Skip to content
Post Views: 4,993
“அண்ணா, பேக்சைட் அப்படியே பேபி ஆன்போர்ட் ஸ்டிக்கரும் ஒட்டிடுங்க” என்றாள் வெண்ணிலா.
“இந்த ஸ்டிக்கர் எதுக்கு நிலா?” என்று கேட்டான் ஜீவா.
“மதிக்காவுக்கு இன்னும் கொஞ்சநாளில் குழந்தை பிறந்திடும்ல அதான்!” என்றாள் ரொம்பவும் உற்சாகத்துடனும் சந்தோசத்துடனும் இருந்த வெண்ணிலா!
இருக்காதே பின்னே, அவள் தன் சொந்த சம்பாத்தியத்தில் அவள் ஆசைப்படி கார் வாங்கி விட்டாளே!
Advertisement
லோனில் தான் என்றாலும் இஎம்ஐ கட்டும் அளவு அவளின் வருமானமும் கூடி விட்டதே!
அவள் அம்மா வசந்தாவின் ஆசைப்படி சிவப்பு நிற ஐ டென் கார்!
வெண்ணிலாவின் சிபில் ஸ்கோர் நன்றாகவே இருந்தது!
Advertisement
அதுவும் இப்போதைய அவளின் சம்பளமும் குறைந்த டவுன் பேமென்ட் கட்டியே அவளுக்கு கார் லோன் கிடைக்க செய்துவிட்டது!
Advertisement
ஜீவாவின் சிபாரிசும் ஒரு மறைமுகக் காரணம்!
பாங்க் மேனேஜர் ஜீவாவின் நண்பன் தான்!
அவன் கூட கேட்டான், “உன் பியான்சிக்கு நீயே ஒரு கார் வாங்கி கிப்ட் பண்ண வேண்டியது தானே?” என்று!
Advertisement
“ம்ஹும்..யப்பா புண்ணியவானே, நான் இன்னும் அவ கிட்ட நேரா ப்ரபோஸ் கூட பண்ணல! இன்டைரக்டா தான் சொல்லிட்டு இருக்கேன்! கொஞ்சம் பொறு கண்ணா!” என்றான்.
“டேய் பார்த்துடா, இதயம் முரளி மாதிரி ஆயிடப் போறே!” நக்கலடித்தான் அந்த நண்பன்!
காரை வீட்டுக்கு டெலிவரி எடுத்து வந்து, வித்யாவின் கையில் சாவியைக் கொடுத்து, காலில் விழுந்து ஆசி வாங்கினாள் வெண்ணிலா!
“நல்லாயிரும்மா, உன் மனசுக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணி, தீர்க்க சுமங்கலியா, நிறைய குழந்தைக் குட்டிகளோட வாழையடி வாழையா நிறைவான வாழ்க்கை வாழனும்!” வித்யா வெண்ணிலாவோடு சேர்த்து ஜீவாவுக்கும் மனதார ஆசி வழங்கினாள்.
காரை டெலிவரி எடுத்தவுடன் அவளின் சொந்த ஊருக்கு கிளம்பினாள் வெண்ணிலா!
சர்ப்ரைஸ் விசிட்!
ஊரில் இருக்கும் நிலவரம் தெரியாமல்!
குறைந்த பட்சம் அன்புவுக்கு மட்டுமாவது சொல்லி இருக்கலாம் அவள்!
சொல்லவில்லை!
விதியின் விளையாட்டு!
“காலை ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு கிளம்பினா சரியா இருக்கும் நிலா!” ஜீவாவும் அவளுடன் கிளம்பினான்!
மதுரையில் அவன் நண்பன் ஒருவனுக்குத் திருமணம்!
இவன் தான் மாப்பிள்ளைத் தோழன்!
அவனுக்கும் பட்டு வேஷ்டி சட்டை ஆர்டர் பண்ணி விட்டார்கள் அவன் வீட்டினர்!
வித்யா, அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ண முடியாது என்று சொல்லி விட்டாள்!
இல்லையென்றால், வெண்ணிலாவின் காரிலேயே மூவரும் போய், அவளின் ஊரில் அவளை விட்டுவிட்டு, பின் திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மதுரை செல்வதாக தான் இருந்தது!
