Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…38

தூறல் – 38
வழக்கமாக ராமேஸ்வரத்திலிருந்து குரு கிளம்பும் போதெல்லாம் அவனை போக விடாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் சவி இம்முறை அவனை விட்டு போகமாட்டேன் என்று அவனது சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டு அஞ்சலியோடு கிளம்பாமல் அடம்பிடித்தாள்.


Advertisement

இந்த குட்டிப்பெண் எப்படி இவன்மேல் இத்தனை பாசமும் நேசமும் கொண்டாள் என்று மற்ற அனைவருக்குமே ஆச்சரியம் எழுந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த இரண்டு மூன்று நாட்களாக அவனோடு அவள் காட்டும் நெருக்கமும் அவன் அவளிடம் காட்டும் பாசமும் கண்டு அனைவருமே மெய்சிலிர்த்துதான் போகின்றனர். 
இறந்துபோன தன் மகளை அவள் உருவில் கண்டு அவளை முழுமையாக இதயம்வரை ஏற்றிக் கொண்டுள்ளான் என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால் இவளை பொறுத்தவரை தந்தை என்று முதன்முறை அடையாளம் காட்டப்பட்டவன்… இதற்கு முன்பே அவன்மேல் இயல்பாகவே ஒட்டுதலோடுதான் இருந்திருக்கிறாள். தொடர்ந்து அவள்மேல் அவன் காட்டிய நேசமும் பாசமும் அக்கறையும் அவளுக்கு அவன்பால் மிகுந்த அன்பை விதைத்திருக்கிறது என்பது தெரிந்தது. அனைத்தையும் கடந்து தந்தையதிகாரம் என்ற அந்த அமைப்பு அவளது இதயம்வரை ஈர்த்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத நிதர்சனம்.

Advertisement

Advertisement

கபிலன்கூட அங்குதான் இருந்தான். அதிசயமாக பெற்றவர்களோடு கூடுதலாக இரண்டு மூன்று நாட்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறான். மனதிற்குள் என்ன உறுத்தியதோ..?
அழுது அடம்பிடிக்கும் மகளை விட்டுப் பிரிய மனமே இல்லாமல் அவளை இறுக்கி அணைத்து அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டான் குரு. 

Advertisement

கிளம்புவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்க தன் கணவனை ஆயாசமாகப் பார்த்தாள் அஞ்சலி. 
“அஞ்சலி… பாப்பாதான் இவ்வளவு தூரம் அடம் பிடிக்கிறாள்ல… நானும் அப்பாவும் பக்கத்துலதானே இருக்கோம்… இதுக்கு முன்னவும் நாங்கதானே அவளை பாத்துக்கிட்டோம்… மாப்ள வேலைக்கு போனதுக்கு அப்புறம் நாங்க பாப்பாவை பார்த்துக்கிறோம்… அவ இங்கேயே இருக்கட்டுமே… அடுத்து மாப்பிள்ளை ஊருக்கு வரும்போது அவளை கூட்டிட்டு வரட்டும்…” 
அவளிடம் வந்த லதா கூற கர்ணனும் அதற்கு ஆமோதிப்பாய் பேசினார்.
“ஆமாடா… அம்மா சொல்றதும் சரிதானே. அழ அழ பிள்ளையை தூக்கிட்டு போகாட்டி என்ன..? நாங்க எல்லாரும் இருக்கோம்… அவ அப்பா இருந்தாலே அவளுக்கு போதும்போல… அடுத்த வாரம் மாப்பிள்ளை வரும்போது நாங்களும் வர்றோம்… பாப்பாவையும் எடுத்துட்டு வர்றோம்… சரியா…” 
தாயும் தந்தையும் மாறி மாறி கூற பதில் கூறாமல் குருவை திரும்பிப் பார்த்தாள் அஞ்சலி. 
ஒருவர் எண்ணத்தை மற்றவர் விழிகள் மூலம் வாங்கிக் கொள்வது அவர்கள் இருவருக்கும் ஆரம்பம் முதலே கடத்தப்படும் ஒன்று. 
தன் மனைவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து மகளிடம் திரும்பியவன் “சரிடா தங்கம்… அழக்கூடாது… அமைதியா தூங்கு… நீ அப்பாகிட்டேயே இருந்துக்கோ…அம்மாவும் பாட்டியும் மட்டும் இப்போ ஊருக்கு போகட்டும்…” என்று கூற அவனை அணைத்தபடியே நிம்மதியாக நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் சவி. கிளம்புவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. 
