருளை இப்பொழுது முழுமையாக அனுபவித்தனர் விடுவிக்கப்பட்டவர்கள். இது தங்களுக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பு என்று அனைவருக்கும் புரிய, இதைச் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்னும் உறுதி வந்திருந்தது.

 

‘அஸ்தமனம்’ என்று நினைத்தவர்களின் வாழ்வில் புதிதாய் ஒரு விடியல்! புதிதாய் ஒரு வாய்ப்பு! இதில் தவறு செய்யும் எண்ணம் அவர்களில் பலருக்கும் இல்லை. இதை அறிந்தால் பரமேஸ்வரன் ஐயாவின் ஆன்மா நிச்சயம் அகமகிழும்!

 

*** சில வருடங்களுக்குப் பிறகு ***

 

வெற்றிச்செல்வன் UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்று, நேர்முகத்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று IAS அதிகாரி ஆகியிருந்தான். அவனுக்குத் தெலுங்கானாவில் போஸ்டிங் போடப்பட்டிருக்க… மனைவி செந்தாமரையுடன் அங்கு வசித்து வந்தான்.

 

முத்து தனது கல்வியை முடித்ததும், சேலத்திற்கு தன் அன்னை மஞ்சுளாவோடு வந்துவிட்டான். மில்லின் பொறுப்புகளை முத்து ஏற்றுக்கொண்டதோடு, ஒரு டெக்ஸ்டைல்ஸ் கடையையும் சேலத்தில் புதிதாகத் தொடங்கிக் கவனித்து வருகிறான்.

 

“என்ன மஞ்சுளா, வெற்றி வரேன்னு சொன்னானா?” ராஜேஸ்வரி அம்மாள் மருமகளிடம் கேட்க,

 

“இல்லை அத்தை. இப்ப முடியாதுங்கறான்…”

 

“அந்த புள்ளையாச்சும் ஒரு எட்டு வந்துட்டு போகலாம். அவ என்னடான்னா புருஷன் இல்லாட்டி வர மாட்டேன்னு ராங்கித்தனம் பண்ணறா… அங்க ஒத்தையில தான இருப்பா, இங்க வந்து ஒரு வாரம் இருந்துட்டு போக என்னவாம்?”

 

கேட்ட மஞ்சுளா மெலிதாக சிரித்துக் கொண்டாள். பாட்டிக்கும், பேத்திக்கும் இதே தகராறு தான் எப்பொழுதும்!

 

“அவதான் விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொல்லறாளே அத்தை…”

 

“என்னவோ போ… கல்யாணம் ஆன புதுசுல, புருஷனை விட்டுட்டு இவ தான் பஞ்சாபில டேரா போட்டாளான்னு இருக்கு” என அங்கலாய்த்துக் கொண்டவர், “ஹ்ம்ம்… கண்ணுக்குள்ளேயே இருக்கிறா…” எனப் பெருமூச்சு விட்டார்.

 

“நாம வேணும்னா போயிட்டு வருவோமா அத்தை”

 

“எதுக்கு? இங்க இருக்க கூமுட்டை ஒத்துக்கணுமே… என்னவோ இவன் இங்க இல்லாட்டி ஒரு வேலையும் ஓடாதுன்னு தையா தக்கான்னு குதிப்பான். போன மாசம் தானே கூட்டிட்டு போனேன்னு ஆடுவான்…” முன்பெல்லாம் இத்தனை பேச்சு பேசுபவர் இல்லை ராஜேஸ்வரி அம்மாள்! அவரும் என்ன செய்வார், கணவன், மனைவி இருவருமான வாழ்க்கையில் யாரிடம் வம்பு பேசுவார். இப்பொழுது மொத்தமாய் மாறியிருந்தார்.

 

அதுவே மஞ்சுளாவிற்கு அத்தனை சந்தோஷம்! இப்பொழுதும் அவரது பேச்சில் சிரித்துக் கொண்டார்.

 

“பேசாம இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடுவோம். உனக்குத் தான் இந்த ஏரோபிளானுலயெல்லாம் தனியா போகத் தெரியுமே! நாம ரெண்டு பேரும் நினைச்சப்ப போயி பார்த்துட்டு வந்துடலாம்…” திட்டம் தீட்டியவரைப் பார்த்து மீண்டும் சிரித்தாள்.

