Skip to content
Post Views: 3,063
பாட்டி…. கத்தி விட்டாள் பவித்ரா.
என்ன பாட்டி? சாதி குலம் கெட்டு பொண்ணு கொடுக்கிறதை விட அந்த கலா பையனுக்கே உன்னை கட்டிக் கொடுத்துடுவேன் உறுதியாய் கூறினார் தமயந்தி.
உயிரே போனாலும் கலா அத்தைக்கு மருமகளா போக மாட்டேன்… அழுத்தமாய் கூறினாள் பவித்ரா.
உன்னை யாருக்கு கட்டி கொடுக்கணும்னு உன்னை பெத்தவ எனக்குத் தெரியும். வெளிப்படையான மிரட்டல் தான் அது.
Advertisement
தம்பி இது சரிபடாது நீங்க வேற பொண்ணு பார்த்துக்கோங்க! பொண்ணுக்கு பெரியப்பா என்ற உரிமையில் தோரணையாய் தீர்ப்பு கூறினார் பரமசிவம்.
அப்பா…. அப்பா… உளுந்து வியாபாரிங்க வந்திருக்காங்க… நீங்க வந்து ரேட் பேசினா எடை போட்டுடலாம் பரமசிவம் மகன் சரவணன் வந்து நின்றான்.
மாமா நீங்க போய் என்னனு பாருங்க! நான் இந்த தம்பிகிட்ட பேசி அனுப்புறேன்… ஆசுவாசம் கொண்டார் மணவாளன்.
Advertisement
மனைவி இங்கே இருந்தால் ஏதாவது ஏடாகூடமாக பேசி வைப்பாள் என்று உணர்ந்த பரமசிவம் ஜெயா நீயும் வா லேசா கிறு கிறுன்னு வருது எலுமிச்சம் பழம் புழிஞ்சி உப்பு போட்டு கொடு நான் களத்து மேட்டுக்கு கிளம்பணும்! கையோடு மனைவியையும் இழுத்து பிடித்துக் கொண்டு சென்றார்.
Advertisement
“——————-“
ஷ் ஷப்பா…. அருகிலிருந்த ஒரு சொம்பு தண்ணீரை மடமடவென்று குடித்து மின்விசிறிக்கு அடியில் தொப்பென்று அமர்ந்தார் மணவாளன்.
அவரை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிசரண்.
Advertisement
தம்பி நான் தான் பேசிட்டு சொல்றேன்னு சொன்னேனே அதற்குள் வந்து நின்னா எப்படி? உண்மையில் கட்டுக்கடங்கா கோபம் அவருக்கு.
சார் நேத்து நான் பவி கூட பேசிட்டு இருக்கும்போது…. அந்தப் பொண்ணு ஜன்னல் பின்னாடி மறைந்துநின்னு பார்த்துட்டு இருந்துச்சு! பவித்ரா அதை கவனிக்கலை ஆனா நான் பார்த்தேன். அந்தப் பொண்ணு பயங்கர கோபமா போச்சு..என் மனசுக்கு சரியா படலை.
ஏற்கனவே செய்யாத தவறுக்கே பவித்ராக்கு சூடு வச்சவங்க தானே அவங்க அம்மா எந்த நம்பிக்கையில் நான் அங்கே இருக்க முடியும்? அடுத்த நிமிஷம் கிளம்பிட்டேன்.
எல்லாரது பார்வையும் “அந்த பெண்” காயத்ரி மீது….
ஆம் அவள் தான் நள்ளிரவில் ஹரிசரணோடு வீடியோ கால் பேசும் போது ஜன்னலுக்குப் பின் ஒளிந்து நின்று பார்த்துவிட்டு தாயிடம் போட்டுக் கொடுத்தது.
பாவா என்ற பெயரில் பவித்ராவின் போனில் அழைப்பு வந்தது முதலே அவளுக்கு சந்தேகம்.
நேரில் பார்த்த உடனே சரியாக பற்ற வைத்து விட்டாள்.
என்ன காயத்ரி இதெல்லாம்? கடும் அதிருப்தி மணவாளனுக்கு.
