Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஜன கண மன (நிறைவுப் பகுதி )

  • அத்தியாயம் 6

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற தினேஷிற்கு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பலமான வரவேற்பு கொடுத்தது AFI. (Athletic Federation of India)

AFI  நிர்வாகிகளில் ஒருவரான அஸ்தோஷ் பல்லா நேரில் வந்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் முக்கிய செய்தியில் இடம் பிடித்திருந்தான் தினேஷ் . அவன் தந்தை கந்தவேலுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி. அதை விட  அதிக மகிழ்ச்சி அவன் சிற்றன்னை வாசுகிக்கு. இருக்காதா பின்ன… இப்போது அவன் பிரபலமானவனாகி இருக்கிறானே…!

பவளக்கொடி, மூக்கையா தம்பதிகளுக்கு இந்த விளையாட்டு பதக்கம் பெருமை இதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தன் பேரன் வென்றிருக்கிறான்… நாடே அவனை கொண்டாடுகிறது…!அது மட்டில் அந்த மூத்த தம்பதிகளுக்கு தெரிந்தது.



Advertisement

பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தது AFI. இது நடை முறை தான். தினேஷிற்கு அதில் பெரிதாய் நாட்டமில்லை. இது சொல்லி கொள்ளும் படியான வெற்றி இல்லை என்பதே அவன் எண்ணம்.

தடகள அமைப்பின் மொத்த நிர்வாகமும் தினேஷோடு சென்றது பிரதமரை சந்திக்க… பிரதமர் முகமலர்ந்து வரவேற்று பழச்சாறு கொடுத்து விருந்தோம்பல் செய்து…

மென் மேலும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பொன்னாடை அணிவித்து வாழ்த்த… “அக்காட்சியை நூற்று கணக்கான காமிராக்கள் கண் சிமிட்டி உள் வாங்கி கொண்டது.”

Advertisement

தமிழக முதல்வர் இருபத்தைந்து லட்சம் பரிசு தொகையும் ஹவுசிங் போர்டில் ஒரு வீடும் அறிவித்தார்.

Advertisement

தமிழகம் வந்த தினேஷுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.

ஏர்போர்ட்டில் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஸார் இந்த வெற்றி பற்றி என்ன நினைக்கறீங்க? ஒரு நிருபர் மைக்கை நீட்ட… ஸாரி இது வெற்றியே இல்லை. கொஞ்சம் பொறுத்துக்கோங்க மிகப் பெரிய வெற்றியோட உங்களை சந்திக்கிறேன்.

Advertisement

ஸார் உங்க பெரிய வெற்றி.. அது ஒலிம்பிக் தானே?

எஸ்… அதில் என்ன சந்தேகம்?  எனக்கு மட்டுமில்லை. உலகிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான்.

ஸார் கண்டிப்பா பதக்கம் வெல்வீங்களா?

தினேஷ் எதுவும் பேசாது சிரித்தபடி டிராலியை நகர்த்தினான்.

கல்லூரி முழுக்க பதாகைகள், பேனர்கள் தினேஷை வரவேற்க…  கல்லூரி  சார்பாக பெரிய பாராட்டு விழா நடந்தேற… அவனோடு முண்டியடித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர் சக மாணவர்கள்.

தன் சொந்த ஊரான மணியார்பாளையம் வர… அங்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப் பட்டது.

வாசுகி கணவன் பிள்ளைகளோடு தாய் வீட்டில் இருந்து பெட்டி படுக்கை கட்டி கொண்டு வந்து விட்டாள்.

“இனி என் மகன் தினேஷ் கூட தான் எங்க வாழ்க்கை”.பாவம் பிள்ளை தனியா கிடந்து கஷ்டப்படுது!என்று கூசாமல் உறவு கொண்டாடினாள்.

அப்பா தினேஷ் இது உன் தம்பி குமரன் +2 படிக்கிறான். இது உன் தங்கச்சி சரண்யா 10வது படிக்குது…. வாயெல்லாம் பல்லாக சிரித்த வாசுகியை ஊரே காரி துப்பாத குறையாக பார்த்தது.

தினேஷ் அவர்களோடு ஒட்டி உறவாடவும் இல்லை வெட்டி கொள்ளவும் இல்லை.

