Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 8

அத்தியாயம் 8



Advertisement

அடுத்த இரண்டு நாட்களில், சம்பிரதாயத்திற்காகச் சேரனிற்குப் பெண் கேட்டுச் சென்றனர் பரமசிவம் குடும்பத்தினர்.

Advertisement

நாராயணி பெரிதாய்க் கண்டு கொள்ளவில்லை. பெயர்த்திச் சம்மதம் சொல்லி விட்டதால், பேசாமலேயே இருந்தார்.

Advertisement

ஒருமுறை தமிழிடம், “ஏன் இப்படிச் செஞ்ச? அவனைக் கட்டிக்கணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா.?” என்றிட, “அப்பாவோட ஆசை ஆச்சி.‌ இப்ப நம்ம கூட இல்லைனாலும், இதை நினைச்சுச் சந்தோஷப் படுவாரு இல்ல.?” எனப் பதில் உரைத்தாள்.

Advertisement

“இல்லாதவனுக்காக, உன்னோட வாழ்க்கைய அழிச்சிக்கணுமா.?”

“ஆச்சி.. நானு ஒண்ணும் சின்னப் பிள்ள இல்ல. என்னோட வாழ்க்கைய எப்படி வாழணும்னு, எனக்கு நல்லாவே தெரியும்! நீங்க வீணா கவலைப் படாதீங்க!” எனச் சமாதானம் உரைக்க, அதன் பின்னர் நாராயணிக்குப் பேச, வழி இல்லாமலேயே போனது‌.

மணமகனின் தந்தையாய் பரமசிவம் தாம்பூலம் கொடுக்க, வேணுகோபாலன் பெற்றுக் கொண்டார். இரு குடும்பத்தார் மட்டும் வீட்டிலேயே பேசி, இரண்டு மாதத்தில் முகூர்த்த தேதியைக் குறித்தனர்.

கீதா.. தமிழிற்குப் பூச்சூட்டி, “எனைய யாருனு தெரியிதா‌?”

“பரமசிவம் மாமாவோட மகதான? அப்பாவோட பதினாறாவது நாள் காரியத்துக்கு வந்து இருந்தீங்களே?”

“ம்ம்.. இறந்தப்ப வர முடியல, அதான் காரியத்துக்கு வந்தேன்.‌ மூணு வருஷம் ஆச்சு‌, இன்னமும் நினைவு வச்சிருக்க?”

அவள் புன்னகைக்க, “அதுசரி, அவன் இங்க அவ்வளவா வந்து போறது இல்லயே.? நீயும், ஊர் பக்கம் வந்தது இல்ல. இது எப்படி நடந்துச்சு?”

“எது.?”

கீதா தாம்பூலத்தைக் கண்களால் காட்ட, “இத நீங்க, உங்க தம்பிக்கிட்ட இல்ல கேட்கணும்.?”

“கேட்டேனே, சொல்ல மாட்டிக்கிறான்.”

“ஓஹோ.. நம்பி கட்டலாம்ல உங்க தம்பிய?”

“ஏன்? நம்பிக்கை இல்லாமத்தான் சரினு தலையை ஆட்டுனியா நீ.?”

அவள் சிரிக்க, “நல்ல பதிலு, சிரிச்சே மழுப்பிடு!” என்றுவிட்டுக் கீதா எழுந்து சென்று சேரலின் அருகே அமர, ஆடவனின் கண்கள் வருங்கால மனையாளின் மீதே இருந்தது.

“போதும்டா பார்த்தது. அந்தப் பிள்ள கரைஞ்சிட போகுது.?” என்ற தமக்கையின் கேலியில் திரும்பியவன், “என்ன சொன்னா அக்கா, உன்னோட கொழுந்தியா.?”

“உன்கிட்ட சொல்லாததையா, என்கிட்டச் சொல்லப் போறா.?”

அவன் புன்னகைக்க, “அதெப்படிடா ரெண்டு பேரும், ஒண்ணு போல இருக்கீங்க? நீங்களா ஒண்ணைக் கேட்கிறீங்க, நானு திருப்பிக் கேட்டா மட்டும் பதில் வரமாட்டிக்குது!”

“என்ன கேட்டா.?”

“நம்பி, உனைய கட்டிக்கலாமானு தான்!”

“இதுக்கு, நானு கல்யாணத்துக்குப் பின்னாடி அவக்கிட்டயே பதில் சொல்லிக்கிறேன்.”