 

“என்ன உனக்கு என் புலம்பல் சிரிப்பா இருக்கா…”

 

“பின்ன என்ன அத்தை. வெற்றி சொல் பேச்சுக் கேட்கிறவன். அவனே காதல் கல்யாணம் தான்… இவன் நம்மளை அடக்கிற கேஸ்… இவனுக்கு நாம பொண்ணு பார்த்திட முடியுமா…” எனச் சிரிக்க,

 

“அதுவும் சரி தான். இவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டுப் பார்ப்போம்…” என்றவரிடம், முத்து பிடி கொடுக்கவே இல்லை. “அவ படிச்சுட்டு இருக்கா… முடிக்கட்டும் உங்க கிட்ட சொல்லறேன். இப்ப என்ன அவசரம் உங்களுக்கு…” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் அவர்களது உறவினப்பெண் ஒருத்தியை விரும்பிக் கொண்டிருக்கிறான். பெயர் காயத்ரி. சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

“பார்த்தியா எப்படி பேசுதுன்னு…” என ராஜேஸ்வரி சிரிப்புடன் தான் சளித்துக் கொண்டார்.

 

** நிர்மலா தேவி அம்மா நடத்தும் அமைப்பு, வெற்றியின் ஆலோசனையின் பேரில் மேலும் விரிவு படுத்தப்பட்டிருந்தது. அதன்மூலம், பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் சுயமாய் நிற்க வேண்டியதன் அவசியம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லித்தர வேண்டிய கட்டாயம்… என அனைத்தையும் கல்லூரிகளில், சிறு சிறு ஊர்களில் கூட்டம் நடத்தி… விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்து கொண்டிருந்தனர்.

 

ஆதரவற்றவர்களுக்கான உதவும் அமைப்பு பெரிய அளவில் விரிவு படுத்தப் பட்டிருந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

சிம்லா கூட்டத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எல்லாம், நிர்மலா தேவி அம்மாவுடன் இணைந்து அவருக்கு உதவிகள் செய்து வர, அதிசயத்திலும் அதிசயமாக… அவர்களைத் தேடிப்பிடித்து கெளதம், மதன் மற்றும் மேலும் சில விடுவிக்கப்பட்டவர்கள் வந்து, தாங்களாகவே அந்த தொண்டுப் பணியில் இணைந்து கொண்டனர்.

 

“இதென்னடா பேரதியம்…” கோபக்காரன் தான், தன் நண்பனின் காதை கடித்தான்.

 

“விடுடா திருந்திட்டானுங்க போல!”

 

“இது நம்ம லிஸ்டலேயே இல்லையே டா…” எனக் கோபக்காரன் போலி ஆச்சரியம் காட்ட…

 

“நீ உதை வாங்கப்போற… அமைதியா இரு…” என அவனை அடக்கினான் மற்றொருவன்.

 

“என்ன மச்சான்… என்னை உதைப்பியா நீ…?”

 

“உன்னை உதைக்க முடியுமா அரங்கநாதா… நீ யாரு உன் வேலை என்ன?” என அவன் வம்பிழுக்க, அந்த கோபக்காரனான அரங்கநாதன் மெலிதாக சிரித்துக் கொண்டான். அவனுக்குச் சமீபமாகத் தான் தேனியில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டிங்கில் வேலை கிடைத்திருந்தது.

 

** டீக்கடையில் பாண்டி டீ குடித்துக் கொண்டிருக்க, “என்ன லே நீ மட்டும் இருக்க, உங்க ஐயாவோட அல்லக்கையை காணோம்” என ஒருவன் வம்பு இழுக்க,

 

வீரமணியைத் தான் இப்படிக் கேட்கிறான் என்று புரிய, முறைத்தவாரே… “அண்ணிக்குப் பிரசவ நேரம் வருது. கூடமாட ஒத்தாசைக்கு அண்ணன் லீவுல இருக்காங்க” என்று பதில் கூறினான்.

 

வீரமணி நிர்மலா தேவி அம்மா நடத்தும் ஆசிரமத்தில் இருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அந்த பெண், ஒருவனை நம்பி ஓடிப்போய்… அவன் இவளுக்குக் குழந்தை உண்டானதும் கம்பி நீட்டி இருந்தான். பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளாததால், நிர்மலா தேவி அம்மா நடத்தும் ஆசிரமத்தில் அடைக்கலம் ஆகியிருந்தாள்.