மாமா காயத்ரிக்கு எப்போதுமே பவி அக்காவை கண்டாலே பிடிக்காது அதுதான் போட்டு கொடுத்துட்டா…. கோபமாய் முறைத்தான் யுவராஜ்.
கண்ணால் கண்டதை தானே சொன்னேன்? அக்காவா இருந்தாலும் அவள் செய்தது தவறு அதுதான் அம்மா கிட்ட சொன்னேன். மிகப்பெரிய உண்மை விளம்பி போல நெஞ்சம் நிமிர்த்தி நின்றாள்.
தங்கையை அமைதியாய் ஒரு பார்வை பார்த்து நின்றாள் பவித்ரா.
அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை காயத்ரி.
தம்பி, பரமு மாமா குடும்பத்துக்கு எதுவும் தெரியாமல் நான் பக்குவமா பேசி இருப்பேன் இப்படி அவசரப்பட்டுட்டீங்களே…. வருத்தம் கொண்டார் மணவாளன்.
சார் உங்களுக்கு கால் பண்ணேன் ரீச் ஆகல. நிம்மதி இல்லாம என்னால் அங்கே இருக்க முடியாது அதுதான் நானே கிளம்பி வந்துட்டேன்.
அதுக்காக விடிய விடிய டிரைவ் பண்ணிட்டு வருவீங்களா?
இதில் என்ன சார் கஷ்டம்? என் அம்மாயியை விட எதுவும் எனக்கு பெருசு இல்லை.
என் தம்பிங்க வரேன்னு தான் சொன்னாங்க நான் தான் பிரச்சனை வேண்டாம்னு தனியா வந்தேன்.
இல்லை தம்பி எதையுமே பக்குவமா தான் பேசி முடிவு பண்ணனும்.
சார் நான் இங்கே சரியான நேரத்துக்கு வரலைனா அவளை அடித்து உதைத்து துன்புறுத்தி இருப்பாங்க உங்க தங்கச்சி….. கண்களை இடுக்கி கூர்மையாய் பார்த்தான் தமயந்தியை .
அண்ணா அனாவசிய பேச்சு எதுக்கு? அந்த பையனை கிளம்ப சொல்லுங்க!
ஏ தமயந்தி உனக்கு புத்தி மழுங்கி போச்சா…?
என் பொண்ணா இருந்தாலும் கலா மோசமான சுயநலவாதி. அவ காலில் விழ சொல்றியா? அவளும் அவ முந்தானையில் ஒளிஞ்சுக்கிட்டு போன அவ பிள்ளையும் பண்ணிட்டு போன அவமானத்தை மறந்துட்டியா?
அவ மகனுக்கு என் பேத்தியை கட்டிக் கொடுக்கிறதுக்கு பதிலா நம்ம கையாலே அவளை பாழுங்கிணத்துல தள்ளிடலாம்.
பெத்தவளே இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன் அவ எமராட்சஸி. எம்புள்ள சங்கரன் இருந்தாலும் தங்கச்சி வீட்டுல பொண்ணு கொடுக்க ஒத்துக்க மாட்டான்.
ம்மா எதிர்த்து பேசறேன்னு தவறா நினைக்காதீங்க! கலா அத்தை வீட்டுல சம்மந்தம் பேசினீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்… யுவராஜ் ரத்தம் கொதிக்க சிலிர்த்து நின்றான்.
அவனும் இருபது வயது இளைஞன் அல்லவா…? அவனுக்கு சரி தவறு புரியாதா என்ன?
கலா பேசிவிட்டு போன வார்த்தைகள் ஜென்மத்துக்கும் மறக்காதே…
என்னடா பெரிய மனுஷன் ஆகிட்ட போல… மகனை முறைத்தார் தமயந்தி.
அக்காக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதை தடுக்க அவங்க தம்பியா நான் முதலில் வந்து நிற்பேன்.
இந்த பேச்சு வேண்டாம் விட்டுவிடுங்க தாயின் யோசனைக்கு கடும் கண்டனம் தெரிவித்தான்.
