ஜீவ தாளம் : 15
அத்தியாயம் : 15
செல்வா அன்று ஆனந்தியைப் பார்க்க வந்திருந்தான். தனது அத்தை மகளுக்குத் தெரியாமல் காரியங்களைச் செய்ததால்தான் அவளுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டது என்று அவனுக்கும் புரிந்திருந்தது; அதனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பூபாலனைச் சந்திக்கும்போது அவரிடம் ஏற்கனவே கேட்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனாலும், ஆனந்தி அவளது பாட்டி வீட்டிற்குச் சென்ற பிறகு, இதுபோலச் சேர்ந்து சந்தித்துப் பேச முடியாது என்பதால், அதற்கு முன்னரே வந்திருந்தான்.
அவளும் அன்றைய கோபத்தில் பூபாலனையும் அவனையும் தாழ்த்திப் பேசிவிட்டாலும், இருவருமே தனது நலன் விரும்பிகள் என்று தெரிந்ததால் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
Advertisement
செல்வாவைக் கண்டதும் மனதில் இருப்பதை மறைத்து, வீட்டிற்குள் அழைத்து அமர வைத்தாள் ஆனந்தி.
“எப்படி இருக்க ஆனந்தி? போன இடத்துல எல்லாம் சௌகரியமா இருக்குதா?” என்று விசாரித்தான்.
அவள் ‘ஆமாம்’ என்பதாகத் தலையசைக்க, “நீ அமெரிக்கா போவதை அடியோடு தவிர்க்கணும். உனக்குன்னு நாங்க எல்லாரும் இருக்குறப்போ, எதுவுமே இல்லாதது போல் எங்கோ ஓர் இடத்தில் தனியா இருந்து கஷ்டப்பட வேண்டாம். அதேசமயம், அங்கே போகக்கூடாது இங்கேயேதான் இருக்கணும்னு கட்டுப்பாடெல்லாம் விதிக்க என்னாலும் முடியாது. ஏன்னா, இத்தனை வருஷமும் நீங்க அங்கதான் இருந்தீங்க. உன் தம்பி, வீடு, வேலைகள், நண்பர்கள்… எல்லாம் அங்க இருப்பதால் நீ போய்த்தான் ஆகணும். இருந்தாலும் நான் சொல்வதையும் கொஞ்சம் யோசிச்சுப் பார்!” என்றான்.
Advertisement
அவர்கள் தனது நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று தெரிந்ததால் அவளால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக அவர்கள் கூறுவதைக் கேட்டு இங்கேயே இருப்பதற்கும் மனம் வரவில்லை. ‘நான் எதுக்காக அங்கே போறேன்னு தெரிஞ்சும், இங்கேயே இருக்கச் சொல்கிறார்களே!’ என்று நினைத்து அமைதியாக இருந்தாள் ஆனந்தி.
Advertisement
அவன் புரிந்தது போல, “என் ஃபோன் நம்பர் உன்கிட்ட இருக்கு இல்ல? அங்கே இருக்கிற நாட்களில் உனக்கு ஏதாவது தேவைப்பட்டா எனக்குத் தகவல் அனுப்பு… அமெரிக்காவுக்குக் கிளம்புற மாதிரி ஒரு சூழ்நிலை இருந்தாலும் தெரியப்படுத்து. சித்தப்பாவும் சித்தியும் சென்னைக்குப் போயிட்டாலும் உனக்கு யாருமில்லைன்னு நினைக்காதே! உன் அத்தை மகன் நான் இருக்கேன்!”
அவனது உண்மையான பேச்சு அவளை நெகிழ வைத்தது. கண் கலங்கத் தலையசைத்தாள் ஆனந்தி.
“அந்த வீட்டுல உள்ள பெண்கள் எல்லாம் நல்லவங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அந்த வீட்டு ஆண்கள் மூணு பேரும்தான் ரொம்பவும் கடுமையானவங்க. அதிலும் அந்த வீட்டு மருமகன் யாருக்கும் அடங்காத ஆளு; அவங்ககிட்ட மட்டும் கொஞ்சம் கவனமா நடந்துக்கோ! நீ எங்கேயாவது வெளியே வர்றப்போ தகவல் தந்தா, நான் உன்னைப் பார்க்க வர்றேன்.”
