Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 21

அத்தியாயம் 21

 



Advertisement

எதிரே நின்றிருந்த தம்பியை, ஏற இறங்க பார்த்தாள் கீதா.

Advertisement

“என்னக்கா.?”

Advertisement

“அதைத்தான்டா நானும் கேட்கிறேன். என்ன இது.?‌ எங்கடா அந்தப் பிள்ள.?”

Advertisement

“அவ,‌ அங்க இருக்கா.”

“அவளை அங்க விட்டுட்டு, நீயி எதுக்குடா வந்த.?”

“மொத்தக்கறி கேட்டு ஃபோன் வந்திச்சு, அதான்!”

“எவ்வளவு.?”

“மட்டன் பதினஞ்சு, சிக்கன் இருபது.”

“முப்பத்தஞ்சு தான.? நூறு, நூத்தம்பதுனு கேட்கலயே.?”

“குறைச்சுதான், எவ்வளவா இருந்தாலும் ஆடு வேணும்ல.?‌‌ நாலு குட்டிதான் இருக்கு, பத்தாது. ஞாயித்துக் கிழமைக்கும் பார்க்கணும்.”

“அப்பா இருக்காரு. அவர் பார்த்து சொன்னா, குமாரு தூக்கிட்டு வந்து இறக்கப் போறான்.‌ இல்லேனா ஜக்கையன் மாமாக்கிட்ட சொன்னா, வண்டிய பிடிச்சு மொத்தமா கொண்டு வரப் போறாரு.”

“வயசான காலத்துல, அவரை எப்படிக்கா அலைய வைக்கிறது.?”

“ஏன், செஞ்சது இல்லையா அவங்க.? ரெண்டு மாசத்துக்கு முன்னுக்கத் தீபாவளிக்குக் கூட, கடையில வந்து குடலைக் கழுவிக்கிட்டு உட்கார்ந்து இருந்தாரேடா.?”

“அது இல்லக்கா, திரும்பத் திரும்ப அவரை..” என்ற இளையவனை இடைமறித்த கீதா, “என்ன விவகாரம் சேரா.?”

“ஒண்ணும் இல்லயே, எதுக்கு இப்படிக் கேட்கிற.?”

“பொய்ப் பேசுன, அடி வாங்கிடுவ! ஆட்டுக்காரவங்களுக்கு நீயி ஒரு வார்த்தை ஃபோன் போட்டுச் சொன்னா, அடுத்த ரெண்டு மணி நேரத்துல ஆடு இங்க நிக்கும். இளஞ்சேரல்ன்ற உன்னோட‌ பேரு ஒண்ணு போதும், எல்லா வேலையும் ஆட்டோமெட்டிக்கா நடக்கும். தேவையினா, நானு போயிக் கல்லாவுல உட்காருறேன்.

ராத்திரி ஒரு மணிக்கு மேல, ஆடு உரிச்சா போதும். நீயி சாயங்காலம் தமிழோட வந்தாலே சரியா இருக்கும். ஒன்பது வருசமா தொழில் செய்யிறவன், இது எல்லாம் உனக்கும் தெரியும்‌‌. அப்படி இருக்கும் போது, கல்யாணம் ஆன அஞ்சு நாளுல பொண்டாட்டிய தனியா விட்டுட்டு வந்திருக்கனா, நிச்சயமா ஏதோ ஒரு காரணம் இருக்கும்!”

“அதான் சொன்னேன்ல, கறி கேட்டிருக்காங்கனு.”

“இதை, உன்னோட பொண்டாட்டியும் மாமியாரும் வேணும்னா நம்புவாங்க. நானு நம்ப மாட்டேன். இதையே நீயி ஒரு ரெண்டு மூணு மாசத்துக்குப் பின்னுக்கச் சொல்லி இருந்தாக்கூட,‌ என்னோட மனசு ஏத்துக்கும். ஆனா.. கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல. அவளுக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது. பார்த்துச் சாப்பாடு செய்யிக்கானு ஃபோன் போட்டுச் சொன்னவன் நீயி. இப்ப என்னனா, அவளை விட்டுட்டு வந்து நிக்கிற.?

