Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️62

அதிகாலை பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர் வீட்டில் தாய் மாமன் நலங்கு தொடங்கியது.

பெல்லிகுடுறு & பெல்லிகொடுகு என்பார்கள் தெலுகர் திருமண விழாவில். நம் ஊரில் நலங்கு என்று சொல்லும் வைபவம் தான் அது. வாசனையான எண்ணெய் பூசி நலங்கு மாவு தேய்த்து மஞ்சள் பூசி நீராட்டுவார்கள்.

கரீம்நகர் வீட்டில் மணவாளன் பவித்ராவிற்கு அம்மான் நலங்கை வெகு சிறப்பாக செய்தார்.

எர்ரபள்ளியில் ஹரிக்கும் அவனது மாமன்கள் இருவரும் இணைந்து கோலாகலமாக நலங்கு வைத்து  ஊரையே அழைத்து விருந்து வைத்தனர்.



Advertisement

அடுத்த நிகழ்வாக மங்கள ஸ்நானம் நடைபெற்றது. பெண் மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்து உறவு முறையில் உள்ளவர்கள் சல்லடை பிடித்து மஞ்சள் கலந்த நீரை தலைக்கு ஊற்றி  புனித நீராட்டுவார்கள். திருமணத்திற்கு  பரிசுத்தபடுத்தி தயார்படுத்தும் நிகழ்வு. திருமணத்திற்கு முதல் புதுத்துணி  உடுத்தும் நிகழ்வு அப்போதே தொடங்கும்.

தாய்மாமன் சீராக வைத்துக் கொடுக்கும் புத்தாடை அணிந்து அம்மான் வீட்டு உணவை உண்ண வேண்டும்.

பவித்ராவிற்கு நடக்கும் அனைத்து மங்கள நிகழ்வுகளையும் புகைப்படமாக்கி கொண்டிருந்தான் தேவ்சரண். அதை சூட்டோடு சூடாக ஹரிச்சரணுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இதுவனைத்தும் ஹரியின் ஏற்பாடு.

Advertisement

தன் திருமணத்தில் எந்த சிறு நிகழ்வும் விடுபட்டு விடக்கூடாது. அனைத்தையும் பொக்கிஷமாய் சேமிக்க வேண்டும் என்ற ஆசை ஹரிக்கு.

Advertisement

ஹரிக்கு ஸ்நாதகம் செய்யப்பட்டது.ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக மணமகன்  உடலில் ஒரு புனித வெள்ளி நூலை (பூணூல் )அணிவது ஸ்நாதகம் ஆகும். மணமகன் திருமணத்திற்கு தயாராக இருப்பதையும் இது குறிக்கிறது. நம்ம ஊரில் கங்கணம் காட்டுவார்களே அது போல் தான் இந்த சடங்கு.

மெல்லிய கரை வைத்த பச்சை வண்ண பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய தன் குலாபியின் எழில் வதனம் கண்டு சொக்கி போனான் ஹரி.

திருமணம் என்றாலே மணப்பெண்ணிற்கு ஒருவித அழகு வந்து சேர்ந்து விடும்.

Advertisement

அவ்வளவு அழகாக தெரிந்தால் அவன் கண்ணுக்கு… தேவதைகள் பிறப்பதில்லை. தேவதைகளாக ரசிக்கப் படுகிறார்கள்.

ஆசையாய் நாலு வார்த்தை தன் அம்மாயிக்கு பேச முடியாதநிலையில் அவன். அடுத்தடுத்த சடங்குகள் விருந்தினர் வருகை என மங்கள விழாவின் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மிஸ் யூ டா பங்காரம் என்று மெசேஜ் தட்டி விட மட்டுமே முடிந்தது.

“——————–“

மணப் பொங்கல் வைபவம் இனிதே தொடங்கிவிட்டது. மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த  ஐந்து சுமங்கலிகள் தனித்தனியே மணப்பொங்கல் வைத்து மணப்பந்தலின் கீழ்ப்புறமாக வாழை இலை பரப்பி தங்கள் குலதெய்வங்களுக்குப் படைப்பார்கள்.

