Skip to content
Post Views: 5,275
ஏனோ உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான் குமரகுரு. மனம் முழுக்க அஞ்சலியை பற்றிய எண்ணங்களே அவனையும் மீறி ஆட்கொண்டிருந்தன.
அவளது கோபத்திற்கும் இறுக்கத்திற்கும் பின்னணி மிகவும் வலி நிறைந்தது என்பது புரிந்தது.
Advertisement
ராமலிங்கம் பேசியவைதான் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.
“வெளிநாட்டுல வேலையில இருக்கிறான்… நிறைய சம்பாதிக்கிறான்… பிள்ளையும் வெளிநாட்டுக்கு சீக்கிரம் போயிடுவா… அதுவும் பெருமைதான்… இப்படி பெருமைக்கு ஆசைப்பட்டு புள்ளய கொண்டு போயி பாழும் குழியில தள்ளிப்புட்டாய்ன் அந்த கர்ணன். இந்தப் புள்ளையும் சின்னப் புள்ளதான… படிச்சிருந்தாலும் பெருசா வெவரம் தெரியல. சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிச்சு. என்னத்த பெருசா அவன்கூட வாழ்ந்துடுச்சு..? அவனை என்னத்த பெருசா புரிஞ்சுக்கிச்சு… அந்த பயலுக்கு குடிக்கிற பழக்கம் இருந்திருக்கு. அதையும் இவங்க யாரும் சரியா விசாரிக்கல. குடிபோதையில போய்தானே விபத்துல சிக்கி போய் சேர்ந்துட்டியான். அவே வேலை பார்த்த பக்கமும் ஏதோ இன்சூரன்ஸ் பிடிமானப் பணம் அது இதுன்னு பணமும் நல்ல லம்பா வந்திருக்கு…”
Advertisement
Advertisement
“அவே கல்யாணம் ஆனவே அப்படிங்கறதால பொண்டாட்டிக்குத்தான் அம்புட்டும்னு வேலை பார்த்த பக்கம் தெளிவாக சொல்லிட்டாய்ங்க. புள்ள மாசமா வேற இருந்தாளா… கண்டிப்பா பொண்டாட்டி பிள்ளைக்குத்தேன் எல்லா பணமும்னு அப்படியே அஞ்சலி பேருக்குத்தேன் எல்லாமே மாறுச்சு. கொள்ள காசு… விடுவாய்ங்களா… அவ பாட்டுக்கு வேற எங்கேயாச்சும் கல்யாணம் பண்ணி போயிட்டா காசும் போயி எல்லாம் போயிடும்னு அழகா கணக்கு போட்டு அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிற மாதிரி வந்து நின்னாய்ன் கொழுந்தன். இவனும் சின்ன ஆள் இல்ல. இவன்கிட்டயும் கெட்ட பழக்கம் நிறைய இருக்காம். இப்பதேன் விசாரிக்கிறாய்ன் இந்த கர்ணன். இதையெல்லாம் முதல்லயே பண்ணி இருக்கணுமா இல்லையா..? இந்தப் புள்ளைய கட்டி வீட்ல வச்சுட்டு வேற என்ன வேலை வேணாலும் பண்ணுவாய்ன். ஏற்கனவே ஒரு புள்ள கூட அவே தொடர்புல இருக்குற செய்தியும் அரசல் புரசலா தெரியுது…”
“கேட்டா விதவைக்கு வாழ்வு கொடுத்து இருக்கேன் வாய மூடிட்டு வீட்டுக்குள்ள கிடன்னுதானே சொல்லுவாய்ங்க. அதெல்லாம் அந்த பிள்ளைக்கு தெரியும். அதுவும் இல்லாம கொழுந்தன கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற அளவுக்கு இந்த பிள்ளைக்கு மனசும் பக்குவப்படல. அந்த பிள்ளையால அது முடியல. விட்டு தொலையணுமில்ல. காசுக்காகத்தேன் கல்யாணம் பண்ண வர்றியான்னு தெரியுது. திரும்பவும் புள்ள வாழ்க்கை வீணாத்தானே போகும். அதை யோசிக்க வேணாமா..? போட்டு பாடா படுத்துறாங்க. பெத்தவுகளுக்கும் இதை விட்டா வேற நல்ல வழி தெரியல. புள்ளைய வேற யாரு குழந்தையோட ஏத்துக்குவாகன்னு எப்படியாச்சும் அங்கேயே குடுத்துரணும்னு நினைக்கிறாக. என்ன மொத்தத்துல இந்த புள்ளதேன் ரெண்டு பேருக்கும் மத்தியில சிக்கிக்கிட்டு சீரழியுது…”
Advertisement
வேதனையோடு பேசிய ராமலிங்கத்தை அமைதியாக கவனித்தபடி அமர்ந்திருந்தான் குரு. மனம் முழுக்க பாரம் ஏறிக் கொண்டது. பெண்ணாகப் பிறந்து சிறு வயதிலேயே கைக்குழந்தையோடு கைம்பெண் ஆனால் அந்த பெண் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் எத்தனை என்பதை நினைக்கும்போதே இதயத்தில் வேதனை அப்பிக் கொண்டது. காலங்கள் எத்தனை மாறினாலும் சமூக கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்ட பெண்கள் கடந்து வர முடியாத வலிகள் நிறையவே இருக்கின்றன என்பதை நினைக்கும் போது மனது கசந்தது.
