Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 05 ( PART 01 )

  

புத்துணர்வோடு புதிய விடியல் தொடங்கியிருக்க, செந்தாமரை வழக்கம்போல சுறுசுறுப்புடன் நாளினை தொடங்கியிருந்தாள். இன்று சற்று கூடுதல் பொலிவுடன் காணப்பட்டாள். அது அவள் வாழ்வில், புது உறவு இணைந்ததன் மகிழ்ச்சியினாலோ? என்னவோ, அதை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் அவளே இல்லை என்னும் பொழுது யார் என்ன சொல்ல முடியும்?


Advertisement

  

பள்ளியிலும் ஓரிருவர் சற்று ஜாடையாகக் கேட்க, “அப்படியா? எப்பவும் போலத் தானே இருக்கேன்” எனத் தன்னையே ஆராய்ந்தபடி பதில் தந்துவிட்டுக் கடந்து சென்றுவிட்டாள்.

  

Advertisement

நேற்றிலிருந்தே அனைவரின் பார்வையிலும் சற்று வித்தியாசம் தெரிவதை அவளும் கவனித்து கொண்டு தானே இருக்கிறாள். இருந்தும் எதையும் கண்டும், காணாமலும் கடந்து விடுகிறாள். அதிலும் சில இளம் பெண்களின் பார்வையில் பொறாமை பொங்கி வழிய, அவர்களை மனதிற்குள் கரித்துக் கொட்டினாள்.

Advertisement

  

  

Advertisement

அவள் பள்ளியில் அறிவியல் பாடத்தை எடுக்கும் ஆசிரியை. முதல் பாட வேளையில் ஒன்பதாம் வகுப்பிற்குப் பாடம் எடுக்க வேண்டும். வகுப்பிற்குச் சென்று, பாடத்தை எடுத்து முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வராண்டாவில் சிலர் அமர, உள்ளே சிலர் அமர என ரிவிஷன் டெஸ்ட் எழுதிக் கொண்டிருந்தனர்.

  

  

‘பப்ளிக் எக்ஸாம் வருதுன்னாலே ஒரு வழியாகிடும்’ என்று தன் பள்ளிக்கால நினைவுகளை எண்ணி, மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.

  

எதேச்சையாக திரும்பும் போது ஒரு மாணவி யாரும் கவனிக்காத வண்ணம் அழுவது தெரிந்தது. தேர்வு எழுதும் பெண் இடையில் அழுகிறாள் என்றால்? ரிவிஷன் தேர்வு தானே! கடினமாக வந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ கவலை கொள்ள வேண்டியதே இருக்காதே! அப்பொழுதும் அழுகிறாள் என்றால்? வீட்டில் பிரச்சினையா? இல்லை பள்ளியில் பிரச்சினையா? என்று எதை எதையோ எண்ணி மிகவும் குழப்பமடைந்தாள்.

  

  

செந்தாமரை வேறு இங்கு பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருப்பதால், இங்கிருக்கும் மாணவ மாணவிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அடுத்தடுத்து வகுப்புகள் இருந்தபோதும், அழும் மாணவியின் முகமே அவளது மனதில் மின்னிக் கொண்டிருந்தது.

  

  

மதிய உணவு இடைவேளை முடிந்ததும், அந்த பெண்ணை ஒருவழியாகத் தனியாகப் பிடித்து விட்டாள். இப்பொழுது அந்த மாணவியின் முகம் சற்று தெளிந்திருந்தது. அதில் அழுத சுவடே இருக்கவில்லை.

  

  

“ஏன்மா உன் பேரென்ன?”

  

  

“வினோதினி மேடம்”

  

  

“எனக்கு ஒரு உதவி வேணுமே செய்யறீங்களா?” என்று செந்தாமரை கேட்டதும், தன்னிடம் ஏன் கேட்கிறார்கள் எனப் புரியாமல் அந்த மாணவி விழித்தாள்.

  

  

குழப்பத்துடனே, “கண்டிப்பா மேடம்” என்று பதில் தந்திருந்தாள்.

  

  

“கொஞ்சம் என்கூட லேப் வரை வாங்க” என்ற செந்தாமரை, அந்த மாணவியை ஆய்வுக்கூடத்திற்கு அழைத்துப் போனாள். அறிவியல் ஆய்வுக்கூடத்தில் இந்நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அங்கு அழைத்துச் சென்றாள்.

  

  

“பத்தாவது தானே?”

  

  

“ஆமாங்க மேடம்”

  

  

“ரிவிஷன் டெஸ்ட் எல்லாம் எப்படி நடக்குது?” என்று கேட்டபோதே வினோதினியின் முகம் இருண்டு மீண்டது.

  

  

“அ… அதெல்லாம் நல்லா போகுதுங்க மேடம்” என்று தட்டுத் தடுமாறி பதில் கூறினாள்.