மணநாளுக்கு முதல் நாள் தலைப்பால் தொடுதல் என்ற சடங்கு தொடங்கி விட்டனர்.

மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித்தனியே மணமக்களுக்கு தலைக்கு பாலும் நெய்யும் தலையில் வைத்து அதன் பின் புனித நீராடும்படி செய்து மண்டபத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நேரமின்றி ஷியாமளா சொல்வதை கேட்டு பெண் வீட்டார் அனைத்து சடங்குகளையும் செய்து கொண்டிருந்தனர்.

நம்ம ஊருல இதை தான் நலங்குன்னு சொல்வோம்…. நம்ம ஊருல கூட பந்தகால் நடறது, பாலிகை போடுறது உண்டு… இரு தரப்பு சடங்குகளையும் ஒப்பிட்டு கதை அளந்து கொண்டிருந்தது ஜெயலட்சுமி தான்.

நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டில் இருந்து பதினோருபேர் பெண் அழைத்து செல்ல வந்திருந்தனர்.

சிவப்பு வண்ண பட்டு உடுத்தி கத்தரிப்பூ வண்ண பப் கை வைத்த ரவிக்கை அணிந்து. பெரிய மயில் ஜிமிக்கு காதுக்கு பூட்டி மூன்றடுக்காய் தொங்கும் அழகிய மாட்டல் அணிந்து…கழுத்தை நிறைக்கும் காசுமாலை அணிந்து , கழுத்தை ஒட்டிய சிவப்பு வெள்ளை கல் பதித்த அட்டிகையும் நீண்ட மாங்கா மாலையும் அணிந்து எளிமையாய் பேரழகாய் ஜொலித்தாள் ஹரியின் பவி.

செயற்கையான ஜடை அலங்காரம் தவிர்த்து நீண்ட பின்னலில் குண்டுமல்லி சரம் சுற்றி கொஞ்சமாய் கனகாம்பரம் வைத்து அலங்கரித்து கொள்ள வேண்டும் என்று தன் ஆசையை சொல்லி இருந்தான் ஹரி.

அவன் ஆசைப்பட்ட கோலத்தில் கோலமயிலவள் திருத்தமான தெய்வீக அழகுடன் கிளம்பி நின்றாள்.

கல்யாணக் கலைனு சொல்வாங்களே அது இது தான் பவி. செம்ம அழகா இருக்க…. பவித்ராவின் கரம்பற்றி ரசித்து சிரித்தாள் சௌம்யா. பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டு சார்பாக வந்திருந்தாள் சௌமி.

அக்கா… சிணுங்கியவள் அணைத்துக்கொண்டாள் சௌமியாவை.

யாரோ எங்க ஹரியை வேண்டாம்னு சொன்னாங்க…! அது யாருன்னு உனக்கு தெரியுமா பவி…

அக்கா… வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் ஹரியின் குலாபி.

நிஜமா பவி… என்னால இன்னும் கூட நம்ப முடியல ஹரி லவ் மேரேஜ் பண்ணுவாருன்னு. அதுவும் நம்ம ஊரு பொண்ணு….!

எங்கண்ணா தலை எழுத்து அவ்வளவு தான் தேவ் சரண் உதட்டை சுழித்து சிரிக்க… ஹலோ எங்கக்காக்கு என்ன குறைச்சல்? உங்கண்ணா புண்ணியம் பண்ணி இருக்கணும் என் அக்கா கிடைக்க… பொறிந்து தள்ளி விட்டாள் காயத்ரி.

உங்கக்கா உங்களை மாதிரி இல்லைன்னு நம்புறேன்…. கண் சிமிட்டி சிரித்து விட்டு நகர்ந்து கொண்டான் தேவ்.

புடைத்த மூக்குடன் சீறிக் கொண்டு பார்த்து நின்றாள் காயத்ரி.

“———————-“

புதிய BMW காரில் மணப்பெண் மாப்பிள்ளை வீடு சென்றடைய அங்கே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.

மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

அண்ணையா சான்ஸே இல்ல வதின அவ்வளவு அழகா இருக்காங்க… ஊரே திரண்டு வந்து பார்த்துட்டு போகுது. தாரும்மா மாதிரியே அழகா இருக்கிறதா பேசிட்டு போறாங்க… நிவேதா ஏற்றிவிட்டாள்.

அலங்கார பூஷிதையாக வந்திருக்கும் தன் குலாபியை பார்க்க வேண்டும் என்று அவ்வளவு ஆசை ஹரிக்கு. ஆனால் பார்க்க தடா போட்டு விட்டனர்.

இனி முகூர்த்தத்தில் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டனர்.

நிவி நீ போய் போட்டோ எடுத்துட்டு வரியா?  தங்கையிடம் வெட்கம் விட்டு கேட்டு விட்டான்.

ரொம்ப பண்றிங்க… மொத்தமா காசிக்கு அனுப்பிடுவோம்… தேவ் தாறுமாறாய் வெறுப்பேற்றினான்.

இவன்… காசிக்கு… போயிட்டாலும்…. அகிலன் வெடித்து சிரிக்க அந்த இடமே சிரிப்பில் குலுங்கியது.

அங்கு பவித்ராவும் தவித்துக் கொண்டிருந்தாள். அவனை பார்க்க வேண்டும் என்று நெஞ்சில் அவ்வளவு தவிப்பு, ஆசை,ஏக்கம்….

நீ ஆசைப்பட்ட ஆடை அலங்காரம் எப்படி இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும் என்ற ஆசை.

எவ்வளவு பெரிய வீடு…!  வயிறெரிந்து போனது ஜெயலட்சுமிக்கு.

ஊரே திருவிழா கோலம் தான்… பிரம்மாண்ட பந்தல். தேவலோகம் போல் மணவறை…. விலை உயர்ந்த வெந்நிற குஷன் இருக்கைகள் பந்தல் முழுதும் வரிசையாய் போடப்பட்டிருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட போட்டோகிராபர்கள் அதி நவீன காமிராக்களுடன் வளைத்து வளைத்து போட்டோ வீடியோ  என்று சுட்டு தள்ளிக் கொண்டிருந்தனர்.திரும்பிய இடம் எல்லாம் சீரியல் செட்டிங், வண்ண தோரணம்,பேனர், பிளக்ஸ் என்று எரபள்ளி கிராமமே அல்லோகலபட்டிருந்தது. பணத்தை தண்ணீராய் இறைத்திருந்தனர்.

மனமே ஆறவில்லை ஜெயலட்சுமிக்கு…. எவ்வளவு பெரிய இடத்து மாப்பிள்ளை… இந்த பவி பொண்ணு புளியங்கொம்பா புடிச்சிட்டா… நானும் தான் ஒருத்திய பெத்தேனே…. வெந்து நொந்து அமர்ந்திருந்தார்.

மகள் சபிதாவை பார்க்க பார்க்க வேதனை அவருக்கு.

பாருடி… நீயும் ஒருத்தனை லவ் பண்ணியே… ஆதங்கத்தை வார்த்தையில் கொட்டினார்.

ம்ம்மா அசிங்கமா பேசாத… ஏன் எனக்கு என்ன குறைச்சல்? என் புருஷனும் EB யில் JE தான். மகன் ரிஷிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவள் கொந்தளித்து விட்டாள் சபிதா.

ம்க்கும்ம்… மாசம் அறுபதாயிரம் சம்பளம் வாங்குறது ஒரு பெருமை உனக்கு…. அவர் மனம் ஆறவில்லை.

தன் கணவனுக்கு கேட்டு விடுமோ என்று அஞ்சியவள் ம்மா… உன் புள்ள சரவணன் எவ்வளவு சம்பாதிக்கிறான்? கேட்டே விட்டாள்.

ஜெயலட்சுமிக்கு முகம் கன்றிவிட்டது. சரவணனுக்கு இருப்பத்தொன்பது வயது ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக பெண் தேடுகின்றனர்.

BSC வேதியியல் படித்து நான்கு அரியரை இன்னும் க்ளீயர் பண்ணாமல் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன் என்று சுற்றிக் கொண்டிருக்கும் சரவணனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?

