Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 1

காதல்  –  இன்று

“அப்பா ஆலடி கருப்பு சாமி, எல்லோரையும் காப்பாத்து, இந்த ஜனங்களுக்கு கொஞ்சம் நல்ல புத்தியக் கொடு!

முக்கியமா என் மதி அக்கா மாமியாருக்குக் கொடு.. அக்காவுக்கு சீக்கிரம் குழந்தை வரத்தைக் கொடு..

அப்புறம் எனக்கு தைரியத்தைக் கொடு.. தைரிய லக்ஷ்மி இருந்தா போதும், மத்த லக்ஷ்மியெல்லாம் தானாவே வந்திருவாங்க!



Advertisement

எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்காத புத்தியக் கொடு!”

என்று அந்த ஆலமரத்தில் குடிக்கொண்டிருக்கும் கருப்பு சாமியை வேண்டிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா அலைஸ் வெண்மதி!

தன் வலக்கையை நெஞ்சில் வைத்து வேண்டிக் கொண்டிருப்பவள், தன்  இடக்கையில் கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு செம்மறி ஆட்டைப் பிடித்துக் கொண்டிருந்தாள்!

Advertisement

இடம். அவள் கிராமத்தின் பஸ் நிறுத்தும் இடம்.

Advertisement

அங்கு ரோட்டோரம் இருந்த ஆலமரத்தில் கருப்புசாமி குடிக் கொண்டுள்ளார் என்பது ஊராரின் நம்பிக்கை!

அங்கு ரெண்டு இரும்பு சூலாயுதங்கள் நடப்பட்டு அதன் முனைகளில் எலுமிச்சை பழங்கள் சொருகப்பட்டிருந்தன!

வெண்ணிலா, பேருக்கேற்றார் போல வெண்ணிற அழகி.

Advertisement

நல்ல களையான வட்ட முகம். அதில் ஈர்க்கும் வசீகர கண்கள்!

திருத்தப்பட்ட அழகான வில் போன்ற புருவங்கள்!

நீண்ட கூந்தல்! ஆனால் அதை வீட்டு ஸ்டைலில் கொண்டைப் போட்டிருந்தாள்.

பிரவுன் நிற நைட்டியும் அதன் மேல் அவள் அப்பாவின் டி ஷர்ட் ஒன்றையும் அணிந்து இருந்தாள்.

“சில்லறை இல்லீங்க தம்பி! நான் ஒண்ணும் வியாபாரி இல்லை, வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன்.

நீங்க ஆசையா கேட்டதுனால தான், வீட்டுக்கு கொண்டுப் போற எளநீயை தான் உங்களுக்கு கொடுத்தேன்”  என்ற அவளின் பக்கத்து வீட்டு பழனி தாத்தாவின் குரல் கேட்டு மெயின் ரோட்டுப் பக்கம் பார்வையை திருப்பினாள் வெண்ணிலா!

அங்கு ஒரு கார் நின்றுக் கொண்டிருக்க, அதன் அருகில் ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் நின்றிருக்க அவர்களுடன் தான் தாத்தா பேசிக் கொண்டிருந்தார்!

அந்த பெண்ணை அவளுக்குத் தெரியும். அவள் அந்த ஊரின் பண்ணை வீட்டுப்பெண். பெயர் சுபாஷினி.

ஆனால் கூட இருக்கும் அவன் யார்!

ஒரு வேளை அவர்கள் வீட்டு விருந்தாளியோ? என்று எண்ணியபடி அவர்கள் அருகில் சென்றாள் வெண்ணிலா ஆட்டையும் கையில் இழுத்துக் கொண்டு!

“என்ன தாத்தா, என்ன பிரச்சினை?”

“பிரச்சினை ஒண்ணும் இல்ல ஆயி. இந்த தம்பி நான் கையில் செவ்வெளனி வைச்சுருந்த பார்த்துட்டு நான் இளநீ வியாபாரி நினைச்சு கேட்டாப்ல.

நானும் சரி டவுன் தம்பியா இருக்கு, நம்ம ஊரு இளநீயைக் குடிச்சுப் பார்க்கட்டும்னு கொடுத்துட்டேன், அதான்!”

“கொடுத்திட்ட இல்ல தாத்தா அப்புறம் என்ன கிளம்ப வேண்டியது தானே!”

