Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 18

அத்தியாயம் 18

 



Advertisement

முகத்தைச் சுருக்கிய படி அமர்ந்திருந்த மனைவியின் அருகே வந்த சேரல்.. பெரிய டம்ளர் ஒன்றை நீட்ட, நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

Advertisement

Advertisement

“என்ன தமிழ்மா, கோபமா.?”

“ஆமா கோபந்தான், அதுக்கு என்ன இப்ப.?”

Advertisement

“சரி சரி, இதைக் குடிச்சிட்டுக் கோபப்படு!”

“உங்களை!” எனப் பல்லைக் கடித்தவளின் கன்னத்தில் இதழ்களை ஒற்றியவன், “நீயி இப்படிப் பல்லைக் கடிக்கும் போது, ரொம்ப அழகா இருக்கு தமிழ்மா!”

“ஐயோ!” என்று அவளால் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிந்தது.

“கோபம் போயிடுச்சா, இந்தா குடி!”

வயிறு பசியில் கதறியதால் அதனை வாங்கிக் கொண்டவள், “ஏன் அத்தான், இப்படிச் செய்யிறீங்க.?”

அவன் அப்பாவியாய், “நானு‌ என்ன செஞ்சேன்?”

“அண்ணிக்கிட்ட, என்னைப் பத்தி எப்படிச் சொல்லி வச்சிருக்கீங்க? என்ன நினைப்பாங்க அவங்க.?”

“ஒண்ணும் நினைக்காது அக்கா. அதுக்கு உன்னைப் பத்தி வேணும்னா தெரியாம இருக்கலாம், ஆனா என்னைப் பத்தி நல்லாவே தெரியும்!”

“எப்பவுமே அண்ணிக்கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா.?”

சின்னதாய்ச் சிரித்தவன், “சின்ன வயசுல இருந்தே, அப்படித்தான்!”

“ஏன்.?”

“நீயி, என்கூட விளையாடுனது மாதிரி தான்.”

பழைய நினைவுகளில் அவளின் முகம் மலர, “கலர் அடிக்கிறேன்னு சொல்லி, என்னோட சைன்ஸ் புக்ல இருந்த படத்தை எல்லாம் கலர் பென்சிலால ஓட்டைப் போட்ட தான நீயி.?‌ நானு திட்டுவேன்னு, புக்கை பேக் குள்ள மறைச்சு வச்சு.. ஸ்கூல்ல கரெக்டா டீச்சர் கண்ணுல அதுபட்டு, அடி வாங்க வச்சிட்ட!”

அவள் சிணுங்கலாய், “அத்தான்.. அது ஏதோ, சின்னப் பிள்ளையில தெரியாம செஞ்சது.”

“ஏது, நீயி தெரியாம செஞ்சியா.? உனக்கு நானு எரேசர் தரலனு வேணும்னே செஞ்சிட்டு, தெரியாம செஞ்ச மாதிரி நடிப்பு வேற!”

அவள் திருட்டு முழி முழிக்க.. ரசனையோடு பார்த்தவன், டம்ளரைக் கண்களால் காட்ட, அருந்த துவங்கினாள்.

“என்ன அத்தான், இது?”

“சத்துமாவுக் கஞ்சி.”

“பாருடா, இதெல்லாம் செய்யத் தெரியுமா‌ உங்களுக்கு.?”

“ஏய்.. எனைய என்னனு நினைச்ச? நளபாகமும் செய்வான் உன்னோட வீட்டுக்காரன்.”

வியப்பாய் நோக்கியவள், “நிஜமாவா.?”

சின்னதாய்ச் சிரித்தவன், “நேரம் கிடைக்கும் போது, செஞ்சு தர்றேன்.”

“இப்பக்கூட ஃபிரீ தான், செய்..ய..லா..ம்..” ‌என இழுத்தவளை தன்வசம் இழுத்தவன், “நீயி வேணும்னா ஃபிரீயா இருக்கலாம், ஆனா‌ எனக்கு வேலை இருக்கு!”

“அப்படி‌ என்ன வேலை.?‌” என்றவளிற்கான பதிலாய், கழுத்து வளைவில் அவனின் முகம் புதைந்தது.

உணர்வுகள்‌ நிலைக்குலைய, “அத்தான், கதவு திறந்திருக்கு. யாரும் வரப்போறாங்க.”

“வரும்போது பார்த்துக்கலாம்.”

“ச்சீ.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம பேசுறீங்க.”

