Skip to content
Post Views: 1,056
அத்தியாயம் – 9
பரிணாம வளர்ச்சி – Cont.,
Advertisement
மனிதன் எவ்வளவு தான் அறிவியலில் முன்னேறியிருந்தாலும் அவனால் இயற்கையையும் அதன் பராக்கிரமத்தையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இயற்கையின் அப்படி ஒரு படைப்பு தான் பரிணாம வளர்ச்சி. அதனுடைய பிரபாவத்தில் நாம் இன்னும் பாதியைக் கூட உணரவில்லை.
மரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அதற்கு அதனுடைய வேர் தானே முக்கியம். அது போல் தான் பரிணாம வளர்ச்சியும். இதன் தாக்கத்தை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் கூட பார்க்கலாம்.
Advertisement
அதிகமாகச் செயற்கை பூச்சி மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்தினால், ஆரம்பத்தில் அந்தப் பூச்சிகள் அழிக்கப்பட்டாலும், சில ஆண்டுகளில் அவை பரிணாம வளர்ச்சி( மாற்றம்) அடைந்து அதையும் மீறி வளரும்.
Advertisement
அதே போல் தான், நாம் ஏதாவது ஒரு சின்ன தலை வலிக்குக் கூட மருந்து சாப்பிட்டால், நமக்கு அது பழகிவிடும். அந்த மருந்து சாப்பிடாவிட்டால் நமக்கு வலி போகாது என்ற நிலைக்கு நாம் நம்மை அறியாமலேயே தள்ளப்படுவோம்.
பரிணாம வளர்ச்சியை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் அறிந்த வகையில் கோட்பாடுகளாக வெளியிட்டுள்ளனர்.
-
முதலில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரான சுவாரெஸ் ( Suarez) என்பவர் கடவுள் தான் தனது சக்தியைக் கொண்டு மனிதனை ஆறாம் நாள் ( கடவுள் ஏழு நாட்களில் உலகை உருவாக்கினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ) அன்று படைத்தார் ( Theory of special creation ) என்றார்.
-
இரண்டாவதாக குவியர் (Cuvier) என்பவர் உலகம் ஒரு குறிப்பிட்ட காலச் சுழற்சியில் அழிக்கப்படும்; மறுபடியும் கடவுளால் உருவாக்கப்படும் என்றார்.
-
பின்னர் மூன்றாவதாக ரெடி ( Redi),ஸ்பால்லன்ஸானி (Spallanzani) மற்றும் லூயிஸ் பாஸ்டியர் (Louis Pasteur) ஆகிய மூவரும் தனித்தனியாக ஓர் உயிருள்ள பொருள் மற்றொரு உயிருள்ள பொருளில் இருந்து தான் தோன்றும் என்றனர் (Theory of Biogenesis).
-
மேலும் சிலர் உயிரினங்கள் விதைகள் மூலமாக வேற்றுக்கிரகத்தில் இருந்து வருகின்றன என்றனர் ( Cosmozoic Theory).
-
கடைசியாக ஒப்பரின் ( Oparin) மற்றும் ஹேல்டன் (Haldane) இருவரும் சேர்ந்து ரசாயனங்களில் ( நீர்,மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன்) இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என்று அதிகாரப்பூர்வமாக நிரூபித்தனர் ( Theory of Chemical Evolution ).
இது பரிணாம வளர்ச்சியை முழுவதுமாக கூறாவிடினும் மற்றவற்றை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருந்தது.
Advertisement
-
இன்னும் சிலர் பரிணாம வளர்ச்சி என்று ஒன்று கிடையவே கிடையாது, மனிதர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்; இருப்பார்கள் என்று கூறி வருகின்றனர். அது அவர்களது கோட்பாடு (Steady state theory).
******
கிரகம் : கயா
இடம் : பெருங்கடல் சிறை
ப்ரொமேத்தியஸ் கடந்த முறை சிற்றரசர்களை வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு அந்தக் கோட்டை பெரிதும் மாறி இருந்தது. சில நாட்களுக்கு ஒருமுறை வீதம் பல்வேறு உயிரினங்கள் அங்கே அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இதுவரை அமைதியாக இருந்த அந்தக் கோட்டை இப்பொழுது சதா பேரிரைச்சலுடன் இருந்தது. அவற்றைப் பாதுகாக்கும் வீரர்களும் சிறிது எரிச்சல் அடைந்து இருந்தனர். பின்னர், இதுவரை எந்த பணியும் செய்யாமல் இருந்துவிட்டு இப்பொழுது பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால் ?
ஆனால் இப்பொழுது இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படாமல் பயனடைந்தவர்கள், கயா கிரகத்துச் சிற்றரசர்கள் தான்.
கடந்த சில நாட்களாக வல்கன், அங்கிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அதிலுள்ள நிறை குறைகளை ஆராய்ந்தார்.
