Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Dum Dum En Kalyaanam

டும் டும் என் கல்யாணம் 13

Episode 13

 

தங்களுக்கு சொந்தபந்தம் என பெரிதாய் யாரும் இல்லை என வீரா சொன்னதை வைத்து மனக்கணக்கு போட்டிருந்த சண்முகம், மண்டபத்தில் நிரம்பி வழிந்த ஆட்களை கண்டு தலை சுற்றிப்போனார்.

 



Advertisement

வந்திருந்தவர்களில் பெண்வீட்டார் பாதி கூட இல்லை! வீராவுக்கு சொந்தபந்தம் தான் குறைவே தவிர, தொழில்துறை நண்பர்கள், அக்கம்பக்கம், பழகியவர்கள் என ஏராளமாய் இருந்தனர்.

 

ஐயர் ‘மாப்பிள்ளையை வர சொல்லுங்கோ’ என அழைக்கும்வரை மண்டபத்தில் அங்கும் இங்குமாய் ஓடி ஓடி வேலைகளை கவனித்துக்கொண்டும், வந்தவர்களை வரவேற்றுக்கொண்டும் இருந்தான் வீரா.

Advertisement

 

Advertisement

மகள் தனியாய் பேச போனதுமே, ‘எனக்கில்லை எனக்கில்லை! இந்த மருமகன் எனக்கில்லை’ என தவியாய் தவித்துக்கொண்டிருந்த நீலாவுக்கு, கடவுள் புண்ணியத்தில் திருமணம் முடிவானதே ஆனந்தம் என்றால், வந்திருந்த சொந்தம் எல்லாம் ‘எங்கிருந்து இப்படி ஒரு மாப்பிள்ளையை புடிச்ச?’ என வியந்து கேட்டபோது பேரானந்தமாய் போனது.

 

திருமணம் முடிந்து அங்கேயே தொடர்ச்சியாய் வரவேற்ப்பு நடந்துக்கொண்டிருக்க, மேடையேறினார் பரசுராம்!

Advertisement

 

அவரைக்கண்டதும் கண்கள் பளிச்சிட, “அங்கிள்!” என நான்கடி முன்னே சென்று உரிமையாய் கைப்பற்றி அழைத்து வந்தான் அஷ்டாவிடம்.

 

“ஏங்க, நான் சொல்லிருக்கேன்ல? என் அப்பாவோட பிரன்ட்! இவர் தான்! பரசுராம் அங்கிள்”

 

அவளோ மனதில், ‘எப்போ சொன்னாரு?’ என சிந்தனை ஏட்டை புரட்டினாள். சொல்லும்போது காதில் வாங்கியிருந்தால் தானே நினைவடுக்கில் இருந்திருக்கும்?!

 

“இவர் இல்லன்னா இன்னைக்கு நான் இப்படி இருந்துருக்க முடியாது!” என அவன் சொன்னபோது,

 

“இவன் கடக்குறான்ம்மா! இப்படி தான் எதாவது உளறுவான், அதெல்லாம் நீ காதுல வாங்காத! இவன் உழைப்பும், புத்திசாலித்தனமும் தான் இவனோட இந்த  நிலைக்கு காரணம்!” என அஷ்டாவிடம் சொன்னவர், கொண்டுவந்திருந்த பரிசை இருவருக்குமாய் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

வீராவின் கரத்தை கெட்டியாய் பிடித்தவர், “யாரோ மாதிரி வந்து நிக்குறேன்னு நினைக்காதடா! கல்யாணம் முடிவானதுமே இங்க வந்து உனக்கு எல்லா வேலைலயும் உதவியா இருக்கணும்ன்னு தான் நினைச்சேன்! ஆனா, பொண்ணுக்கு பிரசவ நேரம்! விட்டுட்டு வர முடியல!” என்றார் குற்றவுணர்வுடன்.

 

“ப்ச்! நீங்க வந்ததே போதும் எனக்கு! அக்காவை நல்லா பார்த்துக்கோங்க! நாங்க ஒருநாள் பார்க்க வரோம்” என்றான் வீரா.

