Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 4

அத்தியாயம் : 4

காலை நேரம் அழகுற விடிந்தது. இரவு சரியாக உறக்கமற்றதால் கண்கள் எரிந்தன. ‘இன்னும் கொஞ்சம் நேரம் உறங்கலாம்’ என்பது போல நித்திரைக்கு அழைப்பு விடுத்தன. கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவள், வெளியே பாரதியின் பேச்சுக் குரல் கேட்டு, அதற்கு மேலும் படுத்துக் கொண்டிருப்பது சரியில்லை என்று எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்தாள்.

வெளியில் பூபாலன், பாரதியின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். தங்களை நோக்கி வந்த ஜீவாவைப் பார்த்ததும் புன்னகையுடன் காலை வணக்கத்தைத் தெரிவித்து, அருகில் அமரச் சொன்னார்.

மூவருக்கும் இடையில் இப்போது உரையாடல் நீண்டது. பாரதி கொண்டு வந்த காஃபியைப் பெற்றுக் கொண்டவள், அதன் சுவையையும் நறுமணத்தையும் ஆழ்ந்து சுவாசித்து, இதழ்களை அதில் பதித்தாள்.



Advertisement

கபிலன் அங்கிருந்து வந்து அப்பாவைப் பார்த்ததும், நேற்றிரவு பேச முடியாததால் அலுவலக விஷயமாகப் பேச வேண்டும் என்று சொல்லி மாடிக்கு அழைத்துச் சென்றான்.

அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டுச் சென்று விட, ஜீவா, பாரதியுடன் இணைந்து சமையல் வேலையில் ஈடுபட்டாள்.

“எனக்குச் சமையல் செய்ய அதிகமா தெரியாது ஆண்ட்டி. ஆனா, எங்க அம்மா தமிழ்நாட்டுச் சமையலை விதவிதமா செய்து அசத்துவாங்க. நாங்க எல்லாரும் நொட்டை விட்டு, தட்டுல வச்ச எதுவும் மிச்சம் வராத அளவுக்குச் சாப்பிடுவோம்!”

Advertisement

அவர் சிரித்ததும், “என்னதான் அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ்நாட்டு உணவில் இருக்கும் சுவையும் மணமும் அங்குள்ள விதவிதமான உணவுகளில் கிடைப்பதில்லை. இங்க வந்த பிறகுதான் உங்க கைமணத்தோடு சாப்பிடுவது, அம்மாவின் சாப்பாட்டை மறுபடியும் உண்பது போல் உணர வைக்குது” என்று அபிராமியின் நினைவில் கண்கலங்கச் சொன்னாள் ஜீவா.

Advertisement

அவரும் புரிந்துகொண்டு, “அபிராமி மட்டும் உன் அம்மா இல்லை, நானும் உனக்கு அம்மாதான். இந்த வீட்டை உன் சொந்த வீடா நினைச்சுட்டு, நீ இங்கேயே எங்களோடு நிரந்தரமா தங்கியிருந்தா நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்று ஆதூரமாக அவளது கூந்தலை வருடிக் கொடுத்தார்.

அவள் கண்களில் கோர்த்த கண்ணீரைச் சிமிட்டி விட்டு, “எங்க அப்பாவுக்குப் பிறந்து வளர்ந்த ஊர் அந்நியமாகிப் போய், அமெரிக்காவே சொந்த ஊராவும் மாறிப்போயிடுச்சு. நானும் என் தம்பியும் பிறந்து வளர்ந்த இத்தனை வருஷமும் அங்கதான் இருந்தோம். ஒவ்வொரு வீட்டுல உள்ளவர்களும் குடும்பமா வசிக்கிறதைப் பார்க்குறப்போ, ‘நமக்குன்னு யாருமே இல்லையா, நாங்க மட்டும் தான் இருக்கிறோமா?’ன்னு பல சமயம் மனசுல நினைக்க தோணும். சின்ன வயசுல அது விஷயமா அப்பா, அம்மாவிடம் கேட்டு இருக்கேன். அப்பா எதையாவது சொல்ல, அம்மா தடுமாறுவதைக் கண்டதால், வளர்ந்த பிறகு அவர்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணினேன்.