 

அங்கேயே தங்கி வேலைக்குச் சென்று வந்தவள், குழந்தை பிறந்த பிறகும் ஆசிரமத்தில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். அவளை வீரமணிக்குப் பிடித்துப்போக, பெற்றோரிடம் சொல்லி, அவர்களது மறுப்பைத் தனது பிடிவாதத்தால் சமாளித்து, கரம் பிடித்திருந்தான்.

 

இப்பொழுது அந்த பெண்ணும், குழந்தையும் வீரமணியின் மனைவியாக, மகனாக அவனது பொறுப்பில், அவனது குடும்பத்தில்! அவள் இப்பொழுது கருவுற்றிருக்க, குடும்பத்தில் இதனால் சங்கடங்கள் மறைந்து இணக்கம் உருவாகியிருந்தது.

 

மகனுக்கு திருமணம் நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே என்று தவித்த பெற்றோருக்கு, பேரப்பிள்ளையோடு வந்த மருமகளை ஏற்றுக் கொள்ள முடியாத சுணக்கம் இருந்த போதும்… இப்பொழுது, அவன் பட்ட மரமாய் இல்லாமல் இப்படி குடும்பமாய் இருக்கிறானே! என்று புரிய இணக்கமும், நிறைவும் வந்திருந்தது.

 

பாண்டி கூட வீரமணி இந்த திருமணம் குறித்துப் பேசியபோது வெகுவாக தயங்கினான். “சொந்தத்துல சொல்லி இருக்குண்ணே… சீக்கிரம் நல்ல பொண்ணு பார்த்து நான் தரேன் அண்ணே! உங்களுக்குன்னு ஒரு பொண்ணு பிறக்காமயா போயிருக்கும்” என்று கேட்டு மறைமுகமாக ஆட்சேபித்தான்.

 

அதற்கு வீரமணியோ, “ஏன்டா… எனக்குன்னு பிறந்த பொண்ணு இவளா இருக்கக் கூடாது. ஏதோ அறியாத வயசுல புத்தி தடுமாறிட்டா… அதுக்காக அவ காலத்துக்கும் தனியா தான் இருக்கணுமா? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையக்கூடாதா?” என்று வீரமணி சொல்லிவிட… பாண்டியின் மனதில் வீரமணி பலமடங்கு உயர்ந்திருந்தான்.

 

“அண்ணே…” என்று உணர்ச்சியாகக் கூறியவனை,

 

“நான் ஏதோ வாழ்க்கை தரேன்னு நினைக்காத பாண்டி. அவகிட்டேயும் அதே தான் சொல்லி இருக்கேன். எனக்குமே ஒரு வாழ்க்கை இல்லை தானே! எங்களுக்கான வாழ்க்கையை இணைச்சு இருக்கேன். எனக்கு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து இருக்கேன். அவ்வளவுதான்! மத்தபடி நான் எந்த தியாகமும் செய்யலை… அவளை பிடிச்சு போய் தான் ஏத்துக்கிட்டேன்” என்று கூறியவன் மீது மிகுந்த மரியாதை உண்டானது.

 

டீயை பருகி முடித்தபடியே பாண்டியின் பதிலைக் கேட்ட வீம்பு பிடித்தவனோ, “இதாவது உங்க அண்ணன் குழந்தையா? இல்லை வேற எவனாச்சு இலவச இணைப்பா கொடுத்ததா?” என்று நக்கலாகச் சிரிக்க,

 

பாண்டி யோசிக்கவே இல்லை. ஓங்கி அறைந்திருந்தான் அவனை. “பல்லைத்தட்டி கையில தந்துடுவேன். போயி, உன் வீட்டுக்கு வந்துட்டு போறானே காளிமுத்து… அவன்கிட்ட கேளு… உன் வீட்டுல வளர புள்ளைக்கு அவன் அப்பனா இல்லை நீ அப்பனான்னு… அதை விட்டுட்டு என் அண்ணனையோ, அண்ணியவோ ஒத்த வார்த்தை பேசுன வகுந்துடுவேன்” என விழிகள் சிவக்க எச்சரிக்க,

 

“என்னடா என்னையவே அடிக்கிற…” என எகிறி பேசினாலும், பாண்டியிடம் வாங்கிய அடியாலும், அவன் இழுத்த விஷயத்தாலும் மேற்கொண்டு அங்கே நிற்க முடியாமல் இடத்தை காலி செய்தான் அவன். செல்லும் அவனையே ‘இனி எவனும் என் அண்ணனை பேசுவீங்க…’ என்னும் பாவனையில் இகழ்ச்சியாக இதழ் சுளித்தபடி பார்த்தான் பாண்டி. ‘என்ன மனிதர்களோ!’ என்னும் ஆதங்கம் எழாமல் இல்லை!