அஞ்சலியின் மேல் ஆரம்பம் முதலே அவனுக்கு நல்ல அபிப்பிராயம் எழவில்லை. அவர்கள் சந்தித்துக் கொண்ட அத்தனை நிகழ்வுகளும் அவர்களுக்குள் உவப்பானதாக அமையவே இல்லை. என்ன பெண் இவள்..? அப்படி என்ன வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்..? இப்படியான எண்ணங்கள்தான் அவன் மனதில் தோன்றி இருக்கின்றன.
ஆனால் ஏதோ ஒரு வகையில் மனதில் பெரும் அழுத்தம் அவளுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த அழுத்தம் இத்தனை கொடுமையானது என்பதை அறிந்த பின்பு அவள்மேல் இருந்த கோபம் அனைத்தும் கரைந்து பரிதாப உணர்ச்சிதான் மேலோங்கியது.
தந்தையின் முகம் என்னவென்றுகூட அறியாமல் பிறந்த அழகுப் பெண் குழந்தை. அவளது எதிர்காலம் எப்படி இருக்கும்..? அவளும் இன்னும் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டுமோ..? ஏனோ அந்த பச்சிளம் குழந்தையை நினைக்கையில் பால்போல் மனம் பொங்கியது மட்டுமல்லாமல் வேதனையில் வெம்பித் தவிக்கவும் செய்தது.
அவன் எதிர்கொண்டு கடந்து வந்த வலியும் வேதனையும் மறந்து செல்ல அத்தனை எளிதானது அல்ல. ஆண் மகனாக பிறந்துவிட்டான்…. மனோதிடம் சற்று அதிகமாகிப் போனதால் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எந்த கட்டமைப்பிற்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் அவன் சிக்கிக் கொள்ளவில்லை. ஆண் என்பவனுக்கு அது இல்லையே… பெண்ணாக பிறந்தவள் அதிலும் கலாச்சார குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு காலம் முழுக்க வேலிக்குள் சிக்கிய வேதனையான சூழல்தான். இந்த நிலை என்றுதான் மாறுமோ..?
நெடுநேரம் உறக்கமின்றி புரண்டவன் தன்னை மறந்து ஒரு கட்டத்தில் உறங்கி இருந்தான்.
அதன்பின் இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்தன. பக்கத்து வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லை. ஆழ்ந்த அமைதி மட்டுமே தென்பட்டது. வழக்கம்போல் பணிக்கு வந்து சென்றாள் அஞ்சலி. முகம் வழக்கம்போல் இறுகி கண்கள் சலனமற்று ஒலியிழந்து அதே தோற்றத்தில்தான் இருந்தாள். ஏனோ அவளை பார்க்கும் பொழுதெல்லாம் மனதில் பாரம் ஏறியது.