அங்கிருந்து வெளியேறினாலும் அந்த ட்ராகன்களிடம் இருந்து தப்பிப்பது தான் சவாலான விஷயமாக இருந்தது. கடைசியில் அதற்கும் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. வல்கன் கூறிய திட்டத்தைக் கேட்டதும் அனைவரும் சிறிது நேரம் அமைதியாக யோசித்தனர்.
பிறகு ஒரு மெட்லடன், “நீங்கள் கூறும் அனைத்தும் சரி தான், வல்கன். ஆனால், இதுவரை நம் சக்தியை நம்மால் உபயோகப்படுத்த முடியவில்லை. அதற்கு நாம் இந்த அறையை விட்டாவது வெளியேற வேண்டும். அதன் பின்பும் நம்மால் நமது சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்பதும் சந்தேகம் தான். இதில் நாம் எப்படி அந்த இரண்டு டிராகன்களை தாண்டி தப்பிப்பது ?” என்று கேட்டார்.
“இந்த நேரத்தில் என்னால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் கூற முடியும், சிற்றரசர்களே ! நாம் இப்போது செலினாவை உறுதியாக நம்பினால் மட்டுமே இங்கு இருந்து தப்பித்துச் செல்ல முடியும். இங்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் அடைபட்டு இருக்கப்போகின்றோமோ ? கயா கிரகத்துக்கு முன்னரை விட இப்பொழுது நமது தேவை மிகவும் அவசியம். கன்வர்ஜென்ஸ் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த முறையும் ப்ரொமேத்தியஸை வெற்றி பெறாவிட்டால், நாம் இருந்து என்ன பயன் ?” என்று கோபமாகக் கேட்டார் வல்கன்.
அவர் வாதத்தில் இருந்த உண்மையைப் புரிந்துக் கொண்ட சிற்றரசர்கள், “தாங்கள் என்ன சொன்னாலும், அதை நாங்கள் செய்யத் தயார்” என்று ஒருமித்துக் கூறினார்கள்.
கோபம் தணிந்த வல்கன், திட்டத்தைத் தொடங்க ஏற்பாடு செய்தார். அனைத்து சிற்றரசர்களும் வட்டமாக அமர அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் கோர்த்துக்கொண்டனர். மெல்ல மெல்ல அவர்கள் முகம் தேஜஸை பெறத்தொடங்கியது. அவர்கள் தங்களைச் சுற்றி அடைக்கப்பட்டு இருந்த விலங்குகளின் எண்ணங்களை ஊடுருவத் தொடங்கினர்.
சிறிது சிறிதாக அவர்கள் அந்த விலங்குகளின் நினைவுகளை ஆக்கிரமித்தனர். சில நிமிடங்களில் விலங்குகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கின. பின் ஒன்றுக்கொன்று சண்டையிடத் தொடங்கின.

அவை தாங்கள் அடைபட்டிருந்த கதவுகளையும் சுவரையும் மோத ஆரம்பித்தன. அதுவரை அமைதியாக இருந்த கோட்டையில் ஏதோ பிரச்சனை என்பது காவலாளிகளுக்குப் புரியத் தொடங்க, உடனே தங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வேக வேகமாக ஓடிச் சென்றனர். அதற்குள் அங்கிருந்த மிருகங்கள் சிறையை உடைத்து வெளியேறத் தொடங்கியிருந்தன.
காவலாளிகள் தங்களிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்த முடியாமல் தங்களிடம் இருந்த ஆயுதங்கள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், மதம் கொண்ட யானையின் பலம் பெற்றிருந்த விலங்குகளை அவர்களால் தடுக்க முடியவில்லை.
அதற்குள் சில விலங்குகள் சிற்றரசர்கள் அடைபட்டிருந்த அறையை உடைத்தன. பின்னர் உள்ளே இருந்தவர்களைக் கண்டு மிரண்டு வேறுபக்கம் ஓடத் தொடங்கின.
வல்கன், “அனைவரும் ஓடுங்கள் ! காவலாளிகள் இந்த விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்குள், இந்தக் கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும்” என்று கத்தினார்.
விலங்குகளுக்கு இடையே மறைந்து சிற்றரசர்கள் கோட்டையை விட்டு வெளியே வந்தனர். கோட்டைக்கு வெளியே வந்ததும் நீர்பரப்பிற்கு மேல் இருந்த வீரர்கள் அவர்களைத் தாக்க தொடங்க, சிற்றரசர்கள் பல வருடங்களுக்கு பிறகு தங்கள் சக்திகள் தங்களது உடலில் பாய்வதை உணர்ந்தனர். முழு சக்திகளும் திரும்பாவிடினும், அவர்கள் சக்தி குண்டுகளை எறியத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அனைத்து வீரர்களும் வீழ்ந்துவிட, சிற்றரசர்கள் வேகமாக ஓடத்தொடங்கினர். அங்கு இரு டிராகன்களும் வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்க அவர்களைக் கண்டதும் தரையில் இறங்கி, தாக்க வந்தன.