 

லேசாக சிரித்தவர், “அங்க வரதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! நீ இங்க ஜாலியா இரு” என தோள்தட்ட, கூச்சத்துடன் சிரித்தான் வீரா.

 

மண்டபத்தை விட்டு வீராவின் வீடு நோக்கி மனமக்களோடு மூன்று காரில் சென்றனர்.  பக்கத்து வீட்டு கௌசி ஆரத்தி கரைத்து தயாராய் வைத்திருக்க, மணமக்களை ஆரத்தி சுற்றிவிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

 

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள் அஷ்டா.

 

பாலும் பழமும் கொடுக்கும் சம்பிரதாயம் முடிந்ததும், விஜயாவின் அறையில் அஷ்டாவை விட, வீரா அனைவருக்கும் ‘செட்டில்’ செய்யும் வேலையை கவனிக்க சென்றான்.

 

வந்தவர்களிடம் விஜயா பேச்சில் அமர்ந்துக்கொள்ள, அறைக்குள் தனித்து இருக்கும் மகளை காண சென்றார் நீலா.

 

கட்டிலின் நுனியில் ஒட்டாதன்மையில் அந்த அறையை சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்த மகளை கண்டதும், கண் கலங்கியது அவருக்கு.

 

‘இனி மகள் தன்னிடம் இருக்க போவதில்லை… இது தான் அவள் வீடு!’ என்ற நிதர்சனம் அவரை பலகீனமாக்கியது.

 

தன்னை கவனிக்காது வெறித்த பார்வையில் இருந்த மகளின் கேசம் வருடிய நீலா, “பசிக்குதாடா?” என்றார் ஆதூரமாய்.

 

‘ம்ஹும்’ என தலையாட்டினாள் அவள்.

 

அவள் அருகே அமர்ந்து அவள் கரத்தை தன் மடியில் வைத்து கெட்டியாய் பிடித்துக்கொண்டார் நீலா.

மெதுவாய் கரத்தை வருடிக்கொடுத்தபடி, “இனி இதான்டா உன் வீடு! அம்மாக்கிட்ட இருக்கமாதிரி இங்க இருக்க முடியாது! கொஞ்சம் பொறுப்பா இருக்கப்பாரு! மாமியார் ரொம்ப பொறுமைசாலியா தெரியுறாங்க! மாப்பிள்ளையும் மொரடா தெரியல! அனுசரிச்சு நடந்துக்கோ! இனி இதான் உன் வாழ்க்கை! மனசுல ஏத்திக்கோ!!!” என்றார்.

 

பொறுமையாய் திரும்பி நீலாவை பார்த்தாள் அஷ்டா.

 

“என்னடா?” நீலா பரிவாய் கேட்க,

 

“நீங்க என்கிட்ட இப்படி திட்டாம, பேசி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா?”

 

மௌனமாய் தலைகுனிந்த நீலா, குரலை செருமிக்கொண்டு, “நீ எங்களுக்கு அந்த சாமி தந்த வரம்! நீ காலேஜ் முடிக்குற வரை உன்னை அதட்டிக்கூட பேசுனதில்லை நான்! எல்லாருமே உனக்கு குடுத்த செல்லம், உன்னை களிமண்ணா ஆக்கிடுச்சேன்னு எனக்கு அப்றமா தான் புரிஞ்சுது! உன்னை எப்படியாவது ஒரு உருவமா கொண்டு வரணும்ன்னு தான் நானும் போராடுனேன்!” என பெருமூச்சு விட்ட நீலா,

 

“நான் தண்டமா, ஒன்னும் தெரியாத மண்ணாந்தையா வந்தேன்னு உங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவாங்களே? அவங்களுக்கு தெரியல! தான் பேத்தியை இப்போ அதே நிலைல தான் இன்னொருத்தர் வீட்டுக்கு தாரைவார்த்துருக்கோம்ன்னு!” என்றார் கண்கள் கலங்க.