“இல்லங்க, குடிச்ச இளநீக்கு காசு கொடுக்கனுமில்ல அதான்” என்றான் அந்த இளைஞன்.

“அது அவருக்கு சும்மா ப்ரீயா கிடைச்சது தான்! பரவாயில்ல  நீங்க போங்க”.

“இல்லைங்க ப்ளீஸ் காசு வாங்கிக்க சொல்லுங்க!” என்றான் அவனும் விடாமல்.

“சரி தம்பி அப்போ ஒரு நூறு ரூவாயா கொடுங்க, என்கிட்ட ஐநூறு ரூவாவுக்கு சில்லறை இல்லை!

சில்லற என்ன.. காசே இல்ல! என் பொண்டாட்டி ஒத்த ரூபா கூட என்கிட்ட கொடுக்க மாட்டா!” என்றார் பழனி தாத்தா குறையுடன்!

“என் கிட்டையும் சில்லறை இல்லீங்க” என்று அவன் மேலும் தயங்கிய படி சொல்லிக் கொண்டிருக்கும் போது,

அந்த சுபாஷினி, “ஜீவா எனக்கு இந்த ஆட்டோட ஸ்மெல் குமட்டிக்கிட்டு வருது, நான் காரில் இருக்கேன்.

நீ அவங்களுக்கு செட்டில் பண்ணிட்டு வா” என்று சொல்லி விட்டு காரில் ஏறிக் கொண்டாள்!

“உங்க கிட்டயும்  சில்லறை இல்லையா, இந்த பக்கம் ஒரு பெட்டிக்கடைக் கூட கிடையாதே..  ம்ம். என்ன பண்ணலாம்.. “ வெண்ணிலா ஒரு கணம் யோசித்தவள், சட்டென்று அவள் நைட்டியின் சைடில் இருந்த பாக்கெட்டில் இருந்து அவளது போனை எடுத்தாள்.

அதன் கவரில் இருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளில் ஒன்றை உருவி எடுத்தவள், அதை அவனிடம் கொடுத்தாள்.

“இந்தாங்க, பதிலுக்கு நீங்க எனக்கு நூறு ரூபாயை ஜீபே பண்ணிடுங்க,” என்று அவள் போனில் இருந்து க்யு ஆர் கோடை காட்டினாள்.

அந்த ஜீவா எனப்பட்டவன், கொஞ்சம் ஆச்சரியமாக அவளைப் பார்த்து விட்டு, அவள் காட்டிய கோடை ஸ்கேன் செய்தவன்,

“வெண்ணிலா ஏ. இல்லையா உங்க பேரு?” என்று கேட்டப்படியே அவளுக்கு நூறு ரூபாயை அனுப்பி விட்டவன்,

“ஓ இது தான் டிஜிட்டல் இந்தியாவா?” என்று கொஞ்சம் சிரிப்புடன் சொல்லி விட்டு கூடவே  ஒரு “தாங்க்ஸ்” சொல்லி,  பின் அவனை அறிமுகப்படுத்தியும் கொண்டான்.

“நான் ஜீவா. இங்க ஒரு ப்ராஜெக்ட் விசயமா வாழை ஆராய்ச்சி மையத்திற்கு வந்திருக்கேன். எப்படியும் இங்க தான் ரெண்டு மாசம் இருப்பேன்!

இங்க சுபா வீட்டுல தான் இப்போதைக்கு இருக்க போறேன்.

சுபா என் பிரண்டோட கசின். அநேகமா நாம திரும்பவும் மீட் பண்ணுவோம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான்.

அதில் ஒரு கல்மிசமும் தோன்றவில்லை வெண்ணிலாவுக்கு!

சிநேக பாவம் மட்டுமே தெரிந்தது!

“நான் வெண்ணிலா, இங்க பக்கத்துல ஒரு ப்ரைவேட் ஸ்கூல் டீச்சர்! படிச்சது எம் சி ஏ.

ஆனா வீட்டில் வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப மாட்டாங்க.

அது தான் இங்கயே பக்கத்துல ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல வேலைப் பார்க்கிறேன். என்றாள் வெண்ணிலாவும் நட்புடனே.

“சும்மா இல்ல தம்பி, நிலா பாப்பா காலேஜ்ல  தங்க மெடல் எல்லாம் வாங்கியிருக்கு!” என்றார் பழனி தாத்தா!

