Skip to content
Post Views: 2,915
சொல்லி முடித்துவிட்டானே தவிர அவள் முகத்தை பார்க்க அவனுக்கு திடமில்லை.
உங்களுக்கு ஏன் ஆயம்மா பிடிக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்… மென்மையாய் அவன் தலை கோதினாள்.
சாரிடாம்மா… கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டான்.
உதடு பிரியாத புன்னகை பூத்தவள் தன் கரத்தோடு அவன் கரத்தை இறுக்கி பிணைத்துக் கொண்டாள்.
Advertisement
ரொம்ப யோசிக்காம தூங்குங்க…. தலை சாய்த்து புன்னகை புரிந்தவளின் சாந்தமான முகம் அவனை ஆசுவாசப்படுத்தியது.
அவள் கரம் பற்றி மார்பில் புதைத்துக் கொண்டவன் பவி உன் அம்மா கூட உனக்கு இருந்த மனதாங்களை கேள்விப்பட்டவுடனே தான் உன்னை இன்னும் விரும்ப ஆரம்பிச்சேன்.
ம்ம்ம்ம்ம் என்றாள் புரிதலுடன் கூடிய காதலுடன்.
Advertisement
என் அப்பா விஷயத்தில் எனக்கு இருக்கும் சங்கடம் மாதிரியே உனக்கும் உன் அம்மா விஷயத்தில்.
Advertisement
ம்ம்ம்ம்….. மௌனமாய் தலையசைத்து சம்மதம் சொன்னாள்.
என்மேல் உனக்கு வருத்தம் இல்லையாடா…? தயக்கமாய் கேட்டான்.
கொஞ்சம் இருக்கு…! மிக மெல்லிய முக சுழிப்பு அவளிடத்தில்.
Advertisement
நானாட்ட நான் நடந்துகிட்ட முறையா?
ம்ம்ம்ம்… தலை அதுவாய் ஆடியது.
தவறுன்னும் தோணுது… தவறில்லைன்னும் தோணுது… உள்ளம் மறைக்காது உண்மை கூறினான்.
நல்லவங்களுக்கு சரி தவறை சீக்கிரம் பிரித்தறிய முடியாது போல…. உணர்ந்து கூறினாள்.
பெத்த அவ்வா தான்… அவள் கன்னம் பற்றி சிரித்தான்.
நிஜமா தான் சொல்றேன்… என் அம்மா எங்கிட்ட நடந்துகிட்ட முறை தவறுன்னு பல நேரம் தோணினாலும் ஒரு தாயோட ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் அதில் தவறில்லையேன்னு சில நேரம் தோனாமலும் இல்லை.
ஒரு மகளா என் இடத்தில் இருந்து பார்க்கிறேன் தவறுன்னு தோணுது. ஒரு அம்மாவா அவங்க இடத்தில் இருந்து பார்த்தால் சரியாதான் படுது.
அப்போ உங்கம்மாவை மன்னிச்சுட்டியாரா? ஆர்வமாய் பார்த்தான்.
மன்னிப்புனு பெரிய வார்த்தை சொல்லாதீங்க! அம்மா மேல் எனக்கு வருத்தம் தான். அது என்னைக் நீங்கும்னு எனக்கு தெரியாது.
உறவில், உரிமையில், அன்பில் அவங்கட்ட பெருசா எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பின்னே அவங்க மேல் எனக்கு வருத்தம் இன்னும் அப்படியே தான் இருக்கு.
புரியுது… என் நிலையும் அது தான்… அவள் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டான்.
நான் உங்கட்ட ஒன்னு கேட்கணும்! எச்சில் விழுங்கினாள்.
அவள் முக மாற்றம் கண்டே நொடியில் உணர்ந்து கொண்டவன். சாரிடா அம்மாயி அது மட்டும் முடியாது… தாடை இறுகியது அவனுக்கு.
என்ன முடியாது? விழிகளால் வினா தொடுத்தாள்.
நீ நினைத்தது…. இறுக்கமாய் வந்தது பதில்.
நான் என்ன நினைத்தேனாம்? தலையணையை மடியில் வைத்துக்கொண்டு உதடு மடக்கி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
நீ என்ன நினைத்தாயோ அது தான்…! புருவத்தை மேலே ஏற்றினான்.