“————————–“

மணவாளனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி… தன் தங்கை மகள் மகாராணி மாதிரி வாழப் போகிறாளே…  ஒரு தாய்மாமன் போல் இல்லாமல் தான் பெற்ற மகளுக்கு திருமணம் என்பது போல் அவ்வளவு சந்தோஷம் அவருக்கு.

சுசிலாவின் மகிழ்ச்சியை வார்த்தையில் வடித்து விட முடியாது. தன் பேத்திக்கு கிடைத்த வசதியான வாழ்வை எண்ணி அவ்வளவு பூரிப்பு அவருக்கு. மகன் இருந்து பார்க்க கொடுப்பினை இல்லையே என்ற வருத்தமும் கூட…

தமயந்திக்கு உள்ளுக்குள் அளவற்ற நிம்மதி. மகள் குபேர வாழ்வை வாழப் போகிறாள் என்பதல்ல அவர் சந்தோஷம். மகளை விரும்பி ஒருவன் மணந்து கொள்கிறான். தன் கணவர் போல் இருபுறமும் அல்லாடாமல் தெளிவாக தன் காதல் எவ்வளவு முக்கியம் என்று தன் வீட்டினருக்கு ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக் கொண்டிருக்கும் ஒருவனை கை பிடிக்கப் போகிறாளே… இவன் எந்த சூழலிலும் யாருக்காகவும் மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டான்.இதை விட அவரின் நிம்மதிக்கும் ஆனந்தத்திற்கும் வேறென்ன வேண்டும்?

அக்கா மாமா ரொம்ப பெரிய இடம் தான் போல…. வீட்டை பார்த்து பெரிதாய் பிரம்மிப்பு காட்டினான் யுவி.

ஆமா யுவி எவ்வளவு பெரிய வீடு… எவ்வளவு கிராண்ட் வெட்டிங் காயத்ரியும் வியந்து விழிபிதுக்கினாள்.

பரம்பரை பணக்காரங்களாம்…. மணவாளன் மனைவி புலகாங்கிதம் அடைந்தார்.

பவிக்கு அதெல்லாம் பெருமையாக தோன்றவே இல்லை. எனக்கு என் பாவா போதும் என்ற ஒற்றை நினைப்பு தான் அவளுக்கு.

“——————–“

ஹலோ வதின…. ஆசையாய் கட்டிக்கொண்டாள் நிவேதா.

ஹாய் என்று மகிழ்வுடன் கட்டிக் கொண்டாள் பவி.

சாப்பிட்டீங்களா? இங்கே எல்லா வசதியும் ஓகே தானே…?

ம்ம்ம்ம்ம் என்று கண்களும் முகமும் சிரிக்க தலையாட்டினாள் பவித்ரா.

அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் சரர்வதனியும்.

வதினா அண்ணையா உங்களை பார்க்க ஏங்கிட்டு இருக்காரு… கண்சிமிட்டி சிரித்தாள் நிவி.

வெட்கத்தில் சிவந்தவள் நிலம் பார்த்து அமர்ந்து விட்டாள்.

பாவா எங்கே? யுவி ஆர்வமாய் கேட்டான்.

அண்ணையா காசி யாத்திரைக்கு ரெடியாகிட்டு இருக்காரு…

நான் போய் பார்த்துட்டு வரேன்… யுவி கிளம்பி விட்டான்.

நீ போக கூடாது. காசி யாத்திரைக்கு போகும் மாப்பிள்ளையை சமாதானம் செய்து எங்க வீட்டு பெண்ணை கொடுக்கிறேன்னு கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து கூட்டிட்டு வரணும்.

நாங்க தான் பொண்ணு கொடுக்க சம்மதிச்சுட்டோமே…. கல்யாணம் வரைக்கும் வந்த பின்னே நாங்க ஏன் சமாதானம் செய்யணும்? கெஞ்சணும்? புரியாமல் கேட்டான்.

அது அப்படி தான்… இது ஒரு சடங்கு…. நிவி கூற எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.

