Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம் – 9

தன் காதலனுடன் ரயில் நிலையம் சென்றவளை கையோடு தூக்கி வந்திருந்தனர், சனாவின் ஆட்கள்.

அந்த உயர்ரக மகிழுந்தை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த சனா, மாலினியின் அழுகுரல் கேட்டு எரிச்சல் அடைந்தாள்.

“இப்போது என்ன ஆகிவிட்டது என்று இப்படி அழுகின்றாய்?.” என்றாள் முகத்தை சுழித்துக்கொண்டு எரிச்சல் மிகுந்த குரலில்.

அவளோ விடாமல் அழுது கொண்டிருந்தவள், வழக்கம் போல் தனது அக்காவிடம் பணிவன்புடன் பேசாமல், “என் வாழ்க்கையை அழிக்கவே நீ பிறந்திருக்கின்றாய்!. நான் நன்றாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லை.” என்று கோபமாக ஏங்கியபடி வசைபாடினாள்.



Advertisement

சனாவோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டாள். அதை பின்பக்கமாக இருந்த மாலினி, முன்பக்கமாக இருந்த கண்ணாடியின் வழியே பார்த்துவிட, “இப்போது எதற்காக நக்கல் தொணிக்கும் படி சிரிக்கின்றாய்?.” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களின் வீடு வந்துவிட்டது.

வீட்டின் முன்பு சென்று தன் மகிழுந்தை நிறுத்தியவள், “வீடு வந்துவிட்டது. இறங்கி வா.” என்றதும், முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டே வேறு வழி இல்லாமல் சனாவுடன் உள்ளே சென்றாள் மாலினி.

தடபுடலாக ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்குள் இருவரும் நுழைந்தனர்.

Advertisement

வரவேற்பு அறையில் இருந்த உமா, தன் மகளைப் பார்த்து, “இன்னைக்கும் நீ வெளியே போகவேண்டுமா?.” என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவர், அப்போது தான் அவள் அருகில் இருந்த சனாவைப் பார்த்தார்.

Advertisement

உடனே போலியாக முகத்தில் புன்னகையை தவழ விட்டவர், “வாம்மா சனா….” என்று பெயருக்கு அழைத்துவிட்டு, திரும்பவும் தன் மகளிடம், “சீக்கிரம் தயாராகு.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தன் அறைக்குள் வந்த மாலினி, பட்டாசு போல் பொரிய ஆரம்பித்தாள்.

“நான் அப்படியே சென்றிருந்தால், இந்நேரம் ராஜஸ்தான் சென்றிருப்பேன். எல்லாம் உன்னால் வந்தது.” என்று பேசிக் கொண்டே சென்றாள்.

Advertisement

ஜன்னல் வெளியே தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சனா, அவளை பின்னே திரும்பி முறைத்துப் பார்த்து விட்டு, “உனக்கு நல்லது தான் செய்திருக்கின்றேன். நீ வேறு ஒருவனுடன் ஓடி சென்றது தெரிந்தால், உன் அத்தை உன்னை கவுரவ கொலை செய்துவிடுவார்.” என்று கூறி அவளை பயப்பட வைத்தாள்.

அழுது கொண்டே, “அப்படியா!” என்றவளை திரும்பி பார்த்தவள், “நான் உனக்கு நல்லது தான் செய்திருக்கின்றேன். நானே உன்னை நல்லபடியாக அனுப்பி வைக்கின்றேன். கொஞ்சம் பொறுமையாக இரு.” என்று சொல்லிக்கொண்டே மாலினியின் கழுத்தில் எதையே தேடினாள்.

“சக்ராவும் இதே போல் தான் சொல்லி, எனக்கு உதவி செய்தார். நான் இப்போது சென்றால் என்ன? பிறகு சென்றால் என்ன?“

“சக்ரா உன்னை மாட்டிவிட்டு அவன் மட்டும் நல்ல பெயர் வாங்க நினைக்கின்றான். இங்கே பார் மாலி. நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் தான் உனக்கு நல்லது.” என்றாள் சனா.

“உன்னை எப்படி அக்கா நம்புவது?. உன் ஆட்கள் என் ரோஷனை அடித்துவிட்டார்கள்.” என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள்.