“தாத்தா, நைசா இத சொல்லி எனக்கு ஐஸ் வைக்கிறீயா? முதல்ல அந்த நூறு ரூபாய என்கிட்ட கொடு, நான் அப்பாயிகிட்ட நானே கொடுத்துடறேன்.

இல்லனா நீ நேரா  பச்சை போர்ட் கடைக்கு போய்டுவ!” என்று சொல்லி, பிடுங்கிக் கொண்டாள்.

கூடவே, “ நீ கொழுப்பெடுத்து போய் குடிச்சு குடல் வெந்து செத்துப் போனா, அதுக்கு எங்க அப்பாயியை தான் இந்த சொசைட்டி அலங்கோலப்படுத்தி ஒதுக்கி வைக்கும்!” என்றாள் மெல்லிய குரலில்.

அது காரில் ஏறிக் கொண்டிருந்த ஜீவாவின் காதுகளிலும் விழுந்தது!

அவன் மேலும் ஆச்சரியமாக அவளை ஒரு பார்வைப் பார்த்துக்கொண்டே, மனதுள், “மயூ. இவ அப்படியே உன்னை மாதிரியே பேசுறா மயூ..” என்று சொல்லிக் கொண்டான்.

——-

காதல் – அன்று

தன் வீட்டு வாசலில் வரிசைக் கட்டி நிற்கும் கார்களைக் குழப்பத்துடன் பார்த்தவாறு வீட்டினுள் நுழைந்தாள் வித்யா.

ப்ளஸ் டூ மாணவி.

ஸ்கூல் விட்டு தன் சைக்கிளில் வந்தவள், அதை பார்க் செய்து விட்டு நுழைந்த போது, உள்ளே ஏகப்பட்ட உறவினர் கும்பல்.

அதில் நடுநாயகமாக உடகார்ந்து அவள் அப்பா தமிழரசனுடன் பேசிக் கொண்டிருந்தவர் அவர்கள் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு உள்ள ஒரு தொழிலதிபர்.

பெயர் பார்த்தசாரதி. கொஞ்சம் அரசியல் பின்புலமும் உண்டு.

அவர்கள் உறவினர் வட்டாரத்தில் மிகவும் செல்வாக்கானவர்.

அவர் சொல்லுக்கு கிட்டதட்ட எல்லோருமே கட்டுப்பட்டு தான் நடப்பார்கள்.

ஆனால் அவர் நியாயமில்லாத எதையும் செய்ய சொல்லி யாரையும் வற்புறுத்தியது கிடையாது.

இன்று அவர் வந்திருப்பது, அவரின் ஒன்று விட்ட தம்பி ராஜேந்திரனின் மகன் ராகவேந்திரனுக்கு பெண் கேட்டு.

பெண் – வித்யாவின் அக்கா வாணி!

வாணி இப்போது இஞ்சினியரிங் பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கும் மூத்தவன் வாகீசன். அவன் இப்போது தான் ஒரு ஐ டி கம்பெனியில் பிளேஸ் ஆகியிருக்கிறான்.

தற்போது இருப்பது பெங்களூரில் ஒரு மேன்சனில்.

தமிழரசனும் அவர் மனைவி லதாவும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

நடுத்தரக் குடும்பம்.

பிள்ளைகளுக்கு நன்றாக படிப்பைக் கொடுத்து விட வேண்டும் என்கிற வேட்கை மிகவும் அதிகம் லதாவிற்கு.

ஆனால் மூத்தவர்கள் இருவரும் நன்கு படிக்க, கடைக்குட்டி வித்யாவிற்கு மட்டும் அது கொஞ்சம் அழிச்சாட்டியம் செய்தது.

ஸ்கூலில் வேறு, “வித்யா என்று பெயர், ஆனால் சுத்த மக்கு!” என்று ஆசிரியர்களால் கிண்டல் அடிக்கப்படுவாள்.

“வாத்தி புள்ள மக்குங்கிறதுக்கு சரியான உதாரணம் நீ தான்!” என்றும்!

பேரன்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கில், “உங்கப் பொண்ணா இது, நம்ப முடியல மேடம்!

வாணியும் வாகிசனும் அப்படி படிப்பாங்க, இவ உங்க பொண்ணுன்னு என்னால நம்பவே முடியல!” போன்ற சம்பவங்களும் நடந்தது உண்டு!