பஞ்சகச்சம் உடுத்தி ஜோல்னாபை மாட்டிக் கொண்டு கையில் கூஜாவும் பனையோலை விசிறியுமாக கிளம்பிவிட்டான் ஹரிசரண்.

இது வேடிக்கையான சடங்காகும், மணமகன் உலக இன்பத்தைத் துறக்க காசிக்குச் செல்வது போல் பாசாங்கு செய்வார் மணமகளின் சகோதரர் அவரைத் தடுத்து, அவரது சகோதரியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவார்.மணமகன் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு மணமகளின் பெற்றோர் அவரை வரவேற்பார்கள்.

காசியாத்திரை சென்ற மணமகனை யுவராஜ் சென்று தடுத்து தன் சகோதரியை கன்னிகாதானம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்து சமாதானம் செய்து பட்டுக்குடை பிடித்து அழைத்து வந்தான்.

வாயிலில் நின்ற பவித்ரா குடும்பம் மணமகனுக்கு பாதபூஜை செய்து மலர்மாலை அணிவித்து உள்ளே அழைத்தனர்.

வாயிலில் நின்று காயத்ரி அனுப்பிய புகைப்படங்களை  ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

மகிழ்ச்சியோடு கூடிய ஒரு சிறு பதட்டம்… ஏனோ ஒரு பயம் மெல்லிதாய் இதயத்தை  பிராண்டிக் கொண்டே இருக்கிறது.

அவள் அவளாக இல்லை…. ஒரு நேரம் மகிழ்கிறாள் ஒரு நேரம் மிரட்சியில் சுருண்டு போகிறாள். மொத்தத்தில் இருபது நாளாக அவள் அவளாகவே இல்லை.

விருந்து ஒருபுறம் அமர்க்களமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட ஆந்திர உணவுகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தது.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியே உணவுண்ண செய்தனர்.

அவர்கள் முறைப்படி திருமணம் முடிந்த பின்னே தான் ரிசப்ஷன்.

திவ்யமாய் விருந்தை முடித்துக் கொண்டு பீடா மென்றபடி உறவினர்கள் ஆங்காங்கே கூடி கூடி பேசிக் கொண்டிருந்தனர். திருமண வீட்டிற்கே உரிய கலகலப்பு சலசலப்பு என்று தமிழும் தெலுங்கும் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

வீணைக் கச்சேரி ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பெரிய LED திரை ஆங்காங்கே வைக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளையும் ட்ரோன் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டிருந்தது.

உடை அலங்காரம் தலை அலங்காரம் கலைந்து காட்டன் சுடிதாருக்கு மாறிய பவித்ரா தொப்பென்று கட்டிலில் சரிந்தாள்

அடித்து போட்டாற்போல் அவ்வளவு அசதி ஆனாலும் உறக்கம் வரவில்லை. உருண்டு புரண்டு கொண்டிருந்தாள்

அனைத்து கல்யாண பெண்களுக்கும் இருக்கும் அதே மனநிலை அவளுக்கும்.

பவி பால் சாப்பிடறியா…? சௌமியா வந்து கேட்டாள்.

வேண்டாம்கா என்றாள்.

விடிகாலையில் எந்தரிக்கணும் நீ கொஞ்சம் தூங்கி எழுந்தா தான் பிரஷா இருக்கும் என்று விட்டு போனாள் சௌமியா

தொடர்ந்து மெசேஜ் வந்து விழுந்து கொண்டிருந்தது.

யாரது இந்நேரத்தில் மெசேஜ் என்று அவள் யோசிக்க அவசியம் இல்லை… அனுப்பியது அவளின் ஹரி தான்.

என்னரா குலாபி தூக்கம் வரலையா?

சாப்பிட்டியா?

அரேஞ்மெண்ட்ஸ் ஓகேவா?

எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு… ஆனா பார்க்க கூடாதாம்.

சிவப்பு பட்டில்  என் குலாபி எவ்வளவு அழகா  இருக்கா… கடிச்சு திங்கலாம் போல இருக்கரா அம்மாயி…

என் அம்மா விவாகத்தில் பப் கை வைத்த பிளவுஸ் தான் போட்டிருந்தாங்க… உனக்கும் அதே மாதிரி போட்டு பார்க்கணும்னு எனக்கு ஆசை…

எத்தனை மெசேஜ்…. அவன் காதலையும் ஏக்கத்தின் அளவீடுகளை தாங்கி வந்திருந்தது மெசேஜ் அனைத்தும்.

