Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️48

உங்க பொண்ணா இருக்கலாம் அதுக்காக கை ஓங்குற வேலை எல்லாம் வேண்டாம்! கடுமையான எச்சரிக்கையுடன் ஒலித்தது அவனின் குரல்.

குரல்கேட்ட க்ஷண நேரத்தில் இதயக்கூடு வெறுமையாகிவிட்டது பவித்ராவிற்கு.

ஆக்ரோஷமான குரல் வந்த திசை நோக்கி அனைவரின் பார்வையும் அதிர்ச்சியுடன் திரும்ப அங்கே கொதிப்புடன் நின்றிருந்தான் ஹரிசரண்.

யார் இவன்? என்கிற தோரணையில் தமயந்தி படபடப்புடன் பார்க்க…



Advertisement

என்ன பார்க்கறீங்க நான் தான் அவளோட பாவா என்றான் நெஞ்சம் நிமிர்த்தி.

தட தடவென்று கை,கால் நடுங்கி தொண்டை குழி ஏறி இறங்கியது பவித்ராவிற்கு.

என்ன இவன் இப்படி பேசி வைக்கிறான்… இதயத்தின் எடை கூடி மூச்சு முட்டியது.

Advertisement

என்ன தம்பி சொல்றீங்க? அவனை மேலிருந்து கீழாக எடை போட்டது சுசிலாவின் விழிகள்.

Advertisement

அவ தான் சொன்னாலே போனில் பேசினது வேண்டப்பட்டவர்னு. அந்த வேண்டப்பட்டவன் நான் தான்.

துளி தயக்கமோ பயமோ அவனிடம் இல்லை.

உண்மையை சொல்ல எனக்கென்ன பயம் என்பது போன்ற தோரணை அவனிடத்தில்.

Advertisement

ஆளு வாட்ட சாட்டமா அம்சமா இருக்கான். பெரிய இடத்து தோரணை தெரியுது.பாஷை ஒரு தினுசா இருக்கு…. அந்த முதிய பெண்மணி மனதிலே ஆயிரம் சிந்தனைகள் ஓடியது.

யாரு நீங்க? எங்க வீட்டுக்குள்ள வந்து குரலை உசத்தி என்கிட்டேயே அதிகாரம் பண்றீங்க… கடுமையான கோபம் தமயந்திக்கு.

நேனு ஹரிசரண். ஆந்திராவில் இருந்து வரேன். தானே அறிமுகம் செய்து கொண்டான்.

இப்படியான சூழல் நிகழ்ந்து விட வேண்டாம் என்று தான் பவித்ராவின் மாமா மணவாளனிடம் முன்னமே தன் காதலை எடுத்து கூறி  புரிய வைத்து ஆதரவு திரட்டி இருந்தான்.

அவரே தமயந்தியிடம் பேசட்டும் என்று தான் காத்திருந்தான். அதற்குள் விரும்பத்தகாத நிகழ்வு நிகழ்ந்தேறிவிட்டது.

எந்த ஹரிசரண்? உள்ளுக்குள் அச்சம் சிறு பந்தாக உருண்டாலும்…. அப்படியா இருந்து விடக்கூடாது என்ற பயமும் எதிர்பார்ப்பும் தமயந்தி இடத்தில்.

இப்போ தான் தெளிவா சொன்னேனே…! ஆந்திராவில் இருந்து வந்திருக்கும் ஹரிசரண்.

உங்க பொண்ணை அமெரிக்காவில் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

நான் உங்க பொண்ணை விவாகம் செய்ய ஆசைப்படறேன் பளிச்சென்று சொன்னான்.

பேச வேண்டாம் என்பதாய் தலை அசைத்தாள் பவித்ரா.

நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இறுமாப்புடன் பார்த்தவன்.

உங்க பெண்ணை கேட்டு வந்திருக்கேன் என்றான் நெஞ்சம் நிமிர்த்தி.

யுவராஜ்,காயத்ரி, சுசீலா, தமயந்தி என்று மொத்த பேரின் பார்வையும் பவித்ராவின் மீது குவிந்தது.

பவித்ரா தலை கவிழ்ந்து நின்றாள். என்ன நடக்குமோ என்ற கலக்கம் அவளுக்கு சிறுகிறுப்பை கொடுத்தது.

நீங்க வீடு மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்… வாசலில் பார்வையை பதித்து சீக்கிரம் கிளம்பினால் நலமாக இருக்கும் என்பது போல் பார்த்து வைத்தார் தமயந்தி.

