Skip to content
Post Views: 3,331
ஆதிமூலமும் அவ்வளவு அகமகிழ்ந்து போனார். அடுத்த தலைமுறை வாரிசின் வரவு யாரை தான் மகிழ்விக்காது?
மனிதன் எவ்வித உணர்வுகளையும் வெளுக்காட்டாது மீசையை முறுக்கிக் கொண்டே சென்று விட்டார்.
தான் பெரியப்பா ஆகிவிட்ட மகிழ்ச்சி பரமசிவனுக்கு.
தன் குழந்தைகள் சரவணன் சபிதா இருவரிடமும் உங்க கூட விளையாட குட்டி பாப்பா வரப்போகுது என்றான்.
Advertisement
இது பெரிய உலக அதிசயம் என்று நொடித்துக் கொண்டது பரமசிவனின் தர்ம பத்தினி ஜெயலட்சுமியே தான்.
அப்பா கலா அத்தைக்கு பாப்பா வரப்போகுது அதை தானே சொல்ற…? பெரியமனுஷி போல் கேட்டது சபிதா.
இல்ல பட்டு உங்க தமயா சித்திக்கு பாப்பா வரப்போகுது….
Advertisement
ஹைய்யா… ஹைய்யா… குழந்தைகள் இருவரும் வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளி குதித்தனர்.
Advertisement
“—————–“
மறுநாள் காலையிலே கிளம்பி விட்டார் சுசிலா.
ஏ சின்னவனே என்னை கொண்டுப்போய் உன் மாமியார் வூட்டுல விடு… உன் பொண்டாட்டியை பார்த்துட்டு வரேன் என்றார் சுசிலா.அவர் கண்களில் மகிழ்ச்சி ஆர்வம் எல்லாம் அபரிமிதமாய் பரிமளித்தது.
Advertisement
எம்மோ நான் உண்டான சேதிக் கேட்டப்போ இம்புட்டு அலட்டிக்கலையே.. மருமவன்னதும் பத்து வயசு குறைஞ்சுடுச்சு போல… கலா மனதில் உள்ளதை வார்த்தையாய் கொட்டினாள்.
அட சும்மா கிடடி… உம்மூட்டு புள்ள எம் பேரப்பிள்ளை ஆயிடுமா?
அது சரி… அப்போ செந்தா அக்கா பிள்ளைங்க ரெண்டும் கூட அந்த கணக்கு தானா…? நிறைமாத வயித்தை பிடித்துக்கொண்டு மல்லுக்கு நின்றாள் கலா.
யாரா இருந்தா என்ன? நான் என்ன ஊருல இல்லாத கதையையா சொல்லிபுட்டேன்… உலக வழக்கமே இதானே… சுசிலா விலாவரியாக எடுத்து சொல்ல முகம் சிறுத்து போனது கலாவுக்கு.
உனக்கு எம்மேல அக்கறை இருந்தா இன்னைக்கோ நாளைக்கோன்னு நிறை மாசமா இருக்க என்னை விட்டுட்டு மருமவள பார்க்க கிளம்பி நிற்பியா…. கோபம் முகிழ்ந்தது அவள் குரலில்.
அம்மா கலா தான் உனக்கு எப்போவுமே ரொம்ப முக்கியம். முக்கியமா இருந்தாகணும். ஏன்னா அவங்க இந்த வீட்டு பொண்ணு … தமயந்தி என்ன பெரிய இவளா…வேற வீட்டுல பிறந்து இங்கே வாழ வந்தவ தானே…? பொறுமையா பார்த்துக்கலாம். ஏன் பார்க்கலைனா கூட என்ன….வேகமாய் வெளியேறிவிட்டான் சங்கரன்.
அடி அறிவுகெட்டவளே… உனக்கு நாக்குல சனி. எந்நேரமும் அவன் பொண்டாட்டிகிட்ட எதிர்த்து நிற்குறது தான் உன் வேலையா?