மூச்சை இழுத்து வெளியே விட்டவள், “என் மீது நம்பிக்கை வை மாலி. உன் காதலன் நன்றாக தான இருக்கின்றான். அவனுக்கு ஒன்றும் இல்லை. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் நானே அவனுடன் உன்னை அனுப்பி வைக்கின்றேன்.” என்றாள் ஆறுதலாக.

தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “அப்போ நேற்று எடுத்தது போலவே அதே விலையில் எனக்கு இரண்டு லெஹெங்கா வேண்டும்.” என்றதும் உதட்டை வளைத்து சிரித்த சனா, “சரி.” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டாள்.

அதன் பிறகு தான் மாலினியின் முகம் மலர்ந்தது.

பின் எதையோ யோசித்தவள், “ஆனால் சக்ராவுடன் எப்படி அக்கா?.” என்றாள் குழப்பமாக.

“வெறும் நிச்சயதார்த்தம் தானே பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொல்லும் போதே யாரோ வரும் அரவம் கேட்டு இருவரும் அமைதியானார்கள்.

உள்ளே வந்த உமா, சனாவைப் பார்த்து, “அப்போதே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். உங்க அம்மா வரலையாம்மா?.” என்றார் சடவோடு.

மெல்லியதாக சிரித்துக் கொண்ட சனாவோ, “இல்லை ஆண்ட்டி.” என்று கூற.

ஒரு சிரிப்பை சிந்தியவர், “சரி நீ தான் வந்துட்டியே. ஆமாம் உனக்கு எப்போ கல்யாணம்.” என்று இளக்காரம் ததும்பிய கேள்வி ஒன்று வந்தது அவரிடம் இருந்து.

அவர் எதற்கு ஆரம்ப புள்ளி வைக்கின்றார் என்பதை, உணர்ந்து கொண்ட சனாவோ, “கூடிய சீக்கிரம் ஆண்ட்டி.” என்று பேச்சை கத்தரிக்க எண்ணினாள். ஆனால் உமாவோ விட்டால் தானே.

அவர் சனாவின் மேல் உள்ள அக்கறையில் கேட்கின்றார் என்று நினைத்தால் அது தவறு. உமாவைப் பொறுத்தவரை கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ஜாடை பேசுவார். சாதரணமாக பேசுவது போல் பேசி, ஒருவரை மனம் கலங்க வைப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்.

“எப்படியோ வேகமாக நடந்தால் சரி தான். எங்க மாலினிக்கு எல்லாம் வீட்டோட அமைஞ்சிருச்சி. எல்லாருக்கும் அப்படி இருக்காதே!. மாமா நல்ல நல்ல வரங்களை எல்லாம் உன் அம்மாவிடம் காட்டினாராம். ஆனால் உன் அம்மா தான் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.” என்று முகத்தை எட்டு நீளத்திற்கு நீட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய உமா, “நல்ல வரங்களை எல்லாம் தட்டி கழிச்சா, உனக்கு கல்யாணமே ஆகாது. உங்க அம்மா அவங்களை மாதிரியே உன்னையும் வச்சிக்கணும்னு நினைக்குறாங்க போல. என்னமோ உன் அம்மாவை மாதிரி கிடைச்ச வாழ்க்கையை இழந்துவிடாதே.” என்று சொல்லிவிட்டு மாலினி மேல் தன் கவனத்தை திருப்பினார்.

“எங்க அம்மாவுக்கு என்ன ஆண்ட்டி?. ஜனாதிபதி கையால் விருது வாங்குனவங்க. எங்க அம்மாவை நம்பி பல தொழிலாளர்கள் வீட்டில் அடுப்பு எரியுது. மற்றவர் வாழ்கையை பறிக்க எண்ணாமல், எங்க அம்மா மாதிரியே நானும் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லையே!” என்று அவரைப் போலவே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றினாள்.

சனா கண்ணாடி போன்றவள், அவள் மீது வீசப்படும் ஒவ்வொரு கற்களுக்கும், கூர்முனை கற்கள் குத்துவது போல் திருப்பி கொடுத்து விடுவாள்.

சனாவின் பேச்சில் வாய்க்குள் எதுவோ முணுமுணுத்துக் கொண்டவர், அதன் பின் நேரடியாக எதுவும் பேசவில்லை. மாலினியை சீக்கிரமாக வர சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

தான் வாங்கி தந்த லெஹெங்காவை தன் கையில் எடுத்த சனா, “இதோ இதை மாற்றிக்கொள். விழாவிற்கு நேரமாகிவிட்டது பார்.” என்று கண்ணாடியில் தன் முக அழகை பார்த்துக் கொண்டிருந்த மாலினியை  அவசரப்படுத்தினாள்.