Advertisement
அவனது கரிசனையுடன் கூடிய வார்த்தைகள், செல்வாவின் நல்ல மனதை எடுத்துக் காட்டின. ஆனந்திக்கு பதில் பேச வார்த்தைகள் வரவில்லை; தலை மட்டும் அசைந்து அவன் சொன்னதற்குச் சம்மதம் தெரிவித்தது.
“அன்னைக்கு நான் நடந்துகிட்ட முறை உன் மனசை காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடு ஆனந்தி. அதுக்காக என்னையும் அவங்களைப் போல நினைச்சு ஒதுக்கி வச்சுடாதே! உன்கிட்ட மனசு விட்டுப் பேசணும்னு எனக்கு அவ்வளவு ஆசை. ஆரம்பத்துல நமக்கு இடையில் உள்ள உறவுமுறை உனக்குத் தெரியாம இருந்தப்போ, என்னால அதிக உரிமை எடுத்துக்க முடியல. இப்ப தெரிஞ்சாலும் உன் மௌனம் என்னை தள்ளி நிற்க வைக்குது!”
அவள், செல்வாவின் கண்களை நேராகப் பார்த்ததும், “நீ என்கிட்ட பேசாம இருந்தாலும் பரவாயில்லை. ஆனா, யாரும் இல்லாத கானகத்தில் தனித்து விடப்பட்ட மானின் நிலையில் இருக்க கூடாது. உனக்கு அத்தானா நான் இருக்கேன்! என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பா நான் செய்வேன்” என்று நம்பிக்கையளித்தான்.
அவள் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொண்டை அடைத்துப் போய் நின்றாள். அவன் மறுப்பாகத் தலையசைத்து ஆனந்தவல்லியின் வீட்டில் உள்ள நடைமுறைகள் மற்றும் அந்த ஊருக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் என அனைத்து விஷயங்களையும் அவளுக்கு முழுவதுமாகத் தெரியப்படுத்தினான்.
அவள் செல்வாவை ஆச்சரியமாக நோக்கினாள். அவன் புன்னகையுடன், “நான் வைத்தியசாலை நடத்துறதாலும், நோய்க்கான மருந்துகளைப் பத்தி தெரிஞ்சு வச்சுருப்பதாலும், என்னைப் பார்க்கிறவங்க அவங்க தேவைகளுக்காக என்கிட்ட வருவாங்க. அப்படி வர்றவங்க என்கிட்ட நல்லவிதமாப் பேசுவாங்க; அதனாலதான் பல விஷயங்கள் எனக்குத் தெரிய வந்தது. இப்ப நான் உன்கிட்ட சொன்னது கூட அந்த மாதிரி தெரிஞ்சுக்கிட்டதுதான்!” என்றான். அவள் புரிந்தது போலத் தலையசைத்தாள். விஷயங்களைச் சொல்லி முடித்ததும் அவன் எழுந்து நின்றான்.
“எங்க அப்பாவும் உங்க அம்மாவும் ஒரே அப்பா அம்மாவின் வயிற்றில் பிறந்திருந்தாலும், எங்க அத்தைக்குன்னு அவங்க எதுவுமே செஞ்சதில்லைன்னு அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் உனக்குச் செஞ்சு பார்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு! உனக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் தயங்காம என்கிட்ட சொல்லு. அடுத்த நிமிஷமே உன் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி வைக்க நான் தயங்க மாட்டேன்!” என்றவன், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு கார்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“நீ அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள். அங்கிருந்து கிளம்பி வர்றப்போ எவ்வளவு பணம் கொண்டு வந்தே, எத்தனை நாள் விடுமுறையில் இங்கே தங்கணும்னு திட்டம் போட்டிருந்தே, மற்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது… இந்தக் கார்டை உன் தேவைக்குப் பயன்படுத்திக்கோ! அங்கே நடப்பதையும் அப்பப்போ தெரியப்படுத்தினா நான் சந்தோஷப்படுவேன்.”