அனைத்தையும் எடுத்து வைத்து ராதாவும் அஞ்சலியும் கிளம்பி தயாராகி நின்றனர்.
அடுத்த பத்தே நிமிடங்களில் தந்தையின் நெஞ்சிலேயே சாய்ந்து உறங்கிப் போயிருந்தாள் சவி.
“குடுங்க மாப்ள… நான் எடுத்துட்டுப் போய் படுக்க வைக்கிறேன்… நீங்க இவங்கள பஸ் ஏத்தி விட்டுட்டு வாங்க…” என்றபடியே அவன்மீது தூங்கியிருந்த மகளை லதா எடுக்க வர “வேண்டாம் அத்தை…” என்று தடுத்திருந்தான் குரு. 
“சவியை அஞ்சலியே எடுத்துட்டு போகட்டும்… தூங்கிட்டா… இனி காலைலதான் முழிப்பா… அப்புறம் ஏதாவது சொல்லி அஞ்சு சமாளிச்சுப்பா. நானும் இல்லாம பாப்பாவும் இல்லாம அவ மட்டும் அங்கே தனியா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும். அம்மு கூட இருந்தா அவளுக்கும் தனியா இருக்கிற ஃபீல் வராது. இனி நான் அடுத்து பரசுவோட கல்யாணத்துக்கு போற மாதிரிதான் இருக்கும். அதுவரைக்கும் பாப்பாவை விட்டுட்டு இவ இருக்கிறது ரொம்ப கஷ்டம்…” 
சொன்னபடியே எழுந்து கொண்டவன் மகளை தோளில் போட்டு படுக்க வைத்தபடியே அவர்களை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி கிளம்பி இருந்தான். 
வழக்கமாக அவன் இங்கிருந்து கிளம்பும் அதே பேருந்து. கிளம்புவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி இருந்தன. சவியை நெஞ்சோடு சாய்த்துப் பிடித்து ஜன்னல் ஓரமாக அஞ்சலி அமர்ந்து கொள்ள அவள் அருகில் சென்று அமர்ந்தான் குரு. 
நெடுநேரம் பயணிக்க வேண்டி இருப்பதால் கால் வலிக்கும் என்று கூறி அவர்களுக்கான தனிமையை கொடுத்து சிறிது நேரம் கீழே நிற்பதாகச் சொல்லி பேருந்தின் அருகில் நின்றிருந்தார் ராதா.
அவன் தோளில் மெல்ல தலைசாய்த்துக் கொண்டாள் அஞ்சலி. 
“எப்படியும் நாளைக்கு காலைல தூங்கி எழுந்த உடனே டிஸ்கோ டான்ஸ் ஆடுவா உங்க பொண்ணு…” மெல்லிய சிரிப்போடு கூறினாள். 
“வீடியோகால் பண்ணி நான் பேசிக்கிறேன். பேசுற விதமா பேசினா கேட்டுப்பா…” 
சொன்னபடியே அவள் தலைமீது தன் கன்னத்தை சாய்த்துக் கொண்டான் குரு. 
“என்னை ரொம்ப மிஸ் பண்ணுவியாடா..?” 
செல்லச் சிரிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
“மிஸ் பண்ணப் போறது உன்னை மட்டும் இல்லையே…” என்றவன் விழிகளை இறக்கி அவள் இதழ்மீது அழுத்தமாகப் பதித்து அர்த்தத்தோடு அவளைப் பார்க்க இதழ் மடக்கி சிரித்தபடி கண்களை தாழ்த்திக் கொண்டாள் அஞ்சலி. 
அன்றைய தினம் நேரம் வாய்த்த போதெல்லாம் அவள் இதழ்களை சிவக்க வைத்துக் கொண்டுதானே இருந்தான்.
“இனியெல்லாம் என்னால சத்தியமா கண்ணியமா இருக்க முடியாதுடி…” 
“கட்டின பொண்டாட்டிகிட்ட கண்ணியமா இருப்பானா ஒரு நல்ல புருஷன்..?” என்றவள் முழங்கையால் அவன் இடுப்பில் இடிக்க சிரித்தபடியே அவளது விரல்களை கோர்த்துக் கொண்டான் குரு. 
