Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 16

அத்தியாயம் 16

மல்லி சாவித்திரி வீட்டில் உட்கார்ந்திருந்தாள். உள்ளே ப்ரியா உறங்க கூடத்தில் அவளோடு சாவித்திரியும் ராஜனும் அமர்ந்திருந்தனர். மல்லி இங்கே வந்து மூன்று மணி நேரம் ஆகிறது. வந்தவுடன் எதுவும் சொல்லாமல் ஓவென்று அழ ஆரம்பிக்க சாவித்திரிக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்த நேரத்தில் ராஜன் அவர்கள் தொழில் சம்பந்தமாக முக்கியமாக எதோ கேட்க வந்திருக்க அவனும் இது வரை அங்கே தான் உட்கார்ந்திருக்கிறான்.

ப்ரியாவின் ஆசிரியை கேட்ட கேள்விகளில் மல்லிக்ககு சாட்டையால் அடி வாங்கியது போல இருந்தது.



Advertisement

சுந்தரின் செயலால் தான் பட்ட காயத்தை மட்டுமே நினைத்தவளுக்கு மகளின் மனநிலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அவரின் கேள்விகள் உணர்த்தியது. ஏனென்றால் அவருக்குத் தெரிந்தது பெற்ற தாயான தான் கவனிக்கவில்லையே?

பெண்ணின் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டாள் தான். அவளின் பாதுகாப்பை பற்றி யோசித்தாள் தான். ஆனால் தானும் சுந்தரும் எதிரும் புதிருமாக இருப்பது மகளின் மனநிலையை எப்படி பாதிக்கும் என்று அவள் யோசிக்கவில்லையே?

பிறந்ததில் இருந்து ப்ரியாவுக்கு அவளும் சுந்தரும் தான் எல்லாம். தாத்தா பாட்டி மாமா அத்தை என்று எந்த சொந்தங்களும் இல்லாத குடும்பத்தில் பிறந்தவளுக்கு எல்லாமே அம்மா அப்பா தான். அவர்களையே சுற்றி சுற்றி வந்த குழந்தைக்கு திடீரென வீட்டின் சூழல் முற்றிலும் மாறிப்போனதை ஜீரணிக்கவே முடியவில்லை.

Advertisement

முன்பும் சுந்தர் அதிக நேரம் வீட்டில் இருந்தது இல்லை . ஆனால் வீட்டில் இருக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் மகளை கொண்டாடித் தீர்த்து விடுவான். மூவருமாக இருக்கும் நேரம் சிரிப்பும் பேச்சும் விளையாட்டுமாக இருந்து பழகி இருந்தாள் ப்ரியா.

Advertisement

அது ஒரே நாளில் தடம் புரள எப்போதும் கூடவே இருந்த அம்மா மூன்று மாதங்கள் எங்கே என்றே தெரியாமல் மறைந்து விட அப்பாவும் வீட்டுக்கு வராமல் எப்போதும் அவளை அதட்டிக்கொண்டே இருக்கும் பாட்டி என்று ரொம்ப பயந்து விட்டிருந்தாள்.

அவள் பயத்தை சொல்லக்கூட ஆளில்லாமல் போக அம்மா மறுபடி வந்த பிறகு இனி எல்லாம் சரியாகி விட்டது என்று அந்த சிறுமி நினைத்தாள். ஆனால் பெற்றவர்கள் இருவரும் எதிர் எதிர் துருவமாக நிற்க அம்மா அப்பாவைப் பற்றி கேட்டாலே எரிந்து விழ அப்பாவோ விலகி நிற்க குழம்பிப்போய் விட்டாள்.

சரி தான் தலையிட்டு இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தது அந்த பிஞ்சு. ஸ்கூலில் அவர்கள் சண்டை இட்டுக் கொண்டால் மிஸ் அவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மீண்டும் நட்பாக இருக்க இருவருக்கும் சேர்த்து வேலை கொடுப்பார்.

