Skip to content
Post Views: 3,272
வயதுக்கு மீறிய அழகும் துறு துறுப்புமான பவித்ராவை கண்கொத்தி பாம்பாக கவனித்து வளர்த்தாள் தமயந்தி.
வயதுக்கு வந்தபிறகு இன்னும் மகளிடம் கடுமையாகவே இருந்தாள்.
பவித்ராவை விட நான்கு வயது இளையவளான காயத்ரி அத்தை கலாவதியை முக ஜாடையில் மட்டுமல்ல குணத்திலும் கொண்டு இருந்தாள்.
அப்பா செல்லமான பவித்ராவை கொஞ்சம் கடுப்புடனே பார்த்துக் கொண்டிருப்பாள் காயத்ரி.
Advertisement
பவித்ரா தந்தையின் செல்ல இளவரசி ஆகிவிட ஏங்கி தவங்கிடந்து பெற்ற மகன் யுவராஜ் தாயின் செல்லமாகிவிட… நடுவில் பிறந்த காயத்ரிக்கு ஸ்பெஷல் கவனிப்பும் செல்லமும் இல்லாமல் போனது. காயத்ரியின் பொறாமை கொண்ட முரட்டு சுபாவத்திற்கு இதெல்லாம் கூட காரணமாக இருக்க கூடும்.
மாயவரத்தில் வாங்கிய இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தான் சங்கரன்.
விவசாய வருமானத்தை பரமசிவம் வீட்டில் கொடுப்பதில்லை. ஒர்க்ஷாப் வருமானத்தை சங்கரனும் கொடுப்பதில்லை.
Advertisement
வீட்டிற்கு தேவையானதை சங்கரன் வாங்கி போடுவான். அதை பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித லஜ்ஜையும் இல்லை ஜெயலட்சுமிக்கு.
Advertisement
ஒரு வீடு இரு அடுப்பு என்று அக்கம் பக்கம் பேசவில்லை அவ்வளவு தான் மற்றபடி மனதளவில் தனி தனி தீவாகவே விலகி நின்றனர்.
“——————“
ஆறு ஆண்டு காலமாக உடல் நலிவடைத்து மருந்து மாத்திரைகள் உபயத்துடன் இழுத்து பிடித்து வைத்திருந்த ஆதிமூலத்தின் உயிர் அன்று அதிகாலையே இம்மண்ணுலகை விட்டு பிரிந்திருந்தது.
Advertisement
ஒரு வகையில் அவர் சிவபதம் அடைந்தது சரி தான். இனியும் உடல் குன்றி அவர் இருந்தால் கவனிப்பது யார்?
சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட ஜெயலட்சுமி என்று தான் மாமனாருக்கு பணிவிடை செய்தாள்?
மூட்டு வலி,கழுத்து வலி, நீரழிவு நோயில் நடமாடும் சுசிலாவால் எங்கணம் கணவரை கவனிக்க முடியும்?
தமயந்தி மட்டும் எத்தனை நாள் எதையும் வெளிக்காட்டாது இன்முகமாய் சேவகம் செய்து கொண்டிருப்பாள்.
முக சுழிப்பின்றி சேவகம் செய்யும் தமயந்தியை பார்க்க பார்க்க… வளர்ந்து வரும் பேரன் யுவராஜை பார்க்க… ஆதிமூலம் மனதளவில் குன்றி போனார். இவர்களுக்கு துரோகம் செய்து விட்டோமே…. எனக்கெல்லாம் தெரியும் என்று ஆணவத்தில் இருந்தேனே… நான் இரு மகன்களையும் சமமாக நடத்தவில்லையே…? அந்தக் குற்ற உணர்வும்,ஏக்கமும் கூட அவரை சீக்கிரம் மரணப்படுகுழியில் தள்ளியது என்று கூறலாம்.
இந்த பாரு சாவு செலவில் பாதியை நீ கொடுத்துடு…! நமக்கேன் அந்தப் பாவம்? என்ற ஜெயலட்சுமியை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து நின்றாள் தமயந்தி.
மாதம் தோறும் ஆதிமூலத்திற்கு மருந்து மாத்திரை வாங்கவே ஆயிரம் ரூபாய் செலவு செய்தான் சங்கரன். ஆறு ஆண்டுகளாக அவன் செலவு செய்து காபந்து பண்ணிய உயிர்.
