Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 5 2

உணவகத்தில் வந்து நின்றவன் கண்கள் நாலாபுறமும் தேட, அவர்களை அங்கும் காணவில்லை. யோசனையோடு வரவேற்ப்பறையை அடைந்தவன், அறை எண்ணை சொல்லி இருவரையும் விசாரிக்க,

“இப்போதான் அரைமணி நேரம் முன்ன ரூம் காலி செஞ்சுட்டு போனாங்க” என்ற காதில் விழுந்த செய்தி அவனை அதிகமாய் அதிர செய்ய, திகைத்து நின்றவன் கையில் ஒரு கார்ட்டை கொடுத்தாள் வரவேற்ப்பாளினி.



Advertisement

“இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க சார்”

அதை திறந்து பார்க்கக்கூட பிடிக்கவில்லை அவனுக்கு. இப்படி கூட ஏமாற்று மனிதர்கள் இருக்கிறார்களா என்ற கசப்பில் இருந்தான்.

Advertisement

Advertisement

ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் எதாவது எமர்ஜென்சியாக இருந்து உடனே கிளம்பியிருக்கலாம் என ஒரு எண்ணம் வர, அது உண்மையாக இருக்கட்டும் என்ற வேண்டுதலில் அக்கார்டை திறந்தவன் எண்ணத்தில் மண்ணை வாரி கொட்டும்படி அமைந்தது,

‘பை பை தேல்பத்ரிசிங் @ ஆட்டோக்காரத்தம்பி’ என்ற வார்த்தைகள்.

Advertisement

மனதில் எழுந்த கோபம் அனைத்தையும் அக்கார்டின் மீது காட்டி, அதை கசக்கி வீசினான் ஜேகோப்.

இந்திய மண்ணில் நிற்பதே ஒருவித ஒவ்வாமை உணர்வை தோற்றுவித்திருந்தது அவனுக்கு. கண்ணில் படுபவரை எல்லாம் ஏமாற்றுக்காரனாய் உருவகம் செய்துக்கொள்ள வைத்தது.

தாய்நாட்டின் மீதான அவன் முதல் அறிமுகமே அனத்தமாய் முடிய, அதை உண்டாக்கிய அங்கனையின் மீது ஆக்கிரகம் உண்டானது அவனுக்கு.

அவனை இந்த அளவுக்கு கோபம் கொள்ள வைத்த அங்கனைகளோ தங்களது கல்லூரி வாசலில் நின்று, “அப்பா, எங்களுக்கு கிளாஸ் முடிஞ்சுது! வெளில நிக்குறோம்! வந்து கூட்டிட்டு போங்க” என்று சமத்தாய் சொல்லிக்கொண்டிருந்தது.

பெண்கள் சொன்னதுமே வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து வந்தனர் தந்தைமார்கள்.

சங்கவியின் தந்தை சுற்றிலும் பார்த்தபடி, “நிறைய பேரு படிக்க வராங்கன்னு சொன்ன, இப்போ ஒருத்தரையும் காணோம்?” என்றார் தன் கழுகு கண்ணை கண்டபடி சுழற்றி.

சங்கவி கையை பிசைய, “எல்லார் வீட்டுல இருந்தும் சீக்கிரமே வந்துட்டதால கிளம்பிட்டாங்க சித்தப்பா! நீங்களும் அப்பாவும் தான் லேட்டு!” என பந்தை அவர்கள் பக்கமே திருப்பி விட்டாள் ரோஷிணி.

“சரி சரி வண்டில ஏறுங்க! வீட்டுக்கு போலாம்! அப்பத்தா’க்கு ரொம்ப முடியல!” என்றவர் கிளம்ப, உடன் ரோஷிணியும் தந்தையுடன் கிளம்ப, நான்கு நாட்கள் மட்டுமே பிரிந்திருந்த அந்த ஊரை ஏதோ பல வருடங்கள் சென்று பார்ப்பதை போல வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தனர் இரு பெண்களும்.

ரோஷினியும் சங்கவியும் ஒன்றுவிட்ட சகோதரி முறைக்காரர்கள். என்னதான் உடன் பிறக்கவில்லை என்றாலும் ரோஷிணியின் தந்தை மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் சங்கவியின் தந்தை. அதேபோல தான் அவரும்!

அடுத்தடுத்த வீடுகள் தான் என்பதாலும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் என்பதாலும் சின்ன வயது முதலே ஒன்றாகவே இருக்கும் இருவரும், இத்தனை வருடம் சென்றும் அதில் மாற்றம் இல்லாமல் இருக்க, அவர்கள் நட்பும் பிணைப்பும் மட்டுமே காரணம் கிடையாது.

ரோஷிணி சங்கவியின் தாய்மார்களும் ஒருவருக்கொருவர் அத்தனை நெருக்கம், ரோஷிணி சங்கவியை போல!

வீட்டின் உறுப்பினர்கள் அத்தனை பேரின் நெருக்கமும் இரு குடும்பங்களையும் ஒரு குடும்பமாய் உறவாட செய்தது.

தன் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தினார் சங்கவியின் தந்தை பரமேஸ்வரன்.