செல்வாவின் நேர்மையான குணம் அவளைக் கவர்ந்தது. தான் யாரென்று தெரியாத காலத்திலேயே அவன் பண்புடன் நடந்து கொண்டவன். இப்போது அவனது அடக்கமான பேச்சும், நடைமுறையும் அவன் மீதான மரியாதையை அவளுக்கு இன்னும் அதிகப்படுத்தியது.
தனது தாயின் குடும்பத்தினர் உண்மையில் நல்லவர்கள் தான் என்பதை அவள் மெல்ல உணர்ந்து கொண்டாள். இத்தனை தூரம் அவன் மனம் திறந்து பேசியும், அவள் மௌனமாகவே இருக்கவும், ‘இன்னும் என் மீதான கோபம் அவளுக்குத் தீரலயா?’ என்று அவன் எண்ணினான். ஆனால் ஆனந்தியின் மௌனத்திற்குத் தனிப்பட்ட கோபம் காரணமல்ல; அவன் சொன்ன உண்மைகள் அவளுக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியே காரணம். சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், தான் இயல்பாகவே இருப்பதாகச் சொல்லி அவன் மனதை மாற்றினாள்.
அவன் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது. “நீ நல்லா இருந்தா அதுவே எனக்குப் போதும் ஆனந்தி. எங்க வீட்டுல இருந்தாலும் சரி, மாமா வீட்டுல இருந்தாலும் சரி… எனக்குச் சந்தோஷம்தான். நாம எந்த இடத்துல இருக்கோம்ங்கிறது முக்கியமில்லை, அங்க எப்படி இருக்கோம்ங்கிறதுதான் முக்கியம்! அப்போ… நான் வரட்டுமா?” என்று விடைபெற்றான்.
அவனுடன் வாசல் வரை நடந்து வந்தவள், தயக்கத்துடன் கேட்டாள், “நீங்களோ, சுபாவோ எங்க அப்பா வீட்டுக்கு வரமாட்டீங்களா?”
“இல்லை ஆனந்தி, இதுவரை அங்கே வந்ததில்லை. அத்தையின் கல்யாணத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட அந்த மாளிகைக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் அமையல. ஊர் பெரியவர்களைப் பார்த்துப் பேசவோ, பஞ்சாயத்து செய்யவோ போவேனே தவிர, அந்த வீட்டுப் படி ஏறியதில்லை. அதுக்கான காரணம் உனக்கே தெரியுமே!”
அவள் “ஆமாம்…” என்று தலையசைத்தாள்.
“இப்போ என் அத்தை பொண்ணு நீ அங்க போகப்போறே… உன்னைப் பார்க்கிற சாக்குல வேணா நான் அங்கே வரப் பார்க்கிறேன். ஆனா, நீயும் இப்போ புது மனுஷியா அந்த வீட்டுக்குள்ள நுழையப் போவதால், கொஞ்ச நாள் நான் அடக்கியே வாசிக்கிறேன்!” என்று அவன் குறும்பாகச் சொல்ல, ஆனந்தி தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள்.
அவன் கண்களில் கனிவு படர்ந்தது. “உன் முகத்துல எப்பவும் இந்தச் சிரிப்பு அப்படியே உறைஞ்சு போயிருக்கணும். நீ நினைக்கிற காரியமெல்லாம் அந்த ஆண்டவன் அருளால் கை கூடணும். நம்ம குலதெய்வம் உனக்குக் காவல் தெய்வமா கூடவே இருந்து அருள் பாலிக்கணும். நான் வரட்டுமா?”
அவளுக்குத் தொண்டை அடைத்தது; கண்கள் கசிந்து வார்த்தைகள் வராமல் தடுமாறினாள். அந்தப் பாரமான மௌனத்தைப் புரிந்துகொண்ட அவன், ஒரு புன்னகையை மட்டும் பதிலாய்த் தந்துவிட்டு விடைபெற்றான்.
