Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 12

அத்தியாயம் 12

 



Advertisement

செந்தமிழும் சேரலும் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க, பேச்சொலி செவியை ஊடுருவியது.

Advertisement

Advertisement

சவிதா இவர்களைக் கவனித்து, “எங்க போனீங்க ரெண்டு பேரும்.?”

“சும்மாதான் அத்தை. நிலத்துக்குப் போயிட்டு, அப்படியே ஆடுங்களைப் பார்த்திட்டு வர்றோம்.”

Advertisement

“இதென்ன பழக்கம்? கல்யாணம் ஆனதும், பொண்ணும் மாப்பிள்ளயும் முதல்ல கோவிலுக்குத்தான போகணும்? ஆட்டைப் பார்க்கப் போனேன், கறி வெட்டப் போனேனு! இதெல்லாம் நல்லாவா இருக்கு.?

காலையிலயே நானு பேசியிருப்பேன்.. நீங்கதான் ‘சும்மா இரு, விசேஷம் நல்லபடியா நடக்கணும். வீணா பிரச்சனையைக் கிளப்பாத’னு என்னோட வாயை அடைச்சிட்டீங்க! அப்பவே பேசி இருந்தா, இப்ப இப்படிச் செய்யிவாங்களா.?” என்று கணவரைக் குற்றம் சாட்டிய நாராயணி,

“அவனுக்குத் தான் தெரியல. பெத்தவங்க இருந்திருந்தா, நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க. உனக்கு, நானு சொல்லிக் கொடுத்து தான வளர்த்தேன் தமிழு? நீயும் அவனோட சேர்ந்து போயிருக்க?‌ எடுத்துச் சொல்ல வேண்டாமா.?” என்றார்.

அவள் கணவனைப் பார்க்க, அவனோ சிரித்துவிட்டு அறைக்குள் சென்றான்.

“கொஞ்சமாவது சட்டைச் செய்யிறானானு பாரு? வேணாம் வேணாம்னு அத்தனை தடம் சொன்னேனே, யாராவது கேட்டீங்களா.? இனி, என்னனு இவனோட வாழப் போறியோ?” எனப் பெயர்த்தியை அன்பும் அக்கறையும் வலியும் பயமுமாய்ப் பார்க்க, “நீங்க கவலைப் படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் நடந்துடல ஆச்சி. எதுக்கு இவ்வளவு பதட்டம்.?”

“அவனை, உன்னோட வழிக்குக் கொண்டு வருவனு பார்த்தா.. நீயி அவனோட இழுப்புக்குப் போயிட்டு இருக்க?” என்றிட, அவளின் நெற்றி சிந்தனையில் சுருங்கியது.

தமிழ் எதுவும் பேசவில்லை‌. அமைதியாய் அறைக்குள் சென்றாள்.

சேரல் நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருந்தான். உடையைக்கூட மாற்றவில்லை. மணவறையில் உடுத்தியிருந்த அதே பட்டுவேட்டி, சட்டை. ஆடுகளை அடைத்திருந்த இடத்தைச் சுத்தம் செய்யும் பொழுது மட்டும், அங்கிருந்ந பழைய வேட்டியை மாற்றிப் பணியைச் செய்தான்‌. அது அவனின் வழக்கமான நடவடிக்கை என்பதை, பார்த்ததுமே உணர்ந்து கொண்டாள் தமிழ்.

ஒரு பெருமூச்சை விட்டபடி, படுக்கையில் அமர்ந்தாள். பழைய நிகழ்வுகள் அனைத்தும், நினைவுகளாய் மேல் எழுந்து வந்தன.‌

கடைக்குச் சென்று, “அரைக்கிலோ கறி கொடுங்க!” என்று தேவையான அளவை உரைத்து வாங்கி வருவதோடு, அவர்களுடனான உறவு முடிந்து விடும் மற்றவர்களுக்கு. தமிழும் அப்படித்தான். சிறு பிள்ளையாய் இருக்கும் பொழுது, தந்தையுடன் சென்று வந்திருக்கிறாள். பருவம் எய்தியதும், நாராயணி அதற்கு அனுமதிக்கவில்லை.

அப்பொழுதே.. “எதுக்குப்பா அந்த இடத்துல, இப்படி நாத்தம் அடிக்குது.? சட்டையே போடாம இருக்காங்க, பனியன் எல்லாம் ஒரே ரெத்தம். எப்படி அவங்களால, இந்த நாத்தத்துல இருக்க முடியிது?” எனச் சில முறை கேட்டு,‌ “எனக்கு, அங்க போனாலே‌ வாந்தி வருது!”‌ என்றும் ஒருமுறை உரைத்திருக்கிறாள்.

