Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…26

தூறல் – 26
மூக்குக் கண்ணாடியை கழட்டி ஒற்றை கையில் வைத்துக் கொண்டு கண்மூடி அமர்ந்திருந்தவனின் எதிரில் வந்து நின்று அவனது அடர்ந்த கேசத்தை ஆதரவாகக் கோதினாள் அஞ்சலி. மெல்ல விழி திறந்து அவள் முகம் பார்த்தான் குரு. அந்தக் கண்களில் வலி தேங்கி இருந்தது.


Advertisement

கடந்த கால தேக்கம் அந்த கண்களில் தெரிந்தது.
“அ..அவங்க… அவங்க ரெண்டு பேரோட போட்டோவும் உங்ககிட்ட இருக்கா..?” 

Advertisement

Advertisement

மெல்லிய குரலில் கேட்டாள். இதற்குமுன் கேட்க தோன்றியது இல்லை. அவனை கீறிவிட்டதுபோல் ஆகிவிடுமோ என்று அந்த எண்ணத்தை கைவிட்டு இருந்தாள். ஆனால் இன்று அவர்களை பார்க்க ஆவல் கொண்டது மட்டுமல்லாமல் அவன் பாரத்தையும் முழுமையாக தணிக்க வேண்டிய பொறுப்பும் அவளுக்கு இருப்பதாகத் தோன்றியது. 
“என்னோட வேலட்ல எப்பவுமே அவங்க போட்டோவை வச்சிருப்பேன். சவியோட முதல் பிறந்த நாளப்போ அவளை நடுவில வச்சு ரெண்டு பக்கமும் நாங்க ரெண்டு பேரும் நிக்கிற மாதிரியான ஒரு போட்டோ. இங்கே வந்தப்புறம் எப்பவும் அதையே பாத்துட்டு நான் ரொம்ப உருக்குலைஞ்சு போயிட்டே இருக்கேன்னு வலுக்கட்டாயமா எங்கிட்ட இருந்து பிடுங்கிட்டு போயிட்டாங்க அத்தை. போட்டோ பார்த்துதான் அவங்களை என் மனசுக்குள்ள பதிச்சுக்கணும் என்டு இல்ல. அது ஆழமா எப்பவும் எனக்குள்ளே இருக்கு. ஆனா பார்க்கும் போதெல்லாம் என் மனசு ரொம்ப துடிச்சதால அதுல இருந்து என்னை வெளில கொண்டு வரணும் என்டு ரொம்பநாளா என்கிட்ட காட்டுறதே இல்ல. அந்த போட்டோ இப்போ அத்தைகிட்டதான் இருக்கு…” என்றான் உடைந்த குரலில். 

Advertisement

அவன் பேசியவற்றை கேட்டபடி அவன் தலை கோதுவதை நிறுத்தாமல் அமைதியாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள் அஞ்சலி. இன்னும் பேச நினைப்பதையும் பேசி விடுங்கள் என்று அவளது விழிகள் கூறின.
“பகலெல்லாம் எத்தனைதான் வேலை மத்த விஷயங்கள் என்டு ஓடி ஒளிஞ்சாலும் இரவு என்னை ரொம்ப கொடுமைப்படுத்தும் அஞ்சு. இரவை கடக்க முடியாம நான் கஷ்டப்பட்ட நாட்கள் ரொம்ப அதிகம்…” கரகரப்பான அவன் குரல் தழுதழுப்பாய் மாறி இருந்தது.
“ ந..நம்ம சவி இப்போ என்னை கட்டிப்புடிச்சு தூங்குற மாதிரிதான் ச..சவியும் என் நெஞ்சில படுத்து தூங்குவா…” அவன் குரல் மெல்ல மெல்ல அடைக்கத் தொடங்கியது. 
