Skip to content
Post Views: 12,995
அத்தியாயம் 9
Advertisement
“மாமா..” என்ற அழைப்பில் நிதானித்த மோகன் திரும்பிப் பார்க்க, வேக எட்டுகளில் வந்தான் சேரல்.
Advertisement
“என்ன மாப்ள.?”
Advertisement
தயக்கத்துடன் நோக்கியவன், “மன்னிச்சிருங்க மாமா, நேத்து ஆச்சி அப்படிப் பேசுவாங்கனு எதிர்பார்க்கல. ராத்திரி நேரத்துல வேண்டாம்னு தான், எதுவும் பேசாம அப்படியே போயிட்டேன்.”
Advertisement
“அவங்க பேசுனதுக்கு, நீயி ஏன்டா மன்னிப்புக் கேட்கிற.?”
“யாரு பேசுனாலும் வலி ஒண்ணுதான.?”
“ராணிக்கிட்ட பேசுனியா.?”
“இல்ல மாமா, சங்கடமா இருந்திச்சு!”
மெலிதாய்ப் புன்னகைத்தவன் அவனது தோளில் தட்டி, “சாப்பிட வருவனு வாசல்ல உட்கார்ந்து இருக்கா.”
தலையசைத்தவன், “போயிப் பார்க்கிறேன் மாமா. நீங்க தப்பா நினைக்கலேனா, ஒரு விபரம் கேட்கவா.?”
மோகன் கேள்வியாய் நோக்க, “கல்யாணம் ஆகி பதினோரு வருசம் ஆச்சு. அப்பப்ப டாக்டரைப் பார்க்கிறேனு போறீங்க. என்னதான் சொல்லுறாங்க.?”
அவன் சிரிக்க, “என்ன மாமா, சிரிக்கிறீங்க.? அக்காக்கு எதுவும்..?”
மறுத்துத் தலையசைத்தவன், “அவளுக்கு எதுவும் இல்ல மாப்ள!”
“அப்புறம் என்ன மாமா? எத்தனை பேரு, வைத்தியம் பார்த்துப் பிள்ள பெத்திருக்காங்க? நீங்க பார்க்கிற டாக்டர் சரியில்லனா, வேற டாக்டரைப் பாருங்க. ஒருவேள காசு பணத்தைப் பத்தி யோசிச்சு தயங்குறீங்களா.? நானு, ஏற்பாடு செஞ்சு தர்றேன் மாமா. பெரியப்பாவும் அக்காவும் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க. நானு இதையாவது செய்யிறேனே.?”
அவனைக் கனிவுடன் நோக்கியவன், “சில சிக்கல்களுக்குப் பதில் இல்ல மாப்ள. நீயி இவ்வளவு சங்கடப்படுறதுனால சொல்லுறேன். குறை ராணிக்கு இல்ல, எனக்குத்தான்!”
சேரல் அதிர்ச்சியாய்ப் பார்க்க, “நானு கூட.. ‘உனக்கு எதுக்கு இவ்வளவு சங்கடம்? பேசாம பிரிஞ்சிடலாம், வேற கல்யாணம் செஞ்சிக்கோ’னு சொன்னேன். இல்லாட்டி ‘நானு ஊரை விட்டு ஓடிப் போயிடுறேன், நீயி உன்னோட வாழ்க்கையைப் பார்த்துக்கோ’னு கூடச் சொல்லிப் பார்த்தேன். கிறுக்கி, கேட்க மாட்டிறா. ‘நீங்க எனைய விட்டு விலகிப் போகணும்னு நினைச்சா, செத்துப் போயிடுவேன்’னு மிரட்டி எனைய கூடவே வச்சிருக்கா. இதுக்கு மேல, அவளை எப்படி விட முடியும்? இவ்வளவு வலியும் வேதனையும், என்னால தான் மாப்ள!” எனக் கலங்கிய குரலில் உரைத்தவனைக் கண்டு மனம் பாரமானது.
அடுத்தச் சொல் உதிர்ப்பதற்கு நா எழவில்லை. முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டன் தொண்டையைச் செருமி, “பெரியப்பாக்கு, இது.?”