அதற்குள் சிற்றரசர்கள் மறுபடியும் பழைய வட்ட வடிவத்திற்கு வந்து தங்கள் தெய்வமான செலினாவை நினைத்துக் கொண்டு தங்களது சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கினர். மெல்ல மெல்ல அவர்களைச் சுற்றி ஒரு பந்து போன்ற சக்தி கவசம் தோன்ற ஆரம்பித்து அது வேகமாகச் சுழலத் தொடங்கியது.
அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் டிராகன்களால் அவர்களை நெருங்க முடியவில்லை. பின்னர், அந்தப் பந்து மேலே உயர எழும்பி வேகமாக அந்த இடத்தை விட்டு நகர தொடங்கியது.
******
கிரகம் : பூமி
தன் கைகளில் இருந்த அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனுக்கு பலமான அதிர்ச்சி ஏற்பட்டது. பின்பு மெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்டவன், தன்னைக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்த இருவரிடமும், “இப்போ உங்ககிட்ட சொல்ல போற விஷயம் இந்த ரூம விட்டு வெளியே போகக் கூடாது. அந்த அளவுக்கு இது முக்கியமான விஷயம்” என்று பெரிய பீடிகையோடு ஆரம்பித்தான்.
“அதுக்கு முன்னாடி, நந்தினி நீ எப்படி இந்த டிராயிங்ஸ வரைஞ்ச ? ஐ மீன், இத வரையறதுக்கு எப்படி ஐடியா வந்துச்சு ?” என்று கேட்டான்.
அவள் ஆரியனை ஒரு முறை பார்த்துவிட்டு, “என்னோட கனவுல வந்த விஷயத்த தான் வரைஞ்சேன்” என்றாள்.
“வாட் ?” என்று ஆதித்யன் கூற, அதிலிருந்தே அவன் இதை நம்பாதது புரிய, ஆரியன் அவனுக்கு நந்தினியின் கனவுகள் பற்றியும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும், அதைக் குறைப்பதற்காகத் தான் சொன்ன வழிகளையும் கூறினான்.
ஆதித்யன் எதற்காக இத்தனை நேரம் பயந்தானோ அது இப்பொழுது உண்மை என்பது அவனுக்குப் புரியத் தொடங்கியது. நடக்கும் எல்லாவற்றையும் அவனால், ‘ Just A Coincidence ’ என்று ஒதுக்க முடியவில்லை. ஆரியனும், நந்தினியும் தன்னைக் கேள்வியாக பார்ப்பதை உணர்ந்தவன், அவர்களிடம், “இந்த யுனிவர்ஸ் எப்படி உருவானுச்சுனு உங்களுக்கு தெரியுமா ?” என்று கேட்டான் ஆதித்யன்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவன் கேள்வி கேட்க எதற்கு என்பது போல் அவனைப் பார்த்து விட்டு, “இந்த மொத்த யுனிவர்ஸுமே ஒரு சின்ன பாயிண்ட்ல, அதாவது, ‘Singularity’-ல இருந்துதான் உருவானுச்சு. இத தான் Big Bang Theory-னு சொல்றோம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம் தான் எர்த் (Earth) உருவானுச்சு.
அதுல எப்படி, லிவிங் பீயிங்ஸ் உருவானுச்சுனா, Chemical Evolution தான் காரணம்” என்றாள் நந்தினி.
அவள் கூறுவது அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யன், “நீ மொதல்ல சொன்ன எல்லா விஷயமும் கரெக்ட் தான் நந்தினி. ஆனா, கடைசியா சொன்னது தப்பு. அது எல்லாரையும் நம்ப வைக்கிறதற்காக உருவாக்கப்பட்ட பொய்” என்று நிறுத்தி நிதானமாகக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டு ஆரியனும் நந்தினியும் திகைத்தனர். பின் ஆதித்யன், “நீ சொன்ன மாதிரி நாம உருவானதற்கு பல தியரிஸ் கண்டுபுடிச்சிருக்காங்க. அதுல ஒண்ணுதான் Theory of Panspermia ( Cosmozoic Theory ). அதாவது உயிரினங்களோட அடிப்படை விஷயமான RNA(DNA)-வ இல்லனா உயிரினங்கள் உருவாக காரணமான பொருட்கள பதப்படுத்தி விதை, முட்டை, ஸ்போர்ஸ் இதுக்குள்ள அடைச்சு இந்த யுனிவர்ஸ்ல இருக்குற ஏதோ ஒரு இடத்துல இருந்து அனுப்பப்பட்டு, அதுல இருந்துதான் மனிதன் உருவானான். இதுதான் அந்த தியரி” என்றான்.