எனக்கும் தானே அப்பா நான் செலவு செய்கிறேன் என்று ஒத்த ரூபாய் மனமுவந்து பரமசிவன் கொடுக்கவில்லை சங்கரனும் கேட்கவில்லை.
நல்ல தந்தையாக ஆதிமூலம் நடந்து கொண்டாரோ இல்லையோ நல்ல மகனாக சங்கரன் தன் கடமையை சிறப்பாகவே செய்து முடித்தான்.
“——————“
பதினாறாம் நாள் காரியம் முடிவடைந்து சொந்த பந்தங்கள் சென்றுவிட்டது.
வீட்டு மனிதர்கள் மட்டுமே இருந்தனர்.
அம்மா இதுநாள் வரை அப்பாவுக்காக இங்கே இருந்துட்டேன். இனி இங்கே இருப்பது சரியா வராது. நான் மாயவரத்தில் வீடு பார்த்துக்கறேன்.
நீங்க என் கூட வந்துடுங்க. இரு தங்கைகளும் இருக்கும் போதே பேசிவிட நினைத்தான் சங்கரன்.
அண்ணா இந்த வயசுக்குமேல அவங்க எங்கே வருவாங்க…? செந்தாமரைக்கு மனம் தாளவில்லை.
அதுக்கென்னம்மா பண்ண முடியும்? சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாம மாறிக்கணும். அது தான் நல்லது. ரசாபாசம் ஆகும்முன்னே விலகிக்கிறது நல்லது.எனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை.
சங்கரா நம்ம மனையிலே ஒரு வீடு கட்டிக்கலாம் என்றார் சுசிலா.
பக்கத்திலே ஏம்மா? மனம் ஒப்பாது தயங்கினான்.
இல்ல சங்கரா நம்ம சொந்த ஊருல நம்ம பரம்பரை சொத்துல ஒரு வீட்டை கட்டி குடியிருக்குறது தான் பெருமை.
எத்தனை நாளைக்கு வாடகை வீட்டுல இருந்துட முடியும்?
அண்ணா இந்த அறுவடை பணம் உனக்கு தான் சேரணும். செந்தாமரை பேச ஜெயலட்சுமி கண்களை உருட்டினாள்.
ஆதிமூலம் இருக்கும் போதே அது தான் பேச்சு.
பரம்பரை வீட்டை பரமசிவம் எடுத்துக் கொள்வதினால் சங்கரன் வீடு கட்ட பொதுவில் பணம் கொடுக்க வேண்டும்.
முன்னூறு மூட்டைக்கு மேல் பொன்னி நெல்லும், பதினைந்து மூட்டைக்கு மேல் உளுந்தும் அமோகமாக விளைந்து வந்திருந்தது. அந்த பணத்தை தம்பிக்கு மனமுவந்து மகிழ்வுடன் கொடுத்தான் பரமசிவம்.
“—————-“
சடையை தாண்டி பூ தொங்குது… என்னா ஸ்டைலு… இந்த வயசுலேயே என்ன மினுக்கு, என்ன குலுக்கு.. இன்னும் காலேஜ் படிக்கிற காலத்துல எப்படி இருக்குமோ…? பவித்ராவை பார்த்து நக்கல் பேசினாள் ஜெயலட்சுமி.
காலேஜ் படிக்கும் சபிதா காட்டாத ஸ்டைலு இல்லை.. போடாத மேக்கப்பும் இல்லை. அதெல்லாம் ஜெயலட்சுமி கண்ணுக்கு தெரிவதில்லை.
ஏம் பெரியம்மா எங்க அக்காவை ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க…?. முகத்திற்கு நேராய் கேட்பது காயத்ரி தான்.
எனக்கு வேண்டுதல்… அது தான் பேசிட்டு இருக்கேன். வந்துட்டா இப்போதான் நியாயம் கேட்க…?
பெரியம்மா எங்க அக்கா நல்லா படிப்பா… நல்லா டிரஸ் பண்ணிக்குவா… அது அவளுக்கு பிடிச்சிருக்கு.
ம்ம்கும் உங்க அக்கா படிச்சு முடிச்சு பட்டத்து ராணி ஆகப்போறா… அதற்கும் நொடித்துக் கொண்டாள் ஜெயலட்சுமி.
இந்த புலம்பல் புராணத்தை சீக்கிரம் கடந்து செல்ல வேண்டும் என்று கணவனை நச்சரித்தாள் தமயந்தி.
வீடு கட்ட தொடங்க சொல்லி பிள்ளைகளும் தொண தொணக்க தொடங்கி விட்டனர்.