சவி கண்களில் தட்டுப்படவே இல்லை. அவ்வப்போது அவளது குரல் மட்டும் கேட்கும். அவளை பார்க்கச் சொல்லி மனம் ஏங்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை. ஏற்கனவே பல பிரச்சனைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் தனது தலையீடு தேவையற்ற ஒன்றை உருவாக்கிவிடும் என்பதால் குழந்தையை பார்க்கவும் பேசவும் இவன் முயற்சிக்கவில்லை.
அன்று சனிக்கிழமை… அடுத்தடுத்த இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை. மதுரை வந்தபின் அத்தையை சென்று அவன் பார்க்கவே இல்லை. இடையில் ஒரு முறை அழைத்து ஏக்கமாகவும் பேசி இருந்தார். வயதான பெண்மணியை அத்தனை தூரம் அலைக்கழித்து இங்கு வரவழைப்பதற்கு பதில் தானே சென்று பார்த்து வரலாம் என்று எண்ணியவன் ராமலிங்கம் காமாட்சியிடம் சொல்லிக் கொண்டு அன்று அதிகாலையிலேயே ராமேஸ்வரம் கிளம்பி இருந்தான்.
“என்னப்பு… ஊர் மாறி போன உடனே அத்தையை மறப்பியோ… கண்ணுல கட்டி வச்ச போல இருக்கு... அடிக்கடி வந்து பார்த்துட்டு போயிடு அப்பு…”
அவனுக்கு ஆசையாக மதிய உணவு தயார் செய்து பரிமாறியபடியே நிறைய கதைகள் பேசினார்.
உண்டு முடித்து உறங்கி எழுந்தவன் அத்தையிடம் வந்தான்.
“அத்தை… வர்றீங்களா… கடற்கரைக்கு போயிட்டு வரலாம்… ரொம்ப நாளாச்சு…”
“நீ போயிட்டு வா அப்பு… காலெல்லாம் ரொம்ப வலியா இருக்கு…”
அடிக்கடி அவரது காலில் நீர் கோர்த்து வீங்கிக் கொள்ளும். அதற்கான வைத்தியமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அதற்குமேல் அவரை தொந்தரவு செய்யாமல் தானே கிளம்பி கடற்கரை நோக்கி நடந்தான் குரு.
கடலை பார்க்கும் போதெல்லாம் முன்பெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி இதயத்தை அடைக்கும். இப்பொழுதெல்லாம் அனைத்தையும் கடந்து வர பழகிக் கொண்டானே.
கடற்கரை மணலில் கால் புதைய நடந்தபடி சூரிய அஸ்தமனத்தை ரசனையோடு பார்த்தபடி நின்றிருந்தான். திடீரென சற்றுத் தள்ளி குய்யோ முய்யோ என்று ஆளாளுக்கு கத்தும் சத்தம் கேட்க வேகமாக திரும்பினான்.
கடலை நோக்கி சிலர் ஓடுவதும் சிலர் கை காட்டுவதும் சிலர் பதறுவதுமாக அங்கு ஏதோ சரி இல்லை என்று அறிந்து வேகமாக அவ்விடம் நோக்கி ஓடினான்.
சற்று தூரத்தில் ஒரு பெண் நீரில் மூழ்கி உள்ளே இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. எதையும் யோசிக்காமல் பாய்ந்து கடலில் குதித்தவன் வேகமாக நீச்சல் அடித்து அந்தப் பெண்ணை நெருங்கி அவள் தலைமுடியை இறுக்கி பிடித்து தன்னோடு இழுக்க இதற்குள் வேகமாக அங்கு வந்த மோட்டார் படகில் இருந்த மீட்பு குழுவினர் தாங்களும் பாய்ந்து அந்த பெண்ணை அள்ளி எடுத்து படகில் கிடத்தினர்.
அந்தப் பெண்ணின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான். அவள் அஞ்சலி.. அதைவிட இன்னும் பெரிய அதிர்ச்சி அவள் இடுப்போடு சவியை இறுக்கி கட்டி இருந்தாள்.
“அய்யோ…” என்று தன்னிச்சையாக சத்தமிட்டு கத்தினான் குமரகுரு.
உடனடியாக கரைக்கு எடுத்து வந்து அவர்கள் இருவரையும் தூக்கி முதலுதவி செய்யும் முனைப்பில் இறங்கி இருந்தனர் அனைவரும்.