நந்தினி, “ஆமா, நானும் இதப்பத்தி படிச்சுருக்கேன். இந்த தியரிய நிறைய சயின்டிஸ்ட்ஸ், முக்கியமா அர்ஹீனியஸ் (Arrhenius), ஹெல்ம்ஹோட்ஸ் (Helmholtz), கெல்வின் (Kelvin), இவங்கல்லாம் நிரூபிக்க முயற்சி பண்ணாங்க. ஆனா, இத நிரூபிக்க அவங்களால எந்த ஆதாரத்தையும் கொடுக்க முடியல” என்று கூறும்போது,
ஆரியனுக்கு ஆதி கூற ஆரம்பித்த பதிலைக் கேட்டு சந்தேகம் எழ, “அப்படினா இது உண்மையா, ஆதி ? வேற்று கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்காங்களா ? இதப்பத்தி ஏதாச்சும் ஆதாரம் கிடைச்சுச்சா ?” என்று கேட்டான்.
“ஆமாம் ஆரியா, அதுக்கு ஆதாரம் கிடைச்சுச்சு” என்றான் ஆதித்யன்.
நந்தினி அதிர்ந்து, “உண்மையாவா ? அப்படினா Area -51 இருக்குறது எல்லாம் உண்மைதானா ?” என்று கேட்டாள்.
“இல்லை, நந்தினி. Area – 51 அப்படின்னு ஒண்ணு இல்லவே இல்ல. அது வெறும் இமாஜினேஷன்தான். ஆனால், அதுக்கு பதிலா வேற ஒண்ணு இருக்கு. உண்மையான ஆதாரம் ஒரு Asteroid (எரிகல்) மூலமா தான் பூமிக்கு வந்தச்சு. 1981 – இல் ஒரு எரிகல் பூமியைத் தாக்கியது. சாதாரணமா ஒரு எரிகல் பூமிய தாக்குறதெல்லாம் பெரிய விஷயம் இல்ல.
ஆனா, இந்த எரிகல் கொஞ்சம் ஸ்பெஷல். அதுல நிறைய மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் (நுண்ணுயிரி) வித்தியாசமான மெட்டீரியலுக்குள்ள பதப்படுத்த பட்டிருந்துச்சு. அத அனாலிஸிஸ் (Analysis) பண்ணி பார்த்தப்ப, நம்ம பூமில உயிரினங்கள் உருவாகுறதுக்கு காரணமான பொருட்கள் அதுல இருந்துச்சு.
அதுமட்டுமில்லாம, அதுல கதிர்வீச்சும் வந்துச்சு. உயிரினங்களுக்குள்ள Variation வர காரணமா இருந்த Mutation இந்த கதிர்வீச்சால தான் உருவாகியிருக்கு. அதனால, இனிமேலும், Panspermia இமாஜினேஷன் கிடையாது. அதுதான் உண்மை” என்றான் ஆதித்யன்.
“ஆனா, இவ்வளவு விஷயம் நடந்திருக்கு. இது எப்படி வெளி உலகத்துல இருக்குற யாருக்கும் கொஞ்சம் கூட தெரியவில ? அதேமாதிரி இத மறைக்குறதுல என்ன லாபம் ?” என்று கேட்டான் ஆரியன்.
“அந்த எரிகல் சம்பவத்துக்கு அப்புறம் இதுல இருக்குற உண்மைகள ஆராய்ச்சி செய்றதுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ‘International Organisation for Alien Research’- னு ஒரு அமைப்ப உருவாக்குனாங்க. ந்த அமைப்பு எந்த நாட்டோட அரசாங்கத்துக்கும் கட்டுப்படாது. இது ஒரு Autonomous (தன்னுரிமை) அன்ட் Independent அமைப்பு. இதுல எல்லா நாட்டு சயின்டிஸ்ட்-ஸும் வெர்க் பண்றாங்க” என்றான் ஆதித்யன்.
“ஆமா இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் ? ஒருவேளை நீயும் அந்த அமைப்புல வேலை பாக்குறியா ?” என்று கேள்வியையும் கேட்டு பதிலையும் அளித்தான் ஆரியன்.
“ஆம்” என்பது போல் மெல்லத் தலை அசைத்தான் ஆதித்யன்.
பிறகு, “போன வருஷம் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம தான் இருந்துச்சு. ஆனா, எதிர்பார்க்காத நேரத்துல தான எதிர்பாராத விஷயம் நடக்கும். போன வருஷம் நம்ப இஸ்ரோ நிலாவுக்கு சந்திரயான் – 2வ செலுத்தி, அது கடைசி நேரத்துல செயலிழந்தது ஞாபகம் இருக்கா ?” என்று கேட்டான் ஆதி.