அவர்கள் இருவரும் பேசிய அனைத்தையும் ஒரு ஓரமாக நின்றபடி பூபாலன் கவனித்துக் கொண்டிருந்தார். ஆனந்தி கிளம்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகிவிட்டன. நண்பனின் மகளைத் தனியாக விட்டுச் செல்லும்போது, அங்கு அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாதே என்று அவர் மனம் தவித்தது. ஒருவேளை அங்கே அவள் அல்லல்படுவாளோ என்ற கவலை அவர் முகத்தில் நிழலாடியது.
பாரதி அவர்களின் மனக்கலக்கத்தைப் போக்க அவ்வப்போது உற்சாகமாகப் பேச, ஒருவழியாகப் புறப்படும் நாளும் வந்தது. ஆனந்தியை அழைத்துக்கொண்டு முதலில் சுபாவின் வீட்டிற்குச் சென்றவர், பின்னர் அவளது தந்தையின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.
“நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் ஆனந்தி! எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் எதிர்த்துப் பேசாதே. வீண் வம்புக்குப் போகாதே. உன் அப்பா அன்புவைப் பத்தி யாராவது தப்பா பேசும் சந்தர்ப்பம் வந்தா, உன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கோ. உன் பாட்டியின் மேல இருக்கிற கோபம் காலப்போக்கில் தானாகவே மறையும். உன் வாழ்க்கை வண்ணமயமானதா அமையட்டும்!” என்று மனதார ஆசீர்வதித்து விடைபெற்றார்.
கண்கலங்க அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தியின் தோளில் அபிநயா பாசத்துடன் கை வைத்தாள். ஆனந்தி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளது தம்பிகளும், சித்தப்பாவின் மகன்களும் ஓடி வந்து, “அக்கா! அவங்க போனா என்ன… நாங்க எல்லாரும் உங்களுக்குத் துணையா இருக்கோம். வீட்டுக்குள்ள வாங்க!” என்று உற்சாகமாக அழைத்தனர்.
தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது உடைமைகளுடன் அந்தப் பிரம்மாண்டமான மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தாள் ஆனந்தி.
அம்பிகா, ஜானகி, இளவரசி மூவரும் வந்து அவளிடம் அன்பாகப் பேசிவிட்டு, அறை ஒதுக்கத் தொடங்கினர். “அக்கா என் அறைக்குப் பக்கத்துலேயே தங்கட்டும், அப்போதான் எனக்குப் பேச்சுத் துணையா இருக்கும். பாடத்துல சந்தேகம் வந்தாலும் கேட்டுக்கலாம்!” என்று அபிநயா உரிமை பாராட்டினாள்.
உடனே தம்பிகள் குறுக்கிட்டனர். “இல்லை அக்கா… ஆனந்தி அக்கா கீழ இருக்கிற அறையிலேயே தங்கட்டும். அப்போதான் நாங்க அடிக்கடி பார்க்க முடியும். இல்லைன்னா இந்த அபி அக்கா அவங்களை முழு நேரமும் தன் கூடவே வச்சுக்கும்!” என்றான் அவளது தம்பி சிவனேஷ்.
“ஆமாம்! அன்னைக்கு வந்தப்போ கூட எங்க அக்கா கிட்ட பேச விடல. நானும் அனுமதிக்க மாட்டேன்!” என்றான் அடுத்த சித்தப்பாவின் மகன் நகுலன்.
அனைவரும் சிரிக்க, அபிநயா பொய்யாகக் கோபித்தாள். “ஏண்டா! நீங்க பன்னிரெண்டு, பத்து, எட்டாம் வகுப்பு படிச்சுட்டு, காலேஜில் படிக்குற எனக்குப் போட்டியா வர்றீங்களாடா?”