இப்போது வித்யா வராததால், ஜீவாவும் வெண்ணிலாவும் மட்டுமே கிளம்பினர்.
கார் பயணம் இருவருக்குமே ரொம்பவும் குதூகலத்தை, இனம் புரியாத சிலிர்ப்பைத் தந்தது!
இதற்கு முன்பும் வெண்ணிலா பலமுறை அவனுடன் காரில் சென்று இருந்தாலும் இது போன்ற லாங் டிரைவ் இல்லை!
நகர எல்லையைத் தாண்டும் வரை டிரைவிங்கில் கவனமாக இருந்த ஜீவா, அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக ஓட்டிக் கொண்டே கண்களில் காதலைத் தேக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“என்ன நிலா ஒண்ணுமே பேசாம வர?”
“ஒண்ணும் இல்ல சார்.” அவனின் அந்தப் பார்வை அவளை என்னமோ செய்ய கொஞ்சம் வெட்கம் வந்தது அவளுக்கும்.
இப்போது அவளுக்கு ஜீவாவிடம் இன்னுமும் நெருக்கம் தோன்றிட, அவனை முன்மாதிரி நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை!
அவன் பார்வையிலும் தான் இப்போது வெளிப்படையாகவே காதல் தெரிகிறதே!
அன்றைக்கு மயூ யாருன்னு நீ தெரிஞ்சிக்கிட்டே ஆகணும்னு சொல்லி அவளைக் கட்டிக்கொண்டானே!
அவனா முதலில் செய்தது?
அவள் தானே, அவனுக்கு என்னமோ ஆகிவிட்டது என்ற பயத்தில்!
அந்த நாளை இப்போது நினைத்தாலும் அவளுக்குள் வெட்கம் வரும்!
இப்போதும் அதை நினைக்க, தன்போலே அது முகத்தில் தெரிந்தது!
“என்ன நிலா, சொல்லிட்டு சிரி, இப்படி உனக்குள்ள நீயே சிரிச்சுக்கிட்டா எப்படி?”
“ம்ம். ஒண்ணுமில்ல சார்.”
சார்.. இன்னமும் இந்த சார்.. விளிப்பு தான் ,அவனை கொஞ்சம் தள்ளி நிறுத்துகிறது!
இந்த சார்.. சார்ன்னு சொல்ற வாயை.. அப்படியே கடிச்சு வைக்கணும் போல கோபம் வருது.. ஜீவா முகத்தை வேறுபுறம் திருப்பி நினைத்துக் கொண்டான்.
அய்யோ.. சார் என்னமோ கொஞ்சம் கோபம் ஆகிட்டா மாதிரி தெரியுதே? அவள் உள்ளுக்குள் வருத்தப்பட்டாள்.
ஒரு டோல் பிளாசாவில் நிற்கும் போது, வியாபாரிகள் மொய்த்துக் கொண்டார்கள்!
வெள்ளரிக்கா.. வெள்ளரிக்கா.. என்று!
வெண்ணிலா வெள்ளரிக்காய் வாங்கினாள்.
“சார்.. இந்தாங்க..” என்று நீட்டிய போது “வேண்டாம்” என்று சொல்லி விட்டு, கடைசி வெள்ளரிக்காயை அவள் கடித்தப்பின், அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டான் ஜீவா!
“ஒரு பேச்சுக்கு வேண்டாம் என்றால், எல்லாத்தையும் நீயே தின்னுடுவியா” என்று சொல்லிவிட்டு கடித்துத் தின்றான்!
“சார், அது நான் கொஞ்சம் கடிச்சுட்டேன்..” அவள் பதற.
“இட்ஸ் ஓகே” என்று சொல்லி தின்று விட்டான்.
“உன் லிப்சை தான் கடிக்க முடியல, நீ கடிச்ச இந்த வெள்ளரிக்காயை ஆவது கடிச்சுக்கிறேன்” என்பதாக இருந்தது அவனின் பார்வை!