“இருக்கே, ஒரு சின்ன ‘Software Glitch’-ஆல அப்படி ஆச்சுனு சொன்னாங்க” என்று நந்தினி கூற,
“அவ்வளவு பிளான் பண்ணி மூணுக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பேஸ்க்ராஃப்ட்-ல ( Spacecraft ) இப்படி ஒரு சின்ன தப்பு நடந்திருக்கும்னு நாங்க யாரும் நம்பல. ஒருவேள இதுக்கும் ஏலியன்ஸுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமோனு தந்தேகம் வந்துச்சு. இதை எங்க அமைப்போட தலைவர்கள்கிட்ட நாங்க சொன்னப்ப, அவங்க ஒரு விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க.
இதுமாதிரி சூழ்நிலை வரலாம்னு முன்னாடியே யோசிச்சு பல வருஷங்களா, அதுக்கு தேவையான விண்வெளி வாகனத்தையும், வீரர்களுக்குப் பயிற்சியும் கொடுத்துட்டு இருந்தாங்க. நிலவோட இன்னொரு பக்கத்துக்கு போய் ஆராய்ச்சி பண்ணப்ப, நாங்க எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே எங்களுக்கு சில எவிடென்ஸ் கிடைச்சுச்சு.
அங்க பல கருமுட்டைகள் குவிந்து கிடந்துச்சு. அதுல இருந்து வந்த கதிர்வீச்சால தான் சந்திரயான்ல இருந்த சென்சார்ஸ் செயல் இழந்துருக்கு. அதேமாதிரி நாங்க அனுப்புன விமானத்துலயும் கம்யூனிக்கேஷன் கட் ஆயிடுச்சு. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டுதான், அவங்க அந்த கருமுட்டைகளோடு பூமிக்கு திரும்பி வந்தாங்க” என்றான்.
“ஓ மை காட்! அதுக்கப்புறம் என்னாச்சு ?” என்று ஆர்வமுடன் கேட்டாள் நந்தினி.
“சில வேளைகள் இப்படி மறைமுகமா நடக்குறதால தான் இங்க எல்லா விஷயமும் சரியா நடந்துகிட்டு இருக்கு. அவங்க திரும்பி வரதுக்குள்ள அவங்கள்ள மூணு பேருக்கு அந்த கதிர்வீச்சால தாக்கப்பட்டிருந்தாங்க. அந்த கரு முட்டைகள அனலைஸ் பண்ணப்ப, அது எந்த பொருளால உருவாயிருக்குனு எங்களால கண்டுபிடிக்க முடியல. அதனால, அதுக்கு X-னு பெயர் வச்சோம். இந்த கதிர்வீச்ச அனலைஸ் பண்ணப்ப, இன்னும் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் எங்களுக்கு கிடைச்சுச்சு. நீங்க ரெண்டு பேரும் பெர்முடா ட்ரையாங்குள் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா ?” என்று கேட்டான் ஆதித்யன்.

“ஹம்ம்.. தெரியுமே. பெர்முடா, ஃப்லொரிடா, புயர்டோ ரிக்கோ இந்த மூணு இடத்தையும் இணைக்குற கடற்பகுதி. அந்த கடல் பகுதியில எந்த கப்பலோ விமானமோ போனா, தண்ணிக்குள்ள மூழ்கிடும்னு கேள்விப்பட்டு இருக்கேன். இரு… இரு… அத பத்தி இப்போ எதுக்கு கேட்குற ? அப்படினா… டேய்… சஸ்பென்ஸ் வச்சு கொல்லாதடா… சொல்லித் தொலைடா…” என்றான் ஆரியன்.
“பொறுடா அவசர படாத… என்ன சொல்லிட்டு இருந்தேன்…. ஆங்.. அந்த விஷயத்துல இருக்குற மர்மத்த கண்டுபிடிக்கறதுக்காக ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு கருவிய ஸ்பெஷலா செஞ்சு அனுப்புனோம். அது கொஞ்ச நிமிஷத்துலயே செயல் இழந்திருந்தாலும், அது நிறைய தகவல்கள எங்களுக்கு ட்ரான்ஸ்மிட் பண்ணி இருந்துச்சு. அதுல கதிர்வீச்சு பத்திய தகவல்களும் இருந்துச்சு.
அந்த விஷயம் ஞாபகம் வந்தோன, புதுசா கிடைச்ச கதிர்வீச்சையும், பெர்முடா ட்ரையாங்குள்ள கிடைச்ச டேட்டாவையும் கம்பேர் பண்ணி பார்த்ததுல, ரெண்டுத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்குறது தெரியவந்துச்சு” என்றான்.
“அதாகப்பட்டது நம்மள சுத்தி, நமக்கே தெரியாம வேற்று கிரக வாசிகள் வாழ்ந்துட்டு இருக்காங்கனு சொல்றியா ?” என்று அச்சத்துடன் கேட்டான் ஆரியன்.