பாவாக்கு தூக்கம் வரலையோ? சிரிப்புடன் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

எப்படி வரும்? என் வீட்டில் என் குலாபி இருக்கா… ஆனா பார்க்க முடியலையே….

உங்க குலாபி உங்க வீட்டுல உங்க கூட தானே இருக்க போறா…?

இருந்தாலும் இன்னைய பீல் அது ஒரு மாதிரி…

ம்ம்ம்ம் என்றாள்.

என்ன ம்ம்ம்ம்… ஒரு முத்தா கொடுக்கிறது.

எது.. !?

முத்தா…ஐ மீன் கிஸ்…

அவளிடமிருந்து பதில் வந்தால் தானே…

நாளைக்கு கிடைக்கும் என் பாரியாளிடமிருந்து அது வேற பீல். இன்னைக்கு இப்போ கிடைக்கிறது என் லவ்வர் கேர்ள் என் செல்ல அம்மாயி பவித்ராட்ட இருந்து கிடைக்கிறது செம்ம கிக்.

ம்க்கும்… அவளிடம் இருந்து நோ ரியாக்ஷன்…

மெசேஜ் படித்து விட்டாள் என்ற ப்ளூ டிக் வந்து விட்டது. ஆன்லைனில் தான் இருக்கிறாள் ஆயினும் பதில் இல்லை.

ப்ளீஸ்ரா அம்மாயி…!

குட் நைட் என்ற மெசேஜ் மட்டுமே வந்து விழுந்தது.

வெட்கமும் தாபமுமாய் மேனி விரைக்க கண்மூடி சிரித்தான்.

இன்று என் வீட்டில் வேறு அறையில் இருக்கும் என் பங்காரம் நாளை என் அறையில்… நினைக்கும் போதே அவனுக்கு உடலுக்குள் என்னென்னவோ செய்தது!

“————————“

மணநாள் அழகாய் விடிந்தது.  மங்கள வாத்தியங்கள் முழங்கியது. பூக்களின் வாசம்…. பெண்களின் வளையொலி கொலுசொலி ஓசை அவ்விடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.

மணமகள் நீராடி அலங்காரம் செய்து தயாராகி நின்றாள்.

மணமகளை அழைத்து கௌரி பூஜை நிகழ்ந்தேறியது. அடுத்து மணமகன் வந்து கணேஷ் பூஜை முடிந்தது.

அடுத்து கன்னிகாதானம்…

இந்த சடங்கு மணமகளை மணமகனிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது. மணமகளின் பெற்றோர்கள் தங்கள் மகளின் கையை மணமகன் கையில் வைப்பார்கள். இது தெலுங்கு திருமண விழாக்களின் ஒரு பகுதியாக மணப்பெண்ணின் பெற்றோர் செய்யும் உன்னத சடங்கு.

பரமசிவம் ஜெயலட்சுமி தம்பதிகள் பெண்ணை தாரை வார்க்க சுப்பகிருஷ்ணா விஜயதாரணி தம்பதிகள் பவித்ராவை தங்கள் வீட்டு பெண்ணாக பெற்றுக் கொண்டனர்.

அடுத்து ஜீலகர்ரா-பெல்லம் என்ற சடங்கு தொடர்ந்தது. ஜீலகர்ரா-பெல்லம் என்பது சீரகம் மற்றும் வெல்லத்தால் செய்யபபட்ட ஒரு விழுது இது. தம்பதியரின் வாழ்க்கையில் எழும் கசப்பான மற்றும் இனிப்பான நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் பிரியாமல் உடன் இருப்பேன் என்பதை குறிக்க தான் இந்த சடங்கு.

முக்காடு போட்டிருக்கும் மணமகளின் முக்காட்டை விலக்கி அவளின் உச்சந்தலையில் சீரகம் பெல்லம் கலந்த கலவையை ஹரி பூசிவிட பவித்ராவும் தன் கையால் அள்ளி சுந்தர தெலுங்கனின்  தலையில் பூசி விட்டாள்.

