Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 05

தமிழிசை 05

“சாம்பார்ல சுத்தமா காரமே இல்ல சித்ரா. கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் நீ இன்னுமே ஒழுங்கா சமைக்கக் கத்துக்கலயா?”



Advertisement

நிர்மலா சமையல்கட்டை நோக்கிக் கத்தினாள்.

வெளியே ஹாலில் நிர்மலா, அவள் கணவன் ராஜேஷ், தருண், மித்ரா, வரதன், வரதன் மற்றும் சித்ராவின் மகன்கள் சஞ்சய், மிதுன் எனப் பெரிய கூட்டமே தரையில் தட்டுடன் அமர்ந்து உண்டு கொண்டிருக்க, உள்ளே சமையல் கட்டில் வீட்டின் மருமகள் பொறுப்பை சுமக்கிறேன் என்ற பாசாங்கில் முகத்தில் சிரிப்பும் அகத்தில் வெறுப்புமாய் எண் கணக்கின்றி தோசைகளை சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா.

Advertisement

Advertisement

அவளின் இந்தப் பணிவிடையிலும் ஒரு சாணக்கியத்தனம் இருக்கத்தான் செய்கிறது. வரதனைத் திருமணம் செய்யும் போது இருந்த சித்ராவின் சாணக்கியத்தனம் ஒருவிதமானது என்றால் அதன் பின்னான சரியாகச் சொல்லப் போனால் பார்த்தி தலையெடுத்த பின், அவள் பயன்படுத்தும் ராஜ உத்திகள் வேறு விதமானது.

அதற்கு சரியான பலனும் இருக்கத்தான் செய்தது. உதாரணமாக நேற்றைய பர்வதத்தின் பேச்சையே சொல்லலாம்.

Advertisement

ஆரம்பத்தில் தன் குடும்பம் நிலைகுலைந்து போனதுக்கு காரணமான இந்த சித்ரா, இப்போது பர்வதத்தின் பிடித்தமான மருமகள் என்ற பட்டத்தை வாங்கி விட்டாளே!

பட்டத்தை ஈஸியாக வாங்கிவிட்டாள்… ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதுதான் அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.

கெட்டவனாக வாழ்வதைவிட, நல்லவனாக நடிப்பது சிரமம்தானே?

அதன்படி நிர்மலாவின் பேச்சில் உள்ளே எரிமலை பொங்கி வெடித்தாலும் அதைக் காட்டமுடியாது மனதுக்குள்ளே பல்லைக் கடித்தவள், வெளியே…

“அடுத்த தடவை சரியா எல்லாம் சேர்த்துக்கிறேன் நிர்மலா.” என்று சாந்தமாகப் பதிலளித்தாள்.

அவள் அருகே நின்று குழந்தைக்கு இட்லி அவித்துக் கொண்டிருந்த நிரஞ்சனா,

“அக்கா, நீ கொஞ்சம் வாய வச்சுட்டு சாப்பிடுறியா? இங்க தோசை வேகுற சத்தம், கிரைண்டர் சத்தமா கேட்குது.  பக்கத்துல நிக்க முடியல.” என்று சீரியஸாக அண்ணியாரைக் கலாய்க்க, சித்ரா திரும்பி அவளை முறைத்தாள்.

நிரஞ்சனா கண்டு கொள்ளவே இல்லை.

‘புள்ளைப்பூச்சியா இருந்ததுக்கெல்லாம் புதுசா கொடுக்கு முளைச்சா இப்பிடித்தான் எகத்தாளம் பேசும்!’ சித்ரா மனதுக்குள் முனகிக்கொண்டது, நிரஞ்சனாவுக்குக் கேட்டு விட்டது போல.

“புள்ளைப்பூச்சியா இருக்கும் போது, சுத்தி இருந்தவங்க எல்லாம் தலைய விரிச்சுப் போட்டுத் தாண்டவம் ஆடினா, புள்ளைப் பூச்சிக்குனு காலம் வரும் போது, அது கொடுக்க வச்சுக் கொட்டத்தான் பார்க்கும்!” என்றாள், திருமணம் ஆகி வந்த புதிதில் சித்ராவின் நடத்தைகளை இடித்துக் காட்டும்படி.

அத்தோடு சித்ரா அமைதியாகி விட்டாள். அவளோடு வாதாடி தன் வீரியத்தைக் காட்டிக் காரியத்தை சொதப்புவான் ஏன் என்று!