அவர்கள் இல்லாத அமெரிக்காவில் எப்படி வசிக்க முடியலையோ, அப்படித்தான் இங்கும் இருக்க முடியல. முன்பாவது அப்பா, அம்மா, தம்பின்னு இருந்தாங்க… இப்ப தம்பியைத் தவிர எனக்கு யாரும் இல்லையே! அவனுக்குப் பூரணமா உடல்நலம் சரியாகிட்டா எனக்கு அது மட்டுமே போதும்!” என்று சிறு விம்மலுடன் சொன்னாள்.

Advertisement

எத்தனை அடக்கினாலும் மீண்டும் மீண்டும் மனம் அங்குச் செல்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை. அதைப் புரிந்து கொண்டு பாரதி, அவரது சொந்த ஊரைப் பற்றி எதையாவது பேசி அவள் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

நேரம் எட்டு முப்பது ஆகியது. அனைவருடன் சேர்ந்து உணவை முடித்துவிட்டு, அலுவலகத்திற்குச் செல்ல உடை மாற்ற வந்தவள், அப்போதுதான் கவரில் இருந்த உடை மாறியிருப்பதைத் தெரிந்து கொண்டாள். அவளது புடவை, இரவு ஆடைகள், சுடிதார், உள்ளாடைகள் இருந்த பையில் ஒன்று மாறி, ஆணின் ஆடைகள் வந்திருந்தது.

‘இது எப்படி இங்கு வந்தது? தன்னுடைய புடவையைக் காணவில்லையே!’ என்று அவள் யோசிக்க, அப்போதுதான் ஒரு ஆடவன் மேல் மோதி துணிப் பைகள் கீழே விழுந்தது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஓ! அந்த நேரத்துலதான் மாறி இருக்கணும். ஏற்கனவே அவனுக்கும் எனக்கும் ஒத்துக்காது. இதுல மீண்டும் மீண்டுமா?’ என்று சலித்து, வேறு உடையை மாற்றிவிட்டு கபிலனுடன் சேர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள்.

அவனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, அதே கடையின் முன்பு காரை நிறுத்தச் செய்து, அவள் மட்டும் சென்று நடந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தினாள்.

அவர்களும் அதை ஏற்றுக்கொள்ள, ஜீவாவின் கையில் இருந்த பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு பெண்ணான அவளே உடை மாறி விட்டதாகக் கொண்டு வந்து ஒப்படைத்திருக்க, சம்பந்தப்பட்ட அந்த நபர் கொண்டு வரவில்லையே என்று கடையாள் நினைத்து, ஒருவேளை அவரும் இன்னும் சற்று நேரத்தில் வரக்கூடும் என்பதால், அவர் கொண்டு வந்ததும் அதே உடைகளை அவளிடம் ஒப்படைப்பதாக சொல்லி ஜீவாவின் கைப்பேசி எண்ணைக் கேட்டார்.

ஆனால், அவளோ அவன் கொண்டு வந்து தருகின்ற ஆடை தனக்கு வேண்டாம். மாலையில் வந்து வேறு எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு நகர, கடையாள் அவள் அருகில் வந்து நின்று அது விஷயமாகப் பேசியும் அவள் செவி சாய்க்க மறுத்தாள். அப்போது, அவளைப்போலவே கையில் துணிப் பையுடன் வந்து நின்று, அவர்களின் பேச்சைக் கேட்டவாறு இருந்தான் ஆனந்த்!

அங்கு நடந்த சம்பாஷணைகள் அவனுக்குள் ஒருவித இறுக்கத்தையும், அவள் மீதான கோபத்தின் அளவையும் அதிகரித்தன. அவன் கொண்டு வந்த துணிப்பையைக் கடையிலுள்ள நபரிடம் கொடுத்து விட்டுத் தனக்குரியதை பெற்றுக் கொள்ள, அவர் அவசரமாக வந்து ஜீவாவின் பையை அவளிடம் கொடுக்க முயன்றார்.