“எ..என் கண் பார்த்து நா..நான் என்ன யோசிக்கிறேன்னு புரிஞ்சு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து எனக்கு தகுந்த மாதிரி நடந்துக்குவா தீபா. அவளோட வாழ்ந்த காலங்களில் எனக்கு குறை என்டு எதுவுமே இல்ல அஞ்சு. அ..அவ ஒரு நல்ல மனைவி… நல்ல அம்மா… முதல்ல இருந்த அழுத்தம் நாட்பட நாட்பட குறைஞ்சது என்னவோ உண்மைதான். ஆனா மனசோட இறுக்கம் மட்டும் எனக்கு மாறவே இல்ல அஞ்சு. எப்போ நீயும் சவியும் என் வாழ்க்கையில வந்தீங்களோ, எப்போ உங்களப்பத்தி மட்டும் என் மனசு முழுக்க முழுக்க யோசிக்க ஆரம்பிச்சதோ அ..அப்போதான் எனக்குள்ள மூச்சுகூட சீரா வர ஆரம்பிச்சதுடி…” 
“எதையோ தேடி எதுக்குன்னே தெரியாம ஓடி இத்தனை வருஷமும் எனக்குள்ள கொழுந்துவிட்டு எரிஞ்சுக்கிட்டு இருந்த அத்தனை தவிப்பையும் நீயும் சவியும் மொத்தமா அணைச்சு குளிர வச்சீங்க. நா..நான்… எ..என் மனசு…” 
மேற்கொண்டு பேச முடியாமல் பிசிறடித்த குரலோடு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் குரு. அவன் விழிகள் வலியோடு கசிந்திருந்தன. இன்னும் அவனை நெருங்கி நின்றவள் அவன் கன்னத்தை கைகளில் தாங்கினாள். 
“நீங்க இப்போ உணர்ந்துட்டு இருக்கிற இந்த நிம்மதியை இந்த சந்தோஷத்தை காலம் முழுக்க கொஞ்சமும் குறையாம கொடுத்துட்டே இருப்பேன் குரு. இனி உங்களுக்கு எல்லாமுமா நாங்க இருக்கோம்… எப்பவும் இருப்போம்… என் குருவை இனி கலங்கவே விடாம பொத்தி பாதுகாத்து வச்சிக்குவேன்… சரியா… உ..உனக்கு நான் இருக்கேன்டா…” 
தடுமாறிய குரலை முயன்று சரிசெய்து கலங்கத் தவித்த விழிகளை முயன்று கட்டுப்படுத்தி தன் விரல்களால் அவன் கன்னம் வருடியபடியே அவள் கூற பாய்ந்து அவளை இடுப்போடு கட்டிக் கொண்டு வயிற்றில் புதைந்து கொண்டான் அவள் கண்ணானவன்.
‘நான் இருக்கிறேன்…’
அன்று அவன் அவளுக்கு கொடுத்த உறுதிமொழி…
அவளை நெஞ்சை நிமிர்த்தி நிற்க வைத்த உறுதிமொழி…
இன்று அவள் அவனுக்கு கொடுத்தாள்.
இதயத்தின் ஆழத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள். 
சத்தமற்ற கதறலுடன் அவன் முதுகு குலுங்கியது. என்றோ நிறைய அழுது அனைத்தையும் கடலோடு கரைத்து விட்டான்தான். மிச்சமாக சொச்சமாக இதயத்தில் ஓரமாய் தங்கிப் போயிருந்த துக்கத்தையும், சலித்தும் சல்லடையில் தேங்கிப்போன பிசிறான மாவுபோல் மனதில் அப்பி இருந்த கண்ணீரையும், தனக்காய் மாறி நிற்கும் தன்னவளிடம் மொத்தமாய் கொட்டித் தீர்த்து தன்னை சமன்படுத்தி சீர்செய்ய சேர்த்து வைத்த கண்ணீரை இன்றே முற்றிலுமாய் வெளியேற்றிக் கொண்டிருந்தான் குமரகுரு. 
அந்தக் கண்ணீர் அவன் மனைவி, மகளின்மேல் அவன் கொண்ட நேசத்தின் வெளிப்பாடு… 
இழப்பின் வெளிப்பாடு… 
வலியின் வெளிப்பாடு… 
அனைத்தையும் கடந்து அவனுக்கான உலகம் மீண்டுவிட்ட ஆனந்தத்தின் வெளிப்பாடும்கூட. 