 

அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் நீலா. சேலை தலைப்பில் கண்ணை ஒற்றியெடுத்த நீலா, “உன்னை யாரும் பாராட்டி பேசனும்ன்னு நான் எதிர்பார்க்கல! அப்படி எதிர்ப்பார்க்கிறது என்னோட பேராசை! ஆனா, உன்னை குறை சொல்லி ஒரு வார்த்தை என்கிட்ட உன் மாமியாரோ, உன் புருஷனோ சொல்லிடக்கூடாது! அந்தமாதிரி மட்டும் நீ நடந்துக்க! அதுபோதும் எனக்கு” என்றார். 

 

அஷ்டா ஒன்றுமே பேசவில்லை. முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொண்டாள்.

 

திருமணத்திற்கு செய்திருந்த சிகையலங்காரத்தை பொறுமையை அவிழ்த்து விட ஆரம்பித்தார் நீலா.

 

“இப்போ மதியத்துக்கு மேல நாங்க கிளம்பிடுவோம் அஷ்டா! உன் அப்பா வெளில தான் தைரியமா நடமாடிட்டு இருக்காரு! ஆனா, உள்ளுக்குள்ள அவரு உன்னை விட்டுட்டு எப்படி இருக்கப்போறோம்ன்னு புழுங்குறது எனக்கு தான் தெரியும்!”

 

“உன் அப்பத்தா சொல்லவே வேண்டாம்! எங்க உன்கிட்ட தனியா பேசுனா ‘ஓ’ன்னு அழுதுடுவோமோன்னு வெளில உன் மாமியார் கூட உட்காந்து பேசுறமாறி பாவ்லா காட்டிட்டு இருக்காங்க” இதை சொல்கையில் கடைவாயில் சிரிப்பு எட்டிப்பார்த்தது நீலாவுக்கு.

 

முடியை சிக்கெடுத்து பதமாய் சீவிட்டவர், “உன் துணியெல்லாம் பெட்டில இருக்கு! மீதியை நாளைக்கு மறுவீடு வரப்போ குடுத்து விடுறேன்” என்றார்.

 

அவள் தலை சம்மதமாய் அசைந்தது.

 

“நகையெல்லாம் உன் மாமியார்க்கிட்ட குடுத்தாச்சு! வேனுங்குறப்போ எது வேணுமோ கேட்டு வாங்கி போட்டுக்கோ!”

 

அதற்கும் அவளிடம் தலையசைப்பு மட்டுமே!!!

 

“அப்புறம்… நைட்டுக்கு குளிச்சுட்டு லேசான புடவையா கட்டிக்கோ” என சொல்ல, அவள் உடல் கொஞ்சமாய் சிலிர்த்து அடங்கியது.

 

கொஞ்சம் படபடப்பும் வருவது போல இருக்க, இருகைகளையும் கோர்த்து பிடித்துக்கொண்டாள்.

 

“குழந்தையை தள்ளி போடுறேன்னு எதுவும் செஞ்சுடாதீங்க! ரெண்டு பேருக்குமே இது ரெண்டாவது புள்ளயே பெத்துக்குற வயசு! இதுக்குமேல தள்ளிப்போனா உனக்கும் பிரசவம் கஷ்டம்! எனக்கும் உன் ‘பேறு காலம்’ பார்க்கிறது சிரமம்!      வயசாச்சுல எனக்கும்!!!” என்றார்.

 

அஷ்டா வாயே திறக்கவில்லை.

 

“சொல்றதெல்லாம் சொல்லிட்டேன்! புரிஞ்சு நடந்துப்பன்னு நினைக்குறேன்” என நீலா சொல்ல,

 

“அண்ணி! சாப்பிட வாங்க” என விஜயா வந்து இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதன்பின்னே மகளுடன் தனிமை என்பது அமையாமல் போக, பொழுதிறங்கி கலங்கிய கண்களுடன் மகளிடம் இருந்து விடைபெற்று சென்றனர் சண்முகம் குடும்பத்தினர்.

 

இரவு உணவுக்கு பின் மேலுக்கு குளித்து, மென்கரை பட்டில் மிதமான அலங்காரத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்தாள் அஷ்டலட்சுமி.