 

** வெற்றியின் கைப்பேசி சிணுங்கிக் கொண்டிருந்தது. நேரத்தைப் பார்த்தவன், தன் தலையிலேயே தட்டிக் கொண்டு, “இல்லை மாஹி… கொஞ்சம் வேலை…” என இழுக்க,

 

அதை முடிக்க விடாமல், “எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னீங்க…” எனப் புயலை உள்ளடக்கிய குரலில் செந்தாமரை கேட்டாள்.

 

“அது…”

 

“ஆறு மணிக்கு…” அவனை இப்பொழுதும் முடிக்க விடாமல் செந்தாமரை பல்லைக் கடித்தபடி அவளே பதில் கூறினாள்.

 

“இல்லைம்மா… இன்னும் கொஞ்ச நேரத்துல…” என ஆரம்பித்தவனை,

 

“ஒன்னும் அவசரம் இல்லை. நீங்க மெதுவாவே வாங்க. பத்து மணிக்கு மேல வந்தா கூட போதும். இல்லை அங்கேயே தூங்கிக்கிட்டாலும் வசதி தான். நீங்க நேரம் கழிச்சு வந்தாதான் ஹாஸ்ப்பிட்டல்ல ஆளே இல்லாம, டாக்டருங்க எல்லாம் தூங்க போயிடுவாங்க. நீங்க நிதானமா வாங்க…” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு தொடர,

 

அதற்கும் மேலும் தாமதிப்பானா அவன்! ஏற்கனவே மீட்டிங் வேலைகளில் மனைவியை வழக்கம்போல மறந்திருந்தான். இனியும் தாமதித்தால், அவள் முருங்கை மரம் ஏறி விடுவாளே! ஏற்கனவே அப்படித்தான். எனவே அடித்துப் பிடித்துக் கொண்டு அவசரமாக ஓடினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“கிளம்பிட்டேன் செந்தூ… நான் வந்ததும் கிளம்பிடலாம் ரெடியா இரு. பொறுப்பா காலையிலேயே டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் வாங்கிட்டேன். சாரி சாரி மாஹிம்மா. என் தங்கம் இல்லை…” டிரைவருக்கு தெலுங்கு, ஹிந்தி தவிர எதுவும் தெரியாத போதும்… கலெக்டர் கெஞ்சுவது தெளிவாகப் புரிய… சிரிப்பை வாய்க்குள் அடக்கி திணறியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்.

 

இன்று காலையில் தான் கர்ப்பத்தை பிரக்னென்சி கிட் மூலம் உறுதி செய்திருந்தாள் செந்தாமரை. மாலையில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கணவனிடம் படித்துப் படித்து சொல்லி அனுப்பியிருக்க… அவன் சொதப்பி இருந்தான். இப்பொழுது உச்சக்கட்ட கோபத்தில் அவள்.

 

வீட்டிற்கு வந்த கணவனை முறைத்துக் கொண்டே, அவனுடன் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றாள். மருத்துவரும் கர்ப்பத்தை உறுதி செய்து… “முதல் ஸ்கேன், நாற்பத்தைந்து நாட்களில் எடுக்க வேண்டும்” என்று கூறி, எப்பொழுது ஸ்கேன் எடுக்க வர வேண்டும் என்று தேதியைக் குறித்துத் தந்தார். மேலும் கால்சியம், அயர்ன் டேப்லெட்டுகள் எழுதித் தந்து, என்ன வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.

 

“என்ன மாஹி… எவ்வளவு சந்தோஷமான விஷயம் இப்படி உம்முன்னு வரியே…” என வெற்றிச்செல்வன் கேட்க, பதிலில்லை மனைவியிடம்.