“பரசுவோட கல்யாணத்துக்கு நாம மூனு பேரும் கண்டிப்பா போகணும். அனேகமா அவன் ஃபர்ஸ்ட் நைட் அப்போதான் நமக்கும் ஃபர்ஸ்ட் நைட் அப்படின்னு எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது… ஏன்னா அப்போதான் நீயும் நானும் தனியாவே இருக்க முடியும்…” 
கண்களை சிமிட்டி குனிந்து அவள் முகம் பார்த்தபடி மெல்லிய குரலில் அவன் கூற வெட்கச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்தவள் அவன் மூக்கை பிடித்து செல்லமாக இழுத்து விழிகளை உருட்டி யாரும் அருகே இல்லை என்பதை கவனித்து அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். 
பேருந்தில் ஓட்டுநர் வந்து அமர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பியிருக்க நடத்துனரும் பேருந்தில் ஏறி இருந்தார். கீழே நின்றிருந்த மக்கள் கூட்டம் தத்தம் இடங்களை நோக்கி மேலே ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. 
“சரிடி… அம்முவை பார்த்துக்கோ… உன்னையும் பார்த்துக்கோ… அத்தை இனிமே வேலைக்கு போகக்கூடாது என்டு திட்டவட்டமா சொல்லிட்டேன். மூனு நாள் மட்டும் போய் இருக்கிற வேலையை முடிச்சு குடுத்துட்டு சொல்லிட்டு வந்திடறேன்னு சொல்லி இருக்காங்க. அத்தையும் உன் கூடவேதான் இருப்பாங்க… சரியா…” 
சரி என்ற தலை ஆட்டியவள் அவனை ஏக்கமாக பார்க்க அவன் கண்களிலும் ஏக்கமும் பிரிவின் சுவடும் தெரிந்தது.
அவள் நெஞ்சோடு சாய்ந்திருந்த மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவன் பட்டும் படாமல் அஞ்சலியின் நாடியில் முத்தமிட்டு தலையை மென்மையாய் வருடிக் கொடுத்து எழுந்து கொண்டான். 
ராதாவும் உள்ளே ஏறி அவள் அருகில் அமர்ந்திருக்க கையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்து பேருந்து கண்ணை விட்டு மறையும்வரை அங்கேயே நின்றவன் தனது பலம் அனைத்தையும் மொத்தமாக இழந்ததுபோல் புதுமையான உணர்வினால் தாக்கப்பட்டான். 
இனிவரும் நாட்களில் அவன் மனைவியும் மகளும்தானே அவனது முழு பலமும்.
வீடு வந்து சேர்ந்தவனுக்கு அந்த வீடே அன்னியமாய் காட்சி அளித்தது. இந்த மூன்று நாட்களாக வீடு முழுக்க நிறைந்து கிடந்த அவனது மனைவியும் மகளும் அவன் கண்களை திருப்பும் திசைகளில் எல்லாம் நின்று சிரிப்பதுபோல் ஒரு பிரமை.
“சீக்கிரமா ஏப்ரல் மாசம்வரைக்கும் கடந்துடணும்டா சாமி…பரீட்சை முடிஞ்சிட்டா பேக்கப்தான்… இனி அவங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது எப்பா…” 
வாய்விட்டே புலம்பிக் கொண்டவன் அறைக்குச் செல்லாமல் கூடத்திலேயே படுத்துக் கொண்டான். அறைக்குள் நுழைந்தால் மனைவி மற்றும் மகளின் வாசம் இன்னும் கூடுதலாய் ஏங்க வைக்கும் என்று தோன்றியது. அத்தோடு அந்த அறைக்குள் அவ்வப்போது தன்னவளுடன் நிகழ்த்திக் கொண்ட மோகத்தோடு கூடிய முத்தங்களின் சுவை வேறு மூளைவரை நிரம்பி இருப்பதால் அங்கு படுத்தால் சுத்தமாக உறக்கம் தழுவாது என்று எண்ணிக் கொண்டவன் கூடத்திலேயே படுத்துக் கொண்டான். 
நெடுநேரம் இப்படியும் அப்படியும் உழன்றவன் ஒருவாராக உறங்கிப் போனான்.