தமயா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு! இந்த தம்பி பெரிய படிப்பு படிச்சிருக்கு. நல்ல வசதியான குடும்பம். விரும்பி வந்து கேட்குறாங்க. நம்ம பவிக்கும் பிடிச்சிருக்கு.
என்னண்ணா சொல்ற? இந்த பையன் நம்ம இனம் இல்லை நம்ம ஊரு இல்லை… அவர் குரல் உடைந்து கண்ணீர் துளிர்த்தது.
எந்த காலத்தில் இருக்க? இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி சங்கரன் ஆசைப்பட்டு கேட்டார்னு உன்னை கட்டிக் கொடுத்தேன். சங்கரன் மட்டும் ஆசைப்பட்டார்னு உன்னை கொடுக்கல நீயும் ஆசைப்பட்டேன்னு தான்.
அண்ணா என் கதை வேற… அவரும் நாமளும் ஒரே இனம். அப்படி இருந்தும் ஆசைப்பட்டு அவரை கட்டிக்கிட்டு நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சேன் உங்களுக்கு தெரியாததா?
இப்போ என்ன பிரச்னை உனக்கு? முகம் கடுத்தார்.
நம்ம கண்பார்வையில் இருக்கிற மாதிரி நமக்கு தெரிந்த மனுஷ மக்களா பார்த்து நம்மள மாதிரி சாதாரணப்பட்ட குடும்பத்தில் மாப்பிள்ளை பார்ப்போம். நம்ம விரலுக்கு ஏத்த வீக்கம் போதும்.
பெரிய இடம், சொத்து சுகம் அதெல்லாம் எனக்கு ஆசை இல்லை. என் பொண்ணு ஒரு சுடுச்சொல் கேட்காம கௌரவமா வாழ்ந்தா போதும்.
என் பொண்ணு போற இடத்துல கலங்கி நிற்க கூடாது. அவ புகுந்த இடத்துல பிரச்னைன்னு கண்ணீரோட வந்து நின்னா தாங்கி நிற்க அப்பனும் இல்லை… இங்கே கோடி கணக்குல சொத்து சுகமும் இல்லை.
தமயந்தி,காதல் கல்யாணம் ஒன்னும் சமூக விரோத குற்றம் இல்லம்மா.
அண்ணா, அப்பன் இருந்தா அடக்கி வளர்த்திருப்பான். அடக்கி வைக்க ஆளில்லாம இஷ்டத்துக்கு கோயில் காளை கணக்கா சுத்தி திரிஞ்சு தன் இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பிடிச்சிட்டான்னு நாலு பேரு நையாண்டி பேசுவாங்க, சொந்த பந்தம் காரி துப்பும்.
உங்களுக்கு நாலு பேரு தான் பிரச்னையா? சலிப்புடன் கேட்டான் ஹரி.
ஆமா சுற்றிலும் நாலு பேர் இல்லாம நாம தனி தீவிலா வாழறோம்?
அந்த நாலு பேருக்கு தர முக்கியத்துவத்தை உங்க பெத்த பொண்ணுக்கு கொடுங்க…! அவ்வளவு காட்டம் அவன் பேச்சில்.
எனக்கு கௌரவம் முக்கியம். என் பொண்ணை ஒரு நல்லவன் கையில் கொடுக்கணும்னு ஆசைப்படறேன்.
நாங்க கௌரவம் கெட்ட குடும்பம் இல்லை. நானும் நல்லவன் தான் எப்படி உங்களுக்கு நிரூபிக்கணும்?
அனந்த்ப்பூர் மாவட்டத்துல கிருஷ்ணா குடும்பம் சொல்றது தான் வேத வாக்கு. பேர் பட்ட குடும்பத்துல பெரிய மருமகளா தான் அவளை கூட்டிட்டு போறேன்.
என்னை கட்டிகிட்டு உங்க பொண்ணு கண் கலங்கி வந்து நிற்க மாட்டா அதுக்கு நான் உத்தரவாதம். அவ என்னோட உயிர். அவளை என் குடும்பமே ஸ்வர்ணமா தாங்கும்.முழு மனசோட சந்தோஷமா உங்க பொண்ணை கொடுங்க.