“தெரியும், நானே சொல்லிட்டேன். நீங்க என்னோட மகளை நல்லா பார்த்துக்கிட்டாலே போதும்னு சொல்லிட்டாரு! எனக்குத் தெரியாது மாப்ள. முன்னாடியே தெரிஞ்சிருந்தா, கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்.”
“அட, விடுங்க மாமா! அதான் அக்காவைத் தங்கமா பார்த்துக்கிறீங்களே? இதுக்கு மேல என்ன வேணும்.?”
மோகன் முயன்று புன்னகைக்க, “உங்க அம்மாக்கு விபரம் தெரியாதா மாமா? அதுனால தான் இப்படிப் பேசிக்கிட்டுத் திரியிதா.?”
“அவங்களுக்குத் தெரிஞ்ச பின்னாடிதான், இப்படிப் பேசவே ஆரம்பிச்சாங்க.?”
அதிர்ந்த சேரல், “அவங்களும் ஒரு பொம்பளை தான, எப்படி உண்மை தெரிஞ்சும் இந்தமாதிரி பேச வாய் வருது.?”
“எனக்குதான் பிரச்சனைங்கிறதை அவங்களால ஏத்துக்க முடியல. உண்மையைச் சொல்லணும்னா, நம்ப மாட்டிறாங்க. ராணி இதைக் காரணம் காட்டி விலகிப் போயிடுவாளோ, வெளிய எதுவும் சொல்லிடுவாளோனு பயம். சாதாரணமா எந்த ஆம்பளைக்கிட்டப் பேசுனாலும், நானு இப்படி இருக்கிறதால தான் மத்தவங்கக்கிட்ட பழகுறானு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.
உனக்குத்தான் தெரியுமே, ராணிக்குக் கை வைத்தியம் நல்லா வரும். ஆம்பளைங்க யாரும் சுளுக்கு எடுக்க, தசைப் பிடிப்பு விலக, எண்ணெய் விட்டு நீவனு வந்தா.. அடுத்தவனைத் தொட்டுப் பார்க்கிறானு குத்தம் பேசுறாங்க. என்னோட அக்கா மகன், ‘முதுகு பக்கம் மூச்சு பிடிச்சுக்கிச்சு அத்தை, எந்த வேலையும் செய்ய முடியல’னு வந்தான்.
ஏதோ அவன்கிட்ட சிரிச்சுப் பேசி, உலக்கையை வச்சு எடுத்து விட்டிருக்கா. சின்னப் பையன்கிட்ட பழகுறான்னு, ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க. ‘அவன் எனக்குப் பிள்ள மாதிரி மாமா. இப்படிப் பேசிட்டாங்களே’னு ஒரே அழுகை. என்னால சமாதானமே சொல்ல முடியல. அவனும், அதுக்கு அப்புறம் எங்கக்கிட்ட பேசுறதே இல்ல. இதையே நினைச்சுக்கிட்டு.. உருப்படியா எந்த வேலைக்கும் போகாம, சும்மா சுத்திக்கிட்டு இருக்கான்.
நானும் வண்டிக்குப் போறதால, வாரத்துக்கு ஒண்ணு இல்ல ரெண்டு தடவை தான் வர்றேன். மத்த நாள் எல்லாம், அம்மாக்கூடத் தான் இருக்கா.
இன்னும் அங்கேயே இருந்தா, எங்கம்மா ராணிய பேசிப் பேசியே கொன்னுடும். தனியா வீடு பார்த்துப் போகலாம்னா, உங்க அக்காவைத் தனியா விடவே பயமா இருந்திச்சு.
அதான் மாமாக்கிட்ட எல்லா விபரத்தையும் சொல்லி, இங்கேயே கூட்டிட்டு வந்திட்டேன். நீயும் இருக்கிறதால, எதுனாலும் பார்த்துக்குவ. ஒருவேள எனக்கு எதுவும் ஆனாக்கூட, பார்த்துக்கடா அவளை!”