அவள் சொன்னதும் முன்பு போல உஷ்ணமாகாமல் வாயைத்திறந்த மாலினி, “ஆனால் இதை என் திருமணதிற்கு அல்லவா வாங்கினேன்.” என்றாள் தேய்ந்த குரலில்.

“அதற்கு என்ன?. உன் திருமணதிற்கு இதோடு அதிகமான விலையில் எடுத்து தருகின்றேன்.” என்றதும் அவளை அணைத்துக் கொண்டாள் மாலினி.

ரோஷன் என்ற வடமாநில இளைஞன் ஒருவனை காதலித்து வந்தாள் மாலினி. அவனை திருமணம் செய்வதில் முனைப்பாக இருந்தவளுக்கு, சக்ரா உதவ வந்தான். ஆனால் பொருளாதார ரீதியாக அல்ல. அதனால் தனக்கு விருப்பமானதை அவள் சனாவிடம் வேண்டி பெற்றுக்கொண்டாள்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும். உன் கழுத்தில் இருந்த சங்கிலியை எங்கே.” என்று கேட்டுக் கொண்டே, மாலினியின் கழுத்தைப் பார்த்தாள்.

“அது என் அலமாரியில் இருக்கின்றது அக்கா. இந்த உடைக்கு அது நன்றாக இருக்காது என்பதால் அதை நான் போடவில்லை.”

“எங்கே அதை எடுத்து என்னிடம் கொடு.” என்று சனா சாதாரணமாக கேட்க.

சனாவிடம் மறுபேச்சு எதுவும் இல்லாமல் அதை அவள் கையில் வந்து தந்தாள் மாலினி. அதை தன் திருக்கரங்களால் வாங்கியதும், அவள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்த சங்கிலியைப் பார்த்த சனாவின் கெண்டை கருவிழி மின்னியது.

“சரி இது என்னிடம் இருக்கட்டும். விழா முடிந்ததும் இதை உனக்கு தந்துவிடுகின்றேன்.” என்க.

அதைப்பற்றி பெரியதாக ஆராயாத மாலினியோ, “சரி.” என்று கூறிவிட்டு தன் முகத்திற்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அந்த கழுத்து சங்கிலியில், சாவி போன்று தொங்கிக்கொண்டிருந்த பெண்டன்ட்டை வருடியவள், ‘இன்னும் ஐந்து மட்டுமே பாக்கி.’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

அதிசயங்களை அறிய அற்புதங்களை கண்டுபிடிக்க தயாராகிவிட்டாள் சனா. ஆனால் சக்ராவோ, அவளின் பெயரில் சிந்தையை வைத்து சந்தம் பாடிக்கொண்டிருந்தான்.

சனாவின் இந்த நிலைபாடுக்கான காரணம் அவனுக்கு தெரியவில்லை. அது தெரியும் நேரம், அவனது காதல் அவனுக்கு வைக்கும் தேர்வாக இருக்கும்.

****************************************

அழகு மயில் கழுத்து நிறத்தில் காஞ்சி பட்டுப்புடவை கட்டி, அதற்கு தோதாக கழுத்திலும், காதிலும் மயில் இறகினால் உருவாக்கப்பட்ட அணிகலன்களை அணிந்திருந்தவள், அழகு பதுமையென நடந்து வரும் போது நிஜமாகவே மயில் போல் காட்சியளித்தாள். அந்த அழகினில் மயிலினம் மெல்லினம் ஆனதோ!

அந்த இரவு நேரத்தில் விளக்குகள் அனைத்தும் ஜோலிஜொலிக்க நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. அவர்கள் வீட்டிலையே தற்போதைக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சென்று மாலினியை நிற்க வைத்தாள் சனா.

அந்த மேடையே மயில் போல் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. “அக்கா…. எனக்கு பயமாக இருக்கின்றது. சக்ரா வேறு என்னை அடிக்கடி முறைத்து பார்க்கின்றார். உன் பேச்சைக் கேட்டு அவர் அழைப்பையும் நான் எடுக்கவில்லை.” என்றாள், தன் கைவிரல்களை பிசைந்து கொண்டே.