ஆனால் அவள், ஆனந்த் கொடுத்த உடையை வாங்க மாட்டேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட, அவன் அந்தப் புடவை அடங்கிய பையை எடுத்து வந்து அவள் கையில் திணித்தான்! ‘அந்த அளவிற்கு ஒன்றும் தீண்டத்தகாதது அது இல்லை. கொண்டு சென்று தாராளமாக அணியலாம். எதற்காக கடையில் இருந்து தர்க்கம் செய்து கொண்டிருக்கிறாய்?’ என்பதாக அவன் பார்வை இருக்க, தீயாக அவனை முறைத்தாள் ஜீவா.

‘நீ யார் என்னிடம் உரிமையுடன் சண்டை இடுவதற்கும், கொண்டு வந்து தருவதற்கும்? உன்னைப் பார்த்தால் தான் எனக்குப் பிடிக்கலையே! பிறகும், ஏன் மறுபடியும் மறுபடியும் வந்து என்னைத் தொல்லை செய்கிறாய்’ என்பதாய் அவள் பார்க்க, ‘இதை மட்டும் வாங்கி விட்டுச் செல். உன்னை நான் தொல்லை செய்ய மாட்டேன்’ என்று அவனும் பார்வையால் பதிலளித்தான்.

அவள் தங்களைப் பார்த்துக்கொண்டு கடையில் உள்ளவர்கள் நிற்பதை அறியாமல், அங்கிருந்து வெளியேறி செல்ல முயற்சிக்க, ஆனந்தின் அழுத்தமான கைப்பிடி அவளை அங்கிருந்து நகர விடாமல் செய்தது. அவனது தொடுகையில் அவளுக்குள் ஆவேசமும், ஆக்ரோஷமும் எழுந்தது. அவன் கன்னம் பழுக்கும் அளவிற்கு ஒன்று கொடுத்து விடுவதற்காக கையை ஓங்கிக் கொண்டு வர, அவன் ஓங்கிய கையை ஒற்றைப் பிடியில் அடக்கி, மற்றவர் கண்களுக்கு காட்சி பொருளாக நிற்க விரும்பாமல், அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவளோ ஆனந்தின் தொடுகையை ஏற்காமல், அவன் கையைத் தட்டி விட்டு, அவன் கொடுத்த கவரை முகத்தில் வீசி எறிந்து விட்டு, விடுவிடுவென சென்று தனது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஜீவாவின் செயல்கள் ஆனந்தின் மனதிற்குள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தின. ‘சரியான திமிர் பிடித்தவளாகத்தான் இருக்கிறாள்! எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் என்னிடமே இப்படி நடந்து கொள்வாள்! யாராக இருந்தாலும் சரி, இவளைச் சும்மா விடக்கூடாது!’ என்று முடிவு செய்தான்.

காருக்குள் அமர்ந்திருந்து அங்கு நடந்தவற்றைக் கண்டதும் ஓடிவந்த கபிலன், நண்பனும் அவளும் நடந்து கொண்ட விதத்தைக் கண்டு மார்பில் கையை வைத்துக்கொண்டான்.

​‘அச்சச்சோ! இதுக ரெண்டும் இப்படி முட்டிக்குதே… இப்ப நான் என்ன செய்வேன்?’ என்று படபடப்பாக உணர்ந்தான்.

ஆனந்த் அவனிடம் அன்று சொல்லும்போது கூட அந்த அளவிற்குப் பெரியதாக அவன் நினைக்கவில்லை. இன்று கண்கூடாகப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அவர்கள் இருவரையும் அப்படி ஒரு நிலையில் பார்த்ததும் அவன் உள்ளம் வேகமாகத் துடித்தது. இருவருக்குள்ளும் இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்று அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ‘இறைவா! இதென்ன சோதனை? நீதான் என்னை இவங்ககிட்டேர்ந்து காப்பாத்தணும்’ என்று மேலே பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டான்.

