Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Short Stories

செல்வி. திருமதீஸ் – 3

திருமதி: இ

 

மற்ற இரு வீடுகளுக்கு முற்றிலும் மாறாக அவ்வீடு மெளனத்தின் ஆட்சியால் சூழப்பட்டிருக்க, செங்கதிரோன் தன் புலன்களை விரிவாய் விரித்து தாராளமாய் அவ்வீட்டின் மீது வீசினும், அதனுள் இருந்த உறுப்பினர்கள் அதனை சற்றும் சட்டை செய்யாது நித்திராதேவியின் ஆசியில் திளைத்திருந்தனர். இருப்பினும் எவ்வளவு நேரம் தான் தன் அருளை ஒரே வீட்டிற்கு வாரி வழுங்குவார் தேவி? ஆசி வழங்கிய சோர்வில் துயில் கொள்ள சென்றுவிட, அந்த வீட்டின் ஓர் அறையில் பஞ்சு மெத்தையில் மென்மையாய் படுத்திருந்தவள் மெல்ல இமைகளை பிரித்து நித்திரை களைந்தாள்.

 



Advertisement

தூக்கம் கண்களில் சுழட்டி அடிக்க அதை விரட்டி எழுந்தவள் தன் பக்கத்தில் இருந்த வெறுமையை பார்த்து உதடு வளைய விரக்தி சிரிப்பை உதிர்த்தாள். போர்வையை விலக்கி எழுந்தவள் கண்களை அழுந்த துடைத்துவிட்டு குளியலறை புகுந்து தன்னை சுத்தப்படுத்தி வெளியே வந்து ட்ரெசிங் டேபிளில் இருந்த மாய்ஸ்டுரைசரை சருமத்தில் படரவிட்டு தோளை ஈரப்பதத்துடன் மென்மையாக்கினாள். ஒருமுறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியேறிய நொடி விழிகள் அவள் எதிரே இருந்த அறையில் படிந்தது. அறைக் கதவு மூடுயிருக்கவும் நிம்மதி பெருமூச்சு அவளிடம்… 

 

காலை ஸ்டாடராக ப்ரோட்டீன் ஷேக் செய்து கொண்டவள் அதற்கான கோப்பையில் ஊற்றிக்கொண்டு தன் அலைபேசியுடன் வெளி வராண்டா படியில் அமர்ந்தாள். இடக்கை திரவத்தை ஏந்த, வலக்கை அனாசியமாய் அலைபேசியை தேய்த்து அறிவிப்புகளை படிக்க உதவியது. அவளுடைய தனிப்பட்ட தளத்திற்கு வந்திருந்த செய்திகளை படித்து தேவையற்றவற்றை அப்புறப்படுத்த,

Advertisement

 

Advertisement

“மார்னிங்… ஸ்வேதா…” என்ற சோர்வான குரல் அவளை அலைபேசியிலிருந்து பிரித்தது.

 

கண்கள் மின்ன தலை நிமிர்த்தியவள் தன் அருகே வந்து அமர்ந்தவனைப் பார்த்து புன்னகையுடன், “வெரி ஹேப்பி மார்னிங் குமார்.” 

Advertisement

 

“நாட் எ ஹேப்பி ஒன் பார் மீ…” என்றான் சோர்வு குறையாது.

 

தன் கையில் இருந்தவற்றை கீழே வைத்துவிட்டு, அவன் கன்னத்தை மென்மையாய் ஏந்தியவள், “இட்ஸ் ஓகே… இந்த ப்ராஜெக்ட் அமையல என்றால் என்ன… அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்…” என்று ஆறுதல் வார்த்தை பேச,

 

“இந்த ப்ராஜெக்ட் கிடைக்கும்னு நிறைய நம்புனேன் ஸ்வேதா… எங்க மிஸ்டேக் ஆச்சுன்னே தெரில.” என்று குமரன் வருந்த அவளின் பட்டு போன்ற விரல்கள் அவன் கன்னத்தை மென்மையாய் அதே சமயம் நான் இருக்கிறேன் என்று ஆறுதலாகவும் வருடியது.