“நாங்க அப்படி படிச்சாலும் பாஸ் ஆகிட்டோம். நீங்க ஒண்ணாம் வகுப்பிலே தோத்துப் போயிட்டீங்க!” என்றான் அந்த வீட்டு கடைசி வாண்டு கண்ணன்.
அவர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்து விட, “என்னை அவமானப்படுத்த வெளியே இருந்து யாரும் வர வேண்டாம். இவர்களே போதும்!” என்று அபிநயா கை ஓங்க, “இப்படியெல்லாம் சொல்லி எங்களை ஏமாத்த முடியாது! ஆனந்தி அக்கா கீழே உள்ள அறையில்தான் தங்கணும். இல்லை, அத்தான் இன்னைக்கு வர்றதா சொல்லியிருக்கார். அவர் வந்ததும் உனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு மெட்ராஸுக்கே துரத்தி விட்டுடுவோம்!” என்று மிரட்டல் விடுத்தான் சிவனேஷ்.
“ஆமாண்டா! இந்த அக்கா நம்மளை ரொம்ப மிரட்டுது. சீக்கிரம் அத்தான் கூட அனுப்பிடுவோம். அப்புறமா புதுசா வந்திருக்க ஆனந்தி அக்காவோடு சேர்ந்து ஜாலியா ஊர் சுத்தலாம், விளையாடலாம்!” என்று நகுலனும் சேர்ந்து கொள்ள, அபிநயா தனது பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு, “இத்தனை நாளா நாங்க இருக்கோமா இல்லையான்னே தெரியாம இருந்த சில்லறை டிக்கெட்டுங்க… என்னையே துரத்தி விடப் பார்க்குறீங்களா? இப்பவே சொல்றேன் கேட்டுக்கங்க… நான் ஒண்ணும் அத்தானைக் கட்டிக்கிட்டு சென்னைக்குப் போக மாட்டேன்! இதே வீட்டுலதான் கடைசி வரை இருப்பேன். வேணும்னா நீங்க யாரையாவது கட்டிக்கிட்டு ஓடிப் போங்கடா!” என்று அவர்களைத் துரத்த, மாளிகை சிரிப்பொலியால் நிறைந்தது.
“ஆம்பளைங்களுக்குத்தான் இந்த வீட்டு மேல முழு உரிமையும் உண்டு. உங்களையெல்லாம் கட்டிக் கொடுத்ததோட சரி… மரியாதையா அடி வாங்காம அத்தானோட சென்னைக்கு ஓடிப்போயிரு!” என்று நகுலன் சீண்ட, அந்தப் பெரிய மாளிகையே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஜானகியும் அம்பிகாவும் தங்கள் பிள்ளைகளின் மழலை மாறாத வாதங்களைக் கண்டு புன்னகைத்தனர்.
தம்பிகளை அங்கிருந்து துரத்திவிட்டு, மீண்டும் ஆனந்தியின் அருகில் வந்த அபிநயா, “நீங்க வந்த பிறகுதான் இந்த வீடே இவ்வளவு கலகலப்பா இருக்கு அக்கா. நீங்க எப்பவும் எங்ககூடவே தங்கிடணும்னு ஆசையா இருக்கு” என்றாள் உருக்கமாக.
அங்கே நடந்த கலாட்டாக்களில் லயித்து சிரித்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு, சட்டென ஒரு மெல்லிய ஏக்கம் நெஞ்சைத் தழுவியது. இத்தனை காலம் இந்த அன்பைத் தொலைத்துவிட்டுத் தனிமையில் நின்றோமே என்ற வலி அது. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், ஒரு சினேகப் புன்னகையை மட்டும் பதிலாக்கினாள்.
“நீங்க சிரிக்குறப்போ அந்த வலது கன்னத்துல விழுகுற குழி ரொம்ப அழகு அக்கா! அப்படியே எதிரில் நிற்கிறவங்களைச் சுழட்டி உள்ள இழுத்துப்போட்டுடும் போல இருக்கே!” என்று அபிநயா வர்ணிக்க, ஆனந்தி நாணத்துடன் மெல்லச் சிரித்தாள்.