“ஏன்டி இப்படி பண்ணின..? பிள்ளையும் சேர்த்து கொல்லப் பாத்தியா..?”
தன்னிச்சையாக சத்தமாக கத்தி அழுதபடி குழந்தையின் வயிற்றை அழுத்தி அழுத்தி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தான் குமரகுரு.
“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா சார்..? உங்க மனைவியா..?”
ஆளாளுக்கு கேள்வி கேட்க “எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கதான்… உடனடியா ஆஸ்பத்திரி போகணும்…” அவர்களை புரட்டிப்போட்டி தண்ணீரை வெளியேற்றிய பின் அள்ளிக் கொண்டு உடனடியாக ஆட்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தான் குமரகுரு.
அவனது பதட்டத்தையும் அழுகையையும் பார்த்து அவனது மனைவியும் குழந்தையும்தான் என்று சிலர் எண்ணிக் கொண்டனர். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உயிருக்கு ஆபத்தில்லை மயக்கம்தான் என்று செய்தியை மருத்துவர் கூறும்வரையில் அவன் உயிர் அவனிடமே இல்லை.
மயக்கத்திலிருந்து கண்விழித்து இருந்தாள் அஞ்சலி. சவியின் மயக்கம்தான் இன்னும் தெளியவில்லை. சிறு குழந்தை என்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதின் பலனாக அவளுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.
அஞ்சலியின் அருகில் வேகமாக ஓடினான் குமரகுரு.
சோர்வாய் கண் திறந்தவளின் விழிகள் அவனைப் பார்த்தவுடன் அதிர்ந்து விரிந்து கொண்டன.
“என்ன காரியம் பண்ணி வச்சிருக்க..? உன் உயிரை போக்கிக்கிற உரிமையே உனக்கு கிடையாது… இதுல உன் குழந்தையையும் சேர்த்துக் கொல்லுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது..? உனக்கு பிறந்தா உன்கூட சேர்ந்து அந்த குழந்தையும் சாகணுமா..? சாவு மட்டும்தான் பிரச்சனைக்கு ஒரே தீர்வுன்னு நினைச்சியா..? ரெண்டு நிமிஷம் தாமதம் ஆகி இருந்தாலும் சவியை உயிரோட பார்த்திருக்கவே முடியாது. இன்னுமே அவளுக்கு மயக்கம் தெளியல… சிகிச்சை போயிட்டுதான் இருக்கு… ஏன் அஞ்சலி இப்படி பண்ணின…?”
அவளோடு பெரிதான பழக்கம் இல்லை… நல்ல உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை… ஆனாலும் ஆதங்கத்தில் உரிமையோடு அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் குரு.
“நீங்கதான் என்னை காப்பாத்துனதா..?”
அரைகுறை மயக்கத்தில் மங்கலாக தெரிந்த அவன் உருவத்தை இப்போதுதான் தன் மனக்கண்ணில் அசை போட்டாள். சோர்வான குரலில் கேட்டவளை கோபமாகத்தான் பார்த்தான் குரு.
“நல்லது பண்றதா நினைச்சு நீங்க எனக்கு இன்னும் கெடுதல்தான் பண்ணி வச்சிருக்கீங்க. வாழவே வேணாம்னு முடிவு பண்ணிதானே எல்லாத்தையும் முடிச்சுக்கணும்னு நினைச்சேன். நீங்க யாரு சார் என் வாழ்க்கையில குறுக்கிட்டு ஏதோ ஒரு வில்லங்கம் பண்ணிக்கிட்டே இருக்கீங்க…”
பேச முடியாத அளவிற்கு உடலும் குரலும் சோர்ந்து இருந்தாலும் இந்த நொடிகூட அவனிடம் கோபத்தை காட்டினாள் அஞ்சலி.
அமைதியாக அவளையை சில நொடிகள் பார்த்தான் குரு.
“நீ அளவுக்கு அதிகமான விரக்தியில இருக்க.. இப்ப உனக்கு தேவை ஓய்வு… தேவை இல்லாம எதையும் யோசிக்காத.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… கண்ணை மூடி தூங்கு…”
மென்மையாய் வெளிப்பட்ட அவன் குரலில் அமைதியாக அவனையே பார்த்தவள் “நீங்க எப்படி இங்கே வந்தீங்க..?” தணிந்த குரலில் கேட்டாள்.