கொஞ்ச நேரத்தில் வெண்ணிலாவுக்கு கண்களை சுழற்றிக்கொண்டு வந்து காரில் சாய்ந்தபடியே தூங்கியும் விட்டாள். பின் காரின் ஓட்டத்தில் அவன் தோள் மேலேயே சாய்ந்துக் கொண்டும்!
இப்போது தூக்கத்தில் அவன் தோளின் மேல் சாய்ந்துக் கொண்டு வருபவள், ஊர் திரும்பும் போது துக்கத்தில் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு வரப்போகிறாள் என்பதை அறியாமல் அவளின் ஊர் எல்லையைத் தொட்டது அவர்களின் அந்த புதியக் கார்!
ஊர் எல்லையை அடைந்தவுடன், அவளை எழுப்பி, முகம் கழுவ சொல்லி, டிரைவிங் சீட்டை அவளுக்குத் தந்து மாறி உட்கார்ந்து கொண்டான் ஜீவா!
இது அவர்கள் முன்பே பேசி வைத்திருந்தது தான்!
சொந்த ஊரில் , சொந்தக்காரில் இப்படி ஸெல்ப் டிரைவிங்கில் ஓட்டி செல்ல அவளுக்கு ரொம்பவும் ஆசை.
காரின் முன்பக்கம் வசந்தா அருண் என்று எழுதியிருக்க, பின்னால் நிவின் நிவேதா என்று வளர்மதியின் குழந்தைகளின் பெயர்கள்!
கார் ஊருக்குள்ளே நுழைந்த போது, அவளின் பக்கத்து வீட்டு மலரக்கா, அதான் அந்த ஆட்டின் சொந்தக்காரி , கையில் குழந்தையுடன் எதிர்பட்டாள்.
“அக்கா, மலரக்கா எப்படி இருக்கே, குட்டி வெண்ணிலா எப்படி இருக்கா?” என்று குதூகலமாய் அவளைப் பார்த்து கத்தினாள் வெண்ணிலா காரிலிருந்து கொண்டு!
ஆனால் அந்த மலர், முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள் இவளைக் கண்டவுடன்!
“என்ன ஆச்சு இந்த அக்காவுக்கு, என்னைப் போல இருக்கணும்னு தான் என் பேரை அவங்க குழந்தைக்கு வச்சாங்க மலரக்கா, இப்ப ஏன் இப்படி?” அவள் குழம்பிக் கொண்டிருக்க.
ஜீவாவுக்கோ அவளை முதன் முதலில் கையில் ஆட்டுடன் சந்தித்த நாள் நினைவில் வந்தது!
ஹேய் ஸ்வீட்டி, அன்னிக்கு கையில் ஆட்டுடன் வந்து, இப்ப என் ஹார்ட்டையே ஓட்டிட்டுப் போய்ட்டா, மை ஸ்வீட்டி! என்று அவன் உள்ளுக்குள் டூயட் பாடிக்கொண்டிருக்க, இங்கு வெண்ணிலா இந்தப் புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அந்த மலர் மட்டுமில்லை, அடுத்து அவள் பார்த்த பழனி தாத்தாவும் கூட விருட்டென்று சைக்கிளை மிதித்துக் கொண்டு போயே விட்டார்!
ஒரு வழியாக வீட்டை அடைந்து,
“அம்மா..” என்று சந்தோசமாக கத்தியபடியே காரை விட்டு இறங்கி சின்னப் பெண் போல துள்ளிக் கொண்டு ஓடினாள் வெண்ணிலா!
வெளியே வந்த வசந்தா, அப்படியே திகைத்துப்போய் நின்று விட,
“ஒரு அடி காலை எடுத்து உள்ள வச்சிங்க, அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்” பின்னால் அருணின் குரல் கேட்டப்பின் தான் காரை விட்டு இறங்கிய ஜீவாவைப் பார்த்தார் வசந்தா!
இப்போது அவர் முகமும் கோபத்தில் சிவந்தது!
“என்ன தைரியம் இருந்தா, இப்படி எங்க முன்னாடி இப்படி ஜோடி போட்டுக்கிட்டு வந்து நிப்ப?” வசந்தாவின் குரல் கேட்டு, தன் வயிற்றைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தாள் மதி!