சேரா கல்யாணம் ஆனா.. அவ செய்யிற சிலது உனக்கும், உன்னோட நடவடிக்கை சிலது அவளுக்கும் பிடிக்காம போறது இயல்புதான். விட்டுக் கொடுக்காம, வாழ்க்கை ருசிக்காது. எப்பவும் சரி, அவளைத் தனியா விடாத‌. நீயி எந்த அளவுக்கு உன் கூடவே வச்சுக்கிறியோ, அந்தளவுக்கு அவளோட மனசுல நம்ம புருஷன் நம்ம‌ மேல பிரியமா இருக்கிறாருன்ற‌ எண்ணம் ஆழமா பதியும்.

பொம்பளை மனசுடா. நானும் பொண்ணா இருக்கிறதால சொல்லுறேன். வேணாம், இப்படிச் செய்யாத. அதுவும் நாலு நாளுன்றப்ப, முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆகிடப் ‌போகுது.”

“அக்கா.. அக்கா.. எதுக்கு இவ்வளவு பதறுற.? அவ வேணும்னு ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன். அப்படி இருக்கும் போது, எப்படி‌ விடுவேன்.?”

“அதுதான்டா என்னோட கேள்வியும். ஆசைப்பட்டுக் கட்டுனவன், ஏன் இப்படி நடந்துக்கிற.?”

“ஒண்ணும் இல்ல. நீயி சும்மா, மனசைப் போட்டுக் குழப்பிக்காத. ரெண்டு நாளுல கூட்டிட்டு வந்திடுவேன். போயி வேலையைப் பாரு!‌” என்றவன் அடுத்துப் பேசுவதற்கான காலத்தைக் கொடாது, சட்டென்று நகர்ந்தான்.

அதன்பின்னர் சேரல் ஒருநொடி நிற்கவும் இல்லை. வேலையைக் கடந்து மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கவோ, எவரிடமும் பேசவோ இல்லை. நள்ளிரவில் கடைக்குச் செல்ல வேண்டும் என்பதால், ஏழு மணிக்கே உண்டு முடித்து, சிறிது நேரத்திலேயே படுத்துவிட்டான்.

காலையில் இருந்து பயணமும், நில்லாத ஓட்டமும், சோர்வும், அத்தோடு முதல்நாள் இரவு உறக்கம் இன்மையும்.. மெல்ல அவனை உறக்கத்தின் பிடிக்கு அழைத்துச் செல்ல, கண்களை மூடும் பொழுது.. “அன்பே ஓடிவா!” என அவளின் நினைவைத் தூண்டியது கைப்பேசி.

“ஹலோ..”

“என்ன செய்யிறீங்க.?”

“படுத்திருக்கேன்.”

“ஆடும் கோழியும், என்னோட நினைப்பையே மொத்தமா மறக்க வச்சிடுச்சு இல்ல..?”

சட்டென்று எழுந்தவன், “தமிழ்மா.?”

“காலையிலயே கிளம்பிப் போனீங்க. ஒரு ஃபோன் கூட இல்ல.”

“வந்ததுல இருந்து ஒரே வேலை. நிக்க நேரமில்ல, இப்பதான் படுத்தேன். அதுக்குள்ள, நீயி ஃபோன் போட்டுட்ட.”

“உங்களுக்கு வேலை இருக்குதான்‌. அதுக்காக இடையில கொஞ்ச நேரம் கூடவா கிடைக்கல? இப்பக்கூட நான்தான் கூப்பிட்டேன். நீங்க கூப்பிடல. அதான் தாலி கட்டிட்டோம்ல, அது வேலி மாதிரி. இனி, அவ‌ எங்க போயிடுவான்ற எண்ணம். அப்படித்தான.?”

“ஏய்.. அப்படி எல்லாம் இல்..‌” என்றவனின் சமாதானம், அவள் இணைப்பைத் துண்டித்ததால் நின்று போனது.

“வச்சிட்டா, பட்டுப் பட்டுனு கோவம் வந்திடுது இவளுக்கு. அப்படிப் பார்த்தா, இவ சொன்னதுக்கு நானும் தான் கோவப்படணும்!” என்றவாறே அவன் மீண்டும் அழைக்க, “இனிமேல் எனக்குக் கால் பண்ணாதீங்க. நானு சொன்னதையும் மீறி செஞ்சீங்க, அவ்வளவு தான்!” எனக் கைப்பேசியை நிறுத்தியவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“எனக்குப் பிடிக்கலனாலும், அவனுக்காக நானு பொறுத்துக்கிறேன்ல.? ஆனா அவன், என்னை மனுசியா கூட மதிக்க மாட்டிறான். அவ்வளவு லேசா போயிட்டேன் நானு? இவனுக்காக, லூசுமாதிரி அழுகிறேன் பாரு. அப்படியே இருக்கட்டும், அவன் ஒண்ணும் வேணாம் எனக்கு!” எனத் தனக்குத்தானே உரைத்துக் கொண்டவள் முகம் கழுவிவிட்டு வர, தேநீரை தந்தார் நாராயணி‌.

