இரண்டு நாட்களாய் குமார் பணிக்கே வரவில்லை. சேரல் இருமுறை கைப்பேசியில் அழைத்துப் பார்த்தும் பதில் வராததால், அப்படியே விட்டுவிட்டான்.
Advertisement
தமிழும்.. கணவனது உடல்நிலை மற்றும் துவக்கத்தில் சாரங்கன் விசயத்தில் நடந்ததை எண்ணி, நடந்த எதையும் உரைக்கவில்லை. அத்தோடு அவன் வராததன் காரணம், ‘பயம்’ என்றே தோன்றியது.
Advertisement
உடல்நிலை சரியில்லாததால்.. தான் கடைக்குச் செல்லாமல், பொறுப்பைச் சாரங்கனிடம் ஒப்படைத்தான். வியாபாரம் செய்வதற்கான அனுபவமும், லாவகமும் தெரியவில்லை எனினும் நேர்மையாய் இருந்தான் ரங்கன். ஓரளவிற்குக் கறி வெட்டவும் பழகியிருந்தான்.
Advertisement
பரமசிவம் அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்ள, கீதாவும் கூடத் தினமும் ஒருமணி நேரம் அளவிற்குச் சென்று வந்தாள். அதனால், தொழிலில் பெரியதாய் எவ்வித இறுக்கமும் ஏற்படவில்லை.
சரியான ஆள் இல்லாததால் லாபம் என்று சொல்லும் அளவிற்குக் கிடைக்கா விட்டாலும், நஷ்டம் அடையாமல் பார்த்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்தவனிடம் வந்த தமிழ், “அத்தான், காய்ச்சல் சரியான மாதிரி தெரியலயே? இன்னொரு தடவை ஹாஸ்பிடல் போயிட்டு வருவோமா.?”
“உடனே எப்படிச் சரியாகும்? இப்ப எல்லாம், மூணு நாலு நாள் ஆகுதாம். இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம். அப்பவும் சரியாகலேனா ஹாஸ்பிடல் போகலாம், சரியா.?”
“ம்ம்..” என அரை மனதுடன் தலையசைத்தவளைப் பார்த்துச் சிரித்தவன், “காய்ச்சல், எனக்கா உனக்கானு தெரியல. நீயிதான், முகம் எல்லாம் வாடிப் போயி இருக்க!”
“ப்ச்ச்..” என்றவள் கீழே அமர, “மேல உட்காரு, தமிழ்மா.”
மனைவியின் சொற்களில் மனம் நெகிழ.. நேராய் படுத்து அவளைப் பார்க்கும் படித் தலையைத் திருப்பி இருந்தவன், முழுமையாய் பக்கவாட்டில் திரும்பிக் கொண்டான்.
சேரலின் நெற்றியில் தமிழின் கன்னம் உரசிட, “என்னாச்சுமா உனக்கு.?”
“எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பீங்களா? ரெண்டு நாளா சரியா சாப்பிடாம, பேசாம, படுத்துக்கிட்டே இருக்கவும் ஒரு மாதிரியா இருக்கு அத்தான். எப்ப பழைய மாதிரி மாறுவீங்க.?”
“நானும் எழுந்திரிச்சு, பட்டிக்குப் போகணும்னு தான் நினைக்கிறேன். ஆனா அரை மணி நேரம் சேர்ந்த மாதிரி உட்கார்ந்து இருந்தாலே, கைகால் எல்லாம் வலிக்கிது.”
“தைலம் தேய்ச்சு விடவா.?”
“அதெல்லாம் வேணாம். சாப்பிட்டியா நீ.?”
“ம்ம்..”
“அப்ப, கொஞ்ச நேரம் தூங்கு. காலையில இருந்து.. எனக்குக் கஞ்சி, சுடுதண்ணி, மருந்து, மாத்திரைனு வேலை செஞ்சிக்கிட்டே இருக்க.”
பதில் உரைக்காது கணவனிற்கு நெருக்கமாய் முகத்தைப் பதித்துக் கண்களை மூடியவளைப் பார்க்கவே, சேரலிற்கு அத்தனை நெகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டு நாட்களாய், அவனை விட்டு அடி நகரவில்லை.
தண்ணீருக்காக வந்தால் கூட.. “எனைய கூப்பிடலாம்ல? எதுக்கு எழுந்து வர்றீங்க அத்தான்.?” என்று ஓடி வந்தாள். சில உணர்வுகளைப் பகிர்வது என்பது இயலாத காரியம். இது போலான தருணங்களில், அவை காட்டிக் கொடுத்துவிடும்.