கரெக்டான பொண்ணை தேடி வந்திருக்கேன் அப்புறம் எப்படி வீடு மாறும்? இடக்காக கேட்டு வைத்தான்.

அக்கா அமைதியாக நிற்பதை வைத்தே யுவராஜ் யூகித்துக் கொண்டான்.

இப்போது அவன் பார்வையில் மெலிதான ஆர்வம் ஒட்டிக்கொண்டது.

இவர்தான் மாமாவா?! என்பது போல் அவன் பார்வை மாறியது.

காயத்ரியின் பார்வையில் அப்பட்டமான பொறாமை.

தம்பி நாங்க கௌரவமா வாழுற குடும்பம். குழப்பம் எதுவும் ஏற்படுத்த பார்க்காதீங்க… சன்னமான குரலில் தொண்டை அடைக்க பேசிய தமயந்தி அவரை வெளியில் போக சொல்லு…. மகளிடம் மிரட்டலாய் கண்களை உருட்டினார்.

அவளை ஏன் மிரட்டறீங்க? அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

நான் என் பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க கிளம்புங்க. வாசலை நோக்கி கை நீட்டினார்.

உங்க பொண்ணா? ஹா ஹா குட் ஜோக் அத்தம்மா.

உங்க பொண்ணு மாதிரியா அவளை நடத்துறீங்க?

என் பொண்ணை எப்படி நடத்தணும்னு பெத்துகிட்ட எனக்கு தெரியும்! நான் அதிகம் பேச விரும்பல தயவு செய்து கிளம்புங்க!

கிளம்பறத்துக்கா விடிய விடிய கார் ஓட்டிட்டு ஆந்திராவில் இருந்து மாயவரம் அறுநூற்று நாற்பது கிலோமீட்டர் டிராவல் பண்ணி வந்திருக்கேன்?

வேறெதுக்கு வந்திருக்கீங்க? அப்பட்டமான எரிச்சல் தமயந்தி குரலில்.

சொன்னேனே…. பெண் கேட்டு வந்திருக்கேன்! அத்தனை தெனாவட்டு அவன் குரலிலும் உடல் மொழியிலும்.

எவனோ ஒருத்தன் வந்து இவ்வளவு திண்ணக்கமா  பேசிட்டு நிற்குறான்…. நீ கல்லு மாதிரி நிற்கிற…. மகளிடம் பாய்ந்தார்.

இதோ பாருங்க மறுபடி மறுபடி அவகிட்ட கை ஓங்குற வேலை வச்சுக்காதீங்க…. விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தான்.

நீ யாரு? கதவு திறந்திருந்தா உள்ளே வந்துடுவியா? கேட்க ஆளில்லைன்ற தைரியமா? ஆவேசத்தில் கன்னம் இறுகி குரல் நடுங்கியது அவருக்கு.

தாயின் நடுக்கமும் ஹரியின் இறுக்கமும் அவளை பயமுறுத்தியது.

அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடுமோ என்ற அச்சம் அவளுக்கு.

நீங்க கிளம்புங்க ப்ளீஸ் என்றாள்….

எது கிளம்பணுமா? உன்னை இங்கே விட்டுட்டு நான் போறதா?

பிரச்னை எதுவும் வேண்டாம்… பிறகு பேசிக்கலாம். இப்போ கிளம்புங்க! கண்களால் கெஞ்சினாள்.

எப்போ பேசினாலும் பேசி தானே ஆகணும்?

நான் பேசிட்டேன். உங்க அம்மா தான் பதில் சொல்லணும்! கலைத்து சோர்ந்த விழிகளிலும் அவ்வளவு தீர்க்கம்.சட்டமாய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

என்மேல நம்பிக்கை இருக்குல்ல…நான் பேசிக்கிறேன் நீங்க கிளம்புங்க! சங்கடமாய் அவன் முன் கை கூப்பினாள்.

அறைஞ்சேன்னா தெரியும். இந்தம்மா என் முன்னாடியே உன்னை இப்படி அதட்டுறாங்க உருட்டுறாங்க. உன்னை தனியா விட்டுட்டு நான் போகவா…?

எதுவந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்ரா .

சொன்னா கேளுங்க மாமா வரட்டும். அவர் வந்து பேசுவார் தயவுசெய்து நீங்க கிளம்புங்க.

ஓ…. மாமாவும் இதுல கூட்டா? நரம்புகள் முறுக்கேற கர்ஜித்தார் தமயந்தி.