மனதிற்கு நெருக்கமானவர்களின் ஆறுதலில்தானே இதயத்தில் தேங்கிக் கிடக்கும் கப்பி கசடுகளும்கூட கண்ணீராக மாறி அடித்துக் கொண்டு வெளியேறும். அவள் வயிற்றுச் சேலை நனைய சத்தத்தை வெளியே காட்டாமல், அணைப்பை இன்னும் இறுக்கி, விடாமல் அழுது கொண்டிருந்தவனை குனிந்து முதுகு வருடி தலை வருடி அவன் அழுகையில் பொறுக்கவே முடியாமல் அடக்கவே முடியாமல் தானும் அவன் உச்சந்தலையில் கண்ணீர் சிந்தியவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு அவன் முகம் நிமிர்த்தினாள். கண்ணீரின் ஈரத்தில் நனைந்திருந்த அவன் முகத்தை அழுந்த துடைத்தாள். 
குனிந்து அவன் நெற்றியிலும் இரு கண்களிலும் நேச முத்தங்களைப் பதித்தாள். 
இனி உன் வழியில் உன் கைப்பிடித்து உன்னோடு நாங்கள் இருவரும் காலம் முழுக்க பயணிப்போம் என்ற அழுத்தமும் வாக்குறுதியும் அவள் தந்த ஆழ்ந்த முத்தங்களில் காதலோடு நிறைந்திருந்தது.
மறுநாள் உறங்கி எழுந்து குளித்து வந்தவனின் முகம் தனிப் பொலிவாய் மினுமினுத்தது. முதல் நாள் கலங்கிச் சிவந்திருந்த அந்த விழிகள் இன்று தெளிவாய் தீர்க்கமாய் தீட்சண்யமாய் ஒளி வீசின. இதழ்களில் குறுநகை அழகாய் முளைத்து நின்று அவனை இன்னும் வசீகரமாய் காட்டின.
அவனது குட்டி தேவதை இன்னும் சயனத்தில் இருந்து எழாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். சமையலறையில் மும்முரமான வேலையில் இருந்தாள் அஞ்சலி.
சமையலறையை எட்டிப் பார்த்தவன் “மகாராணி… ஒரு டீ கிடைக்குமா..?” என்றான் துள்ளலான குரலில்.
இள ரோஜா வர்ண நிறப் புடவையில் பனி தெளித்த ரோஜாபோல் முகத்தில் ஆங்காங்கே பூத்திருந்த வியர்வையுடன் சீராக பின்னலிட்ட அடர்ந்த ஒற்றை ஜடை ஒரு பக்கமாக தோளில் வலிந்து முன்னே கிடக்க திரும்பி அவனை பார்த்தவள் மின்னலாய் சிரித்தாள். வாசலில் நின்றிருந்தவனை இங்கே வா என்று கண்மூடி அழைக்க மகிழ்வோடு அவளிடம் நெருங்கிச் சென்றான் குரு.
“100 பேருக்கு சமைக்கிற மாதிரி இப்போ இருந்தே என்னடி முட்டி முட்டி வேலை பார்க்கிற..?” என்றபடியே தன் தோளில் மாலைபோல் போட்டிருந்த துண்டினை எடுத்து அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வையை ஒற்றி எடுத்தான்.
“கணக்கு வாத்தியாருக்கு கணக்கான நேரத்துக்கு டிபன் கொடுக்கணும் இல்லையா…” 
கொஞ்சலாய் சொன்னபடியே சூடான பாலோடு கொதித்த தேநீரையும் சர்க்கரையும் கலந்து ஆற்றினாள். அவள் எதிரில் சமையல் மேடையில் சாய்ந்து நின்றபடியே அவளையே பார்த்தான் குரு. 