“சிக்கன் சிக்ஸ்டிஃபைவ் வேணும்பா, சூப்பு வேணும், மீன் பொரிச்சது வேணும்னு மட்டும் கேட்கிற.? இவங்க இப்படி எல்லாம் வேலை செய்யிறதுனால தான், நாம நாக்குக்கு ருசியா வாங்கிச் சாப்பிடுறோம். அது, அவங்க தொழில் தமிழ்மா‌. இப்படி எல்லாம் பேசக் கூடாது!” எனச் சமாதானம் சொல்லி இருக்கிறார் ஜெயராம்.‌

ஆனால் அவராலேயே சேரல் இந்தத் தொழிலைச் செய்வதை ஏற்க இயலவில்லை. இயலவில்லை என்பதை விட, ‘தங்கை மகனிற்குத் தன்னால் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தர முடியாமல் போனதே?’ என்ற எண்ணம். தன் வாழ்வினில், அதை மிகப்பெரும் தோல்வியாகவே நினைத்தார், தமிழின் தந்தை. அதை மகளிடமுமே, ஒருமுறை பகிர்ந்திருந்தார்.

அவன் ஆடுகளைச் சுத்தம் செய்துவிட்டு வந்த பொழுது, வேறுபாடான ஒரு வாசனையை உணர்ந்தாள். பிடிக்கவில்லை அவளிற்கு, இருந்தும், அதனை முகத்தில் காட்டாது இயல்பாக இருக்க முயன்றாள். கீரை வெட்டச் சென்ற பொழுது.. சேரல் உரைத்தவை,‌ அவளை அனிச்சையாய் அதனைச் செய்ய வைத்தது.

இதுவே அவனிடம் பேசுவதற்கு முன்பு நடந்திருந்தால், “தள்ளி நில்லு, நாத்தம் அடிக்கிது உன்மேல!‌” எனத் தயங்காது, பட்டென்று உரைத்து இருப்பாள்.

‘எல்லாம் தெரியும் தான?‌ அப்புறம் எதுக்கு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? உன்னால, இந்த அரை மணி நேரத்தையே சமாளிக்க முடியல. ஆயுசு முழுக்க எப்படிச் சமாளிப்ப.?’‌ என மூளை வினா எழுப்பிட, ஆசைக் கொண்ட மனம் சோர்ந்து போனது.

ஆம்! ஆசை தான், இளஞ்சேரலின் மீது! ஐந்து வயதில் புத்தாடையில் கரையாக்கி அவள் செய்த குறும்பு தனத்திற்கு, பழியை ஏற்று அமைதியாய் நின்ற அந்தப் பத்து வயது சிறுவன் மீது.

அதுவரை எட்டியே நின்றவள், அவனிடம் மெல்ல மெல்ல விளையாடத் துவங்கினாள். தாய்த் தந்தையரின் இழப்பில் இருந்த சேரலுமே, மெதுவாய் வெளி வந்தான்.

விளையாட்டுப் பொருட்களை வைத்து அவள் தயாரித்துத் தந்த வெற்றுக் கோப்பைக் காபியை.. அவன் அருந்தியது எல்லாம், எண்ணிக்கையில் அடங்காதவை.

சவிதா.. சப்பாத்திக்கு பிசைந்து வைத்த மாவில் இருந்து, எவரும் அறியாமல் சிறிதளவு எடுத்து வந்து தரையில் குட்டிச் சப்பாத்தி தேய்த்து விளையாடி.. நடக்கும் பொழுது காலில் ஒட்டும் அதனைச் சுத்தம் செய்து, “ஏன் தமிழு, இப்படிச் செய்யிற.? அத்தைக்குத் தெரிஞ்சா, அடிக்கப் போறாங்க!” என அவன், மாமன் மகளை அடி வாங்காமல் காப்பாற்றியது எல்லாம் ஏராளம்.

“என்நான்கா முப்பத்தாறு!” எனத் தவறாய் வாய்ப்பாடு உரைப்பவளிற்கு, “முப்பத்திரண்டு தான் வரும், சரியா படி!” என்று திருத்தி..

“நானு மருதாணி வச்சிருக்கேன்ல? அதுனால என்னோட வீட்டுப் பாடத்தை எழுதிடு, நீயி நல்ல பையன் தான?” எனத் தேன் ஒழுக பேசுபவளை முறைத்து, பின் மனம் கேளாமல் இடது கையால் அவளைப் போலவே எழுதி தந்து..