“நீயி வெட்கப்பட்டா ஒரு நியாயம் இருக்கு.‌ நானும் வெட்கப்பட்டா, எப்படிக் குடும்பம் நடத்துறதாம்!”

“நீங்க, இங்க ஊருக்கு வந்த பின்னாடி நிறையவே மாறிட்டீங்க அத்தான்.”

சிரித்தானே தவிர, பதில் உரைக்கவில்லை.

“தலையில இருந்து இன்னும் தண்ணியா வடியிது பாரு! எழுந்திரிச்சு முடியைத் துவட்டு முதல்ல.”

“ம்ம்.. அப்படியே உட்கார்ந்தா காய்ஞ்சிடும்.”

“அதோட காய்ச்சலும் வரும்! அசையிறியா, சரியான சோம்பேறி!”

“ஆமா, நானு சோம்பேறி தான். இப்படித்தான் இருப்பேன்.”

“ஆரம்பிச்சிட்டியா‌ உன்னோட வாயை!” என்று அவளின் மூக்கைப் பற்றி இழுத்தவன், “நல்லா‌ உட்காரு, நான் தட்டி விடுறேன்.” என மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி, தமிழின் குழலைப் பிரித்து விட்டு உலர்த்தினான்.

“அத்தான் குளிருது!”

“சரி வா, உள்ள பெட்ரூம் போயிடலாம்!”

“ஆன்.. இப்பதான் வெளிய வந்தோம். ஆளைப் பாரு. நேத்து நைட்டோட கோட்டா முடிஞ்சிடுச்சு.‌ சோ, இன்னைக்கு நைட் வரைக்கும் நோ டச்சிங்.”

“இதுக்கு எல்லாமா கணக்குப் பார்ப்பாங்க.?”

“நானு பார்ப்பேன்!” என்றவள் டம்ளரை அவனிடம் நீட்டி, “கிளீன் பண்ணி வச்சிடுங்க.”

“பசிக்குமேனு, பாவம் பார்த்து உனக்குச் செஞ்சு கொடுத்தது தப்பு. எனையவே வேலை வாங்குறியா.? எழுந்திரி!” என அவளின் கைப்பற்றிச் சமையல் அறைக்கு இழுத்துச் சென்ற சேரல், “கழுவி வை!”

“இதெல்லாம் அநியாயம். புதுப் பொண்ணை வேலை வாங்கக் கூடாது!”

“அடடா! புதுப் பொண்ணு சாப்பிடவும் கூடாதாம்!”

“கொஞ்சமாவது மனசு இறங்குறீங்களா நீங்க? அப்படியே மாமியாரை மாதிரி!”

“இல்லேனா.. நீயி எங்க தலையில வேலையைக் கட்டிடுவியே?”

இதழ்களைச் சுளித்தவள் சுத்தம் செய்தபடியே, “ஏன் அத்தான்?‌ அண்ணி நல்ல நேரம் பார்த்து பால் காய்ச்சணும். அப்புறம் தான் சமைக்கணும்னு ஏதேதோ சொன்னாங்க.‌ நீங்க பாட்டுக்கு கஞ்சி எல்லாம் வச்சிட்டீங்க.?”

“அது புதுசா வந்த உனக்குதான், எனக்கு இல்ல.”

“அப்ப, நீங்க பழசா.?”

“ஓய்.. என்ன கேட்ட?”

“சேரல் பழசாகிட்டான்‌.”

“அடி! பேச்சைப் பாரு!” என்றிட, சிரித்தபடி ஓடினாள் அவள். அவன் பின்தொடர்ந்து வருவதற்கும், பரமசிவம் உணவுக் கூடையோடு உள்ளே நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

அவள், “வாங்க..” என்றுவிட்டு ஒதுங்கி நின்று கொள்ள, “எதுக்குப் பெரியப்பா அலையிறீங்க, நானு வருவேன்ல.?” என்றவாறே பொருட்களை வாங்கினான் சேரல்.

“கீதாக்கு, கால் தரையில நிக்க மாட்டிது. என்ன செய்யிறானோ? அந்தப் பிள்ள, பசி தாங்குமானு தெரியலனு புலம்பித் தள்ளீட்டா. அதான் நீயி கொடு, கொண்டு போயி கொடுத்திடுறேனு வாங்கிட்டு வந்திட்டேன்.”

அவன் சிரிக்க, “இந்தா, கல்லா காசு!” என நீட்டியவர், “ஆடுகளுக்குக் கீரையைக் கட்டிட்டேன். தொழுவையும் சுத்தம் செஞ்சாச்சு. கோழிகளையும் ஒரு எட்டு பார்த்திட்டேன்‌‌. மேற்கு பக்கம் வாங்கிட்டு வந்த குட்டி ஒண்ணு, ஒருமாதிரி வடியா இருக்கு.”