 

ஆளை விழுங்கும் மிருதுவான பஞ்சு மெத்தையில் ரோஜாவும் மல்லிகையும் சிதறிக்கிடந்தன. அருகே இருந்த மேசையில் காத்துக்கிடந்த ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை எல்லாம் இவளையே குறுகுறுவென பார்க்க, அரை தாம்பூலத்தை அடைத்துக்கொண்டிருந்த செவ்வாழை சீப்பில் நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு கொத்து ஊதுபத்திகள் தன்னை பொசுக்கி, நறுமணத்தை அறை முழுதும் பரப்பிக்கொண்டிருந்தன.

 

அஷ்டாவுக்கு அந்த சூழலில், அந்த அறையில் இருக்கவே அவஸ்தையாக இருந்தது. பார்த்த படங்கள், படித்த கதைகள் எல்லாம் கடகடவென மூளைக்குள் சுற்றி வர, ‘அவர் வந்ததும் என்ன செய்யுறது?’ என உள்ளுக்குள் படபடப்பாய் உணர்ந்தாள் அவள்.

 

கடிகாரத்தின் நொடி முற்கள் ‘கடக், கடக்’கென நகர்வதை தவிர வேறெந்த சப்தமும் இல்லாத அந்த ஏகாந்த அறையின் வாயிற்கதவு சடாரென திறக்கப்பட, எழுந்த திடீர் ஒலியில் தூக்கிவாரிப்போட எழுந்து நின்றாள் அஷ்டா.

 

கதவை தாழிட்டுக்கொண்டே அவளை திரும்பிப்பார்த்தவன், சைகையில் ‘உட்கார்’ என சொல்லிவிட்டு,

“நேர்ல உன்னை பார்த்தேன்! மிதிமிதின்னு மிதிச்சுடுவேன்” என்றான் ஃபோனில்.

 

கையில் இருந்த வாட்சை கழட்டி மேசை ட்ராயரில் வைத்தான்.

 

கப்போர்டை திறந்து டவலை எடுத்தவன், “எல்லாம் என் தங்கச்சி குடுக்குற இடம்டா! பார்க்குறப்போ வச்சு செய்யுறேன் இரு” என சிரிக்க, அவன் போகும் பக்கமெல்லாம் பார்வையை உலவவிட்டுக்கொண்டிருந்தாள் அஷ்டா.

 

அறையோடு இருந்த குளியறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

 

“கண்டிப்பா வரேன்டா! நான் வரதுக்குள்ள தங்கச்சியை அடுத்த பிரசவத்துக்கு அனுப்பி வச்சுடாத!!!”

 

அவன் குரலும் சிரிப்பும் ‘எக்கோ’ அடித்தது.

 

மேலும் சில நிமிடங்களில், “சரிடா! நான் அப்றம் பேசுறேன்!!!” என கதவை திறந்தவன், மறுமுனையில் இருந்தவனின் விவகாரமான பேச்சிற்கு, “ச்சீ! ஃபோனை வையு” என சிரித்துக்கொண்டே அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலை அதன் ஸ்டேண்டில் வைத்தான்.

 

முகம் ஈரமாக இருந்தது. கையிலிருந்த டவல் கொண்டு அழுத்தி துடைத்தான்.

 

முட்டிவரை இருக்கும் பேண்ட்டும், கையில்லாத டீஷர்ட் போன்ற ஒன்றும் அவன் அணிந்திருக்க, அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அஷ்டா.

 

டவலை கொடியில் விரித்துப்போட்டவன் திரும்பிப்பார்க்க, அஷ்டா அவனையே பார்த்துக்கொண்டு நிற்ப்பதை கண்டதும், “என்னங்க நின்னுட்டே இருக்கீங்க?” என்றான்.

 

“நீ…ங்க…. வந்தீ..ங்க….” 

 

“நான் வந்தா என்ன? நீங்க படுத்து தூங்கிருக்கலாம்ல? இன்னைக்கு இருந்த டயர்ட்’க்கு நான் வரதுக்கு முன்னேயே இழுத்து போத்திக்கிட்டு தூங்கிருப்பீங்கன்னு நினைச்சேன்”

 

“இல்ல, தூக்கம் வரலை” அவள் அப்படி சொன்னதும், “எனக்கும் தூக்கம் வர லேட் ஆகும்! அதுவரைக்கும் பேசிட்டு இருப்போமா?” என்றான் எதிர்ப்பார்ப்புடன்.