சங்கவி இறங்கியதும், “போய் அப்பத்தாவை பாரு” என்றவர் கிளம்பிவிட்டார். பின்னூடே வந்த ரோஷிணியின் தந்தை சத்தியநாதனும், “நீ இறங்கிக்க, எனக்கு வேலை இருக்கு” என்றுவிட்டு கிளம்பிவிட, “வாடி வீட்டுக்கு” என ரோஷினியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் சங்கவி.

அங்கே ஒரு அறையில் படுத்த படுக்கையாய் இருந்தார் கமலத்தம்மாள். அருகே அவர் கணவன் தன் நடுங்கும் கரங்களால் மனைவியின் சிகையை வருடிக்கொண்டிருக்க, இது தான் எப்போதும் அவர்கள் காணும் காட்சி என்பதால் பெரிதாக கலங்கி நிற்கவில்லை.

கமலம் வியாதியில் படுத்ததில் இருந்தே வீரய்யன் தன் விறைப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மனைவியே கதி என அருகில் இருந்துக்கொண்டார்.

‘எங்கே தன்னை நிர்கதியாய் நிறுத்திவிட்டு போய்விடுவாளோ?’ என்ற ஐயம் அவரை ஆட்டி படைத்தது. மனைவி மீது அளப்பரிய காதல் என்றெல்லாம் இல்லை. எல்லா ஆண்களை போலவும் ‘அவளும் அடுப்படியும்’ என்று தான் அவரை வைத்திருந்தார். பெரிதாய் பேசிக்கொண்டதாய் கூட அவருக்கு நினைவு இல்லை. ஆனால், அவர் இல்லாமல் போகக்கூடும் என்ற நிலை வரும்போது தான் சொந்த வீடு கூட அந்நியமாய் தோன்ற ஆரம்பித்தது. இத்தனை நாள் ஆட்சி செய்த இடத்தில் தனக்கு இனி ஒன்றுமே இல்லையோ என்பதை போன்ற எண்ணங்கள்.

அவர் வாழ்வும், அவர் மதிப்பும், அவர் தைரியமும், அவர் உரிமையும்… எல்லாம் ‘அவள்’ என்ற ஒரு வார்த்தையில் ஒளிந்து கிடந்ததை காலம் கடந்து அவர் உணர, அந்த கணம் முதல் அவரை வீட்டில் அந்த அறை தாண்டி எங்கும் காண முடிவதில்லை.

மனைவியின் மனத்துக்குள் இத்தனை வருடமாய் பொதிந்து கிடக்கும் ஏக்கம் கூட புரிந்தது அவருக்கு. ஆனால், சட்டென இறங்கி வர பல வருடங்களாய் போற்றி வளர்த்த வீம்பு இடம் கொடுக்கவில்லை.

அவளுக்கு என்னைமீறி இன்னொருவர் வேண்டுமா என்ன? என்ற உரிமை செருக்கு வேறு!!!

ஆனால் நாளுக்கு நாள் பொலிவிழக்கும் மனைவியின் முகம் அவர் அடிவயிற்றில் அமிலபந்தை உருள செய்வது மட்டும் அவரறிந்த நிஜம்!

அத்தனையும் விட்டு ஒருமுறை ‘வா!’ என அழைத்துவிடுவோமா? என்று கூட நினைப்பார்.  கைக்குழந்தையுடன் வாசலில் வந்து நின்றவளை மகனுடன் சேர்ந்து விரட்டியடித்ததும், மகள் ஏக்கத்துடன் அழுதுக்கொண்டே சென்றதும் கண்முன்னே அழியா கோலமாய் நின்று அவரை அலைக்கழிக்கிறது.

அதுமட்டுமா? மனைவிக்காக என படியேறி வந்த மருமகனை அடித்து விரட்டும் அளவுக்கு ஆத்திரத்துடன் சென்றதும்  உடன் நினைவில் நிற்க, தன்னை நினைத்தே ஆற்றாமையாய் உணர்ந்தார் வீரைய்யன்.

‘என்ன வாழ்க்கை இது? இன்னைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை… பிடிச்சவனோட வாழ்றதை எதுக்கு நம்ம தடுக்கணும்? அவ என்ன சீரழிஞ்சா போய்ட்டா!? சீமைராணியா தானே இருக்கா?’ இப்படியும் அவருக்கு சில நேரம் ஞானோதயம் தோன்றும்.  ஆனால் அவருக்கே இந்த ஞானம் வர எழுபது ஆண்டுகள் முழுதாக கடந்திருக்க, ஐம்பதுகளில் துள்ளிய இவரை அச்சில் வார்த்ததை போல இருக்கும் தன் மகனிடம் இஞ்ஞானத்தை கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன?

தான் சொல்லிக்கொடுக்காததையா அவன் பின்பற்றுக்கிறான்? என்ற எண்ணமும் உண்டு அவருக்கு. அதனாலேயே மனதில் லேசாக வந்திருக்கும் எண்ணத்தை வெளியே காட்டாது மறைத்துக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கிறார் அவர்.