“எத்தனை நாளைக்குத் தாங்கும்.?”

“சொல்ல முடியாது!”

“காலையில வரைக்கும் இழுக்குமானு பாருங்க, இல்லேனா உசுரு இருக்கும் போதே அறுத்திடுங்க பெரியப்பா. செத்த ஆட்டோட கறியை வித்தோம்னு பேரு வேணாம்.”

“நானுமே அப்படித்தான் நினைச்சேன் சேரா. உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு தான்.”

“குமாருக்குச் சம்பளம்?”

“கொடுத்திட்டேன். இவன் ‌ஆளு சரியில்லடா.‌ கல்லாவுல, இஷ்டத்துக்குக் காசு எடுக்கிறான்,‌ வைக்கிறான், அப்பப்ப மாத்திக்கிறான். ஆள் இல்லேனா, மொத்தத்தையும் தின்றுவான் போல.”

“ம்ம்.. நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்‌. வாடிக்கையா வர்றவங்களுக்கு, அவன் நம்மளோட கடை ஆளுனு தெரிஞ்சு போச்சு. நாம இல்லனாலும் அவன் இருக்கானேனு வர்றாங்க.‌ புது ஆளைப் போட்டு, பழக்குறதுக்கு நாளாகும். கிருஸ்துமஸ் பொங்கல்னு வேற வரிசையா வருது. வேலைக்கு ஆள் வேணும். விசேஷம் எல்லாம் முடியட்டும், அப்புறம் என்ன செய்யிறதுனு பார்க்கலாம்.”

“நீயி சொல்லுறதும் சரிதான். ஒண்ணுக்கு ரெண்டா காசைக் கொடுத்தாக் கூட, வேலைக்கு ஆளு எவனும் கிடைக்க மாட்டிறானே.?”

“ரெத்த வாடை பெரியப்பா. இப்ப இருக்கிற‌ பசங்க, வியர்வை கூட வராம சென்ட் அடிச்சிட்டு ஜம்முனு இருக்கணும்னு நினைக்கிறவங்க.”

“அதுசரி! எல்லாரும் அப்படியே நினைச்சா, நாளைப்பின்ன மிசின்ல வச்சு அறுத்து கெமிக்கல் தடவி மாசக் கணக்குல பாக்கெட்டுல அடைச்சு விக்கிறதைத்தான் திங்க முடியும்‌.”

“ஏற்கனவே வெளி நாட்டுல எல்லாம் அப்படித்தான் விக்கிறாங்க.‌ நம்ம நாட்டுக்கும் வந்திடுச்சு.”

“சரிதான்! அதைத் தின்னு உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கிதோ இல்லையோ, புதுசு புதுசா வியாதி உற்பத்தியாகுது.”

அவன் சிரிக்க, “சாப்பிடுங்க, ரெண்டு பேரும்!” என்றுவிட்டுக் கிளம்பினார்.

பணத்தைக் கணக்குப் பார்த்து பத்திரப் படுத்தியவனிற்கு, அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.‌

காலை நான்கு மணிக்கு எழுபவன், பத்து பதினோரு மணிபோல் இல்லத்திற்கு வந்தான். காலை உணவு அந்த நேரத்தில் தான்.‌ அதன்பின்னர், கைப்பேசி வழியாகவே பாதி நேரம் கடந்தது.

கடையில் பணிபுரிபவனின் நடவடிக்கைகளையும், ‘ஆடு கோழிகளை எல்லாம் சரியாய் கவனிக்கிறானா?’ என அவ்வப்போது பேசி உறுதி செய்து கொண்டே இருந்தான்.‌ இதற்கிடையே ஆடு வாங்குவது பற்றியும் பேச்சு வார்த்தை நடந்தது.‌

“இருக்கிறதை முதல்ல அறுப்போம் சேரா. நானு பார்த்து, அட்வான்ஸ் கொடுத்து வைக்கிறேன். நீயி மறுவீடு போயிட்டு வந்ததுக்குப் பின்னாடி, ஆடுகளைத் தூக்கிக்கலாம்!” என அவனின் பணியைக் குறைத்து, தான் பொறுப்பேற்றுக் கொண்டார் பரமசிவம்.