அண்ணே என்னை சென்னையில் பெரிய காலேஜில் சேர்க்கறியா? குமரன் கேட்டான்… தாய் சொல்லி கொடுத்தபடியே…

ம்ம்ம்ம் என்று தலையாட்டினான். அண்ணே நானும் என்றாள் சரண்யா. இளக்கமாக சிரித்து வைத்தான் உடன் பிறவா தங்கையை பார்த்து.

தாத்தா பாட்டி ரெண்டு பேரும் என்னோட சென்னைக்கு வந்துடுங்க என்றான்.

அட… எங்களுக்கு எதுக்குப்பா பட்டணத்து வாழ்க்கை… இந்த மண்ணோட வாழ்ந்துட்டு இங்கேயே காத்தோட எங்க மூச்சு கலந்து போகட்டும் என்றார் மூக்கையா.

“———-“

வேளச்சேரியில் ஹவுசிங் போர்ட் கொடுத்த வீட்டில் கந்தவேல் வாசுகி குடும்பத்துடன் குடியேறினார்கள்.

தினேஷ் அமேரிக்காவின் பிரபலமான ஓட்டப்பந்தய வீரர் Carl Lewis  இடம் பயிற்சி பெற விரும்பினான். அவர் ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கம் வென்றவர்.

இந்திய தடகள அமைப்பு தினேஷின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

கிரிக்கெட், டென்னில் போல் track and field க்கு ஸ்பான்சர்ஸ் கிடைப்பதில்லை.

தினேஷ் எங்கெங்கோ முட்டி மோதினான். ஒரு மாத கால பயிற்சியாவது பெற்று பல நுணுக்கங்களை கற்க வேண்டும்  என்பது அவனது பேரவா.

தமிழக அரசு கொடுத்த பரிசுத்தொகை மட்டுமே அவன் கையிறுப்பு… அதை வைத்து எப்படி பயிற்சி பெற முடியும்,?

பல பிரபலங்களிடம் சென்று நிதிக்காக நின்றான்.

தம்பி இதுல அறுபதனாயிரம் இருக்கு… ஆடு வித்த காசு, பால் வித்து சம்பாதிச்ச காசு.. வச்சிக்கோ மூக்கையா அவன் கையில் திணித்தார்.

அய்யோ தாத்தா வேண்டாம்…  நீங்க வச்சுக்கோங்க! அமெரிக்கா போய் பயிற்சி எடுக்க நிறைய செலவாகும்.

இருக்கட்டும் சாமி… உனக்கு “ஏரோபிளேன்ல போற டிக்கெட்டுக்கு ஆகும்” மீண்டும் அவன் கையில் திணித்தார் அந்த வெள்ளந்தி மனிதர்

“———-“

தினேஷின் நிதி நிலை போராட்டம் உணர்ந்து தமிழ்நாடு தடகள வாரிய தலைவர் திரு தேவாரம் அவர்கள் தமிழக முதல்வரிடம் பேசினார்.

தமிழக அரசே அவன் பயிற்சிக்கான செலவை ஏற்கும் என்றார் முதல்வர்

தினேஷ் வைராக்கியத்துடன் அமெரிக்கா சென்றான்.

Lewis தினேஷின் திறமை கண்டு அயர்ந்து போனார். அவனுக்குள் எரியும் ஜுவாலை அவருக்கு தெரிந்தது. அன்பும் அக்கறையுமாய் அவனுக்கு சிறப்பு கவனத்துடன் கூடுதல் பயிற்சி அளித்தார்.

“கண்டிப்பாய் நீ சாதிப்பாய்..!” உன்னால் முடியும் என்று மனதார வாழ்த்தி அனுப்பினார்.

“———–“

மணியார் பாளையம் சென்று தாத்தா பாட்டியிடம் ஆசி பெற்றான். குல தெய்வமான கருப்பண்ண சாமியை வணங்கினான்.

ஆம் அவன் எதிர்பார்த்த வாய்ப்பு…2024 பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிக்காக கிளம்ப இருக்கிறான்.

இந்தியா சார்பாக 186 பேர் கொண்ட குழு கிளம்பியது.

விமானத்தில் கால் வைக்கும் போது உள்ளுக்குள் சபதம் ஏற்றான். என் நாட்டிற்கு பெருமை தேடி தருவேன்… பெருமையோடு நிமிர்வாக  இந்தியன் என்ற கர்வத்தோடு திரும்பி வருவேன்.

முதல் இரு நாள் மற்ற போட்டிகள் நடைபெற்றதால் அவனுக்கு ஓய்வு கிடைத்தது.