 

அதை உணரக் கூட இல்லாமல் வெறுமையை வெறித்துக் கொண்டிருந்தான் குமரன். அதை கண்டுகொண்ட பெண்ணவளுக்கோ மனதில் சுருக்கென்றது. எவ்வளவு காதல் கொட்டினாலும் அதை புரிந்து கொள்ளாமல், அங்கீகரிக்காமல் இருப்பவனை என்ன செய்வது? இப்போதெல்லாம் எங்கே காதல் காணாமல் போய்விடுமோ என்ற பயம் வேறு பெண்ணவளை தொற்றிக்கொள்கிறது.

 

“என்ன காலையிலேயே வாசலில் கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்க?” என்ற குரலில் திடுக்கிட்டு கைகளை உள் இழுத்துக் கொண்டாள் ஸ்வேதா. 

 

குமரனோ அசட்டை செய்யாமல் மெல்ல எழுந்து தன் பிஸ்னஸ் குறித்த சிந்தனையுடனேயே உள்ளே சென்றுவிட்டான். அதையே ஏக்கமாக பார்த்த ஸ்வேதா எழுந்து அவனைப் பின்தொடர முயல,

 

“ஆளாளுக்கு ஒரு நேரத்திற்கு வீட்டிற்கு வர இது என்ன சத்திரமா?” என்று கேள்வியில் நின்று நிதானித்து பற்களை கடித்துக் கொண்டு திரும்பினாள் ஸ்வேதா,

 

“இப்போ தானே உங்க பையன் உள்ளே போனாரு… இந்த வீட்டை வாங்கிய அவரிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டியது தானே?” 

 

“வாய் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… நான் உன்னை கேட்டேன். நைட் எப்போ வந்த?” அதிகாரத்துடன் வந்தது கேள்வி.

 

ஆழ மூச்சிழுத்து பத்து முதல் ஒன்று வரை பின்னால் இருந்து எண்ணியவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “பத்தரை மணிக்கு வந்தேன்.” என்று கடமைக்காக பதில் கூறினாள்.

 

“அவ்வளவு நேரம் வெளில என்ன வேலை?”

 

“அதை உங்க பையன் கேட்கட்டும் சொல்றேன்.”

 

“இப்படியே பேசிட்டு இரு ரெண்டு பேரும் இருதீவா தான் இருக்க போறீங்க.” என்றவர் குரலில் ஆதங்கம் இருந்ததோ என்று கண்டுகொள்ள இயலா தொணி.

 

மனம் தளர்ந்த வேளையில் இப்படியான எள்ளல் பேச்சு அவளை மேலும் தளர்த்தியது, “ப்ச்… என்ன தான் பிரச்சனை அத்தை உங்களுக்கு?”

 

“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன். ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்த்துட்டா மனசு நிறைஞ்சிடும்.” 

 

“அப்போ, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க…” வார்த்தைகள் ஸ்வேதாவின் வரிசை பற்களில் இடிபட்டு முட்டி மோதி குதறலாய் வெளிவந்தது. 

 

“போடி கூறுகெட்டவளே… இன்னும் எவ்வளவு நாள் தான் இதையே சொல்லப்போற? உனக்கு சாமர்த்தியம் பத்தல அதான் கல்யாணம் ஆகி அஞ்சு வருடம் ஆகியும் இரண்டு பேராகவே இருக்கீங்க.”

 

பல நாட்களாகவே அவளை நோக்கி வரும் இந்த இகழ்ச்சிகளை கேட்டு சலித்துப்போனவள் அகத்தில் இருந்த எரிச்சல் மறையாது, “ப்ச்… ஏதோ நான் வேணாம்னு சொல்ற மாதிரி ஒவ்வொரு முறையும் என்னையே நொட்டம் சொல்றீங்க? நான் நினைச்சா மட்டும் குழந்தை வந்துடுமா என்ன?”