அவன் சம்பாத்தியத்தில் சேர்த்து வச்சு தான் உன்னை கரை சேர்த்தது. நாளைக்கு உனக்கு பிரசவமுனாலும் அவன் தான் செலவு பார்க்கணும். மூணாம் மாசமோ அஞ்சாம் மாசமோ பிள்ளையை தூக்கிட்டு உன் புகுந்த வீட்டுக்கு போகும் போதும் அவன் தான் செலவு செய்யணும்! உனக்கு ஏன் அவன் மேல பாசமே இல்ல.. நீயெல்லாம் கூட பிறந்தவளா…? அன்று முழுவதும் நினைத்து நினைத்து திட்டினார் சுசிலா.
“—————-“
அடுத்த நாள் சுசிலாவே யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்டோ பிடித்து சம்மந்தி வீட்டுக்கு சென்று இறங்கினார்.
மனதின் அடியில் கசப்பு இருந்தாலும் நாக்கின் நுனியில் இனிப்பை தடவி வாங்கத்த என்றாள் தமயந்தி.
இயல்பாய் பேச இருவராலும் முடியவில்லை.
தமயந்தியின் அம்மா சம்மந்திக்கு தடபுடலாய் விருந்து சமைத்து பரிமாறினார்.
தமயந்தி தாய் வீட்டில் எதுவும் கூறவில்லை என்று புரிந்தது.
வாய்க்கு உனக்கையா இருக்குன்னு சும்மா ஊறுகாய் சாப்பிடாத…. படுத்தே இருக்காத…. பிடிக்கலைனாலும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு! ஆயிரம் அறிவுரைகள் கூறிவிட்டு சென்றார் சுசிலா.
அடுத்த வாரமே கலாவிற்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டது. குழந்தை பிறந்த மறுநாளே தமயந்தியை அழைத்து வரக்கூறினார் சுசிலா.
தமயந்தி மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
கலா எந்நேரமும் தன்னுடன் தாயை இருத்திக் கொண்டாள்.
ம்ம்மா.. குழந்தை அழுறான் என்னனு பாரு! ம்மா குழந்தை ஈரம் பண்ணிட்டான் துணியை மாத்து….
ஜெயலட்சுமி ஓரகத்தி கோதாவில் போட்டி போட… எல்லா வேலையும் தமயந்தி தான் பார்த்தாக வேண்டிய கட்டாயம்.
கலா அவளிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. மாமனாரிடம் அவள் பேசுவதில்லை. வயிற்று பிள்ளைகாரி என்று ஜெயலட்சுமி பார்ப்பதில்லை. வீட்டில் நடக்கும் பூசல்களை தமயந்தி கணவனின் காதுக்கு கொண்டு செல்வதில்லை. பிள்ளை உண்டாகி இருக்கும் மருமகளை பார்ப்பதா? பச்சை உடம்புகாரியாக இருக்கும் மகளை பார்ப்பதா என்று சுசிலா விழி பிதுங்கி நின்றார். இப்படியாய் நாட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
சீர்காழியில் கட்டி கொடுத்த மூத்த மகள் செந்தாமரை தன் இரு குழந்தைகள் கணவனுடன் தங்கையை பார்க்க வந்திருந்தாள்.
மூத்த நாத்தனாருக்கு கறி மீன் என்று அசைவ விருந்து செய்து கொண்டிருக்கும் மனைவியை சங்கடத்துடன் பார்த்தான் சங்கரன்.
ம்மா… தமயா தனியா செய்துக்கிட்டு இருக்கா… நீ போய் கூட மாட ஒத்தாசை செய்யக் கூடாதா? தயக்கமாய் கேட்டான்.
குனிஞ்சு நிமிந்து வேல பார்த்தா தான் சுகபிரசவம் ஆகும்… பத்து பிள்ளை பெற்றவள் போல் வியாக்கியானம் பேசினாள் கலா.