வந்தவள் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கும் வெண்ணிலாவைப் பார்த்து அதிர்ந்து போய்,
“ஏய் வெண்ணிலா ஏன், இப்படி எங்க கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம வந்து நிக்கிற?” என்று பதறியபடி கேட்டாள்.
அதற்குள் அக்கம்பக்கம் கூடி விட்டார்கள்!
அந்த வினய்க்கும் தகவல் போய் விட்டது.
மதி உடனே அவள் கணவன் செல்வத்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட, அங்கு தான் வந்து கொண்டிருந்த அவனும் வீட்டிற்கு வந்து, “ஏன் வெண்ணிலா இப்படி..” என்று அவனும் கேட்டான்.
அடுத்து நட்ராஜும் வந்து விட, அன்பு டவுனில் இருந்தான்.
அவனுக்கும் போன் செய்து வரும் போது வளர்மதியையும் கூட்டி வர சொல்லி விட்டான் நட்ராஜ்.
சுதாவும் வந்து விட்டாள் அன்புவின் அம்மாவோடு!
“அம்மா, அப்பா கோபப்படுறது சரி, நீயேன் கோபப்படுற?” வெண்ணிலா குழப்பத்துடன் கேட்டாள்.
“கோபப்படாம உன்னையும் இவனையும் ஆரத்தி எடுத்து உள்ளே கூப்பிடனுமா?” வசந்தா பல்லைக் கடித்தார்.
அப்போது தான், அவளுக்கு தன்னையும் ஜீவாவையும் இணைத்து தான் இப்படி பேசுகிறர்கள் என்றே உறைத்தது!
“அம்மா, இவர் ஜீவா சார்.. என்னை மேலே படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்து, தங்க இடமும் கொடுத்து பாதுகாப்பா வச்சுருக்காரு? அவரைப் போய் இப்படி தப்பா பேசாதே!”
“அதான் நீயே சொல்லிட்டியே, உன்னை அவன் வச்சுருக்கான்னு, அப்புறம் திட்டாம என்ன பண்ணுவாங்க” என்றான் அங்கு வந்துவிட்ட வினயின் எடுபிடி ஒருவன்!
“ஏய்..நாக்கை அடக்கிப் பேசு. இல்ல.. நடக்கிறதே வேறே!” வெண்ணிலா அவனை முறைத்து விட்டு கத்தினாள்!
“என்ன என்கிட்ட எகிறுற? இத்தனை நாள் இந்த ஆள் கூட இருந்து கூத்தடிச்சுட்டு, இப்போ சலிச்ச பின்னாடி ஒண்ணுமே நடக்காத மாதிரி இங்க வந்து இப்படி நாடகம் போடுறியா?”
“டேய் ரொம்ப பேசாத!” வினய் போலியாக அவனை அடக்கினான்.
“நீ என்ன அண்ணே என் வாயை அடக்குற?”
“பின்னே அடக்காம, என்ன இருந்தாலும் நான் கட்டிக்கப் போற பொண்ணு அவ!
அவ எப்படி திரும்பி வந்தாலும் அவளை நானே கட்டிக்கிறேன்னு மாமாவுக்கு நான் சத்தியம் பண்ணிக் கொடுத்துருக்கேன்!” வினய் நேரம் பார்த்து அருணுக்கு நினைவும் படுத்தினான்!
“என் வாயை அடக்கலாம்னே, ஊர் வாயை எப்படி அடக்குவ?
இந்தா பாரு” என்று ஜீவாவும் வெண்ணிலாவும் இருக்கும் அந்த காபிஷாப் யூட்யூப் வீடியோவைக் காட்டினான்.
“அது எனக்கும் தெரியும்டா, ஏன் நானே கூட அவங்கள ஷாப்பிங் மாலில் வச்சுப் பார்த்துருக்கேன்!” என்றான் வினய்!
இப்போதும் நேரம் பார்த்து காயை நகர்த்தினான் அவன்.
முன்பு ஒருமுறை இந்த போட்டாவை அருணுக்குக் காட்ட முயன்ற போது அவர் கோபத்தில் அதை பார்க்க கூட மறுத்து விட்டார்!