ஏன் தம்பி வெட்டி பேச்சு! நாங்க இந்த மாதிரி அந்நியத்துல கொடுத்தது இல்லை.
இப்போ கொடுங்க!
இல்லை…. எனக்கு விருப்பம் இல்ல.
உங்க பொண்ணை கடைசிவரை கன்னியாவே வச்சுக்கப் போறீங்களா?ஒரு ஆம்பிளைக்கு கட்டி கொடுக்கப் போறீங்க தானே ?
அவன் நல்லவனா இருக்கானா? எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவனான்னு மட்டும் பாருங்க.
எங்க இனம் உங்க இனம்னு பேசறீங்க… எல்லாரும் மனுஷ இனம் தான்… பட பட பட்டாசு போல் வெடித்து விட்டான் ஹரி.
பவித்ரா அழுது சோர்ந்து முகம் வீங்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
பேத்தியின் முகவாட்டம் காண சகிக்கவில்லை. தமயந்தி நம்ம சபிதா அவ இஷ்டத்துக்கு கட்டிக்கிட்டு போன மாதிரியா நம்ம பவித்ரா போயிட்டா… நம்ம பிள்ளை ஆசைபட்டவன் நல்ல பையன்னா ஏத்துக்குறதுல தப்பில்லம்மா.
நம்ம விருப்பம் கேட்டு தானே வந்து நிற்குறா… அவ விருப்பம் தான் நம்ம விருப்பமா இருக்கட்டுமே….அந்த காலத்து மனுஷி சுசிலாவே அத்தனை எளிதில் ஏற்றுக் கொண்டார்.
யார் என்ன சொன்னாலும் என் மனசு ஒப்பல… கண் கலங்கி தூணில் சாய்ந்தார் தமயந்தி.
பதட்டம் இல்லாம நிதானமா யோசிங்க… உங்க சம்மதம் எங்களுக்கு முக்கியம். பெரியவங்க சம்மதத்தோட எங்க விவாகம் நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு.
நான் கிளம்புறேன்! நான் போனபிறகு பவித்ராகிட்ட கடுமையா நடந்துகிட்டீங்க அப்புறம் நீங்க ரொம்ப வேதனை படுவீங்க.
மாப்பிள்ளை பார்க்குறேன் விஷம் குடிச்சிருவேன்னு மிரட்டி அவளுக்கு அவசர கல்யாணம் பண்றேன்னு இறங்குனீங்க எத்தனை பேர் குறுக்கே வந்தாலும் வெட்டி வீசிட்டு என் அம்மாயியை தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்.
பாட்டி பார்த்துக்கோங்க. என் அம்மாயி கிருஷ்ணா குடும்பத்து மருமக அவ மேல சின்ன கீறல் கூட வந்துடக் கூடாது. வதம் செய்யும் ருத்ர மூர்த்தி போல் எச்சரிக்கை விடுத்தான்.
வேண்டிய அளவு டைம் எடுத்துக்கோங்க நல்லா யோசித்து பதில் சொல்லுங்க! என் வீட்டு ஆளுங்களோட வந்து முறையா பேசறேன்… தமயந்தியை பார்த்து கூறியவன்
நான் கிளம்புறேன் என்று மணவாளன் முகம் பார்த்து பொதுவாக கூறியவன் வா என்பதாய் பவித்ராவை பார்த்து கண் காட்டினான்.
மடங்கி அமர்ந்திருந்தவள் சங்கடமாய் மாமன் முகம் பார்க்க போய் அனுப்பிட்டு வா என்றார் மணவாளன்.
தயக்கமாய் வெளியில் வந்தவள் வெளி வராண்டாவில் நிற்கும் ஹரிக்கு அருகில் சென்றாள்.
சாரிடா அம்மாயி உனக்கு சங்கடம் வரும்னு தெரியும் இருந்தாலும் உன்னை கஷ்டப்படுத்திடுவாங்கன்னு தான் உடனே கிளம்பி…
கேவலுடன் அவன் கரம் பற்றி முகத்தில் புதைத்துக் கொண்டாள்.
பவி என்னடாம்மா…. வெதும்பினான்.