 

“அததான் நானும் சொல்றேன் உனக்கு சாமர்த்தியம் போதல… எனக்கு இருப்பதோ ஒரே புள்ள… அவன் வாரிசை என்னால கொஞ்ச முடியலையே…” 

 

மாமியார் ஆதங்கப்பட்டாலும் அவரின் நிலையும் அந்த எரிச்சலிலும் புரிய சற்று தணிந்த குரலில், “இப்படி புலம்பாம இருங்க முதல்ல… எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய தருணத்தில் கிடைக்கும்.” என்றாள்.

 

“என் வாயை அடக்க புருஷனும், பெண்டாட்டியும் நல்லா கத்து வச்சிருக்கீங்க… குழந்தை இல்லாம இப்படி ஓடி ஓடி சம்பாரித்து என்ன செய்ய போறீங்க? குழந்தையோடு இருக்கும் இல்லறம் தான் மகிழ்ச்சிக்கு அடையாளம்… என் நேரம் நான் இப்படி புலம்பிட்டு இருக்கேன்… இங்க பக்கத்து வீட்டில ஏதோ குழந்தை இருக்கும் போல… தினமும் காலைல ஒரே அழுகை. அந்த குழந்தையை பார்த்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்…”

 

மகனை கேட்காது எப்போதும் தன்னையே சீண்டவும் தணிந்திருந்த எரிச்சல் மீண்டும் மூண்டது, “போய் பக்கத்து வீட்டில் குழந்தை இருக்கா இல்லையானு ஆராய்ச்சி பண்ணுங்க… என்னை ஆளை விடுங்க…” என்று ஓடாத குறையாக வேக நடையிட்டு சென்று விட்டாள். 

 

அறைக்கு சென்றவள் நேரே குமரனிடம் தான் சென்று நின்றாள், “இங்க பாருங்க குமரன் எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.”

 

தலையை கைகளில் தாங்கியிருந்தவன் எழும்பாமலே, “ப்ச்… லீவ் மீ அலோன் ஸ்வேதா…” 

 

பாழாய் போன காதல் கொண்ட மனது அவனின் வருத்தத்தை உரைக்க தன் மனநிலையை ஒதுக்கியவள், அவன் அருகில் அமர்ந்து தோளில் கை வைத்து, “உங்களோட லட்சியம் எனக்கு புரியுது. பிஸ்னஸ் எல்லாம் ஒரே நாளில் வெற்றி கிடைச்சிடாது குமரன். இந்த அஞ்சு வருஷத்தில உங்க பிஸ்னஸ் எவ்வளவோ முன்னேற்றி மேலே கொண்டு வந்திருக்கீங்க. நம்பர் ஒன்னா வர சில வருடங்கள் ஆகும், அதற்காக நம்ம வாழ்க்கையை நிறுத்தி வைத்திருப்பதில் எந்த நியாமமும் இல்லை. இப்போவே எனக்கு முப்பதும் உங்களுக்கு முப்பத்திரெண்டும் ஆச்சு… அத்தை வேற சும்மா சும்மா குழந்தை குழந்தைனு கடுபேத்துறாங்க… அவங்க பேச்சை இதற்கு மேல் என்னால சகிக்க முடியாது இதற்கு ஒரு பதிலை சொல்லிட்டு அப்புறம் உங்கள் கப்பல் கவிழ்ந்ததற்கு வயலின் வாசிங்க…”

 

“சும்மா கடுப்பேத்தாத ஸ்வேதா… இப்போ நான் எதையும் யோசிக்கிற மனநிலையில் இல்லை. அதோடு இதை நாம் பல முறை பேசியாச்சு. இன்னும் இரண்டு வருடத்திற்கு இந்த நினைப்பே இருக்கக்கூடாது உனக்கு…”

 

“இன்னும் இரண்டு வருடமா? அதெல்லாம் முடியாது. அத்தைக்காக என்றாவது நீங்கள் இதில் விரைவான முடிவு எடுத்தாக வேண்டும்.”

 

“ப்ச்…” பதில் கூற விரும்பாமல் நகர்ந்துவிட,

 

வெகுண்டு எழுந்தவள், “நான் டெஸ்ட் டியூப் பேபிக்கு ட்ரை பண்ண போறேன். ஒரு அரைமணி நேரம் வந்து ஸ்பெர்ம் டொனேட் பண்ணிட்டு போங்க… அதற்கு பிறகு நானே என் குழந்தையை அத்தையோட வளர்த்துக்குறேன்…” என்று சொல்லி முடிக்கவில்லை வெள்ளரி பழம் போல இருந்த அவள் கன்னம் தக்காளி பழமாய் சிவந்து, அவனின் விரல் அச்சை தாங்கி நின்றது.