 

அவள் தலை மெதுவாய் உருண்டது.

 

கட்டிலில் அவளுக்கு சற்று அருகே வந்து அவளை உரசா வண்ணம் அமர்ந்து, அறையை சுற்றி ஒருமுறை பார்த்தான். உள்ளுக்குள் ஒரு சிலுசிலுப்பு ஓட, மயிர்க்கால்கள் தலைதூக்கி சிலிர்த்துக்கொண்டது.

 

அந்த சிலிர்ப்புடன் அவள் புறம் திரும்பி, “என் ரூம் இதுவரைக்கும் இவ்ளோ அழகா இருந்ததே இல்லங்க!” என்றான்.

 

“இங்க எப்பவும் நான் மட்டும் தான் இருப்பேன்! இப்போ முதல் முறையா ஒரு பொண்ணுக்கூட… அதுவும் என் மனைவியா!!! ஸ்ஸ்ஸ்!!! செம்ம ஃபீல்’ங்க!!!”

 

சட்டென அவளை ஊன்றிப்பார்த்தவன், “உங்களுக்கு ஒருமாதிரி அசௌகர்யமா இருக்கு தானே? உங்க ரூம், உங்க வீட்டை விட்டுட்டு வந்து புதுசா ஒரு இடத்துல இருக்கிறது?” என்று வினவ, வேகமாய் தலையாட்டினாள் அஷ்டா.

 

“ம்ம்ம்… எனக்கு புரிஞ்சுக்க முடியுதுங்க! கொஞ்ச நாளுக்கு கஷ்டமா இருக்கும்!! அப்பறம் பழக பழக செட் ஆகிடும்!” என்றவன்,

 

“எதாவது உங்களுக்கு தேவைன்னா, இல்ல, இங்க எதாவது சரியில்லன்னா தயங்காம என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்குறேன்!!! சரியா?” என்றான்.

 

‘சரி’ என்பது போல தலையாட்டினாள்.

 

அவள் தலையாட்டும் போது காதின் ஜிமிக்கிகளும் சேர்ந்து குலுங்க, அதை ரசித்துப்பார்த்தவன், ஜிமிக்கியின் ஒரு முத்து அவள் காதோர முடியுடன் சிக்கி நிற்ப்பதைக்கண்டு, அதை எடுத்து விட கை நீட்டினான்.

 

அவன் கரம் தன்னை நோக்கி வருவது தெரிந்ததும், அவள் உடலில் ஒரு துள்ளல் எழ, “என்ன? எ…ன்ன?” என்றாள் பதட்டமாய்.

 

“இல்ல… முடி!!” என அவன் தொட்டுக்காட்ட, லேசாக அவன் விரல் உரசியதற்க்கே கூசி சிலிர்க்கும் தன்னை வித்தியாசமாய் உணர்ந்தாள் அவள்.

 

“நா… நானே…” என்றவள், அவன் கரத்தின் உதவியை மறுத்து, ஜிமிக்கியை தானே முடியில் இருந்து விடுவித்துக்கொண்டாள்.

 

வீராவுக்கு அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. அவளது பக்கவாட்டு தோற்றத்தை மெல்ல மெல்ல ‘ஸ்கேன்’ செய்துக்கொண்டிருந்தான்.

 

அவன் பார்க்கிறான்! என உணர்ந்ததுமே அவளுக்கு படபடவென இதயம் தாறுமாறாய் அடித்துக்கொள்ள, நடுங்கும் கைகளை ஒன்றோடொன்று கோர்த்துப்பிடித்து தன் நடுக்கத்தை மறைக்கலானாள்.

 

‘எதுக்கு இப்படி பார்த்து தொலைக்குறாரு’ன்னு தெரியலையே!’

 

அவள் நடுக்கத்தை அதிகரிக்கும்படி, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” என்று வேறு அவன் சொல்ல, ‘அடுத்து என்ன நடக்குமோ?!’ என பயத்தில் வியர்த்துக்கொட்டியது அவளுக்கு.