அத்தம்மா உங்களுக்கு ஹை BP இருக்குன்னு பவி சொன்னா. ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க?பவ்யமாய் தான் சொன்னான்.

ச்சீ வாயை மூடு! யாருக்கு யாரு அத்தம்மா? ஆந்திராவில் இருந்து வந்து என் வீட்டுல நுழைந்து அதிகாரம் பண்ற… போடா வெளியே…. காட்டு கத்தல் தமயந்தியிடம்.

ரொம்ப தப்பு அத்தம்மா. ஹரிசரண் நந்தமூரி உங்க வீட்டு மாப்பிள்ளை. மரியாதை இல்லாம இப்படி பேசறீங்க… அவ்வளவு கோபம் கணன்றும் பொறுமையாக அவன் பேசியது அதிசயம் தான்.

யாரு மாப்பிள்ளை? பல்லை உடைச்சுடுவேன். போடா வெளியே…. தமயந்தியின் ஆக்ரோஷம் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்.

என்ன பார்க்கிற… நாங்க சாதி, குலம், கோத்திரம் எல்லாம் பார்த்து தான் பெண் கொடுப்போம் பெண் எடுப்போம்.

அமெரிக்காவில் வைத்து பார்த்தானாம் பிடிச்சு போச்சாம் பெண் கேட்டு வந்து நிற்குறான்.

என் பொண்ணு தெருவிலா கிடக்குது கண்டவனெல்லாம் வந்து பொண்ணு கேட்க…

தமயந்தியின் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்க கேட்டு அண்டை வீட்டில் இருக்கும் பவித்ராவின் பெரியப்பா பரமசிவமும் அவர் மனைவி ஜெயலட்சுமியும் ஓடி வந்து விட்டனர்.

என்ன சத்தம்? என்னாச்சு? அக்கறையாய் கேட்டார் பரமசிவம்.

கூனி குறுகி தலை கவிழ்ந்து நின்றாள் பவித்ரா. கொலை வெறியுடன் முறைத்து நின்றார் தமயந்தி.

அது… தமயந்தி பதில் கூறும் முன் “ம்ம்மா…. அதட்டினான் யுவராஜ்.”

நிலைமை உணர்ந்த சுசிலா அது ஒண்ணுமில்ல பரமு இந்த தம்பி அமெரிக்காவில்  வேலை பார்க்குதாம். அங்கே வச்சு நம்ம பவித்ராவை பார்த்திருக்கு. பிடிச்சு போய் பொண்ணு கேட்டு வந்திருக்கு.

நம்பாத பார்வை பார்த்தார் ஜெயலட்சுமி.

தம்பி எந்த ஊரு? பரமசிவம் ஆராய்ச்சியாய் பார்த்தார்.

தம்பி ஆந்திரா பக்கம்…. அவசரமாய் செருப்பை வாசலில் உதறி உள்ளே நுழைந்தார் மணவாளன்.

இங்கே பிரச்னை வெடிக்கும் போதே மாமனுக்கு கால் பண்ணி விட்டு பாக்கெட்டில் போனை போட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டான் யுவராஜ்.

இங்கு நடக்கும் பேச்சுவார்த்தை கேட்டு அடித்து பிடித்து வந்து சேர்ந்து விட்டார் மணவாளன்.

அண்ணனை எரிக்கும் பார்வை பார்த்தார் தமயந்தி. நீயும் இதற்கு உடந்தையா என்பது போன்ற குற்றம் சாட்டும் பார்வை அது.

தங்கையின் பார்வையை புறந்தள்ளி விட்டு சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டார் மணவாளன்.

இந்த தம்பி  ஏழேட்டு நாளுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி பேசுனாரு.

நம்ம சீர்காழி நந்தகுமார் மாமா இருக்காரே… அது தான் பேங்க் ஆபிசர் ரேணுகா அத்தாச்சி. அவங்க மகன் அமெரிக்காவில் இருக்காரே அவரோட பிரண்ட் இவர்.

அங்க அகிலன் குழந்தைங்களுக்கு பெயர் சூட்டும் விழாவில் நம்ம பவியை பார்த்திருக்காரு. பிடிச்சு போய் பவிகிட்ட கேட்டிருக்காரு. நம்ம பவி இதெல்லாம் சரி வராதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிடுச்சு.

தம்பி முறையா பொண்ணு கேட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு.