அது தான் என்னன்னு கேட்டேன்! ஆராய்ந்தாள் அவன் விழியிரண்டை.
சொல்லிடுவேன்! சலுகையாய் அவள் மடியில் இருந்த தலையணையை பிடுங்கி கொண்டான்.
சொல்லுங்க பார்ப்போம்… அவன் தொடையில் கை ஊன்றி முட்டுக் கொடுத்து அவன் முகத்தை பார்த்தாள்.
சொல்லிட்டா…! அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.
சொல்லுங்க பார்ப்போம்…. இன்னும் ஆர்வம் கூடிப்போனது அம்மாயிக்கு.
என் நானாக்காக மட்டுமல்ல இந்த உலகமே சொன்னாலும் உன்னை விட்டு இன்னொருத்தியை விவாகம் பண்ண மாட்டேன்.
பா… வா… அவள் உதடுகள் திக்கி திணறியது. அவள் கேட்க நினைத்து தயங்கியது இது தானே…?
அவள் முதல் முறையாக பாவா சொல்லி இருக்கிறாள். அது அவளுக்கும் தெரியவில்லை அவனுக்கும் உரைக்கவில்லை.
தாரணி அப்படி தானே பாவா பாவா என்று மருத்துவமனையில் கணவனை கண்டு கதறி அழுதார்.
அவளுக்குள்ளும் அந்த வார்த்தை ஆழ பதிந்து விட்டது.
அடுத்து கேட்க அவளிடம் வார்த்தையில்லை. சொல்வதற்கு அவனிடம் வார்த்தைகள் நிறையவே இருந்தது.
அம்மாயி இந்த ஜென்மத்தில் குடும்பஸ்தனா வாழ்ந்தால் என் பவித்ராவோட தான்.
இல்லைனா?
இல்லைனா என்ன தற்கொலையா பண்ணிக்க முடியும்? கைநிறைய சம்பாதிப்பேன். நாடோடியா ஒவ்வொரு கன்ட்ரியா சுத்தி திரிவேன்…. எமன் வந்து கூப்பிடும் போது போய் சேர்ந்துடுவேன்!
கதை போல் விளையாட்டாய் அவன் கண்சிமிட்டினாலும் அவன் கண்ணோரம் கசிவது அவளுக்கு தெரியவில்லையா என்ன?
பாவா…. மார்போடு இறுக்கிக் கொண்டவளின் விழிநீர் அவன் விழிநீரோடு இணைந்து ஒற்றைக் கோடாய் வழிந்தது.
பவித்ரா வேண்டாம்னு சொல்ல அவங்களுக்கு உரிமையிருக்குன்னா யாருமே வேண்டாம்னு சொல்ல எனக்கு உரிமை இருக்குடா…. பரிவுடன் அவள் தலைகோதி கண்ணீரை துடைத்து விட்டான்.
டைம் ஆச்சு…தூங்கலாமா?
ம்ம்ம்ம்… என்கூடவே இரு!
அய்யோ… அவள் பதறி எழுந்தாள்.
ஏனாம்? ஏக்கமுடன் முகம் பார்த்தான்.
வேங்கடம்மா என்ன நினைப்பாங்க? கூச்சத்தில் நெளிந்தாள்.
நான் என்ன நினைப்பேன்னு யோசிக்க மாட்டியா?
யோசிப்பேனே…. நான் என்ன நினைப்பேனோ அதை தான் என் பாவாவும் நினைப்பாருன்னு யோசிப்பேன் … வெட்க சிவப்பில் தலை தாழ்ந்து நின்றாள்.
பாவாவா….? தேகம் சிலிர்த்து விறைத்து போனான்.ஒற்றை வார்த்தை போதை கொடுக்குமா?
அவள் நாக்கை கடித்துக் கொண்டு ஓட முயன்றாள். சுப்ப கிருஷ்ணா மகன் விட்டுவிடுவானா என்ன?
இப்போ சொல்லு! அவள் வளை கரத்தை வளைத்து பிடித்துக் கொண்டான்.