“இதுதான் என்னோட ஊர்…” என்றவன் அதற்குமேல் வேறு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
அதீத அயர்ச்சியில் தானாகவே அவளது விழிகள் மூடிக்கொண்டன. மருந்தின் வீரியத்தில் உறக்கத்திற்கும் சென்றிருந்தாள்.
தன் அத்தைக்கு அழைத்து விபரம் கூறி உணவோடு கிளம்பி வரச் சொல்லி இருந்தான் குரு.
இதற்கிடையில் சவியும் விழித்து விட்டதாக செய்தி வர வேகமாக அவளது அறைக்குள் ஓடினான். மலங்க மலங்க விழித்த குட்டிப் பெண் பயத்தில் உதடு பிதுக்கி அழுது கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்தவுடன் அவளது அழுகை அதிகரித்தது.
“மாமா…” என்றபடி கை விரிக்க அவளை அள்ளி அணைத்தவனுக்கு அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“ஒன்னும் இல்லடா… ஒன்னுமே இல்ல…”
“எனக்கு பயமா இருக்கு… அம்மா… அம்மா…”
அனத்தலான குரலுடன் நடுங்கியவளை இன்னும் ஆதுரமாக அணைத்து தலை வருடியவன்,
“அம்மா இங்கேதான் இருக்காங்க… உனக்கு ஒன்னும் இல்ல… மாமா உன் கூடவேதான் இருக்கேன் என்ன…”
தன்னில் இருந்து விலக்கி கூறியவன் அவள் முகத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டு படுக்கையில் படுக்க வைக்க அவன் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள் சவி.
அறைக்குள் நுழைந்து அவளை ஆராய்ந்தார் மருத்துவர்.
“ரெண்டு பேருமே ஓகேதான்… இருந்தாலும் இன்னைக்கு ஒருநாள் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. ரெண்டு பேருக்குமே சாப்பிட ஏதாச்சும் குடுங்க. அதுக்கு அப்புறம் மருந்து கொடுக்க வேண்டியது இருக்கு…” என்று கூறி அவரும் வெளியேறி இருந்தார்.
முகாமில் உள்ள மற்றும் இரு பெண்களை அழைத்துக் கொண்டு உணவுப் பையோடு அங்கு வந்திருந்தார் குருவின் அத்தை ராதா.
தன் கையை இறுக்கி பிடித்து விடவே மாட்டேன் என்று அடம்பிடித்த சவியிடம் சமாதானம் கூறியவன் உணவு எடுத்து வருவதாக கூறி வெளியேறி இருந்தான்.
சுருக்கமாக அஞ்சலியை பற்றி தன் அத்தையிடம் விபரமும் தெரிவித்து இருந்தான் குரு.
அவரை மட்டும் அழைத்துக் கொண்டு உணவையும் எடுத்துக் கொண்டு அஞ்சலியின் அறைக்குள் நுழைந்தான்.
மயக்கமும் உறக்கமும் தெளிந்து ஓரளவு தெளிந்த நிலையில் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அஞ்சலி. குழந்தை நன்றாக இருப்பதாக செவிலியர் கூறிச் சென்றதால் ஓரளவு முகத்தில் நிம்மதி இருந்தது.
“என்னம்மா இது..? இப்படி பண்ணலாமா..? சின்னப் பொண்ணு… படிச்ச பொண்ணு… இப்படித்தான் நடந்துக்கிறதா..?”
முன்பின் பழக்கம் இல்லை என்றாலும் உரிமையோடு தட்டில் உணவினை போட்டபடியே அஞ்சலியிடம் எதார்த்தமாக பேசினார் ராதா.
“இவங்க என்னோட அத்தைதான்… நீ சாப்பிடு…”
“சவி… சவி…”
“அவ இப்ப நல்லா இருக்கா… இவ்வளவு நேரமும் அவ கூடதான் இருந்தேன்… அவளை நான் சாப்பிட வைக்கிறேன்… நீ சாப்பிடு…”
கனிவாகச் சொன்னவன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் உணவுத் தட்டோடு சவியின் அறை நோக்கிச் சென்றிருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!