விடிந்தும் விடியாத வேளையில் யாரோ கதவை வேகமாக தட்டுவதுபோல் கேட்டது. கனவோ என்று குழப்பமாக புரண்டு படுத்தான்… விடாமல் கதவு தட்டும் ஓசை. 
படக்கென எழுந்து அமர்ந்தான். அன்றும் அந்த அருண் இப்படித்தானே வந்து கதவை போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். மீண்டும் அவன்தான் வம்பு வளர்க்க வந்திருக்கிறானோ என்று எண்ணிக் கொண்டவனாய் ‘மூக்கை உடைச்சது பத்தாது… பல்லை முழுசா கழட்டி கையில குடுத்துற வேண்டியதுதான்…’ என்று எண்ணியபடியே லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வேகமாகச் சென்று கதவை திறக்க எதிரில் கர்ணனும் லதாவும் வெலவெலத்துப் போய் நின்றிருந்தனர்.
அவர்களது கோலமே இவனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 
“மாமா… அத்தை… என்ன ஆச்சு..?” அவர்களை குழப்பமாய் பார்த்தபடியே கேட்டான். 
“மா..மாப்ள… மா..மாப்ள… அ..அஞ்சலிக்கு போன் போட்டு பாருங்க…” 
குரல் பிசிறடிக்க படபடத்த வார்த்தைகளோடு வீட்டிற்குள் நுழைந்திருந்தார் கர்ணன். லதாவும் வேகமாக நுழைந்து அருகில் நின்றிருந்தார். இருவரது கண்களிலும் கண்ணீர் வரட்டுமா என்பதுபோல் தயாராக இருந்தது. 
ஒன்றும் புரியாமல் குழப்பமாக அவர்களைப் பார்த்தான் குரு. 
“ஏன் மாமா..? என்ன ஆச்சு..?” 
அவர்களது பதட்டம் இவனுக்கும் தொற்றிக் கொள்ள இதயம் திடுக்கிடலோடு அதிர்ந்தது. 
“எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் எனக்கு முழிப்பு வந்துடும். தூக்கம் வராது… டிவியை போட்டு ஏதாவது பார்த்துட்டு இருப்பேன்… இப்ப அப்படி பார்த்துட்டு இருக்கும் போதுதான் பிளாஷ் நியூஸ் அப்படின்னு கீழே ஓடிக்கிட்டே இருந்தது. ராமநாதபுரம் தாண்டி ராமேஸ்வரம் பக்கத்துல மதுரையில இருந்து போன ஒரு பஸ் ஆக்சிடென்ட் ஆகி இருக்கு…” 
அவர் சொல்லி முடிக்கும்போது இவனது அடிவயிற்றில் இருந்து இதயம்வரை சுரீரென அழுத்தமாய் ஓர் வலி பரவியிருக்க அவசரமாய் டிவியை ஆன் செய்தவன் தனது கைப்பேசியையும் எடுத்து விரைவாக அஞ்சலிக்கு அழைத்தான். இதற்குள் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்திருந்தான் கபிலன். 
“அஞ்சலிக்கு லைன் கிடைச்சுதா..? அப்படி இல்லைன்னா உங்க அத்தைக்கு கூப்பிடுங்க மாப்ள…” என்றான் அவனும் பதட்டமாக.
விரல்கள் நடுங்க தன் மனைவிக்கு அழைத்தபடியே விழிகள் அலைப்புற தொலைக்காட்சியின் மீது பார்வையை பதித்திருந்தான் குரு. 
“மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற தனியார் பேருந்து ராமநாதபுரம் தாண்டி மண்டபம் பகுதியில் பெரும் விபத்துக்குள்ளாகி நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றனர்…” 
செய்தி வாசிக்கும் பெண்ணின் குரலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. அழுகையும் கதறலும் சலசலப்பும் சத்தமும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியுமாக அந்த இடமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பேருந்தில் முன்பகுதி முற்றிலுமாய் சிதைந்து இருந்தது. அது தனியார் பேருந்தும்கூட. 
வாராவாரம் பயணிப்பவனுக்கு பேருந்தை பார்த்தவுடன் அடையாளம் தெரியாதா என்ன..? அவன் பயணிக்கும் அதே பேருந்துதான்… முதல்நாள் இரவு தன் உயிரானவர்களை ஏற்றி அனுப்பி வைத்த அதே பேருந்துதான். 