“என்னமோ செய்!”

“என்னக்கா, இப்படிச் சலிச்சிக்கிற.? ஏன், உனக்குப் பிடிக்கலயா.?”

“பிடிக்கலனு இல்ல.‌ தமிழோட ஆச்சி தான்!” என இழுக்க, “எல்லாமே நிறைவா அமைஞ்சிட்டா, வாழ்க்கை சலிச்சிடும். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா தான், காரசாரமா ஓட்ட முடியும். என்னோட அம்மாவையே ஏத்துக்காதவங்க, என்னையா ஏத்துக்கப் போறாங்க? விடு!” என்றவனின் பதிலில், கீதாவின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

“தமிழுக்கிட்ட பேசலயா.?”

“இல்ல.”

“ஏன்.?”

“இன்னும் காலம் இருக்கே? பேசிக்கலாம். கல்யாணத்துக்குப் பின்னாடி, வேற வேல என்ன?”

“அப்ப கல்யாணத்தை முடிச்சிட்டு, வேல வெட்டிய பார்க்காம உன் பொண்டாட்டிக்கூடப் பேசிக்கிட்டு இருக்கப் போற? அப்படித் தானடா.?” என்று சிரிக்க, சூழல் கலகலப்பானது.

பெரியவர்கள் மட்டுமே பேசினர், திருமண ஏற்பாடுகளைப் பற்றி.

பரமசிவம், “எங்க பக்கம், மாப்பிள்ளை ஊர்ல கல்யாணத்தைச் செய்யிறது தான் பழக்கம். அதனால விசேஷத்தை ஆதிக்குடில்லயே வச்சுக்கலாம்.” என்றிட, “இங்க இருக்கிற எங்க சொந்தக்காரங்க எல்லாம், அவ்வளவு தூரம் எப்படி வர்றது?” என வினவினார் நாராயணி.

“எத்தனை பேரு கணக்கு வரும்மா.?”

வேணுகோபாலன், “ஒரு நூறு, நூத்தம்பது வரும் பரமசிவம்‌.”

“வண்டிய ஏற்பாடு செஞ்சுக்கலாம் மாமா. நீங்க, வந்தா மட்டும் போதும்‌.‌ மத்தது எல்லாம் என்னோட பொறுப்பு!” எனச் சமாதானம் உரைக்க, அரை மனதாய்த் தலையசைத்தனர்.

நடந்த நிகழ்வுகளின் பொழுது..‌ தமிழ் சேரலின் பக்கம் ஒருமுறை கூடத் திரும்ப வில்லை. அவன் பார்வையால் மட்டுமே தொடர்ந்தான்.

சவிதாவிற்குக் கணவனது விருப்பம் நிறைவேற போவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் மகளது நடவடிக்கை நிம்மதி இழக்க வைத்தது.

“எதுனாலும் சரி! உங்க ஆசைக்காகவும், சேரல் கேட்டதுக்காகவும் பேசி முடிச்சாச்சு. பிள்ளைகள, மூணு பேரும் சேர்ந்து நல்லபடியா பார்த்துக்கோங்க!” என்று ஜெயராம், கங்கா மற்றும் ரத்னத்தின் ஆன்மாக்களிடம் வேண்டிக் கொண்டார்.

ஆதிக்குடிலில் நிச்சயத்தன்று மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால், அன்னை கங்காவின் சங்கிலி ஒன்றை எடுத்து வந்திருந்தான் சேரல்.

“அக்கா, இதை அவளுக்குப் போட்டு விடு!” என்று கீதாவிடம் கொடுக்க.. அதைப் பெற்றுக் கொண்டு எழுந்து வந்தவளிடம், “கொடு, நானு போடுறேன்!” என வாங்கினார் நாராயணி.

கோபாலன், “ஏன்மா.? அவதான் போடட்டுமே.?”

“அதான், பூ வச்சு விட்டா இல்ல? போதும்!”

சவிதா, “என்ன அத்தை.?”

“நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவங்க செஞ்சா, இன்னும் கூட நல்லா இருப்பா என்னோட பேத்தி! வெறும் வயிறோட செஞ்சு,‌ இவளுக்கும் அதே நிலைமை வந்திடக் கூடாது பாரு!” என்றவரின் சொல்லில் பரமசிவத்தின் முகம் சட்டென்று இறுகிவிட, “ஆச்சி..” எனப் பேச முயன்ற சேரலின் கரத்தை அழுத்தமாய்ப் பற்றினாள் கீதா.