“தேங்க்ஸ் ஆச்சி!” என்று வாங்கி அருந்திட, “இது தேவையா உனக்கு?”

“எது தேவையா?”

“நானு சொன்னதை, இந்த வீட்டுல யாராவது கேட்டீங்களா.? இப்பப்பாரு எப்படி விட்டுட்டுப் போயிட்டான்னு. என்ன முறையோ,‌ என்ன குணமோ.? ஆசைத் தீருற வரைக்குமாவது, ஆம்பளைங்க சுத்தி வருவாங்க‌‌. இவனை, அதுல கூடச் சேர்க்க முடியாது போல. ஒரு வாரத்துலயே இப்படினா, மிச்ச வாழ்க்கை.?”

மனைவியின் பேச்சைக் கவனித்த கோபாலன், “நாராயணி, எதுக்கு இப்படித் தேவை இல்லாததைப் பேசிக்கிட்டு இருக்க.? ரெண்டு நாளுல வந்து கூட்டிட்டுப் போறேன்னு தான சொன்னான், அதுக்குள்ள‌ எதையாவது சொல்லி அவங்களுக்குள்ள பிரச்சனையைக் கிளப்பி விட்டுடாத!” எனக் கண்டிக்க, “ஆமா, நானுதான் எல்லாத்துக்கும் காரணம்.‌ அவன்‌ ஒண்ணுமே செய்யல, பாருங்க.‌ என்னமோ போங்க.‌ ஆனா தமிழு அப்படியே விட்டுடாத‌. அப்பப்ப கேள்விக் கேட்டுக்கிட்டே இரு. நீயி விட்டேனா, அதுதான் வசதினு அவன் இஷ்டத்துக்கு இருப்பான்.‌” என்றுவிட்டுச் செல்ல, கலங்கிய குட்டையாய் மாறிப் போனது தமிழின் மனம்.

கொதித்துப் பொங்கும் உலையை அடக்க, உடனடியாய் நெருப்பை அணைத்து விட்டால் அது உள்ளமுங்கி விடும் தான்‌. ஆனால் அரிசி பதமாய் வேக வேண்டுமே.? இல்லையென்றால் உண்பது எவ்வாறு.?

சேரல்.. மனையாள் உரைத்த சொல்லின் ஆழமான வலியைக் குறைக்க விலகி நிற்க எண்ணினான்.‌ அதற்கான கால அவகாசமாய் இரண்டு நாட்களை நிர்ணயித்தான். ஆனால் ‘அதற்கான இடமும் காலமும்‌ சரியாய் இருக்கிறதா?’‌ என்பது தற்போது கேள்விக் குறியே!

மகளின் அருகே வந்த சவிதா, “என்ன யோசனை தமிழ்..?”

“என்னம்மா, ஆச்சி இப்படிச் சொல்லுறாங்க? அப்ப அத்தான்..” என அவள் தவிப்புடன் வினவ, “மத்தவங்க ஆயிரம் சொல்லலாம். உனக்குச் சேரலைப் பத்தித் தெரியும் தான.?”

மறுத்துத் தலையசைத்தவள், “எனக்குத்தான் முழுசா தெரியலயே?”

“ஒண்ணும் இல்லடா. அவன் வர்றேன் தான சொன்னான், அப்புறம் என்ன?”

“ஏன், எனைய விட்டுட்டுப் போனாரு.?”

“நீயி, ஏன் கூட வர்றேன்னு கிளம்பல?”

அவள் திகைப்பாய்ப் பார்க்க, சவிதா சிரித்தார்.

“என்னம்மா சிரிக்கிற.?”