“எனக்குக் கீரை சாப்பாடு வேணாம், நீயி சாப்பிடு!” என அவனின் தட்டிற்கு மாற்றி விட்டு, “அப்பா, சோறு சாப்பிட்டா கேக் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்க இல்ல.?” என்று தந்தையை ஏமாற்றி, உணவைத் தவிர்த்து, பசிக்கு மற்றவையை உண்பவளின் சேட்டைகளைச் சகித்து என.. ஏழாண்டுகளில் இருவருக்குமான ரகசிய மற்றும் வெளிப்படையான நிகழ்வுகளின் நீட்சி இன்னுமே நீளமானது.

அதனாலேயே தன்னை எப்பொழுதும் காட்டிக் கொடுக்காத சேரலிடம், பிடித்தம்.. பிடித்தம்.. பிடித்தம் மட்டுமே, செந்தமிழிற்கு. அதே அளவிற்குச் சினமும் இருந்தது, ‘சொல்வதைக் கேட்காது, கல்வியைக் கைவிட்டுச் சென்று விட்டானே?’ என்று.‌

அந்தக் கோபமே அவனிடம் பேச விடாமல், பத்து ஆண்டுகள் மௌனம் காக்க வைத்தது.‌ பிடித்தமானது.. அவன் வந்து செல்லும் பொழுதெல்லாம், ரகசியமாய்ப் பார்க்க வைத்தது. அந்தப் பார்வைகளே..‌ ஆசையைத் தூண்டி விட்டிருக்க, திருமணத்திற்குக் கேட்டதுமே, சம்மதமாய்த் தலையசைக்க வைத்து விட்டது.

விருப்பும் வெறுப்பும் ஒரே அளவிற்குச் சரிசமமாய், ஒருவரிடம் உண்டாகுமா என்ன? நிச்சமாய் நிகழும், செந்தமிழிற்குள்.‌ சேரலை விரும்பும் அளவிற்கு, அவனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட தொழிலை வெறுத்தாள்.

விருப்பு, வெறுப்பு.. பேச்சொலியில் இரண்டிற்குமே ஓர் எழுத்துதான் வேறுபாடு.‌ அதேபோல் உணர்வுகளிலும் கூட, துளி மாறுபாடு தான்! நாம் விரும்புபவை எப்படி நமது எண்ணத்தில் அதிகப் படியாய் நிறைந்திருக்குமோ, வெறுப்பவையும் அப்படித்தான் நினைவுகளில் பதிந்து போகும்.

பதிந்தவை, மாற்றம் காணுமா‌ என்பதைக் காலமே தீர்மானிக்கும்!

மாலையில்.. சவிதாவும், பெரியவர்களும் ஊரிற்குச் செல்லத் தயாராகினர்‌. மோகனிடம் உரைத்து, வண்டி பிடித்து, அவர்களிற்கு விடைக் கொடுத்தான் சேரல்.

கிளம்புவதற்கு முன்னர் மறுவீடு வைபவத்திற்காக அழைக்க.. “கடைக்கு, லீவ் விட முடியாது அத்தை. அதேபோல மத்தவனை நம்பியும் கல்லாவுல உட்கார வைக்க முடியாது‌. அதுனால வெள்ளிக்கிழமை வர்றோம்! தப்பா நினைச்சுக்காதீங்க!” என வெளிப்படையாகவே உரைக்க, “வெள்ளிக்கிழமை எப்படி அசைவம் செஞ்சு போடுறது.? இடையில, வேற ஏதாவது நாளுல வரச் சொல்லு சவிதா!” என்றார் நாராயணி.

“எனக்குச் சைவமே போதும் அத்தை.”

மூத்தவர், “அது முறை இல்ல, சவிதா!”

“ஆச்சி, ரொம்ப ஆசைப் படுறாங்க. அப்ப நாளைக்கே சமைச்சு, கேரியர்ல கொடுத்து அனுப்பிடுங்க அத்தை. நானும் என்னோட பொண்டாட்டியும் இங்கேயே சந்தோஷமா சாப்பிட்டுக்குவோம்! சமைக்கிற வேலை மிச்சம் பாருங்க.?” என்று அவன் பட்டென்று சொல்லி விட, சவிதாவிற்கோ சட்டென்று சிரிப்புத் தொற்றிக் கொண்டது.

நாராயணியின் முகம் சிறுத்துப் போக.. “முடிஞ்ச வரை வெள்ளிக்கிழமைக்கு முன்னாடியே வரப்பாரு!” என்றுவிட்டுக் கிளம்பினர் சவிதாவும் வேணுகோபாலனும்.