அவன் எவ்வித பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அமைதியாக தியானம் செய்தான். மெல்லிசை பாடல்கள் கேட்டான்.

இன்று அவன் எதிர்பார்க்கும் தடகளம் ஆரம்பம்.

அவனது முதல் ஒலிம்பிக்… அங்கு பங்கேற்போர் பட்டியலை காண்கிறான் எல்லோரும் ஜாம்பாவான்கள் இரு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவர் சக போட்டியாளர்.

தனது வாலட்டில் இருந்த தாயின் புகைப்படம் கண்டான். தன்னை முதன் முதலாய் ஊக்குவித்து” நீ உசைன் போல்ட் ஆக வருவாய்” என்று தூண்டி விட்ட ஆசிரியர் தங்கப்பனை நினைவில் கொண்டான்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க கொடிக்கு  சற்று கீழே பறந்த மூவர்ண  கொடியை கண் முன் நிறுத்தினான்.

ஆடுகளத்திற்குள் நுழைகிறான். தினேஷ் இந்தியா என்ற நீல வண்ண ஜெர்சி… அதில் மூவர்ண கொடி.

தனக்கான டிராக் எண் 5ல் நின்றான் இது இறுதி சுற்று…!

கெட் செட் ரெடி கோ…. டுமீல் என்ற சத்தத்தோடு கொடி அசைக்கப் பட்டது.

கபடியில் பாடுவது போல் “ஜன கண மன அதி” என்று முனு முனுத்து கொண்டே வேங்கையாய் சீறினான்.

கமான் தினேஷ்… கமான் பயிற்சியாளர், மேனேஜர் மற்றும் இந்திய வீரர்கள் உரக்க கத்தி உற்சாகப் படுத்தினர்.

இந்திய கொடி பட்டொளி வீசி பறப்பதாய் அவன் கண்ணிற்கு தோன்றியது…. ஓடினான்  உயிரை இறுக்கி பிடித்து ஓட்டமாய் ஓடி இமைக்கும் நொடிக்குள் வெற்றி கோட்டில் தன் வலது பாதம் பதித்தான்.

கோட்டை தொட்டும்… அதை தாண்டி ஓடிப்போய் நின்று கண் திறந்து பார்த்தான் அவனே முதலாவதாக வந்திருக்கிறான்.

அப்படியே டிராக்கில் மண்டியிட்டு வாய் விட்டு கதறி அழுதான்.

தினேஷ்.. தினேஷ்… இந்தியா.. இந்தியா… உற்சாக குரல் மைதானம் முழுவதும் எதிரொலித்தது.

பயிற்சியாளர் டிராக்கிற்குள் ஓடிவந்து அனைத்து கொண்டார். விழிநீர் மல்க அவரிடமிருந்து வாங்கிய “மூவர்ண கொடியை நெஞ்சில் புதைத்து விம்மி அழுதான்… பெருமையாய் முத்தமிட்டான்.”

அடுத்த விநாடி இந்தியா முழுக்க இதே செய்தி.

தினேஷை பெற்றதால் தமிழகம் பெருமை  கொள்கிறது என்று மாநில ஊடகங்கள் செய்தி வாசிக்க. இதுவரை track and field ல் எந்த வீரறும் செய்யாத சாதனை என்று தேசிய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளியது.

கோடிகளில் பரிசுத் தொகையை மாநில அரசுகள் போட்டி போட்டு அறிவித்தது.

மணியார்பாளையம் கூகுள் மேப்பில் பலரால் தேடப்பட்டது. ஊரே திருவிழா கோலம் தான்.

அவன் கனவு கண்ட … தன்னுள் வெறியாய் விதைத்து கொண்ட அந்நிகழ்வு ஆம் “பதக்கம் அளிக்கும் நிகழ்வு.”

நடுநயமாய் முதல் மேடையில் ஏறி நெஞ்சம் நிமிர்த்தி நின்றான்.. இந்திய கொடியை தன் மேல் போர்த்தியபடி.

அவனுக்கு தங்க பதக்கம் அணிவிக்கப் பட்டது.

இதோ இதோ.. அவன் கொடி அவன் நாட்டின் மூவர்ண கொடி ஏற்றப்படுகிறது. அது மேலே மேலே பறக்கிறது.