“ஆம்பளைங்களுக்கு வெளிய ஆயிரம் வேலை இருக்கும். அந்த யோசனையில, சில விசயங்களை மறக்கலாம். அதுக்காக எல்லாம், அவங்களைக் குற்றவாளியா ஆக்கக் கூடாது. அப்புறம் வாழுற வாழ்க்கை, தண்டனையா தெரிய ஆரம்பிச்சிடும். நானு நேத்தே சொன்னேன், ‘கொஞ்சம் பொறுமையா இருந்து பாரு”னு. திரும்பவும் சொல்லுறேன், அவசரப்படாத‌. முக்கியமா, உன்னோட ஆச்சி இருக்கும் போது சேரலைப் பத்திப் பேசாத! அவனோட நல்லது கெட்டது ரெண்டும், உன்னையும் பாதிக்கும்‌. பார்த்து நடந்துக்க.” என்றிட, தாத்தாவைப் பார்த்தாள் தமிழ்.

“நீயும் உன்னோட ஆச்சியும் இவ்வளவு தூரம் யோசிக்கிற அளவுக்கு, இது பெரிய விசயம் இல்ல!” என அவரும் தன் பங்கிற்கு உரைக்க, அமைதியாய் அறைக்குள் எழுந்து சென்றாள்.

இதற்கிடையில் நான்கு முறை அழைத்தும்.. மனையாள் பதில் அளிக்காததால், மாமியாரிடம் பேசினான் சேரல்.

“என்னாச்சு அத்தை? திடீர்னு ஃபோன் போட்டா, அவளா பேசிட்டுக் கட் பண்ணிட்டா.?”

“எல்லாம், என்னோட மாமியார் செஞ்ச வேலை தான்.”

“என்னவாம் ஆச்சிக்கு.?”

“நீயி கிளம்பிப் போனதுல இருந்து, இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமானு ஒரே பாட்டு!”

“அதுசரி‌. உங்க மாமியார், அவங்க வேலையைச் செஞ்சிட்டாங்க. என்னோட மாமியாரா, நீங்க உங்க மகளுக்குப் புத்தி சொல்லுறது.?”

“சொன்னா, கேட்க மாட்டா. அவளா புரிஞ்சிக்கிட்டா தான், உண்டு. நானு முன்னாடியே சொன்னேன், நீயிதான் பார்த்துக்கிறேன் அத்தை, கட்டிக் கொடுங்கனு கேட்ட.”

அவன் சிரிக்க, “சேரா, அவளுக்கு உன்னோட தொழிலைப் பத்தி இதுவரைக்கும் அறிமுகம் இல்ல. புரிஞ்சிக்காம.. முன்ன பின்ன ஏதாவது பேசிட்டான்னா, சங்கடப்படாத. அவக்கிட்டயும் சொல்லி வைக்கிறேன். கொஞ்சம் பார்த்துக்கோ.”

“அதெல்லாம் நானு பார்த்துக்கிறேன், அத்தை.”

“பேசாம, நீயி அவளைக் கூட்டிட்டே போயிருக்கலாம்.”

“ஏன்.?”

“அத்தைய நினைச்சா தான். அவங்க பேசப் பேச, இவ குழம்பிப் போயிடுறா.”

“குழம்பாம, தெளிவு கிடைக்காது அத்தை. அவளே தெளிஞ்சிடுவா, இல்லேனா நானு எப்படியும் தெளிவைக் கொடுத்திடுவேன். வருத்த படாதீங்க!” எனப் பேச்சை நிறுத்தியவன், படுக்கையில் விழுந்தான்.

சனி ஞாயிறு.. இரு நாட்களும் அதிகப்படியான பணியால், மனைவியைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லை சேரலிற்கு. இல்லத்திற்கு வரும் பொழுதுதான், அவளின் நினைவே வரும்.

இரவின் தனிமை கூட்டிய ஏக்கத்தில், தமிழின் மீதான வருத்தம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. இதற்காகத்தான் அவன் விலகி வந்தான். நேரடியாய்ப் பேசாமல், சவிதாவிடம் அவ்வப்போது கேட்டு அவளின் நிலையைத் தெரிந்து கொண்டான்.

திங்கட்கிழமை அன்று கடை முடிந்து வந்தவனிடம், “போயி, தமிழைக் கூட்டிட்டு வாடா!”‌ என்றாள் கீதா.

“இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கட்டும்!”

“சேரா.. நீயி நடந்துக்கிறது சரியில்ல.”

“அவ, அங்க இருக்கட்டும் அக்கா.”

“உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையாடா.?”