வீட்டு மூத்த மாப்பிள்ளை வந்திருக்கும் போது நாம ஏதாவது பேசினால் ஏடாகூடமாகி விடும் என்று அமைதியாக சென்றான் சங்கரன்.
அய்யோ அண்ணி நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க… சின்ன வெங்காயத்தை அள்ளி உரிக்கத் தொடங்கிய செந்தாமரையை கண்டு வருத்தம் கொண்டாள் தமயந்தி.
இருக்கட்டும் தமயா… நீ ஒருத்தி எவ்வளவு வேலை பார்ப்ப… காலையில களை பறிக்கிறதை பார்த்துட்டு புருஷனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன்னு போன ஜெயா அண்ணி இன்னும் வரல… அம்மாவும் கலா பையன் அழுதுட்டே இருக்கானு அதுக்கு கை வைத்தியம் பார்த்துட்டே இருக்காங்க.
பேசிக் கொண்டே மீன் குழம்புக்கு வெங்காயமும் பூண்டும் உரித்துக் கொடுத்தாள் செந்தாமரை.
அண்ணனுக்கு காபி போடவா?
இல்ல தமயா அவர் காபி டீ எல்லாம் குடிக்க மாட்டாரு.
தமயா…அப்பா கை நீட்டிட்டாருன்னு இப்போ தான் கேள்வி பட்டேன். அப்பா பண்ணது ரொம்ப தப்பு. நீ எதையும் மனசுல வச்சுக்காத…
“விடுங்கண்ணி “ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள் தமயந்தி.
அண்ணன் ரொம்ப நல்ல டைப் தமயா… அண்ணன் தனக்காக எதுவும் செய்துகிட்டது இல்லை. உழைக்குமே தவிர அதுக்கு உலகம் தெரியாது. வரவு செலவு எதுவும்கேட்டுக்காது.செந்தாமரை நியாயம் பேசுபவள். சின்ன அண்ணனை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. அது தான் மனம் தாளாது பேசுகிறாள்.
நீ இங்கே சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியல… குழந்தை பிறந்த உடனே தனிக்குடித்தனம் போயிடுங்க.
அய்யோ அண்ணி அதெல்லாம் வேண்டாம்..எப்போவும் எல்லாரும் ஒன்னாவே இருப்போம்.
ம்ம்ம்ம்… அண்ணன் தான் அப்பாவியா இருக்குன்னு பார்த்தேன் வந்து சேர்ந்த நீ அதை விட ஏமாளியா இருக்க…
அடுப்படியில் பேச்சுக் குரல் கேட்டு உள்ளே வந்த ஆதிமூலம் மகள் பேச்சில் சினந்து நின்றார்.
இந்தா பாரு செந்தா அம்மா வீட்டுக்கு வந்தோமா ஆக்கி போடறதை திண்ணோமா… நாலு நாளைக்கு தங்கிட்டு மூட்டை கட்டிக்கிட்டு போனோமான்னு இருக்கணும்… அவர் பேசிய தொணியும் அவர் குரலில் காட்டிய கடுமையும் செந்தாமரையை பெரிதும் காயப்படுத்தி விட்டது.
இப்போ என்னப்பா சொல்லிட்டேன்…? நீங்க சாம்பாதிச்சு போடுற மிஷினாவே அவனை வச்சுக்கோங்க எனக்கென்ன வந்துச்சு?
உங்க மகனை பத்தி உங்களுக்கு என்னைக்கு அக்கறை வந்திருக்கு? கடைசி வரை உங்க கிரீடம் இறங்கிடக்கூடாது.
கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவள் ஏங்க கிளம்புங்க போவோம்… புள்ளைக எங்க…? மனைவியின் கலங்கிய விழிகள் கண்டு புரிந்து கொண்டான் அவள் கணவன் சுந்தரம்.