மாலினிக்கு ஆதரவாக அவள் கையை தடவிவிட்டவள், அப்போது தான் சக்ரா இருக்கும் இடத்தை தன் கண்களால் தேட ஆரம்பித்தாள் சனா.

அவள் கண்களில் அவன் விழுந்ததும், அவளது கால்கள் அவனை நோக்கி சென்றன.

அவள் தன் அருகினில் வரும் போது தான், அவள் அழகினை முழுமையாக கண்டன ஆடவனின் கண்கள்.

மயிலிறகு போல் வருடும் அவள் பார்வையை உணர்ந்த அவனது இதயம் அவனுக்குள் புது மாற்றத்தை உண்டு செய்தது. எல்லாம் அவள் அவன் அருகில் வரும் வரை தான்.

ஏதோ ஒரு வித கனவுகளில் மிதந்துகொண்டிருந்தவனைப் பார்த்து இளநகை புரிந்தவள், “நேரமாகிவிட்டது சக்ரா…. மேடைக்கு செல்லலாம் வா….” என்றதும் வானத்தில் இருந்து கீழே யாரோ தள்ளிவிட்டதைப் போல உணர்ந்தான்.

அதற்குள் அவன் அருகே வந்த அவனது தாய் வேதா, “மேடைக்கு செல் சக்ரா.” என்றார் உத்தரவாக.

அவனும் வேறு வழி இல்லாமல் மேடைக்கு சென்றான்.

அவன் பின்னே தானும் சென்று, அவன் அருகில் நின்றுகொண்டாள் சனா.

மூவரையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. தன் யூடியூப் பக்கத்தில் போட, வீடியோ தயாரித்துக் கொண்டிருந்தவன், சக்ராவை நோக்கி வரும் சனாவையும், அவளைப் பிரம்பிப்புடன், கண்களில் தேங்கிய காதலுடன் பார்க்கும் தன் அண்ணனையும் அழகாக தன் கேமராவில் பதவு செய்தான்.

ஆனால் அடுத்த நிமிடமே அவன் சிரித்துக் கொண்டே, மாலினியுடன் நின்றது, அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதைப்பற்றி அவன் யோசிப்பதற்குள் சக்ராவிடம் இருந்து சிவாவிற்கு அழைப்பு வந்தது.

அவனைப் பார்த்துக் கொண்டே, “இப்போது எதற்காக அழைக்கின்றான்.” என்று மேடையில் இருக்கும் சக்ராவை பார்த்துக் கொண்டே, அழைப்பை எடுத்து தன் காதில் வைத்தான்.

இதை சிவா மட்டும் கண்டுகொள்ளவில்லை, அருணகிரியும் கண்டுகொண்டார். அந்த நிலையில் அவரது மனதில் பல குழப்பங்கள் எழுந்தது. ஏதோ தவறாக நடக்கப்போவதாக அவரது உள்ளம் துடித்தது.

சனாவின் முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியுடன் தான் சக்ரா மற்றும் மாலினியின் பெற்றோரும் இருந்தனர்.

“உலகத்திலையே இவ்வளவு மகிழ்ச்சியாக, தன் கணவனுக்கு தன் தங்கையுடனே நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் மனைவி நீயாக தான் இருக்கும்.” என்று சனாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் பல்லைக்கடித்துக் கொண்டு மொழிந்தான் சக்ரா.

இப்போது மாலினியுமே சனாவின் மீது கோபமாக தான் இருந்தாள். காரணம் சக்ரா அவளை காய்ச்சி எடுத்திருந்தான்.

வேதாவும், உமாவும் மோதிரத்தை எடுத்து வந்து சக்ராவிடம் நீட்ட, இப்போது சனா மாலினியின் அருகே வந்து நின்றுகொண்டாள்.

சரியாக அவன் மோதிரத்தை மாலினியின் கையில் அணிவிக்கும் போது, மின்சாரம் மொத்தமாக ரத்தாகி, அந்தகாரமாய் மாறியது.

அனைவரும் அதில் அதிர, ஆங்காங்கே கூச்சல் சத்தம் கேட்டது. எல்லாம் ஒரு கணங்கள் மட்டுமே.

திரும்பவும் மின்சாரம் ஒளிர, மோதிரத்தை மாலினியின் விரல்களுக்குப் பதிலாக சனாவின் விரலில் மாட்டிவிட்டிருந்தான் சக்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!