எதற்காகத் தமிழைத் திருமணம் செய்ய நினைத்தானோ, அது தற்போது அவனிற்குக் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெயராம் இறந்த தருணத்தில், தந்தைக்காக அவள் சிந்திய கண்ணீரை எல்லாம் வரிகளில் கோர்த்திட இயலாது. தமிழின் அந்த அன்புதான், அவனுள் நேசத்தை விதைத்தது. இதோ இன்று காய்ச்சல் வந்து படுத்தவனிற்கு, நிழலாய் உடன் இருக்கிறாள். இதற்கு மேலா, அவனிற்குப் பெரியதாய் தேவையோ ஆசையோ இருந்துவிடப் போகிறது.?
“ஏது.?” என ஒரு நொடி வாயைப் பிளந்தவள் எழுந்து படுக்கையில் அவனருகே அமர்ந்தபடி, “என்ன, பிள்ளைய பெத்து வச்சிருக்கீங்க? எனைய தினமும் பாடா படுத்துறாரு. நல்லா நாலு அடியைப் போட்டு, ‘ஒழுங்கா நல்ல பிள்ளையா இருக்கணும். எப்பவும் உன்னோட பொண்டாட்டிப் பேச்சைக் கேட்கணும்’னு சொல்லீட்டுப் போங்கனு, உங்கக்கிட்டயே அத்தையைத் துரத்தி விட்டுடுவேன்!”
“மாமியாரை இப்படியா செய்யிவாங்க? வில்லி மாதிரி பேசாத தமிழ்மா.”
“நானு வில்லியா.? உங்களை!” என்று அவள் லேசாய் அடிக்க, “ஐயோ.. அம்மா.. வலிக்கிதே! என் பொண்டாட்டி, எனைய அடிக்கிறாளே! இப்படி எல்லாம் செய்யக் கூடாது. அப்புறம் புருஷனை அடிச்ச பாவம், உனைய விடாம துரத்தும்!”
“அம்மாடி.. என்ன பேச்சு, என்ன வாயி!” என அவள் பொய்ச் சினமும் உண்மை வியப்புமாய் உரைக்க, அவனோ சிரித்தான்.
“நீயெல்லாம் ஒரு அக்காவா? இந்நேரம் என் தம்பிய இப்படிக் கொடுமைப் படுத்துறியேனு அவக்கிட்ட சண்டைக்குப் போயிருக்க வேணாம்?”
“ஏன்.. நாளப்பின்ன நானு உன்னோட வீட்டுக்குள்ள வர வேணாமா.?”
“உனைய யாரு வரக்கூடாது சொல்லுவா? அவ சொல்லிடுவாளா.? அது என்னோட வீடுக்கா!”
“வீடு உன்னோடதா இருந்தாலும், அதுக்கு உரிமையானவ தமிழ். அதுனால அதிகாரமும் அவளுக்குத்தான்.”
“இதெல்லாம் அநியாயம்!”
“போடா போடா! காலையிலயே வம்பு பேச வந்திட்டான். இந்தா, உன்னோட கடைய நீயே பார்த்துக்க!” எனக் கிளம்பியவள் அவனது நெற்றியைத் தொட்டுப் பார்க்க, “சரி ஆகிடுச்சுக்கா.”
“ஒரே நாள்ல சரியாகிடுச்சு, என்ன அதிசயம்?”
“என் பொண்டாட்டியோட கவனிப்பு அப்படி!”
“என்ன செஞ்சானு தெரியல. நல்லா இருந்தா சரிதான். திரும்பவும் உடனே பட்டிக்குப் போறேன், மொத்தக்கறி கொடுக்கிறேனு ஆரம்பிச்சிடாத. உடம்பைக் கொஞ்சம் பார்த்துக்க.”
அவன் தலையசைக்க, “இவன் இப்படித்தான் நல்லபிள்ள மாதிரி தலையை ஆட்டிட்டு, அப்புறம் அவன் இஷ்டத்துக்குத் தான் செய்யிவான். ரங்கா பார்த்துக்கடா, ஏதாவதுனா ஒரு ஃபோன் போடு. தமிழை அனுப்புறேன், நாலு அடியைப் போடட்டும்!” என்றுவிட்டுச் சென்ற தமக்கையைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தான் சேரல்.
ஒரு வாரம் கடந்து, ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்தான் குமார்.
‘தமிழ், கணவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லி இருப்பாளோ.?’ என்ற எண்ணத்தில் வராமல் இருந்தவன், ‘ஒருவேளை அவள் உரைத்திருந்தால் சேரல் நிச்சயம் தன்னைத் தேடி வந்திருப்பான். ஆகையால் நடந்தது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!’ எனத் தைரியமாய்த் தற்போது வந்திருந்தான்.
அத்தோடு மனதில் இருந்த அந்தக் குரூர எண்ணத்தின் சதவிகிதமும் அதிகரித்து இருந்தது. சேரலுக்கும் அவனது மனைவிக்குமான இடைவெளியில், தான் நுழைந்திட நினைத்தான். சில மனிதர்களின் எண்ணங்கள்.. உண்மையில், விலங்குகளின் மூர்க்கத்தை விட மிகவும் கொடியது.