“இருந்தாலும் உனக்கு இப்படி ஒரு மனசா அண்ணே, கெட்டுப் போய் திரும்பி வந்துருக்கும் ஒருத்திக்கு வாழ்க்கை கொடுக்கிற அளவு?” கொடுக்கிற காசுக்கு மேல் கூவினான் அந்த எடுபிடி!
“யாருக்கு யார்டா வாழ்க்கை தர்றது?” கிட்டதட்ட அன்புவின் பைக்கில் இருந்து குதித்தபடியே கோபமாக கேட்டாள் வளர்மதி!
“என்னங்க நீங்க, மாமா.. என்ன எல்லோரும் இவனுங்கள பேச விட்டு பார்த்துட்டு இருக்கீங்க?” நட்ராஜையும் செல்வத்தையும் பார்த்துக் கேட்டாள் வளர்!
“எங்கள எங்க பேச விட்டானுங்க? இவங்க பாட்டுக்குப் பேசிட்டே போறாங்க” என்றான் நட்ராஜ்!
அம்மா, நீ நினைக்கிற மாதிரி நம்ம வெண்ணிலா ஒண்ணும் ஜீவாசார் கூட ஓடிப் போய்டல! அவ சென்னையில ஒரு பெரிய ஐடி கம்பெனியில வேலைக்குதான் போயிருந்தா.
அன்னிக்கு அவளை ட்ரைன் ஏத்திவிட்டதே அன்பு மாமாதான்!
அந்த கடங்காரி மாரிதான் அன்னிக்கு அப்படி பொய் சொன்னா இங்க வந்து! அவ அப்படி சொன்னாலும் அதுதான் நிஜம்!
நாங்க எல்லோரும் நிலாக்கிட்ட டெய்லி போன்ல பேசிட்டு தான் இருக்கோம்!” என்றாள் வளர்மதி!
“ஆமா மாமா .. நாங்க அவ வேலை செய்ற ஆபிஸ்க்கு கூட போய் பார்த்துட்டு வந்திருக்கோம்!” என்றான் செல்வம் மதியின் கணவன்.
“என்ன மாப்பிள்ளை நீங்க கூட இதுல கூட்டா?” வசந்தா விரக்தியுடன் கேட்க,
“அம்மா, என்னம்மா, நீயும் இப்படி பேசுற? நீயும் என் கூட போனில் பேசிட்டு தானே இருந்த, அப்பாவை சமாதானம் படுத்துற வரைக்கும் இங்க வரக்கூடாதுன்னு நீ சொன்னதால தானே நான் ஊருக்கே வராம இருந்தேன்!” அழுதபடியே கேட்டாள் வெண்ணிலா!
“என்னது நான் உன் கூட பேசினேனா? என்ன இது புதுக்கதை சொல்ற?” வசந்தா அதிர்ச்சியுடன் கேட்டார், தன்னை முறைக்கும் அருணைப் பார்த்த படியே!
“அது வேற விஷயம்.. நீ பொறு வெண்ணிலா அதுதான் நாங்க பேசிட்டு இருக்கோம்ல” நட்ராஜ் அவளை அடக்கினான்!
“அத்தை, மாமா, நீங்க ரெண்டு பேரும் ஒரு விசயத்த நல்லா புரிஞ்சுக்கோங்க.
நீங்க நினைக்கிற மாதிரியோ, இல்ல இந்த பொறுக்கிப் பய விநாயகம் சொல்ற மாதிரியோ ஒண்ணுமே நடக்கல.
உங்க மானம் கெடற மாதிரி எந்த விசயமும் இங்கே நடக்கவே இல்லை!
வெண்ணிலாவுக்கு சென்னையில போய் படிச்ச படிப்புக்கு ஏத்த நல்ல வேலையில சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கணும், முக்கியமா அம்மாவோட ஆசையான சொந்தக்கார் வாங்கித் தரணும்னு ஒரே ஆசை!
அதுக்கு ஜீவா சார் ஹெல்ப் பண்ணினார்.
அங்க அவங்க வீட்டுல உடம்பு முடியாத அம்மாவுக்கு துணையா இருக்கட்டுமேன்னு தான் நிலா அவங்க வீட்டுலேயே தங்கினது!