ஆனது ஆகட்டும் என்றும் பூமி பூஜை போட்டு விட்டான் சங்கரன்.
அப்பா சர்வேயர் வைத்து நல்ல தெளிவா அளந்து கட்டிட வேலையை தொடங்குங்க… வீடு கட்டினப் பிறகு எனக்கு அது வரைக்கும் இடம் இருக்கு. இது வரைக்கும் பங்கு இருக்குன்னு ஜெயா பெரிம்மா சண்டைக்கு வருவாங்க… ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பவித்ரா சொல்ல… மகளை மெச்சுதலாய் பார்த்தான் சங்கரன்.
அப்பா ரூம் கொஞ்சம் பெருசாவே போடுங்க… தாத்தா வீட்டுல கூடம் பெருசா இருக்குமே அது மாதிரி நம்ம வீட்டு கூடமும் பெருசா இருக்கணும்… மகளுக்கு இருக்கும் அறிவும் ஆர்வமும் கண்டு அவ்வளவு பெருமை சங்கரனுக்கு.
“—————“
சங்கரனின் மூத்த தங்கை செந்தாமரைக்கு இரு பிள்ளைகள். மூத்தது மகன் விக்ரம் இளைய மகள் வித்யா.
விக்ரம் தன் தாயை கொண்டே பிறந்தவன். அமைதி,பொறுமை நியாயம் பேசும் நேர்மை குணம் கொண்டவன். பவித்ராவை விட மூன்று வயது மூத்தவன் விக்ரம்.
கலாவதிக்கும் இரு பிள்ளைகள் மூத்த மகன் ராஜேஷ் இளைய மகள் ராதிகா.
கலாவின் மகன் ராஜேஷ் பவித்ராவை விட சரியாக பத்து மாதமே மூத்தவன். கலாவின் பலமான கவனிப்பில் கொழுக் மொழுக் என்று வஞ்சனை இல்லாமல் உடம்பை வளர்திருந்தான்.
அடிக்கடி தாத்தா வீட்டிற்கு வருபவனுக்கு பவித்ராவை நிரம்ப பிடிக்கும். பவித்ராவை பார்க்கவே விடுமுறையை சாக்காக வைத்து ஓடி வந்துவிடுவான்.
உடம்பில் கூடிய கொழுப்பு அவனுக்கு எக்குத்தப்பாக யோசிக்க வைத்ததோ என்னவோ… பவித்ராவை கண்டாளே பல்லை இளித்து கொண்டு நிற்பான்.
பவித்ரா அவனை கவனமாக தவிர்த்து விடுவாள்.
என்னடா பொம்பள புள்ளைகிட்ட பேச்சு என்று சுசிலா அதட்டினால் என் மாமா பொண்ணு நான் பேசுவேன்… அதை கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கு என்பான்.
விக்ரமிற்கும் பவித்ராவை பிடிக்கும்.
சபிதாவிற்கு அவ்வளவு ஆத்திரம் பொங்கும். இவ என்ன பெரிய மகாராணி இவளை பார்த்து பார்த்து பல்லை இளிச்சுட்டு நிற்கிறானுங்க… கொதிக்கும் மனசு.
டேய் ராஜேஷ்… இவல்லாம் ஒரு ஆளுன்னு இவகிட்ட வழிஞ்சுட்டு நிக்குற…
காலேஜ் படிக்கும் போது தான்டா ரசனைனா என்னன்னே புரியும்! எங்க காலேஜில் லட்டு லட்டா பொண்ணுங்க இருக்குடா.. அழகுன்னா அப்படி ஒரு அழகு. வன்மமாய் பேசுவாள் சபிதா.
சபி நான் +1 தானே படிக்கிறேன். காலேஜ் போகும் போது ரசனையை வளர்த்துக்கிறேன் என்றான்.
பவித்ரா பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
சபிதாவிற்கு அதுவேறு இன்னும் எரிச்சல் படுத்தியது. அவள் பார்டரில் இருந்து கொஞ்சம் தட்டு தடுமாறி மார்க் எடுத்தவள்.
நாட்கள் இப்படியாய் செல்ல… திட்டமிட்டு கனகச்சிதமாய் அழகாய் வீடு கட்டி முடித்திருந்தான் சங்கரன்.
ஜெயலட்சுமிக்கு வயிற்றெரிச்சல். எம்புட்டு அழகா பார்த்து பார்த்து வீடு கட்டி இருக்காங்க. நாம மட்டும் இந்த பழைய வீட்டில் இருக்கணுமே…!