ம்கூம்… நாணத்தில் மறுப்பாய் தலை அசைத்தாள்.
ஒரே ஒரு தரம் சொல்லுடா அம்மாயி ப்ளீஸ்… கண்கள் கெஞ்சியது வார்த்தை கொஞ்சியது.
மாட்டேன் என்பதாய் தலை மட்டும் ஆடியது.
அப்புறம் ஏன்டி கூப்பிட்ட…? தனக்கான உரிமை வேண்டி அவனுக்கு கோபம் மெலிதாய் கிளர்ந்து விட்டது.
என் அத்தம்மா அவங்க புருஷனை அப்படி தான் கூப்பிட்டாங்க!
வேகமாய் அவன் கரத்தை தட்டி விட்டவள் நானும் என் புருஷனை அப்படி தானே கூப்பிடணும்…? கதவை திறந்து ஓடியே விட்டாள்.
ஏய் அம்மாயி சிணுங்கி …. அழுந்த தலை கோதி சிரித்தவன் கட்டிலில் பொத்தென்று விழுந்தான்.
பல காலம் தூக்கி சுமந்த சுமையை இறக்கி வைத்த நிம்மதி அவனுக்கு.
“—————-“
அதிகாலை வேங்கடம்மா எழுந்து வாசல் பெருக்க வந்து பார்த்தார்.
அழகாய் கோலமிடப்பட்டு இருந்தது.
கிச்சனுக்குள் மின்விளக்கு எரியவே எட்டி பார்த்தார். பவித்ரா காபி கலந்து கொண்டிருந்தாள்.
என்னம்மா அதுக்குள்ள எழுந்துட்டிங்க? என்னை எழுப்பி இருக்கலாமே… அவர் தெலுங்கில் தான் கேட்டார். பவித்ராவிற்கு நன்றாகவே புரிந்தது.
ஹாஸ்பிடல் போகணும்! மாமய்யாக்கு ஆஞ்சியோ பண்ண போறாங்க இல்லையா… அவளும் தமிழில் தான் கூறினாள்.
உணர்வுகளை கடத்த மொழிகள் எதற்கு?
பவித்ராவை வாஞ்சையுடன் பார்த்து நின்றார் வேங்கடம்மா. தாரணிக்கு ஏற்ற மருமகள் என்று மகிழ்ந்து போனார்.
ஐந்து மணிக்கு ஹரியை எழுப்பி விட்டாள்.
என்னங்க எந்திரிங்க… அயர்ந்து உறங்கியவனை மெல்ல தட்டினாள்.
பாவா சொல்லு குலாபி . அரை தூக்கத்திலும் தெளிவாய் கொஞ்சினான்.
ச்சீ எழுந்திரிங்க ஹாஸ்பிடல் கிளம்பணும்! நாண சிவப்பும் சிலிர்ப்பும் அதிகம் இருந்தும் அழகாய் மறைத்துக் கொண்டாள்.
ஒரு தரம் பாவா சொல்லு பயங்கர எனர்ஜியோட இன்றைய நாள் தொடங்கும் கொட்டாவி விட்டபடி கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.
என்னங்க இப்படி பண்றீங்க? சலித்துக் கொண்டாள்.
அம்மா சொல்ற மாதிரி சொல்லு… அரை கண்ணை திறந்து கிறக்கமாய் பார்த்தான்.
அம்மா சொல்ற மாதிரி தான் சொன்னேன்… அவள் நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
எது அம்மா சொல்ற மாதிரியா? முழு கண்ணையும் திறந்து யோசனையாய் பார்த்தான்.
ம்ம்ம்ம்… எங்கம்மா சொல்றமாதிரி… குபீரென்று சிரித்து விட்டாள்.
அவன் பொய் கோபத்துடன் முறைக்க… எங்கம்மா எங்கப்பாவை இப்படி தான் கூப்பிடுவாங்க! அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்.
“——————–“
குளித்து வந்த ஹரிக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
இதென்னம்மா கூடை பலமா இருக்கு? காபியை உறிந்து கொண்டே கேட்டான்.
ஹாஸ்பிடலில் இருக்கிறவளுக்கு காபி, வெந்நீர், டிபன்.