அண்ணி வாங்க உங்க கையால எனக்கு மீன் வறுத்து கொடுங்க! நீங்க நல்லா மீன் வறுவல் செய்வீங்களாமே…? அவள் கரம் பற்றி கெஞ்சுதலாய் பார்த்தாள் தமயா.
“இந்த பெண் இவ்வளவு நல்லவளாக இருக்கிறாளே” செந்தா இன்னும் கண்ணீர் உகுத்தாள். அண்ணணும் அண்ணியும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தாள்.
“——————-“
கலா மூணாம் மாசம் அம்மா அழைச்சுக்கலாம்னு சொல்றாங்க…. அவள் கணவன் வேல்முருகன் சொல்ல அலறிவிட்டாள் கலா.
நான் வரமாட்டேன்… என்னால குழந்தையை கண் முழிச்சு பார்த்துக்க முடியாது. நீங்க பார்ப்பீங்களா? உங்க அம்மா பார்ப்பாங்களா?
இங்கேனா அம்மா பார்த்துக்கும்… பக்குவமா ஆக்கி போட தமயா இருக்கா… சத்தா பழமும் பருப்புமா எங்க அண்ணன் வாங்கி போடுறான்.
மனைவி அதட்டி உருட்டியதில் வாயடங்கி போய் விட்டான் அவளுக்கு வாய்த்த அப்பிராணி கணவன்.
தமயந்தியை ஓய்வெடுக்க சொல்லி அவள் உடல் நிலை கெஞ்சினாலும் வீட்டு சூழ்நிலை விடவில்லை.
நேத்து நான் தானே ஆக்கினேன் இன்னைக்கு அவ செய்யட்டும் என்றளவில் இருந்தாள் ஜெயலட்சுமி.
தமயா நீ உங்கம்மா வீட்டுக்கு போய் நாலு நாள் தங்கிட்டு வரியா?
இல்லங்க இது நாலாம் மாசம்… கவலையுடன் கூறினாள் தமயந்தி.
சுசிலா மனம் பொறுக்காமல் மருமகளுக்கு உதவி செய்வதுண்டு.
“——————-“
சங்கரா மாயவரத்தில் சீட்டு போட்டிருந்தல்ல இந்த மாசம் அதை எடுக்க முடியுமான்னு பாரு!
எதுக்கு…? தந்தையை கோபத்துடன் பார்த்தான்.
அஞ்சாம் மாசம் கலாவை அனுப்பி விடணும்.
அதுக்கு?
குழந்தைக்கு வெள்ளியில கொலுசு அரணாகயிறு நான் வாங்கிடுவேன். கழுத்துக்கு சங்கிலியும் கைக்கு காப்பும் தங்கத்துல போட சொல்லி கலா அடம் புடிக்குது.
நான் தமயந்தி நகையை மீட்க சீட்டு போட்டிருக்கேன்.
நகைக்கு இப்போ என்ன அவசரம்? கடு கடுத்தார்.
அதே கேள்வியை நானும்…. அவன் முடிக்கவில்லை. ஏங்க சீட் எடுத்து கொடுத்துடுங்க என்றாள் கதவின் பின் நின்ற தமயந்தி.
நீ சொல்லி தான் எம்புள்ள செய்யணும்னு இல்ல… எம்புள்ள என்பேச்சை என்னைக்கும் மீறினது இல்ல…. உறுமிவிட்டு போனார் ஆதிமூலம்.
“——————“
நாட்கள் இப்படியே நகர்ந்தோட… இந்த பாருய்யா குண்டு நெல்லு நூத்திருவது மூட்டை வித்திருக்க… மொளகா ஆறு மூட்டை வித்திருக்க… உளுந்து பன்னெண்டு மூட்டை வித்திருக்க அந்த பணத்த சின்னவன் கையில கொடு! அடுத்த மாசம் அவன் பொண்டாட்டிக்கு வளைகாப்பு போடணும். நகை போடாம தமயா நின்னா அவங்க வீட்டுல எங்கேன்னு கேட்க மாட்டாங்களா?