“அப்படி மொத்தமாகச் சொல்லிட முடியாது. இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்…” என்றான் ஆதித்யன், நந்தினியைப் பார்த்துக்கொண்டே.
“நீங்க சொல்றத கேட்க கேட்க எனக்கு அதிர்ச்சியா இருக்கு. என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல. ஆனா, எவிடென்ஸ பத்தி கேட்டதுக்கு அப்புறம் நம்பாமலும் இருக்க முடியல. கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு. இது உண்மைதான். ஆனா, இதையெல்லாம் இப்போ எதுக்கு சொல்றீங்க ஆதி ?” என்று கேட்டாள் நந்தினி.
‘தான் எதற்காகப் பேச ஆரம்பித்தோமோ, அதற்கான நேரம் வந்துவிட்டது’ என்பதை உணர்ந்த ஆதித்யன், “நந்தினி, நீ எப்பயாச்சும், உனக்கு எப்படி இவ்வளவு இன்டலிஜன்ஸி கிடைச்சுச்சுனு யோசிச்சு பார்த்திருக்கியா ?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம் பார்த்திருக்கிறேன், ஆதி. நிறைய தடவை நைட்டு முழுக்க தூங்காம கூட யோசிச்சுருக்கேன். ஆனா, யோசிக்க யோசிக்க தலைவலி வருமே தவிர பதில் கிடைக்காது” என்று சுருதி இறங்கச் சொன்னாள்.
“இன்னும் ஒரு விஷயம் சொல்றேன். கொஞ்சம் கவனமா கேளுங்க. அந்த அமைப்போட சாட்டிலைட்ஸ் நேத்து சில படங்கள அனுப்பி இருக்கு. அதுல ஒரு விண்வெளி விமானம் இருக்குற மாதிரி ஒரு படமும் இருந்துச்சு. அதுல வேற்று கிரக வாசிகள் நம்ப கிரகத்துக்கு வர்றதா அதோட டிராஜெக்ட்ரிய ( Trajectory ) அனலிஸ் பண்ணி இன்னைக்கு எல்லாருக்கும் தகவல் குடுத்திருக்காங்க” என்றான் ஆதி.
“அவங்க எதுக்கு நம்ப கிரகத்துக்கு வரணும் ? ஒருவகையில பார்த்தா அவங்க நமக்கு மூதாதையர்கள் தானே ?” என்று கேட்டான் ஆரியன்.
ஆதித்யன் சிறிது தடுமாறி, “நான் முன்னாடி சொன்னேன்ல ? X பொருட்கள ஆராய்ச்சி பண்றாங்கன்னு. அதுல இருந்து வர கதிர்வீச்சுக்கள சக்தியாக மாத்த நான் தான் ஒரு வழிய கண்டுபிடிச்சேன். ஆனா, அதோட சக்திய பார்த்துட்டு நானே பயந்துட்டேன். அதனால, நானே அந்த ஆயுதங்கல் எல்லாத்தையும் அழிச்சிட்டேன். வேற்று கிரக வாசிகள் நம்ப கிரகத்துக்கு வர்றதுக்கு இது கூட காரணமா இருக்கலாம்னு எங்க தலைவர்கள் யோசிக்குறாங்க” என்றான்.
“என்ன ?” என்று ஆரியனும் நந்தினியும் ஒருசேரக் கத்தியதில் அவர்கள் இதை எள்ளளவும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்று உணர்ந்து கொண்டான் ஆதித்யன். சிறிது நேரம் அவர்கள் இடையே ஒரு மயான அமைதி நிலவியது.
“டேய் ஆதி, ஒரு நாள்ல ஒரு மனுஷனால எவ்வளவு அதிர்ச்சிய தாங்க முடியும்னு எங்கள வச்சு ஏதாவது டெஸ்ட் பண்ணி பாக்குறியாடா ? அப்படினா சொல்லிட்டு பண்ணுடா” என்றான் ஆரியன்.
ஆதித்யன் ஆரியனைப் பார்த்து, “இதுவரைக்கும் நான் சொன்னதெல்லாம் ட்ரெய்லர் தான்டா. இனிமேதான் மெயின் பிக்ச்சரே இருக்கு. அதனால, கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோடா” என்றான்.
“இனிமேல் என்ன இருக்கு ?” என்று அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர் ஆரியனும் நந்தினியும்.
“அந்த செயற்கைக்கோள் அனுப்பிய போட்டோ இதுதான்” என்று தனது திறன் பேசியைக் காண்பித்தான். அதை வாங்கிப் பார்த்த ஆரியன், அதைக் கீழே விடப் போய், பின்பு தட்டுத்தடுமாறிப் பிடித்தான்.