அவளின் புறம் திரும்பியவன், “அக்கா!” என்று அடிக்குரலில் அழைக்க, அவளின் முகத்திலோ நிறைந்த சிரிப்பு மட்டுமே இருந்தது. மனைவியின் அருகே அமர்ந்திருந்த மோகனின் இடம் காலியாய் இருக்க, அனைவரது பார்வையும் ஒருமுறை அங்குச் சென்று மீண்டது.

‘ஏற்கனவே இருக்கும் இறுக்கம் போதும்‌. எதுவும் பேசி, மேலும் ரணத்தைக் கூட்ட வேண்டாம்!’ என்று அனைவருமே வலுக்கட்டமாய் அமைதியை இழுத்துப் பிடிக்க, அதன்பின்னர் எவ்வித பேச்சும் இன்றியே சுபநிகழ்வு கனமாய் நடந்து முடிந்தது.

வரும்பொழுது இருந்த மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும் வடிந்துவிட.. செந்தமிழின் மீதான அன்பிற்காகவும், சவிதாவிடம் கொண்டிருந்த மரியாதைக்காகவும் எதுவும் பேசாது உறவுகளுடன் கிளம்பினான் சேரல்.

சாளரத்தின் கதவு திறக்கப்படும் ஒலி கேட்க, திரும்பிப் பார்க்கத் துடித்த கண்களிற்குத் தடைவிதித்து, ஆடவனின் கால்கள் சாலையை நோக்கி எட்டு வைத்தது.

தனது தோளில் பதிந்த அன்னையின் கரத்தை உணர்ந்து திரும்பிய தமிழ், “அவனோட குணம் மாறவே இல்லமா. இப்பக்கூட என்கிட்ட பேசல பாரேன்.?”

சவிதா புன்னகைத்து, “அவன் பேசுனான், நீயிதான் பேசல.”

அவள் புரியாமல் பார்க்க, “அப்பா இறந்தப்ப, உன் பக்கத்துல தான் இருந்தான். எத்தனை தடவைக் கூப்பிட்டான்னு கணக்கே இல்ல.”

“அன்னைக்கு நானு, நானாவே இல்லம்மா.”

“அது புரிஞ்சதுனால தான், திரும்பவும் உன்னையே தேடி வந்திருக்கான்.”

“அவன் தான‌ காரணம், அப்பா இறந்ததுக்கு‌?” என மெலிந்த குரலில் உரைக்க, “அவர் ரெண்டு மூணு வருசம் அதிகமா உயிர் வாழ்ந்ததுக்கு, அவன்தான் காரணம்.”

அவள் அமைதிக் காக்க, “தமிழ், எனக்கொன்னு சொல்லுறியா.?”

“என்னமா?”

“ஏன், நீயி கல்யாணத்துக்குச் சரினு சொன்ன.?”

பதில் உரைக்காது அங்கிருந்து நகர்ந்தவள், நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த நாராயணியைக் கண்டதும், சமையலறை நோக்கிச் சென்றாள்.

அவ்விடத்தில் நிகழ்ந்த சேரலுடனான முதல் உரையாடல் நினைவிற்கு வந்தது.

ஜெயராம் அவனை ஆதிக்குடிலில் இருந்து அழைத்து வந்து, இரு வாரங்கள் கடந்து இருந்தது.

“நானு ஊருக்குப் போறேன்!‌ எனக்கு வேண்டாம்! போதும்.” இவற்றைத் தவிர, வேறு எதையுமே அதுவரை அவன் பேசவில்லை.

அன்று காலை சவிதா கொடுத்த தேநீரை அருந்தி விட்டு, அந்த டம்ளரை வைக்க வந்தவன் வழக்கம் போல் கழுவ.. நீர் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த ஐந்து வயது தமிழ், “ஆச்சி ஆச்சி, அவன் தண்ணிய ஊத்தி விளையாடுறான்!” எனக் குரல் கொடுத்தாள்.

‘ஏற்கனவே தான் இங்கு இருப்பதில் பிடித்தமற்றவர், என்ன சொல்வாரோ?’ எனத் தவித்தவன் அவசரமாய், “ஓய்.. நானு ஒண்ணும் விளையாடல.”

“இல்ல விளையாடுன.‌ நானு பார்த்தேன்.”

“டம்ளரைக் கழுவி தான் வச்சேன்.”