  

  

இடைவிடாமல் தேர்வுகள் வைப்பதினால் தேர்வு பிடிப்பதில்லையோ? என்று செந்தாமரைக்குச் சந்தேகம் உதித்தது. ஆனாலும், அதற்கு அழுவானேன் என்று குழம்பினாள். “படிக்கிறதே வேப்பங்காய் கசப்பு தான் இல்லையா?” என்றாள் அடுத்த கேள்வியை இலகுவான குரலில், முகத்திலும் புன்னகை தவழ.

  

  

மாணவர்களிடம் கொஞ்சம் அதட்டினாலும் உண்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. இதுபோன்ற அணுகுமுறைகள் தான், அவர்களின் மனதில் இருப்பதை அவர்கள் தங்கு தடையின்றி பேச வழி வகுக்கும். செந்தாமரையும் அந்த வழியைப் பின்பற்ற அது சரியாகவே வேலை செய்தது.

  

  

அவளின் இலகு குரலில், வினோதினியும், “கிளாஸ் கவனிச்சுட்டா படிக்கும்போது ஈஸியா தான் இருக்கு மேம். சிரமம் எதுவும் இல்லை” என்று பதில் தந்தாள்.

  

  

“ஓ நல்லா படிக்கிற பொண்ணு போலயே!” என்று மீண்டும் வேடிக்கையாகவே கேட்டாள்.

  

  

மெல்லிய வெக்கத்துடன், “ஓரளவு படிப்பேன் மேடம்” என்று அந்த மாணவி சற்று தன்னம்பிக்கை மிளிர பதில் தந்ததைக் கவனிக்கையில், இவள்தான் அழுததா என்று எண்ணத் தோன்றிவிட்டது.

  

  

“என்ன ரேங்க் வாங்குவீங்க?”

  

  

“நாலு இல்லை அஞ்சு மேம்” என்று வினோதினி கூறியபொழுது ஆய்வகத்திற்கு வந்திருந்தார்கள். மாணவியை தன் அருகில் அமரவைத்து, அவளது கரங்களைப் பற்றி வருடியபடியே, “இங்கயோ இல்லை உங்க வீட்டிலேயோ உனக்கு எதுவும் தொந்தரவு இருக்கா?” என்று தன் நேரடி கேள்வியை முன்வைத்து விட்டாள்.

  

  

வினோதினி இந்த கேள்வியைச் சத்தியமாக எதிர்ப்பாக்கவில்லை. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம், அந்த கரங்களைப் பற்றியிருந்த செந்தாமரைக்குத் தெளிவாகவே புரிந்தது. தலையை ஆதரவாகக் கோதிவிட்டபடி, “என்னால கண்டிப்பா உனக்கு உதவ முடியும். நம்பு வினோதினி” என்று ஆதரவு தந்தாள்.

  

  

அதைக் கேட்டதும் “மேடம்” என்று விசும்பினாள் அந்த சிறுபெண். வேறு யார் என்றாலும் சொல்ல தயங்கியிருப்பாளோ என்னவோ, இப்பொழுது வெற்றிச்செல்வன் ஐயாவைத் திருமணம் செய்யவிருக்கும் பெண் என்ற தைரியத்திலும், செந்தாமரையின் அணுகுமுறையிலும் தன் மனதை உரைக்க நினைத்தாள்.

  

  

“ஸ்ஸ்ஸ் அழாதே! அழும் அளவு நீ எந்த தப்பும் செய்திருக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி தெரியாம எதுவும் தப்பு பண்ணி இருந்தாலும் தைரியமா சொல்லு. அதை முடிஞ்சவரை சரி செஞ்சுடலாம்” என்று மேலும் தைரியம் தந்தாள்.

  

  

வினோதினியின் நடுக்கமும், பயமும், சொல்லக்கூட கூசும் அவள் செய்கையும் செந்தாமரைக்கு ஓரளவிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று விளங்குவதாக இருந்தது.

  

  

அவளது தயக்கத்தை உடைக்க, “பாரதியாரைப் பிடிக்குமா வினோதினி?” என்று செந்தாமரையாகவே பேச்சை வளர்த்தாள்.

  

வினோதினி ‘இது என்ன பொருத்தமற்ற கேள்வி?’ எனக் குழப்பமாக ஏறிடவும், செந்தாமரையே மேலும் தொடர்ந்தாள்.

  

  

“அவருடைய எழுத்துக்கள் தரும் தன்னம்பிக்கையும், ஊக்கமும், தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். இதுவரை படிக்காமல் விட்டிருந்தா இனி நேரம் கிடைக்கும்போது படிக்கத் தொடங்கு” என்றவள், இந்தமுறை பிசிரற்ற மென்குரலில், அதேசமயம் வினோதிணியை ஆழப் பார்த்தபடி பாரதியின் பாடல் வரிகளைக் கூறினாள்.

  

  

“பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

  

பயங்கொள்ள லாகாது பாப்பா!