சிறிது நேரம் அவனுக்கு எதுவும் புரியவில்லை, அப்புறம்தான் ஆதித்யன் ஏன் இவ்வளவு நேரம் பாடம் எடுத்தான் என்று புரிந்தது. ஆனால், அதன் மூலம் அவனுக்கு அவனது மூளை உரைத்த செய்தி அவனை மயக்கமுற செய்தது.
இதெல்லாம் சில வினாடிகளில் முடிய, “டேய்… எரும… எவ்வளவு நேரம் அந்த போட்டோவ பாப்ப ? குட்றா நானும் பார்க்கிறேன்” என்று நந்தினி அவன் கையிலிருந்து கைப்பேசியை பிடுங்கிப் பார்த்தாள்.
அதில் இருந்த நிழற்படத்தைப் பார்த்ததும், அவள் கண்கள் தானாகவே அவள் வரைந்த ஓவியத்தை நோக்கியது. அந்த நிழற்படத்தில் விமானம் மங்கலாக தெரிந்தது என்றால், நந்தினியின் ஓவியத்தில் 1080P கிளாரிட்டியில் வேறு கோணத்தில் இருந்தது. அவளுக்கு மயக்கம் வருவது போல இருக்க அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
இவ்வளவு வருடங்கள் ஜிக்சா ( Jigsaw ) விளையாட்டில் இருப்பது போல தனித்தனி படங்களாய் இருந்த அனைத்தும், இப்போது ஒன்றாகச் சேர்ந்து அவளுக்கு விடையைக் கூறுவது போல இருந்தது. அவளது மூளையில் எண்ணங்களின் அளவு அதிகமாகிக்கொண்டே போனது. யோசிக்க யோசிக்க நந்தினிக்கு தலை வெடிப்பது போல உணர்வு ஏற்பட்டது. பின்னர், அவள் சுயநினைவு இழந்து, கட்டிலில் சரியப்போன நேரத்தில்,
மெல்ல மெல்ல அவள் கண்கள் தங்க நிறத்தில் ஜொலிக்க ஆரம்பித்தன.
பிறகு, சிறிது சிறிதாக அவளுக்குள் அண்ட சராசரத்தில் உள்ள மொத்த சக்திகளும் ஊடுருவுவது போலப்பிரமை ஏற்பட்டது. அவளால் ஒரு நிலையாக இருக்க முடியாமல் கட்டிலில் சரிந்தாள்.
மூமூ காட்டு கத்தலாகக் கத்தியது. அவளது உடல் மெல்லக் கட்டிலிலிருந்து உயரப்பறக்க, அதைக் கண்ட ஆரியனும் ஆதித்யனும், “நந்தினி” என்று கத்தினர்.

அவளது உடல் முழுக்க தங்க நிறத்தில் ஜொலிக்க, அவர்களால் அவளைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை. அவளைச் சுற்றி இருந்த சக்தி வளையங்கள் அனைத்தும், அவர்களை அருகில் வராமல் தடுத்தன.
இப்படியே நிலைமை தொடர்ந்தால் என்ன ஆகுமோ என்று பயந்த ஆதி, “நந்துமா” என்று கத்த, அது அவள் செவிகளைத் தீண்டிய அறிகுறியாக, அந்த அறையில் உள்ள அனைத்து சாமான்களும் உடைய, கட்டிலில் விழுந்தாள் நந்தினி.
******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
பொசய்டன் தனது திட்டப்படியே, ப்ரொமேத்தியஸை ஏமாற்ற மில்கி வே கேலக்ஸிக்குள் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அதன்பின் ஒரு சூரிய குடும்பத்திற்குள் நுழைந்து, தனது திட்டத்தின்படி அந்த வாகனத்தை அழிக்க யோசிக்க ஆரம்பித்தார்.
அப்போது அவரது விமானத்தின் திரையில் வேறு ஒரு கயா கிரக வாகனம் வருவதாக எச்சரிக்கை செய்ய, அது என்ன என்று பார்த்தார். பின்னர் தான் அது கயா கிரகத்தில் இருந்து வந்து இருக்கும் ஒரு வாகனம் என்பது புரிய, தன் முன்னாலேயே ஒரு பெரிய அநியாயம் நடக்க இருக்க, அதைக் கட்டுப்படுத்த முடியாத தனது கையாலாகா தனத்தை எண்ணி வருந்தினார்.
அவர் தனது புதிய விமானம் உருவாக்கும் திட்டத்தில் ஓரளவு வெற்றி அடைந்து விட்டார். இன்னும் சிறிது வேலை இருந்தது. சிறிது நாட்களாக வேலையில் மூழ்கி இருக்கும் போது தனது உள்ளுணர்வு எதையோ உணர்த்த, வேலை மிகுதியால் அதை அவர் தவிர்த்துவிட்டவர், தற்போது ஏனோ சிறிது நேரம் அமைதியாக அமரலாம் என்று யோசித்தார்.