“ஏன் மாமா, இப்படிப் பேசுறீங்க.?”
“டிரைவர் வேலையே, உசுருக்கு உத்திரவாதம் இல்லாதது தான.? என்னனே தெரியல, இப்ப எல்லாம் எதிர்காலத்தை நினைச்சுக் கொஞ்சம் பயமா இருக்கு. இதுவரைக்குமே இப்படி இருக்கு. மிச்சக் காலத்தையும் எப்படிக் கடத்தப் போறேனோ, தெரியல!”
“சங்கடப்படாதீங்க மாமா! உங்க மனசுக்கும் அக்கா மனசுக்கும் நல்லதே நடக்கும்!” என ஆறுதல் வார்த்தைகளை உரைத்தவன், கீதாவைக் காணச் சென்றான்.
காலம் யாரிற்காகவும் எதற்காகவும் தனது நிலையில் மாற்றம் கொள்வது இல்லை. கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது. அதனோடு இணைந்து நாட்களும் பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜக்கையனின் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை முடிந்தது. அதனால் அனைத்துப் பணிகளையுமே, காயத்திரியே செய்ய வேண்டிய சூழல். முன்பும் செய்வாள் தான், ஆனால் அது அன்னையுடன் இணைந்து. தற்போது உதவிக்குக் கூட, ஆள் வைத்துக் கொள்ள முடியாத நிலை.
அதிகப்படியான செலவு, மருத்துவமனையில். ‘காசைக் கரியாக்காத, வேலை செய்யிறது ஒண்ணும் தப்பில்ல. அம்மா குணமாகி வர்ற வரைக்கும், சிரமம் பார்க்காம செய்யி!’ என்று விட்டார் தந்தையானவர்.
சமையலை முடித்து, ஆடுகளை அடைத்திருந்த பட்டியைச் சுத்தம் செய்து, அவசரமாய் நீராடிவிட்டு.. அரக்கப் பறக்க ஓடினாள் கருப்பசாமி கோவிலிற்கு.
பின்பக்கம் இருந்த மண்மேட்டில் உயரம் தாழ்ந்த மரத்திற்கு அடியில் மறைவாய் அமர்ந்து இருந்தான், சாரங்கன்.
“ரங்கா..” என மெல்ல குரல் கொடுக்க, “உள்ளதான் இருக்கேன், வா.” என்றான் அவன்.
மேட்டில் ஏறி.. மரத்திற்கும் கோவிலின் பின்பக்கச் சுவரிற்குமான இடைவெளிக்குள் இருந்த சற்றே பள்ளமான இடத்திற்குச் செல்ல, அவள் வருவதற்காகக் கை நீட்டினான்.
“எப்ப வந்த.?”
“அது வந்து, ஒரு மணி நேரம் ஆகிப் போச்சு.”
“முன்னாடியே வரலாம்னு பார்த்தேன். ஆனா பட்டியில நேரமாகிப் போச்சு!”
“பரவாயில்ல விடு?”
“கோவமா?”
மறுத்துத் தலையசைத்தவனைக் கண்டு காதல் பெருக, சாரங்கனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் காயத்திரி.
“அத்தைக்கு எப்படி இருக்கு.?”
“நல்லா இருக்கு. என்ன, கையதான் அசைக்க முடியல. ஒரு கையாலயே எல்லா வேலையையும் செய்யிறதுக்குச் சிரமமா இருக்கு. பழைய மாதிரி மாற நாலஞ்சு மாசம் ஆகும்னு நினைக்கிறேன்.”
“ம்ம்.. கவலைப்படாத. சீக்கிரம் சரியாகிடும்.”
“அம்மாவுக்கு இப்படி இருக்கிறத நினைச்சு வருத்தப்படுறதா? இல்ல, இதனால கல்யாணம் தள்ளி போறது நினைச்சு சந்தோஷப் படுறதானு தெரியல.”
“என்ன சொல்லுற.?”