வித்து வாங்கி சூதாடிட்டானா? சின்ன வீடு எவளுக்காவது கொட்டி கொடுத்துட்டானா? தொழில்ல தானே போட்டிருக்கான்.
நீ பேசுறது நியாயம் இல்ல பார்த்துக்க… அவன் சாம்பாதிக்க சாம்பாதிக்க நீ புடுங்கிட்டே இருந்தா அவன் எங்கே இருந்து நகையை மீட்கிறது?
என்னடி வாய் ரொம்ப நீளுது?
வாய் பேசல.. நியாயத்தை சொன்னேன்.
அத்த எம்புருஷன் ராப்பகலா கண்முழிச்சு தண்ணி பாய்ச்சி… பனியிலும் காத்திலும் அண்ட வெட்டி, வரப்பு கட்டி பாடுப்பட்ட நெல்லு பணத்தை உங்க சின்ன மவனுக்கு தூக்கி கொடுக்க சொல்வியோ…? ஜெயலட்சுமி சீறிக் கொண்டு வந்தாள்.
நீ அறிவோட தான் பேசுறியா? சின்னவன் என்ன சாம்பாதிச்சு தனியாவா சுருட்டி வச்சிருக்கான்?
இருந்தாலும் இருக்கும்… யாருக்கு தெரியும்… முகத்தை முறுக்கினாள் ஜெயலட்சுமி.
ச்சீ… ஏன் இப்படி பேசற… அவன் கணக்கு பார்த்தா இந்த குடும்பமே நடக்காது.
என்னத்த சின்ன மகனுக்கு காவடி தூக்குற? நக்கலாய் கேட்கும் மருமகளை கன்னம் கன்னமாய் அறைந்து விட்டால் என்ன என்றே தோன்றியது சுசிலாவுக்கு.
ஏய் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்! நீ உள்ளே சட்டி புட்டி கிடந்தா கழுவு. வந்துட்டா நாட்டாமை பண்ணிக்கிட்டு…நகைக்கு வட்டி மட்டும் இப்போ கட்ட சொல்லு… பொறுமையா மீட்டுக்கலாம்.
இப்படியே பேசிட்டு இரு! சாது ஒரு நாளைக்கு மிரண்டு நிற்கும் அன்னைக்கு தெரியும் உங்க கதி… முணகிக் கொண்டே சுசிலா செல்ல…
ஏய்…. வீடதிர கத்திய ஆதிமூலம் நின்ற நிலையில் மயங்கி சரிந்திருந்தார்.
“————–“
ரத்த அழுத்தம் கூடி இருக்கும் என்று தான் நினைத்தார்கள். இது ஹார்ட் அட்டாக் என்று கூறி மருத்துவர்கள் தலையில் இடியை இறக்கினார்கள்.
குடும்பம் மொத்தமும் அரண்டு கிடந்தது.
நடந்த விஷயங்களை சங்கரனிடம் கூறி அழுது கரைந்தார் சுசிலா.
உள்ளுக்குள் நொறுங்கி விட்டான் சங்கரன். தன் எதிர்காலம் குறித்தான பயம் அவனை திகிலடைய வைத்தது.
கடைசிவரை இவர் கைக்குள் நான் கைக்குட்டை போல் மடங்கி சுருண்டு கிடக்க வேண்டுமா?
———–தொடரும் ——–
என்ன மக்கா இழுவையா இருக்கா? கொஞ்சம் விலாவரியா எழுத வேண்டிய நிலையில் எழுதியது.இரண்டு எபி அட்ஜெஸ்ட் கரோ… அப்புறம் கதை நல்லா போகும்.
தமயந்தி கேரக்டருக்கு காரணம் புரிய வேண்டுமே…
error: Content is protected !!