ஜீவாவை தனது ஆத்திரம் தீர முறைத்துக் கொண்டிருந்த ஆனந்த், அவள் அங்கிருந்து நகர்ந்து சென்றதும், உடைகள் அடங்கிய பையுடன் தானும் சென்றுவிட்டான்.

கடையில் உள்ளவர்களுக்கு அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பிறகுதான் ‘அப்பாடா’ என்றிருந்தது.

காரில் ஏறி அமர்ந்த ஜீவாவின் கண்கள் கோபத்தில் சிவந்து போயின. கைவிரல்கள் ஒன்றையொன்று அழுத்திச் சண்டையில் மூழ்கின. மூச்சு வேக வேகமாக வர, அவளது ஆவேசம் வெளியேறியது.

​அவளது இதழ்கள் கோபத்தில் துடித்தன. அனல் பறக்கும் பார்வையில் அத்தனை சீற்றம் தெரிய, யாராவது இப்போது பேசினால் சுட்டெரித்து விடுவாள் என்பது போல் அவளது முகம் இறுகிக் கிடந்தது. மூச்சுக் காற்று அனலாய் வெளியேற, நெற்றி நரம்புகள் புடைக்கத் தன் ஆத்திரத்தை அடக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் ஓடும் உணர்வுகளைப் படித்துக் கொண்டு, இந்த நேரம் எதுவும் கேட்டால் தன்னையும் அவள் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள் என தெரிந்ததால், கபிலன் அமைதியாக இருந்து கொள்ள, அவனது கையும் காலும் காரை அங்கிருந்து நகர்த்திச் செல்வதிலேயே இருந்தது.

அவள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்க, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜீவாவின் அருகில் வைத்தான். அவள் அதைத் தொடாமல் இருந்ததும், மெல்லப் பேச்சு கொடுத்து அவள் மனதில் இருப்பதை அறிந்துகொள்ள முயன்றான்.

அவளோ பதில் கூற மறுத்துவிட, “என்ன ஆச்சு? ஏன் இப்படி வந்த நேரத்திலிருந்து டென்ஷனா இருக்கே? நீ ஆசைப்பட்ட துணி கிடைக்கலையா?” என்று எதுவும் தெரியாதது போல கேட்டான்.

அவள் மனதில் இருக்கும் சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அவனை முறைக்க, ‘ஐயகோ! இவளிடமிருந்து எப்படியடா தப்பிப்பது? இப்படி அக்னி தேவியாகத் தகிக்கிறாளே…’ என்று முணுமுணுக்க, அவன் தொடையில் நறுக்கெனக் கிள்ளி வைத்தாள் ஜீவா.

அவன் ‘ஆ’ என்று அலறியதும், “சும்மா சும்மா நொண நொணன்னு பேசிட்டு இருக்காம ரோட்டைப் பார்த்துக் காரை ஓட்டு! இல்லைன்னா, கீழே இறங்கி வீட்டுக்குப் போயிடுவேன்!” என்று மிரட்டலாகக் கூறினாள்.

‘எங்கே அவள் சொன்னது போலச் செய்து விடுவாளோ’ என்று அவன் தலையை ஆட்ட, “ம்ப்ச்… காலையிலே வந்து கண்ணு முன்ன நின்னு, ஏன்தான் உயிரை எடுக்குறானோ தெரியல!” என்று முணுமுணுத்தாள்.

“நான் சும்மா தானே வரேன்… பிறகு, எதுக்கு என்னை இப்படித் திட்டுற?” கபிலன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கேட்க, அவள் கையை ஓங்கி முதுகில் அடித்து விடுவது போல் சென்றாள்.

“போதும், போதும்! இந்த ருத்ரமாதேவியின் ருத்ரதாண்டவத்தை என்னால தாங்க முடியாது சாமி. ஒழுங்கா நடந்ததைச் சொல்லு, இல்லையா ஆள விடு!” என்று அவன் நைசாக நழுவி விடப் பார்க்க, உச்சுக்கொட்டினாள் ஜீவா.