அடிச்சு பல்லை உடைச்சுருவேன் ராஸ்கல். அவன் பொண்டாட்டி நகை நட்டு அடகு வச்சு,பேங்க் லோன் வாங்கி வீடு கட்டி இருக்கான்.
அவன் கூட போய் நம்மை ஒப்பிட்டு பார்க்கிற… பரமசிவம் எகிறிய பின்னே தான் முணகுவதை நிறுத்தினாள் ஜெயலட்சுமி.
“—————“
புதுமனை புகுவிழா
வைபவத்திற்கு உறவுகள் எல்லாம் திரண்டு வர…
பவித்ராவை சுற்றி சுற்றி உறவுகார முறை பையன்கள் சிரித்து ரசித்து பேச… பாவாடை தாவணியில் தேவதையாய் வளைய வரும் மகளை கண்டு பூரித்து போனான் சங்கரன்.
மகளின் பருவ அழகும் எதார்த்தமான பேச்சும் சிரிப்பும் பெருமைக்கு பதில் பயத்தையே கொடுத்தது தமயந்திக்கு.
அத்தை கொடுங்க நான் பரிமாறுறேன் செந்தாமரையிடம் இருந்த சாம்பார் வாளியை வாங்கிக் கொண்டவள் மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ஏ பவி பாட்டி உன்னை கூப்பிடறாங்க . அந்த வாளியை இங்கே கொடு!
சாம்பார் வாளியை வேகமாய் வாங்கி கொண்டான் விக்ரம்.
அவன் கை நீட்டி வேகமாய வாங்க தளும்பிக் கொண்டிருந்த சாம்பார் கரண்டி குலுங்கி
பவித்ராவின் தாவணியில் சிதறியது.
சாரி பவி சாரி.. விக்ரம் மிகவும் வருந்தினான்.
பரவாயில்லை… தெரியாம தானே கொட்டுச்சு… நான் போய் கழுவிட்டு வரேன்… பவித்ரா உள்ளே செல்ல… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சபிதா.
சற்று நேரத்தில்…சபி பந்தியிலே மினி ஜாங்கிரி வச்சாங்களே தீர்ந்துடுச்சா…? ராஜேஷ் வந்து நின்றான்.
ஏன் கேட்குற…?
“ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு…”
அது பவி மாமா வீட்டில் இருந்து வந்த பலகாரம். அவங்க ரூமில் கொண்டு போய் வச்சிருப்பாங்க பாரு… இந்த ரூமில் தான் இருக்கும். பவித்ரா கூட அநேகமா ரூமில் தான் இருப்பா.. கூடுதல் தகவலை கொசுறாய் வழங்கி அனுப்புவிட… அவன் குதூகளித்து போனான்.
விசிலடித்து அவன் உள்ளே செல்ல…
சித்தி… சித்தி… பவித்ராவை பார்த்தீங்க? தமயந்தியை பிடித்து வைத்து கேட்டாள் சபிதா.
தெரியலைமா என்றாள் பரபரப்பில் இருந்த தமயந்தி.
சித்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ரூமுக்குள்ள தான் போனா… இன்னுமா வரல…? ராஜேஷ் வேற அவளை தேடிட்டு நின்னானே… இப்போ ரெண்டு பேரையும் காணோம்…அவள் கேட்ட தொணி தமயந்திக்கு சுருக்கென தைத்தது.
வேகமாய் அறை கதவை திறந்து உள்ளே செல்ல.. கட்டிலில் உட்கார்ந்து ஜீரா வழிய மினி ஜாங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ராஜேஷ். அப்போது தான் தாவணியை அலசிவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் பவித்ரா.
பின்னை கழட்டி அவள் தாவணி போட்டிருந்த விதமும் தமயந்தியை திகிலடைய வைத்தது.
இருவரையும் ஒரே அறையில் கண்ட தமயந்திக்கு உடல் தகிக்க.. ஓங்கி அறைந்தாள் மகளை.
அம்மா… அலறி கட்டிலில் சாய்ந்தாள்.
மூச்… மகளை எரிக்கும் பார்வை பார்த்தாள்.
தமயந்தி கொடுத்த அறையில் ஆடிப்போய் விட்டான் ராஜேஷ்.
அத்த…. அவன் நடுங்கினான்.
போடா வெளியே…போ… மூச்சிரைக்க வெளியே கையை காட்டினாள்.