அன்பு அண்ணன் போய் நல்லா எல்லாத்தையும் உறுதிப் படுத்திட்டு தான் நிலாவை அங்க விட்டுட்டு வந்துச்சே!
நாங்க எல்லோருமே மாசம் ஒரு தரம் அவளை அங்க போய் பார்த்துட்டு தான் வந்திட்டு இருக்கோம்!
நீங்க இத நம்பி தான் ஆகணும்!” என்று விளக்கமாகவே சொன்னான் நட்ராஜ்!
“ஆஹாங்.. நீ அரசியல்வாதி இல்ல.. பொய் சொல்ல உனக்கு கத்தா தரணும்” என்றார் அருண் கிண்டலாக!
“அது சரி. இதுல என்னை ஏன் சேர்க்கிறீங்க? நான் எப்ப அவ கிட்ட போன்ல பேசினேன்?” வசந்தா அவர் சந்தேகத்தைக் கேட்க,
சுதா தயங்கியபடி சொன்னாள். “அது நான்.. தான்.. உங்க வாய்சில் நிலா கிட்ட பேசினேன்!”
“என்ன?” அதிர்ந்தது வசந்தா மட்டுமல்ல, வெண்ணிலாவும் தான்!
“ஏன் சுதா இப்படி பண்ணுன? நான் அம்மாதான் பேசுதுன்னு தானே இத்தனை நாள் நம்பிட்டு, இங்க வராமேயே இருந்தேன்” வெண்ணிலா ஆற்றாமையுடன் கேட்க,
“ நீ இங்க வந்திடக் கூடாதுன்னு தான் நிலா, நாங்க இப்படி எல்லாம் செஞ்சதே!
வந்தா இந்த வீணாப் போன விநாயகத்துக்கு உன்னைக் கட்டி வச்சுடுவாங்கன்னு தான்!”
“இந்த ஆளுக்கா, அன்பு மாமாவுக்கு தானே என்னைக் கட்டிக் கொடுக்கப் போறதா அப்பா சொல்லுவாங்க!”
“அது அப்ப, நீ சென்னை போறதுக்கு முன்னாடி இருந்த நிலைமை!” என்ற சுதா, வெண்ணிலா சென்னை சென்ற பின், இங்கு விநாயகம் நடத்திய நாடகத்தை, அருணின் தற்கொலை முயற்சியை, சுதாவை அன்பு கல்யாணம் செய்ததை, பின் வெண்ணிலா எப்படி திரும்பி வந்தாலும் வாழ்க்கைத் தர அவன் காத்திருப்பதை, அதனால் தான், அவர்கள் எல்லோரும் சேர்ந்து வெண்ணிலாவை ஊர்ப்பக்கம் வராமல் பார்த்துக் கொண்டதை எல்லாம் சொன்னாள் சுதா!
“நீ ஏன் நிலா, இப்படி எங்ககிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம கிளம்பி வந்த?”
“நான் கார் லோன் அப்ளை பண்ணியிருந்தேன், அது கிடைச்சு காரை எடுத்தவுடன் அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுக்கலாம்னு தான் சொல்லாம கிளம்பி வந்தேன் சர்ப்ரைஸா! ஆனா இங்க என்னென்னமோ நடந்துருக்கு?” வெண்ணிலா அழுகையுடனே பேசினாள்.
“யம்மா போதும் நிறுத்துறீங்களா, ரீல் அந்துப் போச்சு! இந்த பொம்பளங்க மெகா சீரியல் பார்த்தாலும் பார்த்தாங்க, இப்படி கதை சொல்லுதுங்க ஆளாளுக்கு! இங்க கேக்குறவன எல்லாம் பார்த்தா கேணயனா தெரியுதா?”
அல்லக்கை ரொம்பவும் துள்ளியது! அதை ரசித்தப்படியே வினய்!
“நீ யார்டா, முதல்ல, வெளியே போடா இது எங்க குடும்ப விஷயம் நாங்கப் பார்த்துக்குறோம்! போவும் போது உங்க அண்ணனையும் சேர்த்து கூட்டிட்டுப் போடா முதல்ல..” நட்ராஜ் அவனிடம் எகிறினான்.