 

“உனக்கு என்ன வேணும் சொல்லு… உனக்கு நிறைய கிப்ட் பண்ணனும் போல இருக்கு…” என அவன் ஆர்ப்பரிக்க,

 

அவள் கையிலிருந்த கடிகாரத்தைத் திருப்பி மணியை மட்டும் பார்த்தாள். ‘இந்த நேரத்துல எந்த மடையன் கடையைத் திறந்து வெச்சு உக்காந்துட்டு இருக்கான்’ என சொல்லாமல் சொல்லியது அவளது செய்கை. அதில் அசடு வழிய, பின்னந்தலையை கோதிக் கொண்டவன்,

 

மனைவியின் இடையைச் சுற்றி கைகளைப் போட்டபடி அருகே இழுத்து, “பேசு மாஹி… இல்லைன்னா உன்னைச் சமாதானம் பண்ண இங்கேயே பாட்டுப் பாட வேண்டியிருக்கும்” என கிசுகிசுக்க,

 

“ம்பச்.. விடுய்யா… விவஸ்தை கெட்டவன் நீ… இனி இப்படி என்னை மறந்துட்டு வேலையை கட்டிட்டு அழுத… அப்பறம் பார்த்துக்க…” என அடிக்குரலில் மிரட்டினாள்.

 

“ஹிஹி… அது வேற டிபார்ட்மென்ட் மாஹிம்மா… பிளீஸ்… பிளீஸ்… இந்த ஒரு விசயத்துல மட்டும் கருணை காட்டேன்… நானும் என்ன முயற்சி பண்ணுனாலும் வர மாட்டீங்குது” எனக் கெஞ்ச,

 

“அச்சோ… முதல்ல, கையை எடுங்க வெற்றி… போன் பண்ணிக் கூட சொல்ல மாட்டீங்கறீங்க… அதான் கோபமா வருது…” எனக் கோபத்திற்கான காரணத்தைச் செல்ல சிணுங்கலுடன் கூறினாள்.

 

“சாரி செல்லம்… இனி இப்படி நடக்காது… பிளீஸ்…” எனக் கணவன் மீண்டும் கெஞ்ச, அவனது விடாமுயற்சியில் மனைவி மலையிறங்கியிருந்தாள்.

 

“அட்டகாசம் பண்ணாதீங்க… உங்க கெஞ்சல், கொஞ்சல் எல்லாம் தனியா இருக்கும்போது வெச்சுக்கங்க…” எனச் சொல்லியவள் சிரித்திருக்க, கண் சிமிட்டி அவளிடமிருந்து கையை விளக்கியிருந்தான் கணவன்.

 

இரவின் நிசப்தத்தில்,

“ஆ டு மேரே க்வாப் ஸஜா ரே

மாஹி ஆஜா ரே… மாஹி ஆஜா ரே…”

மனைவியை கையணைவில் வைத்தபடி, வெற்றிச்செல்வன் பாட,

 

“கனவை அலங்கரிக்க மட்டும் வந்தா போதுமா வெற்றி…” எனக் கண்சிமிட்டி செந்தாமரை கேட்டாள்.

 

“ஏய், அந்த சிமிர்தி போட்டு தந்துட்டான்னு, இந்த பாட்டுப் பாட சொல்லி படுத்தறது நீ தானே! பாட்டு பாடுனா… அதுக்கு வம்பு பேசறியா…” எனக் காதை செல்லமாக திருகினான் கணவன்.

 

“ஆஹான்… நான் படுத்தறேனா… அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் பாட வேணாம்…” என் சிலுப்பியவளிடம்,

 

“அப்படியா பாட வேணாமா?” எனப் புருவம் உயர்த்தி கணவன் கேட்க, அப்படி எப்படி அவள் ஒப்புக் கொள்வாள். சோபையாகச் சிரித்தபடி கணவனின் மார்பில் முகம் சாய்த்தாள்.

 

“சரி வா. வாமிட் பண்ணிப் பண்ணி ரொம்ப ரையர்ட் ஆகிட்ட, போயி படுத்துப்போம். நாளைக்கு பாட்டி, அம்மா எல்லாம் வந்துடுவாங்க. உனக்கு ஹெல்பா இருக்கும்…” என்றபடி மனைவியைத் தாங்கியபடி, உள்ளே அழைத்துச் சென்றான்.

 

அவர்களின் எண்ணம் போல அனைத்தும் நடந்தேறி, அவர்களது வாழ்வு மென்மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெறுவோம்!!!

 

சுபம்!!!

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!