சுருண்டு விழுந்த மகளை பார்க்க நேரம் இல்லாது வந்திருக்கும் விருந்தினர்களை உபசரிக்க சென்று விட்டாள் தமயந்தி.
சற்றுமுன் வானவில்லாய் மகிழ்வுடன் சுற்றி திரிந்தவள் சுருண்டு கிடப்பதை கதவிடுக்கின் வழியே கண்ட சபிதா திருப்தியுடன் சாப்பிட சென்றாள்.
“—————–“
தமயந்தி உனக்கு எதுக்கு இவ்வளவு அகங்காரம்…? வயசுக்கு வந்த பிள்ளையை அடிச்சு காய்ச்சலில் விழ வச்சிருக்க…? ஓங்கி அறைந்து விட்டான் சங்கரன்.
திருமணமான இத்தனை ஆண்டுகளில் மனைவியை கடிந்து கூட பேசியிராத சங்கரன் இன்று அறைந்தே விட்டான்.
மகளின் கன்னம் சிவந்து வீங்கி கைரேகை தெரிந்ததை எந்த தகப்பன் பொறுத்துக் கொள்வான்?
ஆமா நான் அடிச்சது தான் உங்க கண்ணுக்கு தெரியும்! இதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய பிரச்னை வரும்.அது புரியுதா உங்களுக்கு?
உங்க தங்கச்சி பையன் தப்பான எண்ணத்தோட பேசினான்னு சொல்ல மாட்டாங்க.. உங்க பொண்ணு அவன்கிட்ட குழைஞ்சுட்டு திரியரான்னு சொல்வாங்க…
வேற யாரும் சொல்ல மாட்டாங்க… உங்க அண்ணியும் உங்க தங்கச்சியும் போதும் என் பொண்ணு தலையில் குப்பையை அள்ளி வைக்க… என்னால உங்க தங்கச்சி பையனை கண்டிக்க முடியாது… அது தான் என் பொண்ணை கண்டிச்சு வைக்கிறேன்.
நம்ம வீட்டுல வயசு பொண்ணு இருக்கு… முடிஞ்சா உங்க தங்கச்சி பையனை இங்கே வரக்கூடாதுன்னு சொல்லி வையுங்க.. கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியேறும் மனைவியை ஆதங்கமாய் பார்த்தான் சங்கரன்.
“——————-“
பவித்ரா தாயுடன் அதிகம் பேசுவதில்லை. தன் தவறு எதுவும் இல்லை என்றபோதும் தன்னை தண்டிக்கும் தாயை எண்ணி அவள் வருந்தினாள்.
நாட்கள் மகிழ்வுடன் நகர்ந்து சென்றது.
தமயந்தி தனி பெண்ணாய் விவசாயம் பார்க்கிறாள். சங்கரன் தொழிலை பார்த்தான். வீட்டு கடன் அடைத்து மகளுக்கு நகைகள் சேமிக்கத் தொடங்கினான் சங்கரன்.
பவித்ரா பனிரெண்டாம் வகுப்பு முடித்து AVC கல்லூரியில் இளங்கலை இயற்பியல் சேர்ந்திருந்தாள்.
காயத்ரி பத்தாம் வகுப்பில் இருந்தாள். யுவராஜ் ஏழாம் வகுப்பில் இருந்தான்.
காயு நீ ஏன்டி மேத்ஸ்ல இவ்வளவு வீக்கா இருக்க…? இருக்கிறதுலே ஈஸி சப்பிஜெக்ட் மேத்ஸ் தான். மனப்பாடம் பண்ணாமலே மார்க் ஸ்க்கோர் பண்ணமுடியும்! புரிஞ்சுக்கிட்டு போடணும் அவ்வளவு தான்.நான் எல்லாம் அசால்டா மேத்ஸ் போடுவேன்.
உண்மை தான் பவித்ராவிற்கு அரசு பொதுத் தேர்வில் எப்படியோ இரண்டு மதிப்பெண் குறைந்து தொன்னூற்று எட்டு எடுத்திருந்தாள்.
பவித்ரா தங்கையா நீ…? அவ ரொம்ப நல்லா படிப்பா… பள்ளியில் டீச்சர்கள் பவித்ரா புராணம் பாடிக் கொண்டிருக்க….