கொஞ்சம் மெய்யும் கொஞ்சம் பொய்யுமாய் கலந்து கட்டி அடித்துவிடும் மாமனை நன்றிபெருக்குடன் பார்த்து நின்றாள் பவித்ரா.

ஆந்திராகார தம்பியா? தாடியை சொரிந்து கொண்டார் பரமசிவம்.

ஜெயலட்சுமி நம்பிக்கை இல்லாமல் பவித்ரா முகத்தை உத்து  உத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

தம்பி பெரிய படிப்பு படித்த சாப்ட்வேர் எஞ்சீனியர். அங்கே சாதி மதம் பாகுபாடு எல்லாம் பார்க்க மாட்டாங்க. அதே நினைப்புல தம்பி இங்கே பொண்ணு கேட்டு வந்திருக்காரு! மழுப்பினார் மணவாளன்.

அது எப்படி? பிடிச்சிருக்குன்னா பொண்ணு கேட்டு வருவானா…. எனக்கு இது வேற மாதிரி படுது… கிண்டி கிழங்கெடுத்தார் ஜெயலட்சுமி.

என்ன வேற மாதிரி படுது? நாம கோடீஸ்வரங்க வைரமும்  வைடூரியமுமா சீர் செய்வோம்னு பொண்ணு கேட்டு வந்திருக்காங்களா?

ஏதோ பிடிச்சிருக்கு பேசி பார்ப்போம்னு நேரடியாக வந்திருக்காங்க. நல்ல குடும்பத்துல இப்படி தான் நடந்துக்குவாங்க…

பொண்ணு கொடுக்குறதும் கொடுக்காததும் நம்ம இஷ்டம். கேட்குற முறைக்கு வந்து கேட்குறாங்க அதுல என்ன தப்பு?பொறிந்து தள்ளினார் சுசிலா.

என்னத்தை பேச்சு ஒரு தினுசா போகுது? உங்க மருமகளோட அண்ணனுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் தானே… இது அமெரிக்கா இல்லை நல்லதுகுடி, இங்கே சாதி, மதம் முக்கியம்னு அப்போவே சொல்லி இருக்க  வேண்டியது தானே…? ஜெயலட்சுமி எரியும் நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்.

அடி இவ எவடி கூறு கெட்டவ….பொண்ணுன்னா நாலு பேர் கேட்க தான் செய்வாங்க.

அது எப்படி கேட்க முடியும்? ஆந்திராகாரன் எந்த தைரியத்தில் நம்ம வீட்டு வாசலை மிதிக்க முடியும்? விடாகண்டியாய் பேசும் ஜெயலட்சுமியை கடுப்புடன் முறைத்த மணவாளன்

நம்ம சபிதா அதுக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு பையனை விரும்பி சாதி குலம் பார்க்காம போய் கல்யாணம் பண்ணிகிச்சே அதே மாதிரி தான் இந்த தம்பியும் அதுக்கு பிடிச்சிருக்குன்னு பொண்ணு கேட்டு வந்து நிற்குது. நறுக்காய் சுருக்கென்று தைக்கும்படி கேட்டார் மணவாளன்.

தன் மகள் ஓடிப்போனதை குத்தி காட்டும் மணவாளன் மீது கொலைகாண்டு அவருக்கு.

நல்ல “மாமா” தான் நீங்க நக்கலாக அழுத்திக் கூற…

ஆமா நான் பவித்ராவுக்கு நல்ல தாய் மாமா தான் அமைதியாக தெளிவாக பேசினார் மணவாளன்.

நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? பரமசிவம் கேள்வியாய் நோக்கினார்.

இன்னும் எதுவும் முடிவு பண்ணல மாமா சங்கடமாய் பதில் கொடுத்தார் மணவாளன்.

முடிவு பண்ண என்ன இருக்கு? சரி வராதுன்னு சொல்லி அனுப்புங்க! அவ்வளவு எரிச்சல் ஜெயலட்சுமிக்கு.

இவ்வளவிற்கும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.

பவித்ராவிற்கு தான் திக் திக் நிமிடங்களாக நகர்ந்து கொண்டிருந்தது.

மூத்தார் குடும்பம் பக்கத்தில் இருக்க… வெளிப்படையாய் பேச முடியாமல் தவித்த தமயந்தி

அத்தை உங்க பொண்ணு கலாவதிக்கு போன் போட்டு ராஜேஷை கூட்டிட்டு வர சொல்லுங்க கையோட நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லுங்க ! அமைதியாக அணு குண்டை வீசினார்.

குடும்பம் மொத்தமும் அதிர்ந்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!