“என்னடா ஜீவா, ஏன் இப்படி டென்ஷனா இருக்கே? அந்த அளவுக்கு என்ன நடந்தது?” என்று சாந்தமாக கேட்க, தன்னிடம் நன்றாகப் பேசக்கூடியவனும், சிறுவயதிலிருந்து நண்பனாகப் பழகி வருபவனுமான கபிலனிடம் ஒளிவு மறைவின்றிப் பேசி வந்தவள், இதை எப்படிச் சொல்வது என்று தடுமாறினாள்.

அவனும் புரிந்துகொண்டு இதமாய்க் கேட்க, அவள் கடையில் இன்று நடந்ததை மறைக்காமல் தெரியப்படுத்தினாள்.

அவன் திடுக்கிட்டு விழித்தான்!

முந்தைய இரண்டு சம்பவங்களும் அவனுக்குத் தெரிந்ததால், அவள் கூறியதும் உடனடியாகப் புரிந்தது. ஆனால், இன்றைக்கும் இருவரும் முட்டிக்கொண்டதற்கான காரணம் தெரிய வந்ததும், அவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் சந்திக்க வைப்பது இறைவனின் திட்டமாக இருக்கும் என்று புரிந்துகொண்டான்.

“அவர்தான் உன்னை ஒரு சமயம் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கார். பிறகும், நீ ஏன் அவரை எதிரியாகவே பார்க்குறே? ஒரு நன்றி சொல்வதில் தவறேதும் இல்லையே!” என்று மெல்ல அவள் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஆனால் அவளோ, “எனக்கு அவரைப் பார்த்தாலே பிடிக்கல கபில். எதேச்சையா அவர் என்னைக் காப்பாத்த முயன்றிருந்தாலும், அவரோட சிரிப்பும் பேச்சும் கிண்டலும் வெறுப்பைத்தான் கொடுத்தது. அவரோட தொடுகையும் அண்மையும் பார்வையும் மனசுக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. அதோட, தொடர்ந்து நடக்கிற சந்திப்புகள் ஒவ்வாமையைத் தருது. அவர் யாரோ எவரோ, எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும்… ஆனா என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்க, அவளது பேச்சின் திசை எங்கு நோக்கிச் செல்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.

உதட்டில் படர்ந்த புன்னகையை மறைத்து, “எங்கே அவரை விரும்பிடுவோமோன்னு உனக்குப் பயமா இருக்கா?” என்று வினவ, அவள் கடுமையாக முறைத்தாள்.
“பின்னே, நீ செய்துட்டு வந்திருப்பதை வேறு எப்படி எடுத்துக்கிறது?”

அவள் அலட்சியமாகப் பார்வையைத் திருப்பிக் கண்ணாடி வழியாக வெளியே பார்க்க, “ஜீவா, உன் மனசுல இருக்கிறது எனக்குத் தெரியும். அவருக்குத் தெரியாது இல்லையா! அங்க நீ ஒரே ஒரு தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு வந்திருந்தா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. அவரும் ஒரு ஆண்மகன்! நீ அவரைப் பார்க்கிற நேரமெல்லாம் தூக்கி எறிஞ்சு நடந்துக்கிட்டா, அவருக்கும் தன்மானம் இருக்கும் இல்லையா?” என்று விளக்க முயல…

​“எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை! நான் இன்னும் ஒரு வாரத்துல இங்கிருந்து போயிடுவேன். அதுவரை அவரைப் பார்க்கவோ பேசவோ விரும்பல” என்று பேச்சைத் துண்டாகக் கத்தரித்தாள் ஜீவா.

‘உங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலையே!’ என்று அவன் கதிகலங்க, அலுவலகமும் வந்து சேர்ந்தது.

அத்தனை நேரம் அவள் முகத்தில் இருந்த கடுமை மாறி, கம்பீரம் குடியேறியது. இதழ்களில் லேசாகப் படர்ந்த புன்னகையுடன், காலை வணக்கத்தைக் கூறியவர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தவாறு, நிமிர்ந்த நடையுடன் தனது அறையை நோக்கி நடந்தாள்.