 

அதிர்ச்சியில் விழிகள் அகன்று நிற்க, அவள் இதழ்கள் தடித்து துடித்தது. அவள் கூறிய செய்தியில் அவனும் சற்றும் சளைக்காத அதிர்ச்சியுடனும் அங்காரத்துடனும் புஜங்கள் இறுக நின்றிருந்தான்.

 

“என்னை இதுவரைக்கும் யாருமே அடிச்சது இல்ல… நீங்க அடிச்சிட்டீங்கள்ல… உங்களோட எல்லா ஆசைக்கும், முடிவுக்கும் மதிப்பு கொடுத்ததற்கு நல்ல சன்மானம் கொடுத்துடீங்க… உங்களோட இந்த சன்மானத்திற்கு தக்க பதில் கூடிய விரைவில் வரும்…” என்று ஆங்காரமாய் மொழிந்துவிட்டு வெளியேறினாள் பெண்.

 

அவளுக்கு குறையாத அதே ஆங்காரத்துடன் காற்றில் ஒரு குத்து விட்டு தன் நெற்றியில் அடித்துக்கொண்டான் குமரன்.

 

வெளியேறிய பெண்ணவள் நேரே தன் அலுவலக அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டு, சன்னல் அருகே இருந்த ஊஞ்சலில் கால்களை குறுக்கிக் கொண்டு தலையை முட்டியில் சாய்த்து அமர்ந்து கொண்டாள்.

 

பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் திருமணத்திற்கு முன்னே காதல் பறவைகளாய் மாறி சிறகடித்து பறந்தனர். அவ்வப்போது அவனின் வியாபார மோகம் இவர்கள் இடையில் உரசலை ஏற்படுத்தி இருக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் அலுவலகமே கதி என்று கிடப்பான். அதை பார்த்து நொந்து அப்படியென்ன வியாபாரத்தில் இருக்கிறது என்று பார்த்துவிட எண்ணி சுயதொழில் செய்ய ஆரம்பித்தாள் ஸ்வேதா. இப்போது அவள் பெயர் சொல்லும் அளவிற்கு அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதோடு, அழகு சம்மந்தப்பட்ட ஒரு யூ டியூப் சேனலையும் நடத்தி சில லட்சங்களை அலட்டலின்றி சம்பாதிக்கிறாள். ஆனால் இன்னமும் குமரனின் வியாபார போதை குறையவதாக இல்லை.  

 

ஓரிரு வருடங்களாகவே அவளின் மாமியார் குழந்தை, குழந்தை என்று ஜபம் செய்ய இன்று நிதானத்தை இழந்துவிட்டாள் ஸ்வேதா. அவளுக்குமே வாழ்க்கையின் மீது ஏதோ ஒருவித சலிப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த சலிப்பு மறையும் போதெல்லாம் அவள் மாமியார் தூபம் போட்டு அவளுள் பிசக்கை ஏற்படுத்தி விடுவார். அடைத்து வைத்திருந்த அனைத்தும் இன்று வெளியேறிவிட எதற்காக வாழ்கிறோம்? திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் என்ன சாதித்தோம்? 

 

கவலையின்றி பறக்கும் பட்டாம்பூச்சியாய், செல்வியாகவே இருந்திருக்கலாமோ… என்றதொரு எண்ணம் அவளை கவலையுறச் செய்ய முடிவெடுக்க முடியாமல் திணறினாள். 

 

இப்படி ஒவ்வொரு காரணத்தால் கண நேரத்தில் வாழ்க்கையின் மீது சலிப்பு தோன்றிய மனைவிமார்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால்?!

 

சலனங்கள் மறையுமா? 

 

விபரீதங்கள் நேருமா?

 

தீர்வுகள் கிட்டுமா?

 

★★★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!