சாரி…. சத்தமின்றி முணங்கினாள். கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
எந்துக்குடா பங்காரம்…? அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
அம்மா ரொம்ப ஹார்ஷா பேசிட்டாங்க…. மீண்டும் கண்ணீர் சுரந்தது.
இதெல்லாம் எதிர்பார்த்தது தான். இதுக்காரா அழுவ…?
எனக்காக இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணி வந்திருக்கீங்க….
உனக்காக வராம…?
குலாபி உன் மேல ஒரு அடி விழுந்திருந்தா என் நெஞ்சில் இடி விழுந்த மாதிரி துடிச்சிருப்பேன்.
உனக்கு நான் இருக்கேன்ரா அம்மாயி…. ஆ ஊன்னா அடிச்சுடுவாங்களா….? கை வச்சிருந்தா நடக்குற கதையே வேற… என் அம்மாயிக்காக தான் இவ்வளவு அடக்கி வாசிக்கிறேன்.ஹரியோட உண்மை ஸ்வரூபம் வேற…
இப்போ என் நானா இருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா? இப்படியே உன்னை தூக்கிட்டு வர சொல்லி இருப்பார்.எத்தனை அடிதடி நடந்திருக்குமோ…?
வேண்டாம் ப்ளீஸ்….இல்ல அம்மா கொஞ்சம் டென்ஷனில் தான் …. அவங்க கிராமத்து மனுஷி… அவள் முகம் சிறுத்து விட்டது.
அவங்க உனக்கு தான் அம்மா எனக்கில்லை.
என்ன அவ்வளவு பிடிவாதம் அவங்களுக்கு…? பெத்த பொண்ணு மனசை கொன்னு நாலு பேருக்காக நல்லவங்களா காட்டிக்கணுமா?
விடுங்க… கண்களால் கெஞ்சினாள்.
அழுதுட்டு இருக்க கூடாது. வேளைக்கு சாப்பிடணும். என்னை மீறி எதுவும் நடக்காது. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்
நம்ம காதல் உங்க வீட்டுக்கு தெரியற வரைக்கும் தான் பயம் டென்ஷன் எல்லாம். அது தான் தெரிஞ்சுடுச்சே… இனி தைரியமா இருடா அழுத்தமாய் கரம் பற்றி தைரியம் கொடுத்தான்.
ம்ம்ம்ம்…. என்று ஆமோதிப்பாய் தலை அசைத்தவள் அவன் கிளம்புகிறேன் என்று தலை அசைக்கவும் அடக்க முடியாது அழுது விட்டாள்.
என்னடா…. துடித்து விட்டான்.
ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்தாள்.
பயமா இருக்கா…? ஹரிசரண் பாரியால் எதுக்கும் அஞ்சக் கூடாதுரா.
நான் பார்த்துக்கறேன்… தைரியமா இருக்கணும் சரியா….
ம்ம்ம்ம் என்னும் போதே அழுகை பீறிட்டது.
சரி ரா மடோ இண்டிக்கு வெல்தாம். அவள் கரம் பற்றினான்.
வேண்டாம் என்பதாய் தலை அசைத்தாள்.
அப்போ சிரித்த முகமா என்னை அனுப்பி வைடா பங்காரம்.. மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
மாயவரத்தில் நல்ல லாட்ஜ் எல்லாம் இருக்கு. ரூம் போட்டு நல்லா தூங்கி எழுந்து ஈவ்னிங் கிளம்புங்க.
ம்ம்ம்ம்ம்… நானும் அதை தான் யோசித்தேன்.
சரி கிளம்புங்க! சிரிக்க முயன்று இதழ் விரித்தாள்.
பைடா அம்மாயி… டேக் கேர் என்று அவள் கன்னம் தட்டிவிட்டு கிளம்பினான்.
அவன் கிளம்பிய அடுத்த நிமிடம் மீண்டும் கண்கள் உடைப்பெடுத்தது.
ஒரு வித பயம், பதட்டம், வெறுமை…. சூனியம் போல் தோன்றியது.
‘———————“
கார் குறுகலான அந்த தெருவை கடந்து அடுத்த வளைவில் திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும் வழியில் அரசமரத்தடியில் நின்ற ஒருவன் காரின் குறுக்கே நின்று வழி மறித்தான்.