 

தான் சொன்னதற்கு எந்த எதிர்வினையும் இல்லை என்றதும், “ஒரு தேங்க்ஸ் சொல்லலாமே!? கஷ்டப்பட்டு ‘பொய்’ எல்லாம் சொல்லிருக்கேன்!” என்றான் குறும்பாய்.

 

வெடுக்கென அவனை நோக்கி திரும்பியவள், ‘உர்ர்’ரென முறைக்க, “ப்பாஆஆ…!!!! செம்ம்ம்…ம அழகுங்க!” என்றான் வேண்டுமென்றே!!!

 

அதற்கும் முறைத்தாலே தவிர பதில் சொன்னாள் இல்லை.

 

கோர்த்த கைகளை மெதுவாக தேய்த்துக்கொண்டாள்.

 

அதை கண்டவன், “மருதாணி வச்சுருக்கீங்க தானே?” என்றான்.

 

திடுமென அவன் கேட்க, மெலிதாய், “ம்ம்ம்” கொட்டினாள்.

 

“என்கிட்ட ஏன் காட்டவே இல்ல?” அவன் இப்படி கேட்டதும், ‘இதுல என்ன இருக்கு?’ என்ற எண்ணத்தில்,

 

“இதெல்லாமா காட்டுவாங்க?” என்றாள் முனகலாய்.

 

அவள் முனகலையும் கிரகித்துக்கொண்டவன், சிரிப்பை அடக்கிய குரலில், “அப்போ வேற எதைங்க காட்டுவீங்க?” என அப்பாவி போல கேட்க, அவ்வளவு தான்! அவனை முறைக்கக்கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்!

 

உள்ளுக்குள் இதயம் மத்தளம் கொட்டுவது அவளுக்கு மட்டுமே தெரியும்!

      

தான் அப்படி சொன்னதற்கு, குறைந்தபட்சம் ஒரு முறைப்போ, அதிகபட்சம் அவர்களின் மானசீக ஒப்பந்தத்தை பற்றிய நினையுறுத்தலோ வரும் என எதிர்ப்பார்த்திருந்தவன், ஏமாந்து தான் போனான்.

 

“என்னங்க நீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி அப்…படி பேசுனீங்க! இப்போ வாயே திறக்க மாட்டேங்குறீங்களே?”

 

தயங்கி தயங்கி அவன் முகம் பார்த்தவள், “நான் தூங்கனும்!” என்றாள் முனகலாய்.

 

உடனே நல்லவனாய், “அட, அதை சொல்றதுக்கென்ன? நீங்க தூக்கம் வரலன்னு சொல்லவும் நான் பேச ஆரம்பிச்சுட்டேன்” என நெற்றியில் தட்டிக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கியவன், தான் அமர்ந்திருந்த இடத்தில் கலைந்திருந்த விரிப்பை நீவி சரி செய்துவிட்டு,

 

“நீங்க இங்க படுத்துக்கோங்க!  ஏதாவது வேணுன்னா கூப்பிடுங்க” என்று ‘குட்நைட்’ சொல்லிவிட்டு அவளுக்கு மறுப்பக்கம் சென்று படுத்தான்.

 

அவள் திடுக்கென்று திரும்பி அவனைப்பார்க்க, “என்னங்க?” என்றான் வீரா.

 

“நீ…நீங்க… இங்க?” திக்கித்திக்கி கேட்டாள்.

 

“இங்க தான் படுப்பேனான்னு கேட்குறீங்களா?”

 

“ம்ம்ம்”

 

“எப்பவும் நடு கட்டில்ல தான் படுப்பேன்! உங்களுக்காக தான் இப்போ ஓரமா இருக்கேன்! ஓகேன்னா சொல்லுங்க… நடுல…” என பேசிக்கொண்டு நடுகட்டிலுக்கு அவன் நகரப்பார்க்க, “வேணாம்… வேணாம்… வேணாம்” என அவசரமாய் அலறினாள் அஷ்டா.

 

“வேண்டாம்மா…? சரி போங்க” என அலுத்துக்கொண்டவன் போல மறுப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.