ஜீவாவின் நடவடிக்கைகள் வியப்பாக இருந்தது கபிலனுக்கு. ‘எப்படி இவ்வளவு சீக்கிரம் தன்னை மாத்திக்க முடியுது? அதிசயமான பொண்ணா இருக்காளே!’ அவளை நினைத்து வியந்து நின்ற அடுத்த கணம், கைப்பேசியில் அழைப்பு விடுத்த ஆனந்தின் பெயரைக் கண்டதும், ‘இவன் வேற அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடப் போறானோ!’ என்று உள்ளுக்குள் அதிர்ந்தான்.

“நான் உங்க அப்பாவை இன்னைக்குப் பார்க்க வரலாம்னு இருக்கேன். இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்.”

“ஏதே! நீ இங்க வர்றியா?”

அவன் இருந்த பதற்றத்தில் சத்தமாகக் கேட்டுவிட… “ஏண்டா! செவியே தீஞ்சு போற அளவுக்குக் கத்துற எருமை மாடு!” என்று திட்டினான் ஆனந்த்.

​“என்னது, எருமை மாடா? ஆஹா… ரொம்ப நல்ல பேராப் பார்த்துதான் வச்சிருக்கான் ராட்சக்ஷன்!”

​அவன் பொறுமலுடன் சொல்ல, “நீ மட்டும் என்னைப் பார்த்து ராட்சக்ஷன்னு சொல்லுவே… நான் மட்டும் எருமை மாடுன்னு சொல்லக் கூடாதாடா கழுதை?” என்று பட்டியல் நீண்டு சென்றது.

​‘காலையிலேயே நல்ல பாராட்டுப் பத்திரம் கிடைக்குது. ஒரு பக்கம் பார்த்தா ருத்ரமாதேவி, மறுபக்கம் ராட்சக்ஷன்… ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போல இருக்கு! பேசாம ரெண்டையும் கோர்த்து விட்டுட்டு நாம விலகிப் போயிடணும். அதுங்களே கிடந்து ஒண்ணுக்கு ஒண்ணு அடிச்சுக்கட்டும். லவ்ஸ்னா லவ்ஸ், ரொமான்ஸ்னா ரொமான்ஸ், ஃபைட்னா ஃபைட்…’ என்று மனதிற்குள் சொல்வதாக நினைத்து வாய்விட்டுப் புலம்ப… “யாரைப் பத்திடா சொல்லிக்கிட்டு இருக்கே தெண்டச்சோறு? நான் அங்க வந்ததும் உனக்கு இருக்கு!” என்று அழைப்பைத் துண்டித்தான் ஆனந்த்.

இன்னும் சற்று நேரத்தில் அவன் இங்கு வரும்போது ஜீவாவைப் பார்த்தால், தனக்குச் சிக்கலாக ஏதாவது நடந்து விடக்கூடாது என்பதால், உடனடியாக அவளை அங்கிருந்து இடமாற்றி மூன்றாவது மாடிக்குக் கொண்டு செல்ல விரைந்தான் கபிலன்.

​அதற்கு முன்னேற்பாடாகத் தன் தந்தையிடம் சென்று தகவல்களைக் கூறிவிட்டு, ‘ஒரு மனுஷனை இப்படியாடா துரத்தி அடிக்கிறது? நீ எனக்குச் செய்யற பாவத்துக்கு ருத்ரமாதேவிகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறியா இல்லையா பாரு!’ என்று புகைந்தான் கபிலன்.

​அவர் மகனின் முகத்தைப் பார்த்துவிட்டு என்னவென்று கேட்க, அவனும் நடந்ததை விளக்கமாகச் சொல்ல, அவர் முகம் அதிர்ச்சியில் மூழ்கியது. இருவரும் சற்று நேரம் பேசிவிட்டு, ஆனந்தை எதிர்கொள்ள அவர் தயாராக… எதேதோ காரணங்களை அடுக்கிக்கொண்டு கையோடு ஜீவாவையும் பிடித்து இழுத்தவாறு மாடிக்குச் சென்றுவிட்டான் கபிலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!