Advertisement

இருவருமாக போய் நோட் எடுத்து வருவது, பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர வைப்பது ஒன்றாக சாப்பிடுவது என்று சிறு சிறு நடவடிக்கையில் அவர்கள் சண்டையை மறந்து ஒத்துப் போக அவர் செய்ததை வீட்டில் பிரியா அவளுக்குத் தெரிந்த வகையில் கடைபிடிக்க ஆரம்பித்தாள்.

அதனால் அம்மா பற்றி அப்பாவிடமும் அப்பா பற்றி அம்மாவிடமும்  பேசி சமாதானத்துக்கு வழி தேட அவள் அடி வாங்கியது தான் மிச்சம். இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை.

அதோடு அம்மாவும் அப்பாவைப் போலவே வீட்டில் இருக்கும் நேரமும் குறைந்து போக அவளைத் தனியாக விடாமல் கூடவே மல்லி வைத்துக் கொண்டாள் . ஆனால் விளையாடவோ பேசி சிரிக்கவோ ஆளில்லாமல் மல்லி அவள் வேலையில் மூழ்கி விட குழந்தையின் துறுதுறுப்பையும் சிரிப்பையும் அது குறைத்தது.

அது பள்ளியிலும் எதிரொலிக்க படிப்பில் கவனம் குறைந்தது. எப்போதும் தன் அம்மா பழையபடி தன்னை விட்டு போய் விடுவாளோ அப்பா பாட்டியிடம் விட்டு விட்டு அவர் வேலையைப் பார்க்க போய் விடுவாரோ என்ற பயம் அவளை எந்த நேரமும் வாட்டியது.

தான் ஏதும் கேட்டு அழுது அடம் பிடித்தால் அம்மா மறுபடி விட்டு விட்டுப் போய் விடுவாளோ என்ற பயம் வேறு. இது எல்லாம் சேர்ந்து அந்த வயதுக்கான துறுதுறுப்பையும் பேச்சையும் குறைத்து ப்ரியா தனக்குள் ஒடுங்கிப் போனாள்.

பள்ளியிலும் அப்படியே இருக்க ஆசிரியையின் கவனத்துக்கு அது போனது. முதல் மதிப்பெண் எடுக்க மாட்டாள் என்றாலும் முதல் மூன்று ராங்குகள் வாங்கி விடும் பிரியா தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்து மற்றவற்றில் அம்பது மதிப்பெண்கள் எடுத்து தேறியது அவரின் கவனத்தை அவள் பக்கம் திருப்பியது.

ப்ரியாவை அழைத்து கனிவாக விசாரிக்க ஆறு மாதங்களாக  யாரும் அவளிடம் காட்டாத அக்கறையை அவர் காட்டவும் பிரியா அவள் பயங்கள் குழப்பங்கள் எல்லாம் கொட்டி விட்டாள்.

பிள்ளை பயந்து போய் இருப்பதை பார்த்து ஆசிரியை அவளை சமாதானம் செய்து தேற்றி அப்போதைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு இருவரையும் அழைத்து வரும்படி அவளிடம் சொல்லி விட்டு மீதியை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட ப்ரியா பிடிவாதம் பிடித்து இருவரையும் அழைத்து வந்திருந்தாள்.

ஆசிரியை அழுத்தமாக ப்ரியாவின் மனநிலையையும் அதன் பாதிப்பு வருங்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கும் என்றும் இருவருக்கும் பதிய வைக்க இருவரும் வாயே திறக்கவில்லை.

அவர் பேசப்பேச மல்லியின் குற்றவுணர்வும் அதிகமானது. சுந்தர் மனதில் இருப்பது வெளியே தெரியாமல் கல்லாக அமர்ந்திருக்க மல்லிக்கு மகளை தான் எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி இருக்கிறோம் என்று மனதுக்குள் குமைந்தாள்.

ஆசிரியை பேசி முடிக்க இருவரும் வாயே திறக்காமல் குனிந்த தலையோடு கிளம்பினர். மெளனமாக வீடு வந்து சேர சுந்தர் அப்போதே வேலை இருக்கிறது என்று கிழ்மபிவிட்டான்.

மல்லிக்கும் தனியாக அங்கே இருந்து என்ன செய்ய என்று புரியாமல் ப்ரியாவை அழைத்துக்கொண்டு சாவித்திரி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சாவித்திரி ப்ரியாவை பார்த்ததும் அவளை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள மல்லி மெளனமாக அதைப் பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.