பின்னர் அவர் சக்தியை ஒன்று திரட்ட அவர் மனம் அவரை அறியாமலே சீரஸின் குழந்தையைத் தேடத் தொடங்கியது. சில நிமிடங்கள் அப்படியே கழிய, அவருக்கு திடீரென்று ஒரு மின்னலைப் போன்று வெளிச்சம் தோன்றியது.
பின்னணியில் ஒரு குரல் “உன் தேடலின் முடிவை நீ அடையப் போகிறாய்” என்று உரைத்தது.
உடனே கண்விழித்த பொசய்டன், “நான் கண்டுபிடித்துவிட்டேன்… கண்டுபிடித்துவிட்டேன்… கயா கிரகத்தின் வாரிசு பூமி கிரகத்தில் இருக்கிறது” என்று கத்தினார்.
அவருக்குப் பல நாளாகத் தான் போட்ட திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சி. அப்போதுதான் அவருக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. இதற்கிடையில், சற்றுமுன் பார்த்த விண்கலம் நினைவுக்கு வர, ஒருவேளை ப்ரொமேத்தியஸ் இதை அறிந்து தான் அந்த விண்கலத்தைப் பூமிக்கு அனுப்பி இருப்பானோ என்ற எண்ணமே அவருள் பயத்தை விதைத்தது.
இப்போது தான் அந்த வாகனத்தை அழிக்காவிட்டால், அதனால் ஏற்படும் விளைவை அவரால் சிந்தித்துப் பார்க்க கூட முடியவில்லை.
தான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று எண்ணியவர், சிறிது நேரம் யோசித்து, அந்த வாகனத்தை self- destruct mode-க்கு மாற்றி தன்னைத்தானே அழித்து கொள்வது போலச் செய்து மற்றொரு வாகனத்தின் இறுதி கட்டப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்.

******
கிரகம் : கயா
இடம் : வெலாரிஸ் கோட்டை
ப்ரொமேத்தியஸ் அப்போது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் கண் முன் இருந்த தோட்டத்தின் பேரழகில் மதி மயங்கவில்லை அவன்.
அதை ரசிக்காமல் கண்களால் பார்த்து கொண்டு மட்டும் தான் இருந்தான். அவனுக்குள் அடங்கியிருந்த நினைவுகள் இப்பொழுது எல்லாம் தங்களைத் தாங்களே கட்டவிழ்த்துக் கொண்டு, அவனைக் கோபத்தில் ஆழ்த்தின. என்ன செய்தாலும் அவன் கோபம் தீரும் வழி மட்டும் அவனுக்கு அகப்படவே இல்லை.
தன்னை இந்த நிலையில் நிற்க வைத்து இருக்கும் செலினாவின் மீது அவன் கோபம் எல்லாம் திரும்பியது. ஆனால், பழைய நினைவுகள் அவனைத் துரத்துவதை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. எப்பொழுதும் போலப் பிரம்ம கிரந்தத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டான். நாம் மிகவும் வேதனையில் இருக்கும் போது, நமது பழைய நினைவுகளில் ஆதரவு தேட முயல்வோம். அவற்றைக் கண்டு நமது தற்போதைய துயரத்தைத் தள்ளி வைக்க முயல்வோம். அதே நிலையில் தான் ப்ரொமேத்தியஸ் இருந்தான்.
அந்த அண்ட சராசரத்தின் அடி வேரான பிரம்ம கிரந்தத்தில் தனக்குத் தேவையான நிகழ்வுகளை, பிடித்தமான மறக்கவியலாத நினைவுகளைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், நேரம் செல்ல செல்ல அதையும் பார்க்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டு ஓய்வுக்காக அமர்ந்தான்.
அப்போது அவனது அறைக் கதவு தட்டப்பட, “இந்த நேரத்தில் என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லியிருந்தேனே ! முட்டாள்களே ! ஏன் எதற்கு எடுத்தாலும் என்னையே தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று திட்டியவன்,
கோபத்தோடு, “உள்ளே வா” என்றான்.
வந்த காவலன், “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்றுவிட்டு,
“பேரரசே, பெருங்கடல் சிறையில் இருந்து தகவல் வந்துள்ளது. சிற்றரசர்கள் அனைவரும் விலங்குகளை விரட்டி, அவற்றை ஒன்றுக்கொன்று மோதச் செய்து, பின் ஒரு பெரிய கவச பந்தை உருவாக்கி சிறையில் இருந்து தப்பி விட்டனராம்” என்றான்.
ப்ரொமேத்தியஸின் கண்கள் செக்கச் செவேலெனச் சிவக்க ஆரம்பித்தன. தனக்கு எதிரே இருந்த ஓர் அழகான சிற்பத்தைத் தன் சக்தியால் சுக்கு நூறாக ஆக்கினான் ப்ரொமேத்தியஸ்.



error: Content is protected !!