ஜீலகர்ரா பெல்லம் முடிந்ததும்,  மதுபாரகம் எனப்படும் சடங்கு.

இது என்னவென்றால் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு முகூர்த்த புடவை வைத்து கொடுக்கும் நிகழ்வு.

புடவையை பெற்றுக் கொண்டு மணமகள் அறைக்கு சென்ற பவித்ரா வெண்பட்டில் சிவப்பு பார்டர் வைத்த புடவையை நளினமாய் உடுத்தி முழுக்க ஆன்டிக் ஜீவல்லரி அலங்காரத்தில் தேவதை போல் ஒய்யாரமாய் நின்றாள்.

அங்கே மணமகனாய் தூய பட்டு வேட்டியில் பஞ்சகச்சம் உடுத்தி நீண்ட அங்கவஸ்திரம் போட்டு.. தடித்த தங்க காப்பை முழங்கைக்கு ஏற்றிக் கொண்டு மீசையை திருகியபடி கண்ணாடி முன்நின்று தன்னை பார்த்து ரசித்தான் ஹரிசரண் நத்தமூரி எர்ரபள்ளி.

வாவ்….அண்ணையா செம்ம மேன்லியா இருக்கீங்க… கன்னம் கிள்ளி முத்தமிட்டு சிரித்தான் தேவ்சரண்.

ஹரியின் மாமய்யா வந்து தாமரை மாலையை சூட்டி கரம் பிடித்து அழைத்து சென்றார்.

மணவாளன் கரம் பற்றி நீண்ட சடை பின்னல் சதிராட மேனகை அவள் மெல்லிடை வளைத்து நாண சிவப்பை பூசிக் கொண்டு அன்னமாய் நடை பயின்று வந்தாள்.

மணவறை பரபரப்பை பூசிக் கொண்டது. நெருங்கிய உறவுகள் மேடையேறியது.

மங்கள் தாரணா என்ற தாலி கட்டும் நிகழ்வு….

நம்ம ஊரில் இருப்பது போல் பிள்ளையார் தாலி, விபூதி பட்டை,நாமம் போட்ட தாலி அப்படி இல்லாமல்… இரண்டு பொட்டு மட்டுமே மஞ்சள் நூலில் கட்டடபட்டு தேங்காயில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

அனைவரும் ஆசிர்வதிக்க அருகரிசியுடன் தயார் நிலையில் இருந்தனர்.

மணமகன் மணமகளுக்கு இடையே திரைபிடிக்கப்பட்டது

மணமகன் கையில் மங்கள் சூத்திரா என்று சொல்ல கூடிய திருமாங்கல்யம் கொடுக்கப்பட கரம் நடுங்கியது ஹரிசரணுக்கு.

மணமகளின் கால் பெருவிரலை மிதித்தபடி திரைக்கு அந்தபுரம் நிற்கும் மணமகளுக்கு மாங்கல்யத்தை  சூட்ட வேண்டும்.

கெட்டி மேளம் முழங்க வேத விற்பன்னர்கள் வேதம் ஓத சொந்த பந்தங்கள் ஆசிர்வதிக்க மாங்கல்யத்தை அவள் கழுத்தருக்கே கொண்டு சென்றவன் மெல்ல கிசுகிசுப்பாய் கேட்டான். கட்டவா? அவள் திக்கென்று நிமிர்ந்து பார்க்க… ராஜேஷ் வரமாட்டான் நீ பயந்து பயந்து

வாசலை பார்க்க வேண்டாம்… பேசிக் கொண்டே மூன்று முடிச்சிட்டு தன் குலாபியை சாஸ்திரபடியும் சட்டபடியும் தன் பாரியாலாக்கி கொண்டான்.

————தொடரும் ———–

எனக்கு தெரிந்தவரை ஒரு தெலுங்கு விவாகத்தை உங்கள் மன கண் முன் நிறுத்த முயற்சித்துள்ளேன். தவறுகள்இருப்பின்  தெரியப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!