உணவு நேரம் முடியவும் கூடத்தில் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதுவரை பார்த்தி எழுந்திருக்கவில்லை. பயணக் களைப்பு ஒருபுறமும் நள்ளிரவு தாண்டி தமிழோடு தொலைபேசியில் பேசிவிட்டு உறங்கியது எல்லாம் சேர்ந்து, ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் அவன்.

அவனை யாரும் தொந்தரவு செய்யவுமில்லை. எழும் போது எழுந்து வரட்டும் என்று விட்டிருந்தனர்.

பர்வதமும் மகன் வந்திருப்பதால் அவன் பெயரில் பெருமாள் கோவிலில் அபிஷேகத்துக்குக் கொடுக்க என்று சென்று விட்டிருந்தார்.

தெருவில் கால் வைக்கும் போதே இவர்கள் வீட்டின் பெரும் ஆரவாரம் கேட்டதில் தயங்கித் தயங்கி அவர்கள் வீட்டு வாசலில் நின்று உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமிழ்.

தகப்பனுக்கு அஞ்சி ஒன்றிரண்டு நாட்கள் இந்தத் தெருவுக்கே வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்தவளை இவ்வளவு தூரம் இழுத்து வந்துவிட்டன, நள்ளிரவில் அலைபேசி வழி மனதை உருக்கிய அவளவனின் ஏக்கமான வார்த்தைகள்.

அவனுக்காக வந்து விட்டாலும் வீட்டினர் அத்தனை பேரும் இருக்கும்போது உள்ளே செல்லத் தயக்கமாக இருந்தது.

அந்த தயக்கத்திற்கான முக்கிய இரண்டு காரணிகள் சித்ராவும் நிர்மலாவும் அன்றி வேறு யாரும் அல்ல.

மற்றவர்கள் அவளைக் கவனிக்கும் முன்னர் நிரஞ்சனா பார்த்துவிட்டவள், அவள் முகத்தில் இருந்த தயக்கத்தைக் கண்டதும் தோழியை முறைத்தாள்.

தமிழ் அவள் தன்னைக் கண்டதும் உள்ளே அழைப்பாளென்று பார்த்திருக்க, நிரஞ்சனாவோ ‘உனக்கு உரிமைப்பட்ட இடத்துக்கு வர, நான் அழைப்பு விடுப்பதா?’ என்ற பிடிவாதத்தில் வாயை இறுக மூடிக் கொண்டவள்,

“அண்ணா! உன் தாய்மொழி நம்ம வீட்டுத் தலைவாசல் வரைக்கும் வந்திருக்கு.” என்று தமையனுக்கு மாத்திரம் முரசறைந்தாள்.

அப்போதுதான் சூரிய வெப்பம் சுட்டது போல் லேசாய் கண்ணைப் பிரிக்க முயன்று கொண்டிருந்த பார்த்திபனின் புலன்கள் எல்லாம் மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் அவனை உசுப்பி விட பட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.

‘தமிழ், நிஜமாக வந்திருக்கிறாளா?’ என்று சந்தேகம் கொள்ளக் கூடத் தேவையின்றி சொன்னது அவன் தங்கையாக இருக்க, உடனே அவளைக் கண்ணில் நிரப்பி விடும் ஆசையில் எழுந்து கொண்டான்.

கதவை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க, மீண்டும் நிரஞ்சனாவின் குரல்..!

“ஆனா அண்ணா… அவங்க வந்துட்டாங்கனு நீ உடனே எல்லாம் எந்திரிச்சு வந்துடாத! அவங்களை மாதிரி பொறுமையா ஒருநாள்… இல்ல, ரெண்டு மூணு நாள் கழிச்சே வெளிய வா. இஷ்டம் இருந்தா இருந்து பார்த்திட்டுப் போகட்டும். இல்லனா அப்படியே வாசலோட கிளம்பட்டும்.”

தங்கை, தமிழை வம்புக்கிழுக்கிறாள் என்று புரிய சிரித்துக்கொண்ட பார்த்தி, அதன் பின்னேதான் தூக்கத்தில் இருந்து எழுந்த கோலத்திலேயே வெளியே செல்லப் போனோம் என்பது உறைக்க, தலையில் தட்டிக் கொண்டே அறையோடு இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அந்த வீட்டில் அவன் அறை ஒன்றில்தான் குளியலறை இருக்கின்றது.