மதிய நேரத்தில் இரண்டு மணி நேரம் கண் அயர்பவன், மாலையில் தனது பணி சம்பந்தமாய்ச் சென்றுவிட்டு, ஏழரை மணிக்கு மேல் இல்லம் வந்து சேர்ந்தான். இரவு உணவை முடிப்பவன், பத்தரை‌ மணிக்கு எல்லாம் உறங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தான்.

இவைதான், தமிழ் கவனித்த வரையில் சேரலின் செயல்பாடுகள். திருமணத் தினத்தன்று இரவு அவன் உறங்கியதை, ‘தன்மீது கோபம் கொண்டானோ.?’ என எண்ணி இருந்தவளிற்கு, அது கணவனது தினசரி பழக்கம் எனப் பின்னரே புரிந்தது. அதிகாலை சீக்கிரமே விழிப்பதால்‍, இரவும் முன்னரே தூங்கி விடுகிறான் என்று உணர்ந்து கொண்டாள்.

புதன்கிழமை அன்று கீதா, மோகன் மற்றும் பரமசிவத்தின் வருகையில் பாலைக் காய்ச்சிவிட்டு, இல்லத்தில் தனது சமையலைத் துவக்கினாள்.‌

சமைப்பதில் ஏபிசிடி மட்டுமே அறிந்தவளிற்கு, முதலில் வார்த்தைகளையும் பின்னர் வாக்கியங்கள் கோர்ப்பதற்கும் கற்றுத் தந்தான் சேரல். பெரும்பாலான இல்லப் பணிகள் அவளே செய்துவிட, வீட்டில் இருக்கும் பொழுது சிறு சிறு உதவிகள் செய்தான். வெளி வாயிலைப் பெருக்குவது முதல், துவைத்துக் காயப் போட்ட துணிகளை அள்ளி வருவது வரை எதைச் செய்யவும் தயக்கம் காட்டவில்லை.

“கல்யாணத்துக்கு முன்னாடி, இதெல்லாம் நான்தான் செஞ்சேன். என்ன, எனக்குத் துணி மடிக்கத் தெரியாது. அதை மட்டும் நீயே செஞ்சிடு!” என்றான்.

தமிழிற்குச் சேரலுடனான வாழ்க்கை, இரு தினங்களிலேயே பழகிவிட்டது. அவளின் ஒரே ஒரு நிபந்தனை. நிபந்தனை என்பதை விட, கட்டளை என்றே சொல்லலாம்.‌

“குளிச்சிட்டு தான், என் பக்கத்துல வரணும். கடையில இருந்து வந்து, சும்மாக்கூட என்னைத் தொடக் கூடாது!” எனத் தீர்மானமாய் உரைத்திருந்தாள் தமிழ்‌‌. பணி செய்யும் நேரம் தவிர,‌ மற்ற தருணங்களில் சுத்தத்தைப் பெரிதும் கடைபிடிக்கும் சேரலும், மனைவியின் விருப்பத்திற்கு ஏற்றது போல் நடந்து கொண்டான்.

வியாழக்கிழமை பணிமுடித்து வந்தவன், “தமிழ்மா, சீக்கிரம் கிளம்பு.” என்றுவிட்டு அவனுமே தயாராக.. ஒன்றும் புரியாமல் விழித்தவள், “என்ன அத்தான், எங்க போறோம்.?”

“ஊருக்குமா.‌ அத்தை மறுவீட்டுக்கு அழைச்சிருந்தாங்க இல்ல.?”

“நாளைக்குத்தான, வர்றதா சொல்லி இருந்தீங்க.?”

“முடிஞ்சா, முன்னாடியே வரச் சொன்னாங்க. என்னோட வேலை.. எப்ப, எப்படி இருக்கும் சொல்ல முடியாது. அதான், ‌நானு எதுவும் சொல்லல.‌ ஆச்சி வேற, ஒருமாதிரி பேசுனாங்க. எதுக்குத் தேவையில்லாத சங்கடம்.?‌ வா, இன்னைக்குப் போயிட்டு நாளைக்குச் சாயங்காலம் திரும்பிடலாம்‌‌. சனி, ஞாயிறு எனக்குக் கடையில வேலை இருக்கும்! எங்கேயும் போக முடியாது.” என்றிட.. முகம் மலர்ந்தவள், “அம்மா.. அம்மாக்கிட்ட சொல்லணும்.” என்றபடிக் கைப்பேசியைத் தேட, “அத்தைக்கிட்ட நானு பேசிட்டேன். நீயி, ரெடி மட்டும் ஆகு‌.‌ ஒரு மணி நேரத்துல, மாமா வண்டிய எடுத்திட்டு வந்திடுவாரு!” என உரைத்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!