  

மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்

  

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

  

  

“பாரதியார் சொன்னது. எவ்வளவு தெளிவா சொல்லி இருக்காங்க! எதுக்காகவும் பயப்படாத. பயந்து, ஒதுங்கி இருக்கிறது தப்புக்கு துணை போறதுக்கு சமம்” இதைக் கூறியதும் ‘அத்தனை மோசமான தப்புக்கு நான் துணை போறேனா?’ என வினோதினியின் முகம் அருவருப்பைக் காட்டியது.

  

  

மாணவியின் முகவுணர்வுகளை பிடித்தபடியே, “உண்மைதான் ஒருத்தங்க செய்யற தப்பை மறந்து, கடக்க நினைக்கிறது… அதே தப்பை அவங்க மேலும் மேலும் செய்ய வழிவகுக்கும். அது தப்புக்குத் துணை போகிறதா தானே அர்த்தம்” என்று கூறினாள். இதற்குமேல் எப்படி இந்த பெண்ணுக்குப் புரிய வைக்க என்று செந்தாமரைக்குப் புரியவில்லை. நல்லவேளையாக வினோதினி அவள் கூறியதைப் புரிந்து கொண்டு தன் மனதில் இருப்பதை முழுவதும் கூறினாள்.

  

  

தேர்வு எழுதும் பெண்களிடம், அந்த வகுப்பின் சமூக அறிவியல் ஆசிரியர், ‘பிட் எதுவும் கொண்டு வந்திருக்கிறாயா?’ என்று கேட்டபடி அங்கங்களைத் தடவியபடி நேரடியாகப் பரிசோதிக்கிறாராம். மிகவும் எல்லை மீறும் அவரது செய்கைகளால் என்ன செய்வது என்றே புரியவில்லையாம்.

  

  

இதை சொல்லி அந்த பெண் தேம்பித் தேம்பி அழுதாள். “இங்க எல்லாம் தொடறார் மேடம். இங்க கிள்ளி வெக்கறாரு. இங்க ஒரு மாதிரி தடவுறாரு. அருவருப்பா இருக்கு மேடம்” என்று அழும் மாணவியைச் சமாதானம் செய்யும் வழி தெரியாது அமர்ந்திருந்தாள். அந்த மாணவி சொன்னதைக் கேட்கவே செந்தாமரைக்கு உடல் கூசியது. அந்த ஆசிரியரின் கன்னம் பழுக்கும் அளவு அறைய வேண்டும் என்னும் ஆத்திரம் வந்தது.

  

  

அழும் மாணவியைச் சமாதானம் செய்வதே பிரதானமாகப்பட, “ஸ்ஸ்ஸ் அழக்கூடாது. இதுல தப்பு உன்மேல இல்லை. ஆனா, இதை மறைச்சிருந்தீன்னா அதைவிடத் தப்பு எதுவும் இல்லை. இப்போதான் வெளிப்படையா சொல்லிட்டியே இனி நான் பார்த்துக்கறேன். தைரியமா இரு” என்று வினோதினியை ஓரளவு தேற்றினாள்.

  

  

“இந்த பிரச்சனை வெளியில தெரிஞ்சா எங்க படிப்பு எதுவும் கெட்டுடாதே மேடம்” என்று அச்சத்துடன் வினோதினி கேட்டாள்.

  

  

“அதெல்லாம் இல்லைடா. இப்ப நீ வெளிய சொன்னதால உனக்கு அடுத்து வர பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனை வராது. இதே விஷயத்தை உனக்கு முன்னாடி படிச்ச பொண்ணுங்க வெளியில சொல்லியிருந்தா உனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது தானே”

  

  

ஆம் என்று தலையாட்டியவள், “நாம இந்த புகாரை சொல்லறவங்க, அந்த சாருக்கு தெரிஞ்சவங்களா இருந்துட்டா” என்று மேலும் பயந்தபடி கேட்டாள்.

  

  

“அந்தளவு நம்பிக்கை இல்லைன்னா, சைல்ட் ஹெல்ப் லைன் 1098 இருக்கு. இல்லாட்டி போலீஸ் கிட்ட கூட சொல்லலாம். எவ்வளவோ வழி இருக்கு. இதுல பயந்து, ஒதுங்க காரணமே இல்லை புரியுதா. அதோட உன் பேரே வெளிய வராம இந்த விஷயத்தை இனி நான் பார்த்துக்கறேன்” என்று உறுதியும், நம்பிக்கையும் தந்தாள்.

  

  

“தேங்க்ஸ் மேடம்” என்ற வினோதினியின் முகத்தினில் சற்று தெளிவு எட்டிப் பார்த்தது.

  

  

ஆனால், நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதிலிருந்து செந்தாமரையின் மனதில் கோபம் கனன்றது. மேற்கொண்டு யாரிடம் இதைப்பற்றி புகார் தரலாம் என்று தீவிரமாக சிந்தித்தாள்.

  

  

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்துவிட முடியாது என்று புரிய, முதலில் அந்த ஆசிரியர் பற்றியும், தலைமையாசிரியர் பற்றியும், இருவருக்கும் இடையேயான உறவு குறித்தும் சக ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

  
 

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!