இதயம் துடிப்பதை நிறுத்தி இருக்க அஞ்சலிக்கு அழைத்தபடி காதில் வைத்தவனின் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. எதிர்முனையில் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. 
பதட்டத்தோடு மீண்டும் அழைத்தான். அதே ஒலி வடிவம்தான்.
“ஸ்விட்ச் ஆஃப்னே வருது மாப்ள… உங்க அத்தைக்கு கூப்பிடுங்க…” பதறினான் கபிலன். 
குருவின் மூளை இயக்கத்தை நிறுத்தி இருந்தது. தலையை அழுந்த பிடித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கண்களை சுருக்கி விரித்து மீண்டும் தொலைக்காட்சியையே பார்த்தான். 
பதட்டமாக ஆட்கள் நடமாடுவதும் நிறைய பேரை ரத்தக் காயங்களோடு ஸ்ட்ரக்சரில் வைத்து ஆம்புலன்ஸ்க்கு அள்ளித் தூக்கி ஓடுவதுமாக காட்சிகள் இதயத்தை இன்னும் இறுக்கிப் பிழிந்தன.
“மாப்ள…” அவன் தோளை தொட்டு உலுக்கினான் கபிலன். 
“ஹான்…” என்றவன் ராதாவின் கைப்பேசிக்கு அழைத்தான். 
கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது… எதிர்முனையில் முழுமையாய் ரிங் போய் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. 
மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்து போனவன் நெஞ்சை பிடித்தான். 
“இ..இல்ல… இல்ல.. எ..என் அஞ்சுக்கும் என் அம்முவுக்கும் என் அத்தைக்கும் எதுவும் இல்ல. அ..அவங்க சேஃப்… அவங்க… அவங்களுக்கு ஒன்னும் ஆகி இருக்காது… ந..நல்லா இருப்பாங்க… எ..என்னை அப்படி எல்லாம் தவிக்க விட்டுட்டு என் அஞ்சு போக மாட்டா… நா..நான் போகணும்… நான் இப்பவே அங்க போகணும்…” 
இதழ்கள் தடுமாற்றத்தோடு தன்னிச்சையாக முணுமுணுத்துக் கொண்டே இருக்க தடுமாறி எழுந்தவனின் கையை அழுத்திப் பிடித்தான் கபிலன். எதிரில் உயரமாய் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதன் உள்ளுக்குள் மொத்தமாய் உடைந்து சிதறிக் கொண்டிருக்கிறான் என்பது அவனது உடல்மொழியில் தெளிவாகவே தெரிந்தது. அவர்களும்கூட பதறி அழுது கொண்டுதான் இருந்தனர். இதற்குள் ராமலிங்கமும் காமாட்சியும்கூட அங்கு ஓடி வந்திருந்தனர். 
“கபிலா… இப்படி சும்மா போன் பண்ணி பாத்துட்டு உட்கார்ந்து என்ன பண்றது..? நாம உடனே கிளம்பி ஸ்பாட்டுக்கு போகலாம்… நான் காரை வரவழைக்கிறேன் இருங்க…” 
பதட்டத்தையும் தாண்டி நிதானமான முடிவு எடுத்து உடனடியாக ஆறு பேர் அமர்ந்து செல்லும் பெரிய காரினை ஏற்பாடு செய்து வரவழைத்து இருந்தார் ராமலிங்கம். 
“ஐயோ… என் பிள்ளைங்க…” 
நெஞ்சில் கை வைத்து சத்தமிட்டு ராதா அழ அவரை தேற்றிக் கொண்டிருந்தார் காமாட்சி. 
‘அஞ்சு… அம்மு… உங்களுக்கு ஒன்னும் இல்ல… இதோ நான் வந்துருவேன் சரியா… எனக்கு பெரிய அதிர்ச்சியெல்லாம் கொடுத்துடாதீங்க செல்லங்களா… இனி ஒரு இழப்பை எல்லாம் என்னால தாங்கவே முடியாது… செத்துப் போயிருவேன்… என் இதயம் நின்னே போயிடும்… உங்களை எப்படி அனுப்பி வச்சேனோ அப்படியே என்கிட்ட வந்துடுங்க… வந்துடுவீங்கள்ல…’
இதயம் பேயாய் அலற புயல் வேகத்தில் கிளம்பி இருந்த அந்த காரில் மற்றவர்களோடு தானும் பயணப்பட்டு இருந்தான் குரு. 
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!