இருவரும் பேச்சும் சிரிப்புமாக சமைக்க பிரியா சின்னப் பெண் அல்லவா ? எளிதாக தன்னோடு அன்பாக பழகும் சாவித்திரியிடம் ஒட்டிக் கொண்டாள்.

அதுவரை எதையோ பறிகொடுத்தது போல இருந்த மகள் மலர்ந்து சிரித்தபடி சாவித்திரி ஊட்டி விட சாப்பிடுவதை பார்த்து அவளுக்கு தன்னிரக்கமாக போனது.

ஆறு மாதங்களுக்கு முன் அவளும் இப்படித் தானே மகளோடு இருந்தாள். இப்போது அவள் மனதில் இருக்கும் அழுததத்தில் அவளால் தன்னை இலகுவாக வைத்துக் கொள்ளவோ சிரித்து மகளோடு விளையாடவோ முடியாமல் போனதில் அவள் செல்ல மகள் தானே பாதிக்கப்பட்டது?

ஆசிரியை அவர்களிடம் ப்ரியா பழையபடி அவள் அம்மா அப்பாவுடனான வாழ்க்கைக்கு ஏங்குவதாக சொன்னது நினைவுக்கு வர மல்லிக்கு அது எப்படி முடியும் என்று தான் தோன்றியது.

மனதளவில் அவள் சுந்தரை விட்டு விலகி ஆறு மாதங்களாகி விட்டது.மகளுக்காகவாவது அவனோடு போலியாக பேசி சிரிக்க அவளால் முடியாது என்னும்போது மகளின் மனம் மாற எப்படி முடியும்?

இந்த சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே அமர்ந்து இருந்தவளை பார்த்து விட்டு சாவித்திரியே ப்ரியாவை உள்ளே அழைத்து சென்று படுக்க வைத்து கூடவே கதைகள் பேசி உறங்க வைத்தாள்.

ப்ரியா உறங்கும்போது கூட எங்கே சாவித்திரி எழுந்து போய்விடுவாளோ என்று அவள் இடுப்பில் கட்டிக் கொண்டு காலையும் அவள் மேல் போட்டுக் கொண்டு கதை கேட்டவள் அப்படியே உறங்கிப் போனாள்.

அதன் பிறகே சாவித்திரி மெதுவாக எழுந்து மல்லியின் அருகே வந்து அமர்ந்து அவள் தோளில் கை வைத்தாள்.

“என்னடி ஆச்சு?” என்று கேட்க அவள் மடியில் தொப்பென்று முகம் புதைத்த மல்லிக்கு  அழுகையில் உடல் அப்படி குலுங்கியது.

அதுவரை பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட மல்லிக்கு கடந்த ஆறு மாதங்களாக ஏற்பட்ட அனுபவங்கள் அவளால் தீர்க்கக்கூடியவை அல்ல.

பாதுக்காப்பான குடும்ப சூழலை விட்டு வெளியே வந்து பரிச்சயமற்ற தொழிலை ஆரம்பித்து கடுமையான உடல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்க இதற்கெல்லாம் பழகவே அவளுக்கு இவ்வளவு நாட்கள் ஆனது.

சரி மகளுக்காக பெயருக்கு சுந்தரோடு ஒரே வீட்டில் இருக்க மனதை மிகவும் முயன்று தேற்றிக்கொண்டு தான் போனாள்.

தினமும் அவன் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவன் செய்த நம்பிக்கை துரோகம் ஞாபகம் வர அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறினாள். இதற்கே அவளுக்கு கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்க ஆசிரியை சொன்னதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று குழம்பிப் போனாள்.

கஷ்டப்பட்டு சில படிகள் ஏறி விட்டோம் என்று நினைக்கும்போது சறுக்கி பழையபடி வந்து விட்ட மாதிரி இருக்க மனதளவில் சோர்ந்து போனாள்.

இதையெல்லாம் அழுது ஓய்ந்து சாவித்திரியிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது ராஜனும் அங்கே தான் இருந்தான். அவனுக்கும் தான் எல்லாம் தெரியுமே.