“இன்றும் கூட உன் அண்ணன் எப்படி படிப்பான் தெரியுமா, உன் அக்கா எப்படி படிப்பா தெரியுமா, அவங்க தங்கச்சின்னு தயவு பண்ணி வெளியே சொல்லிடாத!” என்று அவளின் இங்கிலீஷ் டீச்சர் திட்டினாள்.

அந்த கடுப்பில் தான் அவள் ஸ்கூலில் இருந்து திரும்பி வந்ததே!

வந்த இடத்தில் இப்படி உறவினர்களைப் பார்க்கவும் அதைப் பற்றி கொஞ்சம் மறந்தவளாக அவர்களைக் கவனித்தாள்.

அவள் உள்ளே வருவதைக் கண்டவுடன்,  பார்த்த சாரதி, “இவள் தான் உன் சின்னப் பெண் இல்லியா?” என்று கேட்டார்.

“ஆமாம்.! என்று சொல்லி, அவளை அழைத்துப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார் அவள் அப்பா தமிழரசன்.

பக்கத்து ரூமின் உள்ளே இருந்து அவள் அம்மா லதா பல்லைக் கடித்துக் கொண்டு முறைப்பதை அறியாமல்.

“ஒண்ணும் அவசரம் இல்ல அரசு, நீ டைம் எடுத்து யோசிச்சு சொல்லு. நம்ம ராகவ் பத்தி தான் உனக்கு தெரியுமில்ல.

அம்மா இல்லாத பையன், அன்புக்கு ஏங்குகிற பையன்.

உன் பொண்ணை நல்லபடியா வச்சுப்பான். என்ன சொல்ற?” பார்த்த சாரதிக்கு எப்படியும் சம்மதிக்க வைத்து விடவேண்டும் என்று பேரவா!

“பையனைப் பத்தி ஒண்ணும் இல்ல, மாமா, ஆனா அந்த ஈஸ்வரிய நினைச்சா தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

அதை எல்லாம் என் பொண்ணால சமாளிக்க முடியாது!

அவ ரொம்ப சாது. அதும் இல்லாம இப்ப தான் படிப்பை முடிக்கவே போறா. அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு!” என்றார் தமிழரசன் தயக்கமாக!

“ஏங்க, இப்படி பின்னிப் பின்னிப் பேசிட்டு இருக்கீங்க, அந்த ஈஸ்வரிக்கு ராகவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே இஷ்டமில்லை.

அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா, வாரிசு வந்திட்டா, சொத்து பிரச்சினை வரும்னு தான் அதுவே வர சம்பந்தத்தை எல்லாம் கலைச்சு விடுதுன்னு பேசிக்கிறாங்க.

இப்படிப்பட்ட வில்லங்க குடும்பத்தில் எங்க பொண்ணை எப்படி நம்பிக் கொடுக்க முடியும்!”  லதா ரூமில் இருந்து வேகமாக வெளிப்பட்டு சொல்லியே விட்டார்.

“ஏய், என்ன இது இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்ட மாமா எதிரில்!” தமிழ் அவரைக் கண்டித்தார்.

“இல்லப்பா, இப்படி வெளிப்படையா பேசுறது கூட நல்லது தான்!

நீ பயப்படறது கூட நியாயம் தான்மா, அந்த ஈஸ்வரி கழுத்தில என்னிக்கு என் தம்பி தாலியைக் கட்டி ரெண்டாம்தாரமா கூட்டிட்டு வந்தோனோ, அன்னிக்குப் பிடிச்சது அவனுக்கு ஏழரை!

ஆனா நீ பயப்படுற அளவுக்கு நான் அவளோட போய் ஒரே வீட்டில் இருக்க வைப்பேனா, அதெல்லாம் கல்யாணம் ஆன கையோட தனிக்குடித்தனம் வச்சு விடுவேன்.

ராகவும் கை நிறைய சம்பாதிக்கிறான். ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக இருக்கான். கம்பெனி ஓனருக்கு எல்லாமே அவன் தான்!

நீ ஈஸ்வரிய பத்தி யோசிச்சு எல்லாம் பயப்படாதே!” அவர் மேலும் வற்புறுத்த,

மேலும் லதா மறுக்க, நிலைமையை மோசமாக்கி விடாமல் செய்யவென்று தமிழரசன்  ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.

அவர் விட வில்லை! விதி அப்படி பேச செய்தது!

“மாமா, என் பெரிய பொண்ணு வேணாம், என் சின்ன பொண்ணை வேணுமின்னா கட்டி வைங்க ராகவுக்கு!