அந்த அறையை அவன் அப்படித் திட்டமிட்டு அமைத்தது நிரஞ்சனாவுக்காக. சித்ரா வந்த புதிதில் செய்த அழிச்சாட்டியங்களின் விளைவால் தங்கைக்கு சௌகரியமான அறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மற்ற ரூம்களை விட இதைக் கொஞ்சம் விஸ்தாரமாக அமைக்கும் படி, அவன் பார்த்துப் பார்த்து செய்ய இறுதியில் இந்த வீட்டில் ஒரு மாதம் கூட தங்க முடியாத மாதிரி நிரஞ்சனா திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்.

அவள் சென்றதும் சித்ரா அண்ட் கம்பெனி நைசாக இங்கே ஷிஃப்ட் ஆகப் பார்க்க, நிரஞ்சனா விடவில்லை.

‘இது எனக்கு அண்ணன் கட்டிக் குடுத்தது. நான் இங்க இல்லைனாலும் இந்த ரூம் என்னோடது.’ என்று பூட்டி அறைக்கான இரண்டு சாவியையும் தன்னோடே எடுத்துக் கொண்டு போய் விட்டாள்.

அவள் எண்ணமெல்லாம் ‘என் அண்ணன் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டில் சித்ரா சொகுசு அனுபவிப்பதா? கூடவே கூடாது. இது எல்லாம் இனி தமிழுக்கு சொந்தமானது. அவள் வந்துதான் அனுபவிக்க வேண்டும்.’ என்பதாகத்தான் இருந்தது.

திருமணத்தின் பின் அவள் கல்லூரி செல்லும் வசதிக்காக இதே ஊரில் வசிக்க அவள் கணவனும் சம்மதித்து விட அவ்வப்போது வந்து அறையைத் துப்புரவு செய்து கொள்பவளுக்கு சித்ராவை சமாளிப்பதும் எளிதாகவே பழக்கப்பட்டது.

“என்ன நிரஞ்சனா நீ? வந்த பொண்ண வாசல்ல வச்சு வம்பு பண்ணிக்கிட்டு இருக்க. நீ உள்ள வாம்மா.” என்று தமிழை வரவேற்றான் நிர்மலாவின் கணவன்.

“அய்யோ அண்ணா! அவங்க வீட்ல உக்காந்துகிட்டு அவங்களையே உள்ள வாம்மானு கூப்பிடுறீங்க. முறைக்கு வீட்டுக்காரம்மாதான் வந்ததும்  நம்மளை வாங்கனு கூப்பிட்டிருக்கணும். அதான் என் பொண்டாட்டி கோச்சுக்கிட்டா.” தருண் கிண்டல் பேச, ராஜேஷும் தம்பிக்கு ஒத்து ஊதினான்.

“ஓஹ்… அதான் விஷயமா? இப்போ நாம என்ன பண்ணனும்? வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளுக்கு மரியாதை இல்லனு கோச்சுட்டுப் போகணுமா? ஆனா கறி விருந்துனு சொல்லியிருக்காங்களே. நம்ம வேணா சாப்பிட்டு சாயங்காலமா தமிழுக்கிட்ட கோச்சுட்டுப் போவோமா?” என்றான் சீரியஸாக.

தன்னைக் கண்டதும் வெறுப்பாய் சுருங்கிய சித்ரா மற்றும் நிர்மலாவின் முகத்தைப் பார்த்து சங்கடமாய் உணர்ந்த தமிழ், இவர்கள் மூவரின் பேச்சிலும் மனம் லேசாக,

“அண்ணா! போதும். அவளை சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும்தான் ஓவரா கிண்டல் பண்ணுறீங்க.” என்றாள் சிறிதாய் சிரித்து.

“பின்ன என்ன பண்ணுவாங்க? வந்துட்டு வாசல்ல நின்னு யோசிச்சுட்டு நின்னா, நாங்க என்னனு யோசிக்கிறது? இந்தப் பொண்ணுக்கு நாங்க இங்க இருக்கிறது பிடிக்கலையோனு தான தோண செய்யும், இல்லண்ணா?”

“ஆமாமா. நான் எல்லாம் சாப்பிட்டு கோவிச்சுட்டு ஊருக்குப் போகணும்னு முடிவே எடுத்துட்டேன்.”

“அண்ணா! நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா சிக்குறவங்க நிலைமை என்னன்னு எனக்கு நல்லா தெரியும். பிளீஸ் என்னை விட்டுடுங்க.” என்றவள் கையெடுத்துக் கும்பிடாத குறையாக கேட்டுக்கொள்ளவும் தான், பிழைத்துப் போ என்பது போல் அண்ணன் தம்பி இருவரும் அமைதியாகினர்.