“அழாதே மரகதம்…! எல்லாம் சரியாகிடும். நாங்க இருக்கோம் இல்ல? உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நாங்க பாத்துக்கறோம். நீ தைரியமா இருமா…”

சில மாதங்களாக அவளோடு பழகியதில் அவனுக்கு அவளிடம் பரிவும் மரியாதையும் ஏற்பட்டு இருந்தது.

அவளின் போராட்ட குணத்தை சாவித்திரியிடமே பல முறை பாராட்டி இருக்கிறான். அதனாலேயே அவள் தொழில் வளர யோசித்து யோசித்து உதவி இருக்கிறான். மூன்று மாதங்களில் மல்லி இந்த அளவுக்கு முன்னேற ராஜனின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

தனக்கு முன் முந்திக்கொண்டு ஆறுதல் சொல்லும் ராஜனையே பார்த்துக் கொண்டு இருந்த சாவித்திரிக்கு மல்லியின் பிரச்சனைக்கு தீர்வு தோன்றியது.

மல்லியின் தோளை தட்டியவள் “ஏய் அழாதேடி..! நான் உன் பிரச்சனைக்கு தீர்வு கண்டு பிடிச்சிட்டேன். அந்த டீச்சர் என்ன சொன்னாங்க? பிரியா சந்தோஷமா பழையபடி ஆகணும்னா அவளுக்கு அம்மா அப்பா சேர்ந்து அவளை அன்பா கவனிச்சா சரியாகிடுவா என்று சொன்னாங்க தானே?அப்புறம் என்ன? நீ முன்ன சொன்னபடி சுந்தரை டைவர்ஸ் பண்ணிட்டு ராஜனை கல்யாணம் செஞ்சுக்கோ..ப்ரோப்ளம் சால்வ்ட்…” என்று தீர்வு சொல்லவும் யார் அதிகம் அதிர்ச்சி அடைந்தனர் என்று தெரியவில்லை.

மல்லி, ராஜன் இருவரும் அவள் சொன்ன தீர்வில் ஸ்தம்பித்து போனார்கள் என்றால் ராஜனுக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது. கோபத்தை கொட்ட வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தவன் சாவித்திரியை தீர்க்கமாக முறைத்து விட்டு விருட்டென்று அந்த அறையை விட்டு எழுந்து போனான்.

அதையும் பார்த்தபடி மல்லி அப்படியே சிலையாக அமர்ந்திருக்க சாவித்திரிக்கு ஏன் அவன் கோபித்துக்கொண்டு போனான் என்று புரியவில்லை.

ஆனால் மல்லிக்கு புரிய இந்த புதுக் குழப்பம் தன்னால் தான் என்று தன்னையே நொந்து கொண்டாள்.

தனக்கு பார்ப்பதாக நினைத்து ராஜனின் உணர்வுகளை சாவித்திரி மதிக்காமல் போனது மிகப்பெரிய தவறாக மல்லிக்கே தெரிந்தது. அவன் தனக்கு பார்த்துப்பார்த்து செய்ததற்கே சாவித்திரியின் தோழி என்பது தான் காரணம் எனும்போது அதுவும் அவன் விருப்பத்தை தெளிவாக சாவித்திரியிடம் சொல்லிய பிறகும் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் பேசிய சாவித்திரியை என்ன சொல்வது என்று நினைத்தாள்.

அந்த நேரத்தில் இருக்கும் பிரச்சனைக்கு இதற்கு மேல் பேசினால் தானிகுக்கும் மனநிலைக்கு ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விடுவோம் என்று “சரி நான் கிளம்பறேண்டி…” என்று எழுந்து கொண்டாள்.

சாவித்திரிக்கு அப்போதும் தான் பேசியதில் தவறென்ன என்று புரியவில்லை.

“என்னடி! நான் சொன்னதுக்கு பதிலே சொல்ல மாட்டேங்கற? ராஜனும் எதுவுமே சொல்லாம போய்ட்டாங்க? நீயும் ஒண்ணும சொல்லாம கிளம்பறே? என்ன ஆச்சு? நான் சொன்னது நல்ல யோசனை தானே?”