அவனிற்குத் தெரியவில்லை, தனது பார்வையில் படுவது காட்சிப்பிழை என்று. உண்மையில் சேரல்.. உடலைக் காட்டிலும் உள்ளத்தின் உணர்வுகளோடு மனையாளைப் பிணைத்து வைத்திருந்தான். தன்னவன் முன்செல்ல, தன்னை அறியாமலேயே அவ்வழியிலேயே அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள் தமிழ்.
வெளிப்பார்வைக்குத் தெரிவது எல்லாம், அவர்களின் விலகல் தான். ஆனால் உள்ளுக்குள், அவன் துணையிடம் காதல் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தான்.
“என்ன, எங்கேயோ தொலைஞ்சுப் போயிட்டனு நினைச்சேன்? வந்து நிக்கிற?” எனச் சேரல் வினவ, “நானு தாலி கட்டுனவ விவாகரத்து வேணும்னு கேட்டு ஆளை அனுப்புனா, அதான் அந்த வேலையா போயிட்டேன்!” என்றான்.
சேரலுமே விசாரித்து அறிந்திருந்தான், நடந்த விபரங்களை. அது உண்மையும் கூட. குமாரின் நடவடிக்கைகள் தவறான வழியில் செல்வதை முதலில் கண்டித்துப் பார்த்தாள், அவனது மனைவி. அவன் பாதையை மாற்ற முயலாமல், அவளை அடித்துத் துன்புறுத்த, முழுமையாய்ப் பிரிந்துவிடும் முடிவிற்கு வந்திருந்தாள்.
கணவனிற்கான உணவு மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, கீதாவுடன் கடைக்கு வந்தாள் தமிழ்.
சற்றுத் தள்ளியிருந்த சுத்தமான இடத்தில் தம்பியின் மனைவியை அமரவைத்த மூத்தவள் கடைக்கு வந்து, “சேரா.. அந்தப்பிள்ள கஞ்சி கொண்டு வந்திருக்கு. நீயி போயி குடிச்சிட்டு வா. நானு பார்த்துக்கிறேன். ரங்கா நீயும் போடா..” என இருவரையும் அனுப்பிவிட்டுக் குமாரைக் கேள்வியாய்ப் பார்த்தாள்.
“என்னக்கா.?”
“இன்னும் உசுரோடவா இருக்க?”
“அக்கா.?”
“குடிச்சிட்டு, எங்கேயும் விழுந்து செத்துட்டியோனு நினைச்சேன்.”
“அதுசரி. உங்க வீட்டு ஆளுங்களுக்கு மட்டும், சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க? நானு எல்லாம் மனுசன் இல்லையா.? உங்க குடும்பப் பொம்பளைங்களோடது என்ன குணம்.?”
கீதா, அவனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள். எதுவும் பேசவில்லை. குமாரின் பார்வை, அவ்வப்போது சேரலும் தமிழும் இருந்த திசையில் தீண்டித் தீண்டி மீண்டது. அதை அவளுமே கவனித்தாள்.
சாரங்கன் அரை வயிற்றிற்கு அவசரமாய்ச் சாப்பிட்டு வந்ததும், “கடைய பார்த்துக்கோடா!” என எழுந்து சென்றாள் கீதா.
“சேரா சாப்பிட்டியா.?”
“ஆச்சுக்கா. மாத்திரை மட்டும் போடணும்.”
“சரி, சீக்கிரம் போ. இதுதான் கடைசி, இனி அந்தக் குமார் இந்தப் பக்கமே வரக்கூடாது!”
அவன் கேள்வியாய்ப் பார்க்க, “பேச்சு, பார்வை ரெண்டுமே சரியில்ல. கடையில வருமானம் வரலனாலும் பரவாயில்ல. பேரு, கெட்டுப் போயிடக் கூடாது. இவன், பேசிக் கெடுத்திடுவான். வேணாம்.”
“சரிக்கா..” என்றவனிடம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வையும் உரைத்தாள் செந்தமிழ்.
இருவருமே அதிர்ச்சியாய்ப் பார்க்க.. அவன் குரலில் அழுத்தத்துடன், “ஏன்.. என்கிட்டச் சொல்லல நீயி?”
“வர மாட்டான்னு நினைச்சேன் அத்தான். அதுவும் இல்லாம, நீங்க கோவத்துல எதுவும் செஞ்சிடக் கூடாதுல.? இப்பதான், உங்களுக்கும் உடம்பு சரியாகி இருக்கு.”
கீதா கண்டிப்புடன், “அப்படி நினைக்காத தமிழ். எதுனாலும் சரி, சேரல்கிட்ட சொல்ல சங்கடமா இருந்தா என்கிட்டயாவது ஒரு வார்த்தைச் சொல்லீடு!”
அவள், “சரிங்க அண்ணி!” என்றிட, “நீங்க கிளம்புங்க. நானு பார்த்துக்கிறேன்!” என இருவரையும் அனுப்பி வைத்தான் இளஞ்சேரல்.