“அப்படியே பிரச்சனைனாலும், அதை நானு பார்த்துக்கிறேன்‌. நீயி ஒழுங்கா, உன்னோட வீட்டுக்காரருக்குச் சோறு பொங்கிப் போடு, போ!” என்று தமக்கையின் வாயை மூடி அனுப்பினான்.

சவிதாவும் பேச, இதையே தான் சொன்னான்.

“அப்ப, வேணும்னே தான் விட்டுட்டுப் போனியா சேரா.?”

“அவ, என்னோட பொண்டாட்டி அத்தை.‌ எதை, எப்படிச் செய்யணும்னு தெரியும் எனக்கு. புதன்கிழமை கடையை முடிச்சிட்டு வர்றேன்.” என்று பேச்சை முடித்தான்.

உண்மையில் தமிழின் ‘நாத்தம்’ என்ற சொல்லை மறக்கவும் சரி, அதைக் கடக்கவும் சரி.. அவனிற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.‌ அதன்பின்னர் தான், மனைவியிடம் இயல்பாகவும் பேச முடியும்‌‌.‌ அவள் தற்போது பேசாமல் இருப்பதுக்கூட, நல்லதற்கு என்றே எண்ணினான்‌. இவனும் கூட அவளை அழைக்கவில்லை.

‘உனக்கு, நான் சற்றும் குறைந்தவள் அல்ல!’ எனும்படியாய் அவளும் பிடிவாதமாய்ப் பேச நினைக்க வில்லை.

‘அவன் எனக்காக ஒருநாள் வேலையை ஒதுக்கி வச்சிட்டு இங்க இருக்க முடியாதுனா, நானு மட்டும் எதுக்காக அவன்கூடப் போகணும்.? ஒண்ணு என்கூட இருந்திருக்கணும். இல்லேனா, ‘போயிட்டு இன்னொரு நாள் வரலாம்’னு சொல்லிக் கூட்டிட்டுப் போயிருக்கணும். ரெண்டையுமே செய்யல. சரி, ‘வர்றியா என்கூட’னு ஒரு வார்த்தைக் கேட்கல.‌

மறுவீடுக்கு வந்த அன்னைக்கும் அப்படிதான், அவன் பாட்டுக்குப் போயிட்டு இஷ்டத்துக்கு வர்றான். பொண்டாட்டினு ஒருத்தி இருக்காளே,‌ அவ‌ என்ன செய்யிறாளோனு ஒரு அக்கறை மண்ணும் கிடையாது. நானு இங்க இருக்கணும்னு, அவனா தான முடிவெடுத்தான்.‌ அப்ப, அப்படியே இருக்கேன்.‌ இனி போகவே மாட்டேன்!’ என ஒரு முடிவுடன் இருந்தாள் செந்தமிழ்.

ஆனால் இருவருக்குள்ளுமே.. கடந்த தினங்களின் அன்பும், நெருக்கமும், இரவும், தனிமையும், உறவும், மற்றவரின் அருகாமையும் தனது வேலையைக் காட்டி இருந்தது.‌

‘அங்க இருக்கிற வரை, தமிழ்மானு சுத்திச் சுத்தி வந்தவன், இப்ப என்னை மறந்திட்டான். ரெண்டு நாள்னு சொல்லீட்டு, நாலு நாள் ஆகியும் வரல.’ என அவள் ஒருபுறம் மனம் நொந்து கொண்டிருக்க, ‘அவளை இங்க கூட்டிட்டு வந்து, எப்படி ஹேண்டில் பண்ணுறது.?’ என்ற சிந்தனையுடன் நாட்களைக் கடத்தினான் இளஞ்சேரல்.

இந்த மனம் தான், எத்தனை விசித்திரமானது? வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளவும் இயலாது, போனால் போகிறது என்று அரவணைக்கவும் முடியாது இரண்டிற்கும் நடுவே ஆசையிலும் ஏக்கத்திலும் தத்தளிப்பது தான் அதன் வேலை போலும்.

உறவுகளுக்கு இடையே ஊஞ்சலாடும் மனது.

ஆட்டம் ஆனந்தமாய் இருப்பதும், தவறிக் கீழே விழுந்து அடிபட்டுத் துடிப்பதும் ஆட்டுபவரின் கையில் அல்லவா உள்ளது.?

விதி நன்றாய் ஆட்டுவிக்கிறது. ஒரு முனையில் அவளும், மறுமுனையில் அவனும் இருக்க.. நாமும் காண்போம் ஊஞ்சல் வைபவத்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!