“என்ன த்தான், அவ கேட்டா சட்டுனு விட்டுடுறதா? அவ எங்க அண்ணனுக்கு எவ்ளோ பெரிய அநியாயம் பண்ணியிருக்கா? அதெல்லாம் என்னனு கேட்க மாட்டீங்களா?”

“அட ஏன் நிரஞ்சனா? என் தம்பி தருணுக்கு நாலு வருஷம் முன்ன நடந்த பெரிய அநியாயத்தையே தட்டிக் கேட்க வழியில்லாம, கை கட்டி நின்னவன் மா நான். அப்படியிருக்க உன் அண்ணனுக்கு எங்க இருந்து நியாயம் கேட்க?” என்றான் இயலாமையோடு.

தமையன் எதைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்த தருண், நமட்டு சிரிப்போடு கையில் இருந்த குழந்தையிடம் பேசுவது போல் குனிந்துகொள்ள நிரஞ்சனாவுக்கும் அவன் கேலி புரிய,

“அத்த்தான்ன்ன்!” என்றாள் பல்லைக் கடித்து.

“இதேதான்… மா இந்த அத்தான்ற பதவி தான்… அப்போ என் கையைக் கட்டிப் போட்டிருந்திச்சு. இல்லனா செவ்வாய் தோஷத்தைக் காரணம் காட்டி என் தம்பி வாழ்க்கைல சனி தோஷத்தை கொண்டு வர விட்டிருப்பேனா?” என்றார் சிவாஜி மாடுலேஷனில்.

தமிழுக்கு அப்போதே அவர் பேச்சின் உள்ளர்த்தம் புரிய தன்னை மீறி சிரித்து விட்டாள்.

சிரிப்பவளை முறைத்த நிரஞ்சனா அடுத்து கணவனைத் திரும்பிப் பாசமாகப் பார்க்க, தருண் தன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டவன்,

“அண்ணா! அப்பிடிலாம் சொல்லாத ண்ணா. என் பொண்டாட்டி சொக்கத் தங்கம். அவ இல்லனா நான் ஒன்னுமே இல்ல.” என்றவன் மனைவியைப் பார்த்தான், சரியாகப் பேசினேனா என்பது போல்.

“நீங்க கஷ்டப்பட்டு உங்க சந்தோஷத்தைக் கட்டுப்படுத்திட்டு தம் கட்டிப் பேசிறீங்கனு தெரியுது. பரவால்ல நல்லா பல்லைக்காட்டி சிரிங்க.” என்று முறைத்து விட்டு வீட்டின் பின்பக்கம் போனாள்.

“அதான் அவளே சொல்லிட்டாளே, நல்லா வாய் விட்டு சிரிச்சு, உன் சந்தோஷத்தைக் கொண்டாடு. உங்க அண்ணன் இந்த வகையிலாவது உனக்கு நல்லது செய்யுறேன்.”

“உனக்கு என்ன, நீ சிரிச்சு முடிச்சிட்டு ஜாலியா பஸ் பிடிச்சு ஊருக்கு போய்டுவ. ஆனா நான் அப்பிடியா? அவ கூடதான் போயாகணும். அசந்த நேரமா பார்த்து ரசத்துல பாதரசத்தைக் கலந்து குடுத்துடுவா!”

“அப்பிடி அவ எதுவும் உன்கிட்ட ராங்கா நடந்துக்கிட்டானா, உடனே எனக்கு ஃபோன் போடு. அடுத்து நீ கூப்பிடாத மாதிரி என் ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்.”

இப்படியே தொடர்ந்த அவர்கள் அழிச்சாட்டியத்தில் சிரிப்பில் விரிந்த தமிழின் இதழ்கள் மீளவே இல்லை.

அந்த விடிகாலைத் தாமரை முகத்தினைக் கண்கொட்டாமல் பார்த்தவாறே வந்து கொண்டிருந்த பார்த்தியையும் அவள் கண்டிருக்கவில்லை.

“அடடே! வா மாப்பிள்ளை. உனக்காகதான் அத்தான் அஞ்சு மணில இருந்து காத்திருக்கேன்னு தெரிஞ்சு உடனே வந்திட்ட போல? என்ன இருந்தாலும் என் மாப்பிள்ளைக்கு என் மேல தனி பாசம்தான்…” ராஜேஷ் போலி நெகிழ்ச்சி காட்டவும்தான்,

அவனின் வரவை உணர்ந்து கொண்டவள் திடீரென்று படபடத்த இதயத்தின் ஓசையைப் பின்னணி இசையாக்கித் தன்னவனைத் திரும்பிப் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!