என்ன பார்வை… உந்தன் பார்வை… 
இடை மெலிந்தாள்… இந்த பாவை…
அவனை நிமிர்ந்து பார்க்காமல் ராகமாய் பாடியபடியே அவள் தேனீர் கலந்து கொண்டிருக்க அவனோ சத்தமிட்டு சிரித்தபடி ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து இடையோடு இழுத்து தன் அருகே நிறுத்திக் கொண்டான்.
“அப்படி ஒன்னும் மெலிஞ்ச மாதிரி தெரியலையே… இங்கே வந்தப்புறம் உடம்பு இன்னும் கொஞ்சம் பூசின மாதிரிதானே இருக்கு…”
நக்கல் சிரிப்புடன் சொல்லி கண் சிமிட்டியவனை பார்த்தவளுக்கு முறைக்கத் தோன்றினாலும் சிரிப்புதான் வந்தது.
மூக்குக்கண்ணாடி அணியாத அவன் முகத்தை தலைசாய்த்து ரசனையோடு பார்த்தாள் அஞ்சலி.
அவளிடம் இருந்து பெற்ற தேநீரை பருகியபடியே இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி என்ன என்பதுபோல் கேட்டான்.
“கண்ணாடி போட்டா ஒரு அழகு… கண்ணாடி போடலேன்னா வேற ஒரு அழகு… ஆக மொத்தத்துல நீ அழகுடா…”
சொன்னவளை விழிகள் சிரிக்க பார்த்தபடியே மீதி தேநீரையும் பருகி முடித்தான். 
“இன்னைக்கு என்ன என் மகாராணி ஒரே உற்சாகமா இருக்கிற மாதிரி தெரியுது…” 
இரு கைகளால் அவளை வளைத்துப் பிடித்து அவள் மூக்கோடு மூக்கு உரசியபடியே கேட்டான்.
“என் மகாராஜாவோட முகத்துல ஒரு தனி தெளிவு தெரிஞ்சது… அதனால மகாராணிக்கு இயல்பாவே உற்சாகம் பிறந்திருச்சு…” என்றவள் தன்னிச்சையாய் அவன் ஈரத்தலையை அவன் தோளில் கிடந்த துண்டை உயர்த்தி துடைத்துவிட்டாள்.
“என்ன பிரச்சனைக்காக கண்ணாடி போட்டிருக்கீங்க..?” 
அவன் மூக்குத் தண்டில் கண்ணாடி பிரேம் அழுந்தியதால் ஏற்பட்ட மெல்லிய தழும்பை சுட்டுவிரலால் மெல்ல வருடியபடியே கேட்டாள் அஞ்சலி.
“எனக்கு கிட்ட பார்வை…” சொன்னவன் வலிக்காமல் அவள் நெற்றியில் முட்டினான்.
“ஓ… அப்போ நான் பக்கத்துல இருக்கும்போது நீங்க கண்ணாடி போட வேண்டியது இல்ல… நான்தான் நல்லா தெரிவேனே…” என்றவள் சிரித்தபடி இரு கண்களையும் சிமிட்ட அந்த அழகை ஆழ்ந்து ரசித்தான் குரு. 
தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையாக்கி போட்டுக் கொண்டவள் “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…” என்று கூற “கேளு…” என்றபடியே அவள் கண்ணில் இருந்து வழிந்து வந்திருந்த கண் மையை மெல்ல துடைத்தான்.
“நீங்க இலங்கைதான்னு யாருமே கண்டுபிடிக்க முடியாது‌. இங்கே பேசுற மாதிரிதான் அப்படியே பேசுறீங்க. ராதாம்மாகூட நிறைய இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பேசுறாங்க. ஆனா நீங்க அப்படியே இங்கே இருக்கிற தமிழை மாற்றமில்லாம பேசுறீங்க… எப்படி…?” 