“அப்பா, மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. தெரிஞ்சவங்க, சொந்தக்காரவங்க எல்லாருக்கிட்டயும் சொல்லி வச்சிருக்காரு. தினமும் யாராவது ஒருத்தர் மூலமா, ஏதாவது ஒரு மாப்பிள்ளயோட ஃபோட்டோவும் விபரமும் வந்துக்கிட்டு இருக்கு. அதுல எதுவும் அமைஞ்சிடுச்சுனா.. அம்மா சரியாகவும், அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் தான்.”
“என்ன பிள்ள இப்படிச் சொல்லுற.?”
“நீயி வேற! சேரல் மாமாக்கிட்ட நேராவே கேட்டுட்டாரு. அவரு மட்டும் சரினு சொல்லி இருந்தா, இந்நேரம் பரிசத்தை முடிச்சிருப்பாங்க.”
“யாரு? அந்தக் கறிக்கடைக் காரனா.?”
“ஆமா..”
“அவ்வளவு அவசரமா உங்க அய்யாவுக்கு?”
“முதல்லயாவது பரவாயில்ல. அம்மாவுக்கு முடியாம போகவும் தான், ரொம்பத் தீவிரமா இந்த வேலையில இறங்கிட்டாரு.”
அவன் புரியாமல் பார்க்க, “அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயம் வந்திடுச்சு. நாங்க இருக்கிறப்பவே ‘உனக்கு நல்லது கெட்டதைப் பார்த்து விட்டுடுடணும்’னு சொல்லிக்கிட்டு இருக்காரு! அப்புறம் இன்னொரு விபரம்.”
“என்ன, மாப்பிள்ள எல்லாம் செலக்ட் பண்ணியாச்சா.?”
அவள் முறைத்து, “நம்மளை, சேரல் மாமா பார்த்துட்டாரு.”
அவன் பதற்றத்துடன், “எப்ப, எப்படி.?”
“போன தடவை சந்திச்சப்ப, இந்த மேட்டுக்குக் கீழ நின்னு பேசிக்கிட்டு இருந்தோம்ல.? அப்பதான் பார்த்திருப்பாருனு நினைக்கிறேன்.”
“உனக்கு எப்படித் தெரியும்.?”
இளஞ்சேரல் பேசியதைப் பற்றி உரைத்தவள், “இனி, நாம அடிக்கடிப் பார்த்துக்கிறது சரிவராது. நாளை கடத்தாம உங்க வீட்டுல பேசிட்டு, எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கிற வழியைப் பாரு!”
“ம்ம்.. பேசுறேன்!”
“கண்டிப்பா பேசணும் ரங்கா. என்கிட்ட தலையை ஆட்டிட்டு, சும்மா எனக்கென்னனு இருக்கக் கூடாது!”
“அவசரப் படாத! எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் எதையும் செஞ்சிட முடியாது. நேரம் பார்த்து தான் பேசணும்.”
“எப்ப, எனைய வேற ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்த பின்னாடியா.?”
“கிறுக்கு மாதிரி பேசாத காயத்திரி!”
“பின்ன.. வேற எப்படிப் பேசச் சொல்லுற? ஆடு மேய்க்கப் போறப்ப, என் பின்னாடியே வந்து நாளுக் கணக்கா வெயில்ல காய்ஞ்சியே, ஐயா நேரம் பார்த்து தான் அதெல்லாம் செஞ்சீங்களோ.?”
“அதுவும் இதுவும் ஒண்ணா.?”
“உனைய பிடிச்சிருக்கு, கட்டிக்கனு என் பின்னாடி சுத்துன மாதிரி.. உங்க மகளை விரும்புறேன், கட்டிக் கொடுங்கனு எங்கய்யா பின்னாடி சுத்து!”
“ஏய்.. என்ன விளையாடுறியா?”
“இதைக் கூடச் செய்யலேனா? கனவு காதல்னு வாயடிச்சுக்கிட்டு வந்தியே, உனைய எப்படி நம்புறதாம்.?”
“எனைய மட்டும் சொல்லுற.? ஏன், நீயும் தான விரும்புற. உங்கய்யாக்கிட்ட இவனைத்தான் கட்டிப்பேனு சொன்னா என்ன.?”