“தாத்தா?” சங்கவி அழைக்க, நிமிர்ந்தவர், “வாங்கடா! எப்போ வந்தீங்க?” என்றார்.

“இப்போ தான் தாத்தா!” என்ற இருவரின் பார்வையும் கமலத்தின் மீது சென்றது.

அரை மயக்கம் போன்ற நிலையில் இருந்தார். அவர் இப்படி ஓரிடத்தில் இருந்து ஒருநாளும் பார்த்து வளர்ந்ததில்லை இருவரும்.  அவரை இப்படி பார்க்கும் போதெல்லாம் மனம் கனத்து போய்விடும்!

அப்படியே நின்றுக்கொண்டிருந்த இருவரையும், “போய் குளிச்சுட்டு ஏதாவது சாப்புடுங்க போங்க” என்று அனுப்பி வைத்தார் வீரைய்யன்.

அதன்பின்னே நேரம் முழுக்க முழுக்க அவர்களுக்கானதாக மாறிப்போனது. ஒருநாளும் தனித்து விட்டிராத பிள்ளைகளை நான்கு நாட்கள் பிரிந்த சோகத்தை போக்க, அறுசுவை அசைவ விருந்து இரு வீட்டிலும் கமகமவென தயாரானது. திருப்தியாக ஒரு பிடி பிடித்துவிட்டு  முதல் மாடியில் இருக்கும் சங்கவின் அறையில் அடைக்கலமாகினர் இருவரும்.

“இருந்தாலும் எனக்கு மனசே ஆறல டி! நம்ம இப்படி செஞ்சுருக்கக்கூடாது” மெல்லிய குரலில் ஆரம்பித்தாள் சங்கவி. அவள் எதை சொல்கிறாள் என்பது விளங்கியது ரோஷிணிக்கு. அவளுக்குமே தன் நடத்தையில் பெரிய உடன்பாடில்லை  என்பதால் மெளனமாக இருந்தாள்.

“அட்லீஸ்ட் சொல்லிட்டாவது வந்துருக்கலாம்!”

“அதான் சொல்லிட்டு வந்தோமே!” என்றதும் சங்கவி முழிக்க, “கார்ட்’ல” என்று கண்ணடித்தாள் ரோஷிணி.

“ஆனாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்தி டி! ஒரு ஜூஸுக்கு  எட்டாயிரத்தை  புடுங்கிக்கிட்டு, அவனை கிண்டல் செஞ்சு வேற கார்ட் எழுதி கொடுத்துட்டு வந்துருக்க!” என்று சொல்ல, “உண்மையை சொல்லனும்ன்னா பண்றப்போ ஒன்னுமே தெரியல! ஜாலியா இருந்துச்சு! ஆனா அங்கிருந்து வந்ததும் தான் யோசிச்சு பார்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு!” என்றாள் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

அவள் வருந்துவது கண்டதும், “நீ வேணா பாரு அவனை ஏமாத்துனதுக்கு வீட்டு வாசல்ல வந்து நின்னு கோஷம் போடப்போறான்” என்று கிண்டலாக பேச்சை மாற்றினாள் சங்கவி.

“ஆஹான்… கோஷம் போடுவானா? என்னன்னு கோஷம் போடுவான்? ரோஷிணி, சங்கவி’ன்னா? அடிப்போடி! அவனுக்கு நம்ம பேரை தவிர ஒண்ணுமே தெரியாது! (buildersmerchant.com) இதுல அவன் கொடைகானல்’ல இருந்து பஸ்ஸு புடிச்சு பூம்பாறை வந்து, ரோஷிணி, சங்கவி வீடு எதுன்னு தேடி கண்டுபுடிச்சு, ‘என்னை ஏமாத்திட்டாங்க, நியாயம் சொல்லுங்க’ கத்தப்போறானா? ஹாஹா” வாய்விட்டு சிரித்தவள்,

“முதல்ல அவன் பேசுனா அது நம்ம வீட்டு ஆளுங்களுக்கு புரியுமா சொல்லு?” என்று நகைக்க, “அதை சொல்லு முதல்ல” என்று சங்கவியும் சிரிப்பில் இணைந்த நேரம் எங்கிருந்தோ ‘ரோஷிணி’ என அழைக்கும் குரல் கேட்டது.

சங்கவி, “உன்னதான் கூப்பிடுறாங்க”

“என்னையா? இல்லையே?” என்றபோதே மீண்டும் ஒரு அழைப்பு.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், கேட்ட குரல் இருவரிடமும் திகலுக்கு விதையிட்டது.

“நிஜமாவே வந்துட்டானோ?” சங்கவியின் குரல் நடுங்க, தன்னை தைரியமாய் காட்டிக்கொண்டு மாடி பால்கனியில் இருந்து எட்டி பார்த்த ரோஷிணியின் இதயம் அதிர்ச்சியில் எகிறி குதித்து ஓடியது அங்கே நின்று ‘ரோஷிணி’ என கோஷமிட்டவனை கண்டு…!

சங்கவி, “யாரு டி?”

“அவன் தான் டி!” என்றவளின் கை கால்கள் எல்லாம் தாளமின்றி ஆடின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!