டிபனா? அதுக்குள்ளேயா?
ம்ம்ம்ம்ம்…. கேண்ட்டினில் ஏன் வாங்கணும்? இட்லி, சாம்பார், கோங்குரா துவையல் செய்தாச்சு.
மெச்சிக் கொண்டான் தன் அம்மாயியை.
கோங்குரா நான் பண்ணலை…!
வேங்கடம்மா பண்ணாங்களா?
ம்ம்ம்ம்… செம்ம டேஸ்ட். நான் அதே மெத்தடில் ட்ரை பண்ண போறேன்…பேசிக் கொண்டே டவலை மடித்து கூடையில் வைத்து மூடினாள்.
பூஜை அறைக்கு சென்று இருவருமாய் சாமி கும்பிட்டனர்.
பெரிய சர்ஜரி இல்லை… ஆஞ்சியோ இந்த காலத்தில் சர்வசாதாரணம் என்றெல்லாம் தெரிந்தாலும் மனம் கேட்கவில்லையே…
“———————–“
சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இரவு முழுதும் உறங்காத களைப்பில் சோர்ந்து கண்கள் சிவந்து அமர்ந்திருந்தார் தாரணி.
ராம் நானாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போக இன்னும் டைம் இருக்கு.நீயும் அம்மாவும் பிரஷ்ஷப் ஆகிட்டு வாங்க…! ஹரி அவர்களை வற்புறுத்தி அனுப்பினான்.
உறவினரின் மருத்துவமனை அல்லவா? அங்கு அனைத்து வசதிகளும் அவர்களுக்கு இருந்தது.
காலைக்கடன்கள் முடித்து வந்த ராம், தாரணி இருவருக்கும் காபியை ஊற்றி கொடுத்தாள் பவித்ரா.
பவித்ராவின் முகம் பார்த்து அன்பாய் புன்னகை புரிந்தார் தாரணி.
கவலைபடாதீங்க சீக்கிரம் குணமாகி வருவார். நம்பிக்கையுடன் தன் கரம் பற்றி ஆறுதல் சொல்லும் பவித்ராவை தோளோடு அணைத்துக்கொண்டார் தாரணி.
ஏனோ தாரணிக்கு பவித்ராவை அவ்வளவு பிடித்து விட்டது. மகனுக்கு பிடித்ததினாலோ… அவர் மனதுக்கு பிடித்ததினாலோ
ஷியாமளா கூட இரவு கரீம்நகரில் தாய் வீட்டில் தங்கியிருந்து அதிகாலை வந்து விட்டார்.
பாலாஜியுடன் மற்ற மருத்துவர்கள் இணைந்து கொள்ள சுப்ப கிருஷ்ணாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர்.
குடும்பத்தார் அனைவரையும் ஏக்கத்துடன் பார்த்தார் சுப்பு.
அங்கிள் … பாலாஜியின் கரம் பற்றினான் ஹரி.
ஒண்ணுமில்ல ஹரி… நான் பார்த்துக்கிறேன். ஆதரவாய் தோள் தட்டிவிட்டு பாலாஜி தியேட்டடருக்குள் சென்றுவிட… சுப்பு மனையாளை திரும்பி பார்த்தப்படியே வீல் சேரில் கடந்து செல்ல அகன்ற பெரிய கண்ணாடி கதவுகள் மூடப்பட்டது.
படபடக்கும் இதயத்துடன் குடும்பத்தார் தவித்து நிற்க… கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் தாயின் தோளில் அணைவாய் கை போட்டு அமர்ந்தான் ஹரி. மறுபுறம் கலங்கிய மனத்துடன் ராம் அணைத்துக் கொள்ள… அந்த திக் திக் நிமிடத்திலும் தாய் பறவை சிறகிற்குள் பொதிந்த குட்டிப் பறவை போல் தோன்றிய அந்த காட்சியை உணர்ந்து ரசித்தாள் பவித்ரா.