“ஜன கண மன அதி “என்று தேசிய கீதம் ஒலிக்கிறது. நின்றான்  சிலையென நின்றான்… உணர்ச்சி மிகுதியில் அவ்வரிகள் காதில் நுழைந்து மூளைக்குள் சென்று ஜயேஹே… ஜயேஹே.. ஜெய ஜெய ஜெய ஜெயஹே… அவனுக்கு உடல் நடுங்கியது ரோமக்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நின்றது. கண்களில் நீர் அருவியாய் வழிய இதயத்தின் படபடப்பு  அடங்காமல் மயங்கி சரிந்தான்.

“———“

வெற்றியின் பெருமையை இதயம் ஏற்று அதை கொண்டாட தெரியாத மன அழுத்தமே உணர்ச்சி   மிகுதியில் மயங்கி விட்டான்.

இன்னும் அவனால் நம்ப முடியவில்லை… நான் வென்றேனா? என்பதல்ல அவன் கேள்வி. என் பாரதத்தின் கொடி உயரே பறந்ததா? என் உயிரை உருக்கும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதா?

மறுநாளும் அவனுக்கான நாள் தான் போலும்… நேற்று வென்ற தங்கம் தந்த உற்சாகம் தன் கொடி பறந்த கர்வம் இன்று 200 மீ  ரேஸில் அதகளம் செய்தான்.

ஆம் அவனே வென்றான்… அவனே முதலிடம் கை கொண்ட வெற்றியாளன்.

மீண்டும் தினேஷ்… தினேஷ் எங்கும் அதே கூச்சல் கொண்டாட்டம்.

மைதானத்தின் பார்வையாளர் பகுதி முழுக்க பாரத கொடி…எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.

மீண்டும் தங்கத்தை ஏற்றது அந்த வேங்கையின் கழுத்து… இன்று மூவர்ண கொடிஏற்றப்பட…உணர்வை கட்டுப்படுத்தி கண்ணீர் மல்க விரைப்பாய் சல்யூட் அடித்தான். தேசிய கீதம் இசைக்கப்பட அதனோடு சேர்ந்து அவனும் உணர்வுபூர்வமாய் பாடினான்.

“———–“

ஏர்போர்ட் முழுக்க மகிழ்ச்சி ஆரவாரம்… கழுத்து கொள்ளாத மாலையுடன் நின்றான் இருபத்தொரு வயது இளைஞன் தினேஷ்.

காமிரா வெளிச்சம் அவன் கண்களை கூச செய்தது.

நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்திருக்கீங்க… எப்படிஃபீல் பண்றீங்க? மைக் அவன் முன் நீட்டப் பட்டது.

அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது…நம் தேசிய கீதம் இசைக்க பட்ட போது அப்படியே இதயம் நின்று விட வேண்டும் என்று தோன்றியது.

சார் உங்க வெற்றிக்கு காரணம்?

“வறுமை, உதாசீனம்” என்றான் பெருமையாய்

என்ன சொல்றீங்க?

ஆம்.. வறுமைக்கு பயந்து  உதாசீனங்களுக்கு பயந்து எட்டு வயசில் நடக்க தொடங்கினேன்… விதி மேலும் விரட்ட…ஓட தொடங்கினேன்.

சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன?

“வெற்றி என்பது எளிதல்ல… எளிதில் கிடைத்தால் அது வெற்றியே அல்ல…!”

வசதியா பிறந்தவனை விட வறுமையில் பிறந்தவனுக்குள் தான் ஒரு நெருப்பு இருக்கும். அந்த நெருப்பை அணையாம பார்த்துக்கனும் அவ்வளவு தான்.

யாருக்கு நன்றி சொல்ல ஆசை படறீங்க?

யாருக்கும் தனித்து சொல்ல விரும்பல.. இது என் தனிப்பட்ட வெற்றி அல்ல.. நம் தேசத்தின் வெற்றி.

சிரித்த முகத்துடன் காமிரா வெளிச்சம் கடந்து வெயேறினான்.

——-முற்றும் ——

ஒரு ரொமான்டிக் கதைக்கு கிடைக்கும் ஆதரவு இதுபோன்ற கதைகளுக்கு கிடைப்பதில்லை.

ஒலிம்பிக் போட்டியில்சிறு சிறு நாடுகள் எல்லாம் தங்க வேட்டை நடத்த 140 கோடி மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நம் பாரதம் ஒற்றை தங்கம் வெல்லவே விழி பிதுங்கி நாக்கு தள்ளி நிற்கிறது. அந்த வேதனையே இக்கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!