“சரி, சரி! இங்கேயே நின்னு பேசிட்டு இருக்காம, முதல் மாடியில இருக்கிற விருந்தினர் அறைக்கு ஆனந்தியை அழைச்சுட்டுப் போ. நாளைக்கு வீட்டுல விசேஷம்ங்கிறதால நிறைய வேலை இருக்கு. உன் படிப்பையும் சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடு!” என்று அம்பிகா உத்தரவிட்டார்.
அபிநயா அவளை அறைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, “உங்களுக்கு என்ன தேவைன்னாலும் தயங்காம சொல்லுங்க அக்கா. அடுத்த நிமிஷமே இந்த அடியாள் செஞ்சு முடிச்சிடுவேன்!” என்று விளையாட்டாகச் சொன்னாள். ஆனந்தி அவளை வாஞ்சையோடு பார்த்தபோது, அபிநயாவின் முகம் சட்டென மாறிக் கொஞ்சம் தீவிரமானது!
“எனக்கு உங்க மேல ஒரு சின்ன சந்தேகம் அக்கா…”
ஆனந்தி இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தியது. ‘திடீரென இவள் எதைச் சொல்லப் போகிறாள்?’ எனத் திகைத்தாள்.
“ஒருவேளை நீங்க பெரியப்பாவோட வாரிசா இருப்பீங்களோன்னு எனக்குத் தோணுது! அப்படி நீங்க அந்த வாரிசா மட்டும் இருந்தா, என்னை விடச் சந்தோஷப்படுறவங்க வேற யாரும் இருக்க முடியாது!”
இடி விழுந்தது போலத் திகைத்துப் போனாள் ஆனந்தி. ‘இவளுக்கு எப்படித் தெரிந்தது? அல்லது வெறும் யூகமா?’ என எண்ண ஓட்டங்கள் சிதற, அவள் மௌனத்தையே பதிலாக்கினாள்.
“என்ன அக்கா… அப்படித் திகைச்சுப் போய் நிக்கிறீங்க? நீங்களும் சுபாவும் வெளியே வரும்போதெல்லாம் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். நேரடியா பார்த்ததால வந்த சின்ன சந்தேகம்தான் இது. அன்னைக்குக் குலதெய்வக் கோயில்ல பூஜை நடந்தப்போ, நீங்க எதையோ வேண்டி அழுதுட்டு இருந்ததா தங்கபாண்டி அண்ணன் என்கிட்ட சொன்னார். அப்புறம் முயல் பிடிச்சிட்டு இருந்தப்போ, நீங்க மயங்கி விழுந்ததைப் பார்த்து உங்களைக் காப்பாத்திப் பூபாலன் மாமாவிடம் கொண்டு வந்து சேர்த்ததும் அவர்தானே!”
அபிநயா சொன்ன ஒவ்வொரு தகவலும் ஆனந்தியின் கடந்த கால ரகசியங்களை மெல்லத் திறப்பது போல இருந்தது. அவளது கண்கள் விரிந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தன.
அபிநயாவின் பார்வை எதையோ ஆழமாகத் துழாவுவது போல் இருக்க, “உங்க முகத்துல ஏற்படுற இந்தத் தவிப்பு எனக்குப் பல உண்மைகளைச் சொல்லுது அக்கா. ஒருவேளை நீங்க எனக்குச் சொந்த அக்காவாவே இருப்பீங்களோன்னு எனக்குத் தோணுச்சு. அந்த உரிமையில்தான் இந்த வீட்டுக்குள்ள நீங்க நுழைஞ்சதும் ‘அக்கா’ன்னு கூப்பிடட்டுமான்னு கேட்டேன்!” என்றாள் அபிநயா.
‘பரவாயில்லை, இந்த மாளிகையில் பிறந்த வாரிசுகள் அனைத்தும் தன்னைப்போலவே புத்திசாலியாகத்தான் இருக்கின்றன’ என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டாலும், இனி வரும் நாட்களில் ஒவ்வொரு அடியையும் அதிகக் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும் என்று ஆனந்தி தனக்குள் உறுதி பூண்டாள்.