மல்லிக்கு இப்படி பேசுபவளை என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவளுக்கே அவள் பிரச்சனை தலைக்கு மேல் இருக்க பேசத் தெரியாமல் பேசி ராஜனை கிளப்பி விட்டவளை முறைத்தாள்.

அதே நேரத்தில் தனக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பவளை கடுமையாகவும் பேச மனம் வரவில்லை.

“நான் என் வீட்டுக்கு கிளம்பறேண்டி…! அதாவது என் புருஷன் இருக்கும் வீட்டுக்கு….”

மல்லி இப்படி பேசவும் சாவித்திரி கடுப்பாக “ஏண்டி! அப்பொல இருந்து உன் அத்தான பத்தி பொலம்பித் தள்ளி அவன் கூட எப்படி வாழறது? மகளுக்காக  கூட பொய்யா உன் அத்தான் கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப எதுக்கு அங்கே வேகமா கிளம்பற? “ என்று எரிந்து விழுந்தாள்.

“ஏண்டி அவரோட வாழ மனசு ஒப்பலன்னு சொன்னா இன்னொரு ஆள கல்யாணம் பண்ண சொல்லுவியா? அப்புறம் அவருக்கும் எனக்கும் என்னடி வித்தியாசம்? இதுல உன்னையே நினைச்சிட்டு உன் பின்னால் சுத்திட்டு இருக்கிற ஒரு மனுசனை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம எனக்கு ஜோடி சேர்க்கற கிறுக்குத்தனமான யோசனைக்கு என்ன பதில் சொல்லணும்? சொல்லு…”

அவள் முடிவை அழுத்தம் திருத்தமாக தோழிக்கு பதிவு செய்த  மல்லிக்கு மனதுக்குள் அந்த நேரத்தில் ஒரு தெளிவு பிறந்தது.

அதே நேரம் சுந்தரும் ஆசிரியை சொன்னதை வைத்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். மதியம் முக்கியமான வேலை என்று வந்தவனுக்கு வேலை சீக்கிரம் முடிந்து விட தன் சின்ன அலுவலகத்தில் அமர்ந்து விட்டான். அவன் இன்று செய்த வேலையால் இனி மாதா மாதம் அவன் வருமானம் சில ஆயிரங்கள் கூடும். ஆனால் இந்த வெற்றி அவனுக்கு சந்தோசம் தரவில்லை.

முன்பெல்லாம் வேலை முடிந்தால் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தான், பிறகு ஒரே விதமான வாழ்க்கை, மல்லியின் ஒரே விதமான பேச்சு என்று சலிப்பு வர வேலை இருந்தாலும் இங்கேயே இருக்க ஆரம்பித்திருந்தான்.

குளிக்கவும், இரவு உறங்கவும் மட்டுமே வீட்டுக்கு போக ஆரம்பித்து இருந்தான். அப்படியே கடந்த இரண்டு வருடங்களாக இருந்து பழகியவனுக்கு டீச்சர் பேசிய அமைதியான ஆழமான வார்த்தைகள் சாட்டையால் அடித்தது போல இருந்தது.

தான் எந்த அளவுக்கு சுயநலமாக இருந்திருக்கிறோம்? தன்னை நம்பி வந்தவளை தன்னை நம்பிப் பிறந்தவளை நோகடித்து தான் சம்பாதித்து என்ன சாதித்தோம் என்ற யோசனை முளைத்தது.

மல்லியை தண்டிப்பதாக நினைத்துக்கொண்டு தன் ரத்தத்தை தன் செல்ல மகளை அல்லவா தண்டித்து இருக்கிறான்?

அவளுக்காகவாவது இனி தான் மாற வேண்டும் என்று தோன்ற அது எப்படி என்று தெளிவு வராவிட்டாலும் அதற்கான முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற ஞானம் வந்தது. இந்த முடிவோடு அவனுமே அன்று ஏழு மணிக்கே வீட்டுக்கு கிளம்பியிருந்தான்.

மகளுக்காகவாவது தாங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று அந்த பெற்றோர் நினைத்தாலும் அது எளிதில் நடக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!