இறங்கி வந்து ஹரி பார்க்க நின்றது யுவராஜ்.
யுவி என்றான்! ஆச்சரியமாய்.
ம்ம்ம்ம் என்று தலை அசைத்தவன் பேச கூச்சம் கொண்டு நெளிந்து கொண்டிருந்தான்.
என்ன யுவி… மாட்லாடானு குன்ட்டுனாரா? ம்ம்ம்ம் பேசணுமா? மெல்லிதான புன்னகையுடன் கேட்டான்.
ம்ம்ம்ம்… என்று ஆமோதிப்புடன் தலை அசைத்தவன்,பவி அக்கா ரொம்ப நல்லவ என்றான்.
எனக்கு தெரியுமே…! அழகாய் சிரித்தான்.
அக்கா ரொம்ப பாவம்,நிறைய கஷ்டப்பட்டுட்டா. அக்கா சந்தோஷமா இருக்கணும் அவளை கை விட்டுட மாட்டீங்களே… குரல் அடைத்தது.
ச்சீ என்ன கேள்வி இது? யுவி இங்கே பாரு… என்னை பாருன்னேன்.
நான் உன் பாவா தானே…?
ம்ம்ம்ம்…. அவன் குழம்பி நின்றான்.
ஐ மீன் உன் மாமா தானே… என்கிட்ட உனக்கு எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்.
பவித்ராவை நான் ரொம்ப விரும்பி தான் மேரேஜ் பண்ணிக்க போறேன். அவ என்னோட உயிர்.
தேங்க்ஸ்! இதழ் பிரித்து சிரித்தான்.
உங்கம்மா ஏன் இப்படி பிடிவாதமா இருக்காங்க?
அவங்க அப்படி தான்.ஊரு என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும்னு ரொம்ப யோசிப்பாங்க.
ஆனா அம்மா ரொம்ப நல்லவங்க.
ஹான்…. விழி விரித்து விளையாட்டாய் சிரித்தான்.
நிஜமா மாமா… அம்மா நாலையும் நினைச்சு குழப்பிக்குவாங்க.
அதிகம் வெளி உலக தொடர்பு இல்லாதவங்க.
ம்ம்ம்ம் என்று கை கட்டி கேட்டுக் கொண்டான் ஹரி.
போன வாரம் ராஜேஷ் அத்தான் வந்தாரு!
வாட்?
ஆமா மாமா…. அக்காவை கட்டி கொடுக்க சொல்லி அம்மாட்ட ஒரே புலம்பல் கெஞ்சல்.உறவு இருக்கு உரிமை இருக்குன்னு ஒரே செண்டிமெண்ட் அட்டாக் தான்.
ம்ம்ம்ம்ம் என்று மட்டும் தலை ஆட்டினான்.
அக்காக்கு உங்களை தான் பிடிச்சிருக்குன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.
உங்களை பார்த்தா பெரிய இடமா தெரியுது. வரதட்சணை ரொம்ப எதிர்பார்க்காதீங்க. நான் இன்னும் ரெண்டு வருஷத்துல வேலைக்கு போயிடுவேன் அப்புறம் நீங்க கேட்கிறதை கொஞ்சம் கொஞ்சமா செய்றேன்.
ஹலோ பெரிய மனுஷா ரொம்ப பேசி டயர்டாகிட்டிங்க போய் ரெஸ்ட் எடுங்க
.மாமா…. கண்ணீர் துளிர்த்த கண்ணில் சிணுங்கலான சிரிப்பு எட்டி பார்த்தது.
கிருஷ்ணா குடும்பத்துக்கு கோடி கோடியா சொத்து இருக்கு. குணவதியா ஒரு மருமகள் வந்தா போதும்.
உங்க வீட்டு பொண்ணு போதும் பொன்னெல்லாம் வேண்டாம்.
என் அம்மாயியை கவனமா பார்த்துக்கோ இந்த மாமாக்காக…. அவன் கரம் பற்றி ஆதுரமாய் குலுக்கினான்.
————தொடரும் ———
error: Content is protected !!