உறவுகள் உரைத்த அறிவுரைகள் எல்லாவற்றிற்கும் தலையசைத்து, லேசாய்க் கலங்கிய கண்களைத் துடைத்தபடி பிறந்த வீட்டினருக்குக் கையசைத்தாள் தமிழ்.

அவளின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்ட கீதா உள்ளே அழைத்துச் செல்ல, வெளியில் இருந்து அப்படியே கிளம்பினான் சேரல்.

இரவு நெருங்கிக் கொண்டிருக்க.. நீராடச் சொல்லி வேறு உடை உடுத்தி தமிழிற்குப் பின்னலிட்டு முடித்தவள், “டைட்டா இருக்காமா?”

“இல்ல அண்ணி, இதுவே ஓகேதான்.”

“சரி, திரும்பு!” என்றவள், நெற்றியில் பொட்டிட்டு, சந்தனமும் வைத்தாள்.

“ம்ம்.‌. பொண்ணு ரெடி! இவனைத் தான் ஆளைக் காணோம்.?‌” என்றபடி வாயிலைப் பார்க்க, “எங்க போனாரு அண்ணி?”

“உன்கிட்ட சொல்லலையா.?”

அவள் மறுத்துத் தலையசைத்து, “அம்மா, தாத்தா, ஆச்சிக் கிளம்பவுமே, இவரும் வெளிய போயிட்டாரு. ஒண்ணும் சொல்லல.”

“ஓ.. கோழிகளைப் பார்க்கப் போயிருப்பான். எதுவும் நினைக்காத தமிழ்மா. இவ்வளவு வருசமும் தனியா.. தானே ராஜா, தானே மந்திரினு இருந்து பழகிட்டான்ல? அதான், சொல்லீட்டுப் போகணும்னு நினைப்பு வரல. நானு அவன்கிட்டச் சொல்லி வைக்கிறேன். நீயும் அவன் போக்குக்கு விட்டுடாம.. அப்பப்ப என்ன செய்யிறான், ஏது செய்யிறான், எங்கெங்க போறான் வர்றான்னு விசாரிச்சுக்கிட்டே இரு!”

செந்தமிழ் குழப்பத்துடன், “ஏன்‌ அண்ணி, உங்க தம்பி வழி மாறி போயிடுவாரா என்ன.?”

கீதா சிரித்து, “அடுத்தவங்களுக்கே, ஆயிரம் வழி சொல்லுவான். அவனா, வழி மாறி போவான்? ஊருக்கு, இந்த ஜனங்களுக்கு, நிலத்துக்குனு.. சித்தப்பா விட்டுட்டுப் போன எல்லாத்தையும் திரும்பச் செய்யணும்னு ரொம்ப ஆசை அவனுக்கு.‌ அதுக்காக நேரம், காலம் பார்க்காம ஓடிக்கிட்டே இருப்பான்.

எப்ப தூங்குறான், எழுந்திரிக்கிறான், என்ன சாப்பிடுறான்னு எதுவுமே எங்களுக்குத் தெரியாது. சொன்னாலும் கேட்க மாட்டான். அவன் ரெண்டாவதா ஆசைப்பட்டு, அடைஞ்சது உன்னைத்தான். என்னனு தெரியல, நீயினா அவ்வளவு பிரியம்‌. அதுனால.. இனி, நீயிதான் அவனைப் பார்த்துக்கணும்.‌ பொண்டாட்டியாவும் சரி, அம்மாவாவும் சரி!”

வியப்பும் குழப்பமுமாய்ப் பார்த்த தமிழ், “நான் ரெண்டாவதுனா, அப்ப முதலிது..?”

கீதா சிரித்து, “இதுதான்‍, பொம்பளைப் புத்தின்றது.‌!”

அவள் சங்கடமாய்ப் பார்க்க, “அச்சோ! என்ன, தம்பி பொண்டாட்டியோட முகம் இப்படி மாறிப் போச்சு? எதுவும் தப்பா நினைக்காத, சும்மாதான் சொன்னேன்.‌ அப்புறம் நானுமே அப்படித்தான்!” என்ற பெரியவள், “அவன் ரொம்ப ஆசைப்பட்டது, நிலத்துல திரும்பவும் வெள்ளாமை வைக்கணும்னு தான்! நாத்து நட்டதுக்கு அப்புறம் தான் கல்யாணம். அதுனால முகூர்த்தத் தேதியைத் தள்ளி முடிவு பண்ணுங்கனு முன்னாடியே அப்பாக்கிட்டச் சொல்லிட்டான்!” எனும் பொழுதே உள்ளே நுழைந்தான் இளஞ்சேரல்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!