“இதில ஆச்சரியப்பட என்னடி இருக்கு..? எல்லாமே தமிழ்தானே… புது மொழியை ஒன்டும் கத்துக்கலையே. என்ன கொஞ்சம் ஸ்லாங் மாறும்… இங்கே தமிழ்நாட்டிலேயே ஊருக்கு ஊர் ஸ்லாங் மாற்றம் இருக்குதானே. ராமேஸ்வரத்தில ஒரு மாதிரி… மதுரையில ஒரு மாதிரி… கோயம்புத்தூர்ல வேற மாதிரி… அதே மாதிரிதான் இலங்கையில இன்னும் கொஞ்சம் வேற மாதிரி. இங்கே வந்து இங்கேதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினதுக்கு அப்புறம் ஸ்லாங்கையும் அப்படியே மாத்திக்கிட்டேன். இதே தமிழ் எனக்கு நல்ல பழக்கமாயிடுச்சு…நம்மள சுத்தி இருக்கிறவங்க பேசுறது நமக்கு இயல்பாவே வந்துடும் இல்லையா… ஆனாலும் என்னையும் மீறி சில வார்த்தைகள் தவிர்க்க முடியாம வந்துடும்…” 
“நானும் ராதாம்மாகிட்ட கேட்டு இலங்கைத் தமிழ் நல்லா கத்துக்கப் போறேன்…” 
“எதுக்காம்..?” 
“பின்னால அங்கேதான் போய் வாழப் போறோம்னு சூழ்நிலை வரும்போது ஈஸியா எல்லாரோடயும் பேசிப் பழகணும் இல்லையா… அதுக்குதான்…” 
மூக்கை சுருக்கிச் சொன்னவளை விழி அகற்றாமல் பார்த்தான் குரு. 
“என்ன மேன்.. அப்பப்போ உறைஞ்சு போய் என்னை உத்துப் பாக்குறீங்க..?”
சொன்னபடியே தன் சுட்டுவிரல் கொண்டு அவனது நீண்ட நாசியில் மெல்ல தட்டினாள். 
“உனக்கு இலங்கை போகணும்னு ஆசை இருக்கா அஞ்சு..?” 
“உங்களுக்கு இல்லையா..?” 
“பிறந்த வீடு பிடிக்காத பொண்ணுங்க இருப்பாங்களா..? பிறந்த மண்ணை வெறுக்கிற மனுஷன் இருப்பானா..?” 
“அப்புறம் என்ன..?” 
பதில் பேசாமல் இழுத்து பெருமூச்சு விட்டான் குரு. 
“நீங்க இருக்கிற இடம் எதுவாயிருந்தாலும் அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி நான் அடாப்ட் ஆகிக்குவேன் குரு…” 
அவள் வார்த்தைகளில் ஆசையோடு அவள் கன்னத்தை கைகளில் தாங்கிக் கொண்டான் குரு. 
“பாக்கலாம்டி… இன்னும் நான் முடிவு பண்ணல… முதல்ல உன் வீட்ல பேசி சில விஷயங்களை சரி பண்ண வேண்டியது இருக்கே…” 
இதுவரை சிரித்துக் கொண்டிருந்தவளின் முகம் சட்டென வாடியது.
அவள் முக மாற்றத்தைக் கண்டு கொண்டவன் புன்னகையோடு மென்மையாக அவள் கன்னத்தை வருடினான். 
“நாம செய்யற எல்லா வேலைகளையும் நேர்மையா நியாயமா தீர்க்கமா பண்ணனும்…” என்றான் மென்மையாக. 
“ஏதோ பண்ணுங்க… ஆனா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கங்க…” 
“அதெல்லாம் எதுவும் வராது…” 
இதற்குள் கூடத்தில் இருந்து “ப்பா…” என்ற தூக்கம் விலகாத குரலுடன் சவி அழைப்பது கேட்டது. 
“இதோ… எந்திரிக்கும்போதே லொப்பான்னு கூப்பிட்டுதான் எந்திரிக்கிறா உங்க அருமை மக. இன்னும் ரெண்டு நாள்ல நீங்க ஊருக்கு போயிட்டா எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல. இந்த ஒரு வாரமா உங்களை சுத்திக்கிட்டே இருந்துட்டா. என் பாடு கஷ்டம்தான்…” என்றவளை பார்த்து சிரித்தபடியே வேகமாக கூடத்திற்கு சென்றிருந்தான் குரு.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!