 

மூச்சை இழுத்துவிட்டவள் கண்ணைமூடி தூங்க முயன்றாள்.

மனமோ அவளை தூங்க விடாமல், ‘என்னடி இவரு பாயை கீழ போட்டு படுத்துப்பாருன்னு நினைச்சா, ‘ஓகே’வான்னு கூட கேட்காம ஒரே கட்டில்ல படுத்துக்கிட்டாரு?’ கேள்வி கேட்க ஆரம்பித்தது.

 

எத்தனை படங்களில் பார்த்திருப்பாள்? எத்தனை கதைகளில் படித்திருப்பாள்?

 

கண்ணியமான கணவனாய் மனைவிக்கு கட்டிலை கொடுத்துவிட்டு தரையில் படுக்கும் ஹீரோக்களை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு, இப்படி நாகரீகம் இல்லாமல் அவன் கட்டிலில் படுத்துக்கொண்டது அதீத ஏமாற்றத்தை உண்டுப்பண்ணியது.

 

ஏனென்றே தெரியாமல் பதட்டம் வேறு வந்து தொலைத்தது.

 

‘கிட்ட வருவாரோ?’

 

‘ச்ச…ச்ச! வரமாட்டாரு!’ இருமனதாய் வாதாடிக்கொண்டிருந்தாள்.

 

அப்போது கட்டில் லேசாக, மிக லேசாக குலுங்கியதை போல இருந்தது.

 

‘ஐயையோ, அவர் தான் கிட்ட வராரு போல!!!’ 

‘படக்’ ‘படக்’கென அடித்துக்கொண்ட இதயம் அதிர்ச்சியில் கண்ணைத்தாண்டி வெளியே தெறித்து விழுந்து விடாமல் இருக்க, இறுக்கமாய் மூடிக்கொண்டாள் கண்களை.

 

“ஷ்….ஷ்….”

 

கண்களை திறக்காமலே, ‘என்ன சத்தம் இது?’ என யோசிக்க, மீண்டும்… “ஷ்…ஷ்….” என்ற ஓசை.

 

‘பாம்பு கீம்பு வந்துடுச்சோ?’ கிறுக்குத்தனமாக அவள் யோசிக்கையில், “ஏங்க, கொஞ்சம் திரும்புங்க… நான் தான் கூப்பிட்டேன்” என காதருகே வீராவின் குரல் கேட்டதும், உடல் சிலிர்க்க, கரண்ட் ஷாக் அடித்ததை போல வெடுக்கென திரும்பினாள் அஷ்டா.

 

திரும்பிய வேகத்தில் அவள் முகம், அவன் முகத்திருகே வந்திருக்க… அவ்வளவு தான்! மூச்சு வெளி வராது தேங்கிப்போனது அவளுக்கு.

 

அவள் நிலையை கண்டுக்கொள்ளாது, “உங்களுக்கு தூக்கம் வரலை தானே? எனக்கு தெரியும்!!!” என கண்சிமிட்டினான் அவன்.

 

குப்பென வியர்க்க, “நீங… நீ… ஏ… இங்…” திக்கி திக்கி திக்கி சொல்ல வந்தது தொண்டைகுழியிலேயே சிக்கிக்கொண்டது அவளுக்கு. 

 

அவள் திணறலை கண்டு சிரிப்பு எழ, “என்னங்க நீங்க? சிக்னல் கிடைக்காத எஃப்.எம் ரேடியோ மாறி! கரகர கொர கொர’ன்னு பேசுறீங்க” என்றான்.

 

அருகே அவன் முகம் இருப்பதே அவஸ்தை என்றால், இதில் ஏதேதோ பேசி சிரிக்க வேறு செய்கிறானே?! அவன் சிரிக்கும்போது சிறு புள்ளியாய் வளையும் அவன் கன்னக்குழி இவள் கண்ணில் சிக்க,  அதை பார்த்துக்கொண்டே அவள் படுத்திருக்க,

 

‘உப்ப்’ என வேகமாய் ஊதினான் அவன்.

 

கவனம் கலைந்து அவள் வெள்ளை முழி தெரிய விழிக்க, “சொல்லுங்க! தூக்கம் வரலை தானே!” என்றான். ஹஸ்கி வாய்ஸ் வேறு!!!