“அவன் ஏன் போகணும், அவன் தான் என் மாப்பிள்ளை.. இப்பவும் என் மானத்தைக் காப்பத்த அவன் ஒருத்தன் தான் இருக்கான்!
நீங்க ரெண்டு பேரும் வீட்டு மாப்பிள்ளையா இருந்தும் இப்படி கேடு கேட்ட வேலையை செஞ்சு என் மானத்தைக் காத்துல பறக்க விட்டுட்டீங்க” என்றார் தன்மான சிங்கம் அருண்!
“அப்பா.. இந்த பொறம்போக்கு பயலுக்காக உங்க வீட்டு மாப்பிள்ளைகளை கேவலப்படுத்துற வேலை வேண்டாம்” மதி குரல் கொடுக்க,
“யாருடி மாப்பிள்ளைங்க.. வாயைத் திறந்தா ஒரே பொய், பித்தலாட்டம், நாடகம்!
குரலை மாத்திப் பேசுற ஏமாத்து வேலை! உங்க எல்லாத்தையும் விட அவன் ஒண்ணும் கொறைஞ்சவன் இல்ல! அவன தப்பா பேசுன, அப்புறம் நடக்கிறதே வேறே?” அருணும் கத்தினார்.
“அப்பா புரிஞ்சுகோங்க, அவன் நல்லவன் இல்லை, நம்ம நிலாவோட வாழ்க்கை அப்படியே அழிஞ்சு போய்டும்! சந்தர்ப்ப சூழ்நிலைதான் எங்கள தப்பா காட்டுது..” மதி மேலும் சொல்ல,
“நானும் அதே தான் சொல்றேன், ஏதோ சில சந்தர்ப்ப சூழ்நிலை விநாயகத்தைத் தப்பா காட்டி இருக்கும்!
நீங்க என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். விநாயகத்துக்கும் வெண்ணிலாவுக்கு தான் கல்யாணம் நடக்கணும். இதுக்கு ஒத்துக்கிட்டா, அவ வீட்டுக்குள்ள வரலாம், இல்ல எனக்கு அவ பொண்ணே இல்லைன்னு அப்படியே தலை முழுகிடறேன்!” அருண் தீர்மானமாக சொல்ல,
“அப்பா, ப்ளீஸ், என் வயிற்றில் இருக்கும் பிள்ளை மேல சத்திய….” சத்தியம் செய்ய முயன்ற மதியை தடுத்து விட்டது வெண்ணிலாவின் கைகள்!
“நாம் சொல்றது நிஜம்னாலும், இப்படி உன் பிள்ளை மேல் சத்தியம் பண்ணிதான் நிரூபிக்கணும்னு அவசியமில்லை” வெண்ணிலா விரக்தியுடன் சொன்னாள்.
“என்ன.. நான் சொல்றதுக்கு கட்டுப்பட்டு நடக்கிறதா இருந்தா, நீ உள்ளே வரலாம்.. இல்லை அப்படியே வந்தவழியே போய்டு!”
“நிலா, இப்படி இந்த இமோசனல் ப்ளாக் மெயில்க்கு எல்லாம் பயப்பட வேண்டாம்!
நீ மேஜர். அப்படியெல்லாம் அவங்க இஷ்டத்துக்கு பண்ண முடியாது..”
இதுவரை நடந்த அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா அவளைத் தடுத்தான்!
“வாங்க நல்லவரே, இன்னும் நீங்க ஒண்ணுமே பேசலைன்னு பார்த்தேன், அப்ப.. எங்க அண்ணனைக் கட்டிக்காட்டா, வேற எவன் வாழ்க்கைக் கொடுப்பான், இதுக்கப்புறமும்?
ஏன் நீ கட்டிக்கிறியா? சொல்லு, இப்பவே ஏற்பாடு பண்றோம், எங்களுக்கு அருண் மாமா அசிங்கப்படக் கூடாது அவ்வளவு தான்!”
“நீ வேறே ஏண்டா?” என்பது போல பல்லைக் கடித்தான் வினய்!
கொடுக்கிற காசுக்கு மேல் கூவுதல் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது
என்ன செய்ய? எல்லாம் விதி! அவன் வாய் வழியே பேசியது!
error: Content is protected !!