“ஆமா.. அதுதான் விளையாட்டு.‌ நானு எதையாவது தண்ணியில கழுவுனா, அம்மா விளையாடாதனு தான் திட்டுவாங்க. ஆனா உன்னோட சட்டை மட்டும் ஈரம் ஆகவே இல்ல?”‌ என அவனது உடையைத் தொட்டுப் பார்த்து விட்டு, தானும் அவனைப் போல் டம்ளரைக் கழுவி உடையை ஈரமாக்கிக் கொண்டாள் தமிழ்.

“என்னோடது மட்டும் ஈரமாகிடுச்சு?” எனப் பிஞ்சு கைகளில் நீரை அள்ளி மீண்டும் அதே இடத்தில் துடைக்க, உடை முழுவதிலும் ஈரம் பரவியது.

“ஈரமானா, ஃபேன் காத்துல காய வைக்கணும். இப்படித் திரும்பத் தண்ணி ஊத்துனா, சொத சொதனு ஆகிடும்!”

“அப்ப, அழுக்கை சுத்தம் செய்ய வேண்டாமா.?”

“அதுக்குச் சோப்பைப் போட்டுத் துவைக்கணும். இப்படிச் செய்யக் கூடாது!”

‘அப்படியா?’ என்பது போல் அவனை ஒருமுறை பார்த்தவள், ஓடிச் சென்று துணி துவைக்கும் சோப்பால் உடையைத் தேய்க்க, “அச்சச்சோ! இப்படி எல்லாம் செய்யக் கூடாது. துணியைக் கழட்டிட்டு தான் துவைக்கணும். போயி, வேற சட்டையைப் போடு!” என அவளை அனுப்பினான்.

பின்னோடு வந்தவன், அலமாரியை அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்த தமிழைக் கண்டு, “என்ன, சட்டை மாத்தலயா.?”

“மேல இருக்கு. எனக்கு எட்டாது!” என்றிட, ஒரு உடையை எடுத்துக் கொடுத்தான்.

“இது வேணாம். அந்தப் புளூ கலர்‌‌ எடு!” எனத் தனக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கி அறைக்குள் ஓடியவள், உடையை மாற்றிக் கொண்டு முதலில் உடுத்தி இருந்ததைத் துவைக்கத் துவங்க, வெளியில் சென்று அமர்ந்து கொண்டான் சேரல்.

காய்கறிப் பையோடு வந்த சவிதா, “என்னடா, இங்க உட்கார்ந்து இருக்க? உள்ள வா!” என்று விட்டுச் செல்ல.. அடுத்த இரண்டாவது நிமிடம், “பாத்திரம் தேய்க்கிறேன், துணி துவைக்கிறேன்னு திரும்பவும்‌ உன்னோட சேட்டையை ஆரம்பிச்சிட்டியா? அலமாரியில இருந்த புதுத்துணியை எப்படி எடுத்த? ‌அதைப் பொங்கலுக்குத்தான் போடணும், எடுக்கக் கூடாதுனு சொல்லி இருந்தேனா இல்லையா? புதுசை இப்படிக் கரையா ஆக்கி வச்சிருக்கியேடி!” என்று மகளைக் கண்டித்தது வெளியே கேட்டது‌.

“அம்மா, அப்பா கூட்டி வந்த பையன் தான் இதை எடுத்துக் கொடுத்துப் போட்டுக்கச் சொன்னான்.” எனச் சேரலை அதில் இழுத்துவிட..‌ அவசரமாய் உள்ளே வந்து, “தெரியாம செஞ்சிட்டேன்‌. எனக்கு இது புதுசுனு தெரியாது!” என்று பயத்தோடு உரைத்தவனைக் கண்டு, அன்று சிரிப்புதான் வந்தது தமிழிற்கு. அன்னையின் அடியில் இருந்து, தான் தப்பித்து விட்டதாய் மகிழ்ச்சி கொண்டாள்.

இன்றும் கூட அதை நினைத்துப் புன்னகை மலர.. ‌அதேநேரம் இங்கிருந்து கிளம்பும் போது துளியும் பயம் இன்றி, “இது இல்ல,‌ என்னோட வீடு. என்னோட ஊரு ஆதிக்குடில். வீடும் அங்கதான் இருக்கு‌‌. நான் போறேன்!” என உரைத்துச் சென்ற பதினேழு வயது சேரலை எண்ணி, மனதில் வலி பரவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!