இவள் தான் அந்த ஈஸ்வரிக்கு சரிக்கு சரியா பேசுவா!” என்று காமெடி பண்ணுவதாய் நினைத்து சொல்லி விட்டார்!

அவர் உண்மையில்,  இன்னும் பினோபோர் யூனிபோர்மில் இருக்கும் இந்த சின்னப் பெண்ணைப் போயா பெண் கேட்கப் போகிறார்கள் என்று நினைத்தே அப்படி சொன்னார்.

ஆனால் பார்த்தசாரதிக்கு ராகவுக்கு எப்படியாவது கல்யாணம் செய்து விட வேண்டும். அவர் யூ எஸ் போவதற்குள்!

அதனால் சட்டென்று அதைப் பிடித்துக் கொண்டு விட்டார்!

“என்னம்மா சின்ன பொண்ணு, எங்க ராகவை கட்டிக்கிறியா?” என்று நேரிடையாகவே அவளிடம் கேட்டு விட்டார்.

கிட்டதட்ட அனைவருமே அதையும் ஒரு ஜோக்காகவே நினைத்துக் கொண்டிருக்க, வித்யா ஒரு பதிலை சொல்லி அனைவரையும் அதிர வைத்து விட்டாள்.

“ம்ம். பண்ணிக்கிறேன்! எனக்கு ராகவ் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்! நான் அவரைக் கல்யாணம் செய்துக்கிறேன்” என்றாள் ரொம்பவும் உறுதியாக!

தமிழரசன் அப்படியே அதிர்ந்து பார்க்க, லதாவுக்கு மயக்கம் வராத குறை தான்!

“கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டு, இப்படி ராகவ் அண்ணான்னு சொல்ற?” குறும்புடன் சிரித்தபடி கேட்டார் பார்த்தசாரதி!

“அது.. இந்த அய்யர் வீட்டுல எல்லாம் கூப்பிடுவாங்களே அது மாதிரி அண்ணா! இல்லம்மா.. “ உறவுக் கூட்டத்தில் ஒருவர் கலாய்க்க,

அதற்குள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு விட்ட தமிழரசன், “மயிலு கண்ணு, (அது அவர் செல்லமாக கூப்பிடும் பெயர்!), இது விளையாட்டு இல்லடா, வாழ்க்கை! இப்படி பெரியவங்க முன்னால இப்படியெல்லாம் பேசக் கூடாது!”

“என்னப்பா, நீங்க, நீங்க தானே பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்து இருக்கீங்க, இப்ப, இப்படி நீங்களே சொல்லலாமா?

நிஜமா தான் எனக்கு ராகவ் அண்.. ராகவ் மாமாவை சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்.

அவர் காலேஜ் போகும் போது கூட, என் ப்ரண்ட்ஸ், அவரை இந்த ஓ! பட்டர்பிளை! பாட்டில் வரும் விக்ரம் போல இருக்காருன்னு சொல்லி பயங்கரமா சைட் அடிப்பாங்க தெரியுமா!

நான் உண்மையா தான் சொல்றேன், எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்!” என்றாள் வித்யா!

“மாமா, இந்த பிள்ளை என்ன இப்படி தேங்காய் உடைச்சா மாதிரி சொல்லிடுச்சு! அது மைனர் பொண்ணா இருக்கப் போவுது, முதல்ல வயசு என்னான்னு கேட்டுக்கங்க!” உறவுக் கூட்டத்தில் இன்னுமொரு விவரமானவரின் குரல் வர,

அதற்கும் கூட வித்யாவே முந்திக்கொண்டு பதில் அளித்து விட்டாள்!

“நான் மேஜர் தான். நான் பார்ஸ்ட் ஸ்டாண்டர்ட்ல ஒருதரமும் நைன்த் ஸ்டான்டர்டுல ஒருதரமும் பெயில். இல்லைனா நான் காலேஜ் சேர்ந்து இருப்பேன் இந்நேரம்!”

இப்படி தன்னை ஒருத்தி பிடித்து இருக்கிறது என்று அதிரடியாய் சபை நடுவில் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியாக்கி விட்டாள் என்று அறிந்து அந்த ராகவுக்கும் அவளைக் காண ஆசை வந்தது!

மறுநாள் அவளை சந்திக்கவென்று அவள் வீட்டுக்கே போனான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!