 

“ம்ம்ம்… ம்ஹும்…” என மாற்றி மாற்றி தலையாட்டிக்கொண்டிருந்தாள்.

 

“உங்களுக்கு எதையாவது கட்டிபிடிச்சுக்கிட்டா தானே தூக்கம் வரும்?” என்றான்.

 

“ஹான்!?” என விழித்தவள், “நான் எப்போ அப்படி சொன்னேன்?” என கேட்க, “இல்லையா அப்போ?” என்றான் ஏமாற்றமாய்.

 

“இல்லையே!!!” என அவள் சொன்னதும், “ப்ச்!” என உச்சுக்கொட்டி மல்லாந்து படுத்தவன், “அட போங்க” என்றான் சலிப்பாய்.

 

அவன் முகம் தன்னை விட்டு நகர்ந்ததும், இயல்பாய் மூச்சு வெளிவந்தாலும், ‘என்ன உடனே போய்ட்டான்?’ என்று சுணக்கமும் சேர்ந்ததே வந்தது.

 

மேல ஓடும் ஃபேனை பார்த்துக்கொண்டு படுத்திருந்தவனை, விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் இவளும்.

 

மௌனமாய் படுத்திருந்தவன், திடுமென அவள் புறம் உருண்டு திரும்பி, “உங்களுக்கு தூக்கத்துல உருண்டு பொறண்டு பக்கத்துல இருக்கவங்க மேல கை, காலை போடுற பழக்கம் இருக்கு தானே? ஐ க்நொவ்! எனக்கு தெரியும்!!! நீங்க இல்லன்னு சும்மா பொய் சொல்லாதீங்க!” என்றான் உறுதியான உற்சாக உல்லாசத்தோடு!!!

 

பட்… சோ சேட்!!!

 

‘எனக்கு அந்த பழக்கம் இல்லவே இல்லையே!!!’ என்று சொல்லி அவனது கன்னி மனதை, கண்ணி வெடி வைத்து தகர்த்தாள் அஷ்டா.

 

‘புஸ்’சென்று போன்ற மனதை தேற்றிக்கொள்ள வழியின்றி, தன் ஏமாற்றத்தை மறைத்தபடி முன்பு படுத்திருந்த கட்டிலின் ஓரத்திற்கே மனமுடைந்து சென்றான் அந்த புது மாப்பிள்ளை.

 

அவன் அப்படி நகர்ந்து சென்று அவளுக்கு முதுகுக்காட்டி படுத்ததும், அவனை நினைத்து சிரிப்பு சிரிப்பாய் வந்தது அஷ்டாவுக்கு.

 

‘ஆறு மாசத்துக்கு ஒன்னும் கிடையாது’ என அஷ்டா சொன்னபோது, பெருமையாய், ‘சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைசாமி’ என வாக்கு கொடுத்துவிட்டு முதல் இரவு அன்றே அவளைக்கண்டு அலைபாயும் மனதை அடக்க முடியாது அவதிப்பட்டுக்கொண்டிருந்தான் வீரா.

 

அப்படியே நிமிடங்கள் ஓட, நொடியில் அவள்புறம் சடாரென திரும்பிய வீரா, “ஏங்க, உங்களுக்கு பல்லி, கரப்பான்பூச்சி’ன்னா பயம் தானே!?” என்றான் ‘ஆமாம்’ என சொல்!’ என்ற ஆர்வத்தோடு!!!

 

‘சலக்கு சலக்கு சரிக சேலை… சலக் சலக்’ என டூயட் ஆட ஆசைப்பட்டிருப்பான் போலும்!!!

 

சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது அவளுக்கு. ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு முதுகுக்காட்டி அவள் படுத்துக்கொள்ள,

 

‘என் ஃபியூஸும் போச்சே!!! உன்னை எண்ணித்தானே!!!!’ என கடுப்புடன் சோக கீதம் வாசித்து வாசித்து சோர்ந்துப்போய் இறுதியில் உறங்கியும் போனான் வீரா.

 

-to be continued…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!