“நானு என்னத்துக்குச் சொல்லணும்? பொண்ணு கேட்க வேண்டியவன் நீயி! ஒருவேள அதுக்குத் தைரியம் இல்லேனா சொல்லு, உங்கம்மாக்கிட்ட வந்து ‘உங்க மகன் எனைய விரும்புறான், கட்டிக் கொடுங்க’னு நானு வந்து கேட்கிறேன்.”
அவன் திகைத்துப் பார்க்க, “எங்கப்பா மட்டும் வேறொரு மாப்பிள்ளய பார்த்து, பரிசம் போட ஏற்பாடு செஞ்சிட்டாரு, கட்டுன துணியோட உன் வீட்டுல வந்து நிப்பேன் பார்த்துக்க!”
“இப்படி ஓரேயடியா வீம்பு பிடிச்சா என்ன அர்த்தம்..?”
“உனக்கு, என்னோட பயமும் நிலைமையும் புரியல. அதான் சாவுகாசமா பேசிக்கிட்டு இருக்க. சேரல் மாமா, அப்பாக்கிட்ட சொல்லிடுவாரோனு ஒவ்வொரு நிமிசமும் பயத்துல செத்துக்கிட்டு இருக்கேன். அப்படி மட்டும் நடந்துச்சு, ஆடுகளோட சேர்த்துப் பட்டியில கைக்காலக் கட்டி அடைச்சிடுவாரு எனைய. மத்தவங்க மூலமா தெரியிறதுக்கு முன்ன, நீயி வந்து பேசிடு. அதுதான் ரெண்டு குடும்பத்துக்கும் கௌரவம். முன்ன பின்ன ஆனாலும், பேசிச் சமாதானம் செஞ்சிக்கலாம்.”
“இவ்வளவு பயப்படுறவ, எதுக்கு எனைய விரும்புன.?”
“என்ன செய்ய? இந்தப் பாலாப் போன காதலுக்குக் கண்ணோட சேர்த்து மண்டையில மதியும் இல்லாம போச்சு! இப்பத்தான் ஒவ்வொன்னா புரிய ஆரம்பிக்கிது! அப்பாவுக்கு, தைரியமா சொந்தக் காலுல உழைச்சு முன்னேறணும்னு நினைக்கிறவங்கள ரொம்பப் பிடிக்கும் ரங்கா. அந்தக் காரணத்துக்காகத்தான் வேற வேற ஆளுங்களா இருந்தாலும், சேரல் மாமாக்கு எனைய கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டாரு. அதான், நீயே வந்து பேசுனு சொல்லுறேன்!”
“அப்ப, நானு வேற ஆளா இருக்கிறது பிரச்சனை இல்லையா.?”
“அதெல்லாம் பேசிக்கலாம். அதைக் காரணமா சொல்லி, மறுக்க மாட்டாரு. அவரைப் பொறுத்த வரைக்கும். திடமா, தைரியத்தோடவும் ஒழுக்கத்தோடவும் குடும்பத்தைப் பார்த்துக்கிறவனா இருக்கணும்.”
அவளைச் சிந்தனையுடன் பார்த்தவன், “அந்தக் கறிக்கடைக் காரன் என்ன, அவ்வளவு பெரிய ஆளா.?”
அவனை முறைத்தவள் காட்டமாய், “ஊருக்குள்ள என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு கவனிச்சா தான, யாரு எப்படினு தெரியும்? வீட்டுல காசை வாங்க, தியேட்டருக்குப் போக, பெத்தவ ஆக்கிப் போடுறதைத் திங்க, ஊரைச் சுத்தனு இருந்தா.. இப்படித்தான்! நானும் புத்தியை விலைக்குக் கொடுத்திட்டு, உன்மேலப் போயி ஆசைப்பட்டேன் பாரு. என்னைச் சொல்லணும்.!” என்றுவிட்டுக் கிளம்பிச் செல்ல, மண் மேட்டில் நின்று அவள் செல்லும் வழியையே பார்த்திருந்தான் சாரங்கன்.
error: Content is protected !!