தாரும்மா பெதநானாவுக்கு ஆஞ்சியோ பண்ணிட்டு ஜஸ்ட் டு டேஸ் ஹாஸ்பிடலில் இருந்தால் போதுமாம் பாலாஜி மாமய்யா சொன்னாங்க… தேவ் தாருவின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
ஹரி நீங்க எத்தனை பேர் எனக்கு ஆறுதல் சொன்னாலும் என் பாவா நல்ல படியா எழுந்து வந்து தாருன்னு என்னை கூப்பிடற வரைக்கும் என் பயம் குறையாது.
ரொம்ப தான் லவ்வு உங்க பாவா மேல… ஹரி தாயின் கன்னம் கிள்ளி சிரித்தான்.
ஆமா ஹரி உன் நானாக்கு எப்படியோ தெரியாது. எனக்கு எப்போவுமே எல்லாமுமே என் பாவா தான். என் பாவாவை விலக்க முடியுமே தவிர என்னால வெறுக்க முடியாது! வழிந்தோடும் கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
கலங்கிய விழிகளை மறைத்துக் கொண்ட ஷியாமளா மொபைலில் இன்ஸ்டா பார்ப்பது போல் பாவனை செய்தார்.
இது போன்ற காதல் சுப்புவிற்கு கிடைக்க அவர் என்ன தவம் செய்திருக்க வேண்டும்! உணர்ந்து பெருமை கொண்ட ஷியாமளாவிற்கு கொஞ்சம் வருத்தமும் வந்தது.
இந்த உயிர் உருக்கும் காதலை புறந்தள்ளிவிட்டு அற்ப சுகம் தேடி இன்னொரு பெண்ணை நாட எப்படி மனம் வந்தது?
என் பாவா சின்ன தலைவலி கூட பொறுக்க மாட்டார். ரொம்ப வலிக்குமா ஹரி? கணவனின் வலி தனக்கு வந்ததாய் எண்ணி கண்ணீருடன் தேம்பும் தாயை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டான் ஹரி.
பார்த்தாயா என் தாயின் காதலை என்பது போல் பவித்ராவை நோக்கினான்.
செம்ம என்பது போல் விரல்களால் முத்திரை பிடித்து அபிநயம் செய்தாள் பவித்ரா.
அவரவர் மனதிற்குள் இஷ்ட தெய்வத்தை எண்ணி பிரார்தித்துக் கொண்டிருந்தனர்.
நெருப்பில் நிற்பது போன்றதொரு நிலை.
மூன்று மணி நேரம் கழித்து வெளியில் வந்த பாலாஜி.
மாப்பிள்ளை வெங்கட்டிடம் சுப்பு பாவா இப்போ ஓகே என்று கட்டை விரலை உயர்த்தினார்.
வெங்கட கிருஷ்ணா நிம்மதி பெருமூச்சுடன் தொய்ந்து அமர்ந்தார்.
அண்ணையா பாவாக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தீங்க?ஷியாமளா தமையனிடம் அக்கறையுடன் விசாரித்தாள்.
மூனு இடத்தில் பிளாக் இருந்துச்சு க்ளியர் பண்ணி ஸ்டென்ட் வச்சிருக்கோம். இனி பயப்பட ஒண்ணுமில்லைம்மா … சிரித்துக்கொண்டே பாலாஜி விடைபெற ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.
கசங்கி கலங்கி இருந்த தாரணியின் முகத்தில் மந்தகாச புன்னகை.
ஏங்க எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க… ஹரியிடம் கண்காட்டினாள் பவித்ரா.
ம்ம்மா நேத்துல இருந்து யாரும் எதுவும் சாப்பிடாம இருக்கீங்க… வாங்க டிபன் சாப்பிடுங்க! எல்லோரையும் அழைத்த ஹரி டிபன் எடுத்து வைக்குமாறு பவித்ராவிடம் கூறினான்.
நீங்களும் உட்காருங்க என்ற பவி அவனுக்கும் சேர்த்து டிபன் வைக்க…. அவனுக்கு மொபைல் அழைப்பு.
முதலில் சாப்பிடு ஹரி… ராம் அதட்டினான்.
அர்ஜென்ட் கால்… ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன் நீங்க சாப்பிடுங்க ராம் என்றவன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான் அழைப்பில் மணவாளன். ஆம் பவித்ராவின் மாமா மணவாளனே தான்.
error: Content is protected !!