அக்கா எப்படி படிக்கிறா பாரு! அவ சாமர்த்தியம் உனக்கு ஏன் வரல… வீட்டில் இருவரையும் ஒப்பிட்டு தினமும் வெறுப்பேற்ற…. காயத்ரிக்கு இன்னும் இன்னுமாய் பவித்ராவின் மீது வெறுப்பு.
“————-“
பவித்ரா படிப்பில் படு கெட்டி, நல்ல அழகும் அறிவும் சேர்ந்த பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது?
கல்லூரியில் அவளுக்கு நண்பர்கள் வட்டம் பெரிது. அதிக கட்டுப்பாட்டுடன் வளர்ந்த அவளுக்கு கல்லூரி வாழ்க்கை கொடுத்த சுதந்திரம் அவளை சிறகின்றி பறக்க வைத்தது.
எல்லோருக்கும் பவித்ராவை பிடிக்க…. பவித்ராவிற்கு இறுதி ஆண்டு மாணவன் அரவிந்தனை பிடித்து போனது.
நல்ல உயரம்… சிவந்த நிறம். புல்லட்டில் வந்து இறங்கும் அவனை பார்க்கவே ஏகப்பட்ட பெண்கள் விடுப்பு எடுக்காமல் கல்லூரிக்கு வருவது உண்டு. வாலிபால் டீம் கேப்டன் வேறு… கையில்லா பனியனுடன் அவன் பயிற்சி செய்வதை கண்டு ஜொள்ளு விடாத இளம் பெண்களே இல்லை.
வயது கோளாறு கொடுத்த ஒரு வித குறு குறுப்பு.. அவனை கண்டால் இமைக்க மறந்து நிற்பாள்.
தோழிகள் அவளை உசுப்பி விட்டு உன்னாளுக்கு போட்டி ஜாஸ்தி என்று அவளை சீண்டும் போது அவளுக்கு ஜிவ்வென்று இருக்கும்.
பிசிக்ஸ் நோட்டில் விளையாட்டாக அரவிந்த் என்று வித விதமாக அவள் இதயம் வரைந்து எழுதி ரசித்தாள். அது அவளுக்கு வினையாகி போனது.
“——————–“
ஏய் காயு மிளகாய் சாமான் வாங்கணும் நான் சொல்றதை லிஸ்ட் எழுது தோசை ஊற்றிக் கொண்டிருந்த தமயந்தி மகளை ஏவினாள்.
போம்மா அக்காவை எழுத சொல்லு… எனக்கு படிக்கிற வேலை இருக்கு.
ஏய் அவ தலைக்கு ஊத்திக்கிற நாளு… நீ எழுதினா குறைஞ்சா போவ… கத்தி விட்டாள் தமயந்தி.
ச்ச…படிக்க விடாம இதை செய் அதை செய்யுன்னு தொல்லை பண்றது… அப்புறம் ஏன் மார்க் வாங்கலைனு அதுக்கும் திட்டுறது… அலுத்துக்கொண்டே
லிஸ்ட் எழுத பேப்பர் தேடிய காயத்ரி டிவி ஸ்டாண்டில் இருந்த லாங்சைஸ் நோட் கண்ணில் பட…எடுத்து பிரித்தவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
என்ன பண்ற காயத்ரி.. மகளை அதட்டிய தமயந்தியின் முன் பவித்ராவின் லாங் சைஸ் நோட்டை எடுத்து நீட்டினாள்.
ஹார்டின் வரைந்து அதற்குள் பவித்ரா அரவிந்த் என்று வண்ணமயமாய் பெயர்கள் ஜொலித்துக் கொண்டிருந்தது.
தமயந்திக்கு குப்பென்று வியர்த்து விட்டது.
என்ன காயு இன்னைக்கு மழை தான் போல அடுப்படியில் நிற்கிற… கேட்டுக்கொண்டே தலையை துவட்டிக் கொண்டு உள்ளே வந்த பவித்ரா நடுங்கி நின்றாள்.
என்னடி இது…? உன்னை படிக்க காலேஜ்க்கு அனுப்பினா… பல்லை கடித்தாள் தமயந்தி.
அம்மா அது வந்து நான்… அவள் பயத்தில் விதிர் விதிர்த்து உளறிக் கொண்டிருக்க…
தீய்ந்து கருகிக் கொண்டிருந்த தோசைகல்லை எடுத்து மகளின் காலில் வைத்தாள் தமயந்தி.
அம்மா…. என்ற அலறல்…. வீடெங்கும் எதிரொலித்தது.
———தொடரும் ——
error: Content is protected !!