அதன்பின் அபிநயா அந்தப் பேச்சை அத்துடன் விட்டுவிட்டு, இயல்பாக உரையாடத் தொடங்கினாள். வீட்டிற்கு வந்த விருந்தினருக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேலை ஆட்களுக்கு உத்தரவிட்டாள். மதிய உணவை முடித்து விட்டு ஆனந்தியையும், தம்பிகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்புகளிலும், பசுமையான இடங்களிலும் உலா வந்தாள்.
ஆனந்தி ‘மலை சார்ந்த ஆராய்ச்சி’க்காக வந்திருப்பதாகச் சொன்னதால், அபிநயா அடிக்கடி அவள் அருகில் அமர்ந்து என்ன படிக்கிறாள் என்று எட்டிப் பார்த்து அவளது பொறுமையைச் சோதித்தாள். ஆராய்ச்சிப் படிப்பு என்பதால் கையில் எப்போதும் ஒரு நோட்டு, பேனா மற்றும் கைப்பேசியுடன் அவ்வப்போது அவர்கள் முன் ஒரு பாவனையைச் செய்தாள் ஆனந்தி. ஆனால், சொந்த வீடு, கல்லூரிப் படிப்பு, அமெரிக்க வாழ்க்கை என அபிநயா அடுத்தடுத்துக் கேள்விகளை அடுக்கும்போது, பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
‘தங்கைக்குத் தன்னைப் பற்றித் தெரிஞ்சிடுச்சா? அல்லது சந்தேகத்தில் கேட்கிறாளா?’ என்று புரியாமல் அவளது மனம் ஊசலாடியது.
நாளை தாத்தா மார்க்கண்டேயனின் நினைவு நாள். சமாதியில் பூஜைகள் முடித்துவிட்டுப் பெரிய அளவில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. வீடே அந்தப் பரபரப்பில் இருக்க, ஆனந்தியும் தானாக முன்வந்து உதவிகளைச் செய்தாள்.
சமையலறையிலிருந்து காஃபி மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துச் சென்று பெரியவர்களுக்குக் கொடுப்பது, சித்திகள் இல்லாத நேரத்தில் தம்பிகளுக்கு உணவு பரிமாறுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது எனத் துறுதுறுவென இயங்கினாள். அவளது அடக்கமான குணமும், உதவும் மனப்பான்மையும் வீட்டில் உள்ள அனைவரையும் கவர்ந்தது.
ஆனால், இவ்வளவு இயல்பாக நடமாடும் ஆனந்தி, ஆனந்தவல்லியைப் பார்த்தால் மட்டும் ஒரு நொடியில் கல்லாய்ச் சமைந்துவிடுவாள். அவர் கேட்டால் மட்டுமே பதில் வரும்; மற்றபடி அவர் இருக்கும் திசையிலேயே அவள் தலை வைத்துப் படுப்பதில்லை. அவரது கூர்மையான விழிகள் அடிக்கடி அவளைத் துளைக்கும்போதெல்லாம், அந்தப் பார்வையிலிருந்து தப்பிக்க எதிலாவது தீவிரமாகக் கவனத்தைச் செலுத்துவது போல் பாசாங்கு செய்வாள்.
காலை முதல் இரவு வரை எப்படியோ சமாளித்துக் கடத்தியாகிவிட்டது. இனிவரும் நாட்களையும் இதே நிதானத்துடன் கடந்தாக வேண்டும். நாளை அதிகாலையிலேயே எழ வேண்டும் என்பதால், பெண்கள் அனைவரும் ஓய்வெடுக்கச் செல்ல, ஆனந்தியும் தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்.
அவள் அறைக்குள் சென்ற அடுத்த நிமிடம், அந்தப் பெரிய மாளிகையின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு வேகமான காலடிச் சத்தம் கேட்டது. திண்ணையைக் கடந்து வீட்டிற்குள் புயலென நுழைந்தான் ஆனந்த்!
